குட் பை, வி வி எஸ்

vvs_laxman

“ஸாக்கர் விளையாட்டின் சரித்திரம் அழகிலிருந்து கடமையுணர்விற்குப் போய் முடிந்த ஒரு சோகப் பயணம். அந்த விளையாட்டு ஒரு தொழிலாய் ஆனபோது விளையாட்டின் உவகையிலிருந்து மலரும் அதன் அழகு வேரோடு களையப்பட்டுவிட்டது.

நூற்றாண்டின் திருப்பத்தில் இருக்கும் உலகில் தொழில்முறை ஸாக்கர், உபயோகமற்ற – அதாவது பண லாபம் அளிக்காத – அனைத்தையும் நிராகரிக்கின்றது. விளையாடுகிறோம் என்கிற உணர்வே இல்லாமல், நோக்கமற்று, நேரத்தையோ, நடுவரையோ பற்றிய நனவற்று, ஒரு பலூனோடு விளையாடும் குழந்தையாய், நூல் கண்டோடு ஆடும் பூனையாய், பலூனையோ நூல் கண்டையோ போன்ற இலேசான பந்தோடு ஆரவாரிக்கும் பாலே நடனக்காரராய் ஒரு மனிதனை ஒரு கணத்துக்கு மாற்றிவிடும் அந்த பித்து உணர்விலிருந்து யாரும் ஒன்றும் சம்பாதிப்பதில்லைதான்.”

1995-ல் எடுஆர்டோ கேலிஆனோ எழுதிய ‘ஸாக்கர் இன் ஸன் அண்ட் ஷேடோ’ (Soccer in Sun and shadow) என்ற அருமையான புத்தகம் இப்படி ஆரம்பிக்கிறது. மான்டவிடியோவில் ஆன்மா இல்லாத ஒரு ஸாக்கர் மைதானத்தில் ’தான் விளையாடுகிறோம் என்றே உணராமல், வெறெந்த குறிக்கோளோ, கடிகாரமோ, ஆட்ட நடுவரோ இல்லாத” நிலையில் ஆட்டத்தை அணுகும் ஒரு விளையாட்டு வீரனை ஏக்கத்துடனும் வலியுடனும் தேடும் துயரமான ஒரு கேலிஆனோவின் தோற்றத்தை மனதில் எழுப்பும் ஒரு பத்தி இது.

கேலிஆனோ பார்த்திருக்க வேண்டியது வி.வி எஸ் லக்ஷ்மனை. மட்டையின் ஒரு நளினமான திருப்பத்தின் மூலம் கடும் வியாபாரமான கிரிக்கெட்டை ஒரு குதூகலமான பொழுதுபோக்காய் மாற்றவும், நடுத்தர வயது மனிதர்களை அவர்களின் பணியிடங்களிலிருந்து கிளப்பி வீட்டின் கொல்லைப்புறத்துக்கு விளையாடக் கூட்டிச் செல்லவும், நம்மை நம் ஆசனங்களில் எதிர்பார்ப்பு கூடிய உயிர்ப்புடன் நிமிர்ந்து உட்காரவும் செய்யும் திறமை வாய்ந்த ஒரு கிரிக்கெட் வீரர்.

வி.வி.எஸ் லக்ஷ்மன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று விட்டார். அவர் நமக்கு முன்னறிவிப்பு, முன்னெச்சரிக்கை எதுவுமே கொடுக்கவில்லை. சனிக்கிழமைக் காலை இதை அறிவிப்பதற்கு சில நாட்கள் முன்பு இந்த சிந்தனையுடன் விளையாடிக்கொண்டிருந்ததாய் அவர் சொல்கிறார். லக்ஷ்மன் சிந்தனைகளுடன் விளையாடுவது எனக்குப் பிடிக்கிறது. லக்ஷ்மன் எதனுடன் விளையாடினாலும் அது எனக்கு பிடிக்கும். ஏனெனில் அவர் எதனுடன் விளையாடினாலும் நாம் முன்பு யோசித்தே இருக்காதவகையில் அற்புதமாய் விளையாடும் கலைத்திறனுடையவர் லக்ஷ்மன்.

கொல்கத்தாவின் 2001 ஆட்டத்தின் மாயாஜாலத்தை தம் வார்த்தைகளில் கைப்பற்ற பல எழுத்தாளர்கள் முயன்றிருக்கிறார்கள். அந்த பிரும்மாண்டமான 281 ரன்களின் சாரத்தை வெளிக்கொணருவது சாத்தியமா என்ன? பீடர் ரோபக் சற்றே அருகில் வருகிறார்: “ வகுப்பின் கடைசிவரிசை மாணவன் திடீர் என்று எழுந்து ஒரு முக்கியமான விவாதத்தில் அரசாங்கமே கவனிக்கும் அளவில் ஒரு கம்பீரமான பேச்சைக் கொடுப்பது போல அன்று அவர் (லக்ஷ்மன்) ஆட்டத்துக்குக் கை கொடுத்தார்.”

லக்ஷ்மன் பின்பெஞ்சு மாணவர்தான் – மிக நல்ல பின்பெஞ்சுக்காரர் கூட. அடிக்கடி உபயோகிக்கப்பட்டு ”நல்ல” என்னும் சொல் அதன் அர்த்தத்தை இழந்து விட்டது, ஆனால் விவிஎஸ் நல்லவர், மிகவும் நல்லவர், எவ்வளவு நல்லவர் என்றால் ஆட ஆரம்பித்து பல வருடங்களுக்கு அவரால் பேட்டிகளை மறுக்க முடியவில்லை. “நோ’ என்ற சொல்லை சொல்வதற்கு இத்தனை வேதனைப்படும் ஒருவரை நான் அரிதாகத்தான் பார்த்திருக்கிறேன். ஒருவருக்கு உதவி செய்ய இன்னும் சற்று தூரம் போகமுடியவில்லை என்பதற்காக வருந்தி மன்னிப்பு கேட்பார். அவர் அத்தனை வளைந்து கொடுத்தது பலசமயம் அவருக்கு எதிராக அமைந்தது – ஆரம்ப நாட்களில் பேட்டிங் வரிசையில் மேலும் கீழுமாய் அவர் தள்ளப்பட்டார்.

இவ்வளவு நல்லவராய் இருப்பது அவருக்கு எதிராய் இருக்கிறதா அன்று ஒருமுறை நான் அவரை கேட்டேன். கொஞ்சம் யோசித்தார். பிறகு தன்னால் வேறு எப்படியும் நடந்துகொள்ள இயலாது என்பதைப் பற்றிப் பேசினார். “என் வளர்ப்பு அப்படி. நான் நல்லவனாய் நடப்பது மற்றவர்களுக்காக இல்லை, நான் அப்படித்தான். நல்லவனாய் இருப்பது தப்பில்லையே. நான் சொல்வது சரிதானே?”

அந்தக் கடைசி வாக்கியத்தை மறுபடி படியுங்கள். ’எப்படி நல்லவன்’ என்பதின் எல்லைகளைத் தாண்டி லக்ஷ்மன் நிற்கிறார் என்பது புரியும். ”நல்லவனாய் இருப்பது தப்பில்லையே. நான் சொல்வது சரிதானே?”

லக்ஷ்மனின் ஆட்டத்தின் அழகுநயத்தைப் பற்றியே பலரும் பேசுவதில் பலதிசைகளில் அசாதாரணமான இயங்கும் அவரது திறமை அடிபட்டுப்போகிறது. ஒத்துழைக்காத ஒரு பிட்சில் ( ஆஹ்மதாபாத் 96 – அவரது முதல் மாட்ச்) அவரால் சுரண்ட முடியும், கடைசி ஆட்டக்காரருடன் சேர்ந்து ரன்களை பொறுக்க முடியும் ( பெர்த் ’08, மொஹாலி ’10 என்று நினைக்கிறேன்); நேரத்தை கடத்த முடியும். வேகப்பந்துக்கு எதிராய் அவர் ஆட்டம் அபாரமானது – ஸ்விங் மற்றும், ஸீம் வீச்சுக்கெதிராய் அவ்வளவு இல்லை எனினும் வேகப்பந்து வீச்சுக்கு எதிரே அவர்தான் ராஜா. சுழல் பந்து வீச்சுக்கு எதிரே இந்தியாவின் மிகச் சிறந்த பாட்ஸ்மன் இவர்தான் (a colossus among the giants-மாபெரும் ஆட்டக்காரர்களிடையே ஒரு பேருருவம்).

அவர் பல ஆட்டங்களை நம் அணிக்கு ஜெயித்துக் கொடுத்தார் – பல பல ஆட்டங்கள். லக்ஷ்மன் ஆட்டத்தில் இருக்கும் வரை இந்தியாவுக்கு வாய்ப்பு இருந்தது. சில வகைகளில் அவர் கிரிக்கெட்டின் ராஜர் ஃபெடெரெர் என்று சொல்லலாம். ஸ்டீவ் டிக்னார் ஃபெடெரெரைப் பற்றி சொல்வது போல “சரித்திரத்துக்கு விசேஷமானது அவரது ஆட்ட நேர்த்தி அல்ல, அவர் நேர்த்தியை வேலை செய்ய வைத்திருக்கும் விதம்.”

இதைச் சொல்கையில் எனக்கு 2008 ல் ஸிட்னி கிரிக்கெட் மைதானம் நினைவுக்கு வருகிறது. மெல்போர்னில் இந்தியா அடித்து நொறுக்கப்பட்டிருந்தது, ஆட்டக்காரர்கள் உள்ளிருந்து வெளியே பரவும்(inside out field) ஃபீல்டிங் அமைப்பில் மூச்சு திணற அடிக்கப்பட்டிருந்தனர். நான்குகள் சுலபமாய் கிடைக்காத சமயங்களில் இந்திய பேட்ஸ்மென் தாக்க எளிதானவர்கள் என்பதை ஆஸ்திரேலியா அறிந்திருந்தது. ரன்களை கட்டுப்படுத்தும் வகைப் பந்து வீச்சும், புதுமையான கள அமைப்புகளும் இந்த பெருமைவாய்ந்த பேட்டிங் அணிவகுப்பை சிதற அடிக்கும் என்பதை அவர்கள் புரிந்திருந்தனர்.

ஆஸ்திரேலியா 134-6 லிருந்து 463க்கு மீண்டிருந்தனர். ஜாஃபர் 25 பந்துகளில் 3 ரன் எடுத்து அவுட் ஆகி இருந்தார். ட்ராவிட் திணறிக்கொண்டிருந்தார் – சாதாரணத் திணறல் இல்லை காப்பியத்திணறல். ஆட்டத்தொடர் கை நழுவிப் போய்க் கொண்டிருந்தது. எத்திசையிலும் தடைகள். அது வரியில் இந்திய பேட்ஸ்மென் வெறுமே குத்திக் கொண்டும் பேட்டை நீட்டிக்கொண்டும் இருந்தனர். பார்வையாளர் கூட்டம் கூட ஒரு போட்டிக்காக ஏங்கியது.

வந்தார் லக்ஷ்மன். அப்புறம் வந்தது ஜெயிலை உடைத்துக் கொண்டு வந்தார்போல ஒரு ஓட்டம். ஒன்றன் பின் ஒன்றாய் கவர் ட்ரைவ்கள் அவருடைய பேட்டைப் பிய்த்துக்கொண்டு வந்தன. அந்த வீச்சுகளில் ஒரு அபாரமான புத்துணர்ச்சி இருந்தது. புத்தம் புதிய கரன்ஸி நோட்டுக் கற்றையை எண்ணுவது போல சரக் சரக் சரக் என்று இருந்தது என்று இங்கு எழுதி இருந்தேன். அடுத்த அரை மணியில் மைதானத்தின் சூழ்நிலையை மொத்தமாய் மாற்றி விட்டது. அவரது ஆட்டத்தில் பார்வையாளர்கள் மலைப்புற்று ஸ்தம்பித்துப்போயிருந்ததைப் பார்க்கமுடிந்தது.டொக், ஹ்ம்ம்ம், டொக், ஹ்ம்ம். ஸ்டாண்டில் ஒரு பார்வை இழந்தவர் கூட லக்ஷ்மனின் ஆட்டத்தின் பரிமாணத்தை உணர்ந்திருக்க முடியும். மேம்படுத்தும் ஆட்டம் அது. அதற்குப் பின் உலகம் மீண்டும் உன்னதமானதாய் தெரிந்தது.

அதுதான் லக்ஷ்மனின் மேதைமை. குழந்தைகளின் புத்தகங்களில் வரும் தேவதைகள் போல லக்ஷ்மன் நம் விருப்பங்களை பூர்த்தி செய்வார். நீண்ட நாட்களாய் நீங்கள் ஆசைப்படுவதை, கிரிக்கெட் களத்தில் நடக்கவே நடக்காது என்று நினைக்கும் விஷயங்களைக் கூட, நீங்கள் அவரிடம் கேட்கலாம். அவர் அதை பூர்த்தி செய்வார். ஒரு முறை அல்ல, இரண்டு முறை அல்ல, திரும்பத் திரும்ப. உங்கள் உள்மனதின் குரல் அவருக்குக் கேட்டது, அவர் ஒரு மாயத்தொடுகையால் உங்களுக்கு பதில் கொடுத்தார்.

லக்ஷ்மன் பிறப்பதற்குப் பல வருடங்களுக்கு முன் டான் மெக்லீன் ‘அமெரிகன் பை’ என்ற பாட்டை பாடினார். லக்ஷ்மன் போல அழிக்கமுடியாத தடத்தை விட்டுச்செல்பவர்களை அவர் புரிந்திருந்தார்:

பல பல காலத்துக்கு முன்….
ஆனால் இப்போதும் எனக்கு நினவிருக்கிறது
அந்த இசை என்னை புன்னகைக்க வைத்த விதம்
அப்போது எனக்குத் தெரிந்தது
எனக்கு வாய்ப்புக் கிடைத்தால்
அவர்களை என்னால் நடனமாட வைக்க முடியும்
கொஞ்ச நேரம், ஒருவேளை, அவர்கள் சந்தோஷமாய் இருப்பார்கள்.

அந்தப் பாடல் எனக்கு நேற்று நினைவுக்கு வந்தது. அந்த பாடலின் கோரஸுக்கு முன்பு அடிக்கடி வரும் பல்லவியின் இறுதி வரியையும் நினைத்தேன்: “இசை இறந்த அந்த நாள்.” (the day the music died)

ஏனென்றால் நம் அனைவருக்கும் தெரியும் – சனிக்கிழமையன்று(18.08.2012) ஒருவகையில் இசை இறந்து போனது.