உலக இலக்கியம்

kanasu2

1

9780393913347

ஒவ்வொரு மனிதனும் தன் தன் ஊரில் வசிப்பவன் தான்;  தன் தன் மொழி பேசுபவன்தான்; அவனவன் குடும்பத்துக்கு உரியவன்தான். எனினும் மனிதன் என்ற அளவில் உலகத்தைச் சேர்ந்தவன் தேசீயம், மொழிப்பற்று எல்லாமே உலகம் என்று பரந்த அளவில் உள்ள மனுஷ்யத்வத்தை ஒட்டி நின்றபோதுதான் சிறப்புப் பெறுகிறது என்று சொல்ல வேண்டும். தனி மனிதனோ, தனி நாடோ தனிப்பட்டு நிற்பது என்பது இனி சாத்தியமில்லை.

இன்று பல விஞ்ஞான முன்னேற்றங்களினால், மனிதனுடைய ஒரே உலகத்து விஷயம் கற்பனையாக இல்லாமல் எட்டித் தொடக்கூடிய லக்ஷியமாக உணர முடிகிறது. அறிவுபூர்வமாகக் கவனிக்கும்போது இதுவே வித்தியாசங்களை, வேற்றுமைகளை அதிகப்படுத்துவதற்கு உபயோகப்படலாம்தான். இருந்தாலும் மனிதகுலம் பூராவுமே ஒரே குடும்பம் என்கிற நினைப்பு, சரித்திரத்தில் இந்தக் காலகட்டத்தில் போல வேறு எந்தக் கால கட்டத்திலும் உருப்பெற்றதில்லை. அதை நமது பிரதான முன்னேற்றம் என்று மனிதன் பெருமை கொள்ளலாம். எங்கு எந்தத் தேசத்தில் வாழ்ந்தாலும் உலகத்தின் முன்னேற்றத்தால் மனித குலத்தின் வளத்துக்கு நம்மாலும் வழி செய்ய முடியும் என்று ஒவ்வொரு மனிதனும் பெருமை கொள்ளலாம்.

தமிழ் இலக்கியம் தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் சொந்தமானது என்கிற நினைப்புடன், உலகத்துக்கும் சொந்தமானது என்ற நினைப்பும் நமக்கு ஏற்படும்போதுதான் மனிதனாக வாழ்வதான லக்ஷியத்தை நாம் ஏற்றுக் கொண்ட மாதிரியாகும்.அதை விடுத்துத் தமிழ் தமிழ் என்று குறுக்கிக் கொண்டும் குறுகிக் கொண்டும் போனோமேயானால் பயனே இல்லை. சமீபகாலத்தில் இந்தக் குறுக்கிக் குறுகும் முயற்சிதான் நம்மிடையே அதிகமாகக் காணப்பட்டு வருகிறது என்று சொல்ல வேண்டும்.

அதை மாற்றி உலக இலக்கியமும், இந்திய இலக்கியமும் தமிழையும் தமிழனையும், தமிழ் இலக்கியத்தையும் இன்னும் நெருங்கித் தொடுகிற வரையில் வளர்ச்சி, வளம், பலன் ஏற்படாது என்றுதான் சொல்ல வேண்டும். தமிழ், தமிழ் என்று பாராட்டிச் சுயநலத்துக்காகப் பெருமை பேசுகிறவர்கள் உலக இலக்கியத்தில் தமிழ் தன் ஸ்தானத்தை ஏற்பதற்கு ஒன்றும் செய்ய முடியாதவர்கள் என்று காண்கிறோம்.உலக இலக்கியத்தில் தமிழ் இலக்கியம் உன்னதமான ஸ்தானம் வகிக்கவும், தமிழ் இலக்கியத்தில் உலக இலக்கியம் பூராவும் உன்னதமான ஸ்தானம் வகிக்கவும் ஆவதற்கான வழி வகைகள் செய்வது, எண்ணுவது இன்றைய தமிழ் இலக்கியாசிரியர்களின் கடமை ஆகும்.

kanasuஓரளவுக்கு அது- இரண்டு போக்குகளும் தான்- இருக்கின்றன. அது போதாது, போதாது என்கிற உணர்வைத்தான் பாரதியார் தமக்குள்ளே பழங்கதைகள் பேசுவதையும் பிறவற்றையும் பற்றிக் குறிப்பிட்டுச் சொன்னார். பாரதியார் காலத்துக்கு இன்று நாம் அதிகமாக முன்னேறி விடவில்லை. இந்த விஷயத்தில் வழிகாட்ட, ஆளில்லாத காரணத்தினால் சற்றுப் பின் வாங்கி யிருக்கிறோம் என்று சொல்லத் தோன்றுகிறது.

உலக இலக்கியம் என்று ஒன்றை உணர்ந்து முதலில் அதைப்பற்றிச் சொன்னவர் ’ஜோஹான் வுல்ஃப்காங் கதே’ என்கிற ஜெர்மன் இலக்கிய  மேதையாகும்.அவர் முக்கியமாக இந்திய சீன பண்டைய இலக்கியங்கள் ஐரோப்பியப் பிரக்ஞையில் தாக்கியதை முன்னிட்டு உலக இலக்கியம் என்கிற கண்ணோட்டத்தைத் தனக்கென்று ஏற்படுத்திக் கொண்டார். இன்று இன்னமும் அதிகமாகவே- அதே காலத்துக்கும் அதிகமாகவே- உலகமும் உலக இலக்கியமும் பரந்து கிடக்கிறது. அதில் உரிய ஸ்தானத்தைப் பெறவும், அதற்குத் தமிழில் உரிய ஸ்தானத்தைத் தரவும் இன்றைய தமிழ் இலக்கியாசிரியன் முயற்சி செய்ய வேண்டியது அவசியமாகும

உலக இலக்கியத்தின் பரப்பும் விஸ்தீரணமும், முதல் தடவை கணிக்கும்போது, நமக்குப் பிரமிப்பூட்டுவதாகத்தான் இருக்கிறது. இத்தனையையும் நாம் தெரிந்து கொள்ள முடியுமா? ஒரு ஆயுட்காலத்தில் மனிதன் அறிந்து கொள்ளக் கூடியதா இவ்வளவும் என்று தோன்றலாம்.கில்காமேஷ் ஆதிகாவியத்திலிருந்து இன்று ப்ரூஸ்ட், ஜாய்ஸ் வரை, தென் அமெரிக்காவிலிருந்து சீனா, ஜப்பான் வரை பரந்து கிடக்கும் இலக்கியம், ருஷ்யா, ஆஸ்டிரேலியா என்று விரிந்து கிடக்கிறது.  இலக்கியத்திலே மனிதன் என்கிற சரடு ஊடுருவிக் கிடக்கிறது. அதனால் அதை யாரும் சுலபமாக அறிந்து கொள்ள இயலும். ஆழ்ந்து படிப்பது மட்டும் போதும், அகன்று பரந்து படிக்க வேண்டிய அவசியமிலை என்று ஒரு நினைப்பு நமக்கு எப்போதுமே இருந்து வந்திருக்கிறது.

வால்மீகி மட்டும் போதாதா? கம்பன் மட்டும் போதாதா? குறள் மட்டும் போதாதா? என்று அடிக்கடி எதிரொலிக்கும் வாக்கியங்கள் ஆழ்ந்து படிப்பதை விரும்பி ஏற்பட்டதாகச் சொல்லலாம். ஆனால் இன்று படிப்பதாகச் சொல்பவர்கள் ஆழ்ந்தும் படிப்பதில்லை, பரந்தும் படிப்பதில்லை. உலக இலக்கியத்தில் ஒரே ஒரு பகுதியை மட்டும் கண்டு கொண்டால் போதுமானதாக இருக்கலாம்- ஆனால் அதற்குப் பகைப் புலனாக உலக இலக்கியப் பரப்பு பூராவும் இலக்கியாசிரியன் என்று சொல்லிக் கொள்பவனுக்காவது தெரிய வேண்டும்.

எத்தனையைத் தெரிந்து கொள்வது, அதற்கு மேலும் தெரிந்து கொள்ள வேண்டியது இருந்து கொண்டேதான் இருக்கும் என்று கேட்கலாம். உண்மைதான் – தெரிந்து கொள்வதைத் தெரிந்து கொண்டு இன்னும் இருக்கிறது என்கிற உணர்வையும் ஏற்படுத்திக் கொண்டு விட்டால் இலக்கியம் வளரும். ஆயிரத்தில் ஒன்றிரண்டு மேதைகளுக்கு- எழுத முன்வருகிற மேதைகளுக்கு- இந்த அடிப்படை அறிவு தேவையில்லாதிருக்கலாம். ஆனால் மற்றப்படி இலக்கியாசிரியன் ஒவ்வொருவனுமே உலக இலக்கியத்தின் வாரிசாகத் தன்னை உணர்ந்து எழுத முற்படுவதே கலையாகப் பயன் தரும் எழுத்தைச் சிருஷ்டிக்க உதவும்.

உலக இலக்கியப் பரப்பையும், அதில் சில பகுதிகளையுமாவது எடுத்துச் சொல்ல அவ்வப்போது இலக்கிய வட்டம் முயன்று வரும்.

[இலக்கிய வட்டம் இதழ் 4: 3.1.64]

2

the

உலக இலக்கியம் என்பது ஒரு இயக்கமாக உருவெடுக்க வேண்டும். அதற்கான வழிவகைகள் என்னவென்று சிந்திப்பது இலக்கிய வட்டத்தின் கடமையாகும். உலகத்தின் எந்த மொழியில் எந்தப் பகுதியில் மிகத் தரமானது, உயர்ந்தது, சிரேஷ்டமானது வந்திருந்தாலும் அது உடனடியாகத் தமிழில் மட்டுமல்ல, தமிழ் போன்ற எல்லா மொழிகளிலுமே வருவதற்கான வழி வகைகள் வகுத்துக் கொள்ள வேண்டும்.

தமிழில் பாடாவதியான சொந்த நாவல்கள்- அதுவும் சரித்திர நாவல்கள்- விற்பது போல முதல் தரமான மொழி பெயர்ப்புகள் கூட விற்பனையாவதில்லை என்று பலர் சொல்ல நான் கேட்டிருக்கிறேன். இதற்குக் காரணம் தமிழில் எல்லாமே இருக்கிறது, வேறு ஒன்றும் நமக்குத் தேவையில்லை என்று ஆரம்பத்தில் பண்டிதப் பேராசிரியர்களும், அவர்களைத் தொடர்ந்து அவர்கள் கருத்தைத் தங்களுக்கு அனுசரணையாக உபயோகித்துக் கொண்ட அரசியல்வாதிகளும், பின்னர் வந்த தமிழ் பற்றி மட்டும் வெறி கொண்டவர்களும் சூழ்நிலையை வீணாக்கி விட்டார்கள். உலகில் உள்ளதில் சிறந்ததை அங்கீகரித்துப் படித்துத் தெரிந்து கொள்வதற்கு ஒரு ஆர்வம் வேண்டும். முதலில் அந்த ஆர்வத்தை வளர்ப்பதற்கு ஒரு சூழ்நிலை உருவாக வேண்டும்.

உலகப் பரப்பில், அஸ்ஸிரிய மொழியில் தொடங்கி, இன்றுள்ள ஜப்பானிய மக்கியோகா சகோதரிகள் வரையில் பலபல ஆயிரம் நல்ல நூல்கள் இருப்பது போல நமக்குத் தோன்றுகிறது. இத்தனையும் ஒருவன் படித்துக் கடைத்தேறுவது எக்காலம் என்று கேட்கத் தோன்றலாம். அத்தனையும் பற்றி அறிவு வேண்டும்- பிரக்ஞை வேண்டும். சிறந்ததை மட்டும் ஒவ்வொருவரும் படித்தால் போதும். சிறந்தது என்று சொல்லும்போது அது அப்படி ஒன்றும் அதிகம் இல்லை என்றும் அதே மூச்சிலே சொல்லி விடலாம்.

உலகத்து இலக்கியத்தில் மிகச் சிறந்ததையெல்லாம் நூறு இருநூறு நூல்கள் என்று பெயர் சொல்லி அடக்கி விடலாம். இதிலேகூட ஒரு பகுதி, கால்வாசியாவது, அவரவர் சௌகரியத்துக்கு ஏற்று கொள்ளக்கூடியதாக, ஒதுக்கி விடக்கூடியதாக இருக்கும். பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலே இங்கிலாந்து தேசத்திலும், பொதுவாக ஐரோப்பாவிலும், கீழை நாட்டு இலக்கியப் புது அறிவு காரணமாக உலகத்துச் சிறந்த நூறு நூல்கள் வரிசைப்படுத்திப் பட்டியல் தயாரிக்கிறது என்று ஒரு இயக்கம் இருக்கிறது. அந்தப் பட்டியல்களில் ஒன்றுக்கொன்று பல அம்சங்களில் மாறுபட்டிருந்தாலும் அடிப்படையில் வித்தியாசமில்லை. நூறு என்பதை இருநூறு என்று முதல் தரமானதற்கும், ஐநூறு என்று இரண்டாந்தரமானதையும் சேர்த்துக் கொண்டு சொல்லலாம். இந்தப் பரப்பை அறிந்து கொண்டு ஆழ்ந்து படிப்பது சாத்தியமே.

உலக இலக்கிய இயக்கம் தமிழைப் பற்றிய வரையில் என்ன உரு எடுக்கவேண்டும் என்று எண்ணிப் பார்க்கும்போது ஒன்று தெளிவாகவே தெரிகிறது. தமிழிலிருந்தும் உலக இலக்கிய அரங்கில் இடம் பெறக்கூடிய நூல்கள் ஒன்றிரண்டு மூன்று இல்லாமல் இல்லை. அறநூல்களில் குறள், காவியத்தில் சிலப்பதிகாரம், கம்ப ராமாயணம், சங்க இலக்கியத் தொகுப்பு ஒன்று, இடைக்காலக் கவிதைத் தொகுப்பு ஒன்று என்று சில நூல்களேனும் இடம் பெறும்.

இதை ஏற்று ஜப்பானிலிருந்து லேடி முராஸகி, ஹொக்குக்கள் முதலியன, சீனாவிலிருந்து குரு குங்லிபோ, டுஃபூ முதலியோர் மற்றும் யூரோப்பிய இலக்கியத்திலிருந்து ஹோமர் முதல் டாஸ்டாவ்ஸ்கி, டால்ஸ்டாய், மன், ஜாய்ஸ், ப்ரூஸ்ட், காஃப்கா, ரில்கே வரையில் தமிழில் இல்லாததெல்லாம் தமிழில் இடம் பெற வழி செய்ய வேண்டும்- உடனடியாகச் செய்ய வேண்டும் என்கிற அளவில் சிந்திக்க வேண்டும். மொழிபெயர்ப்புகள் தமிழில் விற்பனையாகாதது தமிழுக்கும் பெருமையல்ல, தமிழனுக்கும் பெருமையல்ல. அந்த நிலையை மாற்றவும் செய்தாக வேண்டும்.

பழசைப் பற்றியே எழுதித் தங்கள் பொழுதையும், தம் பொழுதையும் புதுசாக எதுவும் சொல்லாமல் போக்கிக் கொண்டிருப்பவர்களை, சமூகத்திலும் அறிவுலகத்திலும் பகிஷ்கரிக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இந்த பகிஷ்கரிப்பில் நல்லது போய்விடக் கூடாது- தனித்தன்மையுள்ள சிருஷ்டி நோக்கு அடிபட்டு விடக்கூடாது. கதா காலக்ஷேபம் (காலவிரயம்) பற்றி இலக்கியப் புல்லுருவிகள் இவை மட்டும் புறக்கணிக்கப்பட வேண்டும்.

நல்லதைத் தெரிந்து கொள்ளப் பயிற்சி எப்படி வரும்? நல்லது என்று நம்பப்படுவதைப் படித்துப் படித்துதான் தெரிந்து கொள்ள முடியும். இலக்கியத்தில் ரஸனை வளர்வதே நல்லதைப் படித்துத்தான். முதல் நூல்களைப் பற்றிப் போதிய அறிவில்லாமல் விமரிசனங்களை மட்டும் படித்து விட்டு எழுதுவதனால் இலக்கியத்துக்கு லாபம் இராது- நிச்சயமாக இராது.

விமரிசனத்தின் நோக்கமே இலக்கியத்தின் சிறப்புகளை எடுத்துக் காட்டுவதற்குத்தான். அதை விடுத்து, நூலை மறந்து விட்டு, இலக்கிய விமரிசனம் செய்வது அவசியமில்லாத ஒரு காரியமாகும். உலக இலக்கிய இயக்கம் வளருவதற்கு வறட்டு விமரிசனம்- நூலைப் படித்து ரஸிப்பதில் ஈடுபாடு கொள்ளத் தெரியாத விமரிசனம் எதிரியாகும். ஒரு நூல் நல்ல நூலா என்று படித்துத் தெரிந்து கொள்வதற்கான பயிற்சியே முதல் நூல்களைப் படித்தால் ஏற்படுமே தவிர, எத்தனை விமரிசன நூல்களைப் படித்தாலும் ஏற்படாது.

ஆகவே உலக இலக்கிய இயக்கம் என்று சொல்லப்படுவதில் அதிகமாக விமரிசன நூல்கள் இடம் பெறாது. ஒன்றிரண்டு இருக்கலாம். மற்ற எல்லா இலக்கியத் துறைகளிலுமே உள்ள நல்ல நூல்கள் அறிமுகம் இன்றைய வாசகன் ஒவ்வொருவனுக்குமே தேவையாகும். இலக்கியாசிரியனுக்கு இந்த அறிவு தேவையா, நான் எழுதுவதற்கு எதுவும் படிப்பது அவசியம் இல்லை என்றே எனக்குத் தோன்றுகிறது என்று சில ஆசிரியர்கள் சொல்வதை நான் கேட்டிருக்கிறேன்.

இதுபற்றி இரண்டு அபிப்பிராயங்கள் சொல்லலாம். படிக்காத மேதைகள், கலைஞர்கள் இருக்கலாம்தான். ஆனால், கலைக்கும் சிருஷ்டிக்கும் படிப்பு உதவுகிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை. இரண்டாவது விஷயம்- இலக்கியாசிரியனும் மனிதன் தானே! உலகத்திலுள்ள இன்பங்களிலே படிப்பும் படிப்பதை அனுபவிப்பதும் ஒன்றுதானே! அதை வளர்த்துக் கொள்வதால் நஷ்டமில்லை. மனிதனுக்கு ஒரு முழுமை வளருகிறது.

அந்த அளவில் பார்த்தால் படிக்காத இலக்கியாசிரியன் குருடனைப் போல. கிடைக்கக் கூடிய ஒரு இன்பத்தை, அவன் கைக்கும் கண்ணுக்கும் மனசுக்கும் சுலபமாக எட்டக் கூடிய இன்பத்தை இழந்து விடுகிறான். படிக்கப் பயிற்சி செய்து கொள்ளாத இலக்கியாசிரியன் சில சமயம் மட்டமானதையும் உயர்ந்தது என்று எண்ணி ஏமாந்து விடுவான். தன் எழுத்தில் மட்டும் அல்லாமல் மற்ற எழுத்திலும் தரம் பார்க்க அவன் அறியாது இருந்து விடுவான். அதற்காகவேனும் படிக்கப் பயிற்சி செய்து கொள்வது இலக்கியாசிரியனுக்கும் நல்லது- மற்றவருக்கும் நல்லது.

[இலக்கிய வட்டம் இதழ்-5-17.1.64]

3

the-norton-anthology

மொழி பெயர்ப்புகள் எந்த மொழியில் அதிகமாக வருகின்றனவோ அந்த மொழிதான் தாராளமான வளம் காட்டுகிறது என்பது இலக்கிய விமர்சகர்கள் ஒரு மனதாக எடுத்துக் கொள்கிற ஒரு விஷயமாகும். உதாரணமாக ஆங்கிலத்தில் இலக்கிய வளம் பிரமாதமாக இருந்த முதல் எலிஸபீதன் காலத்தில் ஏராளமான மொழி பெயர்ப்புகள் தோன்றின- அவை மிகவும் தரமான மொழிபெயர்ப்புகளாகவும் இருந்தன. உதாரணமாக  இன்றும் ஆங்கில மொழியில் உலகத்து மொழிகளில் வருகிற சிறந்த நூலகள் எல்லாமே அப்போதைக்கப்போது மொழி பெயர்க்கப்பட்டு வருவதனாலேயே ஆங்கில இலக்கிய வளம் பெருமைப்படக் கூடிய அளவில் உயர்ந்திருக்கிறது.

மொழிபெயர்ப்புகள் இரண்டு விதங்களில் ஒரு மொழிக்கு உபயோகமாகின்றன. ஒன்று: நமக்கு, முக்கியமாகத் தமிழில் (மற்றும் பல இந்திய மொழிகளிலும்தான்) உள்ள கிணற்றுத் தவளை மனப்பான்மையைப் போக்க உதவுகின்றன. இரண்டு: இப்படித்தான் எழுத வேண்டும் என்பது போல இப்படியும் எழுதலாம், அப்படியும் எழுதலாம் என்று தரத்தை, உத்தியை உத்தேசித்து மாறுபட்ட கருத்து, நோக்கங்களுக்கு மொழிபெயர்ப்புகள் வழி வகுத்துத் தருகின்றன.

மொழிபெயர்ப்புகள் எப்படியிருக்க வேண்டும் என்பது அடுத்த கேள்வி. அதாவது அவை தமிழேயாகி விடவேண்டுமா அல்லது முதல் நூலின் குணாதிசயங்கள் மொழிச் சிறப்பு அம்சங்கள் திகழ்வதாக இருக்க வேண்டுமா என்பது கேள்வி. என்னைப் பற்றிய வரையில் மொழிபெயர்ப்பு நூல்கள் முழுத் தமிழ் நூலாகி விடாமல் மொழி பெயர்ப்பு நூல்களாகவே இருந்தால்தான் தமிழுக்கு அதனால் லாபம் என்று தோன்றுகிறது. முழுவதும் தமிழ்ப்படுத்தி விடுவதால் மொழி வளத்துக்கு அடிகோலிய மாதிரி ஆவதில்லை என்று எண்ணுகிறேன். முதல் நூலின் மொழிக்குரிய சிறப்பு அம்சங்கள் மொழிபெயர்ப்பிலே அப்படியே இடம் பெற வேண்டும் என்றே நான் கருதுகிறேன்.

“கண்ணே, மணியே கன்றுக்குட்டியே” என்று கொஞ்சுவது தமிழ் மரபு என்றால் நார்வேஜியன் நாடகாசிரியர் அவர் ஊர் வழக்கப்படி “அணில் குஞ்சே பெட்டைக் கோழியே” என்பதை மாற்றியமைப்பது தவறு என்றுதான் நான் எண்ணுவேன். பின்னது தமிழ் மரபுக்கொவ்வாது என்று சொல்லி ஒதுக்கி விடுவது சரியல்ல. தமிழ் மரபு பின்னதையும்- மொழிபெயர்ப்பு என்ற அளவில் ஏற்றுக் கொள்கிற மாதிரி இடம் தரத்தான் வேண்டும்.

மொழிபெயர்ப்புகள் ஏராளமாக வேண்டும்- அவை எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி அபிப்பிராய பேதம் இருக்கலாம். ஆனால் ஒரு முதல்நூலில் ஈடுபாடும் பக்தி சிரத்தையும் உள்ள மொழிபெயர்ப்பாளன் ஒரு நூலை மொழி பெயர்க்கும்போது அதன் கௌரவத்துக்கோ, இலக்கிய தரத்துக்கோ ஹானி வராமல்தான் மொழி பெயர்க்க முன்வருவான். ஈடுபாடுள்ள மொழிபெயர்ப்பாளர்கள் தவறு செய்ய மாட்டார்கள் என்று விட்டு விடலாம்.

பணத்துக்காகவோ, பவிஷுக்காகவோ, முன்பின் கேள்விப்படாத ஒரு ஆசிரியரை மொழிபெயர்க்க வருகிற கூலிகள்தான் முதல்நூல் கெட்டு விடுகிற அளவில் மொழி பெயர்ப்புச் செய்வார்கள். இது ஒரு அடிப்படையான உண்மை. இப்சனை மொழிபெயர்க்க இப்சனைப் பற்றிக் கேள்விப்பட்டிராத ஒரு ஆசிரியரை, பேராசிரியரைக் கூப்பிடுவதற்கு முன் சம்பந்தப்பட்ட ஸ்தாபனங்கள் யோசனை செய்ய வேண்டியது மிகமிக அவசியமாகும்.

எந்தெந்த நூல்களைத் தமிழுக்குக் கொண்டு வருவது என்பது பற்றியும் சிந்தனை அவசியம். ஒருவர் வாசித்து ஈடுபட்டு அனுபவித்த எந்த நூலையுமே ஒருவர் அவருக்கு வசதியும் மொழிபெயர்ப்பதில் வசதி செய்து தருவது அவசியமாகும். இன்றுள்ள நிலை மாற வேண்டும். மொழிபெயர்ப்பு நூல்கள் அவசியமா என்று பேராசிரியர்கள் கேட்கிறார்கள். மோலியேரும், முராஸ்கியும், ஷேக்ஸ்பியரும் தமிழில் எதற்கு? படிக்கக் கூடியவர்கள் ஆங்கிலத்திலோ எந்த மொழியிலோ படித்துக் கொள்ளட்டும் என்கிறார்கள். வங்க, கலிங்க, பஞ்சாப, ஸிந்தி, மராட்டி, குஜராத்தி, மலையாள, ஆந்திர இலக்கியங்கள் தெரியவில்லை- எதற்காக ஐரோப்பிய, மற்றும் சீன ஜப்பானிய இலக்கியங்களைக் கட்டிக்கொண்டு நாம் மாரடிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.

இதற்குப் பல தினுசாகப் பதில் சொல்லலாம். இந்த மொழிகள் பற்றி இலக்கியத் தரமான மதிப்பீடுகள் இல்லாத காரணத்தால் தமிழில் போலவே தரம், தரமல்லாதது என்கிற பாகுபாடு ஏற்படவில்லை. ஆகவே தெரிந்து கொள்ள, மற்ற உலக மொழி இலக்கியங்கள்போல இது அவசியமல்ல என்று சொல்லலாம். எனினும், இருப்பதில் சிறந்ததைத் தெரிந்து கொள்ளத்தான் வேண்டும்- இந்தியப்பகுதி என்பதனால் மட்டும் அல்ல- உலகப்பகுதி என்பதனால், உலகப்பகுதியில் இடம் பெறக்கூடிய அளவில் இந்த மொழிகளிலெல்லாம் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பது இன்னமும் சரிவர நமக்குத் தெரியவில்லை. இதைத் தெரிந்து கொள்வதற்கே நமக்கு உலக இலக்கிய மொழி பெயர்ப்புகள், தரம் தெரிந்து கொள்ள, நமக்கு வழிகாட்டும்.

இந்திய மொழிகளில் உள்ளது பற்றித் தெரிந்து கொள்ள வேண்டாம் என்று யாரும் சொல்லவில்லை, ஓரளவுக்குப் பகைப்புலம், சூழ்நிலை இரண்டையும் தெரிந்து கொள்ள வேண்டியதுதான். அத்துடன் உலக இலக்கியத்தில் உள்ளதில் சிறந்ததையும் தெரிந்து கொண்டால்தான், அவற்றிற்கே உள்ள இடத்தை, தரத்தால் ஏற்படுகிற இடத்தைக் கண்டு கொள்ள இயலும்.

உலகில் சிறந்த நூல்கள் என்று எதைத் தேர்ந்தெடுப்பது என்பது அடுத்தபடியாக நமக்கு ஏற்படக்கூடிய பிரச்னை. ஏற்கனவே கூறியபடி பத்தொன்பதாம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் உலகத்துச் சிறந்த  நூறு நூல்களைத் தேர்ந்தெடுக்க முயற்சிகள் நடைபெற்றன. அதே மாதிரியாகச் சமீப காலத்தில் உலகத்து அடிப்படை இலக்கியங்கள் பற்றி ஒரு முயற்சி அமெரிக்க சர்வகலாசாலைகள் ஆதரவில் நடைபெற்றது. அதையெல்லாம் முன்மாதிரியாகக் கொண்டு, உலக இலக்கியத்திலிருந்து வரவேண்டியது என்று இருநூறு முந்நூறு நூல்கள் பட்டியல் தயாரித்துக் கொண்டு ஆவன செய்வது முதல் தேவையாகும்.

அதேபோலத் தமிழில் சிறந்ததை உருவாக்கி அளிக்கவும் முயற்சிகள் செய்யப்பட வேண்டும். இந்த முயற்சிக்குத் தர விமர்சனம் இன்றியமையாததாகும். பழசு பற்றியும், புதுசு பற்றியும் தர விமரிசனம் செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறது. இன்னும் அது செய்யப்படாவிட்டால் பண்டித பேராசிரியர்கள் கையில் அகப்பட்டுத் தமிழ் சில ஆண்டுகளிலேயே- சில தலைமுறைகளிலேயே- நசித்து விடும்.

இலக்கியத்தில் நல்லதும் உண்டு- நல்லதல்லாததும் உண்டு. கவிதையில் தரமானதும் உண்டு- தரமல்லாததும் உண்டு. இரண்டையும் பழசு பற்றிய வரையில் கண்டு கொள்ள தமிழில் இன்று வரை ஒரு முயற்சியும் செய்யப்படவில்லை. புதுசு பற்றியோ சொல்லவே வேண்டாம். சாஹித்திய அக்காதெமிக்காக இன்றைய தமிழ் இலக்கியம் பற்றி எழுதத் துணிந்து முன் வந்த பேராசிரியர் உதாரணம்- தமிழில் தர விமரிசனம் செய்யப் பேராசிரியர்களுக்கு நிச்சயமாகத் தைரியம் வராது என்பதற்கு.

இந்த மாதிரி- அதாவது இந்தப் பேராசிரியரது மாதிரியான எக்காரியத்துக்கும் பொதுவான விமரிசனம் செய்வது என்பது, தான் பட்டுக் கொள்ளாமல், நமக்கேன் வம்பு, இலக்கியம் எக்கேடு கெட்டால் என்ன என்கிற மனப்பான்மையுடன் விமரிசனம் செய்வதுதான் – சாகித்திய அக்காதெமி அழைத்தால் கூட அந்தச் சந்தர்ப்பத்தை வீணாக்கி விடுவதுதான் இன்றுள்ள நிலைமையாக இருக்கிறது.

இந்த நிலைமை மாற வேண்டும். எவ்வளவு வெறுப்பான விஷயமானாலும் அது பற்றி அபிப்பிராயம் சொல்லித் தரவும் பெறவும் செய்ய வேண்டியது அவசியம் என்று தோன்றுகிறது. ஏதோ விவாதங்கள் தவறான காரியம்- எல்லாருக்கும் உகப்பதை, எல்லாரும் ஏற்றுக் கொள்ளக் கூடியதைத்தான் சொல்ல வேண்டும் என்று ஒரு மனப்பான்மையை நம்மிடையே வளர்த்துக் கொண்டிருக்கிறோம். உலக இலக்கிய அறிவு வளர வளர விவாதங்களும், பல கோணங்களில் நின்று பார்க்கவும், பார்த்து நாம் காண்பதை உள்ளபடி சொல்லவும் பழக்கமும், நமக்கு ஏற்படும். தமிழை மட்டும் படித்துத் ஜெரித்துக் கொண்டிருந்தால் ஆமாம் போடவும் ஒரு பிரமை தட்டிப் போன அளவில் திரும்பித் திரும்பி ஒன்றையே சொல்லவும்தான் வரும். அந்த ஒன்றும் விசேஷமானதாகவும், உருப்படியானதாகவும் இராது. புதுமையானதாக வளர்ச்சிக்கு உகந்ததாக இராது.

[இலக்கிய வட்டம் இதழ் 6- 31-1. 64]

4

longman

உலகத்தில் சிறந்த நூல்கள் என்று சொல்லக்கூடியவை ஒரு ஆயிரமாவது உண்டு. இவையெல்லாம் ஐரோப்பிய இலக்கியத்தை மட்டும் சேர்ந்தவை அல்ல- எல்லாக் கண்டங்களிலிருந்தும், எல்லா மொழிகளிலிருந்தும் நூல்கள் இதில் அடங்கும். சீன, ஜப்பானிய, இந்திய (சம்ஸ்கிருதம், தமிழ்), பார்ஸிய, பண்டை இலக்கியங்களில் சிலவும் இந்த நூல்களில் அடங்கியவை. இவற்றையெல்லாம் படித்துப் படித்து, பிரியப்படுவதைப் பல தடவைகள் படித்து, ரஸனையை உண்டாக்கிக் கொள்வதுதான் இலக்கியத்தில் ஆர்வமுள்ளவர்கள் செய்ய வேண்டிய காரியமாகும்.

சில சமயம் நமக்குத் தெரிந்த மொழிகளில் இந்த நூல்கள் கிடைக்காதிருக்கலாம். அப்படி நேர்ந்தால் முதல் மொழியைக் கற்றுக் கொள்வது அவசியம் என்றுதான் நான் கருதுவேன். அப்படிக் கற்றுக் கொள்ள அவகாசமோ திறமையோயற்றவர்களை இலக்கியத்தில் ஆர்வமுள்ளவர்களாக நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். அவகாசம் ஏது? பிழைப்பு தேடவேண்டுமே? இத்தனை நாள் ஏழையாக இருந்து விட்டேன், இனிமேலாவது பணக்காரனாக வேண்டாமா என்று கேட்பவர்களுக்கும் இலக்கியத்தில் ஆர்வமுண்டு என்று சொன்னால் அது ஏதோ மிகைப்படுத்திக் கூருவதாகத்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இலக்கியப் பிரக்ஞையுள்ளவர்கள் ஒரு சமுதாயத்தில் ஐயாயிரம் ஆறாயிரம் பேர் இருந்து விட்டால் போதும். இலக்கியப் பரிச்சயத்தை ஆயிரம் நூல்களைப் படித்து விருத்தி செய்துகொள்ளக் கூடிய மனம் இருந்தால்தான் விமரிசகன் என்று ஒருவரைச் சொல்லலாம். படிக்கமாட்டேன் என்று சொல்பவர்கள்- விமரிசன அறிவு மட்டும் எனக்குத் தெரிந்த அளவில் கேட்டுக் கொள்ள ஆளில்லையே என்று சொல்லிப் பயனில்லை.

உலகில் எந்த மொழியாயினும் சரி எட்டியிருக்கிற உச்சத்தை, உச்சமாக உணர்ந்து அப்படியே, அம்மொழி இலக்கியமாகத் தமிழில் தர உள்ளம் உள்ளவர்களே தமிழ் உயர உதவுபவர்கள். ஆனால் அந்த ஐயாயிரம் ஆறாயிரம் பேர்வழிகள் கூடத் தோன்றி விடாதபடி இன்று பார்த்துக் கொள்ளப் பத்திரிகைக்காரர்களும், பேராசிரியர்களும் நம்மிடையே ஆதிக்கத்தைச் செலுத்துகிறார்கள். உலக இலக்கியத்தைச் சரிவர அறிந்து கொள்ள, படித்து அனுபவிக்க, ஆர்வம் உள்ளவர்களை உண்டாக்க உடனடியாக ஒரு இயக்கம் தமிழில் தேவை. இந்த இயக்கம் பிறமொழி இலக்கியப் பரிச்சயத்துடன் தமிழ் பற்றிய பின்னோக்கியப் பார்வையைப் பதிப்பதிலும் ஈடுபட வேண்டும். சங்ககாலம் முதல் இன்றுவரை உள்ள இலக்கியம் எல்லாவற்றையும் ஒரு விமரிசன ரஸனைக் கண்ணோட்டத்துடன் கண்டு மதிப்பீடு செய்து தரம் பிரித்துக் காண முயல வேண்டும். அம்முயற்சி இன்று தொடங்கினால், இரண்டு தலைமுறைகளில் ஒருவாறு உருப்பெறலாம், துவங்குதற்கே சூழ்நிலை சரியாக இல்லை.

அவனுக்கென்ன தெரியும், இவனுக்கென்ன தெரியும், இன்னாரைத் தவிர இந்த ஒரு விஷயம் பற்றி வேறு அதாரிடி கிடையாது, தேவையும் இல்லை என்கிற மனப்பான்மை அழிய வேண்டும். இலக்கியம் பொது, அதில் என் கண்ணோட்டத்துக்கு என்ன முக்கியம் உண்டோ அவ்வளவு முக்கியம் மற்ற ஒவ்வொருவருடைய கண்ணோட்டத்துக்கும் கருத்துக்கும் உண்டு என்று ஏற்றுக் கொள்வதே இலக்கிய விமரிசனம் வளர, அதன் மூலம் இலக்கியம் வளர, வழியாகும். இப்படிப்பட்ட ஒரு இயக்கம் இல்லாதவரையில் தமிழ் இலக்கியம் தேங்கும்- தமிழ் இலக்கிய விமரிசனம் சரியான பாதையில் அடியெடுத்து வைக்காது. உலகத்து மொழிகளுக்கும் இலக்கிய இயக்கங்களுக்கும் தமிழுக்கும் சம்பந்தமில்லை என்று சொல்லக் கூடிய காலம் போய்விட்டது. அப்படி மூடி மறைத்துக் கொண்டு இன்று இலக்கியம் செய்யமுடியாது.

உலகத்து இலக்கியங்களில் சிறந்தது என்று ஆயிரத்தைப் பட்டியல் போட்டுக் கொண்டு அவற்றில் ஒரு பாதியேனும் தமிழில் கிடைக்கும்படி ஏற்பாடு செய்ய வேண்டும். பதிலுக்குத் தமிழிலிருந்தும் உலக இலக்கியத்துக்கு எடுத்துத் தர வேண்டியது உண்டு, அது என்ன என்பதைக் காணவே விமரிசன அடிப்படை அறிவு மிகவும் அவசியம். அந்த அறிவை வளர்த்துக் கொள்ள உலக இலக்கியப் பிரக்ஞை ஆதாரமாகும்.

[இலக்கிய வட்டம் இதழ் 35- 12.3. 65]