சிறந்த தமிழ் நாவல் “பொய்த்தேவு” – பிரமிள்

kanasu2

இன்றைய தலைமுறை வாசகர்களுள் எத்தனை பேர் ‘பொய்த்தேவு’ என்ற நாவலைப் படித்திருப்பார்கள் என்பது சந்தேகம். இதை எழுதியவர் க.நா.சுப்ரமணியம். தமிழின் மிகச் சிறந்த நாவல் என்று இதைத்தான் சொல்லவேண்டும்.

‘பொய்த்தேவு’, யாரோ ‘சோமு’ என்ற அனாதை ஏழைப்பையனின் விபரீத ராஜயோகத்தையும் மனிதனாகி அவனடைந்த வீழ்ச்சியையும் பற்றியது என்றுதான் மேலோட்டமாகப் பார்த்தால் தோன்றும். க.நா.சு. மேலோட்டமான சரளபாவத்தில்தான் எப்போதுமே எழுதுவார். இதற்கு விதிவிலக்குகள் உள்ளன.’அசுரகணம்’ என்ற அவரது இறுதி நாவல் (’கோதை சிரித்தாள்’ என்று இப்போது ஏதோ நீளமாக எழுதி இருக்கிறார். அது க.நா.சு. வின் கவலைக்குரிய நிலையைக் காட்டியதுக்கு மேல் பொருட்படுத்தத் தக்கதல்ல). ‘தோப்புசாலை’ என்ற சிறுகதை (இதை ம.கோபாலன் என்ற பெயரில் ‘எழுத்து’ 1959 இதழ் ஒன்றில் அவர் எழுதி இருந்தார், எழுதியவர் க.நா.சு. என்று தெரியாமல் ‘எழுத்து’ ஆசிரியரிடம் விசாரித்திருக்கிறேன். என்னைத் தவிர வேறு எவருமே இந்தக் கதையைக் கண்டுகொள்ளக்கூட இல்லை என்றார் எழுத்து ஆசிரியர் சி சு செல்லப்பா. ‘தரிசனம்’ என்ற கவிதை (இதுவும் எழுத்துவில் வெளியானதுதான்).

மேற்படி மூன்று துறைகளிலுமே க.நா.சு. ஒரு அப்ஸ்ட்ராக்ட் பாணியில் எழுதி இருப்பது கவனத்துக்குரியது. இதிலும் தேர்ந்த கைதான் தெரிகிறது.

பிரமிள்

‘பொய்த்தேவு என்ற தலைப்பு, ஒவ்வொரு கணமும் மனதில் தோன்றி மறையும் நோக்கங்களைத் தேவர்களாக கடவுளராக ஆக்கி, அவை நம்மை உந்துவதுடன் நமது வீழ்ச்சியுடன் அவை வீழ்வதையும் அர்த்தப்படுத்துகிறது. இந்தப் பயணத்தின் நாயகன்தான் சோமு. நாவலை இந்தக் கோணத்தில் பார்க்கிறபோது ஒரு பாத்திரத்தின் வாழ்வாக மட்டுமல்லாமல் ஒரு சிந்தனை அம்சத்தின் விபரமான சித்தரிப்பாகவும் அதைக் காணலாம். பார்க்கப்போனால் நாவல் சோமுவைப் பற்றியதேதான் என்றே சொல்லிவிட முடியும். மேலோட்டமான விமர்சகர்கள் இந்த இடத்தில்தான் ஏமாறுகிறர்கள்.

ஒரு பெரிய செல்வந்தர் வீட்டில் திருட வந்த தீவட்டிக் கொள்ளைக்காரர்களைப் பிடிக்க உதவியதன் மூலம் அனாதைப்பையன் ’சோமு’ நிலபிரபுத்துவ வட்டத்துக்குள் ஐக்கியமாகிறான். கதையின் இந்த இடம் பலவீனமானதுதான் என்பது உண்மைதான். க.நா.சு.வுக்கு இது நன்றாகவே தெரியும். ஆனால் ‘பொய்த்தேவு’ என்ற தலைப்பையும் மேலே குறிப்பிட்ட அதன் சிந்தனைச் சாயலையும் இங்கே நினைவுகூர வேண்டும்.. தேவு- அதாவது கடவுள் இப்படி ஒரு ராஜயோகத்தைக்கூட மடியில், மண்டையில் போடக்கூடியவர் என்றெ சொல்லலாம். அதாவது ராஜயோகமாக ஆரம்பிக்கின்றவை பொறுப்புகளாகவும் கவலைகளாகவும் அழுத்த ஆரம்பித்துவிடும். சோமுவுக்கு அடித்த யோகம் எவருக்குமே இந்தவிதமாக அடிக்கக்கூடிய யோகம் – அப்படியாகத்தான் முடிகிறது. ‘பொய்த்தேவு’ வை மேற்படி ’பலவீனத்துக்காக’ குறை கூறிய எவருமே கதைக்கு எவ்வளவு தூரம் அத்தியாவசியமான ’பலவீன’மாக இது இருக்கிறது என்று காணவில்லை.

ராஜயோகம்கூட நாள்பட்டதும் மனசின் வெறுமையால் கபளீகரம் செய்யப்பட்டு, மனம் மீண்டும் வறுமை அடையும். நமக்கு சாதகமாக வேலை செய்த ’தேவு’ மீண்டும் பொய் ஆகிறான். இங்கே நாவலின் சிந்தனை அம்சமே கதையின் மேற்படி நிகழ்ச்சியை உருவாக்கி உள்ளதை உணரலாம். பார்க்கப்போனால், முதல் பார்வைக்கு பலவீனமாகப்பட்ட நிகழ்ச்சியே இந்தக் காரணத்தினால் பலமுள்ளதாகி விடுகிறது. தொடர்ந்து சோமு ஒரு ‘பெரிய மனித’னாகும் வழிமுடிவில் அவன் நொடித்து ’ஆண்டி’யாவது. ‘பொய்த்தேவு’ நாவலின் மொத்தமான  தாக்கம் ஒரு பாலைவனத்தின் வெக்கை போன்றது என்று எங்கோ நான் பல வருஷங்களுக்கு முன் எழுதி இருக்கிறேன். இந்தத் தாக்கத்தினை உருவாக்குவது கதையின் பாத்திர அமைப்புகளும் அவை செய்யும் முடிவுகளுடன் அவர்களது பாத்திர அமைப்பும் ஒன்றுபடும் முடிச்சுதான். நாவலை யதார்த்தபூர்வமாக்கும் முடிச்சு இது. இவ்விதத்தில் பாத்திரம், அதன் செயல், நிகழ்ச்சி என்ற முடிச்சை உருவாக்கக்கூடியதுதான் சிறந்த கலைப்படைப்பாக முடியும். வாழ்வின் தவிர்க்கமுடியாத தன்மையை இந்த முடிச்சில்தான் காணலாம்.

நன்றி: அரும்பு, மார்ச் 1993.

One Reply to “சிறந்த தமிழ் நாவல் “பொய்த்தேவு” – பிரமிள்”

Comments are closed.