‘லைட்ஸ் ஆப்’ – ரா.கி.ரங்கராஜன்

குறிப்பு : எழுத்தாளர், சாதனையாளர் ரா.கி.ரங்கராஜன் இன்று (18-08-2012) காலமானார். இந்த தருணத்தில் சொல்வனம் ஆசிரியர் குழு தனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

ஆசிரியர் குழு

ஆறு மாதங்களுக்கு முன் ரா.கி.ரங்கராஜன் உடம்பு சுகம் இல்லாமல் இருக்கிறார் என்று கேள்விப்பட்டபோது சங்கடமாக இருந்தது. வருத்தத்துக்கும் சங்கடத்துக்கும் வித்தியாசம் இருக்கிறது.

பல முறை அவருடன் தொலைபேசியில் பேசியிருந்தாலும் ஒரே ஒரு முறைதான் அவரை நேரில் சந்தித்திருக்கிறேன். அந்த முதல் சந்திப்பிலேயே அவரிடம் பல நாள் பேசியது போன்ற உணர்வு. 80+ வயதிலும் மூன்று மணி நேரம் பேசிக்கொண்டு இருந்தார். சந்தித்ததை பற்றிச் சொல்வனத்தில் அப்போது எழுதியிருந்தேன் [http://solvanam.com/?p=4323] .

இன்று அவர் ஆச்சார்யன் திருவடி அடைந்தார் என்ற செய்தி கேட்டபின் அந்தச் சந்திப்பு பற்றி கட்டுரையில் எழுதாமல் விட்ட ஒன்றை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

அந்த மூன்று மணி நேரச் சந்திப்பில் ‘லைட்ஸ் ஆன் வினோத்’ பக்கம் பேச்சு திரும்பியது.

“லைட்ஸ் ஆன் வினோத்” என்ற பெயரில் குமுதத்தில் எழுதினேன்; பிறகு அந்தத் தலைப்பை குமுதம் உபயோகிக்கக் கூடாது என்று சொல்லிவிட்டார்கள். அதனால் கல்கியில் ‘சைட்ஸ் ஆன்’ என்று எழுதினேன். தற்போது துக்ளகில் ‘டெலிவிஷயம்’ என்ற தலைப்பில் எழுதுகிறேன்,” என்றார். இவர் எழுதிய எல்லாவற்றையும் பைண்ட் செய்து வைத்திருந்தார் அவர் மனைவி கமலா. அவைகளை என்னிடம் காண்பித்தார். ரஜினி இமயமலை போவது தொடங்கி சிலுக்கின் அடுத்த படம் எப்போது என்று எல்லாமே இருந்தது.

“இதிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சிலவற்றை ஒரு புத்தகமாகப் போட வேண்டும், உங்களுக்கு யாரையாவது தெரியுமா ?” என்றார். ஆச்சர்யமாக இருந்தது. எனக்கு தெரிந்த சில பதிப்பகங்களின் பெயர்களைச் சொன்னேன்.

“நானே அவர்களிடம் கேட்டேன்.. ஆனால் தட்டிக்கழிக்கிறார்கள்… இத்தனைக்கும் அவர்களை எனக்கு நல்லாத் தெரியும். எனக்கு அவர்களிடம் இந்த வயசில் திரும்பக் கேட்க என்னவோ போல இருக்கு,” என்றார்.

மனசுக்குள் இனம்புரியாத ஒரு வருத்தம் குடிக்கொண்டது.

“சார் நானே போடுகிறேன்” என்றேன்.

“உங்களுக்கு எதற்கு சிரமம்..”

“பரவாயில்லை சார்…”

“நீங்களே ஒரு 100 பகுதிகளை தேர்ந்தெடுத்துவிடுங்கள்,” என்றார்.

அவர் முகத்தில் மகிழ்ச்சியைப் பார்க்க முடிந்தது. பைண்ட் செய்யப்பட்ட எல்லா ‘லைட்ஸ் ஆன்’ புத்தகங்களையும் கவர்ந்து கொண்டு பெங்களூர் வந்தேன். பல பகுதிகளை வாசிக்க முடிந்தது ஆனால் புத்தகம் சம்பந்தமாக எதுவும் செய்ய முடியவில்லை.

ஒரு முறை அவரிடம் தொலைபேசியில் பேசியபோது இதைச் சொன்னேன். அவர், “பரவாயில்லை இங்கே நண்பர் ஒருவர் போடுகிறேன் என்று சொல்லியிருக்கார்,” என்றார். அந்தப் புத்தகங்களைத் திரும்ப அனுப்பினேன்.

ஒரு எழுத்தாள நண்பர் சில மாதங்களுக்குமுன் அவர் உடம்பு முடியாமல் இருக்கிறார் என்று சொன்ன போது ‘லைட்ஸ் ஆன்’ புத்தகம் நினைவுக்கு வந்து சங்கடப்படுத்தியது.

“எப்படியாவது சில காப்பிகளாவது போட்டு அவர் கடைசி ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்று எழுத்தாளர் ‘சுபா’ முயற்சி எடுத்துள்ளார்,” என்று அவர் சொன்ன போது கொஞ்சம் சந்தோஷமாக இருந்தது.

ஆனால் இன்று தன் எழுத்தைப் புத்தக வடிவில் பார்க்காமலேயே நம்மை விட்டுப் போய்விட்டார் என்று நினைக்கையில் வருத்தமாக இருக்கிறது.

அவர் எனக்குக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்த புத்தகத்தைப் பார்க்கும் போது… எப்படியாவது ‘லைட்ஸ் ஆன்’ புத்தகத்தை கொண்டு வந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. மனம் மீளமுடியாத அழுத்தத்தில் கனக்கிறது.

-o00o-

குமுதம் அலுவலகத்தில் ரா.கி.ர(அமர்ந்திருப்பவர்)

ஹென்ரீ ஷாரீயரின் ‘பாப்பியான்’ என்ற புத்தகத்தை ‘பட்டாம்பூச்சி’ என்ற மொழிபெயர்ப்புப் புத்தகத்தில் ஆத்மார்த்தமாக சுஜாதா எழுதிய அணிந்துரையிலிருந்து சில பகுதிகளை இங்கே பகிர்ந்துக்கொள்கிறேன்–

“ரங்கராஜன் சுதந்திரம் வந்த புதுசிலிருந்தே எழுதி வருகிறார் என்பது என் அனுமானம். ஆரம்ப காலங்களில் அவர் கலைமகள் போன்ற பத்திரிகைகளில் எழுதினார். அவருடைய சிறுகதைகள் ‘பல்லக்கு’ என்ற புத்தகமாக வெளிவந்துள்ளது. துவக்க நாட்களிலேயே குமுதம் நிறுவனத்தில் சேர்ந்து அவர்கள் ‘கல்கண்டு பத்திரிகையுடன் கூடவே வெளியிட்ட ‘ஜிங்லி’ என்ற சுவாரஸ்யமான சிறுவர் பத்திரிகைக்குத் துணை ஆசிரியராக இருந்திருக்கிறார். ‘ஜிங்லி’யின் அகால மரணத்திற்கு வருத்தப்பட்டவர்களில் நானும் ஒருவன். பிறகு குமுதம் ஆசிரியர் குழுவில் சிறுகதைகளும் தொடர்கதைகளும் எழுதத் துவங்கினார். அதேசமயம் குமுதத்தில் ‘சூர்யா’ என்பவர் தரமான சிறுகதைகளை எழுதிவந்தார். ‘ஹம்சா’ என்பவர் வேடிக்கை நாடங்களும் டி.துரைஸ்வாமி துப்பறியும் கதைகளும் ‘கிருஷ்ண குமார்’ திகில் கதைகளும் ‘மாலதி’ குறும்பு கதைகளும் ‘முள்றி’ மழலைக் கட்டுரைகளும் ‘அவிட்டம்’ நையாண்டிக் கவிதைகளும் எழுதி வந்தார்கள்.

பிற்காலத்தில் நான் குமுதத்தில் எழுதத் துவங்கி ஆசிரியர் குழுவுடன் பரிச்சயம் ஏற்பட்டது. அப்போது ‘சூர்யா’ வின் செய்தி என்கிற சிறப்பான சிறுகதைக்கு ஏதோ ஒரு நிறுவனம் பரிசளித்திருந்த செய்தியில் கதையின் ஆசிரியர் ரா.கி.ரங்கராஜன் என்று குறிப்பிட்டிருந்தது. விசாரித்ததில் நான் மேற்சொன்ன அத்தனை எழுத்தாளர்களும் ரங்கராஜன் ஒருவரே என்கிற விவரம் தெரிந்து எனக்கு அப்போது ஏற்பட்ட பிரமிப்பு இன்னும் விலகவில்லை.

ஓர் எழுத்தாளர் கதை, கட்டுரை, நாடகம், கவிதை எழுதுவது எல்லாம் சகஜம். என்னாலேயே முடிகிறது. ஆனால் எப்படி ஒரே எழுத்தாளரால் நடையிலேயே கருத்திலோ உருவத்திலோ எதுவும் தொடர்பு இல்லாமல் தனித்தனி மனிதர்கள் போல எழுத இயலும்? இந்தப் பல்திறமைக்கு ஒரே ஒரு முன்னோடிதான் உள்ளார்: கல்கி.

நேரில் சந்திக்கும்போது ரங்கராஜன் இத்தனை திறமைகளையும் ஒரு சின்னப் புன்னகையில் மறைத்துவிடுவார். ஒரு தபால் தலையில் அடங்கிவிடக்கூடிய திறமை உள்ள எழுத்தாளர்கள் எல்லாம் சுயவிளம்பரமும் பட்டங்களும், பரிசுகளும் ஏற்பாடு பண்ணிக்கொண்டு சொந்தப் பெருமையில் குளிர்காயும் சூழ்நிலையில், ரங்கராஜன் ஒரு கர்ம யோகி; குமுதம் ஸ்தாபன விசுவாசம்; ஆசிரியர் எஸ்.ஏ.பி மேல் பக்தி; கிடைத்தது போதும் என்கிற திருப்தி; சக எழுத்தாளர்கள் மேல் பொறாமையற்ற பரிவு நேசம்; வெள்ளைச் சட்டை வெள்ளை வேட்டி நெற்றியில் ஸ்ரீசூர்ணம், நண்பர்களைக் கண்டால் கட்டி அணைத்து முதுகில் ஒரு ஷொட்டு; பெரிசு பெரிசாக குண்டு பேனாவில் எழுதப்பட்டச் சிறகடிக்கும் எழுத்து. ஏறக்குறைய ஒரு லைப்ரரி அளவுக்கு இவர் எழுதியிருக்கும் கதை, கட்டுரைகள் அனைத்தையும் திருமதி கமலா ரங்கராஜன் பைண்டு பண்ணி வைத்திருக்கிறார். இவரது படைப்புகள் திரைப்படங்களாக வந்திருக்கின்றன. சின்னத்திரையில் வந்திருக்கின்றன.

இத்தனை சாதனை படைத்தவருக்கு, குறைந்தபட்சம் ஒரு பொன்னாடை கூட போர்த்தாதது தமிழகத்தின் விசித்திரமான முரண்பாடுகளில் ஒன்று!”

-o00o-

கடைசியாக சில லைட்ஸ் ஆன் பகுதிகள்…

தளபதி என்றதும் நினைவு வருகிறது.

குட்லக் தியேட்டரில் இரண்டு பிரிவியூ தியேட்டர்கள் இருக்கின்றன. இரண்டிலும் ஒரே சமயத்தில் தளபதி படம் போட்டார்கள். அப்படியும் கூட்டம் தாங்காமல் நடுநடுவே நாற்காலிகளைப் போட்டு சமாளிக்க நேரிட்டது. ஜி.வி.தான் வரவேற்றுப் பேசினார். மணிரத்தினம்? எங்கேயும் காணோம். Two is company, three is crowd.

(குமுதம்)

‘பரவை’ பறந்தார்!

நாட்டுப்புறப் பாடல்களில் புகழ் பெற்று விளங்கும் பரவை (பறவை அல்ல) முனியம்மா, ஜெயா டி.வி.யில் தன் அனுபவங்களை விவரித்தார். இப்போது அறுபது வயதாகிறதாம். ஆறு வயது முதல் கிராமப்புறங்களில் பாடி வருவதாகச் சொன்னார். சில பாட்டுக்களைப் பாடிக் கொண்டிருந்தவர், விருட்டென்று நாற்காலியைவிட்டு எழுந்து விட்டார். பேட்டியாளர், ‘ஏன்? என்ன விஷயம்? நான் ஏதாவது தப்பாகப் பேசிவிட்டேனா?’ என்று பதறினார்.

‘அதெல்லாமில்லை. இந்தப் பாட்டைச் சும்மா பாடக் கூடாது. ஆடிக் கொண்டேதான் பாடணும்,’ என்று விளக்கிய பரவையம்மாள், ‘வெத்திலை பாக்கு கொழுந்து வெத்திலை’ என்ற பாட்டை ஆடிப் பாடி அமர்க்களப்படுத்தி விட்டார். ஆம். There is a story in everyone’s life.

(துக்ளக்)

One Reply to “‘லைட்ஸ் ஆப்’ – ரா.கி.ரங்கராஜன்”

Comments are closed.