தரம்பால் எழுதிய ’காந்தியை அறிதல்’

தாரக் நாத் தாஸ், அமெரிக்காவிலிருந்து வெளிவந்த அவருடைய நாளிதழான  ‘ப்ரீ இந்துஸ்தான்’ இதழில்  1908 ஆம் ஆண்டில் எழுதிய உணர்ச்சிபூர்வமான கட்டுரைகளுக்கு எதிர்வினையாற்றும் விதமாக லியவ் டால்ஸ்டொய் ‘இந்துவுக்கு எழுதும் ஒரு கடிதம்’ ( a letter to a hindu) எனும் விரிவான பதில் கட்டுரையை எழுதினார். இந்தியாவின் ஆன்ம பலத்தை  எடுத்துக்காட்டும் விதமாக பல இந்திய ஆன்மீக இலக்கியங்களை ஆதாரமாகக் கொண்ட அந்தக் கடிதத்தைக் கண்ட காந்தி அதை தென்னாஃப்ரிக்காவிலும் இந்தியாவிலும் மறுபிரசுரம் செய்ய டால்ஸ்டொயிடம் அனுமதி வேண்டிக் கடிதம் எழுதுகிறார்.

இரு மிக முக்கியமான சிகரங்கள், ஒருவர் தன் மகத்தான வாழ்வின் இறுதி அத்தியாயத்தை எழுதிக்கொண்டிருந்தவர், மற்றொருவர் இந்தியாவின் சரித்திரத்தையும் அதன் மூலம் உலக சரித்திரத்தையும் மாற்றி எழுதப் போகிறோம் எனும் பிரக்ஞை ஏதும் இல்லாத மத்திய வயதுக்காரர்.

gandhi

அந்த கடிதப் பரிமாற்றங்களில் பிற்காலத்தில் விஸ்வரூபமெடுக்கப் போகும் காந்தியின் ஆளுமையின் மிக முக்கியமான அம்சத்தைக் கண்டுகொள்ள முடியும். டால்ஸ்டொயுக்கு மறுபிறப்பு சார்ந்த நம்பிக்கை எதுவும் கிடையாது. அதைப் பறைசாற்றும் விதமாக எழுதப்பட்ட பகுதியை மட்டும் தங்கள் பதிப்பில் நீக்கிக்கொள்ள அனுமதி வேண்டும் என்று எழுதுகிறார் காந்தி. அதற்கு அவர் சுட்டும் காரணம் சுவாரசியமானது “மறுபிறப்பு என்பது இந்தியா மற்றும் சீனாவில் வாழும் கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கை சார்ந்தது. பலரும் அதை தர்க்க ரீதியாக ஏற்பதைக் காட்டிலும் அனுபவ பூர்வமான ஒன்றாக எண்ணுகிறார்கள் .வாழ்க்கையின் பல மர்மங்களை அது கட்டவிழ்க்கிறது. ட்ரான்ஸ்வால் சிறைகளில் வாடிவரும் பலருக்கும் இந்த நம்பிக்கையே ஆசுவாசத்தை அளிக்கிறது. தங்களிடம் இந்த கோட்பாட்டை உண்மை என்று நிறுவுவதற்காக நான் எனது எதிர்ப்பைத் தெரிவிக்கவில்லை.நான் கோருவது நீங்கள் உங்களது கடிதத்தில் உங்கள் வாசகர்கள் தவிர்க்க வேண்டிய நம்பிக்கைகளிலிருந்து “மறுபிறப்பு” எனும் வார்த்தையை நீக்கிவிட முடியுமா என்பதே.”

இந்த வரியை வாசித்தவுடன் காந்தியை எப்படி அணுகவேண்டும் என்பது சட்டென்று திறந்துகொண்டது. இது அவர் இந்திய சுதந்திரப் போராட்ட களத்தில் ஈடுபடுவதற்கு வெகுகாலம் முன்னர் எழுதப்பட்டது. ஆம், காந்தி உண்மையில் ஒரு மகத்தான நடைமுறை லட்சியவாதிதான். அவருக்கு மறுபிறப்பு சார்ந்த தனது நம்பிக்கை உண்மையா பொய்யா என்பது இரண்டாம்பட்சம் தான், அந்த நம்பிக்கை மனிதர்களுக்குள் நிகழ்த்தும் மாற்றமும், அவர்களுக்கு அதனால் ஏற்படும் செயலூக்கமும்தான் முக்கியம். நடைமுறை வாழ்வில் பயனுள்ளவற்றை தனது விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டு அவர் சுவீகரித்து ஏற்றுக்கொண்டார். அனைத்தையுமே தன் அனுபவ வட்டத்தில் கொணர்ந்து, அதன் நடைமுறை பயன்பாட்டைக் கொண்டே மதிப்பிட்டார். இந்தப் பின்னணியில் காந்தியை அணுகும் போது, காந்தியின் ரகுபதி ராகவ ராஜாராம் முதல் வர்ணாசிரம நிலைபாடுகள் வரை அனைத்தையும் சற்று கூடுதல் தெளிவோடு புரிந்து கொள்ள முடியும். மகத்தான கனவுகளைக் கண்டாலும், அதைநோக்கி ஒவ்வொரு அடியாகத்தான் பயணிக்க முடியும் எனும் தெளிவு அவருக்கு இருந்தது.

காந்தியினுடைய இந்த அணுகுமுறையை மற்றுமொரு விரிவான கோணத்தில் உள்வாங்கிக்கொள்ள தரம்பால் அவருடைய நூலில் சுட்டிக்காட்டியுள்ள இந்த நிகழ்வு உதவக்கூடும். காந்தி தனக்கு நெருக்கமாக உள்ளவர்களிடத்திலும், தானுள்ள இடத்திலும் தன்னால் நடந்து செல்லக்கூடிய அந்த மிகக் குறுகிய வட்டத்திலும் தன்னால் நிகழ்த்தக்கூடிய ஆக்கப்பூர்வமான தாக்கமே தனக்கு நிறைவளிப்பதாக நம்பிக்கை தெரிவித்திருந்தார்.. அவருக்கு வேகமே வாழ்வின் நோக்கமாக இருக்கவில்லை.. ஒரு வாசகர் காந்தியின் இந்தக் கருத்துக்கும், அவரது ரயில் பயணங்களுக்கும் இடையில் முரண்பாடு இருக்கிறது என்று கேலி செய்து அவருக்கு ஒரு கடிதம் எழுதினார். அதற்கு காந்தி இவ்வாறு பதிலளித்தார் -,

“என்னுடைய லட்சியத்திற்கும் எனக்கும் உள்ள இடைவெளியை வாசகர் உணரவேண்டும் என்பதற்காகவே அது குறித்து எழுதினேன். என் இலட்சியத்தை நோக்கிச் செல்லும் பாதையில் நான் எதிர்கொள்ளும் தோல்விகளையும் பலவீனங்களையும் உலகறிய வெளிப்படுத்திக் கொள்கிறேன். இதன்மூலம் போலித்தனங்களிலிருந்து நான் என்னைக் காப்பாற்றிக் கொள்கிறேன். அதுமட்டுமில்லை, தோல்வியால் ஏற்படும் அவமானம் கருதியாவது இலட்சியத்தை அடைய நான் தொடர்ந்து முயற்சிப்பேன்.’ என்று எழுதினார் காந்தி..

இதுகுறித்து இன்னும் தெளிவுபடுத்தும் வகையில், ‘நான் ஒரு நடைமுறைவாதியாக இருப்பதாகச் சொல்லிக் கொள்கிறேன். ஆனால் முழுக்க முழுக்க நான் சொன்னதைச் செய்ய வேண்டும் என்ற முட்டாள்தனமான வெளித்தோற்றத்திற்காக ரயில் பயணத்தையோ மோட்டார் பயணத்தையோ தவிர்ப்பதில் எனக்கு நம்பிக்கையில்லை” என்றும் பதிலளித்தார்.

காந்தியின் இந்த வரிகளை வாசித்தவுடன், நம் தெருவோரம் குவிக்கப்படும் குப்பைகளைப் பற்றி அக்கறை இல்லாத நாம் இணையத்தில் அமர்ந்து சர்வதேச சமாதானம் பற்றிப் பேசிக்கொண்டு இருக்கிறோம் எனும் அபத்தம் உண்மையில் முகத்தில் அறைகிறது. பெரும்பாலான இந்தியர்கள் காந்தியை தேசப் பிதாவாக்கி, அவர் மீது பல கட்டுக்கதைகளை கட்டி, நடைமுறைத் தளத்திற்குச் சம்பந்தமில்லாத வேறு ஒரு வெற்று அலங்கார பீடத்தில் ஏற்றி தூரத்திலிருந்து வணங்கிக்கொண்டிருக்கிறார்கள் அல்லது சர்வ சாதரணமாக மேடை பேச்சாளர்கள் முழங்கும் வசைகளை கேட்டுவிட்டு அதை பரிசீலனை இன்றி ஏற்றுக்கொண்டு திருப்பிச் சொல்கிறார்கள். ஒருவகையில் இந்த இரண்டு போக்குகளும் நம் தேசிய குணமோ என்று கூட எனக்குத் தோன்றுவதுண்டு. இந்த இரண்டு போக்குகளைத் தாண்டி அவரை நாம் அணுகும் தொலைவில் நமக்குக் காட்டும் நூல்கள் என சிலவற்றையே குறிப்பிட முடியும். அவ்வகையில் மிக முக்கியமானவர் தரம்பால்

சுதந்திர இந்தியாவின் மிக முக்கியமான வரலாற்றாய்வாளர், காந்தியர். பிரிட்டிஷ் ஆவணக் குறிப்புகளை ஆராய்ந்து இவர் எழுதிய ‘அழகிய விருட்சம்’ எனும் நூல் ஆங்கிலேய வல்லாதிக்கத்திற்கு முன்பான காலகட்டத்தில் நிலவிய இந்தியக் கல்வி முறையை ஆய்வு செய்து முன்பு நம்மால் அறியப்படாத  பல முக்கியமான தகவல்களை முன்வைக்கின்றது. அதேபோல் நில நிர்வாக முறைகளை ஆரய்ந்து ‘மதராஸ் பஞ்சாயத்து அமைப்பு’ எனும் நூலை எழுதினார் தரம்பால். ‘பதினெட்டாம் நூற்றாண்டில் இந்திய விஞ்ஞானமும் தொழில்நுட்பமும்’, ‘ஒத்துழையாமை இயக்கமும் இந்திய மரபும்,; போன்ற முக்கியமான ஆய்வு நூல்களையும் தரம்பால் பதிப்பித்துள்ளார்.

காந்தியை அறிதல் - தரம்பால்

‘காந்தியை அறிதல்’ எனும் தரம்பாலின் புத்தகத்தில் ஏழு கட்டுரைகள் உள்ளன. எப்படிப்பட்ட சுயராஜ்ஜியம் காந்தியின் லட்சியமாக இருந்தது? தொழில்நுட்பம் குறித்த எத்தகைய நம்பிக்கைகளும் எதிர்பார்ப்புகளும் காந்தியின் சிந்தனையின் அடிப்படையாக இருந்தன? காந்திய லட்சியம் எப்படிப்பட்டது? காந்தியின் வாழ்வு நமக்கு உணர்த்தும் படிப்பினைகள் எத்தகையவையாக இருக்கின்றன? எதிர்காலத்தில் காந்தியம் எவ்வகைப்பட்ட வளர்ச்சி காண்பதாக இருக்க முடியும்? இந்நூலில் காந்தியம் குறித்த பல முக்கியமான, அடிப்படை கேள்விகளை விவாதிக்கிறார் தரம்பால்.

1922 ஆம் ஆண்டு பிறந்த தரம்பால் தன்னுடைய எட்டாவது வயதில் காந்தியை முதன் முறையாக சந்தித்திருக்க கூடும் என்று கூறும் தரம்பால், பகத் சிங்கின் தூக்குதண்டனைக்கு பின்பான காலத்தில் மக்களிடம் நிலவிய எழுச்சியே தன்னுடைய மனதில் பதிந்துள்ள சுதந்திர போராட்டம் சார்ந்த முதல் நினைவு என்கிறார். அவர் தன்னை காந்திய சகாப்தத்தின் குழந்தை என்று அடையாளப்படுத்திக் கொள்வதில் தவறில்லை.

ஸ்ரீ தரம்பால்

இந்த நூலை வாசிக்கும்போது காந்தியின் சில தனித்தன்மைகளை நாம் அறிய முடிகிறது.  1915 முதல் 1948 வரை 33 ஆண்டுகள். இதில், சுமார் 6 ஆண்டுகளைச் சிறைகளிலும், 14 ஆண்டுகளை பயணத்திலும் கழித்திருக்கிறார் காந்தி. இந்த பதினான்கு ஆண்டு பயணத்தில் இந்தியாவில் உள்ள இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களுக்குச் சென்றிருக்கிறார் காந்தி. ‘பல லட்சக்கணக்கான என் மக்களை அறிந்துகொள்ள எனக்கு 24 மணிநேரம்தான் உண்டு, அது அத்தனையும் நான்  அவர்களுடன் இருக்கவே பயன்பட வேண்டும்.’- என்றார் அவர். தன் மக்களின் இதயத்தில் உள்ள சத்தியமே காந்தியின் கடவுள். அந்தக் கடவுள் சேவையே தன் மோட்ச சாதனம் என்று நம்பினார் காந்தி. இதுதான் காந்தியின் ஆன்மீகமாக இருந்தது.

அமைப்பிற்கும் தனிமனிதனுக்கும் இடையிலான உறவு எப்போதுமே சிக்கலானது. அரசாங்க அமைப்புகள்,  தொழிற்சங்கங்கள், கட்சிகள் முதல் சாதாரண குடியிருப்போர் நலசங்கம் வரை அனைத்துமே அமைப்பின் பொது விதிகளுக்கு கட்டுப்படுவதையே விரும்புகின்றன. தனிமனிதர்களின் தனிப்பட்ட அற நிலைப்பாடுகளுக்கு அங்கு இடமிருப்பதில்லை. அவர்கள் சார்ந்த அமைப்புகள் மிகப்பெரிய அநீதிகளை இழைக்கும் போது கூட அவர்கள் அது சார்ந்த தங்கள் அடையாளங்களை இழக்க விரும்புவதில்லை. காந்தி அமைப்புகளுக்கு உள்ளிருந்த தனிமனிதர். அவர் நம்பிய வாய்மைக்குக் குறுக்காக எந்த அமைப்பையுமே அவர் நிறுத்தியதில்லை. காங்கிரசிலிருந்து வெளியேற முடிந்தது, காந்தி சேவா சங்கம் தொடங்க முடிந்தது, பின்னர் அதையும் அவரால் முடக்க முடிந்தது. அவருக்குள் ஒரு அராஜகவாதி எப்போதும் துள்ளிக்கொண்டே இருந்தார்.

1938 ஆம் ஆண்டில் தன் பத்திரிக்கைகாக அவர் எழுதி அவரது நலம்விரும்பிகள் என்று சொல்லிக்கொண்ட சிலரின் முயற்சியால் வெளிவராத கடிதம் ஒன்றை ஆவணப்படுத்துகிறார் தரம்பால். அதில் தன் பிரம்மச்சரிய விரதத்தில் ஏற்பட்ட சறுக்கலைப் பற்றி வெளிப்படையாகப் பதிவு செய்த காந்தி, தனது ஆற்றல் மீது சந்தேகம் கொள்கிறார். தனக்கு இந்த சோதனையைத் தாண்டி வர பலம் தர வேண்டி அனைவரையும் பிரார்த்திக்கச் சொல்கிறார். உயிராற்றலைக் கட்டுப்படுத்த பிரம்மச்சரியத்தை முறையான சாதனமாக பயன்படுத்தும் பழக்கம் இந்திய மரபில் நீண்ட நெடுங்காலமாகவே இருந்து வருவது தான். தன் ஆற்றல்களுக்கான ஊற்று பிரம்மச்சரியத்தில் உள்ளதாக காந்தியும்  ஆழமாக நம்பினார். இந்த நம்பிக்கையையும் அதை உறுதிப்படுத்த அவர் மேற்கொண்ட சோதனைகளையும் இந்த பின்புலத்தில் தான் புரிந்துகொள்ள முடியும்.  காந்தி ஒருபோதும் தன் பலவீனங்களை மறைத்ததில்லை. பொது வாழ்விலும் சரி தனி வாழ்விலும் சரி அவருக்கு அந்தரங்கம் என்றும் ரகசியம் என்றும் எதுவுமே இருந்தது இல்லை. ‘எனது வாழ்க்கையே எனது செய்தி’ என அவரால் சொல்ல முடிந்தது என்பது மட்டுமல்ல, தன் வாழ்க்கையை அவர் அனைவரும் அறிய பொதுவில் வைக்கும் துணிச்சலும் அவருக்கு இருந்தது.

அறிவியல் கோட்பாடுகளும், தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளும் மேற்கத்தியசமூக அமைப்பில் தான் சாத்தியம் எனும் நம்பிக்கை உண்மையில் ஒரு மேற்கத்திய கட்டுக்கதை தான் என்கிறார் தரம்பால். இந்த கட்டுக்கதையை உண்மையென நம்பும் ஒரு தரப்பும் , மேற்கிலிருந்து வரும் அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் விஷம் என புறக்கணிக்கும் மற்றொரு தரப்பும் சமமாகவே மேற்கத்திய சமூக அமைப்பின்  மேட்டிமை எனும் கட்டுக்கதையால் பாதிப்படைந்ததாக தரம்பால் அடையாளப் படுத்துகிறார். ‘இந்த மாயையின் இயல்பை நன்கு புரிந்துகொண்டு, அதனை எப்படி எதிர்கொள்வது என்பதையும் அதற்கான திட்டத்தையும் கொண்டிருந்த ஒரே இந்தியராக மகாத்மா காந்தி மட்டுமே இருந்தார்.’ என்கிறார் தரம்பால்.

Looking through a microscope at Sewagram Ashram, 1939

காந்தியிடம் நிலவிய மிக முக்கியமான குணத்தையும் கோடிட்டுக் காட்டுகிறார் தரம்பால். தொடக்கத்தில் நாம் அனைவரும் மிகத் தீவிரமான நிலைபாடுகளுடன் களம் கண்டு பின்னர் காலப்போக்கில் சமரசங்கள் மூலம் மிதவாத நிலைபாட்டிற்கு வந்து சேருகிறோம். ஆனால் காந்தியிடம் இது தலைகீழாக காணப்பட்டது என்கிறார் தரம்பால். இந்திய சுயராஜ்ஜியம் என்பதே தன் குறிக்கோள் எனப் பகிரங்கமாக அறிவித்து அதைநோக்கிப் படிப்படியாக நகர்ந்து அந்த இலக்கை அடைந்தார். சில இடைக்கால சோர்வு நிலைகளைத் தவிர்த்து  இறுதிவரை அதே தீவிரத்துடன், சொல்லப்போனால் ஆரம்பகாலத்தை காட்டிலும் அதிக தீவிரத்துடனும்  உறுதியுடனும் முன்நகர்ந்தார்.

காந்தியின் சமூகப் புரிதல்களை அவர் விளக்கிய உருவகங்கள் மூலம் புரிந்துகொள்ள முடியும். காந்தி சுயராஜ்ஜியத்தை பிரம்மாண்டமான ஆல மரத்துடன் ஒப்பிட்டார். அதன் ஒவ்வொரு விழுதும் அதற்கு வேர் போல செயல்பட்டு மரத்தைப் போஷிக்கிறது. எந்த வேருக்கு நீர் ஊற்றினாலும் அது மரத்தைப் போஷிப்பதற்காகவே எனும் புரிதல் அவருக்கு இருந்தது. எந்த வேருக்கு நீர் ஊற்றப்பட வேண்டும் என்பதைக் காலமும் சூழலும் முடிவு செய்யும் என்றார். ஆகவே அரிஜன மக்கள் இயக்கமும், காதி இயக்கமும், ஆங்கிலேய அரசாங்கத்திற்கு எதிரான ஒத்துழையாமை இயக்கத்திலிருந்து வேறானவை அல்ல எனும் புரிதல் அவருக்கு இருந்தது. ‘மதம் பல கிளைகளைக் கொண்ட ஒரு மரமாகும். கிளைகள் என்ற முறையில் பல மதங்கள் இருப்பதாக நீங்கள் சொல்லக்கூடும். மரமாக இருக்கும் மதம் என்னமோ ஒன்று தான்,’ என்றார் காந்தி. சமூகத்திற்கு அவரளிக்கும் ஒரு உருவகம் தான் பேராழி வட்டம் (Oceanic Circle) என்பதாகும். மேற்கத்திய மனம் பெரும்பாலும் எதையும் ஒரு கீழ் மேலான கூம்பு பிரமிடாகவே வகைப்படுத்துகிறது. அடித்தளத்தில் செயல்திறனற்ற பெரும்பான்மையும் உச்சியில் குவிக்கப்பட்ட அதிகாரமும் அதீத நுகர்வும் கொண்ட சிறுபான்மையுமாக அமைக்கப்பட்ட கட்டுமானங்கள் அவை. காந்தி இந்த அமைப்பை ஏற்றுக்கொள்ளவில்லை.

“இந்த அமைப்பில் எண்ணற்ற கிராமங்கள் இருக்கும். அவை விரிந்த படி இருக்கும் வட்டங்களாக இருக்குமேயன்றி ஒன்றின் மேல் ஒன்று ஏறுபவையாக இருக்காது. வாழ்க்கை என்பது அடிப்பகுதியால் தாங்கிப்பிடிக்கப்படும் உச்சிக் கூம்பு கொண்ட பிரமிடாக இருக்காது. ஆனால் அது ஒரு பேராழி வட்டமாக அமையும். அதன் மையமாக என்றென்றும் தனிமனிதன் இருப்பான். அவன் அவனைச் சுற்றி அமையும் கிராமத்துக்காகவும் ஒவ்வொரு கிராமமும் அக்கிராமங்களை சுற்றி அமையும் பிற கிராமங்களுக்காகவும் அமையும். இவ்வாறாக அனைத்தும் ஓருயிராக ஆணவத்தால் ஏற்படும் ஆக்கிரமிப்பு இல்லாததாக தன்னடக்கத்துடன் பேராழி வட்டத்தின் மகோன்னதத்தின் பங்காளிகளாக, அதன் இணைபிரியாத உறுப்புகளாக அமையும்”(நன்றி- அரவிந்தன் நீலகண்டன்).

teaching

முப்பதுகளின் மத்தியில் காங்கிரசிலிருந்து விலகும் காந்தி, காந்தி சேவா சங்கத்தை துவங்குகிறார். தன் ஆதரவு காங்கிரசுக்கு எப்போதும் உண்டு என்று காந்தி சொன்னாலும், அவரது நடவடிக்கை ஆங்கிலேய தரப்பாலும் , இந்திய தரப்பாலும் சந்தேகத்துடனே பார்க்கப்பட்டது. காந்தி அடிமட்ட அளவில் சுதந்திர இயக்கத்தின் செயல்பாடுகளைக் கொண்டு சேர்த்து, விவசாயிகளையும் தன்னோடு சேர்த்துக் கொண்டு பெரும்பலத்தோடு திரும்பி வருவார் என்று ஆங்கிலேய அரசாங்கம் அஞ்சியது. மிகுந்த நேர்த்தியுடன் செயல்பட்ட காந்தி சேவா சங்கம் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது நேரு, நேதாஜி போன்றவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. அதன்காரணமாக சங்கத்தின் நடவடிக்கைகள் முடக்கிவைக்கப் பட்டன என்கிறார் தரம்பால். காந்தியின் ஆசிரமங்கள் அவரது லட்சியக் கனவுகளின் முன்மாதிரி சமூக அமைப்புகள் என்ற நம்பிக்கை தவறானது என்கிறார் தரம்பால். உண்மையில் தளவாடங்கள், உடற்பயிற்சி போன்றவை வேறாக இருந்தாலும் நோக்கம் மற்றும் நடைமுறை ஒழுக்கங்கள் காரணமாக அவை கட்டுப்பாடுள்ள ராணுவப் பயிற்சி மையங்களைபோல் செயல்பட்டு தேசமெங்கும் காந்தியின் செய்தியைக் கொண்டு சேர்க்கும் இணைப்புச் சங்கிலியின் கண்ணிகளாய் பணியாற்றின என்கிறார் அவர்.

நவீனத் தொழில்நுட்பங்கள் மீதான அவரது அவநம்பிக்கைக்கு முக்கியமான காரணம் அவை கிராமங்களை மொத்தமாக விழுங்கிவிடும் எனும் அவரது பயம் தான். காங்கிரஸ் உறுப்பினர்கள் கூட நான்கில் மூன்று பங்கு கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்று காந்தி எண்ணினார். நகரவாசிகள் கிராமத்தினரை தீண்டத்தகாதவர்களாக நடத்துவதாக கருதினார். நவீன இயந்திரங்களும், தொழில்மயமாக்கலும் இந்தியாவின் கிராமப்புறங்களில் புழக்கத்தில் இருந்த நூற்றிற்கும் அதிகமான கைத்தொழில்களை அழித்துவிட்டதை கண்கூடாக கண்டுணர்ந்தார். காங்கிரஸ் நவீன தொழில்மயமாக்கத்தை நோக்கி திரும்பிய போது அதை காந்தி மறுக்கவில்லை. நவீன தொழில்களுக்கு இணையாக கிராமப்புறத் தொழில்களும் இருக்க வேண்டும் என்பதே அவரது கனவாக இருந்தது. இந்த நவீன தொழில்மயமாக்கல் கிராமத்துத் தொழில்களை அழித்துவருகின்றது எனும் நிலையை மாற்றி இரண்டையும் சார்புத்தன்மை கொண்டதாக ஆக்கி, நவீன தொழில்களைக் கிராமியத் தொழில்களுக்கு உறுதுணையாக மாற்றமுடியும் என்றே எண்ணினார்.

தன் கனவுக் கிராமத்திற்கு ‘அவசியமான பொருட்களை தன்னால் உருவாக்க முடிந்தால் மற்ற பொருட்கள் காலப்போக்கில் பின்னால் வந்து சேரும். ஆனால் அவசியமானவற்றை நான் விட்டுவிட்டால் எல்லாவற்றையுமே நான் விட்டுவிடுவேன்’ என்று எழுதினார் காந்தி. சமூகத்தைச் சீரழிக்காத  மாற்றங்களை காந்தி ஒருபோதும் எதிர்த்ததில்லை என்கிறார் தரம்பால். காந்தி இந்தியாவினுடைய பிரச்சனைகளை உலகினுடைய பிரச்சனைகளில் இருந்து பிரித்துப் பார்க்கவில்லை. வட்டமேஜை மாநாட்டுக்காக அவர் இங்கிலாந்து சென்றபோது அங்கு மிகக் கேவலமான சூழலில் அடிமைகளைப் போல் வாழ்ந்து கொண்டிருந்த ஒரு மக்கள் கூட்டத்தின் வாழ்வியல் போராட்டங்களை புரிந்துகொண்டார்.  அவருடைய பாரிஸ்டர் கால லண்டன் வாழ்கையும், குறுகிய கால வட்டமேஜை மாநாட்டு லண்டன் வாசமும்,   மேற்கத்திய நாகரீகம் அவர்களுடைய மக்களையே இப்படி அடிமைப்படுத்தித்தான் வைத்திருக்கிறது எனும் புரிதலை அவருக்கு உறுதிப்படுத்திருக்க வேண்டும் என்கிறார் தரம்பால்.

பசுவதை மற்றும் இந்து இஸ்லாமியர் நல்லிணக்கம் குறித்தான காந்தியின் பார்வை பற்றிய பகுதி மிக முக்கியமானது. உண்மையில் இஸ்லாமியர்களின் பிரதான உணவாக பசு ஒருபோதும் இருந்ததில்லை. தங்களை தற்காத்துக் கொள்ள ஆங்கிலேய அரசாங்கம் ஏற்படுத்திய கற்பிதம் தான் அந்தப் பார்வை என வாதிடுகிறார் தரம்பால். ஏனெனில் இந்தியாவில் 1880 களிலும் மற்றும் அதற்கு முந்தைய காலகட்டத்தில் பசுவதைக்கு எதிராகக் கிளர்ந்த போராட்டங்கள் அனைத்துமே ஆங்கிலேயர்களுக்கு எதிராக எழுந்தவைதான். காந்தி இதைத் தெளிவாகவே புரிந்துகொண்டார், ஒருநாளைக்கு ஆங்கிலேய அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் தேவைகளுக்காக 30,000 த்திற்கும் அதிகமான பசுக்கள் கொல்லப்படுகின்றன. அதைத் தடுத்து நிறுத்தாமல் இஸ்லாமிய சகோதரர்களுக்கு எதிராகக் குரலுயர்த்துவதற்கு உரிமையில்லை. ‘அரசாங்கத்தின் மீது பிரேமை கொண்டவர்களாக இருந்துக்கொண்டே நாம் பசுக்களைப் பாதுகாக்க முடியாது,’ என்றார்.

காந்தியினுடைய சமூக வாழ்வை நான்கு பகுதிகளாக வகுக்கிறார் தரம்பால். முதலாம் பகுதி- இங்கிலாந்திலும் தென்னாஃப்ரிக்காவிலும் அவர் கழித்த 1889-1914 வரையிலான ஆண்டுகள். அப்போது உலகம் எவ்வாறு இயங்குகிறது என்பதைப் புரிந்துகொண்டு அதன் சவால்களுக்குத் தன்னைத் தயார்படுத்திக்கொண்ட காலம் என கூறலாம். இரண்டாவது பகுதியானது 1915-1919 வரையிலான ஆண்டுகளை உள்ளடக்கியது. இந்த காலகட்டத்தில் அவர் இந்தியா முழுவதும் பயணம் செய்து மக்களையும் அவர்களது மனநிலையையும் நெருக்கமாக அறியமுயல்கிறார். மூன்றாவது பகுதியானது 1920-1942 வரையிலான ஆண்டுகளைக் குறிப்பது. தனது கனவுகளை நடைமுறைப்படுத்த கடுமையாக உழைத்த காலகட்டம் என இதை கூறலாம். இறுதியாக நான்காம் பகுதி, 1944 தொடங்கி அவரது மரணம் வரை நீடித்தது. அவரது கணிப்புகள் ஒவ்வொன்றும் தவறாகி கனவுகள் மண்ணோடு மக்கிப் போன நாட்கள் என இதை கூறலாம். ஒவ்வொரு காலகட்டத்திலும் அவருக்கு ஏற்பட்ட பரிணாமத்தை தரம்பால்  அற்புதமாக வரைந்து காட்டுகிறார்.

mohandasgandhiஒவ்வொரு தனிமனிதனும் தன்னைத் தானே முழுமுதலாக நிர்வகிக்க வேண்டும் என்பதையே சுயராஜ்ஜியம் எனும் சொல்லாடல் மூலம் உணர்த்த முயன்றார். ஆனால் ஆங்கிலேயர்கள் விட்டுச்சென்ற அதே நிர்வாக முறைமையைப் பின்பற்றுவதால் ‘நாம் சாதாரணமானவர்களை அற்பமானவர்களாகவும் துணிவற்றவர்களாகவும் மாற்றி இருக்கிறோம்.’ அரசின் தயவால் வாழும் நிலைக்கு மக்கள் பழக்கப் பட்டுள்ளார்கள். இந்திய அரசே கூட வல்லரசுகளின் தயவால் தான் இயங்கி வருகிறது. ‘ஆட்சியிலும் வளர்ச்சிப் பாதையிலும் இந்தியனை ஒரு எண்ணிக்கை என்பதாக அது சுருக்கிவிட்டது,’ என்று கடுமையாகத் தன் விமர்சனங்களை முன்வைக்கும் தரம்பால் காந்தியர்களையும் கூட விட்டுவைக்கவில்லை. காந்தியோடு வாழ்ந்த அவருடைய நேர்மையான சீடர்கள்கூட காந்தியை முழுமையாகப் புரிந்து கொள்ள முயற்சி செய்யவில்லை என்கிறார். மோட்சத்தை நோக்கமாகக் கொண்டு, காந்தியை ஒரு ஆன்மீக குருவாக ஏற்றுக்கொண்டவர்களை அவரது அரசியல் மற்றும் சமூக கருத்துக்கள் ஈர்க்கவில்லை, அரசியல் மற்றும் சமூக நாட்டம் கொண்டிருந்தவர்களுக்கு காந்தி நம்பிய ஆதார விழுமியங்களிலிருந்து மிகப்பெரிய அளவில் ஒரு விலகல் இருந்தது.  இது தொடர்பாக ககாந்தியும் நேருவும் கடிதங்களில் இதை விவாதித்திருக்கின்றனர். இவற்றிலிருந்து சில பகுதிகளை புத்தகத்தில் இணைத்துள்ளார் தரம்பால்.

இந்த நூலலில் உள்ள கட்டுரைகளைப் போல் அடிக்குறிப்புகளும் முக்கியமானவை. காந்தி மறைந்ததும் சர்தார் படேல், ஜெயப்ரகாஷ் நாராயணனுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். முழுக்க முழுக்க காந்திய நடைமுறையை செயல்படுத்தி ஆட்சி மற்றும் நிர்வாகம் செய்ய ஏதேனும் ஒரு சிறிய பிரதேசத்தை அளிப்பதாக உறுதியளிக்கும் படேலின் கடிதம் ஒன்று இந்த நூலின் கடைசி அத்தியாயத்தின் அடிக்குறிப்பில் இணைக்கப்பட்டுள்ளது. அப்படி எதுவும் நடந்திருந்தால் அதுவே காந்திக்கு நெருக்கமான அஞ்சலியாக இருந்திருக்கும், காந்திய அடிப்படையிலான நிர்வாக அமைப்பின் சாதக பாதகங்களையும் நாம் அறிந்துகொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கும். அதேபோல் தாழ்த்தப்பட்ட மக்களையும் சிறுபான்மையினரையும் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள பிரிட்டிஷ் அரசுமேற்கொண்ட முயற்சிகள் காந்தியால் தொல்வியடைகின்றன,  முஸ்லீம்களைப் போல் அவர்களையும் தங்கள் நோக்கங்களுக்கு ஆதரவாக மாற்றும் நடவடிக்கைகளுக்கு எதிராக காந்தி எவ்வளவு வலுவான தடையாக இருந்தார் என்ற உண்மையை வெளிப்படுத்தும் பிரிட்டிஷ்  வைஸ்ராயின் கடிதமும் இந்தப் புத்தகத்தில் அடிக்குறிப்பாகவே.இணைக்கப்பட்டுள்ளது.

நூறு தொகுதிகளுக்கு மேலதிகமாக காந்தியின் பேச்சுக்களையும் எழுத்துக்களையும் சேகரித்து வெளிகொண்டுவந்தது சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய சாதனை, வால்டேர் அல்லது எமர்சனின் எழுத்துக்களை திரட்டியதற்கு சமானமான சரித்திர நிகழ்வு என்கிறார் தரம்பால். அவை காந்தியைப் பற்றிய புரிதலை ஆழப்படுத்துவது மட்டுமின்றி அக்கால வரலாற்று நிகழ்வுகளின் மிக முக்கியமான ஆவணம் என்கிறார். ஆனால் இந்தத் தொகுதிகளை எத்தனை பேர் ஆழமாக ஆய்வு செய்துள்ளனர்? இல்லை, இது காகிதங்களால் எழுப்பப்பட்ட மற்றுமொரு சமாதி தானா?

தரம்பால் காந்தியை, பிளாட்டோ , புத்தர், இயேசு, கன்ஃபூசியஸ் வரிசையில் கொண்டு சேர்க்கிறார். ஹேகல், மார்க்ஸ், பேகன், மார்ட்டின் லூதர் போன்றவர்கள் எப்படி தீவிரமாக மேற்கில் படிக்கப்பட்டனரோ அப்படி காந்தியும் ஆழ்ந்து வாசிக்கப் படவேண்டும் என்கிறார். காந்தியை யுகபுருஷர் என்றே கருதுகிறார் தரம்பால். இந்திய சுதந்திர வரலாற்றைப் பேசும் ஒரு மரபான கோவிலை காந்திக்காக கட்ட வேண்டும் என்கிறார். சேவாகிராம ஆசிரமத்தை மிக சிறந்த காந்திய பல்கலைக்கழகமாக மாற்ற வேண்டும் என தன் கனவுகளைப் பற்றி பேசுகிறார்.

இன்றைய கிராமங்களையும் விவசாயச் சூழலையும் கவனித்தால், காந்தி எது நடந்துவிடும் என்று பயந்தாரோ அதுவே நடந்தேறியுள்ளது புலப்படுகிறது. இன்று அரசின் மானியங்கள் இன்றி விவசாயம் என்பதே சாத்தியமில்லை எனும் நிலை வந்துவிட்டது. வேளாண்மை இன்று ஒரு லாபகரமான தொழில் இல்லை. கைவிடப்பட்ட நிலங்கள் தரிசாகி அங்கு இன்று கான்க்ரீட் கட்டடங்கள் எழுந்து நிற்கின்றன. காந்தியின் வழிமுறைகள் சரியா தவறா? அது இன்றைய சூழலுக்குப் பொருந்துமா போன்ற கேள்விகள் ஒருபுறம் இருக்கட்டும். அவை எதுவுமே பரிசீலிக்கப்படவில்லை, பரிசோதிக்கப்படவில்லை எனும் நிலையில் அதை அப்படியே புறந்தள்ளும் முட்டாள்தனத்தை தான் நாம் இன்றுவரை செய்துகொண்டிருக்கிறோம்.

காந்தி இன்று மேற்கில் வாசிக்கப்படுகிறார். அங்கு அவருடைய சமூக கருத்துக்கள் பற்றிய விவாதங்கள் நடந்து வருகின்றன. தொடர்ந்து கவனிக்கப்படுகிறார். ஒவ்வொரு ஆண்டும் பல ஆய்வுகளும், புத்தகங்களும் வெளிவந்தவண்ணமுள்ளன. அண்மைய காலங்களில் அவருடைய முக்கியத்துவம் உலக அளவில் அதிகரித்து வருவதை கண்கூடாக உணர முடிகிறது.  இந்த சூழலில், நம் முன் இரண்டு வாய்ப்புகள் உள்ளன. ஒன்று காந்தியையும் அவருடைய கருத்துகளையும் நாமே நம் சுயசிந்தனையை அலகாகக் கொண்டு அவரை நெருங்கி அணுகி புரிந்துகொள்ள முயல்வது, அல்லது மேற்கத்திய ஆய்வாளர்களின் ஆய்வு இங்கு இறக்குமதி ஆகி அவருடைய முக்கியத்துவத்தை நிலைநிறுத்தும் வரை (ஐம்பது வருடங்கள் ஆனாலும்) காத்துக்கொண்டே இருப்பது. காந்தியின் வாழ்வும் வாக்கும் நம் வாழ்வில் எந்தளவிற்கு பயனளிக்க கூடும் என்பதன் சாத்தியக்கூறை நாம் அறிந்துகொள்ள தரம்பாலின் இந்த நூல் உதவக்கூடும்.