இது எப்போது நடக்கும் என்பது துல்லியமாகத் தெரியாது. ஆனால் நடந்து விடுகிறது. வானம் திறந்து கொள்கிறது. தேவர்கள் பூமாரி பொழிகிறார்கள். அமிர்தம் வர்ஷிக்கின்றது. அதில் நனைந்தவர் தொட்டதெல்லாம் ஒளிர்கிறது; தொட்டவரெல்லாம் ஆனந்திக்கின்றனர். இது இசை கேட்கையில் சிலருக்கு நடப்பதுண்டு. நடந்து சில நிமிடங்கள் அவ்வானந்த நிலையிலேயே அவர்கள் இருப்பதுமுண்டு. கிருஷ்ணனுக்கு அன்றும் நடந்தது. சங்கீதக் கச்சேரியில்தான். ஆனால் சங்கீதத்தால் அல்ல, சாஹித்யத்தால்.
ராதை ஜெயதேவரின் அஷ்டபதிகளின் நாயகி. புராண, பாகவதங்களில் இல்லாத ஆனால் ஐந்தாம் நூற்றாண்டு வாக்கில் ஹலசதவாஹன உருவாக்கிய ஒரு பாத்திரத்தை பனிரெண்டாம் நூற்றாண்டில் ஜெயதேவர் அஷ்டபதிக்காக பயன் படுத்தி, பிரபலமாக்கியதாகக் கேள்வி. ரவிவர்மாவின் ஓவியத்தில் கண்ணனின் இட வலங்களை அலங்கரித்த பாமா, ருக்மணிகள் தான் இதிகாச ஜோடிகள் .
கச்சேரிகளின் இறுதியில் அஷ்டபதியில் இடம்பெற்ற மதுரமான சமஸ்கிருத கீதங்களை அழகான ராகங்களில் அனுபவிக்கலாம். பாடுபவர்கள் எவராக இருந்தாலும் கேட்பதற்கு சௌக்யமான சங்கதிகள் நிறைந்த இனிமையான இசைக்கோர்வை, புராதனமான ஆனால் இப்போதும் புழக்கத்தில் இருக்கும் இசை வடிவம். நாட்டிய அபிநயங்களுக்கு ஏற்ற பாவமுள்ள சொற்புதையல்.
கிருஷணன் ஒரு இசைப் பிரியர். இந்த முறை இசைவிழாவின் போது அகாடமியில் சீசன் டிக்கெட் வாங்கி இசைமழையில் நனைந்து அஷ்டபதி, தில்லானா ஜாவளி பதங்களுக்காக காத்திருந்து அவைகளை பாடகர்கள் மனமிறங்கி பாடினால் பரிபூரணமாக ரசித்து ஆனந்தமடைந்தவர். டிசம்பர் சீசனுக்குப்பிறகு நல்ல பாடகர்களை தேர்ந்தெடுத்து குறிப்பிட்ட கச்சேரிகளுக்கு மட்டும் செல்வார். கிருஷ்ணன் தெலுங்கு, சமஸ்கிருதம் மொழிகளை அறியாதவர். பாடகர்களின் இசைச் சங்கதிகள் தான் அவர் மூளையைத் தாக்கி நெஞ்சை நிரப்பும்.
அன்று ஞாயிற்றுக் கிழமை. முதல் நாள் இரவு சிறிது கனமாக பெய்த மழையில் பூமி குளிர்ந்திருந்தது. வேதாந்தத்தை தீட்சிதர், தியாகராஜர், புரந்தரதாஸர், ஜெயதேவர் முதலியோர் எப்படி கையாண்டிருக்கிறார்கள் என்பதை “கீதவேதாந்தங்கள்” என்ற தலைப்பில் அன்று மாலை 6 மணிக்கு ஒரு பிரபல, அனுபவம் மிக்க வித்வான் மயிலை சிவகாமி பெத்தாச்சி அரங்கில் வழங்கும் செய்தி அறிந்து கச்செரிக்குச் செல்ல முடிவு செய்தார். அஷ்டபதி நிச்சயம் இடம்பெறும் என்ற நம்பிக்கை அவரை இயக்கியது.
பாடகர் ‘மாயாமாளவ கௌளை’யில் அமைந்த தீட்சிதரின் ஆழ்ந்த ஞானமுள்ள குருவின் அவசியத்தை வலியுறுத்தும் “ஸ்ரீ நாதாதி” என்ற க்ருதியை தெய்வீகமாக இசைத்து வேதாந்த வித்திட்டார். வேதம், உபநிஷத், பாகவதம், பகவத் கீதை இவைகள் எடுத்துரைக்கும் வேதாந்த சாராம்சங்களை தெளிவாக சுருக்காக விளக்கினார். இறைவனை அடைய இசை ஒரு மேன்மையான உபாயம் என கீத வேதாந்த தத்துவத்தை தெளிவாக்கினார். வேதாந்தம் அணுகுபவர்களை அனுசரணையாக நன்னெறியில் அணைத்துச் செல்லும் அனுகூலமான உபாயம். அஞ்சாமல் அணுகலாம்.
தீட்ஷதரின் கேதார ராக “அம்பிகாய” என்ற க்ருதியை பாடி சுய விடுபடுதலுக்கான நெறிகளை விளக்கினார். “வினதா சுதா” என்ற தியாகராஜரின் ஜெயந்தசேனா ராக க்ருதியின் மூலம் மண்ணுலகில் நல்லோர் சேர்க்கையால் அடையும் இன்பத்தை எல்லோரும் அவசியம் நாட வேண்டுமென வலியுறுத்தினார். “ராநிதி ராது (மணிரங்கு) “என்னும் கீர்த்தனைக்கு விளக்கம் அளிக்கும்போது “வாராதன என்றும் வாரா” “ஒழியாதன என்றும் ஒழியா” என்றார். கீர்த்தனை இனிமையாக இருந்தது. மானிடர்கள் மீளவே முடியாத மரணத்தின் தன்மைகளை அறிவுறுத்தி புரந்தரதாஸர் இயற்றிய யதுகுல காம்போதி ராக “ஈ சிரிய நம்பி ஹெக்களு” என்ற க்ருதியை கச்சிதமாக இசைத்தார்.
அடுத்து, வித்வான் அஷ்டபதிக்கு வந்தார். ரசிகர்களுக்கு கிருஷ்ண பரமாத்மாவையும், ராதையையும் பற்றி பெரிய ஆச்சரியம் தரும் ஒர் ஒப்பற்ற தகவலை அழகாகப் பகிர்ந்து கொண்டார்.
“நான் உன்னை முழுவதும் உணர்ந்து என் உடல் பொருள் ஆவி அனைத்தையும் உன்னிடம் ஒப்படைத்துவிட்டேன். இனி நீதான் எனக்கு எல்லாம். என்னை கரை சேர்க்கவேண்டியது உன்னுடைய பொறுப்பு” என்பதைச் சொல்லி கொஞ்சம் நிறுத்தி, என்று கிருஷ்ணனிடம் ராதை சரணாகதி அடைந்தாள், என்று நான் சொன்னால், நீங்க எல்லாம் நம்பிடுவீங்க. ஆனால் கிருஷ்ணர் தான் ராதையிடம் அப்படி சரணாகதி அடைந்தார் என்று ஜெய தேவர் அஷ்டபதியில் சொல்லி இருக்கார்” என்று முகாரி ராக “ப்ரிய சாருஷீலே” என்று பாடலை ஆரம்பித்தபோது கிருஷ்ணன் ஒரு வினாடி பரவசத்தில் ஆழ்ந்தார். மின்னல் ஒன்று அவருள் ஒளிர்ந்தது போல் உணர்ந்தார். அப்போதுதான் சாதாரணமாக சங்கீதத்தால் நிகழ்வது இன்னமும் ஆழமாக சாஹித்யத்தால் அவருக்கு நிகழ்ந்தது.
அவரைச் சுற்றி முன்னும், பக்கவாட்டிலும் அமர்ந்திருந்தவர்கள், மேடை, மேடையிலிருந்த வித்வான், பக்க வாத்யக்காரர்கள், மேடை அலங்காரம், மைக்குகள், அரங்கில் ஒளிர்ந்த விளக்குகள், வாயில்கள், மின் விசிறிகள், குளிர் சாதனங்கள், திரைச் சீலைகள் எல்லாம் தெளிவாக, துல்லியமாக மிருதுவாக அவருக்குத் தெரிந்தன. எல்லா ஒலிகளும் கேட்டன. இருமல்கள், ஆடைகளின் சரசரப்புகள், மூச்சு விடுவது கூட கேட்டது. மனம் வெகு அமைதியாய் ஆனால் கூர்மையாய் இருந்தது.
திடீரென்று பக்கத்தில் இருந்தவர் எழுந்து போகவே காலியான இருக்கையை நோக்கி ஒரு நடுத்தர வயது பெண் வந்தாள். “காலியாகத்தானே இருக்கு” என்று கேட்டபோது “ஆமாம்” என்று கூறி, அவளை பார்த்த உடன் அவளை அடையாளம் கண்டு கொண்டார். அலுவலகத்தில் பணியில் இருந்த போது அகௌண்ட்ஸ் பிரிவில் திறம் பட வேலை செய் கடமை உணர்வு மிக்க, மற்றவர்களுக்கு உதவும் சுபாவமுள்ள இயல்பாக எல்லோரிடமும் பேசி பழகும் ஊழியர், அனு மேடம் என்று பலராலும் அழைக்கப் பட்டவர்.
அடுத்த கீர்த்தனை தியாகராஜரின் மனதை தன் வசப்படுத்தும் அவசியத்தை எடுத்துரைக்கும் சங்கரா பரண “மனசு ஸ்வாதி”. அதில் வரும் நிரஞ்சன , நிரூபம என்ற பதங்களுக்கு நிர்விகாரனே, இணையற்றவனே என்ற விளக்கங்கள் கிருஷ்ணனை கவர்ந்தது. பல்லவியை கேட்டு வீடு திரும்பலாம் என்று தீர்மானித்து மதுர இசையில் ஆழ்ந்தார். ஸ்வரங்கள் போட்டு முடிந்தவுடன் “இப்ப புறப்பட்டாதான் 9 மணிக்கு வீடு திரும்பமுடியும். போய்ட்டு வரேன் அனுராதா” என்று அவள் காதில் மட்டும் விழும்படி முணுமுணுத்து விட்டு கிருஷ்ணன் புறப்பட்டார். அவள் புன்முறுவல்பூத்து, லயத்தில் ஆழ்ந்தாள்.
வெளியே சற்று குளுமையாக இருந்தது. வாகனங்கள் இரைச்சலும், புகையுமாகப் போனது கூட அவரை எரிச்சல் படுத்தவில்லை. அனுராதாவின் சிறப்பு குணாதிசயங்களை எடை போட்டு இவள் ஏன் ராதையின் அம்சமாக இருக்கக் கூடாது என்ற கேள்வியை எழுப்பிக் கொண்டு விடை தேடிக் கொண்டே நடந்தார். தன்னிடம் ஒப்படைக்கப் பட்ட பணிகளை திறம் பட கையாண்டு அந்த அலுவலகத்தில் வேலை பார்த்த 50 க்கும் மேற்பட்ட ஊழியர்களின் சம்பளம், விடுப்பு மருத்துவச் செலவு போன்ற பலதரப்பட்ட பணிகளை தாமதம், மற்றும் பேதமில்லாமல் சிரித்த முகத்துடன் செய்து கொண்டிருந்த அவளும் ராதையின் ஒர் அங்கம்தான் என்ற தீர்மானத்திற்கு வந்தார். ஜெய தேவரின் ராதை பரிபூரணமானவள். அவளுடைய குணாதிசயங்களை கூறு போட்டு மற்றவர்களை கணிக்க முயல்வது தவறான அணுகுமுறை என்று சட்டென்று உணர்ந்தார்.
ஆபீஸ் ராதையின் சிந்தனையிலிருந்து மீண்டு தனது ப்ராண சகி ஜெயகோபிக்குபோன் செய்தார்.
மறுமுனையில் “கச்சேரி எப்படி இருந்தது”
“ரொம்ப நல்லா இருந்தது. 9 மணிக்கு வீட்டுக்கு வந்துடுவேன். கொஞ்சம் பசிக்க ஆரம்பிச்சுடுத்து.”
“வந்த உடனே சாப்பாடு ரெடியாக இருக்கும்”
பக்கத்தில் இருந்த ஆள்வார்பேட்டை ஆஞ்சிநேயர் கோயிலில் கூட்டம் குறைவாக இருந்ததால் உள்ளே நுழைந்தார். கோயிலை விட்டு வெளியே வரும்போது ஒரு வயதான, ஆனால் பளிச்சென்றிருந்த பூக்காரப் பெண்மணி “பூ வாங்கலையா ஐயா” என்று கேட்டாள். “கோயிலுக்கு போகும்போது இதை கேட்காம , வெளிலே வரும் போது கேட்கிறயே” என்றார்.
“அம்மாக்காக வாங்கிக் கொண்டு போகக் கூடாதா” என்று சொல்லி ஒரு முழம் பூவை இலையில் சுற்றி நார் நூலில் கட்டி 10 ரூபாய் வாங்கிக் கொண்டாள்.
மனைவிக்கு தன் 32 வருட இல்லற அனுபவத்தில் முதன் முறையாக பூ வாங்கிக் கொண்டு செல்கிறார்.
கோயிலுக்கு எதிரே இருந்த பஸ் ஸ்டாப்பில் காத்திருந்த அனுவைப் பார்த்த கிருஷ்ணன்
“என்ன கச்சேரி முடிஞ்சாச்சா”
“நானும் ரெண்டு பாட்டை கேட்டுட்டு லேட்டாறதேன்னு புறப்பட்டுட்டேன்.”
“இன்னும் கால் மணி முன்னாடி கச்சேரிக்கு வந்திருந்தா ப்ரிய சாருஷீலே என்ற அஷ்டபதி பத்தி வித்வான் சொன்ன கிருஷ்ணன், ராதை சம்பந்தமான அற்புதமான விளக்கம் ஒன்றை கேட்டிருக்கலாம்.” என்று சொல்லி அவளுக்கு அதை விளக்கினார்.
“ரொம்ப வித்தியாசமா இருக்கே”
“ஜெயதேவர் பாடல்களில் ராதே தான் அஷ்டபதியத்லெ கண்ணனின் ப்ராண சகி.”
“ஒஹோ அதுதான் அனுபமா அனுராதாவாக மாறிடுதா” என்று சிரித்தாள்.
“உங்கள அப்படியா கூப்பிட்டேன். அணு அளவு பிசகிடுத்து.” என்று அவரும் சிரித்தார்.
“அனுக்கு அப்பறம்தான் பிசகிடுத்து”
“வீடு மைலாபூரில் தானே”
“ஆமாம் ராதா சில்க்ஸ் அருகில்” என்று சொல்லி சிரித்துவிட்டு விடைபெற்று பஸ் ஏறினாள்.
அவர் வீட்டிற்கு அருகில் செல்லும் பஸ் உடனே வந்து விட்டது. பஸ்ஸில் கூட்டமில்லை. உட்கார இருக்கை கிடைத்தது. அனுபமா என்ன கோவிலில் இருந்த பெண்கள், பூக்காரப் பெண், எல்லோரும் ராதையம்சமாகத்தான் இருக்கிறார்கள். அனுபமா என்றதும் ரிஷிகேஷ் முகர்ஜீயின், சர்மிளா டாகூர் நடித்த அனுபமா நினைவுக்கு வந்தது. எத்தனை வருடங்கள் ஓடிவிட்டன. மழை வருவதற்கு முன்னோடியாக படர்ந்த குளிர் காற்று சுகமான உணர்வைத் தந்தது. மின்னல் ஒளிக்கீற்றை போல் மனதில் ஒரு எண்ண ஓட்டம்.
ஏழு ஸ்வரங்களில் ‘ரா’ வின் ஆதார ஸ்வரம், ‘ரீ’ , பசு கன்றை அழைக்கும் ஒலி அல்லவா. ‘தா’ வின் ஆதார ஸ்வரம் ‘த’, குதிரை எழுப்பும் ஒலி தானே. கோகுலத்தில், கண்ணன் குழந்தைப் பருவத்தில் விளையாடி மகிழ்ந்த பசுவும் கன்றும், முழு வளர்ச்சி பெற்று மஹா பாரத யுத்தத்தில் கண்ணன், பார்த்தனுக்கு சாரதியாக மாறியபோது ரதத்தில் பூட்டப்பட்ட குதிரைகளும்,ஜெயதேவரின் அஷ்டபதி இசைக்கும்போது பிரத்யக்ஷமாவது இயற்கை தானே.
‘ப’ என்ற ஸ்வரம் சோகத்தை தாங்கி பறக்கும் குக்கூவின் குரல் ஆயிற்றே. ‘மா’வின் ஆதார ஸ்வரம் ‘ம’ நீரில் நினறு இரை தேடும் நாரையின் ஒலியை குறிப்பது தானே. இவை இரண்டிற்கும் அங்கு என்ன வேலை. அதுதான் தனக்குள்ளேயே சுருண்டு இருந்த பாத்திரத்துக்கு ரிஷிகேஷ் முகர்ஜி அனுபமா என்று பெயர் வைத்ததின், மேலும் இன்று ‘அனுபமா’, ‘அனுராதாவாக’ மாறியதின் ரகசியமோ.
கிருஷ்ணன் இன்று அதிசயமாக பூ வாங்கிக் கொண்டு போனால், மறுவினை என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் வீடு திரும்பினார்.
ஜெயகோபி, “பூ வெல்லாம் அதிசயமா” என்றாள்.
“ஆஞ்சநேயர் கோயில் போயிருந்தேன்” என்றார்.
“என்ன அர்ச்சகர் இலையில் சுற்றி நார்ல கட்டி பிரசாதமா கொடுத்தாரா” என்று சிரித்துக் கொண்டே 9 மணிக்கு அவர் கொடுத்த மல்லிகைப் பூவை மிக்க ம்கிழ்ச்சியுடன் தலையில் சூடிக்கொண்டு ஜன்ம சாபல்யம் அடைந்தாள்.