கவிதைகள்

smoke-art

அன்பின் மலர்கள்

யாரோ ஒருவரது கதையின்,
எழுதப்படாத பக்கங்களிலிருந்து
தவறிவிழுந்த வயதான மனிதர் அவர்.
எந்தப் புனைவிலும்
முழுமையாய் சொல்லப்படாத
ஒரு வாழ்க்கையோடு,
நம் நகரத்தின் தெருக்களில்
மெலிந்த நிழல்களின் ஊடே அவர்
அலைந்து கொண்டிருக்கிறார்.
அவரது உடலில் அரிசி மண்டி வாடையடிக்கிறது.
யாரிடம் கொடுப்பதென்று தெரியாமல்
பழைய செய்தித்தாளில் பொட்டலம் கட்டிய
தன் வாழ்க்கையை அழுத்திப் பிடித்தபடி
ஜன்னலோர ரயில்
இருக்கையில் அமர்ந்து தூங்கிக்கொண்டிருக்கிறார்.
கிட்னியில் கல் வளர்ந்திருக்கிறது,
சர்க்கைரை நோயுடன் சேர்த்து
நேரத்திற்கு சாப்பிடாததால்
வயிறு வேறு புண்ணாகி போயிருக்கிறது.
ரொம்ப நாட்களுக்கு முன்னர்
தன் வீட்டு மொட்டை மாடியில்
செங்கற்களினாலான பெரிய தொட்டியில்
அம்பாரமாய் மணல் கொட்டி
நிறைய ரோஜாப் பூக்கள் நட்டு வைத்திருந்தார்.
எப்பொழுது பார்த்தாலும்
மனைவியோடு சண்டைதான்
அவளுக்கு சமைக்கத் தெரியாது
அவளுக்கு அறிவு கிடையாது
ஒரு பெரிய சரிவின்முடிவில்
நடுத்தெருவில் நிற்க நேர்ந்தபோது
மனைவி மட்டும் உடனில்லையென்றால்
என்னவாகியிருப்போம்
சமைக்கத் தெரியாத அறிவே இல்லாத
மனைவின் கருத்த கைகள்
தோளைப் பற்றுவதாக உணர்ந்தவர்
அதிர்ந்து கண் விழித்தார்.
ஆளற்ற ரயிலில்
ப்ளாஸ்டிக் கவர்களும்
காய்ந்த பழத் தோல்களும் அசைவற்றிருந்தன.
எவ்வளவு காலங்கள் காத்திருந்தும்
தொட்டியில்
ஒரு ரோஜாப்பூ கூட மலரவேயில்லை.
மகனைப் படிக்க வைத்தார்
மகனின் நண்பர்கள்
அவரை அவனது தாத்தா என்று நினைத்தனர்.
இருந்தும் மகனுக்கு அவரை ரொம்பவும் பிடிக்கும்
அது கடைசிவரையிலும் அவருக்கு தெரியவேயில்லை.
அவர் நினைத்தார்,
அவர் ஆசைப்பட்டார்,
அவர் கனவுகண்டார்,
எப்பொழுதேனும் நம் வாழ்க்கைக்குள்
நாம் நுழைந்துவிடுவோமென.
ஆஸ்பத்திரி வீச்சம் மூச்சுமுட்ட
எவரிடமும் சொல்லிக்கொள்ளாமல்
அவர் கிளம்பி வந்துவிட்டார்.
போன வாரத்தில் ஒருநாள்
அவரது சின்ன மாமா
புற்றுநோயில் தொடையிடுக்கு சதையழுகிப்போக
ரணமும் வலியும் தாளாது
ரயிலில் விழுந்து தற்கொலை செய்துகொண்டார்.
சுருங்கிய தசையின் மீதேறி
ரத்தமாய் பாய்ந்து மறைந்தது ரயில்
தனக்கேன் புற்றுநோய் வராமல் போனது
என யோசித்தபடியே தண்டவாளத்தையொட்டி
நடந்துக் கொண்டிருக்கிறார் அவர்,
இரண்டு பக்கங்களிலும் பெருகும்
கூவம் நதியில் பூத்துக் குலுங்குகின்றன
அன்பின் நீல வண்ண ரோஜா மலர்கள்.

-துரோணா

காதல் துளி

கரையைத் தொட்டுப்
பின் செல்லும்
அலைகள் எல்லாம்
வேறு வேறு என்றாலும்
அலைகளில் அடர்ந்த
நீர்த்துளிகளுமா வேறு வேறு?

ஓர் அலையில்
ராட்டினமாடிக்கொண்டு
வந்தவை அணிமாறி
அடுத்தத் தொகுப்பில்
அடைந்துகொண்டு
எத்தனை முறை
புரண்டெழுந்தாலும்
கரைக்குத் தெரியும்
எந்தத் துளியின் முத்தம்
தன் மடியில்
குமிழாய்ப் பொரிந்ததென்று !

இரட்டுர மொழிதல்

கோபமோ தாபமோ
காமமோ காதலோ
எதையும்
வாய்ச் சொல்லாய்ச்
சொல்லாது
கவிதைக்குள் பதுக்கிவிடலாம்.

படித்துப் பார்த்தபின்
கோபமும் தாபமும்
காமமும் காதலும்
இரட்டிப்பானது தனக்கென்று
புலம்புவாள் மனைவி.

-ரமணி

நிலத்திலிருந்து ஒரு அலை

தேடிக் கொண்டிருப்பது போல்
வீசும்
உப்பங்காற்று.

கடற்கரை மணலில்
யாருமில்லை.

அனாதையாய்
அலைகள் புலம்பும்.

எங்கிருந்தோ
அதைக் கேட்டு
நிலத்திலிருந்து
ஒரு அலை.

குரைத்துக் கொண்டே
கடலை நோக்கி
ஓடும்.

கடல் உடையும்

காற்று
தள்ளித் தள்ளிச் சென்று
கடல் மேல்
சூல் கொண்டிருக்கும்
கரு மேகங்கள்.

காலம்
தள்ளித் தள்ளிச் சென்றும்
கலையாத
என் சோகங்கள் போல்.

ஒரு
மழைத் துளி
கடல் மேல் விழும்.
கடலாகும்.

ஒரு
கண்ணீர்த் துளி விழுந்து
கரையும் சோகத்தில்
என்னுள்
கடல் உடையும்.

கு.அழகர்சாமி

கடவுளின் உரையாடல்

பனி விழும் இரவல்ல
வேர்வையின் துளிகள்
உடலெங்கும் பூத்திருக்க
அறையெங்கும் வீசிக்கிடக்கும்
நாற்றத்துக்குள்ளிருந்து
கடவுள் என்பவன் பேசிய குரலது
எப்போதோ அறிந்திருந்த மொழியென
ஒரு யோசனை
எப்போதும் புரிந்திராத மொழியென
ஒரு திடுக்கிடல்
சிதறி விழும்
எவர்சில்வர் டம்ப்ளர்கள்
எழுப்பும் ஒலியென ஒரு மயக்கம்
குழந்தையின் வீறிடல் என்ற உறுதி
இரண்டாம் சாமத்தில்
விடாது குரலெழுப்பும் சேவலும் சேர்ந்தபோது
வேலுடன் சேவலுடன் கொடியுடன்
ஆழ்நிலை மயக்க உலகில்
கடவுள் தெளிவாகப் பேசினான்
என் குற்றங்களைப் பட்டியலிட்டான்
நான் புரண்டு புரண்டு படுத்தேன்
காதுக்கருகில் வந்து அவன் சொல்லிக்கொண்டே போன
முடிவற்ற பட்டியலில்
அச்ச வேர்வைகள் பெருக பெருக
அவனுக்குக் களியாட்டம்
சைகையில் அவனை அடக்கமுடியவில்லை
மிரட்டலுக்கும் மசியவில்லை
மெல்ல விசும்பலும்
பிறகு கதறலுமென
காற்றில் வீசப்பட்ட என்னுடலில்
ஊழித் தாண்டவம்
காறித் துப்பினேன்
அதையும் குற்றப் பட்டியலாக்கினான் அவன்
ஒரே ஒரு கேள்வி கேட்க மன்றாடினேன்
காலில் விழுந்து புரண்டழுததும்
மெல்லப் புன்னகைத்தான்
நீயெல்லாம் கடவுளா என்றேன்
விடியத் தொடங்கியது வானம்.

தனிமையின் மொழி

ஓவியம் என்றேன்
காற்றில் எழுதுகிறாயா என்றான்
நிழல்!
நீரின் பரப்பிலா?
தேவதை வருவாள்!
வேசியைச் சொல்கிறாயா?
நற்சொல் சொல் என்றால்
கெட்ட வார்த்தை வருமோ என்றொரு அச்சம்
கேள்வி ஏதுமின்றி
மௌனம் காத்தேன்
எதாவது பேசேன் என்றான்
மீண்டும் எதாவது பேசேன்
மீண்டும் மீண்டும்
காமம் பின்காத்திருக்க
காதலொடு பெண்ணிடம்
ஓர் ஆண் கொள்ளும் அதே கெஞ்சல்
நானேதான் எனச் சொல்லிவிடுவானோ என்று
நீ யார் எனக் கேட்கவே இல்லை.

உலகம் அமிழும் ஓவியம்

புறாக்கூண்டுக்குள் இருந்து
புறாவை விரட்டிவிட்டு
கழுகை அடைத்து வைக்கும்
மனநிலையை எப்படி எதிர்கொள்வது
மண்ணுள்ளிப் பாம்புக்காக
கோடாரியைத் தேடியலையும்
ஒரு சித்திரத்தை
காகிதத்தில் வரைந்து
மெல்ல மெல்ல உயிர் பெருக்க
காகிதம் அமிழ்ந்து
அறை மூழ்கி
ஊர் தாண்டி
உலகம் அடங்காமல்
வெளியில் திமிறியபோது
தன்னை அவ்வோவியம்
தழுவிக்கொள்ள
சிறகை அடித்தபடி
பறக்காமல் நிலைபெற்றுவிட்ட
இன்னொரு ஓவியமாகக்
காத்துக் கிடக்கிறது
விரட்டிவிடப்பட்ட புறா.

ஹரன்பிரசன்னா

1626653633_37fcb0c0e4_o

One Reply to “கவிதைகள்”

Comments are closed.