உங்க வேலைய பார்த்துக்கிட்டுப் போங்க

natalya_klyuchareva-200x300நதாலியா க்ள்யுசர்யோவா 1981ல் பியரிம் என்ற இடத்தில் பிறந்த கவிஞர் மற்றும் உரைநடையாளர். ரஷியாவில் உயர்வாய் கருதப்படும் அறிமுக எழுத்தாளர்களுக்கான டெப்யூ விருதை வென்றவர். பள்ளியில் படிக்கையிலேயே எழுத ஆரம்பித்த இவர், சேகாஃப், பூனின், ஆந்த்ரெய் ப்ளாடோனோஃப், யூரி கோவல் ஆகியோரை தன் இலக்கிய குருக்களாய் கூறுகிறர். இவரது எழுத்துக்களில் அண்மையில் வெளியிடப்பட்டவை ரஷியா ஆன் வீல்ஸ் (இதுவரை 5 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட புதினம்) எஸ் ஓ எஸ் (SOS;2009), எ வில்லேஜ் ஆஃப் ஃபூல்ஸ் , வைட் பயனியர்ஸ் என்ற கவிதைத் தொகுப்பு (2006). ஒன் இயர் இன் பாரடைஸ் எனப்படும் அவரது சிறுகதை மரியா கஸெவால் மொழி பெயர்க்கப்பட்டு வெர்ஜீனியா க்வார்டெர்லி ரெவ்யூவிலும் டின் ஹவுஸ் புக்ஸ் வெளியிட்டுள்ள ராஸ்காஜி என்ற தொகுப்பிலும் பதிப்பிக்கப்பட்டுள்ளது.

ஒரு பேட்டியில் தன் எழுத்தைப் பற்றி அவர் சொல்வது:

“நான் பொதுவாய் அரசியல் பற்றி எழுதுவதில்லை, மனிதர்களைப் பற்றி எழுதுகிறேன். இதுதான் எனக்கு சுவாரசியமாய் இருக்கிறது. அரசியல், என் எழுத்தில் இருக்குமானால், அது ஒரு மெய்யான மனிதனின் விதியை திசைமாற்றி முடக்குகிறது என்பதற்குத்தான். குவியம் எப்போதும் மனிதனின் மேல்தான்.”

இங்கே வெளியாகியிருக்கும் நதாலியின் கதையை இங்கிலீஷில் மொழிபெயர்த்தவர் மேரியன் ஷ்வார்ட்ஸ் (Marian Schwartz). இவர் ரஷ்ய மொழியின் தத்துவம், விமர்சனம், நுண்கலைகள், வரலாறு ஆகியபல துறைகளிலிருந்தும் இங்கிலீஷுக்குப் பல பத்தாண்டுகளாக மொழி பெயர்த்து வருகிறார்.  அவர் தன் கதைகளை சப்ட்ராபிக்ஸ், க்ராண்ட் ஸ்ட்ரீட், த லிடரரி ரிவ்யு, நார்த் அமெரிகன் ரிவ்யு, டூ லைன்ஸ், வோர்ட்ஸ் வித்தவுட் பார்டர்ஸ், யேல் ரிவ்யூ போன்ற பத்திரிகைகளில் பிரசுரித்திருக்கிறார். இவர் மொழிபெயர்த்த ரஷ்ய எழுத்தாளர்கள் பட்டியல் நீண்டது. சிலர் பெயர்கள் இங்கு- நீனா பெர்பெரோவா, எட்வர்ட் ரட்ஜின்ஸ்கி, மிகெய்ல் அஃபனாஸெவிச் பூல்ககோவ், இவான் கொன்சராஃப் ( Иван Гончаров – Ivan Goncharov) , வாலெரி பான்யுஷ்கின் ஆகியோர்.

க்ரிவொவ்களுக்குக் குடிப்பழக்கம் உண்டு என்ற உண்மை வெகுகாலத்துக்கு அவர்களுடைய மகனுக்கு மட்டும் தெரிந்திருந்தது. அது ஆரம்பித்த போது, யுர்கா ஒன்றாம் வகுப்பை அப்போதுதான் துவங்கினான். துவக்கத்தில் க்ரிவோவ்கள் தமது நோயைப் பற்றி கூச்சம் கொண்டிருந்தனர், தங்களது அடுக்ககத்தில் ஏகப்பட்ட புகை நடுவே சேர்ந்திருந்து குடித்தனர்.

ஜன்னல் படியில் திரைச் சீலைகளுக்குப் பின்னே அமர்ந்தபடி, யுர்கா தன் வீட்டுப்பாடத்தில் சுழி சுழியாகப் போடுவான், ‘கோபுர அறைபோல இருந்தது, காடு’ என்று ஒரு கவிதையை நெட்டுருப் போடுவான், அவனுடைய பெற்றோர்களின் மரமரக்கும் குரல்கள் கூடவே ஒலித்தபடி இருக்கும். அப்புறம் வண்ணக் காகிதங்களிலிருந்து துண்டுகளை வெட்டிப் பசையால் ஒட்டுவான்.

பள்ளிக்கூடத்தில் யாரும் எதையும் சந்தேகிக்கவில்லை.

“க்ரிவோவின் திறமைகள் சராசரிக்குக் கீழ்தான். ஆனால் அவன் முன்னேற இன்னும் அவகாசம் இருக்கிறது,” அவனுடைய ஆசிரியர் பெற்றோர் சந்திப்பில் சொன்னார், பெற்றோர்களைக் கவனமின்றிப் பார்த்தபடி. இருவரில் யாரை நோக்கி இதைச் சொல்ல வேண்டுமென்ற தெளிவு இல்லாமல் அப்போது இருந்தார்.

அலீனா க்ரிவோவா, அதே பள்ளிக்குத்தான் போயிருந்தாள். கடைசி பெஞ்சில் கூச்சத்தோடு குறுகி உட்கார்ந்திருந்தாள், யார் கண்ணையும் பார்ப்பதைத் தவிர்த்தாள். ஏற்கனவே பிறரிடம், யுர்காவின் வகுப்புத் தோழர்களிடம் கூடத்தான், கொஞ்சம் அவர்களோடு இழையும் பார்வையைச் செலுத்துவதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தாள். கடையில் அவளுடைய மேலாளர்களிடமும் இதே வழக்கம்தான் அவளுக்கு. அவர்களுக்குக் கொஞ்சம் மதுவின் வாசனை தட்டுப்பட்டு விட்டதோ?

சிறுவன் யுர்கா மற்ற குழந்தைகளிடமிருந்து தனித்துத் தெரிந்ததற்கு ஒரு காரணம், அவன் ஒரு போதும் வீட்டுக்குப் போவதற்கு அவசரப்பட்டதில்லை. வானிலை என்னவாக இருந்தாலும், அருகிலிருந்த காலி மனைகளில் இருந்த சேற்று உளையில் நடந்து போவான், காலணிகளால் நீர்த் தேங்கல்களில் உளைவான், பிறகு தன் வீட்டுப்பரணில் பூனைகளுக்குப் பயிற்சி அளிக்க முயன்றபடி கொஞ்சம் உடலைச் சூடுபடுத்திக் கொள்ளப் பார்ப்பான். அப்போதும் யாரும் ஏதும் கெட்டுப் போனதாகச் சந்தேகிக்கவில்லை.

நவம்பர் நடுவில், யுர்காவுக்கு ஒரு தோழன் கிட்டினான். முகமெல்லாம் புள்ளிகளாயிருந்த கெர்க்கா, இன்னொரு வகுப்பிலிருந்தவன். கெர்க்கா அனாயாசமாகப் பொய் சொல்வான். ரத்தக் காட்டேரிகள், சிகப்பிந்தியர்கள், அயல் கிரகத்தவர்கள் பற்றியெல்லாம் நம்ப முடியாத அற்புதக் கதைகளை மூச்சுவிடாமல் சொல்லி வாய் திறக்கவே யோசிக்கும் யுர்காவைத் திணறடிப்பான். கெர்க்காவின் பெற்றோர்கள் விவாகரத்து செய்யத் துவங்கி இருந்தனர், அதற்கு முன்னால் வழக்கமான, வீட்டில் தட்டுகளை உடைப்பது, பெரும் கூக்குரலிட்டுச் சச்சரவு செய்வது, போலிஸைக் கூப்பிடுவது, எல்லாத்துடனும்தான். அதனால் அவனுக்கும் வீட்டுக்குப் போவதற்கு ஒரு அவசரமும் இருக்கவில்லை.

க்ரிவோவ்கள் என்ன முயன்று பிறத்தியாரிடம் இருந்து மறைக்க முயன்றாலும், வதந்திகள் சீக்கிரமே அந்த முன்முற்றத்தில் உலவத் துவங்கின. யுர்கா நடுப்பள்ளிக்குச் செல்லத் துவங்குகையில், அவமானம் கால்சட்டைக்குள் மடிக்கப்படாத அழுக்குச் சட்டை போல அவனோடு ஒட்டிக் கொண்டிருந்தது.

அலீனா இப்போது அடிபட்டவளாகத் தெரிந்தாள். அவள் சிரித்தாலும் அப்படித்தான் இருந்தாள். அந்தக் கடையில் அவளுக்கிருந்த வேலை போய் விட்டிருந்தது, அக் கடையின் வாயிலில் நின்று அவள் பிச்சை கேட்டாள். அவர்களுடைய அடுக்ககத்தின் கீழ்த் தளத்து வாயிலில் படிக்கட்டின் மீது தலை சாய்த்தபடி அவளுடைய கணவன் தூங்கினான். ஒரு மாடி ஏறக் கூட அவனால் முடியவில்லை, அதுவே ரொம்ப தூரமாய் இருந்தது. அண்டை வீட்டுப் பெண்கள் யுர்காவுக்குச் சாப்பாடு போட்டனர், அபலைக் குழந்தைகளகத்துக்குப் போகவிருக்கிற ஒரு சிறுவன் மீது முன்னதாகவே அவர்கள் கருணை சாய்ந்தது.

கெர்க்காவின் வீட்டில் அமளி தொடர்ந்து கொண்டிருந்தது. அவனுடைய பெற்றோர்கள் பிரிவார்கள், மறுபடி சேர்வார்கள், படுகேவலமான நிலையில் இருந்த அவர்களுடைய அடுக்ககத்தில் தங்கள் மகனைத் தனியே விட்டு விட்டு, தமக்குள் சுமுக நிலை வருவதற்காகப் பைகால் ஏரிக்கரைக்குப் பயணம் போவார்கள். அந்த அடுக்ககமோ தொன்மக் கதைகளில் வரும் ராட்சதர்களிடயே நடந்த போர்க்களம் போல இருந்தது. கெர்க்கா தன் அம்மாவுடைய வாசனைத் தைலத்தைத் தன் தலையின் முன்முடியில் தெளித்துக் கொள்வான், அப்பாவின் மலிவான சிகரெட்டுகளைக் குடித்து இருமித் தள்ளுவான். இதெல்லாம் தன் பெற்றோருக்குத் தன் மீது பிரியம் வரவழைக்கும் என்று அவன் நினைத்தான்.

அந்தச் சுற்றுவட்டாரத்தின் இரும்பு மனுஷி என்று பெயர் வாங்கிய ஐவனோவா, இந்த நடவடிக்கைகளைச் செய்யும்போது அவனைப் பிடித்து விட்டாள். அவளுடைய சொந்தப் பெயர் யாருக்கும் தெரியாது, (ஐவனோவா குடும்பப் பெயர்), அவளைப் பார்த்தாலே எல்லாருக்கும், குறிப்பாக சிறுவர்களுக்குப் பீதி எழும். அதற்கு முன் தினம்தான் அவள் அந்தப் பக்கத்திலிருந்த நுழைவாயிலுக்கு விஜயம் செய்திருந்தாள்- க்ரிவோவ்களைப் பார்க்கத்தான்.

குளிர்கால விடுமுறையின் முதல் நாளில், கதோலிக்கக் கிருஸ்த்மஸ் அன்று, யுர்கா தன் பெற்றோர்களுடன் ஒரே நேரத்தில் ஒரு மளிகைக் கடையில் இருந்தான். அவன் ரொட்டி வாங்க வந்திருந்தான்; அவர்களோ, விடுமுறையைக் கொண்டாட ஒரு ‘புட்டி’ வாங்க. வைன் விற்கும் பகுதிக்குப் போகக் கூச்சப்பட்டாள் அலீனா, அங்கு வேலை பார்த்தபோது, முட்டாள் குடிகாரர்களைப் பார்த்து அவளே சத்தம் போட்டவள்தான். க்ரிவோவ் வருவாரா என்று பார்த்துக் கொண்டு அவளும், யுர்காவும் கடை முன்படிகளில் தயங்கினார்கள்.

தன் அம்மாவின் அருகில் நிற்க யுர்காவுக்கு ஒரே வெட்கமாக இருந்தது. அவன் நகர்ந்து நின்றான், விடுமுறைக் கொண்டாட்டத்துக்காக அலங்கரித்த கடை ஜன்னல்களில் முகத்தைப் புதைத்துக் கொண்டிருந்தான் – வேறொரு உலகத்துக்குப் போய்விட்ட மாதிரி உணர்ந்தான்.

அது ஒரு சிறு கிருஸ்த்மஸ் மரம்தான். அதன் வெள்ளி ஜிகினா ஊசி இலைகள் இலேசாக வீசிய காற்றில் மென்மையாக ஆடின. அங்கு பனியைக் காட்டவென விரிக்கப்பட்டிருந்த இலேசான சாம்பல் நிற பஞ்சின் மீது அவை சிதறும் ஒளித் துண்டுகளைத் தெளித்தன. டம்பமான தங்க நிற முலாம் பூசிய ஒரு சிறு மணி ஒரு கிளையில் தொங்கியது. அதன் மருட்சியோடு இறைஞ்சும் ஒலியைக் கண்ணாடியைத் தாண்டிக் கேட்க முடிவதாக யுர்காவுக்குத் தோன்றியது.

இன்னதென்று சொல்ல முடியாது தன்னை நசுக்கும் உணர்ச்சிகளை ஒரு பெருமூச்சால் வெளிப்படுத்தினான். ஜாலங்கள் நிறைந்த ஒரு காட்டில் வெள்ளி மரங்களூடே தான் ஓடுவது போல உணர்ந்தான். அதை நம்புவதற்குத் தன் முழு மனதோடும் முயன்றான். ஆனால் அந்தப் பரிதாபத்துக்குரிய சிறு மணியின் கூவல் அவன் இதயத்தை நேராகத் தொட்டது, அதெல்லாம் நடக்க முடியாது என்று அவனுக்கு சிறிதும் மறந்து விடாமல் நினைவூட்டியபடியே.

அவனுக்குப் பின்னால் பனி குற்ற உணர்வோடு நொறுங்கியது, ஜன்னலில் அவனுடைய அம்மாவின் முகம் பிரதிபலித்தது.
“உனக்கு ஒரு மரம் வேண்டுமா?” குடிபோதையோடு இறுகிய கேவல் அவள் தொண்டையில் புரண்டது. “நாம் ஒன்று வாங்கலாம். நாளைக்கு.”

யுர்கா தன் கண்களை இறுக்க மூடிக்கொண்டான், இறுதியாக ஒரு அசாதாரணமான முயற்சி செய்தான் – நம்பினான்.

“இதப் போலவேயா?” விளக்கம் கேட்டான், அம்மாவின் மோசமான வாடையிலிருந்து தப்ப தன் கழுத்துப் பட்டியில் முகத்தைப் புதைத்துக் கொண்டான்.

”நான் நிச்சயமாத்தான் சொல்றேன்!” அவள் பொய் சொன்னாள், திரும்பிக் கொண்டபடி மௌனமாகக் கண்ணீர் சிந்தினாள்.

ஆனால் ஒரு நாள் கடந்தது, அப்புறம் இரண்டு, புதுவருடம் வாண வேடிக்கைகளோடும் , ஷாம்பெய்னோடும் ரகளையாக வந்து போயிற்று, ஆனால் அலீனா அந்த மரத்தைப் பற்றிப் பேசவேயில்லை. யுர்கா, தன் பெற்றோரிடம் எதையுமே அதுவரை கேட்டிராத பையன், ஒரு நீண்ட மூச்சை இழுத்துக் கொண்டான் – கேட்டான்.

‘அது ஒண்ணுதான் இவனுக்குத் தெரியும், எனக்குக் கொடு, எனக்குக் கொடு!’ க்ரிவொவ் உடனே பெரிதாக இரைந்தான், எதிர்பார்த்த மாதிரியே. ” இங்கே குடிக்க ஒண்ணுமே இல்லெ, இவனுக்கு மரம் வேணுமாமே! காட்டுக்குப் போடா. அங்கெ நெறய்ய நெறய்ய மரமெல்லாம் இருக்கு!”

அவனுடைய அம்மா முட்டாள் போலச் சிரித்தாள், கனமாகச் சாயம் பூசிய தன் கண்ணிமைகளைக் கொட்டினாள், எதிரே இருந்த தட்டைச் சுத்தமாகத் தவற விட்டு, முள்கரண்டியால் துழாவினாள்.

இபிஃபனி தினத்தன்று (ஜனவரி 6ஆம் தேதி), க்ரிவொவ் தம்பதிகள் தங்கள் மகனைத் தூரத்தில் இருந்த இருபத்திநாலு மணி நேரமும் திறந்திருந்த ஒரு கடைக்கு அனுப்பினார்கள். அவன் திரும்பியபோது வீட்டுக் கதவு உள்புறம் தாளிட்டு அடைக்கப்பட்டிருந்தது. யுர்கா கூப்பிடுமணியை அடித்தான், கதவை இடித்தான், கத்தினான், கீழிருந்து ஜன்னல் மீது பனிக் கட்டி உருண்டைகளால் அடித்தான், ஒரு பயனுமில்லை. அவனுடைய பெற்றோர் நன்கு உறங்கிக் கொண்டிருந்தனர். சாவித் துவாரத்து வழியே க்ரிவோவின் குறட்டை ஒலி செதுக்கிச் செதுக்கிக் கேட்டது.

கொஞ்ச நேரம் யுர்கா கட்டிட நுழைவாயிலில் அமர்ந்திருந்தான். அண்டை வீட்டில் இருந்த கருணையுள்ளம் படைத்த பெண்கள் படிக்கட்டின் கீழே குவிந்தனர், ‘உருப்படா குடிகாரர்களை’த் திட்டித் தீர்த்தனர், அவனைத் தங்கள் வீட்டுக்குள் வந்திருக்கும்படி அழைத்தனர். யுர்கா ஓடியே போய் விட்டான்.

“அவன் இன்றிரவு கெர்க்காவின் வீட்டில் தங்குவானாயிருக்கும்,” அந்த மூதாட்டிகள் தீர்மானித்தனர், தங்கள் அடுக்ககங்களுக்குச் சிதறினர்.

ஆனால், கெர்க்காவை அவனுடைய அத்தை ஒவ்வொரு விடுமுறைக்கும் தன் வீட்டுக்கு அழைத்துப் போய் விடுவது வழக்கம், அவனுடைய பெற்றோர் அந்நாட்களில் தூரத்திலிருந்த மலைப்பகுதிகளில் விடுமுறைக் குடில்களில் இருந்து தம் வழக்கமான சண்டைகளைத் தொடர்ந்தனர்.

நடுப்பள்ளி மாணவனான யுர்கா க்ரிவோவ், பிய்ந்த பித்தான்கள் கொண்ட இலேசான மேலங்கியை அணிந்தபடி, அந்த இரவை, க்ரிஸ்த்மஸ் அன்று அதுவோ வழக்கமான உறைநிலைக் குளிருடன், நிறைய நட்சத்திரங்களுடன் இருந்தது, எங்கே கழித்தான் என்பதை யாரும் இறுதி வரை கண்டு பிடிக்கவில்லை.

அடுத்த நாள் காலை அவனுடைய அம்மா, மிகவும் நடுங்கியபடி, வாயில் கதவருகே நின்று, எல்லாரையும் யுர்கா எங்கே போய் விட்டான் என்று கேட்டபடி, பழக்கம் மறக்காது எல்லாரிடமும் ஏதோ சில்லறை இருந்தால் கொடுப்பீர்களா என்றும் கேட்டபடி காவல் காத்தாள். அதன் பிறகு க்ரிவோவ் ஜாக்கிரதையாய் முன்படிகளில் எட்டிப் பார்த்தார், அந்த வழுக்கும் பாதையில் இருவரும் மனம் உருகும் வகையில் ஒருவரை ஒருவர் பிடித்துக் கொண்டு, அடுத்த கட்டிட வெளி முற்றத்திற்கு, பின் அவர்களுடைய நல்ல நண்பரின் வீட்டிற்கு, தங்கள் மகன் அங்கு போயிருக்கிறானா என்று பார்க்கவும், இல்லையென்றால் குறைந்தது தங்கள் போதையை மறுபடி கொஞ்சம் ஏற்றிக் கொள்ள முடியுமா என்று பார்க்கவும் போனார்கள்.

யுர்கா கொஞ்சம் அவகாசத்திற்குப் பின் வந்தான். வீட்டில் ஸ்டோர் ரூமில் குடைந்தான். அலமாரிகளில் ஏதோ தேடினான். தேடியது கிட்டாததால், எதிரே இருந்த, உடம்பு முடியாதவனான லியோஷாவின் அடுக்ககத்தின் கதவைத் தட்டிக் கூப்பிட்டான்.
“என்ன ஏதாவது சுத்தியல், உளியெல்லாம் வேண்டுமா? பூட்டை மாத்தப் போறியா?” அவருக்கு ஒரே குஷி. “ஜோராச் செய்! அவங்களோட சேர்ந்து குடிக்கிற கூட்டாளிங்க கிட்டெயெல்லாம் சாவியைக் கொடுத்திருக்காங்க. எல்லாருமா வந்து போயி இதைச் சந்தையாக்கிட்டாங்க.”

“உங்க வேலையைப் பாத்துக்கிட்டுப் போறீங்களா?” யுர்கா சள்ளென்று விழுந்தான்.

லியோஷா நிஜமாகவே அந்தப் பையன் தன்னைப் பார்த்துப் பற்களைக் கடித்தான், ஒரு ஓநாய்க் குட்டி போல என்று நினைத்தார். அவசரமாகத் தன் கதவை மூடிக் கொண்டார், முணுமுணுத்தபடியே, “உருப்படாத பயல்! கேடு கெட்டவன்!”

இரவு வரும்வரை யுர்கா அந்தப் பூட்டைக் குடைந்து கொண்டிருந்தான். லியோஷா தன் கதவுச் சாவித்துளை வழியே அதைப் பார்த்துக் கொண்டிருந்தார், அந்த மரியாதை தெரியாத பயல் “செய்றதெல்லாம் தப்பு” என்று ஏளனமாய் பார்த்தார். ஆனால், அவனோ எப்படியோ வேலையை முடித்து விட்டான், பேசாமல் அந்த சாமான்களை எல்லாம் திருப்பிக் கொடுத்தான், உள்ளே போய்க் கதவைச் சாத்திக் கொண்டு , எல்லாப் பூட்டுகளையும் பூட்டி விட்டான்.

சற்று நேரத்தில் க்ரிவோவ் தம்பதியர் வந்து சேர்ந்தனர். தங்கள் சாவியால் கதவை வெகுநேரம் பிறாண்டிக் கொண்டிருந்தனர், அதைச் சாவித்துவாரத்துக்குள் நுழைக்க முடியாதது குறித்து வசவுகளைப் பரிமாறிக் கொண்டனர். லியோஷாவும், கிழவி ஃபாயாவும், அவளுக்கு லியோஷா தகவல் சொல்லி இருந்தார், தங்கள் கதவில் இருந்த எட்டிப் பார்க்கும் துளை வழியே இதையெல்லாம் பார்த்தனர். இந்த அமர்க்களத்தைப் பார்க்கத்தான் அவர்கள் தமது மற்ற கேளிக்கைகளை – அவர் (கால்பந்து பந்தயம்) அவள் (டெலிவிஷன் சீரியல் நாடகம்)- விட்டு விட்டு வந்திருந்தார்கள்.

பொறுமையில்லாத ஃபாயா வெளியே போய் க்ரிவோவ் தம்பதியிடம் என்ன நடந்திருக்கிறதென்று சொல்லவிருந்த அந்தக் கணத்தில், யுர்கா கதவுக்குப் பின்னெ இருந்து அடங்கிய குரலில் சொன்னான், ” பேசாம போங்க. அது புதுப் பூட்டு.”

கிழவி ஃபாயாவுக்கு மூச்சு முட்டியது. லியோஷா பதட்டத்தில் தன் வயிற்றைச் சொறிந்தார்.

“பாஸ்டர்ட்! வீட்லதான் இருக்கியா!” கிரிவோவ் ஒரு நிமிஷம் யோசித்ததும் அவருக்குப் புரிந்து விட்டது. ” உடனே வந்து, கதவைத் திறடா!”

“நான் மாட்டேன்!” யுர்கா பதில் சொன்னான்.

க்ரிவோவ் அரைமணி நேரம் கதவருகே ஆத்திரமாய்க் கத்தினார். கிழவி ஃபாயாவுக்குக் கூட சலித்துப் போய் விட்டது, அவள் டெலிவிஷனைப் பார்க்கப் போய் விட்டாள். லியோஷா ஷூ போடுவதற்காக உட்காரும் ஒரு சிறு பெஞ்சில் சீக்கிரமே உட்கார்ந்து விட்டார், கொஞ்ச நேரத்தில் அப்படியே குட்டித் தூக்கமும் போடத் துவங்கினார்.

ஃபாயா மறுபடி கவனிக்கத் திரும்பியபோது, அலீனா சமரசம் பேசிக் கொண்டிருந்தாள்.

“எங்க மானத்த வாங்காதே! உள்ளே விடு!”

“அவமானத்தை நீங்களேதான் வரவழைச்சுக்கிட்டீங்க!” கதவுக்குப் பின்னாலிருந்து வந்தது.

“காலம் எத்தனை மோசமா இருக்கு! அப்பா அம்மா கிட்டெ பேசற முறையா இது!” ஃபாயாவுக்கு ஆத்திரம் வந்தது. “இந்த மாதிரி அடங்காப் பிடாரியா இருந்தா யார்தான் குடிக்க ஆரம்பிக்க மாட்டாங்க!”

கடைசியில் க்ரிவோவ் தம்பதியினருக்கு அன்று வீட்டுக்குள் போக முடியாது என்பது புரிந்தது, காறித் துப்பி விட்டு, தங்கள் நல்ல நண்பன் வீட்டுக்கு உறங்கப் போனார்கள்.

விடுமுறையிலிருந்து திரும்பியபோது, கெர்க்காவுக்கு ஏதோ படுமோசமாகி விட்டிருக்கிறதென்று தெரிந்தது. ஏதோ கசமுசாவின் பொறிகள் காற்றிலெங்கும் தெறித்தன. அவனுடைய தலைமுடி கூட நெட்டுக்குத்தாக நின்றது மின்சாரம் பாய்ந்தாற்போல, அவனுடைய கைகளோ காந்தத்தால் பாதிக்கப்பட்டது போல ஒன்றோடொன்று ஒட்டிக் கொண்டன. கெர்க்காவுக்கு தப்பாமல் ஒன்று புரிந்தது, யுர்காதான் இந்த அழுத்தத்தின் மையம். என்ன நடந்தது என்பது குறித்து அவனுக்கு எதுவும் தெரிவதற்கு முன்னரே, ஏதோ மூடநம்பிக்கையில் அவன் அதிலிருந்து பின்வாங்கினான், வகுப்புகள் மாறும் வேளையில், யுர்காவை எதிர்கொண்ட போது, அவன் இந்த வருடத்துச் சுவர்ச் செய்தித்தாளில் பார்வையைத் திருப்பிக் கொண்டான்.

family-unity-commission-painting-by-injete-blog-8330

என்ன நடந்து கொண்டிருந்தது என்று அவனுக்கு விளக்க முடியவில்லை. அவனுடைய முன்னாள் நண்பன் மிகத் துன்பம் தருவதும், பெயரில்லாததும், மோசமானதுமான எதையோ தன்னுள் சுமந்து திரிகிறான், அதைத் தொடக்கூட அவனுக்கு உள்ளுணர்விலேயே மிகுந்த தயக்கமிருந்தது. கெர்க்கா எதையும் தெரிந்து கொள்ள விரும்பவில்லை. ஆனால் தன்னையும் மீறி, அக்கம்பக்கத்தார் ஓவ்வொரு மூலையிலும் பேசிக் கொண்டிருந்ததிலிருந்து அந்தக் கதையின் விவரங்களை அவன் அறிந்து கொண்டான்.

“நேத்தி…க்கு எண்ட நட..ட ந்…தது… தெரியுமா உ…உ.. னக்கு!” உயரமான பெண், ‘பி’ வகுப்பில் இருக்கும் குரிட்ஸின், யுர்காவின் கட்டிடத்தில் இருக்கிறவள், அவள் திக்கினாள். ‘க்ரிவோவும், வேற யாரெல்லா..ம்மோ அந்தக் கத வ்வ்வெ உ.உ..டெக்க வந்தாங்க! அவென் அவுங்களெ ஒரு கோடாலி..ல வெட்டிப் போடப் பாஞ்சான்! ஜோக் ஒண்ணுமில்ல இது! என்ன, நான் பொய் சொல்ற பொண்ணுன்னு நெனக்கிறியா? பக்கத்து வீட்டுக்காரங்க அவங்களைப் பிரிச்சு விடல்லென்ன, அவுங்களெ அவன் வெட்டிப் போட்டிருப்பான், ஜோக்கா இது? அவுனுக்கு என்ன ஆகியிருக்கும் அப்றம்?அவன் ‘மைனர்’ன்னுட்டு கடுமையா இருந்திருக்க மாட்டாங்களோ என்னவோ!”

“குழந்தையா அவன்!” உசரமான, ஒல்லிப் பிச்சான் கணக்கு டீச்சர், இன்ஃபினிட்டின்னு கூப்பிடுவாங்களே அவர், ப்ரின்ஸிபாலிடம் மூக்குச் சிந்தினார். ‘எவ்வளவு சூதும் வாதும், அப்பிடி ஒரு மிருகம்! நான் அவங்கிட்ட அத்தனெ நல்லாப் பேசினேன். நான் அன்பாத்தான் கேட்டேன். ‘க்ரிவோவ், வாயேம்பா, வந்து ஒன் அப்பா அம்மாகிட்டெ ஒத்துகிட்டுப் போறியா?’ அவன் சொல்றான் பாருங்க, ‘ஓ நிச்சியமா! அவுங்க அந்த வீட்டெக் குடிச்சு மூழ்கடிச்சப்புறம் நீங்கதானே என்னெ உங்க வீட்டில வைச்சு வளர்க்கப் போறீங்க.’ இன்ஸ்பெக்டரெல்லாம் அவனைப் பாத்து அதிர்ச்சியாயிருக்காங்க! அவனோட அப்பா அம்மாவுக்கு ஒரு உரிமையும் கொடுக்கக் கூடாதுன்னுட்டு கேக்குறானாம்!”

எல்லாரும் யுர்கா கடைசியில் விட்டுக் கொடுத்து விடுவானென்று காத்திருந்தார்கள். அது நடக்காமல் நிறைய நாட்கள் கழிந்த பின், அவர்களுக்கு அவன் மேல் இருந்த இரக்கமெல்லாம் போய் விட்டது. க்ரிவோவ் தம்பதியர் மீது எல்லாரும் இரக்கப்பட ஆரம்பித்தார்கள்.

அவர்களோ தங்கள் சொந்தக்காரர்கள் வீடுகளில் ஒவ்வொன்றாக மாறி மாறித் தங்கினார்கள். குடித்தார்கள், அந்த ‘பிசாசை’ப் பற்றிக் குறை சொன்னார்கள், மேலும் மேலும் குடித்தார்கள்- கடைசியில் அவர்களுக்கு இடம் கொடுத்தவர்கள் தாங்க முடியாமல், அவர்களை வெளியேற்றினார்கள். அவர்கள் அடுத்த உறவினரைத் தேடிப் போனார்கள். கொஞ்சம் கொஞ்சமாகத் தங்கள் வீட்டிலிருந்து தூரத்துக்குப் போனதால், எல்லாரையும் பற்றி விவரம் சேகரிக்கும் கிழவி ஃபாயாவுக்கே அவர்கள் எங்கே போனார்கள் என்று தெரியாமல் போயிற்று.

பெரியவர்கள், அவனுடைய மனச்சாட்சியைத் தட்டி எழுப்பப் பார்த்தார்கள், அவனுக்குப் பாடம் போதித்தார்கள், எப்படி வாழ வேண்டுமென்று சொன்னார்கள். அவன் கேட்டுக் கொண்டான், கோணலாய்ச் சிரித்தான், மரியாதையாகச் சொன்னான்,”உங்க வேலையைப் பார்த்துகிட்டுப் போங்கய்யா.”

சிறிது சிறிதாக மிகவும் விடாக் கண்டர்கள் கூட ஒதுங்கினார்கள். கொஞ்ச நாளுக்கு எல்லாரும் ‘அந்தப் பய’ அவர்களிடம் உதவி கேட்டு வருவானென்று எதிர்பார்த்தார்கள்- அப்பொழுது அவர்கள் அவனுக்கு ஒரு பாடம் சொல்லிக் கொடுப்பார்களில்லையா? ஆனால் யுர்கா முரட்டுப் பிடிவாதமாகத் தானே எல்லாம் செய்து கொண்டான். பள்ளிக்கூட வருடம் முடிகிற போது ஜனங்கள் அவனைக் கவனிப்பதையே விட்டிருந்தார்கள்.

நடுப்பள்ளி மாணவன் க்ரிவோவ் தன் பணக்கஷ்டத்துக்கு ஒரு வழி கண்டுபிடித்தான் – அலெக்ஸ் என்கிற நிரந்தர மாணவனுக்குத் தன் இருப்பிடத்தில் இரண்டாவது அறையை வாடகைக்கு விட்டான். அவனுடைய வாடகைக்காரன் அமைதியாக இருப்பவன். பகல் பூரா தூங்கினான். இரவில் ரோய்ரிஹ், பைபிள், மைன் காம்ஃப், அப்புறம் காஸ்டனேடா என்று படித்தான். தன்னுடைய கல்வி அமைப்புக்கு வருடத்துக்கு இரண்டு தடவை போய், மறுபடி விண்ணப்பித்து, தன் சான்றிதழைப் பெற்றுக் கொண்டு வந்தான். அவனுக்கு ஏற்கனவே 30 வயதாகி இருந்தது. யுர்காவின் வயதைப் பற்றிக் கவலைப்படாமல், தான் இரவுகளில் கற்றதை எல்லாம் யுர்காவிடம் அலெக்ஸ் கொட்டித் தீர்த்தான்.

அலெக்ஸ் யிட்டிஷையும் சேர்த்து, ஐந்து மொழிகளிலிருந்து அபூர்வமான மொழிபெயர்ப்புகளைச் செய்து காலம் தள்ளினான். அவற்றிலிருந்து அவனுக்குக் கிட்டுவது அறை வாடகைக்குத்தான் போதுமானதாக இருந்தது. யுர்கா அந்தப் பணத்தில் நூடுல்கள், தயார்நிலை சூப்புகள் போன்றவற்றை வாங்கினான். இவற்றை வைத்துக் கொண்டு இருவரும் ஒப்பேற்றுவார்கள்.

சிலசமயம் அலெக்ஸ் பல நாட்கள் காணாமல் போய்விடுவான், திரும்பி வரும்போது பணம், வாழைப்பழச் சாராயம், சாக்லேட்கள் எல்லாம் கொண்டு வருவான். முன்னாளில் அவனுடன் படித்த தோழர்கள் சில்லறைத் திருட்டுகளைச் செய்து வந்தார்கள். சில நேரம் பரிதாபப்பட்டு ஒன்றுக்கும் உதவாத அலெக்ஸையும் கூடச் சேர்த்துக் கொண்டு, வெளியில் பாராவில் நின்று எச்சரிக்கை விடுக்க அவனை அழைத்துப் போனார்கள்.

யுர்காவுக்கு கடவுச் சீட்டு (பாஸ்போர்ட்) கிட்டியபோது, அவன் ஒரு புதுக் குடும்பப் பெயரை வைத்துக் கொண்டான், ‘யுரியெவ்’ என்ற அது அவனுடைய சொந்தப் பெயரிலிருந்தே உருவாக்கப்பட்ட ஒன்று. இதெல்லாம் நடக்கையில், கெர்க்கா தன் முடியை நீளமாக வளர்த்துக் கொண்டிருந்தான், ஒரு பெரிய மேலங்கியை அணிந்து கொண்டு உலாவினான், தன் பெயரை யேய்கர் என்று தானே மாற்றி வைத்துக் கொண்டான்.

புதுப்பிக்கப்பட்ட அவர்களுடைய நட்பின் துவக்கத்தில் யேய்கருக்கு யூரியேவின் கண்களைப் பார்க்கும்போதெல்லாம் உடல் பூராவும் சூடாகவும் குளிர்ந்தும் போயிற்று. ஆனால் அவனுக்கிருந்த சந்தேகம் சீக்கிரமே தீர்ந்து போயிற்று.

இதனால், அவர்களிடையே ஒரு சங்கடமான உரையாடல் எழுந்தபோது அதை அவன் எதிர்பார்க்கவில்லை. ஒரு சமயம், யேய்கர் ராணுவத்தில் கட்டாயமாகச் சேர்க்கப்படுவதைத் தவிர்க்க, மனநோய் மருத்துவ மனையில் சேர்ந்திருந்தபோது, யூரியெவ் அவனைப் பார்க்க வந்து விட்டு திரும்பிப் போகவிருந்தான். அப்போது அதே அறையிலிருந்த இன்னொருவனின் தொண தொணக்கும் புலம்பல்களைக் கேட்டுச் சலித்துப் போயிருந்த யேய்கர், இன்னும் கொஞ்ச நேரம் இருக்கச் சொல்லிக் கெஞ்சினான். அப்போது யுரியெவ் தான் பெண்கள் பகுதிக்குப் போகவேண்டி இருக்கிறதென்று சொன்னான்.

“ஓ! அங்கே யாருடைய பார்வையோ உன்னை இழுக்கிறதாக்கும்?” என்று கோணலாகச் சிரித்தான், எதிலும் குறை கண்டு பிடிக்கக் கற்றிருந்தானே.

“என் அம்மா அங்கே இருக்கிறாள்.” யுரியெவ் நெற்றியைச் சுருக்கினான்.

யேய்கருக்குத் திடீரென்று தொடர்ந்த இருமல் வந்தது, அவன் நெளிந்தான், முட்டாள்தனமாகக் கண்ணைக் கண்ணைக் கொட்டினான்.
“அட! நீ ஏன் இதைப் பத்தி எதுவுமே சொல்லாம இருந்தே?”

” உனக்கு இதில என்ன அக்கறெ இருக்கும்னு நெனச்சேன்.”

யேய்கருக்கு சங்கடமாகிக் காதெல்லாம் சூடாகியது.

“அவங்களுக்கு என்ன ஆச்சு?” திக்கித் தடுமாறிக் கேட்டுவிட்டான், கேட்பதற்குள் யூரியெவ் மீது இன்னும் வெறுப்பு கூடியிருந்தது.
” சித்தப் பிரமைல உளறிக் கிட்டிருக்காங்க.”

“அப்ப நீயி..?”

“அதனாலென்ன? நான் அவங்களைப் பாக்கப் போய்கிட்டிருக்கேன். நீதான் பாக்கிறியெ.”

“ஆனாக்க நீ, நீயி…..” யேய்கருக்கு என்ன சொல்வதென்று ஒரே சங்கடம். “ஆமா, ஆனா எப்படி…?”

” ஓ, நீ அதெச் சொல்றியா. அவுங்களுக்கு என்னை அடையாளம் தெரியல்லெ. ஒவ்வொரு தடவையும் அவங்களோட இதயமே இல்லாத பிள்ளையைப் பத்தின சோகக் கதையைச் சொல்வாங்க.”

“நீ என்ன செய்ற?”

“நான் கேட்டுகிட்டு இருப்பேன். அவங்களெத் தேத்துவேன். அவங்க என்ன சொல்வாங்கன்னா, “நீ அவன மாதிரி இல்ல. நீ நல்ல பையன்.’ ம்பாங்க.”

கனத்த மௌனம் நிலவியது. யேய்கரின் நாக்கு நுனியில் ஒரு கேள்வி ஊசலாடியது, ஆனால் அதைக் கேட்கத்தான் அவனுக்கு முடியவில்லை.

“தயங்காதே. சும்மா கேளு.” யூரியெவ் அமைதியாக அவனுக்குக் கட்டளையிட்டான்.

மாட்டிக் கொண்ட யேய்கர் தடுமாறிக் கொட்டி விட்டான், “அவங்க மேலெ உனக்குக் கொஞ்சம் கூட இரக்கமா இல்லியா?”

“இருக்கே.” யூரியெவ் மகிழ்ச்சியே இல்லாமல் முறுவலித்தான். “ஆனால் என்னுடைய இரக்கத்தால் அவங்களைக் காப்பாத்த முடியாது.”
“அப்படின்னா என்ன? கீழே விழுந்தவங்களை இன்னும் உதைக்கணுங்கிறியாக்கும்?” என்று தைரியமாகக் கேட்டு விட்டான்.
“முட்டாள்!” யூரியெவ் கடைசியாக வெடித்தான். “நீ நிறய முட்டாள்தனமான புத்தகங்களெப் படிச்சிருக்கெ! நான் அனாதை இல்லத்தில் போய் நின்னு, ஏதோ ஒரு குப்பை விஷயத்துக்காக யாரையாவது கழுத்தை அறுத்து, இருபது வயசில டி.பி வந்து செத்துப் போயிருந்தா நீங்க எல்லாம் ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பீங்க இல்லியா? எனக்கு அதான் நடக்கும்னுதானே பாத்துகிட்டிருந்தீங்க?

“இப்பிடி ஏன் இருக்கெ நீ?” யேய்கர் சங்கடத்தில் முனகினான்.

“வேறெ என்ன நடந்திருந்தாலும் ஒண்ணும் மாறி இருக்காது,” யூரியெவ் அவன் சொன்னதைக் கேட்கவே இல்லை. “என் அம்மா குடிச்சு நாசமாப் போயிருப்பார், என் அப்பாவோ தொண்டைலெ ஒரு ஸ்க்ரூட்ரைவர் குத்திச் செத்துப் போயிருப்பார். பெரிய அதிசயமா ஏதோ நடந்திருத்தாத்தான் எதுவும் மாறி இருக்கும், சுத்தமா நம்ப முடியாததா இருந்திருக்கணும். அவங்களோட சிறுவயது மகன் அவங்களெ வீட்டெ விட்டுத் துரத்தினதை அது மாதிரின்னு வச்சுக்க. அவங்களுக்குப் புத்தில உறைக்கிற மாதிரி ஒரு கடும் தாக்கு கொடுக்க வேண்டி இருந்தது. ஆனாக்க ரொம்ப காலம் கடந்து போயிடுத்து, அவங்களுக்கு எதையும் புரிய வைக்கிற நிலையிலேயே இல்லை அவங்க.”

‘நீ இருக்க பாரு….”

“நான் செய்ததுக்கு ஏதாவது வருந்தறேனா, இல்லெ மன்னிப்புக் கேட்க விரும்பறேனான்னு கேட்க நெனக்கிறெ இல்லியா? நிச்சயமா இல்லெ. எனக்கு இருக்கிற ஒரே வருத்தம் இதெயெல்லாம் இன்னும் முன்னாடியே செய்யாம விட்டேனெங்கிறதுதான்!”
“நீ நெசம்மா இதெல்லாம் அப்ப நினெச்சியா?”

“இதுல உனக்கென்ன வந்துது?”

யூரியெவ் போய் வருகிறேன் என்று கூடச் சொல்லாமல் சென்றான். மருத்துவ மனையில் இருந்த ஒரு பூங்காவில் சில முறைகள் சுற்றி வந்தான். காக்கைகள், பனி உருகியதால் உற்சாகப்பட்டு, பிர்ச் மரங்களில் சச்சரவு செய்தன. ஈரமான பனித் துகள் காலடியில் ஏதும் எதிர்ப்பில்லாமல் அரைபட்டு நசுங்கியது.

“அந்தக் கிருஸ்த்மஸ் பனி இளகலோட லட்சணத்தைப் பாரு!” அவனுக்குத் தெரிந்த ஒரு வயதான உதவிச் செவிலி குறை சொன்னார்.

யூரியெவின் முகம் திருகிக் கோணலானது. அவனுக்கு கிருஸ்த்மஸைக் கண்டாலே பிடிக்காமல் போயிருந்தது முன்பு நடந்த விஷயங்களால். இந்த விடுமுறை நாட்களை அலட்சியம் செய்யவே முயன்றான். ஆனால், அவன் எத்தனைக்கு அலட்சியம் செய்ய நினைத்தானோ, அத்தனைக்குக் கூடுதலான உற்சாகத்துடன் எல்லாரும் கிருஸ்த்மஸ்ஸைக் கொண்டாடினார்கள். ஆனால் இந்த தடவை, அந்த வெறுப்பூட்டும் வார்த்தையைக் கேட்டபோது அவனுக்குள் வித்தியாசமான, எதிர்பாராத அதிர்வு ஒன்று எழுந்தது.

அரைமணி நேரம் கழித்து யூரியெவ் ஒரு பெரிய செயற்கை கிருஸ்த்மஸ் மரத்தைக் கொண்டு வந்து அந்த மருத்துவ மனைப் பகுதியில் நிறுத்தினான். அதைப் பார்த்ததும் அலீனா க்ரிவோவா- கூன் விழுந்து, அடங்கிப் போய், எதுவுமே நினைவில்லாமல் இருந்தவள்- திணறிப் பெருமூச்சு விட்டு, குதூகலத்தில் வாயைப் பெரிதாகத் திறந்தாள்.

“இங்கே வாங்க”- யூரியெவ் அவளுடைய கையைப் பற்றி அதனருகில் அழைத்து வந்தான். “மெர்ரி கிருஸ்த்மஸ்!”

அலீனா அந்த வெள்ளி ஊசி இலைகளை கூச்சத்தோடு தொட்டுப் பார்த்தாள். அந்த அரை இருட்டான அறை மாயா ஜாலக் கதைகளில் வருவது போன்ற ஒளிச் சிதறல்களால் நிரம்பியது. அவளால் கைப்பற்ற முடியாத ஒரு நினைவு அவளுக்குள் திடீரென்று ஜ்வாலையாய் எழுந்தது, அவளுடைய இதயத்தில் ஒரு நிமிடம் கூர்மையாகப் பாய்ந்தது.

“என்ன? என்ன ஆச்சு?” அந்த ஜ்வாலையைப் பற்றிக் கொள்ள முயன்று அவள் மிக அதிர்வடைந்தாள்.

ஆனால் மறுபடி புகைப் பனி புத்தியை மூடியது. செயலற்ற நிலையில் திரும்பினாள், அலீனா யூரியெவைப் பார்த்தாள், ஒரே சிரிப்பாகக் கரைந்து போனாள்.

“எத்தனை அன்பு, எவ்வளவு நல்லதனம்!” அவள் வழக்கம்போல முணுமுணுத்தாள், திடீரென்று சொன்னாள், “நீ ஏன் என் பிள்ளையாய் இருக்கக் கூடாது?”

“ஆமாம், நான் வேண்டாம்னா சொல்வேன்,” யூரியெவ் அவளோடு ஒத்துக் கொண்டான். மரத்தைத் தொட்டான். ” ஏன் ஆகக் கூடாது?”

2011 ஆம் வருடம் நடால்யா குலிட்சியெரோவா (наталья ключарева – Natalia Klyuchareva) எழுதிய ‘Ne Vashe delo” என்கிற ரஷ்யக் கதையை இங்கிலீஷில் மொழி பெயர்த்தவர் மேரியன் ஷ்வொர்ட்ஸ் (Marian Schwartz). இது ‘Words Without Borders” என்கிற வலைப் பத்திரிகையின் ஏப்ரல், 2011 இதழில் வெளியானது. அந்தந்த மொழி உரிமைகள் அவரவருடையவை. இதை அவர்கள் இருவரின் அனுமதியுடனும், பத்திரிகையின் அனுமதியுடனும் மொழி பெயர்த்துப் பிரசுரிக்கிறோம். நடால்யா குலிட்சியெரோவாவுக்கும், மேரியன் ஷ்வொர்ட்ஸுக்கும், வோர்ட்ஸ் வித்தவுட் பார்டர்ஸ் பத்திரிகைக்கும் சொல்வனம் நன்றி தெரிவிக்கிறது.

இங்கிலீஷ்  வடிவு இங்கு: http://wordswithoutborders.org/article/none-of-your-business

One Reply to “உங்க வேலைய பார்த்துக்கிட்டுப் போங்க”

Comments are closed.