மகரந்தம்

மூன்றில் ஒன்றாக சுருங்கப்போகும் மக்கள்தொகை

மக்கள் தொகை வளர்ச்சி குறித்து உலகம் அச்சப்பட்ட நாட்கள் போய்விட்டன என்ற ஒரு தகவலை டிஸ்கவர் இதழில் உள்ள ஒரு கட்டுரை சொல்கிறது. அமெரிக்காவின் மக்கள் தொகையில் பெரும்பான்மையினர் முதியவர்களாக இருக்கக்கூடும் என்பதுதான் இந்தக் கட்டுரையின் செய்தி – ஆனால் இதை விவாதிக்கும்போது, உலகெங்கும் உள்ள மக்கள் பரப்பில் முதியோர்களின் பங்கு அதிகரித்து வருகிறது என்ற குறிப்புகள் கிடைக்கின்றன: சமுதாய மாற்றமும் பொருளாதார வளர்ச்சியுமே இதற்கான காரணங்களாக இருகின்றன. உதாரணத்துக்கு, தாய்வானில் 1950களை விட இன்று பிறப்பு விகிதம் எழுநூறு மடங்கு குறைந்திருக்கிறது. ஜப்பான், பிரேசில் என்று வளரும் நாடுகள் அனைத்திலும் இதுதான் இயல்பாக இருக்கிறது. சராசரியாக குடும்பத்துக்கு 2.1 குழந்தைகள் இருக்கும் தேசங்களின் மக்கள் தொகை நிலையாக இருக்கும்: தாய் தந்தையரின் இடத்தில் இரு குழந்தைகள் என்ற விகிதத்தில். ஆனால் உலகிலுள்ள தேசங்களில் ஏறத்தாழ நூற்றுக்கு அறுபதில் பிறப்பு விகிதம் மூன்றுக்குக் கீழும், நூற்றுக்கு முப்பதில் இரண்டுக்குக் கீழுமாய் குறைந்து விட்டன. அதிக மக்கள் தொகையுள்ள சீனாவிலும் கூட இறப்பு விகிதம் 1.5ஆகவே உள்ளது. இந்தியாவில் 2.6ஆக குறைத்து விட்டது – பிறப்பு விகிதம் குறைந்த காரணத்தால் உலக நாடுகளில் ஜப்பானின் மக்கள் தொகை அடுத்த ஐம்பது ஆண்டுகளில் மூன்றுக்கு ஒரு பங்கு குறைந்து விடுமாம்! கல்வியும் வளர்ச்சியும் எதிர்பாராத விளைவுகளுக்குக் காரணமாகி விடுகின்றன . இது குறித்த விவரங்கள் இங்கே இருக்கின்றன:

http://discovermagazine.com/2012/oct/20-the-gray-tsunami/article_view?b_start:int=1&-C=

வைடமின் பி12 பற்பசை

ஜெர்மன் தாவர உணவுக் குழு ஒன்று ஒரு புது பற்பசையைத் தயாரிக்கவிருக்கிறது. இந்தப் பற்பசையில் வைடமின் பி-12 சேர்க்கப்படவிருக்கிறது. தாவர உணவு மட்டுமே உண்பவர்களும், முதியோரும் பொதுவாக வைடமின் பி-12 குறைபாட்டால் பாதிக்கப்படுபவர்கள் என்பது நமக்குத் தெரியும். இது உலகெங்கும் உள்ள ஒரு பிரச்சினை. பி-12 வைடமின் அவ்வளவு எளிதில் மாத்திரைகள், மருந்துகள் வழியே உடலில் சேர்வதும் இல்லை. வயிற்றில் சேரும் மாத்திரைகளிலிருந்து இந்த வைடமின் ஊட்டச் சத்து சுலபமாக உடலில் ஏற்கப்படுவதில்லை. ஆனால் நாவுக்கடியில் வைக்கப்பட்டு உமிழ்நீரில் கரைந்தால் உடலில் சேர்வது மேலாக இருக்கிறது (sub-lingual) என்று சொல்லப்படுகிறது. அதனால் இந்த ஜெர்மன் தாவர உணவுக் குழு ஒரு பற்பசை தயாரிப்பு நிறுவனத்துடன் சேர்ந்து தயாரித்த அந்தப் பற்பசை நல்ல விளைவைக் கொடுத்ததாக சோதனைகளில் தெரிய வந்தது. மேலும் விவரங்களுக்கு இங்கே செல்லவும்.

http://www.gizmag.com/b12-toothpaste-sante-germany/24257/

100 மிலியன் வருடத் தகவல் சேமிப்பு

தகவல் சேமிப்பு என்பது எல்லாச் சமூகத்திற்கும் உள்ள பிரச்சினை. இடம் போதாமையோடு, தகவலைச் சேமிக்கும் ஊடகங்கள் காலாவதி ஆவதும் ஒரு பிரச்சினை. பதனிட்ட தோலில் சேமித்தவை அழியும். கல்வெட்டு கூடத் தேயும். காகிதமோ ஈரமும், வெப்பமும் செய்யும் சேதத்திலிருந்து தப்பித்தாலும், பூச்சிகளின் தாக்குதலுக்கு எளிதில் சிக்குவது. சமீபத்திய மின்காந்த சேமிப்பு முறைகளிலோ பிரச்சினை அவற்றை மீளெடுப்பதற்கு அந்தந்தக் கருவிகள், பதிப்பு முறைகள் அழிவது என்பது ஒரு பிரச்சினை. LP records, Cine-film, Tape decks, Cassettes, CDs, DVDs  போன்றன எல்லாமே தகவலை மீட்கத் தக்க கருவிகள் இல்லையெனில் பயனற்றவையாகின்றன. சிறு சேதம் ஏற்பட்டால் கூட இவை முழுதும் பயனற்றவையாகின்றன என்பது இன்னொரு பிரச்சினை. ஜப்பானிய நிறுவனம் ஒன்று, இந்தப் பிரச்சினைகளில் பலவற்றை ஒரே நேரத்தில் தீர்த்து விட்டதாகத் தெரிகிறது.  ஒரு சிறு கண்ணாடித் துண்டில் 100 மிலியன் வருடங்களுக்குத் தகவலைச் சேமிக்க முடியுமாம். வெப்பம், ரசாயனப் பொருட்கள், போன்றவை இந்தக் க்வார்ட்ஸ் கண்ணாடியை ஏதும் செய்யாதாம். உடைப்பதும் எளிதல்லவாம். ஆனால்…. விலை?  அதுதான் பிரச்சினையாக இருக்கலாம். இன்னொன்று இந்தத் தகவலை மீட்கத் தேவையான மைக்ராஸ்கோப் (ஆப்டிகல்) பத்தாயிரம் வருடங்களுக்கு அப்புறம் கிடைக்குமா என்பது கேள்விக்குரியதே என்கிறது இந்தச் செய்தி அறிக்கை.

http://www.pcworld.com/article/2010588/hitachi-targets-2015-for-glass-based-data-storage-that-lasts-100-million-years.html

நலம் செய்யும் நுண்ணுயிரிகள்

0.000000000001 எடையுள்ள நுண்ணுயிரிகள் மனிதனின் உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்கின்றன – சுகாதாரமான சுற்றுப்புறச் சூழல் நடவடிக்கைகளால் அவற்றை ஒழித்துவிட்டால் நாம் ஆரோக்கியமாக இருக்கலாம் – என்று நம் பள்ளிகளில் சொல்லிக் கொடுத்தது எவ்வளவு பெரிய பிழை! நம் உடலிலுள்ள நுண்ணுயிரிகளைத் திரட்டினால் அவற்றின் எடை இரண்டு கிலோவுக்கும் அதிகமாக இருக்குமாம். மனித மூளையைவிட எடை கூடுதலாக உள்ள இந்த நுண்ணியிரிகள் மனிதனின் கல்லீரலுக்கு இணையாக வேலை செய்கின்றன. மனித ரத்தத்தில் உள்ள மரபணுத் தொகுப்புகளில் முப்பத்தாறு சதவிகிதம் பாக்டீரியாக்கள்தான் என்று சொல்கிறார்கள். மனிதன் வாழத் தேவையான கலோரிகளில் பத்து சதவிகிதத்தை இவை நமக்கு சேகரித்துத் தருகின்றன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட இனங்களைச் சேர்ந்த இவை, மனிதனின் சருமத்துக்கு வெளியேயும் உள்ளேயும் இருக்கின்றன – நம்மைவிட நூறு மடங்கு அதிக அளவில் இவற்றின் மரபணுத் தொகுப்புகள் உள்ளன. ஒரு பார்வையில், நாம் இந்த நுண்ணுயிரிக் குமிழில் பாதுகாப்பாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மேலதிக விவரங்கள் இங்கே

http://www.spiegel.de/international/zeitgeist/western-lifestyle-leading-to-dangerous-bacterial-imbalances-a-856825.html

பாம்புப் பண்ணை

298_298_the-venom-king

பாம்புகள் என்றால் நம்மில் பலருக்கு அதீதப் பயம். குரங்குகளுக்கும் பாம்புகளைக் கண்டால் பயம். மனிதர்களின் பாம்பு குறித்த பயம் குரங்குகளாக இருந்த காலத்திலிருந்து தொடர்வது என்று சில உளவியலாளர்கள் சொல்கிறார்கள் என்றாலும் அதெல்லாம் ஏதோ ஹேஷ்யம் போலத்தான் தெரிகிறது. ஆனால் ஏன் நம்மிடம் சில குணங்கள் இருக்கின்றன என்று தெரிந்ததால் பயம் போய் விடுகிறதா என்ன? அது பாட்டில் தொடர்கிறது. இதை மனதில் வைத்துத்தான், தமிழில் ஒரு கதாசிரியர் கூட குரங்குகளுக்கு பாம்புகள் மீது இருந்த பெரும் பீதியை வைத்து ஒரு குறியீட்டுக் கதை எழுதினார். சமகாலத் தமிழக அரசியல் குறித்த ஒரு அங்கதக் கதையாக அதைப் பார்க்க முடியும் என்பது அத்தனை எளிதாகப் புலப்படாததாலோ என்னவோ அவர் வீட்டில் கற்கள் எறியப்படவில்லை என்று நினைக்கிறேன். இங்கு ஒருவர் பாம்புகளை வைத்து ஏராளமாகப் பணம் பண்ணுவது எப்படி என்று அறிந்து அதைச் செய்கிறார். பாம்பு விஷத்தை வடித்து அதை மருந்து நிறுவனங்களுக்கு விற்கிறார். இதென்ன பிரமாதம்? சென்னையில் ரொமுலஸ் விட்டேகர் என்பவர் இருளர் சமூகத்தின் அசாதாரண மனிதர்களை, அசகாய சூரர்களை வைத்து நடத்தும் ஒரு பாம்புப் பண்ணை கூட இதேதான் பல பத்தாண்டுகளாகச் செய்து கொண்டிருக்கிறதே என்பீர்களாயின், உங்களுக்கு நிறைய விவரம் தெரிந்திருக்கிறது என்று விட்டு விடலாம். இந்த மனிதரின் செயலை அப்படி வியந்து ஒரு கட்டுரை இங்கே எழுதுகிறார்கள். நாம் நம் இருளர் பாம்புப் பண்ணையை இப்படி எல்லாம் பாராட்டுகிறோமா என்ன?

http://www.mensjournal.com/magazine/print-view/ken-darnell-snake-wrangler-20120830