தீங்குயிரி ஒழிக்கும் மரபணு அறிவியல்

காலங்காலமாக வேளாண் உணவு உற்பத்திக்கு அச்சுறுத்தலாக விளங்குபவை தீங்குயிரிகளே. இவற்றை அழிப்பதற்கெனப் பூச்சி கொல்லிகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், அவை சம்பந்தப்பட்ட தீங்குயிரிகளை அழிப்பதோடு மட்டும் நின்றுவிடாது சுற்றுச் சூழலையும் மாசுபடுத்தி விடுகின்றன. மேலும், பூச்சிகொல்லிகளைப் பயன்படுத்தும் மனிதர்கள், அண்மையில் வாழும் ஏனைய உயிரினங்கள் முதலியனனவற்றுக்கும் இவை தீமை விளைவிக்கின்றன.

பூச்சிகொல்லிகளால் ஏற்படும் பாதிப்புகளை ஓரளவுக்கேனும் கட்டுப்படுத்தும் வகையில், ஆய்வுகள் மேற்கொண்டு வருவதன் பயனாய், இவ்வகைத் தீங்குயிரி இனங்களின், ஆண்களை மலடாக்குவதன் மூலம், அவற்றின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் முறை உருவானது.

இவ்வகையில் மலடாக்கும் உத்தி உலக நாடுகள் பலவற்றில் சுமார் அரை நூற்றாண்டுக்கும் மேலாக நடைமுறையில் உள்ளன. பயிர்கள் மற்றும் கால்நடைகளுக்குத் தீங்கு விளைவிக்கும் பூச்சிகள் ( தீங்குயிரிகள்) பெரும் அளவில் உற்பத்தி செய்யப்பட்டு, அவற்றின் ஆண் பூச்சிகள் கதிர் வீச்சின் துணையோடு மலடாக்கப்படுகின்றன. இவற்றைப் பின்னர் வெளியே பறக்கவிடுவதன் மூலம், இவை ஏனைய பெண் பூச்சிகளுடன் உறவு கொள்ளும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

இவ்வாறான உறவின் மூலம் வெளிவரும் முட்டைகள் புதிய உயிரினைத் தோற்றுவிக்கும் பலம் இழந்தவையாக இருப்பதால் இம் முறையின் மூலம் சம்பந்தப்பட்ட தீங்குயிரினம் காலப்போக்கில் முற்றிலும் அழிந்துபட வாய்ப்பு உருவாகிறது. இவை ஓரளவு வெற்றியையும் அளித்து வருகின்றன.

அமெரிக்காவிலும், பிற நாடுகள் சிலவற்றிலும் கால்நடைகளைத் தாக்கிவந்த திருகுப் புழுக்கள் (Screw Worm) இதுபோன்று, ஆண் புழுக்களை மலடாக்கியதன் வழி முற்றாக அழிக்கப்பட்டிருக்கிறது. அதே போல்,அமெரிக்காவின் மிகப்பெரும் ஏரிகளில் பரவி வந்த ஒருவகை ஒட்டுண்ணி மீனினமும் மேற்குறிப்பிட்ட உத்தியின் மூலம் இல்லாது ஒழிக்கப்பட்டுள்ளது. ஆனால், இம் முறையின் மூலம் ஆண் பூச்சிகளை மலடாக்குவதில் மிகுந்த கவனமுடன் செயல் படும் நிலை அவசியமாய் இருப்பதுடன், செயல்முறையில் சிரமங்களும் ஏற்படுகின்றன.

கதிர்வீச்சின் அளவு அதிகமாய் அமைந்துவிடில் ஆண் பூச்சிகள் ஏனைய பெண் பூச்சிகளுடன் உறவு கொள்ளும் வலிமையினை இழந்து விடுகின்றன. அதே போன்று கதிர் வீச்சின் அளவு குறைவாக இருப்பின், அவற்றின் மூலம் உருவாகும் முட்டைகளில் இருந்து புதிய உயிர்கள் தோன்றும் வாய்ப்பும் ஏற்படலாம். எனவே, இதில் மிகுந்த எச்சரிக்கையுடன், குறிப்பிட்ட அளவில் மட்டுமான கதிர்வீச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யவேண்டும். இதிலும், ஏற்கனவே மலடாக்கப்பட்ட ஆண் பூச்சிகளுக்கும், புதியனவற்றுக்கும் இடையே வேறுபாடு காண்பதிலும் சிக்கல்களை எதிர் கொள்ளும் நிலை உள்ளது. இதனால், இம்முறையின் மூலம் தீங்குயிரிகளை அழிக்கும் செயல் துரித வளர்ச்சியினை எட்டுவதில் தாமதம் ஏற்பட்டுவருகிறது

இந்த முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வந்த சமயத்தில், 1990 ஆம் ஆண்டளவில், பிரிட்டனின் ஒக்ஸ்ஃபோர்ட் நகரில், ஒக்ஸிடெக் ( Oxitec) என்னும் உயிரியல் தொழில் நுட்ப நிறுவனத்தினை நடாத்தி வந்த லூக் அல்ஃபே ( Luke Alphey ) தமது நண்பர் ஒருவர் மூலமாக இந்த மலடாக்கும் நுட்பத்தினை அறிய நேர்ந்தது. ஏற்கனவே உயிரியல் தொழில்நுட்பத் துறையில் ஈடுபட்டிருந்த அவருக்கு, இந்த மலடாக்கும் துறையில், ஏற்கனவே இருப்பதைவிடவும் சுலபமான, அதே சமயம் செலவு குறைந்த முறை ஒன்றினைக் கண்டுபிடிக்கும் ஆர்வம் எழுந்தது.

medfly-male-duel
அடுத்த சில வருடங்களில் பழங்களைப் பாதிக்கும் ஒரு வகை ஈக்களை ஒழிப்பதற்கு மரபணுக்களுடன் இணைந்த அதே இன ஈக்களை இவர் உருவாக்கியிருந்தார். இவரது செய்முறையின் விளைவால், புதிய நச்சு மரபணுக்களைப் பெற்றிருந்த ஈக்களின் உறவால் அவற்றுடன் உறவு கொண்ட ஈக்கள் மடிந்து போயின.

இதன் தொடர்ச்சியாய் பிரிட்டனில், பருத்தி உற்பத்தியினை பாதித்துவந்த ஒரு வகைப் புழுக்களை அழிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தபோது, அப்புழுக்களில் ஏற்கனவே மரபணு ஏற்றப்பட்ட ஆண் புழுக்களுக்கும், புதியனவற்றுக்கும் இடையே இனம் காண்பதற்கு உதவியாக ‘டிஎஸ் ரெட்’ ( Ds Red ) என்னும் ஒளிரும் அடையாளத்தை அவற்றின் மரபணுத் தொகுப்பினுள் செலுத்தி அவற்றினை இனம் காணும் வழியினை ஏற்படுத்தியிருந்தார். 2002 இல், அமெரிக்காவில் மேற்கொள்ளப் பட்ட தீங்குயிர் ஒழிப்பு நடவடிக்கைகளில் இந்த மரபணு ஏற்றப்பட்ட புழுக்களும் ஏனைய மலடாக்கப்பட்ட புழுக்களுடன் இடம் பெற்றிருந்தன.

2006 இல் இந்த மரபணு மாற்றத்தின் வழி தன் இனத்தையே அழிக்கும் பருத்திப் புழுக்கள் வெளி உலகிற்கு அறிமுகமாயின. இவைகளே, உலகின் முதல் மரபணு மாற்றத் தீங்குயிரி என்னும் பெயரையும் பெற்றன. இம்மரபணு மாற்றத்திற்கு உள்ளான ஆண் தீங்குயிரியும், சாதாரண பெண் தீங்குயிரியும் இணைவதன் மூலமாக உருவாகும் முட்டைகளில் இருந்து வெளிப்படும் ஆண் இனம், தன் உடலில், தனது இனத்தினை அழிக்கும் நஞ்சுடனேயே பிறக்கிறது. அது வளர்ந்து ஏனைய பெண் தீங்குயிரிகளுடன் உறவில் ஈடுபடும்போது அப்பெண் தீங்குயிர்கள் அனைத்தும் இறந்துவிடும்.

இந்தச் செயல்முறையில், முன்னைய, மலடாக்கும் செயல் முறையினை விடவும் வேகமாகக் குறிப்பிட்ட தீங்குயிரினை அழிக்கும் வாய்ப்பு இருக்கிறது. அடுத்த மூன்று வருடங்களில் இது அடைந்த வெற்றியின் காரணமாக, சென்ற வருட இறுதிவரை அமெரிக்காவில் மட்டும் சுமார் இருபது மில்லியன் மரபணு மாற்றத் தீங்குயிரிகள் உருவாக்கி வெளிவிடப்பட்டிருக்கின்றன.

டெங்குக் கொசுக்களை அழிக்கும் ஆய்வுகள்:

malarial-mosquitoesமேற்சொன்னவாறு பருத்திச் செடிகளை நாசம் செய்யும் புழுவினத்தை அழிப்பதுடன் மட்டும் நின்றுவிடாது, வறண்ட வலயப்பகுதிகளில் ஆண்டு தோறும் ஐம்பது முதல் நூறு மில்லியன் பேரைப் பலிவாங்கும் டெங்குக் காய்ச்சலின் காரணகர்த்தாவான ‘ஏடிஸ்’ கொசுக்களைக் கட்டுப்படுத்தும் ஆய்வுகளில் ஒக்ஸ்சிரெக் நிறுவனம் ஈடுபடத் தொடங்கியது.

சென்ற மார்ச் மாதம் (2012) உலகசுகாதார நிறுவனத்தினால் (WHO) வெளியிடப்பட்ட இந்தத் தகவலின்படி 1970 ஆம் வருடத்தின் முன் உலகளாவிய அளவில் சுமார் ஒன்பது நாடுகளில் மட்டும் பரவி இருந்த டெங்கு இன்று ஆபிரிக்கா, அமெரிக்கா, கிழக்கு மத்திய தரைக் கடல் நாடுகள், தென்கிழக்கு ஆசியா, மேற்கு பசுபிக் நாடுகள் உட்படச் சுமார் நூறு நாடுகளில் பரவி விட்டிருக்கிறது.

இது மட்டும் அல்லாமல், உலக சனத் தொகையில் நாற்பது விழுக்காட்டினர்- அதாவது சுமார் 2500 மில்லியன் பேர்- டெங்கின் பாதிப்புக்கு உள்ளாகும் அபாயம் இருப்பதாகவும், இதில் 1800 மில்லியன் மக்கள் ஆசிய பசுபிக் பிராந்தியத்தைச் சேர்ந்தவர்களாக இருபர் என்றும் குறிப்பிடுகிறது அந்த உலகசுகாதார நிறுவன அறிக்கை! இந்த டெங்குக் காய்ச்சலைப் பரப்பும் ‘ஏடிஸ் ஏஜிப்டி’ (Aedes Aegypti) இனக் கொசுக்கள் வழமையான பூச்சிகொல்லிகளுக்குக் கட்டுப்படுவதில்லை. எனவே இவற்றை இல்லாது ஒழிக்கப் புதுவகை உத்திகளை மேற்கொள்வது அவசியமாக இருந்தது.

இந்நிறுவனத்தின் மரபணு மாற்ற ஆண் கொசுக்கள், ஏனைய பெண் கொசுக்களுடன் கூடி உருவாகும் முட்டைகளில் இருந்து வெளிப்படும் லார்வாக்கள் (Larvae) ஏனைய லார்வாக்களைப் போன்று வளர்ச்சி அடையும் வல்லமையினைப் பெற்றிருந்தன. ஆனால், அவை கூட்டுப் புழுக்களாக (pupae) மாறும் பருவத்தில் அவற்றின் தந்தையர்க்கு ( ஆண் புழுக்களுக்கு) வழங்கப்பட்ட மரபணுக்கள் லார்வாக்களைக் கொன்றழித்துவிடும். இதன் மூலம், அப்புதிய லார்வாக்கள் தாம் வளரும் சமயத்தில், மரபணு மாற்றப்படாத கொசுக்களின் லார்வாக்களுடன் போட்டியிட்டு அவற்றுக்கான உணவின் ஒரு பகுதியினையும் தின்று தீர்த்து விடுகின்றன. இதன் வழியாகவும் அவற்றை இன அழிப்புச் செய்யும் உத்தி கடைப்பிடிக்கப்படுகிறது என்பது அல்ஃபேயின் கோட்பாடாகும்.

இம்முறை மூலம் மரபணு மாற்றப்பட்ட கொசுக்கள் 2009 ஆம் ஆண்டு, கரீபியன் தீவுக் கூட்டங்களுள் ஒன்றான கைமன் ( Cayman Islands ) தீவில் பரீட்சார்த்தமாக வெளிவிடப்பட்டிருந்தன. இங்கு உள்ள ஏடிஸ் கொசுக்களின் எண்ணிக்கையில் ஐந்தில் ஒரு பங்கு எண்ணிக்கையிலான மரபணு மாற்றக் கொசுக்களே இதன்போது வெளிவிடப்பட்டன.

எனினும், இதன் மூலம் அங்குள்ள பெண் கொசுக்களுடன் இவை கூடியதால் உருவான முட்டைகளில் சுமார் பத்து வீதமானவை இம்மரபணுக்களுடன் காணப்பட்டன. இது தொடர்ந்து செயல்படுத்தப்படும்போது, ஏடிஸ் கொசுக்கள் பெருமளவில் கட்டுப்படுத்தப்படுவதுடன், நாளைடைவில் அவை முற்றாக ஒழிக்கப்பட்டுவிடும் என்கிறார் அல்ஃபே.

சென்ற வருட இறுதி பகுதியில் இதனை விடவும் அதிக செலவில் இதே போன்ற மரபணு உத்தியுடன் கூடிய செயல் திட்டம் ஒன்று பிரேசில் நாட்டின் ஜுவாசிரோ ( Juazeiro)வில் மேற்கொள்ளப் பட்டுள்ளது.

இவற்றைவிட மற்றொரு புதிய திட்டத்தினையும், அல்ஃபேயின் குழுவினர் அறிமுகம் செய்ய உள்ளனர். ஏற்கனவே உள்ள முறையில், ஆண் கொசுக்களை இனங்கண்டு அவற்றுக்கு மரபணு மாற்றத்தினை ஏற்படுத்துவதோடு, பெண் கொசுக்களின் செயல்பாட்டினைக் கட்டுப்படுத்தும் வகையிலும் மரபணு மாற்று உத்தியினை உபயோகிக்க உள்ளனர்.

பெண் கொசுக்களே மனிதர்களின் இரத்தத்தை உறிஞ்சுவதன்மூலம் தாம் வாழ்வதோடு மட்டுமல்லாமல் மனிதர்களுக்கு டெங்கினையும் பரிசாக அளித்துவிட்டுச் செல்கின்றன.இவை பறக்கும் ஆற்றலை இழந்துவிட்டால், இரத்த உறிஞ்சலும், அதன் வழியாக டெங்குப் பரவலும் இடம் பெறாது தவிர்க்கப்பட்டு விடும். அதோடு, ஆண் பெண் என்னும் வேறுபாடின்றி எல்லாக் கொசுக்களும் ஏதோ ஒரு வகையில் மரபணுமாற்ற உத்தியின் வழி தமது சந்ததிகளை அழிப்பதில் முனைந்து செயல்படும் நிலையை உருவாக்கிவிட முடியும். இந்த முறைமை, ஏடிஸ் கொசுக்களை ஒழிப்பதில் துரிதமான வெற்றியினை அளிக்கும் என நம்புகிறார்கள்.

பிராணித் தீங்குயிரி ஒழிப்பின் ஆரம்பம்:

இத்தகைய தீங்குயிரிகளில் பூச்சி இனங்களை அழிப்பதில் வெற்றி கண்டது போன்று, தீங்கு விளைவிக்கும் விலங்குகளை அழிப்பதில் இன்னும் சில சிரமங்களை எதிர்கொள்ள நேரிடுகிறது. தவளைகள், எலிகள், முயல்கள் எனபனவும் வேளாண் துறையில் பல இழப்புகளுக்குக் காரணமாக இருக்கின்றன. இவற்றைத் தீங்குயிரிகள் என்று முற்றிலுமாக அழித்துவிட முடியாது.

அல்ஃபேயும் அவரது குழுவினரும் பூச்சி இனங்களில் தீங்குயிரி வகைகளை அழிப்பதில் முனைப்புக்காட்டிய காலப்பகுதியில், அவுஸ்திரேலியாவின் தேசிய அறிவியல் நிறுவனமான ‘சிஸிரோவின் ’ ( CSIRO ), சூழலியல் ஆய்வாளரான ரொனால்ட் திரேஷர் ( Ronald Thresher ), இந்தத் தன்னின அழிப்பு முறையினை ஏனைய விலங்குகளால் ஏற்படும் பாதிப்பினை நீக்கவும் பயன்படுத்த முடியும் என்னும் கருத்தினை வெளியிட்டிருந்தார்.

அவர் அதனுடன் நின்றுவிடாது, ‘ஸீப்ரா மீன்’ ( Zebra Fish )களில் தனது பரிசோதனை முயற்சிகளை மேற்கொள்ளவும் ஆரம்பித்தார். தென் அவுஸ்திரேலியாவின் முர்ரே-டார்லிங் ( Murray-Darling) நதிகளின் முகத்துவாரத்தை ஒட்டிய பகுதிகளில் மண் அரிப்பினையும்,அங்கு வாழும் மீனினங்களுக்கு அச்சுறுத்தலாயும் விளங்கும் ‘கார்ப்’ ( Carp ) மீன்களை இல்லாது ஒழிக்கும் முயற்சியின் முதற்படியாக அவர் இந்த ஆய்வில் ஈடுபட்டிருந்தார்.

இம்மீனினத்தில் பெண் இனங்களைத் தோற்றுவிக்கும் ’அரோமற்றேஸ்’ ( Aromatase ) என்னும் நொதிகளை ( enzymes) நீக்கிவிடுவதன் மூலம், தொடர்ந்து ஆண் மீன்களே உற்பத்தியாகும் முறையினை இவர் கண்டுபிடித்துள்ளார். இவரது மாதிரிகளின் (Models ) மூலம் இவர் பெற்ற தகவல்களின் அடிப்படையில், அப்பகுதியில் உள்ள ‘கார்ப்’ மீனினத்தின் ஐந்து விழுக்காடு ( 5%) மீன்களுக்குப் பெண் வாரிசுகள் உருவாகாத வகையில் மரபணு மாற்றத்தினை ஏற்படுத்துவதன் மூலமாக 2030 ஆம் ஆண்டளவில் அந்த மீனினத்தையே முற்றாக அழித்துவிட முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது ‘மாதிரி’களின்படி, கரும்புத் தவளைகள் ( Cane Toads ), எலிகள் போன்றவற்றுக்கும் இது போன்ற மரபணு ரீதியிலான மாற்றங்களை ஏற்படுத்துவதன் வழியாக அவற்றின் பெருக்கத்தையும் கட்டுப்படுத்த இயலும் எனத் தெரிய வந்துள்ளது.

தீங்குயிரி இனங்களை அழிக்கும் இவ்வாறான ஆய்வுகள் ஒரு புறம் நடைபெற்று வந்தாலும், மரபணு மாற்றத்தினை எதிர்க்கும் ஆய்வாளர்கள் இவற்றுக்குத் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்துவதும் தொடர்ந்த வண்ணம் உள்ளது.

எகோ நெக்ஸஸ் (Eco Nexus) சைச் சேர்ந்த ரிகார்டா ஸ்ரெய்ன்பீரீச்சர் ( Ricarda Steinbrecher ), “இது போன்ற மரபணு மாற்று உத்திகள் நாம் எதிர்பார்க்கும் மாறுதல்களை மட்டும் அல்லாது நாம் எதிர்பார்க்காதனவற்றையும் ஏற்படுத்த வல்லவை “ என எச்சரித்துள்ளார். இவை ஏனைய உயிரினங்களில் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் வாய்ப்புகள் உள்ளதாக அவர் கருதுகிறார்.

ஹோசிமின் சிற்றியில் உள்ள ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஆய்வாளரான ‘ஜெரெமி ஃபரார்’ ( Jeremy Faraar ) “இவ்வாறான மரபணு மாற்றச் செயல் முறைகளால் உண்டாகும் நன்மைகளையும், அவற்றினால் விளையும் தீமைகளையும் ஒப்பீடு செய்து அவற்றில் நன்மைகளே அதிகம் ஏற்படும் எனத் தெரிந்தால் இவை தொடரப்படுவது அவசியம். ஏனெனில் டெங்கு போன்ற விரைந்து பரவும் நோய்களை அழிப்பதற்கு இம் மரபணு உத்திகளே வெற்றிபெற உதவுவதை ஏற்றுக் கொண்டே ஆகவேண்டும்,” எனக் கருத்துரைத்துள்ளார்.

எனினும் மாற்று மரபணு உத்தியினை மக்கள் ஏற்றுக் கொள்வதில் காணப்படும் தயக்க மனப்பாங்கு அதிகமாகவே உள்ளது. அதிலும் குறிப்பாக இதனை எதிர்ப்பதில் ஐரோப்பிய நாடுகள் முன்னணியில் உள்ளதை மறுப்பதற்கில்லை.

இம்முறைமையை முதலில் உருவாக்கியவரான அல்ஃபே, “ தொடரும் வெற்றிகள் மக்களது மனதைக் காலப்போக்கில் மாற்றும் திறன் கொண்டவை. அப்போது மரபணு மாற்றங்களின் மீது மக்களுக்கு இருந்துவரும் சந்தேகமும், பயமும் நீங்க வழி ஏற்படும்” என்கிறார் நம்பிக்கையுடன். காலப் போக்கில் சுற்றுச் சூழலைப் பாதிக்கும் ஏனைய பூச்சிகொல்லி மருந்துகளுக்கு பதிலாக, இது போன்ற மாற்று உத்திகள் பயன்படுத்தப்படுவதன் வழி இம் மருந்துகளால் எமது சூழலில் உருவாகும் பாதிப்புகளில் இருந்தும் விடுபடுவதோடு நோய்களையும் விரட்டுவதில் வெற்றி காணும் நிலை உருவாகும்.

கட்டுரை ஆக்கத்திற்கு ஆதாரமாயிருந்தவை:-

1.W.H.O website March 2012.

2.Science Vol 287, P 2474.

3.New Scientist 22 March 2003.