நீல் ஆர்ம்ஸ்ட்ராங் ஒரு நினைவஞ்சலி

neil-armstrong-nasa-600

1969, ஜுன் வாக்கில் எனது அப்பா, எங்களை ஒரு திருநெல்வேலி மாவட்டச் சிற்றூரில் இருந்து தான் வேலை செய்யும் மதுரைக்கு அருகேயுள்ள கோவில் நகரம் ஒன்றுக்கு அழைத்து வந்து, கோவில் தெருவில் இருந்த ஒரு ஒன்றுக் குடித்தனத்தில் குடியமர்த்தியிருந்தார். அங்கு எல்லாமே புதுமையாக இருந்தது. வீட்டு வாசலில் கோவிலுக்கு வரும் நூற்றுக்கணக்கான விதம் விதமான வாகனங்களும், அவற்றின் புதுப் பெயிண்ட் மணமும், வாசலில் நின்று பார்த்தால் எதிரே பிருமாண்டமான ஒரு குன்றும், அதன் கீழே நெடிதுயர்ந்த கோபுரமுமாக எல்லாமே ஒரு வித மயக்கத்தை அளித்துக் கோண்டிருந்தன. டி.வி இல்லாத காலம், ரேடியோ இல்லாத வீடு. ஒரு நாள் மாலை வேலை முடிந்து வீட்டுக்கு வந்தவுடன் என்னை அழைத்து, இன்று சந்திரனில் மனிதர்கள் இறங்கப் போகிறார்களாம் என்றார். உடனே வாசலுக்கு ஓடினேன்.

குன்றின் மேல் படர்ந்திருந்த நிலவு எந்தவித சலனமும் இன்றி மர்மப் புன்னகையுடன் மலர்ந்திருந்தது. மனித நடமாட்டம் எதுவும் கண்ணில் படவில்லை. ஏமாற்றத்துடன் வீட்டுக்குள் ஓடி ’யாரையும் காணாமே அப்பா,’ என்ற மகனின் ஆர்வத்தைக் கண்டு உச்சி மோந்து, வாசல் கடைக்கு அழைத்துச் சென்று ஒரு கடலை உருண்டை வாங்கிக் கொடுத்து விளக்கினார். இந்த உருண்டையைப் போன்றே வானில் பூமியைச் சுற்றி சுழலும் ஒரு உருண்டையே நிலவு என்றும், அங்கு நடப்பதை இங்கிருந்து நம் கண்களால் பார்க்க முடியாது என்றும் விளக்கினார். கடலை மிட்டாயும், பர்ஃபியும் தந்த சுவையில் மறு கேள்வி கேட்காமல், நிலவில் ஆர்ம்ஸ்ட்ராங் இறங்கியதை ஏற்றுக் கொண்டதாகவும், அப்படி அவர் அடிக்கடி இறங்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டதாகவும் ஒரு மங்கிய நினைவு. இப்படித்தான் ஆர்ம்ஸ்ட்ராங் இறங்கிய சேதி முதல் கம்ப்யூட்டர் என்ற ஒரு நவீன கணக்கிடும் இயந்திரம் வந்திருக்கும் சேதி வரை என் அப்பாவே எனது செய்தி ஊடகமாக இருந்த காலம் அது.

பின்னர் அடுத்த ஆண்டு துவக்கத்தில் பள்ளிக்கூடம் சென்ற பொழுது, ஆர்ம்ஸ்ட்ராங் நிலவில் காலடி பதிக்கும் அற்புதமான வண்ணப் படம் தாங்கிய நோட்டுக்களை மிக விரும்பி வாங்கி பள்ளிக்கூடம் கொண்டு சென்றேன். ஆர்ஸ்ட்ராங் நிலவில் இறங்கிய பொழுது அடைந்த பெருமையை விட அதிகப் பெருமையுடன் அதை வகுப்பு முழுக்கச் சென்று காட்டினேன். மாலை வீடு திரும்பியவுடன் ஆசையுடன் அதைக் காண எடுத்த பொழுது, அமாவாசை அன்று காணாமல் போய் விடும் நிலவு போல அந்த நோட்டு மட்டும் காணாமல் போயிருந்தது. யாரோ ஆர்ம்ஸ்ட்ராங்கைக் களவாடி விட்டனர். இன்றும் முழு நிலவைக் காணும் பெளர்ணமிகளில் எல்லாம் கூடவே, காணாமல் போன அந்த ஆர்ம்ஸ்ட்ராங்கும் வந்து தொந்தரவு செய்யத் தவறுவதில்லை.

moon-walk-49807-lw

மானுடத்தின் தடத்தை முதன் முதலாக நிலவில் பதித்த அந்த மனிதர், கடந்த மாதம் நிரந்தரமாக தன் காலடித்தடத்தை நிலவிலும், தன் நினைவுகளை பூமியிலும் விட்டு விட்டு மறைந்து விட்டார். அந்த 69ம் வருட ஜூலை 21ம் நாளில் சந்திரனில் முதன் முதலாகக் கால் பதித்து ”அது (ஒரு) மனிதனுக்கு ஒரு சிறிய கால் தடம், ஆனால் மனித குலத்திற்குப் பெரும் தாவல்,” (“That is one small step for (a) man, one giant leap for mankind,”)என்ற வாக்கியத்தைப் பேசிய சுபமுகூர்த்தத்தை உலகம் முழுவதும் 50 கோடி பேர்கள் டி.விக்களில் பார்த்தார்களாம். ஆனால் டிவி என்றொரு வஸ்து இருக்கும் விஷயமே எனக்கு பல வருடங்கள் கழித்துத்தான் தெரிய வந்தது. நிலவில் ஆர்ம்ஸ்ட்ராங் என்றொருவர் இறங்கிய சேதி சில வருடங்கள் கழிந்த பின்னரே “ஆர்ம்ஸ்ட்ராங்கே ஆர்ம்ஸ்ட்ராங்கே வா வா உன் வலது காலை எடுத்து வைத்து வா வா” என்று எம்ஜியார் பாடிச் செய்த சினிமா கதாகாலட்சேபம் மூலமாகவே தமிழ் கூறும் நல்லுலகத்தின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் சென்று சேர்ந்தது. இறங்கிய வருடத்தில் அவர் ஆயிரம் நிலவுகளை வரவேற்றுப் பாடுவதில் மும்முரமாக இருந்த படியால் ஆர்ம்ஸ்ட்ராங்கை மறந்து போயிருந்தார்.

நிலவு என்பது கவிஞர்களுக்கு என்றுமே தீராத ஒரு பாடு பொருளாக இருந்தது. நிலவைப் பல கோடி பெர்முட்டேஷன் காம்பினேஷன்களில் பாடி விட்டாலும் இன்னும் நிலவு அவர்களுக்கு அளிக்கும் கற்பனை வளம் தீர்ந்தபாடேயில்லை. இன்றைய தேதி வரை காதலிகளின் வதனங்கள் சந்திர பிம்பங்களாக ஒப்பிடப் படுவதும், குழந்தைகளுக்கு பருப்பு மம்மம் கொடுக்க அழைக்கப்படுவதும் நடந்து கொண்டேயிருக்கின்றன. அவர்களுக்கு அந்த சந்தர பிம்ப வதனத்தின் மீது ஆட்கள் இறங்கி தங்கள் கடினமான பூட்ஸ் கால்களினால் மிதித்தது ஒரு பொருட்டானது போலத் தெரியவில்லை. யாராவது ஒரு கவிஞர் காதலியின் கன்னத்துக் காயத்தை ஆர்ம்ஸ்ட்ராங்கின் காலடியுடன் ஒப்பிட்டிருக்கவும் கூடும். அது போலவே பித்தன் சூடிய பிறையாக அதை வணங்கும் பக்தர்களுக்கும், ஈசன் தலையில் சூடிய சந்திரனில் மனிதன் போய் காலால் மிதித்ததும் பெரிய பொருட்டு அல்ல. ஆம்ஸ்ட்ராங் சந்திரனில் கால் பதித்தது பெரும் சலனங்களை ஏற்படுத்தியிராவிட்டாலும் கூட, ஐரோப்பாவின் மாபெரும் தொழிற் புரட்சிக்குப் பின்னால் மனித குலம் சாதித்த மாபெரும் சாதனை, மனிதன் நிலவில் கால் பதித்த அந்தத் தருணமே. ஒவ்வொரு முறை முழு நிலவைக் காணும் பொழுது மனம் அடையும் பரவசத்துடன் கூடவே, மனித குலத்தின் மாபெரும் சாதனையாக ஆர்ம்ஸ்ட்ராங்கின் காலடித் தடங்களும் இடம் பெற்று விடுகின்றன.

’69ல் ஆர்ம்ஸ்ட்ராங் இறங்கிய செய்தியை மட்டுமே கேட்டு அறிந்த எனக்கு பின்னாளில் வாஷிங்டனில் உள்ள ஸ்மித்ஸோனியன் அருங்காட்சியகத்தில் பல்வேறு அப்போலோ விண்கலன்களையும், சந்திரனில் இருந்து அவர்கள் கொண்டு வந்த கல்லையும், நேரில் கண்டு அறியவும் அவை இறங்கிய தருணங்களின் படப்பிடிப்புகளையும் குரல்களையும் கேட்டறியவும் முடிந்தது. நிலவில் நாமே இறங்கி நடக்கும் உணர்வை அந்த அருங்காட்சியகம் அளித்தது.

உலகப் போர்களுக்குப் பின்னால் உலகத்தின் பெரும் ஆதிக்க நாடுகளின் பரஸ்பர மேலாதிக்க முயற்சிகள், பல்வேறு வடிவங்களில் வெளி வரத் துவங்கின. போரின் பொழுது ராக்கெட்டுகளில் செய்யப்பட்ட ஆராய்ச்சிகளும், சோதனைகளும் அவற்றை அதன் அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் உந்துதலை அந்த வல்லரசுகளுக்கு வழங்கின. அவற்றுள் முக்கியமானவை, விண்வெளி ஆராய்ச்சிகளும் நிலவை அடைய முயன்ற முயற்சிகளும். இந்த முயற்சிகளின் ஆரம்பக் கட்டங்களில் சோவியத் ரஷ்யா பல வெற்றிகளை அடைகிறது. ’57ல் முதன் முதலாக ஸ்புட்னிக் விண்வெளிக் கலம் சந்திரனின் அருகாமைக்குச் சென்றதே விண்வெளி ஆராய்ச்சிகளில் ஒரு முக்கியமான திருப்புமுனைத் தருணமாக அமைந்து விடுகிறது. அந்த ஸ்புட்னிக் தருணமே, அமெரிக்காவுக்கும் சோவியத்துக்கும் இடையே நிலவை நோக்கிய பயணத்தில் மாபெரும் போட்டியைத் தூண்டுகிறது. அந்த போட்டி இரு நாடுகளின் அறிவியியல் பொறியியல் சாதனைகளின் உச்சங்களுக்கு அழைத்துச் சென்றது.

yuri-gagarin-time1959லிலேயே சோவியத் ரஷ்யாவின் விண்வெளிக் கலம் லூனா 2, சந்திரனின் மேல்பரப்பை அடைந்து விடுகிறது. பல்வேறு ஆளில்லாத விண்கலன்களை சந்திரனைச் சுற்றி வர அனுப்பும் சோவியத் ரஷ்யா, பின்னர் நாய்களை விண்வெளிக்குத் தொடர்ந்து அனுப்பி வைத்தது. 1961ம் வருடம், யூரி ககாரின் என்னும் ரஷ்யர் விண்வெளிக்கு முதன் முதலாகச் சென்றதோடு, பூமியைச் சுற்றி வந்து படைத்த சாதனை அமெரிக்காவின் மேலாண்மையைக் கேள்விக்குள்ளாக்கி விடுகிறது. இந்தியாவின் நண்பனாக சோவியத் கொண்டாடப்பட்ட அந்த வருடங்களில் புதிதாகப் பிறந்த பல குழந்தைகள் ககாரின் என்ற பெயரிடப்பட்டார்கள். தமிழ் நாட்டின் குக்கிராமங்களில் கூட ககாரின்கள் பிறந்தார்கள். ககாரினின் நிலவுப் பயணமே அமெரிக்காவின் அப்போலோ விண்பயணத் திட்டத்துக்கு முக்கியமான உந்துதலாக அமைந்தது.

ஜனாதிபதி ஐசனோவர் காலத்திலேயே விண்வெளி ஆராய்ச்சி துவங்கப்பட்டு விட்டாலும், நிலவுக்கு மனிதனை அனுப்பும் முதல் நாடு அமெரிக்காவாக மட்டுமே இருக்க வேண்டும் என்ற வெறியை அமெரிக்கர்களிடம் ஏற்படுத்தியது யூரி ககாரினின் பூமியைச் சுற்றிய பயணமே. ககாரின் விண்வெளி பயணத்தைத் தொடர்ந்து கென்னடி ஒரு முடிவெடுத்து, நிலவுக்கு மனிதனை அனுப்பத் தேவையான நிதியை நாசாவுக்கு அனுமதிக்கிறார், இன்னும் பத்தாண்டுகளுக்குள் நிலவில் காலடி பதித்தே தீரூவோம் என்று சூளுரைக்கிறார். அவர் கனவு அவர் மறைவுக்குப் பின்னர் நிறைவேற்றப் படுகிறது. நிலவில் யார் முதன் முதலில் கால் பதிப்பது என்ற போட்டி பத்து வருடங்களுக்கும் மேலாக ஒரு பெரும் அகங்கார யுத்தமாக அமெரிக்கா-சோவியத் ரஷ்யாவிடையே தொடர்ந்து நடை பெற்றது. அறுபதுகளின் துவக்கத்தில் அமெரிக்க அதிபர் கென்னடியால் முடுக்கி விடப்பட்ட அப்போலோ திட்டம் முழு மூச்சாகச் செயல் பட்டு, 69ம் வருடம் நிக்சன் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் நிலவில் மனிதக் கால் பதிகிறது. நீல் ஆர்ம்ஸ்ட்ராங் என்னும் விண்வெளிப் பொறியாளர், நிலவில் கால் பதித்த முதல் மானுடனாகச் சாதனை புரிகிறார்.

1930 வருடம், அமெரிக்காவில் ஓஹையோ மாகாணத்தில் அதிகம் அறியப் படாத ஒரு சிற்றூரில் பிறந்த ஆர்ம்ஸ்ட்ராங், சிறுவயதிலேயே விமானங்களில் ஆர்வம் உள்ளவராக வளர்ந்து. தன் 16ம் வயதிலேயே விமான ஓட்டும் உரிமையைப் பெறுகிறார். ஏரோநாட்டிக்கல் பொறியியல் பிரிவில் பட்டம் பெற்ற பின், அமெரிக்கக் கடற்படையில் சேர்ந்து விமானங்களைச் செலுத்தும் பைலட் ஆகக் கொரியப் போரில் பங்கு கொள்கிறார். பின்னர் அமெரிக்க விண்வெளித் துறையில் சேர்ந்து ஒரு முழு நேர விண்வெளி ஆராய்ச்சியாளராகிறார். சோவியத்தின் ஸ்புட்னிக் நிகழ்வு கென்னடியைத் தூண்டியது போலவே விண்வெளிப் பயணத்திற்கான ஆர்வத்தை ஆர்ம்ஸ்ட்ராங்கிடமும் தூண்டுகிறது. விண்வெளிக் கலன்களுக்கான முறையான படிப்பும், அது சம்பந்தப் பட்ட ஆராய்ச்சிகளில் முறையான பயிற்சியும், பல வருடங்கள் விமானங்களைச் செலுத்திய அனுபவமும், ராணுவ அனுபவமும், விண்வெளி ஆராய்ச்சிகளில் அவரது தளராத ஆர்வமும் அவரை அமெரிக்காவின் முழுமையான மிகச் சிறந்த ஒரு விண்வெளிப் பயணியாக உருவாக்குகின்றன.

neil-armstrong25விண்வெளிப் பயணம் என்பது கடுமையான உடற்பயிற்சிகளையும் மனப் பயிற்சிகளையும் சோதனைகளையும் உள்ளடக்கியது. அத்தனை சோதனைகளையும் தாண்டி முழுமையான தகுதியுள்ள ஒரு விண்வெளிப் பயணியாகத் தேர்வு பெறும் ஆர்ம்ஸ்ட்ராங், நிலவுப் பயணத்துக்கு முன்பாகவே ஜெமினி-8 விண் கலத்தை விண் வெளியில் செலுத்தத் தேர்ந்தெடுக்கப் படுகிறார். இரு விண்கலங்களை அண்ட வெளியில் இணைத்த முதல் பைலட் இவரே. அவரது இந்த அனுபவமும்,   அப்போலோ-8 விண்கலத்திற்கு இரண்டாம் வரிசைக் குழுவாகப் (பதிலிக்குழு-backup crew) பயிற்சி பெற்றதும், நிலவுப் பயணத்துக்குச் செல்லும் அப்போலோ-11 விண்கலத்தைச் செலுத்த அவரைத் தேர்வு செய்வதில் முக்கியமான தகுதியாக அமைகின்றன. பின்னர் அப்போல-11 விண்கலன் மூலமாக சந்திரனில் முதல் மானுடனாகக் கால் பதித்ததும், பூமி என்னும் கிரகத்தில் இருந்து நிலவிலிறங்கியதும், அங்கு உலக சமாதானத்தை முன்னிட்டு கையொப்பமிட்டப் பத்திரத்தைப் பதித்ததும் மானிட குலத்தின் வரலாற்றில் மாபெரும் முன்னெடுப்பாகப் பதிவானது. அந்த அப்போலோ 11 பயணம் உண்மையில் அந்த மூன்று விண்வெளி வீரர்களும் உயிரைப் பணயம் வைத்த பயணமே. திரும்பி வருவதற்கான எந்த விதமான உத்தரவாதமும் இல்லாத அந்தப் பயணத்தை மனம் விரும்பி ஏற்றுக் கொண்டனர் அந்தச் சாதனையாளர்கள். தாங்கள் உயிருடன் திரும்பி வருவோம் என்ற நம்பிக்கை அவர்களுக்கும் கூட அதிகமாக இருந்திருக்கவில்லை. தங்கள் குடும்பத்தினரின் எதிர்கால பாதுகாப்புக்கு ஒரு காப்பீடாக தங்கள் கையெழுத்திட்ட அஞ்சல் உறைகளை தங்கள் குடும்பத்தினருக்கே அனுப்பி வைத்து ஒரு வேளை தாங்கள் திரும்பாமல் போனால் அந்தக் கையெழுத்துக்களை ஏலம் விட்டு வருமானம் ஈட்டிக் கொள்ளுமாறு ஏற்பாடு செய்து விட்டுப் பயணித்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் வெற்றிகரமாகத் திரும்பியதும் அதன் பின்னர் இலவசமாகவே ஆயிரக்கணக்கான கையெழுத்துக்களை இட்டதும் வரலாறு.

நிலவுக்குச் சென்ற முதல் மனிதன் என்ற பெரும் பிம்பத்தை அவர் விரும்பியதாகவோ, அதை வைத்துக் கொண்டு தன் பிற்கால வாழ்க்கையை பிரபலபடுத்திக் கொள்ள முயன்றதாகவோ, வாய்ப்புக்கள் இருந்தும் அரசியலில் இறங்கியதாகவோ ஏதும் தகவல் இல்லை. தனக்குக் கிட்டிய பிராபல்யத்தைக் கொண்டு அரசியல்/ நிதி ஆதாயம் அடைவதிலும் சற்றும் விருப்பம் இல்லாத ஒரு தன்னடக்கமுள்ள த மனிதராகவே வாழ்ந்துள்ளார். எந்த விதமான புகழையும் விளம்பர வெளிச்சத்தையும் விரும்பாத ஒரு தனிமையான மனிதராகவே தன் நிலவிற்குப் பின்னாளான வாழ்நாட்களைக் கழித்துள்ளார் ஆர்ம்ஸ்ட்ராங். நிலவில் முதலில் இறங்கும் முன்னுரிமையைக் கூட அவராக விரும்பிக் கேட்டுப் பெறவில்லை. அந்த முடிவு நிர்வாகிகளால் விண்கலம் நடத்திச் செல்வாரைக் கேட்காமல் எடுக்கப்பட்ட முடிவு என்று இப்போது தெரிய வந்துள்ளது.

மிகவும் அமைதியான, ஆனால் உறுதியான மனநிலை கொண்ட ஒரு மனிதராக ஆர்ம்ஸ்ட்ராங் அடையாளம் காணப்படுகிறார். எந்தவொரு அவசரமான, ஆபத்தான தருணத்திலும் கூட சிறிதளவும் பதட்டத்தை வெளிக்காட்டாத அபாரமான கட்டுப்பாடுள்ள மனிதராக இருந்துள்ளார். போரில் விமானியாக இருந்த போதும், விண்வெளிப் பயண ஆராய்ச்சிக்காக பல நூறு விமானங்கள், ராக்கெட்டுகள், பலவகை வானூர்திகளைச் சோதனை ஓட்டத்தில் இயக்கிய போதும் பல பேராபத்துகளில் இருந்து தப்பியிருக்கிறார். திடீரென்று எழும் பிரச்சினைகளைச் சமாளிக்க துரித முடிவெடுத்துச் செயல்படும் அவரது திறமையும், எதிர்பாராத பின்னடைவுகளால் சிறிதும் பதட்டமடையாத நிதானமான தன்மையுமே அவரை அப்போலோ 11க்கான தலைமை விண்வெளியாளராகத் தேர்ந்தெடுத்துள்ளது. அவரது மோதிர விரல் ஒரு முறை வெட்டுப் பட்டுத் தனியான பொழுது தன் வலியை வெளிக்காட்டாமல் அமைதியாக வெட்டப் பட்ட விரலைத் தேடி எடுத்து ஐஸ் பெட்டியில் வைத்து மருத்துவமனைக்குத் எடுத்துச் சென்று ஒட்ட வைத்துள்ளார்.

அப்போலோ 11றின் நிலவுப் பயணத்துக்குப் பிறகு ஆர்ம்ஸ்ட்ராங் நாசாவில் சில காலம் பணிபுரிந்து விட்டு சின்சினாட்டி பல்கலையின் ஏரோ ஸ்பேஸ் துறையில் பேராசிரியராக எட்டு வருடங்கள் பணி புரிந்த பின்னர் கம்ப்யூட்டிங் டெக்னாலஜிஸ் ஃபார் ஏவியேஷன் என்ற நிறுவனத்தின் தலைவராக 1992 வரை செயல் பட்டுள்ளார். 1986ம் வருடம் சாலஞ்சர் விண்கலம் வெடித்த பொழுது அதற்கான காரணங்களை ஆராயும் குழுவிலும் ஆர்ம்ஸ்ட்ராங் பணியாற்றியுள்ளார். விண்வெளி ஆராய்ச்சிகளில் தொடர்ந்து தன்னை ஈடுபடுத்தி வந்த ஆர்ம்ஸ்ட்ராங் சமீபத்தில் அமெரிக்க அதிபர் மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் திட்டங்களை உள்ளடக்கிய நட்சத்திரத் திட்டத்தை ரத்து செய்த பொழுது அமெரிக்க காங்கிரஸ் முன்னால் தனது கவலைகளையும் எதிர்ப்பையும் எடுத்துரைத்துள்ளார்.

பொதுவாக ஊடகங்களில் தன்னை விளம்பரப் படுத்திக் கொள்ளாத அடக்கமான மனிதரான ஆர்ம்ஸ்ட்ராங் அரசின் விண்வெளி ஆராய்ச்சிச் செலவுகளைக் குறைத்த பொழுது தன் கவலைகளை வெளிப்படுத்தியிருக்கிறார். விண்வெளி ஆராய்ச்சிகளில் இதுவரை வகித்த முதன்மை இடத்தை நாம் தக்க வைத்துக் கொள்ளவில்லையென்றால் அது வருங்காலத்தில் அமெரிக்காவின் நன்மைக்கு உகந்ததாக இருக்காது என்று கருத்துத் தெரிவித்துள்ளார். தன் இறுதிக் காலம் வரை விண்வெளி ஆராய்ச்சிகளின் தொடர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருந்தவர் ஆர்ம்ஸ்ட்ராங்.

ஆர்ம்ஸ்ட்ராங்கும், ஆல்ட்ரினும் நிலவில் கால் பதித்த பின்னர் மொத்தம் 6 அப்போலோ விமானங்கள் நிலவுக்கு அனுப்பப் பட்டுள்ளன. 1969 முதல் ’72 வரை அப்போலோ 11ல் ஆரம்பித்து அப்போலோ 17 மூலமாக 12 பேர்கள் நிலவில் கால் பதித்துள்ளனர். தொடர்ச்சியான இந்த விண்வெளிப் பயணங்கள் மூலமாக ராக்கெட் விஞ்ஞானம், தொலைத் தொடர்பு, விண்பயணத்துக்குத் தேவையான கணணிகள் வடிவமைத்தல் மற்றும் ஏராளமான தொடர்புள்ள துறைகளின் முன்னேற்றங்களுக்கும் ஆராய்ச்சிகளுக்கும் உந்துதல் கிட்டியிருக்கிறது. 24 விண்வெளி வீரர்கள் நிலவைச் சுற்றி வந்துள்ளனர் அவர்களில் 12 பேர் மட்டுமே நிலவில் நடந்துள்ளனர் அவர்களில் ஆர்ம்ஸ்ட்ராங்கும் ஆல்ட்ரினும் அழியாப் புகழ் பெற்றனர்.

சகபயணியான ஆல்ட்ரின் அமெரிக்கா செவ்வாய் கிரகத்துக்கு மனிதனை அனுப்ப வேண்டும் என்று தனது விருப்பத்தைத் தெரிவித்த பொழுது ஆம்ஸ்ட்ராங் உறுதியாக மீண்டும் பல முறை சந்திரனுக்கு மனிதனை அனுப்பி சந்திரனை உருப்படியாகப் புரிந்து கொண்ட பின்னரே செவ்வாய்க்கான மனிதப் பயணம் தொடங்கப் பட வேண்டும் என்று கூறியுள்ளார். அப்பல்லோ பயணங்களுக்குப் பின்னால் நிலவுக்கு மனிதனை அனுப்பி தானும், வேறு சில விண்வெளிப் பயணரும் எடுத்து வைத்த காலடித் தடங்களை அமெரிக்க அரசாங்கம் தொடர்ந்து மேன்மேலும் வளர்க்காதது குறித்து அவருக்கு பெருத்த ஆதங்கம் இருந்ததாகத் தெரிகிறது.

கிட்டத்தட்ட 25 பில்லியன் டாலர்கள் செலவில் நடத்தப் பட்ட அப்போலோ விண்வெளித் திட்டத்திற்குப் பிறகு நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டம் அனேகமாகக் கைவிடப்பட்டுவிட்டது. அதன் பின்னால் பல்வேறு ஆளில்லாத கலன்கள் தொடர்ந்து நிலவுக்கு அனுப்பி வைக்கப் பட்டு ஆராய்ச்சிகள் தொடர்ந்தாலும் மனிதனை அனுப்பி வைப்பதற்கான தேவையும் அவசரமும் அவசியமும் தற்சமயம் இல்லை என்பதினால் அமெரிக்க அரசு அதில் அவ்வளவாக முனைப்புக் காண்பிப்பதில்லை. நாசா அதற்கான திட்டக் கோரிக்கைகளை வைத்துக் கொண்டேயிருந்தாலும், ’72ம் வருடத்திற்குப் பின்னால் சந்திரனுக்கு மனிதர்களை அனுப்ப அமெரிக்காவோ, சோவியத் ரஷ்யாவோ, இன்றைய ரஷ்யாவோ ஆர்வம் காட்டல்லை. நிலவில் முதன் முதலாக ஒரு அமெரிக்கன் கால் பதித்த போதிலும் கூட நிலவை அமெரிக்கா உரிமை கொண்டாட முயலவில்லை.

நிலவில் மனிதர்களை அனுப்பும் திட்டத்திற்காகும் செலவுகளைக் கணக்கில் கொண்டு எந்த நாடும் அங்கு மனிதர்களை அனுப்பத் துணியாததும், வேறு போட்டிகள் ஏற்படாமல் போனதும், தற்சமயம் அங்கு பிற நாடுகள் இறங்கி உரிமை கொண்டாட முடியாது என்ற யதார்த்தமும், நிலவில் இப்பொழுதைக்கு நாடுகளுக்கிடையேயான நிலத் தகராறுகள் ஏதும் நிகழாமல் காத்து வருகின்றன. பல்வேறு நாடுகளுக்கு நிலவில் கால் பதிக்க ஆசை இருந்தாலும் கூட நிதி நெருக்கடிகளும், அதற்கான அவசரத் தேவை ஏதுமின்மையும் அந்த ஆசைகளை எல்லாம் நனவாக்காமல் வைத்திருக்கின்றன.

அமெரிக்காவையும், ரஷ்யாவையும் தொடர்ந்து நிலவுக்கு தங்கள் விண்கலன்களை அனுப்புவதில் ஜப்பான், சீனா, இந்தியா ஆகிய தேசங்கள் வெற்றியடைந்துள்ளன. அதில் சீனாவின் விண்கலம் பத்திரமாக நிலவில் இறங்கி ஆராய்ச்சிகளை மேற்கொள்ள முடிந்திருக்கிறது.

chandrayaan-1இந்தியாவின் சந்த்ரயான் 1 நிலவை அடைந்து செயலிழந்து விட்டது. இந்தியா 2014ம் ஆண்டு வாக்கில் தனது சந்த்ரயான் 2 ஐ நிலவைச் சுற்றி வரவும் அதில் இருந்து இறக்கப்படும் ரோபாடிக் ரோவர்கள் மூலமாக நிலவுப் பரப்பில் ஆராய்ச்சி செய்யவும் திட்டங்கள் வைத்துள்ளது. ரஷ்யா 2025 வாக்கிலேயே நிலவில் மனிதனை அனுப்பத் திட்டமிட்டிருக்கிறது. இந்த நூற்றாண்டில் நிலவில் வளங்களைத் தேடவும், நிலவில் நிலையங்களை அனுப்பவும் பல நாடுகளுக்கான போட்டிகள் அதிகரிக்கவும் வாய்ப்புகள் உள்ளன. உலகப் போரின் பொழுது எதிரி நாடுகளைத் தாக்குவதற்காக உருவாக்கப் பட்ட ராக்கெட் ஆராய்ச்சிகளின் வளர்ச்சியே நிலவு வரை செயற்கைக் கோள்களை அனுப்பும் திட்டங்களுக்கு உத்வேகம் அளித்தவை. இந்த ராக்கெட் திட்டங்கள் அனைத்தின் பின்னாலும் ராணுவ முக்கியத்துவமும் பாதுகாப்பு சார்ந்த காரணிகளும் இருந்தே வருகின்றன. செயற்கைக் கோள்களை அனுப்புகிறோம் என்ற ஆராய்ச்சிகளின் பின்னணியில், சக்தி வாய்ந்த கண்டம் விட்டுக் கண்டம் தாவும் ஏவுகணைகளை உருவாக்கும் திட்டங்களையும் நிறைவேற்றிக் கொள்ள முடிகிறது. அதன் காரணமாகவே விண்வெளி ஆராய்ச்சி என்பது ஒரு முகமூடி ஆராய்ச்சியாகவே பல நாடுகளாலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தியா போன்ற வளரும் நாடுகளிலும் அமெரிக்கா போன்ற முன்னேறிய நாடுகளிலும் இத்தகைய ஆராய்ச்சிகளுக்கு எப்பொழுதுமே கடும் எதிர்ப்பு ஒரு சாராரிடம் இருந்து எழுந்து கொண்டேயிருக்கிறது. மேலும் இத்தகைய ஆராய்ச்சிகளை அரசியல் கட்சிகள் தங்களது ஊழல்களையும் தோல்விகளையும் மறைக்க உதவும் ஒரு ஆயுதமாகவும் பயன்படுத்தி வருவது பொதுமக்களிடம் விண்வெளித் துறையின் மீது அவநம்பிக்கைகளை உருவாக்கக் காரணியாகிறது. சமீபத்தில் பல்வேறு ஊழல் குற்றசாட்டுகளிலும் பல லட்சம் கோடி ஊழல்களிலும் ஈடுபட்டு அசிங்கப்பட்டு நிற்கும் இந்தியாவின் மன்மோகன் தலமையிலான அரசு செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைக் கோளை அனுப்பும் திட்டத்தை அறிவித்தன் மூலமாக மக்களின் கவனத்தை திசை திருப்புகிறது என்ற குற்றசாட்டு எழுந்தது.

மேலும் இத்தகைய ஆராய்ச்சிகளை எப்பொழுதுமே எதிர்த்து வரும் தேச விரோத சக்திகள் உள்நாட்டுப் பிரச்சினைகளையும் ஏழ்மையையும் காரணம் காட்டி தங்கள் எதிர்ப்பை வலுப்படுத்தி வருகின்றன. விண்வெளி ஆராய்ச்சி என்பதும், நிலவுக்கும், செவ்வாய்க்கும் செயற்கைக் கோள்களையும் மனிதர்களையும் அனுப்பும் திட்டங்களும் எல்லா நாடுகளிலும் அரசியல் சச்சரவுகளை ஏற்படுத்தும் திட்டங்களாகவுமே அமைகின்றன. இந்தியாவின் வெற்றிகரமான செயற்கைக் கோள்களும், தன் விண்வெளி ஆராய்ச்சிகளில் நிகழ்த்தியுள்ள அது நடத்தியுள்ள சோதனைகளும் நிச்சயமாக உலக அளவில் அதற்கு ஒரு மரியாதையைப் பெற்றுத் தந்திருக்கிறது.

நிலவில் ஒரு மனிதன் இறங்க முடிந்திருக்கிறது என்ற விஷயத்தை பல்வேறு மதங்களைச் சார்ந்த அடிப்படைவாதிகளினால் ஜீரணித்துக் கொள்ளவே முடிவதில்லை. இறைவனால் அன்றி மனித சக்திகளினால் சாத்தியப் படாத ஒரு விஷயம் அது என்பதை உறுதியாக இன்று வரை மத அடிப்படைவாதிகள் நம்பிக் கொண்டிருக்கின்றார்கள். இயற்கை வழிபாட்டாளர்களான இந்துக்கள் சிவபெருமானின் தலையில் இருக்கும் நிலவு என்பது ஒரு குறியீடு என்பதை நன்கு புரிந்து வைத்திருப்பதினால் அவர்களுக்கு சிவபெருமான் தலையில் உள்ள சந்திரனில் மனிதன் இறங்குவது அவ்வளவு பெரிய அதிர்ச்சிகளை ஏற்படுத்தவில்லை. ஆனால் இந்த அசாத்தியமான மானுட நிகழ்வு பிற மத அடிப்படைவாதிகளிடம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நிறுவப்பட்ட மத நம்பிக்கையாளர்களிடம் தோன்றிய அதிர்ச்சி போலவே சர்வ வல்லமை படைத்த சோவியத் கம்னியுஸ்டு நாடு விண்வெளிப் போட்டியில் தோல்வி அடையக் கூடும், அந்தப் போட்டியில் முதலாளித்துவ அமெரிக்கா வெற்றியடையக் கூடும் என்ற உண்மையை பல கம்னியுஸ்டு மத வெறியர்களினாலும் ஜீரணித்துக் கொள்ள முடியாமல் போனது.

ஆக இரண்டு தரப்புமே கடுமையான எதிர்ப் பிரச்சாரம் செய்ய முனைந்தனர். நிலவில் மனிதன் கால் பதிக்கவே இல்லை என்றும் அங்கு ஆர்ம்ஸ்ட்ராங்கும் ஆல்ட்ரினும் இறங்கியது ஒரு திட்டமிடப் பட்ட பிரச்சார ஏமாற்று வேலை மட்டுமே என்றும் இன்று வரை சலிக்காமல் சாதித்து வருகின்றார்கள். இப்படிச் சாதிக்கும் ஒரு புத்தகம், பில் ஹேசிங் என்பவரால் எழுதப்பட்டு, பூமி தட்டையானதே என்று நம்பும் அமைப்பினரால் பரப்பப்பட்டு வந்தது. நிலவில் மனிதன் இறங்கியது ஹாலிவுட்டில் வைத்து ஸ்டான்லி குப்ரிக் என்ற இயக்குனரால் எடுக்கப் பட்ட ஒரு சினிமாவே என்றும் அது உலக மக்கள் அனைவரையும் ஏமாற்றச் செய்யப் பட்ட ஒரு சதித் திட்டம் என்றும் அவதூறுகளைத் தொடர்ந்து பரப்பி வருகிறார்கள். ஆர்ம்ஸ்ட்ராங் சந்திரனில் இறங்கிய பொழுது சொன்ன வாசகமும் பின்னர் சர்ச்சைக்குள்ளானது. அவர் எ மேன் என்று மனித குலம் முழுவதிற்குமான சாதனையாகக் குறிப்பிட்டாரா அல்லது வெறுமே மேன் என்று சொல்லி தனி மனிதனைக் குறிப்பிட்டாரா என்ற கடுமையான சர்ச்சையும் அந்த உலகப் புகழ் பெற்ற வாசகத்தின் மீது எழுப்பப் பட்டது.

வியட்நாமில் அமெரிக்கா எதிர் கொண்ட தோல்விகளை மறைத்து உலக அளவில் அதன் ஆதிக்கத்தையும் பிம்பத்தையும் நிலை நிறுத்த செயற்கையாக உருவாக்கப் பட்ட ஒரு மாயை மட்டுமே சந்திரனில் அமெரிக்கர்கள் இறங்கியது என்றார்கள். பின்னர் அதே குப்ரிக் எடுத்த ஷைனிங் என்ற சினிமாவின் மூலமாக தான் செய்த ஏமாற்று வேலையை குப்ரிக் சில சந்தேகக் குறியீடுகள் மூலமாக ஒத்துக் கொண்டார் என்றும் சில வேலை வெட்டி இல்லாத அதி மேதாவிகள் ஆராய்ந்து கண்டுபிடித்தார்கள்.

ஆர்ம்ஸ்ட்ராங் இத்தகைய குற்றசாட்டுக்களை ஒரு பொருட்டாகவே எடுத்த்துக் கொள்ளவில்லை. வருங்காலத்தில் நிலவில் பல நாட்டினரும் சென்று வருவார்கள் அத்தருணங்களின் பொழுது நான் அங்கு விட்டு விட்டு வந்த காமிராவை அவர்கள் திருப்பி எடுத்து பூமிக்குக் கொணர்வார்கள் என்று சொல்லி ஏமாற்றுக் குற்றசாட்டுக்களைப் புறம் தள்ளி விட்டார். எதிர்க்கட்சியினரை வேவு பார்த்த குற்றசாட்டில் பதவி இழந்த அதிபர் நிக்சனின் கால கட்டத்தில் இந்த அப்போலோ செயற்கைக் கோள்கள் அனுப்பப் பட்டதும் வியட்நாமில் அமெரிக்கா சம்பாதித்த கெட்ட பெயரும் இந்த அவதூறுகளுக்கு வலு சேர்த்தன. நாசா முதலில் இந்தக் குற்றசாட்டுக்கள் ஆதாரமில்லாதவை என்று நிரூபிக்க ஒரு குழுவை அமைத்தாலும், அது எதிர்தரப்புக்கு மேலும் வலு சேர்க்கும் என்பதினால் கைவிட்டு விட்டனர். இருந்தாலும் அப்போலோ திட்டத்தின் மீதும் நிலவில் ஆர்ம்ஸ்ட்ராங் இறங்கியதை சந்தேகித்தும் வைக்கப்பட்ட அனைத்து விதமான சந்தேகங்களையும் பல்வேறு விண்வெளி நிபுணர்களும் ஆதாரபூர்வமான விஞ்ஞான சோதனைகள் மூலமாகவும் தீர்மானமாக தீர்த்து வைக்கப் பட்ட பின்பும் கூட மீண்டும் மீண்டும் அவை எழுப்பப் படுவதும் அவற்றை நம்புவர்கள் இருப்பதும் தொடர்ந்தே வருகிறது. இன்று சந்திரன் மட்டுமின்றி செவ்வாய்க்கும் அனுப்பப் படும் விண்கலன்களைக் காணும் பொழுது இந்த சந்தேகங்கள் அற்பமானவை என்று பலராலும் நிராகரிக்கப்பட்டு விட்டது. இன்று வரை அமெரிக்கா நிலவில் கால் பதித்த உண்மையை ஏற்க மறுக்கும் ஏராளமான கம்னியுஸ்டுகள் இந்தியாவில் கூட இருக்கின்றார்கள். இந்தியாவே தனது சொந்த விண்கலத்தை சந்திரனுக்கு அனுப்பிய பின்னாலும் கூட சலிக்காமல் தங்களது பிரச்சாரத்தை அவர்கள் செய்து வருகிறார்கள். நிலவுப் பயணத்தை முடித்த பின்னர் பல நாடுகளுக்கும் பயணம் சென்ற ஆர்ம்ஸ்ட்ராங் இந்தியா வந்திருந்த பொழுது அவரிடம் பிரதமர் இந்திரா தான் அதிகாலை வரை விழித்திருந்து அவர் நிலவில் காலடி எடுத்து வைத்ததைக் கண்டதாகக் குறிப்பிட்டிருக்கிறார். பதிலுக்கு அமெரிக்கர்களுக்கே உரிய இயல்பான நகைச்சுவை உணர்வுடன், ’உங்களை காத்திருக்க வைத்ததற்கு மன்னிக்க வேண்டும்’ என்று ஆர்ம்ஸ்ட்ராங் நகைச்சுவையுடன் பதிலளித்ததை, நமது பத்திரிகைகள் ஆர்ம்ஸ்ட்ராங் இந்திராகாந்தியிடம் மன்னிப்புக் கேட்டார் என்று செய்தி வெளியிட்டு தங்கள் ”அறிவுத் திறனை” வெளிச்சம் போட்டுக் காண்பிக்கின்றன.

ஒட்டு மொத்த மனித குலத்துக்கு விண்வெளி ஆராய்ச்சிகள் விளைவிக்கும் நன்மைகள் கருதியும், எதிர்கால நலன் கருதியும், செல்வம் படைத்த நாடுகள் இத்தகைய ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருவதும் வேற்றுக் கிரகங்களைத் தொடர்ந்து அடைய முயற்சிப்பதும் அவசியமான ஆராய்ச்சிகளே. மனித குலத்தின் ஒட்டு மொத்தமான நன்மைக்கு அமெரிக்கா மற்றும் சோவியத் நாடுகளின் போட்டிகள் பல நன்மைகளையே விளைவித்துள்ளன. இந்த விண்வெளி ஆராய்ச்சிகளின் விளைவாக ஏராளமான பிற கண்டுபிடிப்புகளும் நிகழ்ந்துள்ளன.

நிலவின் பரப்பில் மோதாமல் இறங்குவது சாத்தியமா, அப்படியே இறங்கினாலும் அங்கு தாக்குப் பிடிக்க இயலுமா, அப்படியே தாக்குப் பிடித்து விட்டாலும் அதன் பின்னர் மீண்டும் தாய்க் கலனுக்குத் திரும்ப முடியுமா அப்படியே திரும்பி விட்டாலும் பத்திரமாக மீண்டும் பூமியில் இறங்கி விட முடியுமா என்ற பல்வேறு விடை தெரியாத கேள்விகளுக்கு நடுவே சந்திரனுக்குச் செல்லவும் அங்கு இறங்கவும் துணிந்த ஆர்ம்ஸ்ட்ராங் முதலிய ஏராளமான விண்வெளி வீரர்களின் தியாகங்களும், துணிவும், அர்ப்பணிப்பு உணர்வுமே இன்று மானுட குலத்துக்கு நன்மை பயக்கும் எண்ணற்ற ஆராய்ச்சிகள் உலகெங்கும் நிகழ கிரியாவூக்கிகளாக அமைந்துள்ளன. அந்த அளவில் நிலவில் முதலில் கால் பதித்த ஆர்ம்ஸ்ட்ராங்கிற்கு மனித குலம் என்றும் கடமைப்பட்டிருக்கும்.

இந்தியாவைப் பொருத்த வரை அந்நிய ஆட்சிகளின் அடிமைத் தனத்தில் தான் இழந்து விட்ட தனது அறிவியியல் பாரம்பரியத்தை மீட்டெடுக்க அணு முதல் விண்வெளிப் பயணம் வரையிலான அனைத்து விதமான ஆராய்ச்சிகளும் அதன் ஆதார இருத்தலுக்கான மிக முக்கியமான அடித்தளங்கள். அரசியல், பொருளாதாரம், விளையாட்டுப் போட்டிகள், மக்கள் நலன், பொதுச் சுகாதாரம், கட்டுமானம் என்று பல்வேறு தரப்புகளிலும் இந்தியா ஒரு தோல்வியடைந்த ஒரு நாடாகவே அடையாளம் காணப்பட்டாலும் கூட விண்வெளித் துறை ஆராய்ச்சிகளின் மூலமாக இந்தியா தனது மக்களின் தன்னம்பிக்கையை வெகுவாகத் தூண்டியுள்ளது என்பதைக் குறிப்பிட வேண்டும். கூடங்குளம் அணு மின் நிலையமாக இருந்தாலும் சரி, போடி மலைகளில் நிறுவப் படவிருக்கும் கருந்துகள் ஆராய்ச்சிக் கூடமாக இருந்தாலும் சரி, சந்திரனுக்கு மனிதனை அனுப்பும் முயற்சியாக இருந்தாலும் சரி, செவ்வாய்க் கிரகத்துக்கு விண்கலன் அனுப்பும் திட்டமாக இருந்தாலும் சரி இந்தியாவில் தொடர்ந்து ஒரு சாராரரின் கடும் எதிர்ப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது.

உள்நோக்கமும் வெளிச் சக்திகளின் தூண்டுதலும் கொண்ட அத்தகைய சக்திகளைப் புறம் தள்ளி இந்தியா தனது பல்லாயிரம் ஆண்டு பாரம்பரியம் கொண்ட விஞ்ஞான அறிவை வரும் ஆண்டுகளிலும் முன்னெடுத்துச் சென்றே ஆக வேண்டும். ஆர்ய பட்டா,பிரம்ம குப்தா, பாஸ்கர ஆச்சாரியா, ராமானுஜன், விஸ்வேஸ்வரைய்யா, விக்ரம் சாராபாய், அப்துல் கலாம் முதல் இன்றைய தலைமுறை இந்திய அறிவியலாளர்களின் க்னவுகள் யாவும் தொடர்ந்து முன்னகர்த்தப் பட வேண்டும். ’வானை அளப்போம் கடல் மீனை அளப்போம் சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம் ஓயுதல் செய்யோம் தலை சாயுதல் செய்யோம்’ என்று பாரதியின் வாக்குப் படியும் இந்தியா தொடர்ந்து முன்னேறிச் செல்தல் அவசியமாகும். ஒரு கென்னடியின், ஒரு ரூஸ்வெல்ட்டின் மன உறுதியும் ஆதரவுமே ஆம்ஸ்ட்ராங்கின் காலடித்தட சாதனையை சாத்தியப் படுத்தியது என்பதை எந்தவொரு இந்தியத் தலைவரும் மறந்து விடுதல் கூடாது. ஒவ்வொரு சோதனைகளும் அதன் பிருமாண்டமான எண்ணிக்கையுள்ள இளம் வயது தலைமுறையினரிடம் அளவிட முடியாத தன்னம்பிக்கையையும் உற்சாகத்தையும் தேசத்தின் மீதான நம்பிக்கையையும் ஏற்படுத்தியே வருகிறது.

ஆர்ம்ஸ்ட்ராங்கை நினைவு கூறும் அவரது குடும்பத்தினரும், நண்பர்களும் அவரது அடக்க உணர்வையே அவரது பிரதானமான ஒரு குணாதிசயமாகக் கருதுகிறார்கள். ஆம், எல்லையற்ற பிரபஞ்ச வெளியை இந்த பூமிப் பந்தின் எல்லை வரை சென்று பிரபஞ்சத்தின் ஒரு துளியை மட்டும் அருகே சென்று அவதானித்தவர் என்ற முறையில், எல்லையிலாப் பெருவெளியின் பிரும்மாண்டம் அவருள் விவரிக்க முடியாத அடக்கத்தையும் அமைதியையும் தோற்றுவித்திருக்க வேண்டும். அங்கே அந்தப் பேரண்டப் பெரு வெளியின் ஒரு விளிம்பில் அவர் பிரபஞ்சக் கோட்பாட்டின் அர்த்தத்தைக் கண்டிருக்க வேண்டும். அந்தப் பேரமைதியே அவருள் நிறைந்திருக்கின்றது. அவர் எல்லையில்லாப் பெருவெளியின் பிருமாண்டத்தை உணர்ந்த தருணத்தை அவரது நினைவுகள் நமக்குள்ளும் நிறைப்பதாகுக.