விமரிசனத்தின் நோக்கம்

kanasu2

இலக்கியத்தில் சமீப காலத்திய  சாதனைகளையும் நமது பாரம்பரியத்தின் சாதனைகளையும் அறிந்து கொள்ள நமக்கு விமரிசனம் உபயோகப்படவேண்டும்.இலக்கிய விமரிசனத்தின் பயன் ஒரு நூலை நுணுகி நுணுகி அலசி அதன் அம்சங்களை அறிந்து கொள்வது அல்ல. அந்த நூலை சரித்திரத்தின் பார்வையிலே, அதன் இடத்தில் வைத்துக் காணவும், அந்த நூலை அனுபவிக்கவும் உதவவேண்டும். இந்த இரண்டுக்குமே அடிப்படை விமர்சன நோக்கங்கள்.

இலக்கிய விமரிசனத்துக்கான அடிப்படையைத் தருவது நூல்களை அனுபவித்து அனுபவித்துப் பண்பட்ட உள்ளமும் அறிவும்தான். பல்லாயிரக்கணக்கான நூல்களிலே ஒரு பத்திருபது முப்பது நல்ல நூல்களை தேர்ந்தெடுத்து அனுபவிக்க விமர்சனம் உதவவேண்டும். விமரிசகன் ஆழ்ந்தும் படித்திருக்கவேண்டும்.- பரந்தும் படித்திருக்க வேண்டும்.

முதல்நூல் அறிவில்லாத, அனுபவமில்லாத விமரிசகர்களால் இலக்கியத்துக்கு எவ்வித பயனும் இராது. பயனுக்குப் பதில் அவர்களால் குழப்பமே உண்டாகும். அவர்களும் குழம்புவார்கள், பிறரையும் குழப்புவார்கள். தெளிவு குறையும்.

literary-criticism-vs_-literary-theory-200x200விமரிசனத்தில்  மிகவும் பயனுள்ளது என்று சொல்லக்கூடியது “நான் படித்து இதை அனுபவித்தேன் – நீங்களும் படித்து அனுபவியுங்கள்” என்று சொல்வதுதான். ஒரு குறிப்பிட்ட நூலில் நான் இன்னின்னது கண்டேன் என்று சொல்வது இரண்டாம் பக்ஷம்தான் ஒருவர் ஒரு நூலில் கண்டதைப் போல வேறு ஒரு பத்துப் பங்கு வேறு ஒருவரால் காணமுடியும். ஒருவர் காண்பது எதையுமே மற்றவரால் காணமுடியாமல் இருக்கலாம். அலசல் விமரிசனம் விமரிசகனின் கெட்டிக்காரத் தனத்தைப் பொறுத்தது அனுபவத்தை, ரஸனையைப் பொறுத்தது அல்ல. அலசல் விமரிசனம் எப்போதும் பூரணமற்றதாகத்தான் இருக்கமுடியும். பூர்த்தியேயாகாது. குறிப்பிட்ட ஒரு நூலில் ஆயிரக்கணக்கான குறை அம்சங்களைக் காணலாம்; நிறை அம்சங்களைக் கண்டுகொண்டே போகமுடியும். பற்றுவரவு கணக்குப் போல கணக்குப் போட்டு நேர் செய்துகொள்ள இயலாது இதில்.

மேலை நாடுகளில் இலக்கிய விமரிசனம் அதிகமாக வளர்ந்து உருப்படியான காரியங்கள் செய்யாததற்குக் காரணம், அது ஆரம்பத்திலேயே அலசல் காரியங்களில் இறங்கி விட்டதுதான் என்று எனக்குத் தோன்றுகிறது. இரண்டாயிரம் வருஷத்து மரபு இருந்தும் மேலை நாடுகளிலும்கூட இலக்கிய விமரிசனம் அவ்வளவாகப் பிரமாதமாக வளர்ந்து விடவில்லை. அளவில் வளர்ந்து விட்டது; தரத்தில் வளரவில்லை. இந்திய மரபிலே இலக்கிய விமரிசனம் அனுபவ விமரிசனமாக சிறிது தூரம் நகர்ந்துவிட்டு, மேலே செல்லாமல் நின்றுவிட்டது.

விமரிசனத் துறையில் வளர்ச்சிக்கு ஏராளமாக இடம் இருப்பது போலவே தோன்றுகிறது. சிறுகதையும், நாவலும், கவிதையும் ஓரளவுக்கு வளர்ந்து பூரணத்வத்தை எட்டி விட்டன. இனி வளர்ச்சி சாத்தியமில்லை என்று சொல்கிற  அளவில் இன்றுள்ளதாக மேலை நாட்டு விமரிசகர்கள் கூறுகிறார்கள். விமரிசனத் துறை அப்படியல்ல. ஒரு ஹென்றி ஜேம்ஸை ஒதுக்கி விட்டால் விமரிசனத் துறையில் சிருஷ்டித்தரமான சாதனை இன்னும் வரவில்லை என்றுதான் சொல்லவேண்டும். இலக்கிய விமரிசன ரீதியாக கவனிக்கும்போதுகூட இலக்கியத்துக்கு அப்பாற்பட்ட விஷய கனத்தினால்தான் ஒரு இலக்கியம், ஒரு நூல் நிலைக்கிறது என்று டி எஸ் எலியட் போன்ற கவிஞர் விமரிசகர்கள் உணர்ந்து சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள்.

இந்த இலக்கியத்துக்கு அப்பாற்பட்ட விஷய கனமும் எப்படி இலக்கியத்தில் வருகிறது, வந்து உருப்பெறுகிறது என்று காண வேண்டியது இலக்கிய விமரிசனத்தின் நோக்கம். இந்த விஷய கனத்தை உணர்ந்து கொள்ள இந்தியச் சிந்தனை, இந்திய விமரிசகனுக்கு உதவக்கூடும் என்பதே என் நம்பிக்கை. இலக்கியத்தைப் பற்றியும், வாழ்க்கை பற்றியும் திடமான சித்தாந்த அடிப்படையிலான நம்பிக்கைகள் தேவையில்லை. ஆனால் ஒரு நோக்கு, ஒரு பார்வை அவசியமாகிறது. அது இலக்கிய நோக்காக, இலக்கிய பார்வையாக இருப்பது அவசியம். அதில்லாவிட்டால் எதுவுமே சாத்தியம் அல்ல – எதுவுமே புலனாகாது. எனது அனுபவமும், அந்த அனுபவத்தில் ஆனந்தமும் எப்படி ஏற்படுகிறது என்று அறிந்துகொள்ள செய்யப்படுகிற முயற்சியை – இலக்கியத்திலானால் விமரிசனம் என்றும், வாழ்க்கையிலானால் தத்துவதரிசனம் என்றும் சொல்லுகிறோம்.

தெரிந்தோ, தெரியாமலோ கடைப்பிடிக்கிற ஒரு தத்துவம் மனிதனாகப் பிறந்துவிட்ட ஒவ்வொருவனுக்கும் அவசியமாகிறது. அதே அளவில் இலக்கியத்தில் விமரிசனமும் அவசியமாகிறது. அதில்லாவிட்டால் வளர்ச்சி சாத்தியமில்லை. அனுபவமே சாத்தியமில்லாமல் போனாலும் போய்விடும். அலசல் விமரிசனம் வளர வளர இலக்கிய அனுபவம் சாத்தியமில்லாமல்தான் போகும்.அலசல் விமரிசனத்துக்கு ஒரு அடிப்படை நோக்கம் அவசியமில்லை. வார்த்தைப் பந்தல் போதுமானது. இலக்கிய அனுபவத்தை சாத்தியமாக்குகிற இலக்கிய விமரிசனத்தை வளர்த்துக்கொள்ள பாடுபடவேண்டும்.


[
இலக்கிய வட்டம் இதழ் 14 – 25.5.64]