மூன்று சிறுகதாசிரியர்கள்

kanasu2

தமிழில் சிறுகதை நல்ல வளர்ச்சி பெற்றிருக்கிறது என்பதும், இந்த வளர்ச்சி கணிசமான அளவில் இலக்கியத் தரமானதாக இருக்கிறது என்பதும் எல்லோரும் ஏற்றுக்கொள்கிற உண்மையாகும். இங்கு மதிப்புரைக்கு எடுத்துக்கொண்ட மூன்று கதாசிரியர்களில் லா.ச.ராமாமிருதம் தமிழ்ச் சிறுகதையின் முதல் அலையிலேயே மணிக்கொடிக் காலத்திலேயே தோன்றியவர் — அன்று முதல் இன்று வரை சிறுகதைத் துறையில் உழைத்துப் பாராட்டக்கூடிய அளவுக்கு வெற்றி பெற்றிருக்கிறார்.ஆனால் அவருடைய சிறுகதைகளில் சிறந்தவை பலவும் முதல் அலை காலத்திலே எழுதப்படாமல் இரண்டாவது அலையில் 1942க்குப் பின் எழுதப்பட்டன. சற்றேறக்குறைய இதே காலக்கட்டத்தைச் சேர்ந்தவர்தான் தி.ஜானகிராமனும். 1950க்கு பின் தோன்றிய நல்ல சிறுகதை ஆசிரியர்கள் இருவரில் ஒருவர் சுந்தர ராமசாமி. இவர்களுடைய கதைகளை மதிப்பிடுவதனால் நாம் ஓரளவிற்கு தமிழில் இலக்கியச் சிறுகதைகளின் வளர்ச்சியை மதிப்பிடுவது போலத்தான்.

லா.ச.ரா
லா.ச.ரா

லா.ச.ராவின் பாணி தனியானது. அவருடைய வாழ்க்கைத் தத்துவம் அவருக்கே சிறப்பாக உரியதாகும். வாழ்க்கைத் தத்துவம் என்று சொல்லுகிறபோது ஏதோ பெரிய துறவு மனப்பான்மை, குடும்பச் சூழ்நிலையை விட்டு ஓடுவது என்றெல்லாம் அர்த்தம் இல்லை. லா.ச.ரா கவிதை நிரம்பிய கண்ணோட்டத்துடன் சாதாரணமான குடும்ப சூழ்நிலைகளைக் கணிக்கிறார். ஓரளவுக்குக் கோணல் பார்வையும் பார்க்கிறார் என்று சொல்லலாம் — இந்த கோணலிலே தான் அவருடைய தனித்வம் பர்ஸனாலிடி அடங்கியிருக்கிறது. லா.ச.ராவின் சிறுகதைகள் எல்லாமே சாவைப் பற்றியவைதான் என்று சொல்வது மிகையாகாது. சாவின் நிழலிலேதான் எந்த மனிதனுடைய வாழ்வும், காதலும், ஊடலும், கோபதாபங்களும் நடைமுறைக் காரியங்களும் நடக்கின்றன.

பஞ்சபூதத்தைப் பற்றி வரம்பு கட்டிக்கொண்டு எழுதுவது என்று தீர்மானித்து, தானாக ஏற்படுத்திக்கொண்ட வரம்புக்குள்ளே மனோதத்துவ சஞ்சாரத்தை விஸ்தாரமாகச் செய்யும் திறனுள்ளவர் அவர். லா.ச.ராவினுடைய கதைகளிலே வருகிற ஆண்களைவிட பெண்கள்தான் அதிகமாக, முழுமையாக உருவாகியிருப்பவர்கள் என்பதும் கவனிக்க வேண்டிய விஷயமாகும். வெறும் மார்பிடிடி, சுபாவத்துக்கு அதீதமானது, மனோதத்துவம் இதையெல்லாம் கையாளுகிறபோது ஆணை வைத்துக் கையாண்டால் அழிவு அம்சம் தலைதூக்கி நிற்கும் — பெண்ணை வைத்துக் கையாளுகிறபோது லா.ச.ரா கதைகளில் உணர்ச்சி என்பதும் ஸெண்டிமெண்டல் என்கிற எல்லையைத் தாண்டி இமோஷனல் எல்லையை எட்டுகிறது, அவர் சிறுகதைகள் பலவற்றில்.

உத்தி விசேஷங்களிலும் லா.ச.ரா ஒரு சிறப்பான தனி பாணியைக் கையாளுகிறார்.அவர் உபயோகப்படுத்துகிற சிந்தனைப் போக்கு அல்லது அடி மன ஓட்டயுக்தி நமக்கு பழக்கமான ஜேம்ஸ் ஜாய்ஸ் யுக்தியிலிருந்தும் மற்றும் பாடபுத்தக யுக்தியிலிருந்தும் மாறுபட்டதாகும். வெறும் வார்த்தை ஒடிப்பாக, சேர்க்கையாகக் கையாளாமல் குடும்பம் என்கிற அடிப்படையை வைத்துக் கையாளுகிறார். நமது சூழ்நிலைக்கு இது ஏற்றதாக இருக்கிறது என்பது வெளிப்படை.

அதேபோல லா.ச.ராவின் நடையும் ஒரு தனி விசேஷமானது. வேகமும், லாவகமும், அடக்கமும் உள்ளது. பளிச்சென்று ஒரு இடத்தில் அழுத்தமாக ஒரு அணியைக் கையாளும்போது சுரீர் என்கிறது–ஒளி வீசுகிறது. சொல்ல வருகிற விஷயத்தைக் கனமாகவும் கச்சிதமாகவும் பிசிறு இல்லாமல் சொல்லவும் வல்ல நடை. மென்மையுள்ளது– ஆனால் பலமான நடை. தமிழ் வசனத்தை ஒரு சிருஷ்டி சக்தியுடன் கையாளுபவர் லா.ச.ரா.

தனித் தனியாகத் தரங்கிணி, ஜமதக்னி, பூரணி, காயத்ரீ, ஏகா என்று ஒவ்வொன்றைப் பற்றியும் சொல்லவேண்டிய அவசியமில்லை என்று எண்ணுகிறேன். அவை லா.ச.ராவின் கதைகள் என்பதனாலேயே ஓரளவுக்குப் பூரணத்துவம் பெற்றவையாகவே இருக்கின்றன. தமிழ் இலக்கியத்தில் இன்றைய என்று சொல்வதுடன் என்றும் பிரகாசிக்கக்கூடிய ஒரு தொகுப்பு இது என்று சொல்லவேண்டும்.

தி.ஜானகிராமன்
தி.ஜானகிராமன்

தி.ஜானகிராமனுடைய கலை சற்றே மாறுபட்டது. லா.ச.ராவின் கவிதையையோ, கனத்தையோ, மார்பிடிடியையோ, சாவைப் பற்றிய சிந்தனையையோ, குடும்பம் என்கிற அடிச்சரடையோ அவரது கதைகளில் காண இயலாது.ஆனால் அவருக்கும் ஒரு வாழ்க்கைத் தத்துவம் உண்டு — தனதேயான ஒரு கண்ணோட்டம் உண்டு. இந்தக் கண்ணோட்டம் லேசானதொரு வக்கிரத்தினால் ஏற்படுவதாகும். உலகில் உள்ள உறவுமுறைகள் எல்லாம் நேரானவை அல்ல — எப்படியோ முறுக்கிக் கிடக்கின்றன என்பதை அவர் ஒவ்வொரு புதுப்பாத்திரத்தைக் கொண்டும் நமக்குச் சுட்டிக்காட்டுகிறார். வாழ்க்கைத் தத்துவம் என்று தி.ஜானகிராமனுடையது என்று சொல்ல உள்ளது ஒரு ரஸனையும், உள்ளதில் ஒரு ஈடுபாடும் தான். மற்ற ஆசிரியர்களிடம் உள்ளதைவிட தி.ஜானகிராமனிடம் இந்த இரண்டும் அதிகம்.

மூன்று நீளக் கதைகள் அடங்கிய கமலம் என்கிற தொகுதியில் அவலும் உமியும் என்பது தி.ஜானகிராமனின் கலைக்கு மிகவும் சிறந்த உதாரணமாக எனக்குப் படுகிறது. மனம் எத்தனையோ அற்புதமான விஷயங்களைக் கண்டு சலித்தெடுத்து ஒரு முடிவு செய்கிறது, ஆனால் மனத்தை மீறி உணர்ச்சிக்கு வந்துவிடுகிறபோது நல்லது என்று கண்டபடி நடக்க முடிவதில்லை. மனிதனுடைய சாதாரண இந்த ஒரு நிலையை வைத்து ஜானகிராமன் நடத்தும் கதை சிறப்பாகவே உருவம் பெற்றிருக்கிறது.

தி.ஜானகிராமனின் நடையில் சம்பாஷணை, தஞ்சாவூர் ஜில்லாவின் பேச்சு, மிகவும் பிரமாதமான ஸ்தானம் வகிக்கிறது. வர்ணமும் வேகமும் உள்ள வார்த்தைகளில் வார்த்தைச் சேர்க்கைகளில் அவர் ஒரு உலகத்தையே சிருஷ்டித்து காட்டுகிறார். அவர் நடையிலே கவிதை அம்சம் குறைவு — கிண்டலும் லேசானதொரு கசப்பும் நிறைந்தது அவர் நடை. கிராமத்து மண் வாசனையுடன் நவீன வசதிகளுடன் கூடிய நகரத்து வேகமும் கொண்டது — விறுவிறுப்பும் கொண்டது.

ஜானகிராமன் தன் கதாபாத்திரங்களைப் பூரணமாக சிருஷ்டித்து நடமாட விடுவதற்குக் கையாளுகிற யுக்திகள் மிகவும் எளியவை  சுலபமானவையாக அவர் செய்து முடித்துவிட்டபின் காண்கின்றன. கமலம் என்கிற கதையில் இந்த யுக்திகள் பூரணமாகப் பலிக்கவில்லை – ஆனால், தோடு என்கிற கதையிலும் அவலும் உமியும் என்கிற கதையிலும் பிரமாதமாகப் பலித்திருக்கின்றன. சோகத்தோடு பேசுகிற கட்டத்திலே “வேடிக்கையாகவும் பேசுகிறீங்க” என்று சொல்ல வைத்து விடுகிறார் கதாபாத்திரத்தை. நேர்மாறாகச் சொல்லி ஒரு சந்தர்ப்பத்தை உருவாக்குவதில் ஜானகிராமனின் கலை அலாதியானது.

ஜானகிராமன் தன் கதைகளுக்குத் தருகிற உருவங்கள் பற்றியும் ஒரு வார்த்தை சொல்வது இங்கு மிகையாகாது. அவர் கதைகள் பூர்ணத்வம் பெற்றிருந்தாலும் எதிர்பார்த்த ஒரு உருவத்துக்குள் அடங்காமல் வழிந்து ஓடுகிற மாதிரித் தோன்றும். இந்த வழிந்து ஓடுகிற விஷயத்தை கமலத்தில் நன்குக் காணமுடிகிறது. சிறுகதை, நீளக்கதை என்றால் இப்படித்தான் உருவம் எடுத்திருக்க வேண்டும் என்று ஒரு நியதி கிடையாது. உருவச் சிறப்பு ஆசிரியர் எப்படி பெற்றிருக்கிறார் என்று நம்மை கவனிக்காதிருக்கச் செய்கிற அளவுக்குத்தான். சலனம் பெற்ற தடாக அலைகளும் உருவம் தானே. அதே போல லா.ச.ராவின் உருவம் அமைதி பெற்றது, சஞ்சலம் அடங்கியது என்றால் தி.ஜானகிராமனின் கதை உருவங்கள், அமைதி பெறாதவை — சஞ்சலம் உள்ளவை — நீர்ப்பரப்பில் விழுந்த கல் எழுப்பும் அலைகள் போல ஓய மறுப்பவை என்று சொல்லலாம்.

சுந்தர ராமசாமி
சுந்தர ராமசாமி

சுந்தர ராமசாமியின் சிறுகதைகளிலே உருவ அமைதியுடன் கருத்தமைதியும் கலந்து வந்துவிடுகிறது என்பது அவருடைய தனிச் சிறப்பாகும். ஜானகிராமனுடைய கிண்டல் கசப்புடன் சுந்தர ராமசாமி தனது என ஒரு ஆழத்தையும் கனத்தையும் சேர்த்துக் கொண்டு விடுகிறார். உறவுமுறைகள் — ஒருவருக்கொருவர் உள்ளது, சமுதாயத்தில் உள்ளது, தனி மனிதனிடம் உள்ளது – எல்லாம் நிர்ணயமானவைதான் என்றாலும் அவற்றிலேயே கூடவே ஒரு நிர்ணயமற்ற தன்மையும் வருகிறது என்பதை உணர்ந்து அவர் எழுதுகிறார்.

வாழ்க்கை பற்றிய முழுமை நோக்கு என்பதாலே லா.ச.ராவுக்கோ தி.ஜானகிராமனுக்கோ இவரும் சளைத்தவரல்லர். எனினும் அவர் எழுத்தில் ஓடுகிற அடிப்படைத் தத்துவம் என்ன என்பது நிர்ணயமாகாதிருப்பது போலத் தோன்றுகிறது. தனித்வம் காண்கிற அளவுக்கு கண்ணோட்டம் சிறப்பாகக் காணவில்லை.லவ்வு இந்த மனிதர்களுக்கு மட்டுமல்ல எருமைகளுக்கும்தான் — மத்து மத்து ஆடுகிற போலீஸ்காரனும் அர்ச்சகரும் — சன்னல் வழியே தெரிகிற நோயாளிக் கண்ணோட்டம் — ஒன்றும் புரியாத அம்பி — தேடிக்கொண்டிருக்கிற ராஜாமணி — இப்படியாக உலகத்தில் உள்ளதற்கெல்லாம் உள்சரடாக என்ன தான் ஓடிக்கொண்டிருக்கிறது என்று தெரியவில்லை — இந்த அவருடைய இரண்டாவது கதைத் தொகுப்பைப் படிக்கும் போது, கதைக்கு கதை சுந்தர ராமசாமியில் உருவம் பூரணமாக வந்திருப்பதையும், அது அமைதியே பெற்றிருக்கிறது என்பதையும், ஜானகிராமனில் போல சஞ்சலத்திலோ சலனத்திலோ முடியவில்லை என்று காண்கிறோம். பளிச்சென்று மின்னலிடுகின்ற வாக்கியங்கள் வார்த்தைச் சேர்க்கைகள் நிறைந்த நடை அவருடையது. பிராந்திய கொச்சையை மிகவும் கவித்துவத்துடன் கையாளுகிறார் — சம்பாஷணைகளிலும் விவரணங்களிலும். வாசிப்பதற்கு இவர் தரும் சுகம் என்பதில் இருவரையும் வென்று விடுகிறார்.

தமிழில் இலக்கியத் தரமான சிறுகதை இந்த முப்பதாண்டுகளில் எப்படிப்பட்டச் சாதனைக் காட்டியிருக்கிறது என்பதற்கு இந்த மூன்று சிறுகதாசிரியர்களுடைய தொகுப்புகளும் உதாரணங்கள். ஒன்றிலிருந்து ஒன்று வெகுவாக மாறுபட்டவை. மூன்று பேருடைய கதைகளும் உயிருள்ளவை — சத்துள்ளவை — தனித்தன்மையுள்ளவை — உருவம் பெற்றவை.

சிறுகதை விஷயத்தில் தமிழர்கள் அதிர்ஷ்டசாலிகள்தான் — சந்தேகமேயில்லை.

நன்றி: இலக்கிய வட்டம் – இதழ்: 10 – 27.3.64

One Reply to “மூன்று சிறுகதாசிரியர்கள்”

Comments are closed.