நிலை

06-05-untitled-2091

பேருந்து நிலையத்தில் தனியனாய், அந்த பதினொரு மணி இரவில், நிலவொளியில் காரைக்கால் செல்லும் பேருந்துக்காகக் காத்து நின்றிருந்தான். பேருந்து எப்போது வரும் என்று தெரியாமல், முதன்முறையாய் பாண்டிச்சேரிக்கு பயணம் வந்ததில் அவனுக்கு நிறைய எதிர்பார்ப்புகள் இருந்தன.

பாண்டிச்சேரியைக் குறித்து பலவிதமான எண்ண ஓட்டங்கள் அவனுக்குள் – அரவிந்த ஆசிரமும், பிரெஞ்சுக் கலாச்சாரமும், பாரதி வாழ்ந்த இடமும், குயில் தோப்பும், பாரதிதாசனும், கடைசி கடைசியாய் கி. ராஜநாராயணனும் நினைவுக்கு வந்தபோது, அந்தக்காலமும், அதைச் சார்ந்த நினைவுகளும் அவனை மிக வேகமாகப் பின்னோட்டிச் சென்றன. கண்மூடி, சலனமின்றி அந்த பேருந்து நிலையத்தின் காங்கிரீட் சாய்வு அமர்வு இருக்கையில் அமர்ந்திருந்தான்.

அவனது மணிக்கட்டு புத்தகக் கட்டுக்களை தூக்கி எடுத்து வந்ததால் மிகப் பிரமாதமாய் நோவெடுக்க ஆரம்பித்தது. தோள்பட்டைகளில் இழுத்துப் பிடித்ததுபோல் ஒரு வலி. கால்களின் முட்டியில் ரத்தம் கட்டிய வலியில், கணுக்கால்கள் இரண்டும் வலுவிழந்து வெறுமே அந்தரத்தில் தொங்கியது போல ஒரு உணர்வுடன் அமர்ந்திருந்தான்.

புத்தகக் கட்டு ஒன்றை எடுத்து தன் காலடியில் வைத்துக் கொண்டான். அனிச்சையாய் அதன் மேல் கால்கள் பட, ஒரு இதமான உணர்வு கால்களுக்கு ஏற்படுவதை அவனால் உணர முடிந்தது. அப்படியே சிறிது நேரம் வைத்துக் கொண்டிருந்தான். மேலும் ஒரு புத்தகக் கட்டை அமர்வு இருக்கையில் வைத்து விட்டு, அதன் மீது அவன் தன் கையை வைத்துக் கொண்டு தலைக்கு அணை கொடுத்தது போல் சாய்ந்து அமர்ந்திருந்தான். அசதியில் கண்கள் சுழல, மெல்ல ஒரு அமைதியில் லயிக்க ஆரம்பித்தான்.

காலையிலிருந்து அன்றைய நாள் ஒரே ஓட்டமாகச் சென்றுக் கொண்டிருக்கிறது. திருவண்ணாமலையில் ஆரம்பித்து விழுப்புரம் வந்து, பாண்டிச்சேரியில் பேருந்து நிலையத்தில், காரைக்காலுக்குக் காத்திருக்கையில் அவனுக்கு ஒரே யோசனையாக இருந்தது. மிகச் சொற்பமான ஓர் சம்பளத்தில், இப்படி ஊர், ஊராய் புத்தகக் கட்டுக்களை தூக்கி அலைந்து கொண்டிருப்பதில் எதிர்காலம் எப்படி அமைந்து விடக்கூடும் என்று பலவிதமான யோசனைகள். முந்தைய உரக் கம்பனி வேலையை விடவும் இது கடினமாக தோன்றியது. ஆயிரம் ருபாய் அதிகமாகிறதே என்று இந்தக் கம்பெனியில் சேர்ந்திருந்தாலும், புதிய புத்தகங்களின் மை வாசனையும், கடைக்காரர்களின் மரியாதையான உபசரிப்பும், உரக்கம்பனியில் எதிர்பார்க்க முடியாதது.

‘யோவ், எழுந்திருப்பா’ என்ற குரல் கேட்டவுடன் ‘சட்’டென்று விழிப்பு உலகத்திற்கு வந்தான். ஒரு நொடிக்கு, தான் எங்கிருக்கிறான் என்று தெரியவில்லை. ‘ பாண்டிச்சேரியா, பாரிஸ் கார்னரா,’ என்று பிடிபடாது விழித்தான்.

எதிரே கும்பலாய் , நாலைந்து பேர் நின்றுக் கொண்டிருந்தார்கள். வரிசையாக அழுக்கு துணியுடன் தலை கவிழ்ந்து, கண்களில் தூக்கம் தூக்கலாய் தெரிய, கலவரமாய் ஒரு வித அச்ச உணர்வுடன் அந்த வரிசை இருந்தது. கைக்குழந்தை கதற, இடுப்பில் ஒரு குழந்தை அமர்ந்திருக்க, அருகிலிருந்த கணவனின் கைகளில் மற்றுமொரு குழந்தையிருக்க மிரட்சியுடன் ஒரு கிராமத்துக் குடும்பம்.

“படிச்சவன் மாதிரியிருக்க, என்னய்யா ப்ளாட்பாரத்தில தூங்கிக்கிட்டு இருக்க, அஜாக்கிரதையா எங்கயாவது உட்கார்ந்திட்டு, இருக்கற பொருளையெல்லாம் திருட்டு கொடுத்திட்டு, ஏன்யா எங்க உயிரை எடுக்கறீங்க?” என்ற அந்த காவலரின் அதிகாரக் குரலை கேட்டவுடன் புரிந்தது.

“சாரி சார். கொஞ்சம் அசதியாயிருச்சு. அதுதான் தூங்கிட்டேன். “

“பரவாயில்ல சார். இங்க திருட்டு பசங்க ஜாஸ்தி. திருட்டு போனதுக்கப்புறம் எங்ககிட்ட வந்து புகார் செஞ்சு வருத்தப்படறதுக்கு முன்னாடி நீங்களே ஜாக்கிரதையா இருக்கலாம்ல. சரி, சரி, என்ன லக்கேஜ் இது. கொஞ்சம் பிரிச்சு காட்டுங்க.”

“இதெல்லாம் பள்ளிக்கூட பசங்க படிக்கற புத்தகங்கள். பெங்களூர்ல எங்களோட கம்பனி இருக்கு. நான் இந்தக் கம்பனியோட விற்பனையாளரா இருக்கேன்.” என்றபடி அவனுடைய முகவர் அட்டையை காவலரிடம் நீட்டினான். அத்துடன் அவனுடைய வாகன ஓட்டுனர் உரிமை அட்டையையும் அவரிடம் காட்டினான்.

இப்போது அந்தக் காவலருக்கு அவனிடம் ஒரு மரியாதை ஏற்பட்டிருந்தது. அவரது பேச்சுத் தோரணையில் ஒரு சாதாரண சக மனிதனின் பேசும் தொனியும், சகஜபாவமும் வெளிப்பட ஆரம்பித்தது.

“சார் உங்க நன்மைக்குத்தான் சொல்றேன். இங்க திருட்டு பசங்க ஜாஸ்தி. நாம முழிப்போட இருக்கும் போதே ஆட்டையை போட்டுருவாங்க. களவு போயிருச்சுன்னு வந்தா, எங்களுக்குத்தான் வெட்டி வேலையும், அலைச்சலும்,” என்று தன்னுடைய சேவைக்கு ஏற்படும் பாதகங்கள் குறித்து பிரசங்கம் செய்ய ஆரம்பித்தார்.

“மன்னிச்சுக்குங்க சார். காலையில காரைக்கால் போகணும். அதுதான் உங்களுக்கு தொந்தரவு கொடுத்துட்டேன் போல,” என்று தாழ்ந்து பேசலானான்.

“சரி இந்த புத்தகக் கட்டை கொஞ்சம் தள்ளி வையுங்க. கொஞ்சம் உட்காரலாம்,” என்று சொல்லி அவனுடைய இருக்கையில் அமர்ந்தார் அந்த காவலர்.

இப்போது அந்த இருக்கையில் அவருடன் அவனுடைய புத்தகக் கட்டுகள் மட்டுமே இருந்தன. அவனை எங்கே உட்காரச் சொல்கிறார் என்று தெரியாமல் யோசித்தபடி சுற்று, முற்றும் எங்காவது காலியிடம் இருக்கிறதா என்று நோட்டம் விட்டான்..

அந்தக் காவலர் அவனுடைய இருக்கையில் மிகவும் சமாதானமாகியிருந்தார். “ஏ முத்து ஒரு டீ குடுப்பா,” என்று எதிரேயிருந்த தேநீர் கடையை நோக்கி ஒரு சப்தம் போட்டு, ‘ஹா’வென்று இரைச்சலாய் ஒரு கொட்டாவி விட்டார். கால்கள் இரண்டையும் அகல விரிக்க அவனுடைய புத்தகக் கட்டு ஒன்று சப்தமாய் கீழே விழுந்தது.

‘பூம்’ என்று சத்தமீட்டுக்கொண்டு ஒரு பேருந்து அப்போதுதான் உள்ளே நுழைந்தது. ‘தப தப’ என்று அந்தப் பின்னிரவிலும் ஒரு கும்பல் அந்தப் பேருந்தை நோக்கி ஓடியது. அந்தப் பேருந்தை மெதுவாக நிறுத்தி விட்டு, மேடையின் இடைவெளியில் மிகச் சரியாக நடத்துனரும் ஓட்டுனரும் சேர்ந்து  இறங்கலாயினர்.

“கண்டக்டர் வண்டி எப்ப எடுப்பீங்க?”

“காரைக்கால் வண்டி இது. காலையில ரெண்டு மணிக்குதான் எடுப்போம். அதுக்கு முன்னாடி ஒரு வண்டி இருக்கு. அதுல போகலாம் நீங்க.”

அவனுக்கு யோசனையாக இருந்தது. ஒரு மணி வண்டியை பிடித்தால் எப்படியும் நாலு, ஐந்து மணிக்கு விடிகாலையில் சென்று விடலாம். பின்னர் எங்கே தங்குவது. குளிப்பது என்ற கேள்வி பிரதானமாக எழுந்தது. காவலர் தன கடமையை மிகச் செவ்வனே செய்துக் கொண்டிருந்தார். அவனுடைய புத்தகக் கட்டு அவரது தலையணையாகி இருந்தது. இதற்கு மேல் காத்து நின்றால் காவலரால் அவனுடைய வேலைக்கு இழப்பு ஏற்பட்டு விடக் கூடும் என்று அவனுக்கு தோன்றியது.

மெதுவாக அவரிடம் “சார் என்னுடைய பஸ் வந்துட்டது கொஞ்சம் எழுந்திருச்சா என்னுடைய புத்தகக் கட்டை எடுத்துக்குவேன்.” என்றான்.

“மன்னிச்சிடுங்க தம்பி. கொஞ்சம் அசந்திட்டேன்.” என்று நிர்மலமாய் சிரித்தார். அவனுடைய புத்தகக் கட்டுக்களை தூக்கி கொண்டு நின்றுக் கொண்டிருந்த அந்த இரண்டு மணிக்கு புறப்படும் பேருந்தை நோக்கி அவனது பயணம் ஆரம்பித்தது.

பேருந்தில் ஏறியவுடன் வழக்கமாக அவன் எல்லா பேருந்துகளிலும் அமர்கின்ற இருக்கையை நோக்கி கண்கள் சென்றன. ஓட்டுனர் இருக்கையிலிருந்து சரியாக நான்காவது இருக்கையில் முன் சக்கரத்துக்கு இரண்டாவது இருக்கையில் அமர்வது அவன் வழக்கம்.

வழக்கம் என்று சொல்வதை விடவும், பழக்கப்பட்டு விட்டான் என்று சொல்ல வேண்டும். ஒவ்வொரு முறை, அந்த இருக்கையைக் காணும் போதும், அதில் யாரும் அமராமல் காலியாக இருந்தால், மனதில் ஒரு அமைதி ஏற்படும். அவன் பாட்டியின் சொல்படி கேட்பதில் ஒரு நிறைவு.

நேராக அந்த இருக்கைக்கு சென்று புத்தகக் கட்டுக்களைத் தலைக்கு மேல் பயணிகள் பிரயாணப் பைகளை வைக்கும் அடுக்கில் வைத்து விட்டு, காற்று வரும்படி ஜன்னல் ஓரமாய் அமர்ந்து கொண்டான். பேருந்தின் மையப் பகுதியில் அமர்வதால் விபத்துகளில் சிக்குவதற்கான வாய்ப்பு குறைவு என்பதுதான் அவன் அந்தக் குறிப்பிட்ட இருக்கையில் அமர்வதற்கான காரணம்.

மற்றுமொரு மிக முக்கியமான பழக்கம் அவனுக்கு அறிவுரைக்கப்பட்டது என்னவெனில், எல்லோரும் சேர்ந்து ஒரே வாகனத்தில் பிரயாணம் செய்யக் கூடாது என்பதுதான். அம்மாவும், அப்பாவும் தனித் தனியாகத்தான் எங்கேயும் செல்ல வேண்டும். வழக்கமாக அம்மாவுடன் அவன். எதற்காக அப்படி எல்லாவற்றையும் பிரித்துப் பிரித்து பாட்டி வைத்து இருந்தாள் என்று தெரியவில்லை. ஆனால், அவளது ஒவ்வொரு செய்கையின் காரணமாக, ஒவ்வொரு விஷயத்திலும் மனதளவில் மிகப் பெரிய இடைவெளி ஏற்படத்தான் செய்தது.

மனதளவில் மட்டுமல்ல, உணர்வு பூர்வமாகவே அனைத்து விஷயங்களில் இருந்தும் விலகி, அவனுக்கும், அதற்கும் சம்பந்தமில்லை என்ற உணர்வோடு அந்த காரியத்துக்கு தேவைப்பட்ட சிரத்தையுடன் அதனை அணுக வேண்டியுள்ளது என்பதை அவனால் புரிந்திருக்க முடிந்தது. அப்படியே வழக்கப்படுத்திக் கொண்டிருந்தான் .

சென்ற முறை கொட்டாங்குச்சி சாமியாரைக் காணும்போது, அவர் சொல்லிக் கொண்டிருந்ததை, கேட்கும்போது அவர் எதுவுமே புதிதாக சொல்வதாய் அவனுக்கு தெரியவில்லை. ஏற்கனவே அவனுக்கு புரிந்தவற்றை, அவன் மனதுக்குள் ஓடும் வாக்கியங்களை ஒலியாய் கேட்பது போலிருந்தது.

பஸ் உறுமும் சப்தம் கேட்டது. கொஞ்சம் அசந்து போய் உறக்க நிலையில் இருந்திருக்கிறான், என்பதையும், இப்போது எங்கே இருக்கிறான் என்பதையும் தெளிவு கொள்ள சில நொடிகள் ஆயிற்று. பேருந்தில் இருக்கைகள் அனைத்துமே நிரம்பியிருந்தன. நடத்துனர் அனைவருக்கும் சீட்டு வழங்கிக் கொண்டிருந்தார். பேருந்து நகரத் துவங்கியது. மற்றுமொரு பிரயாணம் தொடங்கி விட்டது.

“தம்பி, கொஞ்சம் தள்ளி உட்கார்ந்துக்குங்க. நீங்க தூங்கிட்டு இருந்ததால் உங்களை தொல்லை செய்ய வேண்டாம்னு பேசாம இருந்தேன்,” என்று ‘பளீரென்ற பற்களுடன் அருகில் அமர்ந்தவர் சொன்னார்.

‘சட்’டென்று கொஞ்சமாய் நகர்ந்துக் கொண்டு அவரை கவனிக்கலானான்.

மிகச் சுத்தமான வெள்ளை உடுப்பணிந்து, வெற்று நெற்றியுடன், வசீகரமான புன்னகையுடன், மிக வழவழப்பான சவரத்துடன்; அந்த இடத்துக்கு, அந்த நேரத்துக்கு துளியும் சம்பந்தப்படுத்த முடியாதபடி புன்னகைத்தார். மெலிதாக, இயல்பாக ஒரு மணம் வீசும் வாசனை திரவிய வாசனை.

“பரவாயில்லை கொஞ்சம் காத்து வாங்கிக்குங்க,” என்று ஜன்னலோரத்தைக் காட்டினார்.

அவனுக்குத் தூக்கம் போய் விட்டிருந்தது. நடத்துனர் அவனிடம் வந்து பயணச்சீட்டு தரும் வரையில் தூக்கம் வராது. அவரது வருகைக்காக காத்திருக்க வேண்டும். எனவே, அவனெதிரே இருந்தவரிடம் பேசத் துவங்கினான்.

“சார் என்ன கோயிலுக்கு போறீங்களா?”

“இல்ல ஒரு அலுவலக விஷயமா பாண்டிச்சேரி வந்திருந்தேன். இப்ப திரும்பவும் முடிச்சிட்டு காரைக்கால் போகணும். காலையில ஒரு கல்யாணம் திருக்கடையூரில. “

“உங்க ஊர் காரைக்கால்தானா?“

“நாகப்பட்டினத்தில வீடு. பாண்டிச்சேரி அரசாங்க உத்தியோகம். காரைக்கால்ல ஒரு ஸ்கூல்ல பிரெஞ்சு வாத்தியார். அலுவலக விஷயம் , பிரச்சனை எது என்றாலும் பாண்டிச்சேரிதான் வரணும்.”

அவரிடம் பேசிக்கொண்டிருக்கும்போது அவர் சொல்வதில் பாதி புரிந்த மாதிரி இருந்தது. பாதி புரியாத மாதிரியும் இருந்தது. முக்கியமாக மிக விரைவாக ஒவ்வொரு ஊரைப் பற்றி சொல்லும்போது, எப்படி அவ்வளவு இடங்களுக்கு அடிக்கடி செல்ல முடியும் என்று அவனுக்கு ஆயாசமாக இருந்தது. அவன் அந்தப் பிரதேசத்தில் பிரயாணம் செய்வது இதுதான் முதல் முறை. ஆனால் அவர் சொல்லும் இடங்கள் எல்லாம் பல நாட்களாக கேள்விப்பட்ட இடங்கள்தான். அங்குள்ள ஒவ்வொரு ஊருக்கும் ஒரு குறியீடு வரலாற்றுப் பூர்வமாகவும், ஆன்மீக, ஜோதிட ரீதியாகவும் ஏற்பட்டு விட்டதால் மனதுக்குள் ஒரு எதிர்பார்ப்பைத் தூண்டுவதாய் அந்த சம்பாஷணை தொடர்கிறது என்று எண்ணிக கொண்டான்.

“நாகப்பட்டினம் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கேன் சார். முக்கியமா தமிழகத்தின் தொன்மையான பௌத்த விஹாரம் அங்க இருக்கு தெரியுமா சார்?”

“தெரியாதே. எனக்குத் தெரிஞ்சு நாகப்பட்டினத்தில பௌத்தர்கள் யாரும் கிடையாது. . எனவே, பௌத்த விஹாரம் அங்க இன்னமும் இருக்கறதுக்கு வாய்ப்பே இல்ல,” என்று மிகத் தெளிவாக சொன்னார்.

அதற்கும் பின்னர் அவரிடம் பேசுவதில் எந்த அர்த்தமும் இல்லை என்று சோம்பலாகி விட்டது. வரலாறு தெரியாதவர்களிடம் பேசுவதில் மரியாதை இல்லை என்பது அவன் எண்ணம். எனவே, வெளியே பார்க்கலானான்.

“தம்பி இந்த பகுதியில சுனாமி வந்தப்போ அதிகமா பாதிக்கப்பட்டது நாகப்பட்டினம், காரைக்கால் பகுதிதான் தெரியுமா. நாகப்பட்டினத்தில மூணு மதத்துக் கடவுளும் இருந்தும், மக்களை காப்பாற்ற முடியல பார்த்தீங்களா. கடவுள் பெயரை சொல்லி மக்களை ஏமாத்தற கூட்டம் இதெல்லாம். முன்ன விவசாயம் பாத்துகிட்டு இருந்தாங்க. காவிரில தண்ணீர் வரத்து நின்னு போக ஆரம்பிச்சதிலிருந்து , மனுஷனோட பயத்தையும், நம்பிக்கையையும் அறுவடை செய்ய ஆரம்பிச்சிட்டாங்க இந்த பக்கத்து ஜனங்க.”

மேலும் தொடர்ந்தார். “உண்மையைத் தெரிஞ்சுக்கணுமுன்னு நம்பறவன் பல ஊர்கள்ல சுற்றி வந்தாலும் அனுபவத்துலதான் தெளிவு பெற முடியும். இத்தனை ஜனங்க ஊர், ஊராக கோயில், கோயிலாக போறாங்களே எதுக்கு , கடவுள்கிட்ட கமிஷன் பேச, கொடுக்க புரியுதுங்களா”

அவனுக்கு மீண்டும் கொட்டாங்குச்சி சாமியாரின் ஞாபகம் வந்தது. மக்களிடையே நல்லிணக்கத்தையும் சமுதாயத்தில் விழிப்புணர்வும், சமாதானத்தையும் உருவாக்குபவர்கள்தான் இறைவனால் அனுப்பப்பட்ட விசேஷமான பிரதிநிதிகள் என்று அவர் சொல்வது உண்டு. அவர்கள் எந்த ஊரில், எப்போது வந்தாலும், அவர்கள் அனைவரும் இறை உணர்வின் பிரத்தியேக அம்சம் என்று சொல்வார் அவர்.

“பஸ் முழுக்க இன்னைக்கு எவ்வளவு கூட்டம் பாத்தீங்களா. முன்னெல்லாம், காலையில இரண்டு மணிக்கெல்லாம் வண்டியே கிடையாது. நாளைக்கு சனிப் பெயர்ச்சி அதுதான் திருவிழா கூட்டம். மூணு கிலோ மீட்டருக்கு ஜனங்களும், வாகனங்களுமா அந்த சின்ன ஊர், படாத பாடு படும். ஆனாலும் ஒரு நன்மை உண்டு. இந்த ஒரு வார விழாவில நம்ம ஊரு ஜனங்க ஒரு வருஷ வருமானம் பாத்திடுவாங்க.”

“வருஷத்தில எத்தனை முறை சனிப் பெயர்ச்சி வருதுங்க?” என்று எதிர் கேள்வி கேட்டான்.

“தெரியலீங்க, ஆனாலும் அடிக்கடி வருதுன்னு நினைக்கிறேன். ஏன்னா, இப்பல்லாம் ஊர்ல திருவிழாக் கூட்டம் அடிக்கடியிருக்கு. சனிப்பெயர்ச்சி, இல்லை, ராகுபெயர்ச்சி, குருப்பெயர்ச்சினு நம்ம மக்களைப் போலவே நம்ம கோள்களும் சுற்றிச் சுற்றி வருது.”

“கோள்களும் நம்மை மாதிரியே இருக்கு பாருங்க. எப்படி ஒரு செக்கு மாடு, பழக்கப்பட்ட இடத்தை சுற்றி, சுற்றி வருமோ, அதே போல வருஷம் தவறாம, யுகம் தவறாம இந்தக் கோள்களும் சுற்றி, சுற்றி ஒரே பாதையில தவறாம வருது.”  என்று அவனது ஆச்சரியத்தை அவரிடம் பகிர்ந்தான்.

அவர், அவனை கூர்மையாக பார்த்தார். “உண்மைதான் தம்பி, பழக்கமான பாதையில் தொடர்ந்து இடைவிடாது போறதில் உள்ள நிறைவு, புதிய பாதையில் கிடைக்காது. ஏற்கனவே பார்த்த இடங்கள், பார்த்த மனிதர்கள், பேசிய பேச்சுக்கள், இதுக்கெல்லாம் உள்ளே புகுந்து பார்க்கும்போது பிடிபடும் விஷயங்கள், புதிய இடத்திலும், புதிய மனிதர்களிடமும் கிடைக்கும் என்று நான் நம்புவதில்லை.”

“அப்ப உங்ககிட்டயிருந்து நான் எதுவுமே கத்துக்க முடியாது. உங்ககிட்டயிருந்து நான் எதுவுமே எடுத்துக்க முடியாதுன்னு சொல்றீங்களா?”

“எங்கிட்ட உங்களுக்கு வேண்டியது எதுவுமேயில்ல நீங்க எதுவுமே எடுத்துக்க முடியாது. உங்ககிட்ட இல்லாத எது என்கிட்ட இருக்க முடியும்?” என்று புதிர் போட்டார்.

அந்த சம்பாஷணை   ஒரு அற்புதமான கட்டத்தில் நிறைவு பெற்று விட்டதை இருவருமே உணர்ந்தார்கள். அவன் கண்களை அவரிடமிருந்து விலக்கி கொண்டு, ஜன்னல் வெளியே கப்பிய காரிருளைக் காணச் செய்தான். முகத்தை சிலிர்க்க வைத்தது குளிர் காற்று. டீஸல் மணத்துடன் வயிற்றை ஏதோ செய்தது அந்த காற்று. கடலூர் சிப்காட்டின் ரசாயன கழிவுப் புகை கண்களை எரியச் செய்தது. நடத்துனர் அவனிடம் வந்து பயணச் சீட்டு தரும்போது கொஞ்சமாய் வெளிப்புற நச்சு அவனை ஒன்றும் செய்யாமல் மறக்க முடிந்தது.

பக்கத்தில் அமர்ந்திருந்தவரைப் பார்த்தான். ஒரு தேர்ந்த அமைதியுடன் கண்களை மூடிக் கொண்டு லயமாக மூச்சு விட்டுக் கொண்டிருந்தார். பேருந்தின் ஓட்டத்துக்கு ஏற்ப அவரது உடல் முன்னும், பின்னுமாய் ஒரு லயமின்றி ஆடிக் கொண்டிருந்தது. எந்தவிதமான பிடிப்பும் இன்றி அமைதியாய் அமர்ந்துக் கொண்டிருக்கும் அவரை பார்க்கும் போது தன்னால் ஏன் அப்படி எல்லாம் இருக்க முடிவதில்லை என்று அவனுக்கு தோன்றியது.

இரண்டே விதமான மனிதர்களைத்தான் தான் காண்பதாய் உணர்ந்தான். ஓடிக் களைந்து உறக்கம் கொள்பவர்கள். மனதில் சாந்தம் கொண்டு உறக்கம் கொள்பவர்கள். உறக்கத்திலேயே களைத்து விடுபவர்கள் யாரேனும் உண்டா என்று தெரியவில்லை. மீண்டும் சில நிமிஷங்கள் கண்ணயர்ந்தால், காரைக்கால் சேரும் போது தெளிவாகவும், சோர்வில்லாமலும் இருக்கும் என்று மெதுவாய் கண்ணயர்ந்தான் அவன். பஸ் இருட்டில், பழகிய பாதையில் மெதுவாக முன்சென்று கொண்டிருந்தது.