எல்லைகளுக்கு அப்பால் – குல்திப் நய்யார் சுயசரிதை குறித்து

ஒவ்வொரு தனிமனிதனின் சுயசரிதையையுமே அதனளவில் அவ்வந்த காலகட்டத்தின் வரலாற்றின் ஒரு குறுக்குவெட்டுத் தோற்றம் என்று சொல்லலாம். பொதுவாழ்வில் ஈடுபட்டுள்ளவர்களின் சுயசரிதைகளுக்கு மேலும் ஒரு கனபரிமாணம் கூடிவந்தாலும்,அரசியல்தலைவர்கள் பலரது சுயசரிதைகள் தம் கடந்தகால செயல்பாட்டை நியாயப்படுத்தும் முயற்சிகளாகவே பெரும்பாலும் ஆகிவிடுகின்றன. இது உயர்அதிகார வர்க்கத்தினரின் சுயசரிதைகளுக்கும் பொருந்தும். அவரது சுயசரிதையை ஏன் எழுதவில்லை என்ற கேள்விக்கு ராஜாஜி, தன் கடந்தகாலச் செயல்களை தற்போது நியாயப்படுத்த விரும்பவில்லை என்றே பதிலுரைத்தார்.

பத்திரிக்கையாளர்களின் சுயசரிதைகள் வேறு விதம்.அவர்கள் பெரும்பாலும் எதனையும் நியாயப்படுத்த வேண்டியிருப்பதில்லை. அதிகமும் சாட்சிகளாகவே இருப்பதனாலோ என்னவோ கடந்தகால நிகழ்வுகளை அவர்கள் பதிவு செய்யும்போது அதற்கு நம்பகத்தன்மை அதிகமாகவே ஏற்பட்டுவிடுகிறது, மேலும் மிக நீண்ட அனுபவம் வாய்ந்த குல்திப் நய்யார் போன்றவர்களின் சுயசரிதைகள் சமகால வரலற்று ஆவணங்களாகவே மாறிவிடுகின்றன.

beyond-the-lines-an-autobiography

சமீபத்தில் வெளிவந்துள்ள நய்யாரின் பியாண்ட் த லைன்ஸ்: ஆன் ஆட்டோபயாக்ரஃபி (Beyond the Lines: an Autobiography) எனும் புத்தகம் அப்படிப்பட்ட ஒன்று. இதற்குமுன்னும்கூட Between the Lines, Scoop! : Inside Stories from Partition to the Present போன்ற புத்தகங்கள் அவர் எழுதி வெளிவந்திருப்பினும் இப்போது வந்துள்ள இந்தப் புத்தகம்தான் சுயசரிதை எனும் குறிப்போடு வந்துள்ளது.ஆனால் இதிலும் அவரது தனிப்பட்ட வாழ்க்கைக் குறிப்புகளைவிட பிரிவினைக்கு முன்னான இந்தியாவின் ஒருங்கிணைந்த பஞ்சாப் மாநிலத்தில் 1930 களில் துவங்கி 2006 வரையிலான இந்திய வரலாற்றின் முக்கிய சம்பவங்களே தொகுக்கப்பட்டு இருக்கின்றன.

தற்போது பாகிஸ்தானில் உள்ள சியால்கோட் நகரில் ஒரு பிரபல மருத்துவரின் மகனாகப் பிறந்த நய்யார் லாகூர் பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பை நிறைவு செய்து வெளிவந்தவுடன் இந்தியப் பிரிவினைக்கு ஒரு நேரடி சாட்சியாக இருக்க நேரிடுகிறது. தாமும் தம்குடும்பமுமே அகதிகளாக இந்தியாவுக்கு வந்து மற்ற எத்தனையோ எண்ணற்ற அகதிகளைப்போல் தம் வாழ்வையும் புதிதாக ஆரம்பிப்பதிலிருந்து துவங்குகிறது இந்தச் சுயசரிதை. சியால்கோட் நகரிலிருந்து டெல்லிக்கு வரும் வழியில் தங்களது அனைத்தையும் கணப்பொழுதில் இழந்து பிச்சைக்காரர்களாகவும் நாடோடிகளாவும் மாற நேரிட்ட எண்ணற்ற மனிதர்களில் ஒருவராகிறார் குல்தீப் நய்யார்.

இந்த அகதிகளின் துயரங்களை நேரில் கண்டும் அவர்களில் யாருக்கும் எந்த உதவியும் செய்ய முடியாத நிலையில் தம்மைக் காத்துக் கொண்டு புகலிடம் தேட வேண்டியதாகிறது.இதனால் ஏற்படும் குற்றஉணர்வும் இந்நிலைக்குக் காரணமான மதவெறிக்கு எதிரான ஆவேசமுமே நய்யாரின் எதிர்காலஅரசியல் நிலைப்பாடுகளைவடிவமைப்பதை இந்த நூலை வாசிக்கும்போது நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிகிறது. அன்று தொடங்கி இன்றுவரை நய்யார் இந்திய பாகிஸ்தான் நல்லுறவுக்கும் இந்தியாவின் மதச்சார்பின்மை அரசியலுக்கும் மிகுந்த அழுத்தம் கொடுத்துவரும் ஒரு குரலாக ஒலித்துக் கொண்டிருப்பதையும் நாம் புரிந்து கொள்ளலாம்.

இந்தியப் பிரிவினையைப் பற்றி ஏராளமான பதிவுகள் வந்திருக்கின்றன, இன்னமும் வந்துகொண்டே இருக்கின்றன.சுதந்திரப் போரில் ஈடுபட்டிருந்த அத்தனை தலைவர்கள்மீதும் அதற்கான பழி விழுந்திருக்கிறது. இந்த நூலில் நய்யாரின் பார்வையில் பிரிவினைக்கான பழியின் பெரும்பகுதி ஜின்னாவையே சேர்கிறது. ஜின்னாவைப் பற்றியும் அவரது பிரிவினைக் கோரிக்கையையும் பற்றிப் பேசும்போது மிகவும் சர்ச்சைக்குரிய ஒரு தகவலையும் நய்யார் பதிவு செய்கிறார். விமானத்தில் பறந்தபடி தேசத்தின் பிரிவுக்கோட்டின் இருபுறங்களிலும் நகரும் அகதிகளின் ஊர்வலத்தைக் காணும் ஜின்னா “what have I done ” என்று தலையில் அடித்துக் கொண்டு தன்அமைச்சரவை சகாவான மஜார் அலிகானிடம் புலம்பியதைப் பதிவு செய்கிறார் நய்யார். இந்த நிகழ்ச்சி மஜார் அலிகானின் மனைவி மூலம் தமக்கு தெரியவந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார் அவர்.

குல்திப் நய்யார் இந்தியாவில் படேலுக்கு அடுத்த இரு உள்துறை அமைச்சர்களின் பொதுத் தொடர்பு அதிகாரியாக பணியாற்றியிருப்பதால் சுவாரசியமான சம்பவங்களுக்குப் பஞ்சமேயில்லை. இன்று அநேகமாக மறந்தே போய்விட்டிருக்கும் கோவிந்த வல்லப பந்தும், அவருக்கு அடுத்து உள்துறை அமைச்சராக வந்த லால் பகதூர் சாஸ்திரியையும் ரத்தமும் சதையுமாகக் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்துகிறார் நய்யார். நேரு என்ற மகத்தான ஆளுமைக்குப்பின் இந்தியப் பிரதமராக பதவியேற்ற சாஸ்திரி நேருவின் நிழலிலிருந்து வெளிப்பட்டு ஒரு ஒரிஜினல் ஹீரோவாக மாறுவது அழகாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சாஸ்திரியுடனான பல சம்பவங்கள் இந்த நூலில் இருந்தாலும்,மூன்று சம்பவங்கள் என் மனதைக் கவர்ந்தன. டெல்லியில், அரசு விழா ஒன்றுக்குப் போய்விட்டுத் திரும்பும் வழியில், ஒரு ரயில்வே கேட்டின் முன் காரை நிறுத்திக் காத்திருக்கும்போது, மிகச் சாதாரணமாக தெருவோர கரும்பு ஜூஸ் கடையில் ஜூஸ் ,அருந்திவிட்டு பையில் இருக்கும் சில்லரையைத் துழாவிக் கொடுத்துவிட்டு வருவது ஒன்று. நேருவுக்குப்பின் யார் பிரதமராக வருவது என்று நிச்சயமாகாத நிலையில் தான் ஒரு போட்டியாளராக இருந்தும் எந்தத் தயக்கமுமின்றி ஜெயப்ரகாஷ் நாராயண் அந்தப் பதவிக்கு மிகப்பொருத்தமானவர் என்று வெளிப்படையாகச் சொல்வது இன்னொன்று. மூன்றாவதாக, உள்துறைஅமைச்சரகப் பொறுப்பில் இருக்கும் சாஸ்திரிக்கு தன் பெரிய குடும்பத்தின் செலவுகளைச் சமாளிக்கமுடியாமல் போகிறது. தன் மாத சம்பளம் போதவில்லை என்று பத்திரிகைகளில் சமகாலத்தில் பல பத்திரிகைகளில் பிரசுரமாகும் பத்தி ஒன்றை (syndicated column)எழுதி அதில் கிடைத்த மேலதிக வருமானத்தின்மூலம் தன் குடும்பச் செலவுகளைச் சமாளித்தார் அவர்.

தாஷ்கெண்டில் பாகிஸ்தானின் யாகுப் கான் உடனான பேச்சுவார்த்தையில் அவர் காட்டும் உறுதியும், ஒப்பந்தம் கையெழுத்தான இரவே அவர் இறக்க நேர்வதும் சாஸ்திரியை இந்தியாவின் மிக நேசிக்கப்பட்ட தலைவர்களில் ஒருவராக மாற்றியதை இந்த நூல் விரிவாகப் பதிவு செய்கிறது. சாஸ்திரியின் மரணத்தில் இயற்கைக்கு மாறாக எதுவும் நடந்திருப்பதாகத் தனக்கு அந்த சந்தர்ப்பத்தில் தோன்றவில்லை எனினும் சாஸ்திரியின் குடும்பத்திற்கு அவர் மரணத்தில் ஒரு சந்தேகம் அப்போதிருந்தே இருந்து வந்திருப்பதையும் பதிவு செய்கிறார் நய்யார். சாஸ்திரியின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்படவே இல்லையென்பது வியப்பை அளிக்கிறது. இந்நூலின் இந்த அம்சம் சமீபத்தில் ஒரு சர்ச்சையை கிளப்பினாலும் நிலக்கரி ஊழல் (coalgate) வந்து இதைப் பெரிய சர்ச்சையாக மாறவிடாமல் அப்படியே நிறுத்திவிட்டது எனலாம்.

இன்னொருமிக சர்ச்சைக்குரிய விஷயம் ராம் ஜன்மபூமி – பாபர் மசூதி இடிக்கப்படும்போது அப்போதைய பிரதமர்நரசிம்மராவ் தன் பூஜை அறையைவிட்டு வெளியே வராமலேயே இருந்துவிட்டு மசூதி முழுவதுமாக இடிக்கப்பட்ட செய்தி வந்தவுடன்தான் வெளியே வந்தார் என்று நய்யார் குறிப்பிடுவது. இது காலம்சென்ற நரசிம்மராவின் உதவியாளர்களால் அவுட்லுக் (outlook magazine) இதழில் கடுமையாக மறுக்கப்பட்டு இருக்கிறது.

நேருவைக் குறித்த ஒரு சம்பவம் நிகழ்கால அரசியலையே பார்த்துச் சலித்த நமக்கு பெரும் எழுச்சியைத் தருவதாகும். சிம்லாவில் அரசு விருந்தினர் மாளிகையில் தங்கிவிட்டு கட்டணம் எதுவும் செலுத்தாமல் நேருவின் சகோதரிவிஜயலட்சுமி பண்டிட் சென்றுவிடுகிறார், இந்த விவகாரம் நேருவிடம் வருகிறது. கட்டண பாக்கியான ரூ. இரண்டாயிரத்து ஐநூறை பிரதமர் நேரு ஏற்றுக்கொண்டு மொத்தமாகக் கட்ட வசதியில்லாமல் மாதம் ஐநூறு என்ற வீதத்தில் தன் சம்பளத்தில் பிடித்தம் செய்து கொள்ளுமாறு உத்தரவிட்டு அப்படியே நடப்பது! நினைத்து பார்க்க முடியுமா இந்நாட்களில்?

’எமெர்ஜென்சி’யைக் கடுமையாக எதிர்த்தவர்களில் நய்யாரும் ஒருவர். அந்தக் காலகட்டத்தில் சிறை சென்ற அனுபவமும் உண்டு. அவரது சிறை அனுபவத்தில், முக்கியமான ஒன்று எந்தக் குற்றமும் சுமத்தப்படாமல் விசாரணைக் கைதிகளாகவே திகார் சிறைக்குள் வாழும் டில்லியின் ஏழைச் சிறுவர்கள் பற்றிய பதிவு. எமெர்ஜென்சி அனுபவம் நய்யாரை குடிமக்கள் உரிமைகளைப் பற்றி ஆழமாகச் சிந்திக்க வைப்பதிலும், ஜனநாயகத்துக்கான குடிமக்கள் இயக்கம் அமைத்து இன்றுவரை பல்வேறு மக்கள் உரிமைப் போராட்டங்களில் பங்கு பெற்றுவருவதிலும் முடிவது விரிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

எமெர்ஜென்சிக்குஎதிரான ஜனதா கட்சியின் உதயமும் அதன் வெற்றியும்பிறகு அதன் வீழ்ச்சியும் அவ்வந்த காலக்கட்டங்களின் உணர்வுகளோடு பதிவு செய்யப்பட்டுள்ளன. ஜெயப்ரகாஷ் நாராயணின் தலைமையில் தோன்றிய ஒரு மகத்தான எழுச்சி மூன்று வருடங்களுக்குள் அது யாரை எதிர்த்து எழுந்தததோ அந்த இந்திராவையே மீண்டும் அதிகாரப் பீடத்தில் அமர்த்தி வைக்குமளவுக்கு சீரழிந்ததன் சித்திரம் தற்போது அதனோடு ஒப்பிடப்பட்ட அன்னா ஹஜாரேவின் இயக்கத்தின் தற்போதைய நிலையை நமக்கு நினைவூட்டி இந்தியாவில் வரலாற்றுச் சம்பவங்கள் மார்க்சின் கூற்றுக்கு மாறாக இரண்டு முறையுமே அபத்தமாகத்தான் நிகழுமோ என்று அயரவைக்கிறது.

குறுகிய அடையாளங்களைத் துறந்த ஒரு உலகக் குடிமகனாகவே (cosmopolitan citizen) தன்னைk கண்டுகொள்ளும் நய்யார் எண்பதுகளில் இந்தியாவின் தலையாய பிரச்சினையாக இருந்து இந்திராவின் உயிரையே குடித்த பஞ்சாப் காலிஸ்தான் இயக்கப் பிரச்சினைக் குறித்து எழுதும்போது அடிப்படையில் தான் ஒரு பஞ்சாபியர் என்பது நன்கு துலங்குமாறே எழுதுகிறார். என்றுமே ஹிந்து – சீக்கிய ஒற்றுமை வேண்டுபவராக இருக்கும் நய்யார், பிந்தரன்வாலே குழுவினரின் அட்டூழியத்தைக் கண்டிக்கும் அதேவேளையில் பிந்தரன்வாலேவின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவிய இந்திராவின், காங்கிரஸின், குறுகிய தேர்தல் அரசியல் லாபப்பார்வையைக் கண்டிக்கவும் தயங்குவதில்லை. பொற்கோவிலுக்குள் இந்திய ராணுவம் நுழைய நேரிட்டதும், அது சீக்கியர்களின் மனதில் ஆறாத புண்ணை ஏற்படுத்தியதும் ஆழமான வருத்தத்துடனேயே பதிவு செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவமும்இந்திராவின் படுகொலைக்குப்பின் நடைபெறும் சீக்கியர்கள் மீதான படுகொலைத் தாக்குதல்களும் நய்யாருக்கு இந்தியாவில் மதச்சார்பின்மை அரசியலுக்கும் மனித உரிமைகளுக்கான போராட்ட அமைப்புகளின் தேவைக்கான முன்னெப்பொழுதும் இல்லாத முக்கியத்துவத்தை உணரச் செய்வதைக் காண்கிறோம். இந்திராவின் காலத்திற்குப் பின் ராஜீவ் கால கட்டமும், அவருக்குப் பின்னான வி .பி. சிங்கின் கொந்தளிப்பான காலகட்டமும், பின் வந்த சந்திரசேகர், நரசிம்மராவ், தேவே கௌடா, குஜ்ரால் மற்றும்வாஜ்பாய் காலகட்டங்களும் அதனதன் தீவிரத்துடனேயே பதியப்பட்டுள்ளன.

ஐக்கிய முன்னணி ஆட்சிக் காலத்தில் இங்கிலாந்தில் இந்தியாவுக்கான தூதுவராக நியமிக்கப்படும் நய்யார், அந்தப் பதவியில் இருந்தபோது, லண்டன் வாழ் சீக்கியர்களின் மீது இந்தியத் தூதரகத்தின் சந்தேகம் கொண்ட பார்வையை மாற்றுவதற்கும் இங்கிலாந்திலுள்ள பல்வேறு இந்தியச் சமூகங்களுக்கிடையே நல்லுறவையும் கலாசாரப் பரிமாற்றங்களையும் அதிகரிக்க தான் மேற்கொண்ட முயற்சிகளையும் அதிலடைந்த வெற்றிகளையும் நிறைவுடனேயே குறிப்பிடுகிறார்.

பிறகு 1997 முதல் 2003 வரை ராஜ்யசபை உறுப்பினராக நியமிக்கப்பட்டு பணியாற்றிய காலத்தின் பாராளுமன்ற அனுபவங்களும் விரிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. பாராளுமன்றத்திலும் அவர் தொடர்ந்து இந்தியாவின் மனித உரிமை அமைப்புகளின் முக்க்கியத்துவதிற்காக வலியுறுத்தி வந்ததைப் பார்க்க முடிகிறது.

அரசியல்தளத்தில் காங்கிரஸின் பல்வேறு போதாமைகளையும் காங்கிரசுக்கு எதிரான நம்பகத்தன்மை மிகுந்தமாற்று ஒன்று ஏற்படாதது குறித்தும் தொடர்ந்து பேசும் நய்யார், பா.ஜக. ஆட்சியின் குறைகள் என்று அதிகமாகச் சொல்லாவிடினும் தனது அசைக்க முடியாத மதச்சார்பின்மைக் கொள்கை மற்றும் 2002 குஜராத் நிகழ்வுகள் காரணமாக பா.ஜ.கவை காங்கிரசுக்கு மாற்றாக ஏற்றுக் கொள்ளாததையும் காண முடிகிறது.

சரளமான எளிதான வாசிப்பிற்குஇடமளிக்கும் வகையில் சுவாரசியமான பல தகவல்களின் தொகுப்பான இந்நூலிலும் சிலமுக்கியமான தகவல்பிழைகள் இருப்பதைப் பார்க்க முடிகிறது. பல இடங்களில் நய்யார் ஜனதா கட்சியையும், பிற்பாடு வந்த விபிசிங்கின் ஜனதாதளக் கட்சியையும் குழப்பிக் கொள்வதைக் காணமுடிகிறது. 1997 முதல் 2003 வரை தான் ராஜ்யசபை அங்கத்தினராக இருந்த காலகட்டத்தின் பாராளுமன்ற அவைத்தலைவர்சோம்நாத் சட்டர்ஜி என்றே குறிப்பிடுகிறார். ஆனால் சட்டர்ஜி 2004 முதல் 2009 வரை அவைத்தலைவராக இருந்தவர்.

மேற்சொன்ன பிழைகள்போல் மேலும் சில இருப்பினும் எனக்கு மிகுந்த அதிர்ச்சியைக் கொடுத்த பதிவு, ராஜீவ்கொலையாளியை அவர் தேன்மொழி ராஜரத்தினம் என்கிற காயத்திரி என்று மட்டுமே குறிப்பிடுவதும் பின் அந்தக் கொலையாளியை பிரியங்கா காந்தி சென்று சந்தித்தார் என்று குறிப்பிடுவதும்தான். அவர் தனு என்ற பெயரால்தான் பரவலாக அறியப்பட்டிருக்கிறார் என்பதும் அவர் ஒரு தற்கொலைப் போராளி என்பதும், ராஜீவுடன் அவரும் உடல் சிதறி இறந்தார் என்பதும் நய்யார் அறியாதது பெரும் திகைப்பை ஏற்படுத்துகிறது..மேலும் இந்திய அமைதிப்படை இலங்கையில் சட்டமொழுங்கை நிலைநாட்டுவதற்காக அனுப்பப்பட்டது என்றுகுறிப்பிடுவது, மிகப் பெரும்பாலான வடஇந்திய அறிவுஜீவிகளும்,மனித உரிமை அக்கறையாளர்களும் இலங்கைப் பிரச்சினையைக் குறித்து தொடர்ந்து காட்டி வரும் அக்கறையின்மையை வெளிப்படுத்துகிறது .இந்த விஷயத்தில் எல்லாம் விக்கிபிடியா அளவைத் தாண்டி அவர்கள் ஏதும் அறிந்துகொள்வதில் ஆர்வம் காட்டுவதில்லை போல.

இதே போல இரண்டு வருடங்களுக்கு முன் வந்த குஷ்வந்த் சிங்கின் சன்செட் கிளப் எனும், 2009 ஆண்டின் நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்ட, நாவலிலும் ஈழப் போரைப் பற்றியோ பிரபாகரனின் மரணம்குறித்தோ ஒரு சிறுகுறிப்பு கூடக் கிடையாது. இத்தனைக்கும் அது 2009ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் நிகழ்வுகளை விரிவாகப் பேசும் ஒன்று. இந்தத் திகைப்பும், அதிர்ச்சியும் ஒரே சமயத்தில் தமிழனாகவும் இந்தியனாகவும் இருக்க நாம் கொடுக்கும்’ சிறு விலைகளில் ஒன்று போலும்!

இந்தப் புத்தகம் குறித்து ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்ல வேண்டும். பல அருமையான, அரிய புகைப்படங்கள் இங்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்று வரலாற்றுச் சிறப்புமிக்கது –  1966ல் இந்திரா காந்தி பிரதமராகப் பதவியேற்றதை அடுத்து நிகழும் பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஒரு நிருபர்வாயில் சிகரெட்டைப் புகைத்துக்கொண்டே குறிப்பெடுக்கும் காட்சியைச் சொல்ல வேண்டும். இதை இந்நாளில் நினைத்தே பார்க்க முடியாது. அரசியல்வாதிகளின் அதிகார எல்லைகள் மிகத் துல்லியமாக வகுக்கப்பட்ட அந்த நாட்கள், அனைத்து உரிமைகளையும் அரசியல்வாதிகளே ஆண்டழிக்கும் இந்நாட்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, அவற்றின் அத்தனை குறைகளுடனும், பொன்னானவை.