‘The Browser‘ இதழில் வரும் ‘FiveBooks Interviews‘ எனும் தொடரிலிருந்து ஒரு நேர்காணல் இங்கு அளிக்கப்பட்டிருக்கிறது. உளவியல் பேராசிரியையும், குழந்தைகள் வளர்ச்சி மற்றும் உளவியல் நிபுணரும் ஆன, ஆலிசன் கோப்னிக் [Alison Gopnik] , தான் தேர்ந்தெடுத்த ஐந்து புத்தகங்களை முன்னிறுத்தி குழந்தை உளவியல் சார்ந்து நமது அவதானிப்புகள் கண்டு வரும் மாற்றத்தைப் பற்றி பேசுகிறார். குழந்தை உளவியல் பற்றி பல கட்டுரைகள் மற்றும் நூல்களை எழுதியிருக்கும் ஆலிசன், குழந்தைகளின் அகவுலகைப் புரிந்துகொள்வதன் மூலம், நமது ஆழமான தத்துவக் கேள்விகளுக்கு விடை காண முடியும் என்று வாதிடுகிறார். குழந்தைகள், சீர்திருத்தப் படவேண்டிய சிறிய மனிதர்கள் எனும் மேற்கத்திய பார்வை மாறிவரும் அதே நேரத்தில், குழந்தைகளை சிறிய தெய்வங்களாகக் கொண்டாடும் இந்திய மரபார்ந்த பார்வையும் சிதைந்துவிட்டதோ என்ற சந்தேகம் நமக்கு எழுகிறது. வாழ்வியல் சவால்கள் மிகுந்த நமது சமூகச் சூழலில் நாம் நம் குழந்தைகளை எவ்வாறு அணுகுகின்றோம் என்ற சுய பரிசோதனை மிகவும் அவசியமானதாகிவிட்டது.குழந்தை வளர்ப்பு சார்ந்த கலாசார மறுபரிசீலனைகள் பரவலாகிக் கொண்டுவரும் இக்காலத்தில், குழந்தைகளின் அகவுலகைப் பற்றிய இப்புதிய புரிதல்கள் நமக்கும் பல சுவாரஸ்யமான திறப்புகளை அளிக்கக்கூடும்.
ஐந்து புத்தகங்கள் நேர்காணல்கள் – குழந்தைகளும் அவர்களின் மனங்களும் பற்றி ஆலிசன் கோப்னிக் [Alison Gopnik]
எழுத்தாளரும் உளவியல் பேராசிரியருமான ஆலிசன் கோப்னிக் குழந்தைகளின் மனதில் என்ன நடக்கிறது – அது நம் புரிதலை விட எத்தனை கூடுதலானது என்பதைப் பற்றி பேசுகிறார்.
*** ***
முதலில், குழந்தைகளைப் பற்றியும் அவர்களின் மனதைப் பற்றியுமான சில தவறான புரிதல்கள் எனத் தாங்கள் கருதும் சிலவற்றைக் கூறுங்களேன்.
பல வருடங்களாகவே, நாம் குழந்தைகளைக் குறைபாடுகள் உடைய வளர்ந்த மனிதர்களாகவே கருதி வந்திருக்கிறோம். அதாவது, அவர்களும் வளர்ந்த மனிதர்களைப் போன்றவர்களே, ஆனால் வளர்ந்த மனிதர்கள் செய்யக்கூடிய சில முக்கியமான செயல்களை செய்ய இயலாதவர்கள் என. தலை சிறந்த உளவியலாளரும் வளர்ச்சி உளவியல் (Development Psychology) மற்றும் பகுக்கும் அறிதிறன் வளர்ச்சி ஆய்வுத் (Cognitive Development) துறைகளைத் தோற்றுவித்தவருமான ழான் பியாஜே (Jean Piaget) அவர்களே, குழந்தைகளை சுய-மைய நோக்குள்ளவர்களாகவும், நெறிகளற்றவர்களாகவும் கருதினார். மேலும், குறைந்த புரிதல் திறனே கொண்ட அவர்களால், அருவமான கருத்துக்களை உணரவோ, அறியவோ முடியாது- காரண-காரியத் தொடர்புகள் போன்றன புரியாது- எனவும் கருதினார். ஆனால், உண்மையில் நாம் கண்டறிந்ததோ, சுய-மைய நோக்கும் குறுகிய புரிதலும் கொண்டவர்கள் குழந்தைகள் என்ற கருதுகோளுக்கு முற்றிலும் எதிர்மாறானது. சின்னஞ்சிறிய குழந்தைகளும் அவர்களைக் குறித்து இதுவரை நாம் கற்பனை செய்ததை எல்லாம் மீறிய அறிவும், புரிதலும் கொண்டவர்களாக இருக்கிறார்கள். அவர்களால் தர்க்க ரீதியாக யோசிக்க முடியும்; காரணங்களையும் அவற்றின் விளைவுகளையும் புரிந்து கொள்ளமுடியும்; அடுத்தவரின் பார்வையில் இருந்து யோசிக்க முடியும்.
அப்படியானால், குழந்தைகளைப் பற்றிய நமது புரிதலில் சில பெரிய மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. தாங்கள் தேர்வு செய்திருக்கும் இந்த ஐந்து புத்தகங்களை முன் வைத்து, நாம் அந்த மாற்றங்களை ஆராயலாம். முதலில் “கற்பனை சகாக்களும் அவர்களை சிருஷ்டிக்கும் குழந்தைகளும்” – மார்ஜரி டைலர். (Imaginary Companions and the Children Who Create Them, by Marjorie Taylor)
இந்த புத்தகம், பகுத்து அறிதிறன் வளர்ச்சி குறித்த புது அலை ஆராய்ச்சியாளர்களில் ஒருவரால் எழுதப்பட்டது.இதில் மார்ஜரி, பெற்றோர் தம் குழந்தைகளிடம் கவனிக்கும் ஒரு அற்புதமான குணாம்சத்தைப் பற்றி பேசுகிறார்.அதாவது,குழந்தைகள் பல நேரம் தங்களுக்கென கற்பனைத் தோழர்களை, குறிப்பிடத்தக்க விவரமான துல்லியத்துடன் சிருஷ்டித்துக் கொள்கிறார்கள். இதற்கான மரபு வழி விளக்கங்கள், ஒன்று குழந்தைகளின் நரம்பியல் சார்ந்த உளவியல் விளக்கங்களாகவோ, அல்லது குழந்தைகள் கற்பனைக்கும் நிஜத்துக்குமான வேறுபாட்டை உணர இயலாதவர்கள் என்ற பியாஜேயின் கருதுகோளாகவோ இருக்கின்றன.
இங்கு மார்ஜரி செய்திருப்பதும், இந்த புத்தகத்தில் நம்மைக் கவரும் அம்சமும் என்னவென்றால், அவர் குழந்தைகளிடம் அவர்களின் கற்பனை சகாக்களைப் பற்றிய முறையான அறிவியல் பூர்வமான நேர்காணல்களைப் பதிவு செய்துள்ளார். இந்த புத்தகத்தின் அழகே, அது குழந்தைகள் உருவாக்கும் இந்த அற்புதமான, வினோதமான ஜீவன்களைப் பற்றிய குறிப்புகள் தாம்.
அவர் குழந்தைகளால் கற்பனையையும் நிஜத்தையும் வேறுபடுத்தி அறிய முடியும் என கண்டுபிடித்துள்ளார்.
சரியாகச் சொன்னீர்கள். அவர், குழந்தைகளால் மிகச் சரியாக வேறுபடுத்த முடியும் என்றும், அவர்களின் மிக நெருங்கிய, ஒளிர்வும் துல்லியமும் கொண்ட கற்பனை சகாக்களும் கற்பனையே என்று அவர்கள் நன்று உணர்ந்திருப்பதையும் கண்டுபிடித்துள்ளார். மேலும், கற்பனை சகாக்களைப் படைக்கும் குழந்தைகள் மற்ற குழந்தைகளைவிட எந்தவிதத்திலும் கிறுக்காகவோ, புத்திசாலியாகவோ, தனியராகவோ இருப்பதில்லை என்பதையும் கண்டுபிடித்துள்ளார். நிஜத்தில், நேர்காணப்பட்ட குழந்தைகளில் 60%திற்கும் அதிகமான குழந்தைகள், தமக்கு ஒருவித கற்பனை சகாவோ நண்பரோ இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். குழந்தைகள் தம்மை சுற்றியுள்ள நிஜ மனிதர்களைப் புரிந்துகொள்ள இந்தக் கற்பனை சகாக்களை எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்று மார்ஜரி நமக்குக் காட்டுகிறார். எனவே, கற்பனை சகாக்கள் உள்ள குழந்தைகள் மற்ற குழந்தைகளைக் காட்டிலும் மனிதர்களை நன்றாக புரிந்துகொள்கிறார்கள். இது ‘மனதின் கோட்பாடு’ [Theory of mind] என அறியப்படுகிறது. குழந்தைகளிடம், எது குறைபாடாகக் காணப்பட்டதோ, அது உண்மையில் அவர்களுக்கு உதவக்கூடிய கருவியாகும். மேலும் குழந்தைகள், தம்மைச் சுற்றிய உலகையும், இந்த விஷயத்தில், அவர்களைச் சுற்றி இருக்கும் மனிதர்களையும் புரிந்துகொள்ளுவதற்கு, எப்படி அற்புதமான வகையில் செயல்பட்டுச் சிந்திக்கின்றனர் என்பதற்கான உதாரணமாகும்.
இதை நீங்கள் உங்கள் உடன் பிறந்தாரின் மகளிடமும் கவனித்திருக்கிறீர்கள் இல்லையா?
ஆமாம். அது ஒரு அற்புதமான குறிப்பிடத்தக்க உதாரணம். நியூயார்க் நகரில் வசதி மிக்க மேல் நிலையில், மெத்த படிப்பு நிறை சூழலில் வளர்ந்த அவளது கற்பனைத் தோழி, அவளுடன் விளையாடக் கொஞ்சமும் நேரமில்லாது வேலை செய்துகொண்டே இருப்பவளாக இருந்தாள். இது உண்மையில், மார்ஜரியின் புத்தகத்தில் குறிப்பிடப்படும் கதைகளுக்கும் குறிப்புகளுக்கும் ஒரு சரியான எடுத்துகாட்டு மாதிரி ஆகும். ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், மார்ஜரி இவற்றை விவரிப்பதுடன் நமக்கு விளக்கவும் செய்கிறார்.
தங்களுடைய அடுத்த புத்தகம் ‘விளையாட்டு மைதானத்தில் இருக்கும் மனிதர்கள்’. ஐயோனா ஓப்பீ (The People in the Playground, Iona Opie) பிரிட்டனில் விளையாட்டு மைதானத்தில் 1970-களில் செய்த களப்பணியைப் பற்றியது இல்லையா?
ஆமாம். ஐயோனாவும் அவள் கணவரும் நாட்டுப்புறவியலாளர்கள். ஒரு மனிதவியலாளர் தூரத்து ஆதிவாசிகளிடம் செல்வது போலவும், ஒரு நாட்டுப்புறவியலாளர் ஒரு தூரத்து இடத்திற்கு சென்று அம்மக்களின் பாடல்களையும் கதைகளையும் பதிவு செய்வது போலவும், அவர்கள் குழந்தைகளை புரிந்துகொள்வதற்கென முன் சென்று முயன்றார்கள். அவர்களுடைய சிறந்த புத்தகம், ‘பள்ளிக் குழந்தைகளின் மொழிபுகளும் மொழியும்’ (The Lore and Language of School Children), பள்ளியில் குழந்தைகளைப் பற்றிய அருமையான பதிவு – பள்ளிக் கூடத்தின் பாடல்களும் சடங்குகளும் தொன்மங்களும் அடங்கியது. அதில் அவர்கள் கண்டடைந்தது என்னவென்றால், குழந்தைகளிடையே நம்ப முடியாத அளவு பெரிய திடமான சமூக வலைப் பின்னல் இருக்கிறது. அதன் மூலம், ஒரு குழந்தைப் பாடல் வட இங்கிலாந்தில் புழங்கிக் கொண்டிருக்குமானால், ஒரே வருடத்திற்குள் நீங்கள் அதை மேற்கு அமெரிக்கக் கரையோரம் கேட்கலாம்.
இது மிகவும் ஆச்சரியமான ஒன்று, அதுவும் ஃபேஸ் புக் மற்றும் சமூக வலைகளுக்கு முந்திய காலத்தில் – மேலும் அக்குழந்தைகள் மிகவும் இளம் வயதினர்.
ஆமாம், கணனி மயமாக்கப்பட்ட சமூக வலைகளுக்கு மிக முந்தைய காலத்திலேயே, குழந்தைகள் தமக்கான சமூக வலைகளைக் கொண்டிருந்தார்கள். அதை அவர்கள் பயணங்கள் மூலம் சாத்தியமாக்கிக் கொண்டார்கள். .உதாரணத்திற்கு, ஒரு குழந்தை வட இங்கிலாந்திலிருந்து தெற்கில் லண்டனிற்கு செல்லலாம், அங்கு தன் பள்ளியில் ஏதேனும் புதியதை அறிமுகப்படுத்தலாம் , பின் அங்கிருந்து இன்னொரு குழந்தை அமெரிக்காவிற்கு செல்லலாம், அது மேற்கு கரையோரம் சென்று சேரும் வரை இந்த சங்கிலி அப்படியே தொடரும். எனக்கு ஓப்பியின் புத்தகத்தில் விசேஷமாக பிடித்தது, அவர் செய்திருக்கும் இந்த அருமையான படிப்பாய்வு. அவர்களது முக்கிய செய்தி என்னவென்றால், நாம் குழந்தைகளை குறைபாடு உடைய மனிதர்களாக பார்க்காமால், பள்ளிக் குழந்தைகளை தமக்கென ஒரு உலகை உருவாக்கிக் கொண்டு அவர்களை சுற்றியுள்ள உலகைப் புரிந்து கொள்ள முயலும் மனிதர்களாகவே பார்க்கவேண்டும். மேலும், அவர்கள் உருவாக்கும் உலகம், பெரும்பாலும் நாம் வளர்ந்தவர்களாக உருவாக்கக் கூடிய உலகை விட மிகுவும் வளமையானது.
இந்த குறிப்பிட்ட புத்தகம் நம்மை விசேஷமாக கவருவதற்கு காரணம் அது மிகவும் நெருக்கமாகவும், மிக அருகாமையில் இருப்பதாலும் தான். இது ஒருவகையில் அயோனாவின் நாட்குறிப்பைப் போன்றது. அவர் தன் கணவர் பீட்டர் இறந்த பின், ஒரு ஆண்டு முழுவதும் ஒரு விளையாட்டு மைதானத்தில் ஒரு மூலையில் அமர்ந்து, அங்கு இருக்கும் குழந்தைகளைப் பற்றிய தனது அவதானிப்புகளை இதில் பதிவு செய்திருக்கிறார்.ஒரு மனிதவியலாளர் ஒரு கிராமத்திற்கு செல்வது போல, அவர் குழந்தைகள் மைதானத்திற்குப் போய்க் கொண்டிருந்தார். அங்கு ஒரு மூலையில் அமர்ந்து, குழந்தைகளால் அவர்களுள் ஒருவராக ஏற்கப்பட்டு, அவர்கள் என்னென்ன செய்கிறார்கள், எதை எல்லாம் பற்றி பேசுகிறார்கள் எனக் கண்டறிந்தார்.
சரி, நாம் உங்களின் அடுத்த புத்தகத்திற்கு செல்வோம்- ஜேனெட் ஆஸ்டிங்க்டன்-இன் ‘குழந்தை கண்டடையும் மனது’ (Janet Astington’s ’The Child’s Discovery of the Mind).
இந்தப் புத்தகம் ஹார்வர்டு பல்கலைக் கழக அச்சகத்தின் மிகச்சிறந்த தொகுப்பான ‘வளரும் குழந்தை’ (The Developing Child) இல் இடம்பெற்றிருக்கிறது. உண்மையில், இத்தொகுப்பிலிருந்து நான் எந்த ஒரு புத்தகத்தையும் தேர்வு செய்திருக்கலாம். அவர்கள், வளர்ச்சியியல் அறிவியலாளர்களை, தங்கள் ஆய்வுகளை எளிமையான வகையில் சாமானியருக்கும் புரியும் வகையில் எழுதச் சொல்லிக் கேட்டுக்கொண்டனர். குறிப்பாக, இந்த புத்தகம், கடந்த 30 வருடங்களில் செய்யப்பட்ட மிக சுவாரஸ்யமான ஆய்வுகளில் ஒன்று. அதாவது, குழந்தைகள் தம்மைச் சுற்றிய மனிதர்களை எப்படிப் புரிந்துகொள்கிறார்கள் என்பதைப் பற்றிய நமது புரிதலைப் பற்றியது இப்புத்தகம்.
மறுபடியும், நமது மரபான புரிதல் என்பது குழந்தைகள் மிகவும் சுய-மைய நோக்குடையவர்கள், அடுத்தவர்களுடைய பார்வையில் இருந்து யோசிக்க மிகவும் சிரமப் படுபவர்கள், அவர்களால் மனதிற்கும் உடலிற்குமான வேறுபாடுகளைப் புரிந்துகொள்ள முடியாது போன்றவை ஆகும். இவை எல்லாம் நாம் பியாஜேயிடம் இருந்து பெற்றவை. ஆனால், ஜானெட் ஆஸ்டிங்க்டன் இப்புதகத்தில் நமக்கு தொகுத்து அளித்திருப்பது, குழந்தைகள் தம் மனங்களைப் புரிந்து கொள்வதில் எத்தனை பண்பட்டவர்களாக இருக்கிறார்கள் என்பதைப் பற்றிய ஆய்வுகள் ஆகும்.
அத்தகைய பண்படுதலுக்கு ஒரு உதாரணம் சொல்லுங்களேன்.
மூன்றிலிருந்து நான்கு வயதிற்குள் குழந்தைகள், மனிதர்கள் ஒரே விஷயத்தைப் பற்றி பல கோணங்களில் யோசிக்க முடியும் என்பதைப் புரிந்துகொள்ள ஆரம்பிக்கிறார்கள்.ஒரு உதாரணத்திற்கு, நான் உங்களிடம் ஒரு மூடிய மிட்டாய் டப்பாவைக் காண்பிக்கிறேன். ஆனால், அதனுள் பென்சில்கள் இருக்கின்றன. அது மூடியிருப்பதால், அது உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. ஆக, நான் அதனுள் பென்சில்கள் இருப்பதாக நினைக்கலாம், ஆனால் நீங்கள் அதனுள் மிட்டாய்கள் இருப்பதாக நினைக்கலாம். இதை, குழந்தைகள் மூன்றிலிருந்து நாங்கு வயதிற்குள் அறிந்து கொள்கிறார்கள்.இந்த சின்னஞ்சிறிய வயதுக் குழந்தைகள், எப்படிப் பல மனிதர்களும் உலகைப் பற்றிய பல பார்வைகளைக் கொண்டிருக்கக்கூடும் என்ற ஆழமான புரிதலைப் பெறுகிறார்கள்.
இதே முடிபுக்குத்தான் உங்கள் ஆய்வுகளும் வந்தனவா?
ஆமாம். சொல்லப் போனால், அவர் விவரித்திருக்கும் சில ஆய்வுகளில் நான் 1980 களில் பங்குபெற்றிருக்கிறேன். சில சமயங்களில் பல அறிவியலார்களும் ஒரே விதமான பிரச்சனைகளை ஒரே சமயத்தில் ஆய்வு செய்யத் தொடங்கி பல சுவாரஸ்யமான முடிபுகளுக்கு வருவார்கள். இது, அத்தகைய ஒரு சந்தர்ப்பம். இதில் வேலை இன்னும் தொடர்கிறது, மேலும் இளம் வயதுக் குழந்தைகளின் திறன்களை வெளிக்கொணர்ந்து கொண்டிருக்கிறது.
இத்தகைய ஆய்வுகளெல்லாம் கடந்த சில பத்தாண்டுகளிலேயே நிகழ்த்தப்பட்டிருபதைப் பற்றி தாங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
ஒரு காரணம் என்னவென்றால், நமக்கு அவற்றை சோதிப்பதற்குப் புது செய்முறை உத்திகள் கிடைக்க ஆரம்பித்தன. நாம் கண்டறிந்தது என்னவென்றால், குழந்தைகள் என்ன செய்கிறார்கள், என்ன பேசுகிறார்கள் எனக் கவனித்தல் மூலம், அவர்களின் மனம் செயல்படும் விதம் பற்றி மேலும் புரிந்துகொள்ளலாம். இது, இன்னும் மொழித்திறன் வளராத குழந்தைகளிடமும் சாத்தியம். இன்னும் பள்ளிக்கு செல்லாத இளம் குழந்தைகளிடம் கூட, அவர்கள் செய்யும் எல்லாவற்றையும் கவனிப்பதைக் காட்டிலும், அவர்களிடம் மிக குறிப்பிட்டக் கேள்விகளைக் கேட்பதன் மூலம், நம்மால் மேலும் தெளிவான புரிதலை அடைய முடியும்.
இப்படி இளம் குழந்தைகள், இயல்பாகவே திறமைசாலிகளாகவும் புத்திசாலிகளாகவும் இருந்தும், மற்ற மிருகங்களுடன் ஒப்பு நோக்கும் போது, நாம் ஏன் குழந்தைப் பருவத்தில் இத்தனை ஆபத்துகளுக்கு உள்ளாகக் கூடியவர்களாக இருக்கிறோம் என நினைக்கிறீர்கள்?
நான் என் சமீபத்திய புத்தகத்தில் வாதாடுவது என்னவென்றால், இங்கு ஒரு பேரம் நடக்கிறது. நீங்கள், பலவித விலங்குகளை, அவற்றின் பலவித இனங்களைக் கவனித்தீர்களானால், அவற்றில் குட்டிகள் முதிர்ச்சியற்று பலவீனமாக இருப்பதற்கும் வளர்ந்தவை மிகப் பண்பட்டவையாக இருப்பதற்கும் ஒரு ஒட்டுறவு இருப்பதைக் காணலாம்.ஒரு உதாரணத்திற்கு, காகங்கள் கோழிக் குஞ்சுகளை விட கூர்மையான புத்தியுடையவைகள். ஆனால், அவைப் பறக்க கற்றுக்கொள்ளும் வரை,அதிக காலத்திற்கு தன் தாயை சார்ந்திருக்கும். இதிலிருந்து நமக்கு கிடைக்கக் கூடிய கருத்து என்னவென்றால், நம் அறிவை செயல்படுத்துவதற்கு முன்பாக, நாம் பலவற்றைவும் கற்றுக்கொள்ள நமக்கு ஒரு பாதுகாப்பான காலகட்டம் தேவைப் படுகிறது. குழந்தைகள் கற்பதில் அசாதாரணத் திறனுடையவர்கள். ஆனால், உலகை எதிர்கொள்ளும் சாமர்த்தியம் அவர்களிடம் குறைவு. அவர்களால் கற்றுக்கொள்ள முடியுமே தவிர, தாமாகவே ஷூக்களை அணிந்து கொள்வதோ, கால் சட்டையை உடுத்திக்கொள்வதோ தினமும் காலை பள்ளிக்கு செல்வதோ அவர்களால் முடியாது.
இது எனக்கு ஒரு அறிவாளியான பல்கலைப் பேராசிரியரை நினைவுப்படுத்துகிறது!
ஆம், அது என்னுடைய இன்னும் ஒரு தரப்பு ஆகும். நான் அடிக்கடி சொல்வதுண்டு, குழந்தைகள் சிறு விஞ்ஞானிகள் இல்லைதான், ஆனால் விஞ்ஞானிகள் என்னவோ பெரிய குழந்தைகளே!
உண்மையான கூற்று! அல்மா கோட்லீப்-இன் “மறுமை என்பதிலிருந்து தான் நாம் வருகிறோம்”-ஐ (Alma Gottlieb’s The Afterlife is Where We Come From) பற்றிக் கேட்போம்.
இந்த ஐந்து புத்தகங்களின் வழியாக, நான் உளவியல் மட்டுமல்லாது பிற துறைகளிலும் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதைப் பற்றிய ஒரு பார்வையை அளிக்க முயல்கிறேன். இந்த புத்தகம் ஒரு மனிதவியலாளரால் எழுதப்பட்டது. இதில் அல்மா, ஆப்பிரிக்காவின் ஒரு மிக ஏழ்மையான சமூகத்திலுள்ள குழந்தைகள் மற்றும் சிறுவர்களைப் பற்றிய மனிதவியல் நோக்கிலான பதிவுகளைத் தொகுத்து எழுதியிருக்கின்றார். இது, அந்த சமூகத்தில் தாய்க்கும் சேய்க்கும் இடையிலான உறவைப் பற்றிய மிக அழகான, நெகிழ்ச்சியான பதிவு. மேலும் இங்கு குழந்தைப்பருவம் என்பது நீடித்த ஆபத்தில் இருக்கும் போதும், இந்த உறவு எத்தனை நெருக்கமானதாக இருக்கிறது என்று காட்டுகிறார்.
பல குழந்தைகளும் தம் ஒரு வயதிற்குள்ளாகவே இறந்துவிடுகின்ற நிலையிலும், தாய்மார்கள் தம் குழந்தைகளின் இந்த ஆபத்து நிலையை எதிர்கொள்ளத் தம்மைப் பயிற்றுவித்துக் கொண்டிருக்கிறார்கள். எல்லா சுவாரஸ்யமான மனிதவியல் தொகுப்புக்களைப் போல இதுவும் நம்மைக் கவர்கிறது, ஏனென்றால், ஒன்று, அவர்களுடைய மனப்பாங்கும், நம்பிக்கைகளும் நம்முடையதை விட மிகவும் வித்தியாசமானவையாக இருக்கின்றன. ஒரு உதாரணத்திற்கு, பிறந்த குழந்தைகளுக்கு இவ்வுலக வாழ்வில் மகிழ்ச்சியூட்டினால் அவர்கள் இறக்காமல் இருப்பார்கள், மீண்டும் தாம் முன்பிருந்த மறுமைக்கே செல்லாமலிருப்பார்கள் என்பதாகக்.கருதித் தாய்மார்கள் அவர்களுக்கு அழகான நகைகளை அணிவிப்பதை முக்கியமாக வைத்திருக்கிறார்கள். இன்னும் சில விஷயங்களும் நம்மைக் கவர்கின்றன, ஏனென்றால் அவை எந்த ஒரு தற்காலத் தாய்க்கும் தெரிந்திருக்கக் கூடியவை.
எனக்கு மிகவும் பிடித்த விஷயங்களில் ஒன்று உள்ளூர் ‘ஷாமன்’களைப் பற்றிய குறிப்புகள். தாய்மார்கள் தம் குழந்தைகளைக் குறித்து ஷாமன்-களிடம் ஆலோசனை பெறுகிறார்கள். அவர்கள் எல்லாரும் எங்கும் உள்ள குழந்தை நல மருத்துவர்கள் போலவே தெரிகிறார்கள். அவர்களிடம் இந்த அசாதாரணமான அமைதியான நிலையும், தாம் பேசும் விஷயங்களைப் பற்றி, அவை மாயாஜாலங்களும் சடங்குகளாகவுமே இருந்தாலும், சர்வ நிச்சயமும் இருக்கின்றது. அது பெர்ரி பிராஸில்டன் அல்லது ஜினா ஃபோர்டு பேசுவது போலவே இருக்கலாம். அப்படியானால், மேற்கத்திய தாய்மார்கள் தம் குழந்தைகளுக்கு செய்வதும் உண்மையில் ஒரு வித மாயாஜாலம்தான் என நினைக்கத் தோன்றுகிறது.
ஸேரா ஹார்டி-யின் ‘ தாய்களும் மற்றவர்களும் : பரஸ்பர புரிதல்களின் பரிணாம ஊற்றுகள்’ (The Evolutionary Origins of Mutual Understanding, by Sarah Hrdy) புத்தகத்துடன் [நம் உரையாடலை] நிறைவு செய்வோமே.
இது இன்னுமொரு மனிதவியாளரால் எழுதப்பட்ட புத்தகம். எனினும், ஸேரா, அல்மாவைப் போல ஒரு சமூக நோக்கிலான மனிதவியலாளர் இல்லை, அவர் ஆதிக் குரங்கினங்களை ஆராயும் ஒரு உயிரியல் நோக்கிலான மனிதவியலாளர். உண்மையில், குழந்தைகளுக்கும், அவர்களைப் பராமரிப்பவர்களுக்கும் இடையிலான உறவு எவ்வாறு பரிணமிக்கிறது என்பதைப் பற்றியது இப்புத்தகம். இதில் அவரது மிக சுவாரஸ்யமான தரப்பு என்னவென்றால், நம்முடைய பரிணாமச் சிறப்பியல்பு என்பது நாம் நம் பராமரிப்பிற்காக நம் தாயை மட்டுமே சார்ந்திருக்க முடியாது என்பதாகும்.
நாம் பெரிய அளவில் நம் மூதாதைக் குரங்கினங்களைப் போல, ஒரு விரி-குடும்ப அமைப்பைச் சார்ந்திருக்கிறோம். அவருடைய கருத்துப்படி மனிதர்கள் சிம்பன்ஸீ மற்றும் கொரில்லாக்களைவிட குறிப்பாக லாங்கூர் குரங்கினங்களை ஒத்திருக்கிறோம். இது நம் குழந்தைப் பராமரிப்புப் பழக்கங்களை விளக்கக் கூடும்.
தற்பொழுதைய நம் குழந்தைப் பராமரிப்புப் பாணிகள் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
எனக்கு ஸேரா ஹார்டி-யினுடைய ஆய்வு மிகவும் பிடித்தமைக்கு ஒரு காரணம், அவர் அழுத்தமாக ஒரு விஷயத்தைக் கூறுகிறார். அதாவது, புற நகர்களில் வாழும் தாய்மார்கள் எந்த நேரமும் அவர்கள் குழந்தைகளுடன் வீட்டிற்குள் இருப்பதுதான் இயல்பான ஒன்று என நாம் நினைப்பது தவறு என்கிறார். உண்மையில், ஒரு குழந்தையை வளர்க்க. தந்தை, தாத்தாக்கள், பாட்டிகள், மாமாக்கள், அத்தைகள் என நமக்கு ஒரு சமூகமே தேவைப்படுகிறது. நமக்கான நடைமுறை சவால், இங்கு நாம் இதை எப்படி சாத்தியப்படுத்த முடியும் என யோசிப்பதாகும். ஒரு உடனடியான முயற்சியாக, நாம் விளையாட்டுப் பள்ளிகளையும், ஒரு கிராமத்து சமூகத்தைப் பிரதி எடுக்கும் பிற அமைப்புகளையும் உருவாக்கலாம். அதாவது, மூன்று வயது குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவதற்கு பதில், ஒரு லட்சிய கிராமத்தின் சூழலைக் கொடுக்கும் வகையில் அமைந்த ஒரு விளையாட்டுப் பள்ளிக்கு அனுப்பலாம்.அங்கு குழந்தைகள் துழாவித் துளைந்து, தாமாகப் பல விஷயங்களைக் கண்டறியலாம், விளையாடலாம், தம் மீது அக்கறை உள்ள, அவர்களைக் கண்காணிக்கும் பெரியவர்களுடன் இருக்கலாம். இது குழந்தைகளின் உண்மையான பெற்றோர் அவர்களுடன் இருப்பதற்கும், அவர்களைப் பராமரிக்கும் நேரத்தில் தம் வேலையையும் பார்த்துக்கொள்வதற்கும் ஏதுவான ஒரு சமூக அமைப்பை நமக்கு சுட்டுகிறது. இத்தகைய அமைப்பைத் தான் நாம் நம் பரிணமப் படிநிலையின் முந்தைய கட்டத்தில் கொண்டிருந்திருப்போம்.