வாசகர் மறுவினை

worldliterature1

கடந்த சொல்வனம் இதழில் வெளி வந்த வெகுளாமை சிறுகதை படித்தேன். அது குறித்து:

மென்பொருள் துறை இன்று பல பில்லியன் டாலர்கள் வருமானம் ஈட்டும் பல லட்சம் இந்திய இளைஞர்களுக்கு வாழ்க்கையும் நம்பிக்கையையும் ஊட்டும் ஒரு தொழிலாக உருவாகியுள்ளது. ஆனால் பெரும்பாலான இளைஞர்களை ஈர்த்து வரும் இந்தத் துறை சார்ந்த இலக்கியங்கள் அவ்வளவாக உருவாகவில்லை. 93ல் முதன் முதலாக இரா.முருகன் இதைச் செய்ய ஆரம்பித்தார் (சிலிக்கான் வாசல் என்று நினைக்கிறேன், குற்றால அருவியை நினைத்துக் கொண்டு ஜன்னல் வழியாகக் குதிக்கும் ப்ரோகிராமர் கதை). பின்னர் சவூதியில் இருந்து ஒருவர் தனது ஒரு நாள் ஐ டி வாழ்க்கையை அருமையாக சிறுகதையாக மாற்றியிருந்தார். பின்னர் முருகனின் மூன்று விரல் என்ற முழு நீள நாவல் வந்தது. முருகன் தொடர்ந்து நிறைய ஐ டி கதைகளை எழுதியுள்ளார். இப்பொழுது சிவா அன்றாட ஐ டி தொழிலின் ஒரு சில கூறுகளைத் தொட்டிருக்கிறார் . இவர் போல இந்தத் தொழிலில் ஈடுபடுபவர்கள் இந்த புதிய தொழில் ஏற்படுத்தியிருக்கும் சமூக, பொருளாதார , தனி நபர் மனவியல் மாற்றங்கள் குறித்தான தாக்கங்கள் குறித்து அதிகம் பதிய வேண்டும். சிறு கதையில் சூழல் சார்ந்த வர்ணணைகள் நிறைய வருகின்றன அவை தனித்து நிற்காமல் கதையின் போக்குடன் கலந்திருக்கலாம்.

நான் ஒவ்வொரு ப்ரொடெக்‌ஷன் மைக்ரேஷனுக்கும் செய்த வேண்டுகளையெல்லாம் சேர்த்தால் நான் நிரந்தரமாக திருப்பதி மொட்டையாகவே இருக்க வேண்டும் 🙂 சோதனைகளின் பொழுது சமர்த்தாக வேலை பார்க்கும் ப்ரோகிராம்கள் எல்லாம் என்ன மாயமோ மந்திரமோ போட்டாற் போல நம்மை ப்ரொடக்‌ஷனில் தக்க சமயத்தில் பழி வாங்கி விடும். அது போன்ற ஒவ்வொரு சமயங்களிலும் நாணத்தால் சாம்புதலானான் கதைதான். எப்படியோ அந்தச் சாம்பல்களில் இருந்து மீண்டும் மீண்டும் முளைத்து வந்து கொண்டேயிருந்தாலும் அவை ஏற்படுத்திய அவமானங்களும், வலிகளும் ஆழமான தழும்புகளை ஏற்படுத்த வல்லவை. நமது ஈகோவுக்கும், கர்வத்திற்கும், கம்பீரத்திற்கும், ஆளுமைக்கும் ஒட்டு மொத்தமாக விழும் அடிகள். வயதாக ஆக ஆக இவை போன்ற அழுத்தங்கள் நம் உடல் நலத்தில் பெருத்த மாற்றங்களை ரத்த அழுத்தங்களாகவும் பிற நோய்களாகவும் மெல்ல மெல்ல ஏற்படுத்தக் கூடியவை. இவை போன்ற தருணங்களில் ஏற்படும் தோல்விகள் வேலை குறித்த கடுமையான அச்சங்களையும் பாதுகாப்பற்ற உணர்வுகளையும் அதைத் தொடர்ந்து நிதி ஆதாரம் போய் விடுமோ என்ற அச்சத்தையும் பரமபத சோபனத்தில் ப்ரொடெக்‌ஷன் ஃபெயிலியர் என்ற பாம்பு கடிக்கப் போய் கிளம்பிய இடத்துக்கே போய் விடுவோமோ என்ற கிலியையும் ஒவ்வொரு ஐ டி ஆளும் தினம் தினம் எதிர் கொண்டுதானே வருகின்றான். அவை மெல்ல மெல்ல மாறி நம் ஆழ்மனத்தில் தேங்கி பின்னொரு நாளில் பயங்கரமான கனவுகளாக மேலே எழுபவை. இவை போன்ற பிரச்சினைகள் ஒரு மென்பொருள் தொழிலாளரின் வாழ்வில் உடல் நலத்தில் மன நிலைகளில் ஏற்படுத்தும் கடுமையான தாக்கங்கள் இவை போன்ற சிறுகதைகள் மூலமாகப் பதிவு செய்யப் பட வேண்டியவை.

பொதுவாக ஐ டி வேலைச் சூழல்களில் மனித உறவுகளும் தொடர்புகளும் ஆழமாக அமைவதில்லை. டீம் மெம்பர் பற்றி கூட நாம் எதையுமே அறிந்து கொள்வதில்லை. அவர்களை பரஸ்பரம் கோட் எழுதும் மெஷின்களாகவே அடையாளம் காண்கிறோம். இங்கு எனது நெருங்கிய நண்பனை நான் இங்கு இது போன்ற ஒரு தொடர் வேலை அழுத்தத்தில் பறி கொடுத்து விட்டேன். மற்ற எந்தவொரு துறை போலவே கடுமையான அழுத்தங்கள் நிறைந்தது இந்த மென்பொருள் துறை. எதிர்காலத்தில் இது அளிக்கும் மன அழுத்தங்களை நாம் எப்படி எதிர் கொள்ளப் போகிறோம் என்பது ஒரு முக்கியமான கேள்வி இது போன்ற படைப்புகள் மூலமாக தொடர்ந்து எழுப்பப் பட வேண்டும். இந்தத் துறையில் இருந்து கொண்டு எழுதவும் செய்பவர்கள் ஒரு சிலரே இருக்கிறார்கள்.

கீழ்க்கண்ட உவமைகள் அருமையாகப் பொருந்தியிருக்கின்றன.

இந்த ஃப்ளாட் கிரகப்பிரவேசத்தில் மீந்தவை இட்டிலிகள் மட்டுமல்ல, சுவர் கடிகாரங்களும் கூட.

இந்த “யானை முகம்” தான் அவரை நிறைய தடவைகள் காப்பாற்றியிருக்கிறது. அவரது வெட்கத்தை, தயக்கத்தை மறைத்திருக்கிறது

தங்கவேல் ஈரோடு மாரியம்மன் திருவிழாவில் கார் பொம்மைக் கேட்டு அழுது கடைசியில் இதில்ல, வேற என்று காலையில் அழுதமாதிரி.

அன்புடன்
ச.திருமலைராஜன்

Its really worth reading to read all the articles here. Thanks. I shared some of the topics in my facebook page to draw attention here. Really amazing. Thanks.

Uma Ganesh

முதல் முதலாய் குமுதம் படிக்க ஆரம்பித்த நேரம். 1970-களின் ஆரம்ப காலம் “ஹேமா ஹேமா ஹேமா” என்று ஒரு தொடர் ரா.கி.ரங்கராஜன் என்பவர் எழுதியது. அதை படிக்க எங்கள கிராமத்தில் சில வாசக அக்காமார்கள் வெகு ஆவலாய் பரபரத்துக் கொள்வார்கள். எனக்கோ இது என்னடா இப்படி என்று அதிசயமாக இருக்கும். நானும் “ஹேமா ஹேமா ஹேமா” படித்து விட்டு ரா.கி.ரங்கராஜன் ரசிகனாய் மாறி இன்று 50 வயது கடந்த நிலையில் அவரது பெரும்பாலான நாவல்கள் மற்றும் சிறுகதைகள் படித்த பெருமையில் கூறுகிறேன் : {பல புத்தகங்கள் எனது பாம்பே உறவினர்கள் பைண்டிங் செய்து கொண்டு வந்தது -1950 களில் வெளிவந்த நாவல்கள்} முதல் 1990 கள் வரை எவ்வளோவோ படித்து இன்றும் இன்டெர் நெட்டில் மீண்டும் மீண்டும் அலுக்காமல் படித்துகொண்டு இருக்கிறேன். ப்ரொபசர் மித்ரா, படகு வீடு, அடிமையின் காதல் , ராசி, கையில்லாத பொம்மை ,ஹேமா ஹேமா ஹேமா…

அவரது புனை பெயர் “மோகினி “[வாளின் முத்தம் , தர்மங்கள் சிரிக்கின்றன ] “துரைசாமி” [ஒளிவதற்கு இடமில்லை]”லலிதா” [அழைப்பிதழ் ]”கிருஷ்ணகுமார்” ,”சுந்தர பாகவதர்” , “வினோத்”… சொல்லி மாளாது – எத்தனை பெயர்கள் எத்தனை கதைகள்!

சிட்னி செல்டன், டேனியல் ஸ்டீல், ஜெப்ரி ஆர்ச்சர் போன்றவர்களின் நாவல்களையும் சிறுகதைகளையும் மிக மிக சுவையாக மொழிபெயர்த்து அவர் எழுதிய பல புத்தகங்களை ஒரிஜினல் மூலத்தில் படித்ததை விட மிக அருமையாக இருத்ததை மறுக்க முடியுமா? If Tomorrow Comes – தாரகை, Master of the Game- லாரா…சொல்லி மாளாது. பட்டாம்பூச்சி [Papillion] பறந்த காலம் மறக்க கூடியதா அல்லது ஜெயித்து கொண்டே இருந்ததை [World Heavy Weight Champion Mohammed Ali] மறைக்க முடியுமா?

அவரது பெரும்பாலான கதைகளை படித்த அகம்பாவம் எனக்கு ஏராளம் நிச்சயம் உண்டு. அவர் எல்லோரையும் போல் பொது வழி தடத்தில் நடந்த சாதாரண மனிதர் அல்ல, தனது தடம் பதித்து சென்ற மாமனிதர் இல்லையா எனதருமை வாசக நண்பர்களே?

அன்னாரது ஆன்மா நம் போன்ற வாசகர்களின் பாராட்டில் சிலிர்க்கும் என்பது மெய்.

-அலங்கார எஸ் பெனடிக்ட்

சொல்வனம் படித்து வருகிறேன்.பல தரப்பான படைப்புகளை நல்ல முறையில் வெளியிடுகிறீர்கள். வாழ்த்துகள். ரமணியின் கவிதையைப் படித்தேன். கற்பூர புகையில் அசையும் அம்மன் படிமம் அருமை. பின்னிருந்தவர்கள் முன்னங்கால்களால் பார்த்ததை சொன்னவிதம் நன்றாக இருந்தது. பாராட்டுகள்.

பொன்.கந்தசாமி

//மரபு சார்ந்தது, முன் முடிவு சார்ந்தது, சார்பு சார்ந்தது சரியான இடத்தில், சரியான காலத்தில் அமைந்தது. “Perfection is achieved, not when there is nothing more to add, but when there is nothing left to take away.” இச்சைப்படி அமைந்த செம்மை, அதிக பட்சம் என்பதாலும் வேறு விதங்களிலும் பௌதீகமாக அளக்கப்ப்படும் செம்மை இடம் காலத்தால் கட்டுப்படுத்தப்படாத ஆனால் அவற்றின் தர்க்க நியாயங்களையும் திருப்தி செய்கிற ஒரு செம்மை, அறியாத போது நேரிட்டு ஆட்கொள்கிற க்ரியேஷன். சிருஷ்டி. அசல். முழுமை.//

இப்படி செம்மையைப் பற்றி கட்டுரையில் சொல்லாத வேறு கோணம் ஏதுவும் இருப்பதாகத் தெரியவில்லை, எல்லாக்கோணங்களிலும் அலசி ஆராய்ந்து விட்டீர்கள். He lived his life to the full. Charles Heston இறந்தபோது அவரது மனைவி இதைக்கூறியது நினைவிற்கு வருகிறது. Sophie’s Choice – இதை அசோகமித்திரன் குறிப்பிடத்தக்க நாவலாக சொல்லியிருக்கிறார் என்று படித்திருக்கிறேன். கொஞ்ச நாட்களுக்கு முன் திரைப்படமாக பார்த்தேன். படத்தின் உச்சக்கட்ட காட்சி வரும் போது நள்ளிரவு… அதிர்ந்த மனதிற்கு அப்புறம் தூக்கமேயில்லை…

– சிவா கிருஷ்ணமூர்த்தி

மஹாபலியின் வருகை – மிக நல்ல கதை.. மெல்லிய மன வருத்தங்களை சுமந்து செல்கிற பாலுவும், வங்கி பிண்ணனியும் மிதமாய் கை கூடி சிறப்பு செய்திருக்கிற சரியான ஹோலி.

– கே.ஆர்.மணி

Today only i got the opportunity to know your website. It is excellent. All the articles are very very good. I was touched to read all the articles, the way how it was written in Tamil.

– G.P.James