அவர்கள் வந்தனர் எதிர்காலத்திலிருந்து

வரலாற்றில் பேரரசுகளின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் கவனித்து வந்திருக்கிறவர்கள் அவற்றை மனித உடலின் வளர்ச்சியோடு ஒப்பிட்டுப் பேசி இருக்கின்றனர். அது அத்தனை பொருத்தமான ஒப்புமை என்று தோன்றவில்லை, ஆனாலும் ஒரு உபமானம் என்பதாகச் சுருக்கென ஒரு பிம்பத்தைக் கொடுக்கிறதென்னவோ உண்மைதான்.

பேரரசுகள் துடிப்போடு தோன்றி வளர்ந்து, அகம்பாவத்தோடு புறவெளியில் உலவி, சாதனைகளைத் துரத்தி, ஓரளவு சாதித்து, பின் நடுவயதின் சாவதானத்தைப் பெற்று, துடிப்பினிடத்தில் பொறுமையைப் பயன்படுத்தி, சாதனையின் இடத்தில் சூழ்ச்சிகளைப் பயன்படுத்தி தாக்குப் பிடிக்கின்றன. ஒரு கட்டத்தில் தம் மெலிவுகள் குறித்த சுய மதிப்பீட்டை இழந்து விட்டு, சுய மதிப்பைத் திரும்பப் பெறும் சினத்துடன் அகலக் கால் வைத்து போர்களில் இறங்கி, வெற்றிக்குக் கொடுக்கும் விலை ஏகமாக இருக்க, காலியான கஜானா, தீர்ந்து போன இளமை, மறுபடி இட்டு நிரப்ப முடியாத வளங்கள் என்று நடுவானில் எரிபொருள் தீர்ந்த ஜெட் விமானமாகக் கீழ் வீழ்ந்து நொறுங்குகின்றன. இல்லை எஞ்சின் இயங்காத கப்பலாக, வரலாற்றுக் கடலோடு அலைந்து எங்கோ கரை ஒதுங்குகின்றன.

மேற்கில் கடந்த சில வருடங்களாக பொருளாதாரச் சரிவு தொடர்கிறது. மேற்கு இன்னும் எரிபொருள் தீர்ந்து விடாத எஞ்சின் என்று மேற்கின் அறிவாளர்கள் நம்புகிறார்கள். மேற்கு என்பது ஒரு கருத்துக் கட்டு. அதைக் கூறுகளாகவாவது பிரித்தால் சில கூறுகளில் இன்னும் இளமையோ, அறிவுச் சேமிப்பின் எரிபொருளோ, முன்னாளில் சேமித்த வளங்களில் ஒரு பகுதியோ இன்னும் உண்டு. சில மேலைப் பகுதிகளில் இன்னும் தீராத இயற்கை வளங்கள் இருக்கின்றன. மேற்கு அப்படி ஒன்றும் காணாமல் போய்விடாது, ஆனால் உலகரங்கில் முன்னளவு அகலக் கால் வைக்க முடியாத நிலையில் உள்ளது என்பதென்னவோ நிதர்சனம். ஆஃப்கனிஸ்தானின் உதிரிப் போராளிகள் பெரும் வல்லரசுக்கும், துணை வல்லரசுகளுக்கும் தண்ணீர் காட்டிக் கொண்டிருக்கின்றனர். பாகிஸ்தானின் மலைவாசி/ மாநகரவாசித் தாலிபானியரைத் தீர்த்துக் கட்ட ஒரு மேலை அரசுக்கும் வலுவில்லை அல்லது துணிவில்லை.

இவை தவிர வேறென்னவோ திசைகளில் எல்லாம் கூட மேற்கில் ஒரு ஓய்ச்சல் தென்படத் துவங்கி இருக்கிறது. இன்னும் வெள்ளையரில் வலது சாரி, கிருஸ்தவத் தீவிரவாதிகளின் ஆர்ப்பாட்டங்கள் எழுந்து கொண்டிருந்தாலும் அவை எல்லாம் பாவலாதான் என்று கருத நியாயம் உண்டு. அணையும் சுடர் பிரகாசமாகக் கொழுந்து விட்டெரியும் கணங்களை ஒத்த வீறாப்பு.

வழக்கம்போல கரிச்சுரங்கங்களில் கொல்லும் வாயு இருக்கிறதா என்றறிய சுரங்கம் தோண்டுபவர்கள் கூண்டுகளில் எடுத்துப் போகும் சிறு குருவிகளாகச் செயல்பட்டு அபாயத்தை முன்னறிவிக்க உதவும் ஜீவன்களாக இருப்பவர்கள் கதாசிரியர்கள், கவிஞர்கள், நாடகாசிரியர்கள், பாடலாசிரியர்கள். சமீப காலங்களில் மேற்கில் பல அறிவியலாளர்/ சூழலியலாளர்களும் சேர்ந்து இந்த எச்சரிக்கை அறிவிப்புகளைக் கொடுக்கிறார்கள் என்பது உண்மை. அறிவியலாளர்களில் பெரும்பான்மையினருக்கு அமைப்பின் நிழலில் ஒதுங்குவதே வரலாறு என்றாலும், துவக்கத்திலிருந்தே அவர்கள் நடுவேயும் அமைப்பை மதிக்காத தன் முனைப்பும் இருந்திருக்கிறது. பேரரசனிடம், ‘ சூரியனை மறைக்காதே! ஒதுங்கி நில்.’ என்று சொல்லி அதற்காக உயிரிழந்தார் என்ற கர்ண கதை அவர்களில் ஒருவர் பற்றித் தோன்றியதுதானே.

மேற்கின் ஒரு அளிப்பு நவீன இலக்கியம் என்றால், அந்த நவீன இலக்கியத்திலும் ஒரு குறிப்பிட்ட வகை இலக்கியம் அறிவியல் புனைவு என்கிற வகை. இதிலும் மேற்கு பெரும் முன்னெடுப்புகளை எடுத்து வைத்து உலகுக்குப் புதுப்பாதைகளைக் காட்டி இருக்கிறது. அறிவியல் புனைவுகள் கர்ண பரம்பரைக் கதைகளை ஒத்த ஜிகினா வேலைகளும் கொண்டவை, அறிவியலுக்கு உரித்தான தீராத ஆர்வமும், அணையாத அறிவுத் தீயும் கொண்டவை.

மாயாஜாலங்களும், அசாதாரணத்துக்கு விழையும் சமூக இயக்கமும் சேர்ந்தியங்கும் பண்டை இலக்கியத்தின் இடத்தில் அறிவியலும், புனைகதையும் சேர்ந்தியங்கி, மனித குலம் அண்டப் பெருவெளியிலும், கால வெளியிலும் தாவிப் பயணிக்கப் போகிற யுகங்கள் பற்றிய பெருவிழைவுகளாகத் தோன்றியவை அறிவியல் புனைவுகள். இவை அனேகமாக மேலைத் தொழிற்சாலை உற்பத்திமுறை சார்ந்த சமூகங்கள் எழுகையில் தோன்றியவைதான். அன்று மேலைச் சமூகங்களில் விளிமணடலத்தை நிரப்பிய கரிப்புகை, நீராவி, மாநகரங்களினருகில் எங்கும் கொதித்த பெரும் எரியுலைகள், மனிதரை எறும்புகளாக்கிய தொடர் சங்கிலி பொருள் தொகுப்பு உற்பத்தி முறை ஆகியன இன்று அனேகமாகக் காணாமல் போய்விட்டதென்றாலும், அப்போது தோன்றிய புனைவு முறை காணாமல் போகவில்லை. மாறாக அனேகமாக முந்தைய மாயாஜாலப் புனைவுகளே போன்றன பெருகி வருகின்றன. ஒரு அடிப்படை வேறுபாடு உண்டு. மேற்கில் தொழிலுற்பத்தி மங்கி வரலாம், அறிவுற்பத்தி இன்னும் மங்கவில்லை. புனைவுலகில் கூட மேற்கில் ஒரு சலிப்பு, தேக்கம் இருக்கிறது என்று மேலை விமர்சகர்களே அவ்வப்போது எழுதுகிறார்கள். அதே அளவு தேக்கம் அறிவியல் புனைவுகளில் இல்லை என்றாலும், அறிவியல் புனைவுகள் 40, ‘50, 60களில் இருந்த வகையாக இப்போது இல்லை என்பதுதான் இந்த முன்னுரையின் கருத்து.

அன்றைய புனைவுகளில், பண்டைய தொழிலுற்பத்தி முறையோ, பொருள்கள் குறித்த விவரிப்போ அதிகமிராது. பொருட்களின் பயன் திறமையும், அவற்றை நாயகர்கள் (எப்போதாவது ஒரு நாயகியும் உண்டு அதில்) செலுத்தும் லாகவமும் குறித்த வருணனைகள் பக்கங்களை நிரப்பின. எழிலும், வசீகரமும் மொழியில் மனிதக் கற்பனையை ஆகாயத்தை நோக்கி எழுப்பின.

இன்றைய புனைவுகளில் தொழில் உற்பத்தி முறை குறித்து அத்தனை வருணிப்பு இல்லை என்றாலும் அது ஆங்காங்கே தொடர்ந்து பேசப்படுகிறது. பொருட்களின் வருணனையோ பக்கங்களெங்கும். அவற்றின் பயன்முறை, தாக்கம் போன்றனவே கதையின் எலும்புக் கூடு. மனித லாகவமும், தீர்மானங்களும் முன்னத்தனை கதைவெளியை நிரப்பவில்லை, மாறாக கருவிப் பயன்பாட்டின் விளைவுகள்- மனித உடலில், மனதில், அறிவில், சமூகத்தில், காலத்தில் என்று ஒவ்வொரு வெளியாக, ஒவ்வொரு ஊடகமாகத் தொட்டுச் செல்லுமிந்தக் கதைகள்- என்னவென்று காலில் தைக்கும் நெருஞ்சி முள்ளாகவோ, ஊனை ஒழிக்கும் அணு ஊசியாகவோ எழுதப்படுகின்றன.

20ஆம் நூற்றாண்டின் இரு பெரும் யூரோப்பியப் போர்கள், பெரிதளவும் யூரோப்பில் நாசமேற்படுத்தின என்றாலும், முற்றிலும் அழிப்பைக் கொண்டு வந்ததொரு ஆசிய நாட்டில். அந்தப் போர்களை மனித குலம் தாண்டி விட்டது ஆனால் உலகெங்கும் சிறு போர்களை நடத்துகிறது. அழிப்பு பொருட்களில் என்பதை விட, மனிதர்களின் எண்ணிக்கையில் அதிகமாகவே ஆகிக் கொண்டிருக்கிறது. இத்தனைக்கும் போர்களில் ஈடுபடும் மனிதரெண்ணிக்கை அத்தனை கூடிவிடவில்லை, மாறாகக் குறைந்தே வருகிறது. ஆயுதங்களின் அழிப்புத் திறன் கூடுவதால் சாவுகளின் எண்ணிக்கை கூடி வருகிறது.

நேராகப் போர்களில் அழிக்கப்படுவோரை விடப் பன்மடங்கு போர்களோடு தொடர்பில்லாத இதர பொருளுற்பத்தி முறைகளினால் நேர்கிறது. காலம் காலமாக மனிதருக்கு உணவும், ஆயுளும் அளித்த உற்பத்தி முறைகள் இன்று அவற்றின் குணம் மாறி, தற்காலிகமாக உணவும், ஆயுள் விருத்தியும் அளித்து நெடுங்காலத்தில் மனிதரையும், இதர ஜீவராசிகளையும் கொன்று பூண்டோடு அழிக்கும் தன்மை கொண்டனவாக மாறி வருகின்றன. (ஒரு உதாரணம்: அரிசித் தாவரத்தில் இன்று கூடிக் கொண்டிருக்கும் ஆர்ஸனிக்) ஒரு புறம் செவ்வாய் கிரகத்தில் ரோபாட் எந்திரங்கள் இறங்கி அங்கு தரையின் தன்மையைச் சோதித்துத் தகவல் அனுப்புகின்றன, உலகில் எந்த மூலை முடுக்கிலும் உள்ள மக்களை நாம் உடனுக்குடன் தொடர்பு கொள்ள முடிகிறது, கடிதம் எழுதி முடித்த உடன் சில விநாடிகளில் அடுத்தவரைச் சேர்கிறது இடையிலெத்தனை ஆயிரம் மைல்கள் இருந்தாலும். இன்னொரு புறம் ஏதேதோ ஆபத்துகள் மனிதரையும் இதர ஜீவராசிகளையும் சூழ்கின்றன என்ற அபாய அறிவிப்பு ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

கடல் அமிலமாகிறது. துருவங்களின் பனி வெளிகள் உருகுகின்றன, பல மிலியன் மக்களைக் கொல்லக் கூடிய வைரஸ்கள் வளர்கின்றன, தட்ப வெப்ப நிலை எதிர்பார்க்க முடியாத வகைகளிலெல்லாம் இயங்கத் துவங்கி இருப்பதால் வேளாண்மை என்பது சூதாட்டமாகி வருகிறது… இத்தியாதிப் பிரச்சினைகள் தினம் செய்தித்தாள்களில் வெளி வருகின்றன. இதென்ன புதிது என்று இன்றைய இளைஞர் கேட்கலாம். ஏனெனில் அவர்கள் படிக்கத் துவங்கிய நாளாக ஒலிக்கும் அபாய அறிவிப்புகள்தாம் இவை. ஆனால் இந்த அபாய அறிவிப்புகளுக்கும், 1950, 60களில் இந்தியாவில் ஒலித்த அபாய அறிவிப்புகளுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. இன்றைய எச்சரிக்கைகள் ஒரு நாட்டுக்கானவை அல்ல, ஒரு உயிரினத்துக்குமானவை அல்ல, மொத்த இயற்கைச் சூழலே, உயிரினங்கள் அனைத்துமே அழியும் ஆபத்து நெருங்கலாம் என்ற எச்சரிக்கை. முன்பாவது ஏதோ தற்காலிக விடைகள் தோன்றி, அவை செயல்படுத்தப்பட்டன. இன்று விடைகளும் கூட குழப்படியாகவே இருக்கின்றன.

இவை என்ன புதிது, எதற்கு இவற்றை எழுத வேண்டும் என்று கேள்வி எழலாம். இந்தச் சூழலில் அறிவியல் புனைவுகள் எப்படி மாறி விட்டிருக்கின்றன என்று சொல்லத்தான் இத்தனை பீடிகை. 40- 70கள் வரையிலும் ஒளிர் விடும் எதிர்காலத்தைப் பற்றியே பேசிக் கொண்டிருந்த அறிவியல் புனைவுகள் கதை வெளியில் அண்ட ககனப் பயணங்கள், காலப் பயணங்கள் என்று வாசகர்களை சாகசங்களில் ஆழ்த்தின. ஒரு அளவில் அவை பழைய சரித்திர நாவல்களின் இன்னொரு வடிவாக்க் கூட இருந்தன என்பதால் அவற்றை ‘ஸ்பேஸ் ஆபெரா’ என்று கூட கிண்டலடித்தார்கள். பெரும் நாடகத் தன்மையும், ஆரவாரமான சம்பவங்களுமாக கதை நகர்த்தப்பட்டிருந்தது. அப்போதும் நுட்பமான கருத்துகளோடு உளவியல் நோக்கங்களில் மனிதரின் அறிவுத் திறனும், அறி முறைகளும் எப்படி எல்லாம் மாறி பரிணாமம் என்பது எப்படி அமையக் கூடும் என்று ஊகித்து வேறு வேறு திசைகளில் கிளைத்துப் போகும் பாதைகளில் மனிதர் பயணிப்பதைக் குறித்து சாகசங்கள், போர்களற்ற விசாரணைக் கதைகளை எழுதியவர்களும் இருந்தனர்.

இன்றோ சாகசக் கதைகள் அனேகமாக இல்லை. இருக்கும் கதைகளும் விளைவுகளில் மனிதர் கிட்டத் தட்ட அழிவுநிலை அல்லது முற்றிலும் உடல் தாண்டிய வடிவுகளில் இருப்பதாக எழுதப்படுகின்றன. நினைத்ததை எல்லாம் கொடுக்கும் கனவுலகை வைத்து எழுதும் அறிவியல் புனைவாளர்கள் இன்று அனேகமாக இல்லை எனலாம். மாறாக எதிர்மாறான கற்பனை, பீதியூட்டும் அழிப்பைக் காட்டும் கற்பனை இன்று பெருகி வருகிறது. மானுடர் நம்பிக்கை இழந்து பெரும் துன்பங்களில் சிக்கி ஏதோ தத்தளித்துத் தப்பி வரும் கதைகள் பெருகி வருகின்றன. துருவர்கள் அருகி வருகிறார்கள். பகீரதர்களைக் காணோம். மார்க்கண்டேயர்கள் இல்லை. மாறாக மாரீசமும், சகுனிகளும், மஹாபாரதப் போரை ஒத்த போர்களும், தாது வருடத்துப் பஞ்சங்களும் நிறைந்த உலகம் இன்று அறிவியலாளர்களின் புனைவுகளில் உலவுகின்றது.

இதை ‘இருண்மை உலகு’ (Dystopian world) என்று சொல்கிறார்கள். அந்த இருண்ட பார்வையில் ஒரு கதைக் கவிதையை இங்கு மொழி பெயர்த்திருக்கிறேன். கவிதையாக மொழி பெயர்ப்பதை விடக் கதையாக மொழி பெயர்த்திருக்கிறேன் என்று சொல்ல வேண்டி இருக்கிறது.

வரும் இதழ்களில் இதே தன்மையுள்ள சில கதைகளை மொழி பெயர்த்து அளிக்கவும் திட்டம் இருக்கிறது.

– பஞ்சநதம்

robyn-hitchcock

இசையில் தானொரு ’ரெட்ரோடெலிக்’ என்று தன்னை அழைத்துக் கொள்ளும் ராபின் ஹிட்ச்காக் ஒரு இசைக் கலைஞர். பாப் டிலனைப் போன்ற இசைப் பாணியில் லூயிஸ் காரோல் (ஆலிஸ் இன் ஒண்டர்லாண்ட் நாவலை எழுதியவர்) போலப் பாடல்களை எழுதி இசைப்பவர். இயற்கையின் பல கசப்பும், துன்பமுமான அம்சங்களை, இனிய பாப் இசை மெட்டுக்களில் பாடுபவர். அவரே சொல்வது இது,” சிந்திக்கும் நபரான நான் முற்றிலும் நம்பிக்கையற்ற நிலையில் இருப்பவன், ஆனால் ஒரு அன்பான ஜீவனான நான் மகிழ்வாகவே இருக்கிறேன்.” இவருடைய முதல் இசைக்குழு ‘த சாஃப்ட் பாய்ஸ்’ என்பது, வில்லியம் எஸ். பரோஸின் ஒரு அறிவியல் நாவலான ‘த சாஃப்ட் மெஷீன்’ என்பதிலிருந்து அந்தப் பெயரைப் பெற்றது. இந்தக் கவிதை அதனாலேயே எதிர்காலம் பற்றிய கதைகளடங்கிய ஒரு தொகுப்பில் இடம் பெறத் தக்கதாகிறது. மைகெல் சேபானுடைய கட்டுரையான, ‘தி ஒமேகா க்ளோரி’ என்பதை ஒத்த இந்தக் கவிதை நாளை என்பதில் நிறைவேற வேண்டிய உறுதிமொழிகளின் அழிவை இன்றைய குறைபாடுகளோடு ஒப்பிட்டுப் பேசுகிறது.

ஃபாஸ்ட் ஃபார்வொர்ட் என்கிற ஒரு புது அறிவியல் கதைகளின் தொகுப்பு வரிசையின் முதல் புத்தகத்தில் இந்தக் கவிதை இடம் பெறுகிறது.

ஃபாஸ்ட் ஃபார்வொர்ட்-1, பதிப்பாசிரியர்: லூ ஆண்டர்ஸ், பிரசுர நிறுவனம்: ப்ராமிதியஸ் புக்ஸ், ஆம்ஹெர்ஸ்ட், நியுயார்க்; 2007- 407 பக்கங்கள்.

Fast Forward- vol 1; editor: Lou Anders; Published by Prometheus books, 2007; 407 pgs

அவர்கள் வந்தனர் எதிர்காலத்திலிருந்து
ராபின் ஹிட்ச்காக்

அவர்கள் வந்தனர் எதிர்காலத்திலிருந்து
முன்னொரு காலத்தில்
வெள்ளி மேலாடைகளுடனும் நம்பிக்கையுள்ள தலைக் கவசங்களோடும்
எங்கள் சூரியனையும், சரித்திரம் கொண்ட நட்சத்திரங்களையும் பிரதிபலித்து

அவர்கள் வந்தனர் எங்கள் கைகளைக் குலுக்க
அவர்களின் வெள்ளி உடல்களோடு நீரூற்றுகளருகே ஓய்வாய்க் கிடந்து
தலைக் கவசங்களை மேலொதுக்கி பூமியின் பெண்களிடம்
டாண்டெலியான் பூக்களை வாங்கிக் கொண்டு
அவற்றை ஊதிப் பறக்க விட்டனர்

”எப்படி என்று தெரிந்த பின் அது சுலபம்தானே,” என்றனர் மூத்தோர்.

அவர்களின் சுத்தமாகத் திருத்திய முடியும், புதுப் பற்களும்
எங்கள் தென்றலைத் தீண்டின.
கொடுத்தனர் அவர்களுலகின் பட அட்டைகளை,
மின்சாரப் பல்பிரஷ்களை, சூரியஒளியின் பிரகாச வீர்யம்
அவர்களிடமிருந்து க்ரோம் ஒளியாய் ஓடியது
உள்ளூர்ப் பையன்கள் அவர்களின் பகடியானார்
அவர்களே போல ஆடையணிந்தனர், அவை போலக் கிட்டினால்.

பின்னொரு நாள் அவர்கள் மாறினர்:
இப்போது அவர்கள் வந்ததோ ஒரு சோகமான கடூரமான உலகிலிருந்து
அது எங்கள் உலகைப் போலிருந்தது. திருடப்பட்ட ஆடிகள், பாக்டீரியா,
முள்ளான முகமுடி நடுவில் தாறுமாறான பற்கள்,
சோர்ந்த மூச்சு.
யாரும் அவர்களை முத்தமிட விரும்பவில்லை.

தொடாதீர் என்றெழுதிய அட்டைகளைச் சுமந்து திரிந்தனர், கடைகளில்
நுகர்வோரிடம் துண்டுப் பிரசுரங்களைக் கொடுக்க முயற்சி செய்தனர்.
யாரும் அவற்றைப் படிக்க முடியவில்லை.
ஆனால் அப்படங்கள் பீதியடைந்த குரங்கொன்று சுருக்கில் தொங்குவதைக் காட்டின.
பெண்கள் அவர்களைச் சுற்றிக் கடந்தனர்.
எங்கள் பையன்களோ, வெள்ளிப்பையன்களோ,
இருண்ட படிகளின் அடியில் கூட்டமாய்ச் சேர்ந்து அவர்களைத் தாக்கினர்.

எல்லாமறிந்த மூத்தோர் கஃபேக்களில் அமர்ந்து, இலைகளை, துளிர்களை உண்டனர்.

எங்கள் உலகமதன் பளபளப்பை இழந்தது.
அதைத் துடைத்துப் பிரகாசிக்க வைக்க இன்னும் வசதியென்னவோ இருந்தது.
பிரகாசம் ஜாடிகளில் வந்தது.

எல்லாமறிந்த மூத்தோர் தலைகளை ஆட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்
ஆனால் அவர்களுக்கு நிறைய அனுபவம் இருந்தது
தங்கள் கடைகளை மூடிக் கட்டினர்.

பையன்களுக்கு ஆத்திரம், பெண்களோ பயந்திருந்தனர்
உப்பி ஊதிய சடலங்களாய், வெறும் எலும்புகளாய்க் குறைந்து:
எதிர்காலம் முன்பிருந்ததைப் போல இல்லை
யாரோ இதற்குப் பொறுப்பேற்க வேண்டும்

அப் பையன்கள், வெள்ளிக் கத்திப் பாராவில் எங்கள் பையன்கள்,
கைப்பற்றினர் ஒரு கடைசி அகதியை
அவனை மோசமான ஒரு பசும் விடிகாலையில் பிடித்ததைப் பார்த்தேன்
கடைத் தெரு நடுவே அவனைத் தள்ளிக் கொண்டு போனார், சுவற்றில் மோதினர்
அவனை,
கற்களால் அடித்துத் தீர்த்தனர் அவனை:
அவர்களுக்குக் கொடுக்க அவனிடம் ஏதுமில்லை.
எங்கள் சூரியனின் ஒளி அவனுடைய இறக்கும் நிழலுக்கு விளிம்பு கட்டியது.

அதன் பிறகு, எதிர்காலத்திலிருந்து யாரும் வரவில்லை:
நாங்களேதான் வந்து விட்டோமே, அதற்கு:
மிகவுமே நிஜமாய் கனவு காணமுடியாத படி, எழும் சூரியனிடமிருந்து
மேகங்கள் என்னைக் காக்கின்றன.
நட்சத்திரங்கள் தம் தூரம் காக்கின்றன,
மேல் கூரையில் பொறித்த அவற்றைச் சேரும் கனவுகள் எமக்கில்லை இனி.
இந்த வழியில் இல்லை, நாங்களாக இல்லை,
இந்த வெள்ளிப் பையன்களாய் நிச்சயம் இல்லை, ஒருப்போதுமில்லை.

இருந்தும், இதுவல்ல மனம் நொந்து போகும் நேரம்- இதுதான் அந்த நேரம், இப்போது இது எங்கள் முறை அவர்களைச் சென்று பார்க்க.

தயாரா, பையன்களா?