பாரதியார் – இன்றைய எழுத்தாளர்களின் முன்னோடி

kanasu2

இலக்கிய வட்டம் இதழ்த்தொகுப்பில் பாரதியைக் குறித்தும், அவர் நவீனத் தமிழிலக்கியத்துக்கு எப்படி ஒரு முன்னோடியாக இருக்கிறார் என்பது குறித்தும் க.நா.சு எழுதிய இரண்டு கட்டுரைகள் இடம்பெற்றிருக்கின்றன. அதில் ஒன்று இக்கட்டுரை. இது அவர் ஒரு கூட்டத்தில் பாரதியின் முக்கியத்துவம் குறித்து ஆற்றிய உரை.

தலைவர் அவர்களே, நண்பர்களே, நமஸ்காரம்.

இந்த நிகழ்ச்சியில் பங்கு கொள்பவர்களை அறிமுகம் செய்து வைத்தவர் என்னை வேறு பலவும் எழுதியிருந்தாலும்  கடுமையான விமரிசகர் என்று அறிமுகம் செய்து வைத்தார். நான் பாரதியின் வாரிசு – பாரதி பரம்பரையில் வந்தவன். பாரதியாரும் கடுமையான விமரிசகர்தான் – மிக மிகக் கடுமையான விமரிசகர்தான்.

அரசியல், பொருளாதாரம், சமூகம் இவை பற்றிய பாரதி கருத்துகளே அடிக்கடி எடுத்துக் கையாளப்பட்டு நமக்கு அவை மட்டுமே தெரிகின்றன. நமது பாரம்பரியம், கலைகள், மரபு இவை பற்றிப் பாரதி மிகவும் கடுமையான விமரிசகர் என்பதை நாம் மறந்து விடுகிறோம். அன்று அன்னியர் ஆட்சி என்று விமரிசனம் தேவைப்பட்டது – இன்று நம்மவர் ஆட்சி என்பதனால் விமரிசனம் தேவைப்படாது என்று சொல்வது தவறாகும். இன்னும் கலாசார, பண்பாட்டு விஷயங்களில் கடுமையான விமரிசனம் தேவைப்படுகிறது. இன்னும் கடுமையான விமரிசனம் செய்வதே பாரதி வழி செல்ல விரும்புகிற என் கடமையாகும் என்று எனக்குத் தோன்றுகிறது.

இப்படிப் பேசிக்கொண்டிருக்கும்போதே எனக்கு ஒரு கற்பனை தோன்றுகிறது. பாரதியின் -82வது பிறந்த தினத்தை இப்போது இங்குக் கொண்டாடுகிறோம். பாரதியாரே இன்று நம்மிடையே உயிர் வாழ்ந்திருக்கக்கூடிய பிராயம்தான். ஏதோ அதிசயம் நிகழ்ந்து அவரே இந்த விழாவுக்கு வந்திருந்தால் என்ன செய்வார் என்று எண்ணிப் பார்க்கிறேன். அதோ அந்தக் கடைசி கதவண்டை ஒடுங்கி ஒதுங்கி உட்கார்ந்திருப்பார். மேடைப் பேச்சு – இந்த மாதிரி பேச்சுக்கள் போகிற வேகத்தில் தாங்க முடியாத கட்டத்தை எட்டும்போது சொல்லாமல் கொள்ளாமல் எழுந்து திருவல்லிக்கேணி கடற்கரைக்குப் போயிருப்பார் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.

சுப்பிரமணிய பாரதி

அதிகமாக இந்த மாதிரி விழாக்களில் கலந்து கொள்ளாதவன் நான். நான் பேச எடுத்துக் கொண்ட விஷயமும் மிகவும் குறுகலானது. இங்கு சபையில் உள்ள நீங்கள் எல்லாரும் – முக்கால்வாசி, தொண்ணூறு சதவிகிதம் எழுத்தாளர்கள் அல்லர்- நல்ல வேளையாக! ஆகவே எழுத்தாளர்களுக்கு முன்னோடி என்று பாரதி பற்றிப் பேசுகிறபோது உங்களுக்கு மட்டுமின்றி, குறிப்பாக இங்குள்ள எழுத்தாளர்களுக்கும் என்று பேசுகிறேன். பாரதி பரம்பரை என்று நாம் நினைவுபடுத்திக் கொள்ள அவசியம் இருக்கிறது என்று எண்ணியே பேசுகிறேன்.

பாரதியாரின் இன்றைய பாதிப்பு எப்படி நமது வாழ்க்கையின் எல்லாத்  துறைகளிலும் வியாபித்து நிற்கிறதோ அவ்வளவுக்கு அவர் இருந்து பாடிய போதும் அது இருந்தது. இந்த அளவு விஸ்தீர்ணம் இல்லாதிருந்திருக்கலாம். ஆனால் அப்போது இருந்த அளவில் அவரைக் கேட்டவர்களும், அவருடன் பழகியவர்களும் ஒன்று பத்து நூறாக இன்று அதைப் பெருக்கிச் சில சமயம் முன்னுக்குப்பின் முரணாகவும் சொல்வதற்குக் காரணம், இந்தப் பாதிப்பு என்றுதான் சொல்ல வேண்டும். வேண்டுமென்றே இவர்கள் மெய்யல்லாததைக் கூறுகிறார்கள் என்று நான் சொல்ல மாட்டேன்; ஏதோ லாபத்தைக் கருதி கதைகளைப் பெருக்கிக் கூறுகிறார்கள் என்றும் சொல்ல மாட்டேன். உண்மையில் பாரதி என்கிற உருவம் அவர்கள் உள்ளத்திலேயே வளர்ந்து நிஜம போன்ற விசுவரூபங்கள் பல எடுக்கும் அளவுக்குச் சக்தி வாய்ந்ததாக இருந்திருக்கிறது என்பதைப் பாரதிக்கும் பாரதி பற்றிப் பேசுபவர்களுக்கும் இழுக்காகக் கருத வேண்டியதில்லை.

பாரதி தான் வாழ்நாளிலேயே நேரில் அறிந்தவர்களுக்கே ஒரு சுவாரசியமான மனிதராக, புரியாத புதிராகத்தான் இருந்திருக்கிறார். இந்த சுவாரசியத்தன்மை எங்கிருந்து வந்தது?

எதிர்பார்ப்பதை, பிறர் தன்னிடம் எதிர்பார்ப்பதைச் செய்யாதவர் என்பது ஒன்று. நெருங்கியவர்கள்கூட குறிப்பிட்ட ஒரு சந்தர்ப்பத்தில் பாரதியார் எப்படி நடந்து கொண்டிருப்பார் என்று சொல்ல முடியாமல் தவித்திருக்கின்றனர்.

தான் தனிப்பட்டவன் என்கிற சிந்தனையும் பாரதிக்கு இருந்திருப்பதாகவே தெரிகிறது. கூட்டத்தில் முழங்கியது ஒரு புறம் இருக்க, அவர் கவிதையிலும் வசனத்திலும் பல இடங்களிலும் அவருடையத் தனித்தன்மை தனியாகவே தொனிக்கிறது; இந்தத் தனிமைக்குக் காரணாம் அவர் ஏற்றுக் கொள்ளாத – கடைசிவரையில் முழுவதும் ஏற்றுக்கொள்ளாத ஒரு சூழ்நிலையில், ஒரு கௌரதைத்தன்மையில் வாழ வேண்டியதாக இருந்தது. வாழ்வுக்கும் அவருக்கும் இடையே இடைவிடாத போராட்டம் இருந்தது. அவர் பணத்துக்காகக் கஷ்டப்பட்டார் என்பதையோ, பட்டினி கிடந்தார் என்பதையோ நான் சொல்லவில்லை. கஷ்டப்பட்டிருக்கலாம் – பட்டினியும் கிடந்திருக்கலாம். முக்கியமாகச் சின்னத்தனங்கள் பல செய்து பணம் தேட முயலாதவர்கள் அன்றும் இன்றும் என்றைக்கும் பட வேண்டிய கஷ்டங்கள் அவை – அதைச் சொல்லவில்லை நான்.

இந்திய மக்களின் போராட்டங்கள் பூராவும் பாரதியில் எதிரொலிப்பதை அவர் வரிகள் ஒவ்வொன்றிலும் நாம் காணலாம். நம்பிக்கைக்கும் நம்பிக்கையின்மைக்கும் போராட்டம் நடப்பதையும், நம்பிக்கை, நமது பாரம்பரியமான தெய்வ நம்பிக்கை அவர் கவிதையில் மலர்வதையும் நாம் உணரலாம். சாதாரண வரம்புகள் கட்டிய வாழ்வும் கற்பனாதீதமான ஒரு வாழ்வும் அவர் கவிதையிலும் வசனத்திலும் போராடுவதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது. உள்ளது மாறி இருக்கவேண்டியத்தை உருப்பெறச் செய்ய இடைவிடாத போராட்டம் அவசியமாகிறது. இந்தப் போராட்டத்தை, தன் எழுத்தில் காட்டுபவனையே எழுத்தாளன், இலக்கியாசிரியன் என்று சிறப்பாகப் பாராட்ட வேண்டும். உள்ளதை மாற்றி எதிர்காலத்தை நோக்க முயலுபவனைக் கவி என்று சொல்லலாம்; இலக்கியாசிரியன் என்று சொல்லலாம், கலைஞர் என்று சொல்லலாம். உள்ளதை உள்ளபடி இன்றைக்கு மட்டும் தேவைப்படுகிற அளவில் கூறுபவனை நல்ல பத்திரிகாசிரியன் என்று சொல்லலாம். உள்ளதை ஏற்காமல் பழமையை மட்டும் போற்றித் தொழுது கொண்டிருப்பவனை சநாதனி, பண்டிதன் என்று கூறலாம்.

எழுத்தாளனாகப் பாரதியைக் காணும்போது அவர் காலத்தை எதிரொலித்து மேலே எதிர்காலத்தை நோக்கி வளரச் செய்வதற்கு அடிகோலியவர், எப்படி வளருமோ என்று தவித்தவர் என்பது நிதரிசனமாகத் தெரிகிறது. சமுதாய சமூகப்பிரச்னைகள், அரசியல், தத்துவப் பிரச்னைகள், நடப்பு முறைகள் எல்லாவற்றிலுமே இந்தப் போராட்டத்தைத் தன்னளவில் உணர்ந்து உருக்கொடுத்திருக்கிறார் பாரதியார். இந்தப் போராட்டம் காரணமாக எழுந்த பாரதித் தன்மையைத்தான் அவர் எழுத்துகளைப் படிக்கும்தோறும் படிக்கும்தோறும் ஒரு வேகமாக நாம் உணருகிறோம். பாரதி வார்த்தைகளுக்கும் வாக்கியங்களுக்கும் உள்ள அந்த வேகம், அவருக்கே உரியது. அவருக்கு முன்னும் பின்னும் அந்த வேகம் தமிழில் உருவாகவில்லை – இதே  அளவில் என்பது அவரைத் தனியொரு எழுத்தாளனாக நமக்குக் காட்டுகிறது.

கனவுகள் கண்டவர், தீர்க்கதரிசனம் வாய்ந்தவர், இன்றைய நடப்புகள் பற்றிக் குமுறி எழுந்து கடுமையான விமரிசனம் செய்தவர் என்று சொல்வது சகஜமாகி விட்டது. இத்தனைக்கும் காரணம் காலத்தில் நடக்கிற போராட்டத்தையும், அது எத்திசை செல்ல வேண்டும் என்றும்  உணர்ந்து நடக்க வேண்டும் என்றும் அதில் தனக்குள்ள பொறுப்பையும் உணர்ந்தவர் பாரதியார்.

எழுத்தாளனின் இந்தப் பொறுப்பு மகத்தானது. இதன் சக்தியை உணர்ந்தவர் சிலர் இப்பொறுப்பை நம்மால் வகிக்க இயலாது என்று ஒதுங்கிவிடுகின்றனர் – அல்லது தங்கள் எழுத்துகள் நோக்கங்களை மட்டும் காப்பாற்றிக்கொண்டு நகர்ந்து விடுகின்றனர். பாரதிக்கு இருந்த பொறுப்பு இன்று எழுத்தாளர்கள் எல்லோருக்குமே உண்டு. இன்றைய நிலையை மீறி வரப்போவதைப் பிரக்ஞையுடன் உருவாக்குகிற பொறுப்பு எல்லோருக்கும் உண்டு. அப்பொறுப்பை, கவி பாரதியாரை முன்னோடியாகக் கொண்டு இன்றுள்ள இலக்கியாசிரியர்கள் செய்ய வேண்டிய அவசியம் இன்று அதிகமாகவே இருக்கிறது.

அதிகம், குறைவு என்பதற்கு அர்த்தம் கற்பிப்பதுப் பின்னர் ஆகட்டும், பொறுப்பை ஏற்றுக்கொள்கிற பணியில் பாரதி சிறப்பாகவே வழி காட்டியிருக்கிறார். எந்த எழுத்தும் இன்றையத் தேவையை மட்டும் பூர்த்தி செய்தால் போதாது. நாளை, நாளைக்கு மறுநாள், அதற்கும் மறுநாள் என்று வளர்ச்சிக்கு வழி செய்வது அவசியம். ஏதோ காலண்டரில் தாள்கள் ஒன்றன்பின் ஒன்றாகக் கிழிபடுகின்றன – அதன் காரணமாகவே நாட்கள் ஒன்றன் பின் ஒன்றாக வருகின்றன என்று இன்று ஏற்றுக் கொண்டுவிடுவதுச் சுலபமாக இருக்கிறது. அதனால் எழுத்தாளன் என்கிற ஜாதியினராவது அப்படி எண்ணாதிருக்கப் பழக வேண்டும். நமது சொல்லாலும் செயலாலும் நாளையும் மறுநாளும் அதற்கடுத்த நாளும் உருவாகின்றன என்று உணர்ந்து அதற்குப் பொறுப்பும் ஏற்க வேண்டும்.

பாரதியைப் படிக்கும்போது இது ஒரு முக்கியமான படிப்பினையாகத் தோன்றுகிறது. இன்று, இன்று என்பதுடன் நின்றுவிடாமல் நாளை என்றும், அதற்கு மறுநாள் என்றும் வளர்ச்சியைச் சாத்தியமாக்குவதே நல்ல எழுத்து.

இது நோக்கம் பற்றிய அளவில் ஆகும். வேகம் பற்றியும் சிறிது கூறிவிட்டேன். அதுதவிர பாரதியாரை நாம் முன்னோடியாகக் கருத வேண்டியது இன்னொரு அம்சத்தினாலும் சிறப்புப் பெறுகிறது. பாரதியாரின் வேகம், எதிர்கால நோக்கம் என்கிற இரண்டுமே அவர் மனத்தில், உள்ளத்தில், கற்பனையில் உண்மை என்கிற திரவத்தில் உருவானவை.

உண்மையை ஓரளவுக்குக் கொண்டாடுபவர்கள்கூடப் பலர் சாதாரணமாகப் பிழைக்கத் தெரியாதவன் என்று ஒதுங்கிவிடுவார்கள் – உண்மையை உள்ளபடிச் சொல்பவனைக் கண்டால். இது நமது இன்றைய அனுபவமாகும், யதார்த்தவாதி வெகுஜனவிரோதி என்றும் வழக்குண்டு. ஆனால் பாரதியார் உண்மை என்கிற அளவிலும் நமக்கெல்லாம் முன்னோடியாக நிற்பவர். உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின் அது வாக்கிலும் வரும் என்று பாரதியாரே சொன்னார். அதைக் கவனத்தில் வைக்க வேண்டியது மிக அவசியம்.

உண்மையும் ஓரளவுக்கு வளருகிறது – உண்மையும் வளர்க்கப்படுவது தான். பொய்யும் வளர்க்கப்படுவதுதான். நான் இன்றைய உதாரணங்களை உள்ளபடி கூறி உங்கள் விரோதத்தையெல்லாம் சம்பாதித்துக்கொள்ள இங்குத் தயாராக இல்லை. பாரதியாரின் வாக்கிலே அவர் காலத்துச் சூழ்நிலையைப் பூரணமாக அறியாத இந்த நிலையிலும்கூட உண்மை இருந்ததை இத்தனை நாள் கழித்தும் நாம் அறிய முடிகிறது. எவருடைய எழுத்திலேயும் உள்ள உண்மையை அறிந்து கொண்டு விடமுடியும் என்பது எழுத்தின் சிறப்பைக் காட்டுகிறது. உண்மையையும் அதல்லாததையும் கண்டுகொள்கிற காரியத்தை வாசகர்கள் செய்கிறார்கள், காலம் செய்கிறது, விமர்சகன் செய்கிறான்.

இந்த உண்மை, உள்ளத்து உண்மையும் தனக்குத் தெரிந்ததை உண்மையென்று ஏற்று நடப்பதும் இலக்கியாசிரியனுக்கு மிகவும் அவசியமான தன்மைகளில் ஒன்றாகும். இந்த அம்சத்தை நாம் பாரதியின் வாக்குகளிலிருந்து நமக்குத் தேவைப்படுகிற அளவுக்கு நம்மால் தாங்கக்கூடிய அளவு கிரஹித்துக் கொள்ளவேண்டும். நமக்கெல்லாம் இன்றையச் சூழ்நிலையில் பணத்தையோ, பதவியையோ தவிர வேறு ஒன்றும் தேவையில்லை போலத் தோன்றுகிறது. ஆனால் மனிதனுக்கு, அவன் போய்விட்ட பிறகும் உயிர்தர, உண்மை தேவைப்படுகிறது. இந்த உண்மையை அடிப்படையாகக் கொண்டு எழுதிய பாரதியாரை முன்னோடியாகக் கொண்டுள்ள இன்றைய எழுத்தாளத் தலைமுறை பாக்கியம் செய்தது என்றே எனக்குத் தோன்றுகிறது. பாரதி பாரதி என்று முழங்கிவிட்டு வீட்டுக்குப் போய்ப் பாரதி வழியை மறந்துவிடுவது சரியல்ல. பாரதியின் எழுத்திலே சக்தி சிறிதளவாவது இருக்குமானால் – அதிகமே உண்டு என்று நமக்குத் தெரியும்- அதை நம் உள்ளத்தில் வியாபிக்க விடுவதே நாம் பாரதியை முன்னோடியாக ஏற்றுக்கொள்வது என்பதற்குச் சரியான அர்த்தம்.

நான் சாதாரணமாக இந்த மாதிரி மேடைகள் ஏறிப் பேசாதவன். பத்து பேருக்கிடையே, அதிகம் போனால் இருபது பேருக்கிடையே எனது கருத்துக்களைச் சொன்னால் போதும் என்கிற எண்ணம் உள்ளவன். ஆனால் நண்பர் திருலோக சீதாராம் வந்து பேசவேண்டும், எந்த விஷயமாகப் பேசுகிறீர்கள் என்று கேட்டபோது இன்றுள்ள நிலையை எண்ணிக்கொண்டு பாரதியைப் பற்றி இன்றைய எழுத்தாளர்களின் முன்னோடி என்று பேசுகிறேன் என்று மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டேன். இன்றும் பாரதியாரை முன்னோடியாக ஏற்றுக் கொண்ட எழுத்தாளர்கள் இல்லாமல் இல்லை – இருக்கத்தான் இருக்கிறார்கள். எண்ணிக்கையும் தரமும் இன்னும் அதிகம் இருக்கவேண்டும் என்பதே என் கட்சியாகும்.

வேகம், நோக்கம், உண்மை என்கிற அம்சங்களில் பாரதி நமக்கெல்லாம் சிறப்பான முன்னோடியாக அமைவது எதிர்காலத்துக்கு மிகவும் நல்லது. அதிலும் மூன்றாவது அம்சமாகிய உண்மை – இன்று அது கணிசமான அளவுக்கு அரிதாகிக் கொண்டிருக்கிறது என்பதனால் – அதிகமாக அவசியமாகிறது.

இன்னும் ஒன்று பாரதியாருடைய கவிதையையோ வசனத்தையோ படிக்கும்போது வரிக்கு வரி அவர் சுதந்தரத்தை நாடியது நமக்குத் தெரிகிறது. அந்த மாதிரியான, தேச சுதந்தரத்துடன் சொந்த சுதந்தரத்தையும் காப்பாற்ற வேண்டிய அவசியம் இன்றும் இருக்கிறது. பாரதியைப் படிக்கும்போது இந்த எழுத்தையும் இதை எழுதியவரையும் எந்த விலை கொடுத்தும் யாரும் வாங்கிவிட முடியாது என்கிற எண்ணம் நமக்கு ஏற்படுகிறது. இன்றைய எழுத்தாளர்கள் விலை பேசப்படாமல் இருக்க வேண்டும் என்கிற அவசியத்தை நாம் உணருவதற்கு பாரதியாரின் எழுத்துகள் நமக்கு பயன்படும். அந்த அளவிலும் பாரதியை நம் தலைமுறை எழுத்தாளருக்கு முன்னோடியாக விளங்குகிறார்.

வேகம், நோக்கம், உண்மை, இவற்றுடன் சுதந்தரம் என்பதையும் சேர்த்துப் பாரதியாரை முன்னோடியாகக் கொள்வது இன்றைய இலக்கியாசிரியர்களாகிய நமது பெரும் கடமையாகும்.
வேறு சொல்ல எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. முடித்துக் கொள்கிறேன். நமஸ்காரம்.

நன்றி : இலக்கிய வட்டம், இதழ் 4- 3.1.1964