உலகத்தில் மற்ற மொழி இலக்கியங்களின் ஆரம்ப காலத்தில் கவிதை ஒன்று தான் இலக்கியம்; மற்றது எல்லாம் இலக்கியம் என்ற பெயருக்கே லாயக்கற்றவை என்கிற நினைப்பு இருந்து வந்திருக்கிறது என்பது தெளிவாகவே தெரிகிறது. மற்ற மொழி இலக்கியங்களில் மற்ற இலக்கியப் பகுதிகள் கவிதைக்கு சற்றே பின்னர் தோன்றி இலக்கிய அந்தஸ்து பெற்றாலும், ஓரளவுக்குத் துரிதமாக வளர்ந்துவிட்டன. தமிழில் (காரணம் எதுவானால் என்ன – அது பற்றிப் பின்னர் விசாரித்துக் கொள்ளலாமே) பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி வரையில் செய்யுள் வடிவில் வந்தது ஒன்றுதான் இலக்கியம், மற்றது எல்லாம் இலக்கியமே அல்ல என்கிற எண்ணம் தான் ஆட்சி செலுத்தி வந்திருக்கிறது. இந்த எண்ணம் இன்றும் முழுவதும் அழிந்துவிட்டதாகச் சொல்லமுடியாது. பெஷ்கியைப் பற்றி பேசுகிற பண்டிதர்கள் இன்னமும் அவருடைய தேம்பாவணியைப் பற்றி குறிப்பிடுகிறார்களே தவிர, பரமார்த்த குரு கதையைப் பற்றி பேச தயங்குகிறார்கள். சுந்தரம் பிள்ளையின் மனோன்மணியத்தைப் பற்றி பேசுபவர்கள், பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய ஒரு வளமான நாவல் இலக்கியத்துக்கு வழிகாட்டிய வேத நாயகம் பிள்ளையின் பிரதாப முதலியார் சரித்திரம், பி.ஆர்.ராஜமையரின் கமலாம்பாள் சரித்திரம், ஆ.மாதவையாவின் பத்மாவதி சரித்திரம் பற்றி பேச முற்படுவதில்லை. தமிழில் சிறுகதையோவென்றால் – தொல்காப்பிய அத்தாரிட்டியைச் சொல்லுகிறவர்கள் இருக்கட்டும்! – முதல் உலக யுத்தத்திற்குப் பின் ஏற்பட்டது என்று சொல்ல வேண்டும். இலக்கியம் என்று சொல்லக்கூடிய நாடகங்கள் இன்றும் ஏற்படவேயில்லை. கிண்டல், கேலிச் சித்திரங்கள் இவையும் அதிகமாக ஏற்பட்டு விடவில்லை. என்றாலும் இலக்கிய அந்தஸ்தை எட்டக்கூடிய அளவிற்கு அவற்றிலும் ஓரளவு முன்னேற்றம் இருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.
இன்னொரு விஷயமும் சொல்ல வேண்டும். வசனத்திற்கு இலக்கிய அந்தஸ்து ஏற்பட்டு விடவில்லை. என்றும், கவிதைக்கு அந்த அந்தஸ்து வெகு காலமாக ஏற்பட்டு வந்திருக்கிறது என்றாலும் கூட, கவிதையிலும் எல்லாவற்றையும் ஒரே ரகமாகக் கருதும் ஒரு வழக்கமும் ஏற்பட்டுவிட்டது. சிலப்பதிகாரமும், கம்பராமாயணமும், பெரிய புராணமும் – தமிழ் கவிதை ஒரே ரகமானது என்று நினைப்பு. சங்கத் தொகை நூல்களில் எதைச் சொன்னாலும் ஒன்றுக்கொன்று மட்டமில்லை என்கிற அளவில் சகட்டு மேனிக்கு அளவிடும் பழக்கம் வந்துவிட்டது. குறவஞ்சி, பள்ளு, நொண்டிச்சிந்து முதலியவற்றிற்கு இலக்கிய அந்தஸ்து சமீபகாலத்தில் ஏற்பட்டது தான். இந்த புது முயற்சிகள், புரட்சிகரமான முயற்சிகளை விட, இரக்ஷணிய யாத்திரிகம், மனோன்மணியம் போன்றவை ஆங்கில வழி வந்தாலும் தமிழ் பண்டித மரபு பிறழாத நூல்கள் நல்ல இலக்கியம் என்கிற ஒரு நினைப்பும் வளர்ந்து வந்திருக்கிறது.
இதற்கெல்லாம் அடிப்படை என்று எனக்கு தோன்றுகிற ஒரே காரணம், தமிழில் சிறு அளவில் கூட இலக்கிய விமர்சனம் இந்த மறுமலர்ச்சிக் காலத்தில் வளராதது தான் என்று சொல்லவேண்டும். ‘முறை’யாக தமிழ் படித்தவர்களின் தமிழ் அன்பைப் பற்றி எனக்குச் சந்தேகம் சிறிதும் இல்லை. ஆனால், அவர்களுடைய ரஸனையுணர்ச்சியையும் அறிவையும் பற்றித் தான் அடிக்கடி சந்தேகம் உண்டாகிறது.
- வ.வே.சு ஐயர்
தமிழில் இலக்கிய விமர்சனத்தை உருவாக்கித் தர முயன்றவர்களில் முதல்வராகச் சொல்லவேண்டியவர் வ.வே.சு ஐயர், ஆனால் அவருடைய இலக்கிய விமர்சனம் முற்றிலும் மேல் நாட்டு அடிப்படைகளிலே எழுந்தது. கம்பன் என்கிற மகாகவி மில்டனைப் போன்றவன் என்று சொல்லுகிற முயற்சியிலே அவர் இலக்கிய விமர்சனம் அடங்கிவிட்டது. வ.வே.சு ஐயர் காலத்துக்கு இருபது வருஷங்களுக்குப் பிறகு மில்டன் அப்படி ஒன்றும் சிரேஷ்டமான கவி அல்ல என்கிற முடிவுக்கு வர ஆங்கில இலக்கிய விமர்சகர்கள் தயங்கவில்லை. வ.வே.சு ஐயரை பின்பற்றுகிற தமிழனும் சேர்ந்து கம்பனை ஒதுக்கிவிடலாம். கம்பனும் மில்டனைப் போலத் தான் என்று ஏற்பட்டுவிடும். வ.வே.சு ஐயர் தொடங்கி வைத்த ஆங்கில அடிப்படையில் தமிழில் விமர்சனம் செய்வது என்கிற காரியம் அ.ச.ஞானசம்பத்தத்தின் இலக்கியக் கலை என்கிற பாடபுஸ்தகம் வரையில் வந்து முடிந்திருக்கிறது. Realism, Romanticism வரையில் பலப் பல வார்த்தைகள் இன்று நம்மிடையே அடிபடுகின்றன. ( ஒரு தமிழ் விமர்சகர்(?) Mysticism என்பதைக் கூட ஒரு இலக்கிய ரீதியாகச் சொல்லிவிட்டார்! ) இந்த வார்த்தைகள் எல்லாம் ஒரு குறிப்பிட்டக் காரியத்துக்காக மேல் நாட்டு இலக்கிய விமர்சகர்கள் உபயோகப்படுத்துகிற வார்த்தைகள். அவற்றின் அர்த்தமே அப்படி ஒன்றும் பூரணமாகத் தெளிவான விஷயம் அல்ல என்றுதான் சொல்லவேண்டும். நாம் இந்த வார்த்தைகளை உபயோகிக்கும் போது எந்த அர்த்தத்தில் உபயோகப் படுத்துகிறோம் என்று நமக்கும் தெரிவதில்லை; நாம் எழுதுவதை வாசிப்பவர்களுக்கும் தெரிவதில்லை என்று தான் சொல்லவேண்டும்.
மொழிக்கேற்ப தனி உயிருடனும் உருவத்துடனும் இலக்கியம் வளருகிற மாதிரி, அந்த இலக்கிய அடிப்படையிலேயே இலக்கிய விமர்சனமும் வளரவேண்டும் என்பது ஆதாரமான ஒரு விஷயம். இல்லாவிட்டால் விமர்சனமோ இலக்கியமோ வளரும் என்று சொல்லமுடியாது. ஆனால் அதற்காகத் தூய தமிழ்வாதிகள் மொழி தனித்தியங்க வேண்டும் என்று சொல்கிற மாதிரி இலக்கியமும் விமர்சனமும் தனித்தியங்க வேண்டும் என்று நான் சொல்லுவதாக எண்ணக்கூடாது. உலகில் எந்த மொழியில் இயற்றப்பட்டிருக்கும் எந்த இலக்கியத்துக்கும் இன்றைய தமிழும் வாரிசுதான். நமக்கும் உரிய சொத்துதான் அது. ஆனால் எந்த இலக்கிய உருவமும் தமிழுக்கு வரும்போது தனி உருவமும் பெருகிறது.
இதை இப்படிச் சொல்லுவதைவிட உதாரணத்தால் விளக்குவது சிறிது சுலபம். உலகிலே கதைகள் பரவத் தொடங்கியது இந்திய கதைகளைப் பின்பற்றித் தான் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்லுகிறார்கள். ஆனால் சிறுகதை என்ற இலக்கிய உருவம் இந்தியாவுக்கு வந்தபோது அது மேல் நாட்டிலிருந்து வந்தது தான். இந்த மேல் நாட்டு இலக்கிய சாதனையான சிறுகதைக்கு இந்திய உருவம் கொடுத்த முதல் சிறுகதையாளர் என்று ரவீந்திரநாத் தாகூரைச் சொல்ல வேண்டும். அந்த இந்திய உருவத்தைத் தமிழில் வ.வே.சு ஐயர் சிறப்பாக ‘குளத்தங்கரை அரச மர’த்தில் ( தாகூரைப் பின்பற்றி) நமக்குத் தந்தார். பின்னர் வந்த சிறுகதையாளர்களின் கையிலே சிறப்பாக மணிக்கொடி காலத்தைச் சேர்ந்த ‘புதுமைப் பித்தன்’, ‘மௌனி’, கு.ப.ராஜகோபாலன், ந.பிச்சமூர்த்தி இவர்கள் மூலமும் அடுத்த தலைமுறையைச் சேர்ந்த சிறுகதையாளர்களான லா.ச.ராமாமிருதம், தி.ஜானகிராமன், கு.அழகிரிசாமி இவர்கள் மூலமும் சிறப்பான தமிழ் உருவம் பெற்றது. இப்போது பத்திரிகைச் சதுப்பு நிலத்திலே போய்த் தேங்கிக் கிடக்கிறது. மீண்டும் சிறப்பாகக் கரையேறும் என்கிற நம்பிக்கை எனக்குண்டு.
இதேபோல நாவல் என்கிற இலக்கியப் பகுதியும் தமிழ் உருவம் பெற்ற சரித்திரம் சொல்லலாம்.- ஏனென்றால் நாவலில் சற்றேறக் குறைய எண்பது வருஷம் வளர்ச்சியிருக்கிறது நமக்கு. மற்ற இலக்கிய பகுதிகளில் – முக்கியமாக நாடகம், கட்டுரை, இலக்கிய விமர்சனம் இவற்றில் – சரித்திரம் சொல்ல வளரவில்லை என்றே தோன்றுகிறது. வளர்ந்த அளவிலும் கூட சரியான போக்கில் போகவில்லை.
இலக்கிய விமர்சனம் தமிழில் சரியானபடி வளராத காரணத்தினால், இன்று தமிழ் நாட்டில் நடக்கிற பல விஷயங்கள் சாத்தியமாகின்றன. அவை எல்லாவற்றையும் இங்கு பட்டியல் செய்ய இடமில்லை – ஓரளவுக்குக் குறிப்பிட்டுக் காட்டுகிறேன்.
தமிழுக்கு சேவை செய்தவர்கள் என்று சமீப காலத்தில் அமர்க்களப் படுத்தப்படுபவர்களில் பெரும்பாலானோர் – அவர்கள் பெயர்கள் இங்கு வேண்டாம் – இலக்கியத் திருடர்கள். பிறர் எந்த மொழியிலோ எழுதி வைத்ததைத் தமிழில் தன்னுடையது என்று வெளியிட்டுப் பெயர் பெற்றவர்கள். உடனே ஷேக்ஸ்பியரும்தான் விஷயங்கள் பலவற்றைத் திருடினாராமே என்று கேட்பது வழக்கமாகி விட்டது நமக்குள்ளே. வழக்கிலிருந்த, இலக்கியமாகப் பூரண உருப்பெறாத விஷயங்களை எடுத்துப் பரிபூரண இலக்கியக் கவிதை நாடகமாக்கி நமக்குக் கொடுத்தான் ஷேக்ஸ்பியர் என்பது உண்மை. ஆனால், நமது பேராசிரியர்கள் சிறந்த ஐரோப்பிய சிறுகதாசிரியர்களும், நாவலாசிரியர்களும் எழுதிய பல நல்ல கதைகளை எடுத்து அபூரணமாக்கி அதே உருவத்தில் நமக்கு மீண்டும் அளித்திருக்கிறார்கள். இப்படி எடுத்தது என்று சொல்லுகிற சாதாரண நாணயம் கூட இவர்களிடம் இல்லை.
சிறுகதை வளர்ந்திருக்கிறது. ஆகவே, தமிழில் சிறுகதையைப் பற்றி பலரும் பேசுகிறார்கள். ஆனால் சிறந்த சிறுகதாசிரியர்களைப் பற்றி பேசுகிற மூச்சிலேயே ஐம்பதாந் தரத்தைச் சேர்ந்தவர்களையும் சேர்த்து பேசுகிறார்கள் – இரண்டும் ரகம் ஒன்று தான், தரம் அதுவே தான் என்று காட்டுகிற மாதிரி, ஐம்பதாந்தர ஆசிரியர் ஒரு பத்திரிகையில் சேவை செய்பவர் என்பதனால் அவர் தயவு தேவையாக இருக்கிறது என்பது தவிர இலக்கிய ரீதியாக அவர் சிறுகதை நல்ல சிறுகதை வரிசையில் இடம்பெறத் தேவையேயில்லை. இங்கு நான் பெயரைக் குறிப்பிடவில்லை. பயந்து அல்ல, அவசியமில்லை என்பதனால், அவரவர் இஷ்டப்படி எந்தப் பத்திரிகாசிரியரையும் சேர்த்துக் கொள்ளலாம் என்று.
நான் சிறுகதை, நாவல் என்று முதலில் சொல்வது எனக்கு சுபாவமாக வருகிறது. ஆனால், இன்றைய இலக்கியக் கர்த்தாக்கள் பண்டைய, நடுக்காலத்தைய இலக்கியங்களைப் படித்ததேயில்லை. பழசில் ஆதாரமில்லாமல் புதுசு பிறவாது என்று பலர் ( பண்டிதர்கள்தான்) சொல்லுகிறார்கள். இதுவும் இலக்கிய விமர்சனம் முன்னேறாத காரணத்தினால் ஏற்படுகிற விளைவு தான். பண்டைய இலக்கியப் பரப்பு பூராவும் ஒரே தரமான முக்கியத்துவம் உள்ளதா? அப்படி இருக்க முடியுமா? அந்த பண்டைய இலக்கியத்தின் தராதரங்களைச் சொல்ல யார் என்ன முயற்சி எடுத்திருக்கிறார்கள், இதுவரையில் இந்த பண்டிதர்களிலே? எல்லாம் ஒரே தரம் என்கிற நினைப்பு இருக்கும் வரையில் படித்ததும் ஒன்றுதான் – படிக்காததும் ஒன்றுதான்.
கம்பனையும் சங்க இலக்கியங்களையும் பற்றி பற்றி இலக்கியங்கள் வளர்ந்திருக்கின்றனவே தவிர, இலக்கிய விமர்சனம் தோன்றிவிடவில்லை.
பாரதியாரைக் கூட தர விமர்சனம் செய்ய இதுவரை யாரும் முன்வரவில்லை என்பது தமிழில் இலக்கிய விமர்சனத்தின் இன்றைய நிலையை நமக்கு நன்கு அறிவுறுத்துகிறது.
தமிழ் தமிழ் என்று பெருமைப் பட்டுக்கொண்டால் போதாது. தமிழில் பழசுக்கும் புதுசுக்கும் இலக்கிய விமர்சனம் தேவை. நல்லது கெட்டது பார்த்துத் தரம் சொல்லி, நல்லதில் சிறந்தது எது எதனால் என்று சொல்லுகிற விமர்சன வளம் நமக்கு இப்போது உடனடியான தேவை.
நன்றி : சரஸ்வதி, ஆகஸ்டு, 1958.