சென்னைக்கு வந்தேன்

kanasu2

புரட்சி செய்வதிலும் ஒரு மரபு உண்டு என்பது வயது ஆக ஆக புரட்சி மனப்பான்மை படைத்தவர்களுக்கும் தெரிகிற ஒரு உண்மை. பல புரட்சிகள் தோன்றித் தோன்றி ஒரு மரபை ஏற்படுத்துகின்றன – கடைசிப் புரட்சி வெற்றி பெறுகிறது, மரபாகிறது.

க.நா.சு
க.நா.சு

இலக்கியத்திலே புரட்சி, என் அளவில்தான் செய்து பார்ப்பது என்கிற காரியம் என்னுடைய பதினைந்தாவது வயதிலேயே தீர்மானமாகி விட்ட ஒரு லக்ஷியம். அந்தப் புரட்சி வேகம் ஆங்கிலத்தில் தான் முதலில் செயல்பட்டது. கல்லூரியில் அடி எடுத்து வைக்கும்போதே நான் எழுதத் தொடங்கிவிட்டேன். ஆரம்ப நாளைய கதை, கட்டுரைகளில் சில, ஒரு சில பத்திரிகைகளிலும் வெளி வந்துவிடவே என் இலக்கிய வாழ்க்கை லக்ஷியம் நீடித்துவிட்டது.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிரெஞ்சு இலக்கிய மேதைகளும், இருபதாம் நூற்றாண்டின் என் தலைமுறைப் புரட்சி எழுத்தாளர்களான ஜேம்ஸ் ஜாய்ஸும், டி.எஸ். எலியட்டும், எஸ்ரா பவுண்டும் வகுத்துக் கொடுத்த புரட்சி மரபுக்கு நான் வாரிசு என்கிற எண்ணம் எனக்கு உண்டு. இவர்களுக்கெல்லாம் பொதுவாக வேறு என்ன இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒன்று மட்டும் உண்டு. இடம் பெயர்ந்து, ரகசியத்தில், தீர்மானமாக, இலக்கியம் செய்ய குடும்பத் தளைகளை உதறிவிட்டு வெளியேற வேண்டும் என்று ஒரு நோக்கம் உண்டு. ஜாக் லண்டனின் மார்டின் ஈடன் என்கிற நாவலைப் படித்து என் இலக்கிய வாழ்வு எந்தெந்த திசையில் எப்படி எப்படிச் செல்லவேண்டும் என்று தீர்மானித்துக்கொண்டு, கையில் ஒரு டைப்ரைட்டருடன் சென்னைக்கு வந்து 1934-ல் தங்கசாலைத் தெருவில் ஒரு ஹோட்டலில் தனி அறை எடுத்துக்கொண்டு குடியேறினேன். ஆங்கில இலக்கிய சிருஷ்டியும் வேகம் பெற்றது. 1935-36-ல் தமிழில் எழுதத் தொடங்கியதுடன் என் இலக்கிய வாழ்வும் வளம் பெற்றது. 1936க்குப் பிறகு 1950 வரையில் ஆங்கிலத்தில் எழுத முயலவில்லை.

தகப்பனாருடன் சண்டை போட்டுக்கொள்வது என்பது இலக்கியப் புரட்சி மரபுப்படி அவசியமான காரியம் என்று தோன்றியது. ஆனால் அப்படி ஒன்றும் சுலபமான காரியம் அல்ல அது  என்னை இலக்கிய வாழ்வு வாழத் தூண்டியவரே என் தகப்பனார்தான். ஜாக் லண்டனின் மார்டின் ஈடன் புஸ்தகத்தையும் அதற்கு மாற்றாக சாமுவேல் ஸ்மைல்ஸ் என்பவரின் self help  என்கிற நூலையும் வாங்கித் தந்து இலக்கிய வாழ்வை மேற்கொள்வதில் உள்ள சிரமங்களை எனக்கு உணர்த்தியவர் என் தகப்பனார்தான். “உனக்கு மாதம் ஐந்நூறு ரூபாய் சம்பளம் (அந்த நாளில்) பெறத் தகுதியிருக்கிறது. ஆனால் எந்த முதலாளிக்கு அதைத் தரவேண்டும் என்கிற அறிவு இருக்கப் போகிறது?” என்று கேட்டு, எந்த உத்தியோகத்துக்கும் போகாதிருக்க என்னைத் தூண்டியவர் என் தகப்பனாரேதான்.

இலக்கியப் புரட்சி செய்வதற்காகக்கூட அவருடன் சண்டை பிடித்துக்கொள்வது சிரமமான காரியம். அவருக்கு நான் ஒரே பிள்ளை. பிள்ளையின் வாழ்வு வீணாகிவிடப் போகிறதே என்பதற்காக அவர் மறுவிவாகம்கூட (என் தாயார் இறந்தபிறகு) செய்துகொள்ளவில்லை. சுமாராகச் சம்பாத்தியமும் இருந்தது. தனக்கென்று மாதம் முப்பது ரூபாய்க்கு மேல் செலவு செய்யமாட்டார். பாக்கிப் பணம் நூறு ஐம்பது என்று இரண்டு மூன்று தவணைகளில் எனக்குக் கிடைத்துவிடும். காலேஜில் படிக்கும்போதெல்லாம் நூறு, நூற்றைம்பது என்று அந்த காலத்தில் செலவு செய்து பழகியவன் நான். நான் எழுதப்போகிறேன் என்றால் பாட்டியை இரவு பத்தரை மணிக்கு எனக்குக் காபி போட்டுத்தர எழுப்புவார் என் அப்பா. அவருடன் சண்டை போட்டுக்கொள்ள முடியாமல் – ஆனால் சண்டை போட்டுக்கொண்டுதான் 1934லே சென்னை வந்து சேர்ந்தேன். அப்படியும் ரெயில்வே ஸ்டேஷனுக்கு வந்து என் தகப்பனார் நூறு ரூபாய் – கையில் இருந்ததுபோக – இருக்கட்டும் என்று கொடுத்துவிட்டுப் போனார்.

1930களில் சென்னை மௌண்ட் ரோடு
1930களில் சென்னை மௌண்ட் ரோடு

சென்னையில் எனது நண்பர் சீதாராமன் என்பவருடன் – அவர் இப்போது இந்திய ஆகாய விமானப்படையில் பெரிய உத்தியோகத்தில் இருக்கிறார் – சென்னை பூராவும் தெருதெருவாகச்சுற்றி அலைந்திருக்கிறேன். சீதாராமனுக்கும் பல மொழிகளில் பயிற்சியும் ஆர்வமும் உண்டு. இருவரும் மூர்மார்க்கெட்டில் தேடிப்பிடித்து ஜெர்மன், பிரெஞ்சு, ஸ்பானிஷ், இத்தாலிய மொழிப் புத்தகங்களைப் படிப்போம். எனக்கு அன்றும் சரி இன்றும் சரி – காபி கண்ட இடம் சொர்க்கத்துக்குப் போகும்வழி – புஸ்தகம் கண்ட இடம் சொர்க்கமேதான்.

இருவரும் இலக்கியத்தையும் இலக்கியப் பெரியார்களையும் பற்றிப் பேசிக்கொண்டு தெருத் தெருவாகச் சுற்றி சென்னை நகரின் வாழ்க்கையை இரவிலும் பகலிலும் ஒருவாறாகத் தெரிந்துகொள்ள முயன்றோம். எழுதினது குறைவுதான் – அதில் பிரசுரமானது இன்னும் குறைவு. ஒன்றிரண்டு கதைகள் அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் பிரசுரமாயின. மாதத்தில் பத்து இருபது திரும்பி வரும். இந்தியாவிலே ஆங்கிலத்தில் நல்ல எழுத்தை வெளியிடுவதற்கு இலக்கியப் பத்திரிகை கிடையாது என்கிற நினைப்பில் அதிகமாக இந்தியாவில் எழுத முயலவில்லை. நான் இரண்டொரு கதைகளை ஆங்கிலத்தில் எழுதி பிரெஞ்சு பாஷையில் மொழிபெயர்த்து பிரெஞ்சு இலக்கியப் பத்திரிகைகளுக்கு அனுப்பினேன். என் முதல் கதை Fathers and Sons என்று பெயர் அதற்கு – ஆங்கிலத்திலும் (1935) பிரெஞ்சு மொழியிலும் (1936) பின்னர் 1954-ல் ஜெர்மன் மொழியிலும் வெளிவந்தது.

பிரெஞ்சுப் பத்திரிகையில் அந்தக் கதை வெளிவந்த தினம் நான் ஒரு சாம்ராஜயத்தையே பிடித்துவிட்டவன் போலக் காற்றிலே நடந்தேன் என்று சொல்ல வேண்டும். அன்று சீதாராமனும் நானும் இரவு பூராவும் பலபலவென்று விடியும் வரையில், ஊரெல்லாம் சுற்றிக்கொண்டே,எங்கள் இலக்கிய சாம்ராஜ்யத்தை ஸ்தாபிப்பது பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம் என்பது ஞாபகம் இருக்கிறது. அதற்கு மறுநாள் காலையில் நான் ஹோட்டல் முதலாளிக்கு இரண்டு மாதமாக வாடகை பாக்கி என்று என் டைப் ரைட்டரை மட்டும் எடுத்து வைத்துக்கொண்டு, மற்ற சாமான்களுடன் என்னையும் ஹோட்டல்காரன் வெளியேற்றி விட்டான் (அப்பாவிடம் இருந்து பணம் தருவித்துக்கொண்டு வேறு அறை, பக்கத்து ஹோட்டலிலேயே பார்த்துக் கொள்ள எனக்கு அதிக நேரம் பிடிக்கவில்லை என்று வைத்துக் கொள்ளுங்களேன். சீதாராமனும் பணக்காரர் வீட்டுப் பிள்ளை. அவனிடம் பணமில்லாவிட்டாலும்கூட உதவ முடிந்தது என்றும் சொல்லலாம், இந்த மாதிரிப் பல சந்தர்ப்பங்களில்).

எழுத வேகம் இருந்தது. ஆனால் டைப்ரைட்டர் போய்விட்டது. அந்த தோஷம்தான் நான் தமிழில் எழுதத் தொடங்கினேன். காபி சாப்பிட்டுவிட்டு வெற்றிலை பாக்குப் போட்டுக் கொள்ளப் போனபோது கடையில் ‘காந்தி’ என்று ஒரு பேப்பர் இருந்தது. அதைப் பிரித்துப் பார்த்தபோது, அதில் ‘வார்ப்படம்’ என்று ஒரு கதை இருந்தது. வத்தலக்குண்டு எஸ்.ராமையா என்று ஆசிரியர் பெயர் போட்டிருந்தது. யாரோ தெலுங்கன் எழுதிய கதை என்று எண்ணிப் படித்தேன். “இந்த மாதிரி தமிழில் கதைகள் போடுவார்களானால், நானும் எழுதலாமே” என்று அன்றே ஆரம்பித்து ‘ஆத்ம ஸமர்ப்பணம்’ என்று ஒரு கதை எழுதினேன். கடைக்காரன் மணிக்கொடி என்று ஒரு பத்திரிகையைப் பற்றிச் சொன்னான். தேடிக்கொண்டு படியேறிப் போனேன். சந்தித்தவர்தான் வத்தலக்குண்டு எஸ். ராமையா என்றும் அவர் தமிழர்தான் என்றும் தெரிந்து கொண்டேன். கதையைக் கொடுத்துவிட்டு கதைக்குச் சன்மானமுண்டா என்று கேட்டேன்.

“பணமா? மணிக்கொடியில் உங்கள் கதை பிரசுரமாக நீங்கள் தரவேண்டும் பணம்” என்றார் ராமையா.

எத்தனை வேண்டும் என்று கேட்க எனக்கு ஆசைதான் (கேட்காமலே 1939-ல் சூறாவளி போட ஒரு ஏழெட்டாயிரம் பின்னர் செலவழித்தேன் என்பது தெரியுமே எல்லோருக்கும்). ஆனால் மறுநாளே வரச்சொல்லியிருந்த ராமையா நான் எழுதிய முதல் தமிழ்க் கதையைத் திருப்பித் தந்துவிட்டார். “இது கதையில்லை ஸார், கதையாக எழுதித் தாருங்கள்” என்றார் அவர். இன்றும்கூட நான் எழுதுகிற கதைகள் கதைகள்தானா என்று அவருக்கும், மற்றவர்களுக்கு சந்தேகம் இருப்பது எனக்குத் தெரியும். அதுவும் என் இலக்கியப் புரட்சிச் சாதனைகளில் ஒன்று என்று – அடக்கமாகவே தான் – சொல்லிக் கொள்கின்றேன். அந்த என் முதல் கதை -1955ல் தான் பிரசுரமாயிற்று.

ராமையா மூலம் எனக்குப் புதுமைப்பித்தன் பரிச்ச்சயமானார். இலக்கிய வேகம் எங்கள் இருவருக்கும் ஒரு பிணைப்பை ஏற்படுத்தியது. புதுமைப்பித்தன் எடுத்த எடுப்பிலேயே மௌனி என்கிற ஒரு ‘ரஸமான’ மனிதரைப் பற்றிச் சொன்னார் (அவரைப் பின்னர் தேடிக் கண்டுபிடித்தேன்). நான் தமிழில் எழுத ஆரம்பித்து எழுதிய இரண்டாவது கதை ‘குற்றமும் தண்டனையும்’. அதை ராமையா ஏற்றுப் பிரசுரித்தார். மூன்றாவது நான்காவது கதைகளைப் பிரசுரிக்கும்போதுகூட ஓரளவுக்கு அவருக்கு ஒரு அடிப்படையான Reservation இருந்தது, என் எழுத்துப் பற்றிய வரையில். ஆனால் மணிக்கொடி அவர் கையில் அதிகநாள் நீடிக்கவில்லை. கு.ப.ரா.வின் மணிக்கொடியில் நான் இரண்டு மூன்று கதைகளை எழுதினேன்.

தவிரவும் மணிக்கொடி மூலம் சில மொழிபெயர்ப்புகள் செய்து வெளியிடுவதும் சாத்தியமாயிற்று. ஜேம்ஸ் ஜாய்ஸின் Eveline என்கிற கதையை ஆங்கிலத்திலிருந்து, மேடர்லிங்கின் ‘எமன்’ என்கிற நாடகத்தை பிரெஞ்சிலிருந்தும், Franz Werfel என்பவரின் எமனுடன் போட்டி என்பதை ஜெர்மன் மொழியிலிருந்தும் மொழிபெயர்த்துத் தழுவி எழுத முடிந்தது. (Werfelலின் தமிழ் மொழிபெயர்ப்பு அந்தக் கதையின் ஆங்கில மொழிபெயர்ப்பு வெளிவருவதற்கு ஆறு ஏழு  வருஷங்களுக்கு முந்தியே வெளி வந்தது).

ஆங்கிலம் எழுதுவது அடியோடு நின்றுவிட்டது. முழு வேகத்துடன் பாரதியாரையும், மணிக்கொடி கோஷ்டியினரையும், சிறப்பாக புதுமைப்பித்தனையும் மௌனியையும் கண்டு கொண்ட வேகத்துடன், அந்த தடவை சென்னையைவிட்டுக் கிளம்பினேன். ஆங்கிலத்தில் செய்யவேண்டும் என்று நினைத்ததையெல்லாம் தமிழில் செய்து தீர்த்துவிட வேண்டும் என்று மனத்திற்குள் உறுதி- ஊக்கம்- ஆர்வம். ஆனால், இதிலே என் தகப்பனாருக்கும் எனக்கும் உண்மையிலேயே சண்டை வந்துவிட்டது. ஆங்கிலத்தில் ஈடுபாடும் நம்பிக்கையும் வைத்த தலைமுறையைச் சேர்ந்தவர் அவர். தமிழில் என்ன செய்தாலும் இலக்கிய அந்தஸ்தோ, மற்றும் பெயரோ புகழோ கிடைக்காது என்கிற திடநம்பிக்கையுள்ளவர் அவர். இந்த நம்பிக்கை நான் 1951இல் பாரீஸ் நகரம் போய் வந்த பிறகுதான் என் தகப்பனாருக்கு ஒரு அளவுக்காவது மாறியது என்று சொல்ல வேண்டும். சென்னையை விட்டுக் கிளம்பியவன் தஞ்சாவூருக்குப் போனேன். அங்கு இரண்டொரு வருஷங்கள் இருந்துவிட்டு மறுபடி சென்னைக்குச் சூறாவளி வெளியிட1939இல் மீண்டும் வந்தேன்.

இந்த தடவை சென்னைக்கு ஒரு அழகான வாக்கிங் ஸ்டிக்குடனும், மனைவியுடனும் வந்து சேர்ந்தேன். தாடி வளர்க்கிற உத்தேசத்துடனும் வந்தேன். ஆனால் அந்த உத்தேசம் நிறைவேறவில்லை. என் மனைவி ஆக்ஷேபித்துவிட்டாள். -222, அங்கப்ப நாயக்கன் தெருவிலே புதுமைப்பித்தன், நான், கி.ரா. மூவரும் ஒரு அறையில் இருந்தோம் – ஆரம்பத்தில், வீடு கிடைத்து என் மனைவி வரும் வரையில். அப்பொழுது நடந்த ஒரு சம்பவம் எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. இரவு இரண்டு மணிக்கு எங்கேயோ ஊர் சுற்றிவிட்டு அறைக்கு வந்து இரைந்து பேசிக் கொண்டிருந்தோம். பக்கத்து அறையிலிருந்த மலையாளத்தான் ஒருவன் வந்து வெளியே கூப்பிட்டான். போனேன். வார்த்தையே பேசாமல் பளாரென்று கன்னத்தில் அறைந்துவிட்டான். இந்தக் காது பாடிற்று. புதுமைப்பித்தனும் கி.ரா.வும் தவித்துப் போனார்கள் என்றும், கூட இருந்த ராமையாவின் தம்பி கிட்டப்பா போலீஸ்காரனைக் கூப்பிட்டு வர ஓடினான் என்பதும் ஞாபகம் இருக்கிறது. ஆனால் அந்த மலையாளத்தானின் கையை நான் கெட்டியாகப் பிடித்துக் கொண்டேன். இன்னொரு கன்னத்திலும் இதே போல இன்னொரு அறை வைத்துவிட்டுத்தான் அவன் போகலாம் என்று நான் வற்புறுத்தினேன். அறைந்திருந்தானானால் நான் நிச்சயமாகக் கீழே விழுந்திருப்பேன் என்று தான் நினைக்கிறேன். ஆனால் அவன், ஆத்திரத்தில், தூக்கம் கெட்டதற்காக, செய்ததற்கு மன்னிப்புக் கேட்டுவிட்டுப் போய் விட்டான் என்றும், அன்றிரவும் பொழுது விடியும் வரையிலும், வழக்கமான குரலிலே பேசிக் கொண்டேதான் இருந்தோம் என்பதும் ஞாபகம் இருக்கிறது.

கையில் இப்பவெல்லாம் வாக்கிங் ஸ்டிக்கில்லாதிருப்பதைச் சில சமயம் நான் உணருகிறேன் – வருத்ததுடன். 1939லிருந்ததைவிட இப்போது சென்னையில் (தமிழில்) இலக்கியப் போலிகள், விபசாரிகள் அதிகரித்து விட்டனர். ஆனால் வாக்கிங் ஸ்டிக் போதாது – யந்திரத் துப்பாக்கி வேண்டியிருக்கும் இவர்களை எதிர்க்க என்று எனக்குத் தோன்றுகிறது. எனக்கும் அன்றைக்கு இருந்ததைவிட இன்று உடம்பில் தெம்பு குறைவுதான் – இலக்கியத் தெம்பு அதிகமானாலும்கூட. மற்றொரு கன்னத்தைத் திருப்பிக் காட்டுவதைத் தவிர வேறு என்ன செய்வதற்கிருக்கிறது?

சூறாவளி நடந்த நாட்களிலே புதுமைப்பித்தன், கி.ரா. அவர்களுடன் ஏற்கனவே இருந்த நட்பு ஆழ்ந்தது என்று சொல்ல வேண்டும். மற்றும் கு.ப. ராஜகோபாலன், ந. பிச்சமூர்த்தி, ந. சிதம்பர சுப்பிரமணியம் முதலியவர்களுடனும் பழகும் வாய்ப்பும் கிடைத்தது. கு.ப.ரா. போன்றவர்கள், தாகூர், அரவிந்தர், கீட்ஸ், ஷெல்லி என்பவர்களைப்பற்றி அதிகமாக மதிப்பு வைத்திருந்தார்கள் என்பதற்காகவேனும் அவர்களைக் குறை கூறவேண்டும் என்கிற எண்ணத்துடன் புதுமைப்பித்தனும் நானும் கு.ப.ரா முதலியவர்களைத் தேடிக் கொண்டுபோன சந்தர்ப்பங்கள் உண்டு. அதெல்லாம் ஒரு இளமை மிடுக்கு என்று இப்போது தோன்றினாலும்கூட, அவசியமான காரியங்களாகத்தான் தோன்றுகிறது.

சென்னைக்கு வந்ததனால் என் இலக்கிய சேவை சிறப்புற்றது என்று நான் சொல்லத் தயாராக இல்லை. ஆனால் சென்னை வருகிற அனுபவத்தினால்தான் என் சாத்தனூர் அனுபவங்கள் ஆழ்ந்தன, இலக்கியத் தரம் பெற்றன என்று சொல்லவேண்டும். அந்த அளவுக்குத்தான் சென்னை எனக்கு உதவியிருக்கிறது. சென்னையை விட்டுப் பலகாலம் வெளியே வாழ்ந்ததால் சாத்தனூர்த் தரத்தில் நான் சென்னை பற்றி இலக்கியம் செய்ய முடியுமோ என்னவோ – இப்போது சொல்லத் தெரியவில்லை.

ஆனால் இலக்கியச் சூழ்நிலையைச் சென்னை சிருஷ்டித்துத் தராதோ என்கிற ஒரு வேகம், நினைப்பு சமீப காலத்தில் எனக்கு ஏற்படத்தான் ஏற்பட்டிருக்கிறது. எப்போதுமே இப்படித்தான் என்று சொல்பவர்களையும் நான் சந்தித்திருக்கிறேன். போலிகள் மலிய மலிய, ஜேம்ஸ் ஜாய்ஸ் சொன்ன மாதிரி “இலக்கியத்திலே குடும்ப ஸ்திரீகளுக்கும் விபசாரிகளுக்கும் உள்ள வித்தியாசம் குறையக் குறைய’, இலக்கிய நோக்கம் தடைப்பட்டுத் தேங்குகிறது என்று தான் எனக்குத் தோன்றுகிறது. இந்தத் தேக்கத்துக்கு சென்னை வாழ்வு அடிகோலுகிறது என்றும் சொல்லலாம்.

சென்னைக்கு வருகிறவர்கள் மூர்மார்க்கெட்டில் போய் ஏமாந்துவிடக் கூடாது என்று அந்த நாளில் சொல்வார்கள் – மூர்மார்க்கெட் தான் ஏமாற்றுக்கெல்லாம் இருப்பிடம் என்று எண்ணி. இப்போது சென்னை பூராவுமே இது வியாபித்து நிற்கிறது என்று சொல்லலாம். “நல்லெண்ணெயிலிருந்து நல்லெண்ணம் வரையில் கலப்படந்தான்” என்று புதுமைப்பித்தன் சொன்னாரே – அது சென்னை வாழ்வை அடிப்படையாக வைத்துத்தான். கலப்படம் செய்பவர்கள்தான் அதிகமாகக் கலப்படத்தின் ஆபத்துக்களைப் பற்றிச் சொல்லுகிறார்கள் – வள்ளுவர் வகுத்த வழியை எடுத்து புளியமரம் உலுக்குவதுபோல உலுக்குபவர்கள் வள்ளுவர் பண்புக்கு எதிர்மாறான வாழ்க்கை வாழ்வது போல, இந்த முரண்பாடு சென்னை வாழ்வின் அடிப்படை என்றுதான் தோன்றுகிறது.

நான் பள்ளிக்கூடத்தில் படித்த நாட்களில், அதாவது -1923, 1924-ல் ‘மதிமோசக் களஞ்சியம்’ என்று ஒரு புஸ்தகம் வழக்கிலிருந்தது. சென்னைக்கு வருபவன் எந்தெந்த விதங்களில் ஏமாற்றப்படுவான் என்பதை விஸ்தாரமாக விவரிக்கும் நூல் அது. ஷேக்ஸ்பியர் காலத்திய லண்டனில் நடக்கும் ஏமாளி வித்தைகளை விவரிக்கும் நூல் ஒன்றைப் பின்பற்றி, சென்னை அனுபவத்துடன் எழுதப்பட்ட நூல் அது.

அந்த நூலை ஐயந்திரிபறக் கற்றறிந்து கொண்டுதான் நான் சென்னைக்கு வந்தேன்.

நன்றி: சரஸ்வதி, அக்டோபர் 1958