பொங்கும் புதுவெள்ளம் – க.நா.சு.வின் பொய்த்தேவு ஒரு பார்வை

kanasu2

க.நா.சு எழுதிய “பொய்த் தேவு” (1946) நாவலை 2005 இல் முதல்முறை படித்தேன். அதற்குமுன் அவர் எழுதிய ‘இலக்கியத்துக்காக ஒரு இயக்கம்’ எனும் சாஹித்ய அகாடமி பரிசு பெற்ற நூலை மட்டும் படித்திருந்தேன். பெரிய அபிப்ராயம் எதுவும் அமையாவிட்டாலும் அப்போது படித்துக்கொண்டிருந்த மெளனியின் கதைகளைவிட க.நா.சு மொழி எளிமையாக இருந்ததாகத் தோன்றியது.

பொதுவாக நாவல்களில் ஒரு தேசத்தின் வரலாற்றை, ஊரின் வளர்ச்சி அல்லது வீழ்ச்சியை கவனப்படுத்தும் விதமாக கதாபாத்திரங்களின் வாழ்க்கை சொல்லப்படும். ஆனால், பொய்த் தேவு நாவலில் வரும் ஒவ்வொரு நிகழ்வும் சோமு முதலியைப் பற்றிக் கூடுதலாக அறிந்துகொள்ளவே தரப்பட்டுள்ளன. இதனால் கதையின் சாத்தியங்கள் குறுகிவிடுமோ எனச் சந்தேகம் வேண்டாம் – சோமு முதலியின் கதையைக் கொண்டு வாழ்வை அளந்திருக்கிறார் க.நா.சு. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது எளிய சித்திரமாக அமைந்தாலும் தொடர்ந்து சிந்திக்கும் போதெல்லாம் நாவல் முன்வைக்கும் வாழ்க்கைக் கோணம் மிக யதார்த்தமாக வெளிப்பட்டு பலதிசைகளில் விரிவடைகிறது.

நவீன காலகட்டத்தின் நுழைவாசல் என ஒவ்வொரு மொழிக்கும் ஒரு படைப்பு இருக்கும். தான் புழங்கும் சமூகத்தைத் தாண்டிய சிந்தனைப் பிரக்ஞை வெளிப்படும் காலகட்டமாக அது இருக்கலாம். குறிப்பாக, தமிழ் போன்ற செறிவான காவிய ஆக்கங்களைக் கொண்ட மொழியில் காவிய மொழியிலிருந்து பிரிந்து வந்து (இறங்கி வந்து எனச் சொல்பவர்களை விட்டுவிடலாம்!) புதுவகை உரைநடை மொழி உருவாகும் காலகட்டத்தை நவீன காலகட்டம் எனலாம். இது திட்டமான வரையறை இல்லையென்றாலும் இலக்கிய மொழிக்குள் கவிதை, உரைநடை, நாவல், சிறுகதை எனத் தெளிவான வடிவங்கள் உருவாகும் காலகட்டம்.

தமிழில் நவீனக் கவிதையின் தோற்றத்தை பாரதி முதல் அளவிடுவது போல, புதுமைப்பித்தன் மூலம் நவீன சிறுகதைகள் உருவானது போலத் தெளிவான வகைகளின் தொடக்கமாக இது இருக்கிறது. அதுவரை புழங்கியிருந்த கூறுமுறைத் தளத்திலிருந்து புது உலகுப் படைப்போம் எனப்பெரும் பாய்ச்சல் நிகழும் சூழல் ஒரு கட்டத்தில் உருவாகும். இவ்வகையில் தமிழில் நாவலுக்கானத் தொடக்கம் எனப் பொய்த் தேவு நாவலைச் சொல்லலாம். இதைத் தொடர்கதையாக எழுதாமல் நேரடியாக நாவலாக எழுதியிருக்கிறார் க. நா. சு. காவிய மரபிலிருந்து விலகி இருப்பது மட்டுமல்லாது, நவீன இந்திய மனநிலையைப் பிரதிபலிக்கக்கூடிய வகையிலும் கதை இருப்பதால் தமிழுக்கு இது coming of age நாவலாக அமைந்திருக்கிறது.

ஜார்ஜ் எலியட் தனது Middlemarch நாவலில் ஒரு விஷயத்தைக் குறிப்பிடுகிறார் -“மனிதனின் கீழ்மைகளை, மகத்தான சோகங்களைக் கூர்மையாக கவனிக்கவும் அவற்றோடு உணர்வு பூர்வமாக இயைந்து போகவும் முடிவது புல்லின் வளர்ச்சியை, அணிலின் மெல்லிய இதயத் துடிப்பை காதால் கேட்க முடிவதைப் போன்றதொரு செயல். இப்படிப்பட்ட மறுபக்கத்தின் மெளன அலறலைக் கேட்ட கணமே நாம் இறந்துவிடுவோம். அன்றாட நிகழ்வுகளின் குரூரங்களைச் சந்திக்கும் துணிவு நம்மில் பலருக்குக் கிடையாது.”

இன்றைக்குப் பொய்த் தேவு நாவலை வாசிப்பவர்களுக்கு க.நா.சு தேர்ந்தெடுத்த உணர்ச்சியற்ற நடை வித்தியாசமாகத் தோன்றலாம். மிகவும் உணர்வு பூர்வமான வாழ்க்கை நிகழ்வுகளைப் போகிற போக்கில் சொல்லிச் சென்றிருக்கிறார். ஒட்டுமொத்த நாவலையும் படித்துப் பார்க்கும்போது வாழ்வின் சுழிப்புகளையும் ஜார்ஜ் எலியட் குறிப்பிடும் அன்றாட நிகழ்வுகளையும் மூன்றாம் மனிதரின் பார்வை போலக் குறிப்பிட்டிருப்பதாகத் தோன்றுகிறது. ஒரு தருணத்தை உணர்ச்சிகரமாகப் படைத்துவிட்டு மற்ற கணங்களை மேலோட்டமாகக் குறிப்பிட்டால் அசாதாரண நிகழ்வுகள் வாழ்வை செழுமையாக்குகின்றன என்பது போன்ற தோற்றத்தைத் தந்துவிடும் அபாயம் உள்ளது. ஒட்டுமொத்த உருவ அமைதியை நாவல் அடைவதற்குத் தடையாகவும் அமைந்திருக்கும். ஒரு மனிதனின் முழு வாழ்வைக் கதையாக்கிய பொய்த் தேவு, தனது அசாத்திய சமநிலையினால் உருவ அமைதியை அடைந்திருக்கிறது.

அன்றாட நிகழ்வுகளில் வெளிப்படும் வண்ண பேதங்களையும், குரூரங்களையும் சந்திக்கும் சவாலை நவீன நாவல்கள் ஏற்றுக்கொண்டுள்ளன. பொய்த் தேவு நாவலிலிருந்து கடந்த பத்து வருடங்களில் வெளியான ‘ஆழி சூழ் உலகு’, ‘முறிமருந்து’ நாவல்கள் வரை இது பொருந்திப்போகிறது. நாவலில் உருவ அமைதி, வாழ்வின் ஒட்டுமொத்தத் தொகுப்பு எனும் நோக்கில் பார்க்கும்போது அக்காலகட்டத்தில் (1942) வெளியான ஆர்.ஷண்முகசுந்தரத்தின் ‘நாகம்மாள்’ மட்டுமே ஓரளவு பொய்த் தேவுக்கு நெருக்கமாக இருக்கிறது. ஆனால் நாகம்மாளில் வெளிப்பட்ட வட்டார வழக்கு போல நிலச்சுவான்தார்கள் முதல் பாலியல் தொழிலாளிகள், அந்தணர்கள், சேணியர்கள், விவசாயிகள், காவிரி ஆற்றில் தருமத் தோணி ஓட்டுபவர்கள் எனப் பலவிதமான மக்களின் சூழல் பொய்த் தேவு உரைநடையில் வெளிப்படவில்லை.

கும்பகோணம் அருகே இருக்கும் சாத்தனூர் கிராமத்தில் வசிக்கும் சோமு முதலியின் பிறப்பு, வளர்ப்பு, இறப்பு என வாழ்க்கைக் கதையை எழுதியிருக்கிறார் க.நா.சு. இந்த வரியை எழுதிவிட்டு மீண்டும் படிக்கும்போது, நாவலை மிகவும் குறுக்கிவிடுகிறேனோ எனத் தோன்றியது. அதனால் திருத்தம் செய்ய முற்படும்போது, இதுதானே நாவலின் கதை எனச் சமாதானமும் உருவாகிறது. ஜோடனையற்ற மொழியில் சோமுவின் கதையைச் சொல்வது மட்டுமே குறிக்கோள். ஆனால் நாவல் அதுமட்டுமல்ல என்றும் தோன்றாமல் இல்லை. கிட்டத்தட்ட எழுபது வருடங்களுக்குப் பிறகும் வாசிக்க விறுவிறுப்பாக உள்ளது.

சாத்தனூர் மேட்டுத் தெருவின் ரெளடியான கருப்பனுக்கும் வள்ளியம்மைக்கும் பிறந்த சோமுவின் பிறப்பு, சோமுப்பயலாக உருவெடுத்து அவனது முதலாளியிடம் நெருக்கமானது, பின்னர் மெர்சண்டு சோமு முதலியாக மாறிப் பொருள் ஈட்டியது, பணத்தாசை அதிகமானதில் பல வழிகளில் வியாபாரத்தைப் பெருக்கியது, பின்னர் அகத்தேடலில் பண்டாரமாகி இறப்பது என கதை நேர்கோட்டில் செல்கிறது. கதைகூறுமுறையில் ஆச்சர்யங்களோ திருப்பங்களோ இல்லை. ஆனால் இந்த நாவலுக்கென பல சிறப்பம்சங்கள் இருக்கின்றன.

gi1காலத்தோடு முட்டி மோதாமல், மாற்றங்களைக் கருத்தில் கொண்டு தனது சுபாவத்துக்கு ஏற்றவாறு வாழ்க்கைப் பாதையை வளைத்துக் கொண்ட புனைவு நாயகர்களில் முதன்மையானவர் சோமசுந்தர முதலி. பிறந்தது முதல் வாழும் காலத்தை எதிர்க்காமல் ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் அவருக்கு கைவருகிறது. அதை அற்புதமாக க.நா.சு வரைந்துள்ளார். சொல்லப் போனால் கடைசி வரை சோமசுந்தர முதலி தன் வாழ்க்கையைப் பின்னோக்கிப் பார்த்து ஏங்குவதில்லை. அடுத்தது என்ன எனும் தேடலில் தனது அனுபவ எல்லையை விஸ்தரித்துக்கொண்டே இருக்கிறார். எல்லாரும் நிலம் வாங்கி சொத்து சேர்க்கும்போது, இவர் மார்க்கெட்டில் கடை போடுகிறார், மெட்ராஸுக்குச் சென்று இன்ஷூரன்ஸ் ஏஜெண்ட் உரிமத்தை வாங்குகிறார், சாத்தனூர் மற்றும் கும்பகோணத்துக்கு இடையே பேருந்து சேவையைத் தொடங்குகிறார், அமெரிக்க வணிகப் புத்தகங்களை வாங்கிப் படிக்கிறார், மெட்ராஸ் காண்ட்ராக்டர்களைக் கொண்டு கும்பகோணத்தில் புது மாளிகை கட்டுகிறார்.

இன்றைக்கு சோமு முதலியைப் பற்றிப் படிக்கும்போது அவரது சிந்தனைத் தொடர்ச்சியில் மேற்கு நாடுகளின் தாக்கம் இருப்பதை உணர முடிகிறது. தனக்கெனப் புதுப் பாதையைத் தேர்ந்தெடுத்து லட்சியங்களைச் சாதிக்கும் ஊக்கம் எளிய சாத்தனூர் மக்களிடம் இருக்கவில்லை எனச் சொல்லாமல் உணர்த்துகிறார் க.நா.சு.

ஒருவிதத்தில் பொதுபுத்தி சார்ந்த பாதுகாப்பு எனும் சட்டகத்தை வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் உடைத்துக்கொண்டே இருக்கிறார் சோமு முதலி. சாத்தனூர் போன்ற கிராமத்திலேயே வாழ்வின் பெரும்பான்மை நாட்களைக் கழித்தாலும் உள்ளூர் கோவிலுக்கு முதலி போவதில்லை. விபரமறியாக் காலத்தில் காவேரிக்கரையில் இருக்கும் கீழ்மாங்குடிக் கள்ளுக்கடையே கதியெனக் கிடக்கிறார். பின்னர் தனது முதலாளி ரங்கராவிடம் மிக விஸ்வாசமாக இருந்து வணிகத்தின் தொழில்முறை நுணுக்கங்களைக் கற்றுக்கொள்கிறார். இன்றைய காலகட்டத்து விழுமியங்களைக் கணக்கில் கொண்டால் நுகர்வு சமூகத்தின் நோக்கம் சோமுவின் நடைமுறை இயல்போடு கச்சிதமாகப் பொருந்திப் போகிறது.

“அரை ரூபாய் இருந்துவிட்டால் சாத்தனூர் கடைத் தெருவையே வாங்கலாம். இரண்டு ரூபாய் இருந்தால் கும்பகோணம் கடைத்தெருவையே வாங்கலாம். பத்து ரூபாய் இருந்தால் முழு உலகையே விலைக்கு வாங்கலாம்,” எனப் பெரும் லட்சிய வெறியோடு வளர்கிறார். சிறுவயதிலிருந்து சோமு முதலியின் ஆர்வங்கள் பல திசைகளில் இருந்திருக்கின்றன. தன்னைச் சுற்றியுள்ள உலகை வித்தியாசமான கண்ணோட்டத்திலிருந்து பார்க்கிறார். பிறந்த இரண்டொரு வருடங்களில் கோவில் மணி ஓசையும், மேட்டுத் தெரு வீட்டுக்குள் நுழையும் சூரிய ஒளியும் குழந்தை சோமுவைக் கவர்கிறது. சிறுவனின் பார்வையிலிருந்து விவரிப்பதோடு மட்டுமல்லாது, சோமுவின் குணாதிசயத்தைத் திட்டமிட்டுச் சீராக வளர்த்ததில் நாவலின் இந்தப் பகுதி அதிக முக்கியத்துவம் வகுக்கிறது. மேலும் நாவலின் எந்தப் பகுதியிலும் இல்லாத அளவு கற்பனையும் மொழியும் இதில் கைகூடியுள்ளது.

”வீட்டுக் கூரையிலுள்ள ஓர் ஓட்டை வழியாக உள்ளே பிரவேசித்த சூரிய ரஸ்மிகள் மெல்லிய மூங்கில் குழாய்போலத் தரையைத் தொடுகின்றன.அந்த வெளிச்சத்திற்குள்ளே தூசும் தும்பும் பறக்கின்றன; தங்கமும் வெள்ளியும், மஞ்சளும் நீலமும், அந்த ஒளியிலே கைகோத்துத் தட்டாமாலை சுற்றித் தாண்டவமாடுகின்றன. தன் கையைக் காலை ஆட்டினால் அந்தத் தங்கமும் வெள்ளியும், மஞ்சளும் நீலமும், தூசும் தும்பும் இன்னும் அதிவேகமாகத் தாண்டவமாடுகின்றன என்று பையன் எப்படியோ ஒரு நாள் கண்டுகொண்டுவிட்டான். அவ்வளவுதான்..” –

எனக் குழந்தையின் உலகிலுள்ள, பொருளற்றது என நாம் நினைக்கும் நிகழ்வுகளை, அழகாக வெளிப்படுத்தியுள்ளார். ‘தகர டப்பா’ (Tin Drum, by Günter Grass) என்ற ஜெர்மனிய நாவலில் வரும் ஆஸ்கார் எனும் சிறுவன் குழந்தையாக இருந்தபோது தனது வீட்டு விளக்கைச் சுற்றிய விட்டில் பூச்சிகளோடு உரையாடும் கவித்துவமான பகுதியை இதோடு பொருந்திப் பார்க்கலாம். மேலும், அக்குழந்தை சோமுப்பயலாக மாறி சாத்தனூர் முழுவதும் சுற்றி வரும்போது அவனது கால்கள் நிற்கும் இடங்களையெல்லாம் அவன் வெகுவாக உள்வாங்கிக் கொள்கிறான். கோவில் திருவிழாக்கள், திரெளபதி அம்மன் தேர் அணிவகுப்பு, சிறுவர்களைப் பள்ளிக்கு அனுப்பும் கல்யாண விழா என அவனை அவனது ஆர்வங்கள் அழைத்துச் செல்லும் இடமெல்லாம் அவனுக்குப் பள்ளியாகின்றன. எல்லாச் சிறுவர்களைப் போலச் சாய வேட்டி அணிய வேண்டும் எனும் ஆசை அவனை ஆட்டிப்படைக்கிறது. படிக்க வேண்டும் எனும் ஆர்வத்தில் சாத்தனூர் பள்ளிக்கூடத்து மரநிழலில் நின்று வேடிக்கை பார்க்கிறான். தணியாத வேட்கையும், எதையும் ஆழ்ந்து உணர்ந்து சரியாகச் செய்வதும் அவனது இயல்பாகிறது. இது சோமு முதலியின் கடைசி காலம் வரை தொடர்கிறது.

சோமுவின் அப்பா கறுப்பன் இறந்ததும், ஊரை பயமுறுத்திய ரெளடி இனி இல்லை என சாத்தனூர் வாசிகள் நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றனர். ஆனால் அந்த ஊராருக்கு நிம்மதி வரும் நாளில் சோமுவின் தாய் வள்ளியம்மாளுக்குள் அலைக்கழிப்பு உருவாகிறது. இதுவரை கறுப்பன் இருக்கும் தைரியத்தில் ஊராரின் இழிபேச்சைக் கேட்காமல் இருந்துவிட்டவளை, இனித் தனது கணவர் சேர்ந்து வைத்த அவப்பெயர் சோமுவின் தலையில் விழுமே எனும் பயம் கலங்கடிக்கிறது. அதற்கு ஏற்றாற்போல ஊரில் உள்ளவர்களும் கறுப்பனின் மகன்தானே எனச் சோமுவைக் கேவலமாகப் பார்ப்பதும், கறுப்பனால் ரொம்பவும் பாதிக்கப்பட்டவர்கள் இவனை ரகசியமாக அடிப்பதுமாக சோமுவின் சிறுவயது கழிகிறது. ஒரு குழந்தைக்கே உண்டான வெகுளித்தனம் அவனிடம் குடிகொண்டிருக்கிறது என்றாலும் தன்னைச் சுற்றி இருக்கும் கேலிப்பார்வை சோமுவுக்குப் புரியாமல் இல்லை. ஆனாலும் வாழ்க்கை மீது சோமு வைத்திருந்த குழந்தைத்தனமான பிடிப்பு நம்மை ஆச்சர்யப்படுத்துகிறது. இதனாலேயே மிகத் துடிப்பான நடைமுறைவாதியாக சோமு முதலி இருக்கிறார். நாவலின் அடித்தளம் சோமுவின் வாழ்க்கைப் பார்வையால் மட்டுமே உருவாகிறது.

ஊரின் பெரிய மனிதரான ரங்கராவ் வீட்டு வேலையாளாகச் சேர்ந்து மெதுவாக அவரது குடும்பத்தாரின் நம்பிக்கையை பெறும் சோமு ஒரு சமயம் வீட்டுக் கொள்ளையரிடமிருந்து எஜமானைக் காப்பாற்றுகிறான். அங்கும் அவனது சமயோஜிதமும் மனத்தைரியமும் கைகொடுக்கிறது. சோமு கேட்டுக்கொண்டது போல பள்ளிக்கூடத்துக்குப் படிக்க அனுப்புகிறார் ரங்கராவ். ஆனால் பெரும் செல்வந்தராக இருந்த ரங்கராவ் குடும்பம் தொடர்ச்சியான தான தர்மங்களால் மெல்ல வீழ்ச்சியடையத் தொடங்குகிறது. சோமு முதலி கடைசிவரை ரங்கராவ் குடும்பத்துக்கு நன்றியோடு இருக்கிறார். ரங்கராவ் மாப்பிள்ளை சாம்பமூர்த்திக்கு பல வழிகளில் உதவி செய்கிறார். ஆனால் பக்திமானான சாம்பமூர்த்தியால் ரங்கராவ் ஏற்பாடு செய்துகொடுத்த வியாபாரத்தை சரிவர நடத்த முடியவில்லை. தொழில் நுணுக்கம் மட்டும் இருந்தால் போதாது காலத்துக்கேற்ப மாறும் தன்மையும் இருக்க வேண்டும் என்பதை நன்கு உணர்ந்ததினால் சாத்தனூர், கும்பகோணம் எனத் தனது வியாபாரத்தைப் பலமடங்கு சோமுவால் உயர்த்த முடிந்தது. வெளியூர்க்காரரான சாம்பமூர்த்திக்கு இத்திறமை இல்லாததால் வாழ்வின் ஏற்ற இறக்கங்களோடு பணிந்து போய் கடைசியில் சாத்தனூர் பண்டரிநாதரின் காலடியில் இறக்கிறார்.

நாவலின் எந்த கட்டத்திலும் சோமு முதலி துவண்டுபோவதில்லை என்பது ஆச்சர்யமான விஷயம். தான் செய்யும் காரியங்களின் விளைவுகளைச் சரிவரப் புரிந்தவராக இருக்கிறார். வாழ்வின் நீக்குபோக்குகளை அவரால் மிகத் திறமையாகச் சமாளிக்க முடிகிறது. மனிதனுக்கு ஒரு தெய்வம் திருப்தியளிப்பதில்லை. ஒவ்வொரு கட்டத்திலும் சில தெய்வங்கள் தேவையாக இருக்கின்றன, இன்றியமையாத சாதனம் போல என முன்னுரையில் க.நா.சு குறிப்பிடுகிறார். நாவலில் அனைவரும் தோற்கும் இடமாக இது உள்ளது. தேவைக்கேற்ப பணம், செல்வம், பதவி எனப் பொய்யானப் பல தெய்வங்களை தொடர வேண்டியுள்ளது. நமக்கு அது சாஸ்வதமல்ல என்பதை உணராமல் பல தெய்வங்களைத் தொடர்வதினால் வாழ்வை இழப்பது நாவலில் எல்லாருக்கும் நடக்கிறது.

1தனது ஆண்மை எனும் பலத்தை நம்பிய கறுப்பன், தனக்கு மிஞ்சாத தானதருமத்தைக் கடைப்பிடித்த ரங்கராவ், பணமே தெய்வமென அலைந்த சோமு என எல்லாரும் பொய்யான தெய்வங்களை மட்டுமே தொடர்கின்றனர். இப்படிப்பட்ட லட்சியங்களை தெய்வங்கள் என நினைத்துத் தொடர்வது மட்டுமல்லாது, உண்மையான தெய்வம் என ஒன்றுமே கிடையாது எனவும் சொல்கிறார் சோமு. பின்னொரு நாள் இதையெல்லாம் உதறிவிட்டு சாத்தனூர் கோவில் மணியோசையே தனது தெய்வம் எனத் தொடர்கிறார். சிறுவயதிலிருந்தே சாத்தனூர் கோவில் மணியோசை அவரை ஈர்க்கிறது. பணத்தாலும், கடவுள் தொழுகையாலும், படிப்பாலும் அடைய முடியாத ஓசை லயத்தை எதிர்பார்த்தாலும் விதி விடாது துரத்தியதன் விளைவாக வியாபாரத்தில் ஏற்பட்ட சிக்கலில் கைதாகிறார். விடுதலைக்குப்பின் முழுவதும் மாறிய மனிதராக, சகலத்தையும் துறந்து பண்டாரமாகிறார்.

முரண்பட்ட பல பாத்திரங்கள் இருப்பதன் மூலம் வாழ்வின் எல்லாவிதமான போக்குகளையும் ஆசிரியர் விவரித்திருக்கிறார். அப்பாவின் நிழலில் வாழ்ந்திருந்தாலும் சோமு முதலி எப்போது சாவார் தனக்கு எப்போது சொத்து கிடைக்கும் என அவரது மகன் நடராஜன் ஏங்கிக்கொண்டிருக்கிறார். சோமுவின் ஆசிரியரது பேரனான சாமா படாடோபடத்துக்கு ஏங்காமல் அவற்றின் பலகீனத்தைப் புரிந்துகொண்டு தத்துவத் தேடல்களில் இருக்கிறான். வியாபாரத்தில் நிலைபெறுவதற்கு முன் சோமு முதலியும் குடி, பெண்கள் எனக் கொண்டாட்டத்தின் உச்சகட்டத்தில் திளைக்கிறார். வாழ்வின் போக்குப்படி அவரவர் பலவித பொய்யானத் தெய்வங்களைத் தொடர்கிறார்கள். சோமு உணர்ந்தது போல மனதறியும் உண்மையானத் தெய்வத்தின் பிடிகிடைக்கத் திண்டாடுகிறார்கள். அந்த எல்லையிலேயே தங்களது லட்சியங்களோடும் கனவுகளோடும் அழிகிறார்கள்.

தாலி கட்டிக்கொள்ளாமல் சோமுவோடு வாழ்ந்து தனது காலத்தை முடித்துக்கொள்ளும் பாப்பாத்தியம்மாள், பணத்துக்காக சோமுவுடன் இரவுகளைக் கழிக்கும் கோமளவல்லி, ஆசைநாயகிகளான தஞ்சாவூர் நாட்டியச் சகோதரிகள் பாலாம்பாள் கமலாம்பாள், ‘மேட்டுத்தெரு குணாதிசயத்துக்கு ஏற்ப’ பல காதலர்களுடன் புழங்கும் வள்ளியம்மாள் என நாவலில் வரும் பெண் கதாபாத்திரங்களின் மேல் படிந்திருக்கும் கருமை அதிகம். ரங்கராவின் மகள் கங்காபாய் மட்டுமே சாம்பமூர்த்தியின் மனைவியாக ‘படி தாண்டா’ப் பத்தினியாக இருக்கிறார். இதுவும் பக்திமானான சாம்பமூர்த்தியின் பாத்திரத்துக்கு உரம் சேர்க்க வேண்டும் என்பதால் இருக்கலாம். ஒவ்வொரு முறை வாசிக்கும்போதும் என்னை மிகவும் நெருடிய விஷயமாக இது உள்ளது. காலடி நிழலுக்கு மண் தேடும் தவிப்பையும், கயமைத்தனங்களுக்கும் இடையே நிர்கதியற்ற பெண்ணின் நிலமையையும் எதிர்கொண்ட நாகம்மாள் நாவல் வெளியான காலத்தில் இப்படிப்பட்ட பார்வையை முன்வைத்திருக்கிறார் க.நா.சு என்பது குறிப்பிடத்தக்கது.

சிறு வயதில் சாத்தனூர் மக்களுடன் சோமுவுக்கு இருந்த உறவு இனிமையான ஒன்றாக அமையவில்லை. கருப்பனின் மகன் என்ற காரணத்தால் தூற்றிய மக்கள் ஒரு பக்கம், தனது தாய் வள்ளியம்மாள் கூட ஆசையாகச் சோமுவை நடத்தவில்லை எனும் மறுபக்கம் இருந்தாலும் சுயம்பு போல தனது பாதையைத் தனித்துக் கண்டுபிடித்தவனாகிறார். நடைமுறையில் பணத்தைவிட மனதின் உணர்வுக்கான மதிப்பு ஒரு மட்டம் குறைவு என்பதாக இருக்கிறது அவரது நடத்தை. மரபுக்கு எதிரானவராக இருந்தாலும் சில அடிப்படை விழுமியங்களில் பெருமதிப்பு கொண்டிருக்கிறார். தனது வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்த முதலாளி ரங்கராவ் குடும்பத்துக்கும் அவரது மாப்பிள்ளை சாம்பமூர்த்திக்கும் என்றென்றும் நன்றியோடு இருக்கிறார். அவ்வப்போது குடி, பெண்ணாசையினால் நிதானம் தவறிப்போனாலும், தனது முதலாளியின் மகள் கங்காபாயை முன்னர் தவறான கண்ணோட்டத்தில் பார்த்தவராக இருந்தாலும், பொருளியல் வாழ்வில் தனக்கென நேர்மையானக் கொள்கைகள் கொண்டவராக இருக்கிறார். தனது பேச்சு சாதுர்யத்தாலும், மதி நுட்பத்தாலும் தென்னக வர்த்தக நிறுவன அதிபராக வளர்ச்சி அடைகிறார். மரபை உடைத்து புது உலகைக் கையகப்படுத்துவதற்கு இருந்த வெறி அவரை இருத்தலியல் சார்ந்த சிக்கல்களிலிருந்து விலகிவைக்கிறது.

தேர்ந்த நடைமுறைவாதியாக மனதின் இசைவுக்கேற்ப தெய்வங்களைத் தொடர்ந்த சோமுவை இன்றைய உலகம் வாரியணைத்திருக்கும் என்றே தோன்றுகிறது. சாத்தனூர் மக்களுக்கு அவர் ஒரு விசித்திர மனிதர். கோவிலுக்குப் போகாதவர், நிலங்களை வாங்கி குத்தகைக்குக் கொடுத்து பணம் பண்ணாதவர், நிலத்தடி நீர் போல வாய்ப்பு கிடைக்கும் இடத்தில் புதுப் பாய்ச்சல் செய்யத் தயங்காதவர், ஊராரின் பேச்சுக்கு இடம் கொடுக்காமல் புதுவிதச் சிந்தனைகளை தைரியமாக நடைமுறைப் படுத்தியவர். ஆனால் சாத்தனூரை விட்டு வெளியேறாதவர். சொல்லப்போனால் சாத்தனூர் கூட்டத்தோடு ஒன்றாமல் இருந்தாலும் ஏதோ ஒன்று அவரை பிடித்து வைத்திருக்கிறது. ஒரு கணம் கூட நிராசையில் குன்றாத அவரது மனம் ஏதோ ஒன்றைத் தேடியபடியே இருந்திருக்கிறது. உண்மையான தெய்வத்தைக் கண்டுணர பல பொய்த் தேவுகளை கடக்க வேண்டியிருந்தாலும் மனக்குரலுக்குச் செவி சாய்த்து வாய்ப்பு கிடைத்தும் சாத்தனூர் எல்லையைக் கடக்காமல் இருக்கிறார். சாத்தனூர் கோவில் மணியோசை சிறுவயது முதல் அவர் கூடவே இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

காவிரி ஆறு பற்றி நாவலின் தொடக்கத்தில் வரும் குறிப்புகள் மிகவும் ரசிக்கத் தக்கதாக இருக்கின்றன. குறிப்பாக சாத்தனூர் சர்வமானிய அக்கிரகாரத் துறையில் நின்றபடி சோமு பார்க்கும் காட்சிகள் நாவலின் உச்சகட்டம். சோமுவின் சிறு வயதுக் குறிப்புகளும், அவனை ஈர்க்கும் விஷயங்களும் நாவலின் பலத்தைக் கூட்டுகின்றன. காவிரியின் புது வெள்ளம் வருவதை சோமு வேடிக்கைப் பார்ப்பது வழக்கம். நுரையும் திரையுமாக ஆற்றுப்படுகையில் அடித்துச் செல்லப்படும் காட்சி நாவலின் மைய ஓட்டத்தோடு தொடர்புடையது. புது வெள்ளத்தில் குளித்தால் உடம்புக்கு ஆகாது எனும் வழக்கம் இருந்தாலும் பலர் தைரியமாகக் குளிப்பதை சோமு பார்த்திருக்கிறான். புது வெள்ளம் திட்டமிட்டப் பாதையில் கரைக்கு அடங்கி நடப்பதில்லை. ஆங்காங்கே உடைக்கும் இடத்தில் உடைத்து, சமயத்தில் மேட்டுத் தெருவுக்குள் புகுந்து அழுக்குகளையும் கழிவுகளையும் சேர்த்தணைத்து விரைகிறது.

வாழ்க்கையின் ஓட்டத்துக்குச் சட்டகங்கள் கிடையாது. புனிதங்களும் நம்பிக்கைகளும் அதற்கு ஒரு பொருட்டு கிடையாது. ஒரு இந்திய மனதை ஆக்கிரமிக்கும் அறம், பொருள், இன்பம், வீடு எனும் வாழ்க்கைக் கட்டங்கள் அதற்குப் பொருட்டல்ல. மரக்கிளைகள் போல எண்ணிலடங்கா இணைப்புகள், “வானத்தைத் துழாவும்” விரிவுகளைக் கொண்டது வாழ்க்கை. அதில் சோமுவுக்கும் சாம்பமூர்த்திக்கும் இருக்கும் இடத்தின் அதே அளவு தான் நாட்டிய சகோதரிகள் பாலாம்பாள் கமலாம்பாளுக்கும் உண்டு. அவ்வப்போது உடைத்து நிலத்தடி நீரை காணும் பரவசம் சோமுவுக்கு உண்டென்றாலும் அது அவரது தேடலுக்குக் கிடைத்த சிறு பரிசு மட்டுமே. அதையும் மீறிப் புது வெள்ளம் போல வாழ்வும் அனைத்தையும் பேதமில்லாமல் கடந்து செல்கிறது.