லூலூ

தரையில் அமர்ந்திருந்த லூலூ பரிதாபமாக ஊளையிட்டது. கிளைகளூடாக பிறைநிலா ஒளி பால் போல் முற்றத்தில் பொழிந்து இலைப் புள்ளிகளிட்டிருந்தது. லூலூவின் சோகக் குரல் சுவர்களைத் தாண்டி மலைகளிடையேயான சமவெளிகளைச் சென்றடைந்து மேலும் பல ஊளை ஓசைகளை எழுப்பியது. இரவைக் கிழிக்கும் அது போன்ற ஊளைகளுக்கு எப்போதும் ஒரு சோகமிருக்கவே செய்தது. இருப்பினும், வெப்பம் விலகாத கோடை இரவில் அதன் அழுகை மிகவும் சோகம் நிறைந்ததாக இரவைக் கத்தி போல் கீறியது.

முடிந்தவரை நீள ராகமிட்டுக் குரைத்தது. கதறலைப் போலவும் கேவலைப் போலவுமிருந்ததால் கேட்கவே முடியவில்லை. அதை விட்டுப் பிரிந்த எசமானருக்குக் கேட்குமா? எங்கே அவர்? அவர் அரூபத்தில் நிறைந்திருப்பதாக உணர்ந்தது. ஒன்றுமற்ற அரூபவெளியில் இருப்பதை நிரூபிப்பதற்கென்றே ஊளையிட்டது போலிருந்தது.

பின் முற்றத்தின் வடகோடி வரை நீண்டது மூன்று பழைய அறைகள். கிழக்கிலிருந்த அறையில் விளக்கொளியும் மேற்கிலிருந்த அறையில் இருளும் இருந்தன. இருண்ட அறையில் தான் மிக மெல்லிய காலடி ஓசை கேட்டது. கதவு திறக்கும் சத்தமும் அதைத் தொடர்ந்து பேச்சரவமும் கேட்டது.
அவ்வறைக்குள்ளிருந்து வெண்ணிற வீட்டுடை அணிந்த இரு குழந்தைகள் நுனிக்காலில் மெல்ல நடந்து வெளியே வந்தனர். பத்து வயதிருக்கும் சிறுமி ஒரு சாதக் கிண்ணத்தை ஏந்தியிருந்தாள். ஆறு வயது மதிக்கக் கூடிய அவளது தம்பி போலிருந்த சிறுவன் அவள் பின்னால் ஒளிந்து கொண்டான். லூலூவைக் கண்டதுமே அக்காவின் உடையைப் பற்றிக் கொண்டான்.

“இதச் சாப்பிடு லூலூ. இதுல எறச்சி இருக்கு”, என்றாள் சாதக் கிண்ணத்தை லூலூவின் முன்னால் வைத்த சிறுமி. தொட்டிருக்காத வேறொரு சாதக் கிண்ணம் ஏற்கனவே அங்கிருந்தது.

சற்றே அமைதியான லூலூ நிமிர்ந்து சோகமாக அவர்களைப் பார்த்தது. மிகக் குட்டையான கால்களும் கூர்மையான நரிபோன்ற மூக்கும் தூய வெண்ணிற ரோமமும் கொண்டிருந்தது. கழுத்தைச் சுற்றியிருந்த கரும்பட்டை கோர்க்கப்பட்ட கயிறை மரத்தில் கட்டியிருந்தார்கள்.

லூலூவின் எசமானர் ஒரு யூத முதியவர். கிராமத்தருகே வாழ்ந்தவர் இறந்து இரண்டு தினங்களாகியிருந்தன. அவரது பிறப்பைப் போலவே இறப்பும் கிராமத்தை எவ்விதத்திலும் பாதிக்கவில்லை. இறுதிச் சடங்குகள் முடிந்த நிலையில் சதா அழுது கொண்டு வீட்டை விட்டுப் போக மாட்டேன் என்று பிடிவாதம் செய்து கொண்டிருந்த அவரது இந்த நாய் மட்டுமே மிச்சம். அவ்வீட்டினர் அதை அடித்தனர். இருந்தாலும் அது வீட்டையே சுற்றிச் சுற்றி வந்தது. வீட்டுரிமையாளருக்கு ஒரு யோசனை தோன்றியது. “பேசாமல் திரு.ஃபான்னிடம் கொடுத்து விடுவோமா. இது போன்ற நாய்கள் அந்த ஆட்கள் கிட்ட தான் இருக்கணும்.” கிராமத்தினர் பிற மாகாண மனிதர்களை ‘அந்த ஆட்கள்’ என்று இழிவாகக் குறிப்பிட்டனர். லூலூவின் விருப்பத்திற்கு எதிராக அதை இழுத்துக் கொண்டு போய் திரு.ஃபான் வீட்டு முற்றத்திலிருந்த பெரிய மரத்தில் கட்டிப் போட்டு மூன்று நாட்கள் ஓடிவிட்டன.

குழந்தைகள் இருவரும்தான் லூலூவின் நண்பர்கள். முதியவர் இருந்த போதே அவர் வீட்டுக்குப் போய் அதனுடன் விளையாடியிருந்தனர். அவ்விருவர் மட்டுமே முதிய யுதரைக் காண வந்த விருந்தினர். சுருட்டிக் கட்டிய ஒரு வைக்கோல் பந்தை உருட்டிக் கொண்டு போவார்கள். கைகுலுக்கும் படி லூலூவிடம் கிழவர் சொல்வார். முன்னங்காலை எடுத்து நீட்டி இருவர் கைகளையும் பல முறை குலுக்கியிருக்கிறது. சாய்வு நாற்காலியின் கைமீது பாய்ந்தேறி அமர்ந்து முதியவரின் நரைத் தலை மீது மூக்கை உரசிக் கொஞ்சி குழந்தைகள் இருவரையும் பார்க்கும். அந்நாட்களில் அதன் கண்களில் சாந்தமும் இதமும் நிறைந்திருக்கும்.

இப்போது முதியவர் மறைந்து விட்டார். லூலூ மட்டும் மிச்சம். அதுவும் சோகம் அப்பிய நாராசமாய் ஊளையிடும் லூலூ. “லூலூ, நீ எங்களோடயே இரேன். சீனம் புரியுமா உனக்கு?”, சிறுமி கனிவுடன் கேட்டாள். “கை குலுக்றயா?” மூன்று நாட்களில் அக்கேள்வியைத் திரும்பத் திரும்ப பல முறை கேட்டுவிட்டாள். அது தன் முன்னங்காலை நீட்டவில்லை. மீண்டும் ஊளையிடத் தொடங்கி விடும்.

இம்முறை லூலூ ஊளையிடவில்லை. மைல்கணக்கில் ஓடிக் களைத்தது போல கனமாகப் பெருமூச்செறிந்தது. தடவிக் கொடுக்கும் எண்ணத்துடன் சிறுமி கையை நீட்டினாள். தம்பி அவளைத் தடுத்தான். கோபம் வந்தால் லூலூ கடிக்கும் என்று எல்லோருக்குமே தெரியும். சத்தமே போடாமல் குதிகாலில் கடிப்பது தான் அதன் வழக்கம். “ஒண்ணுமில்ல. என்னக் கடிக்க மாட்டான். கடிப்பியா லூலூ?”, என்றவாறே அதன் தலை மீது கைவைத்தாள். தொடுகையை உணர்ந்ததுமே அதன் உரோமங்கள் சிலிர்த்து நின்றன. அதனுடல் லேசாக நடுங்கியது. முதியவர் எப்போதும் தலையில் தொடங்கி வால் நுனிவரை கோடிழுத்தாற் போலத் தடவுவார். அவர் கைகள் கனமாக இருக்கும். இந்தக் கை லேசாக இருந்தது. இருந்தாலும் கையின் மென்மை லூலூவை சாந்தப் படுத்தியது. மேல்மூச்சு கீழ் மூச்சு வாங்கியபடி கையைத் தூக்கி சிறுமியிடம் காட்டியது.

“சபாஷ் லூலூ!”, சிறுமி மகிழ்ச்சியுடன் பிடித்துக் குலுக்கினாள். “அம்மா, லூலூ இங்க வந்து நம்ளோடயே இருக்கேன்றான்.”

சிறுமியின் பின்னால் முற்றத்துக்கு வந்த அம்மாவை லூலூவுக்கு அறிமுகப் படுத்தினாள். அம்மாவும் லூலூவின் கையைக் குலுக்கினார். தம்பியும் தான். “எல்லா எறச்சியையும் லூலூவுக்கே கொடுத்துட்டா, நாளைக்கி நாம என்ன சாப்டறது?”, என்று அம்மா சிறுமியைச் செல்லமாகக் கடிந்து கொண்டார்.

சிறுமி தலையைக் குனிந்து கொண்டு ஒன்றும் சொல்லாமல் நின்றாள். “நாளைக்கி ஒண்ணும் சாப்டாம இருப்போமே”, என்று சொல்லி தம்பி தான் சமாளித்தான்.

“சரி. அப்பாவுக்கு? அவர் மிகவும் சோர்வாக வருவாரே”, என்ற அம்மா லூலூவின் பக்கம் திரும்பி, “இன்னைக்கி ராத்திரி குரைக்காத. சரியா?”, என்றார்.

எல்லோரும் தூங்கப் போய்விட்டார்கள். அப்பா மட்டும் மங்கலாய் எரிந்து கொண்டிருந்த மெழுகு விளக்கில் ஏதோ எழுதிக் கொண்டிருந்தார். லூலூவுக்குப் பலமுறை தொண்டையை அடைத்தது. மேசைக்கருகில் குனிந்திருந்த உருவம் சன்னல் வழியாகத் தெரிந்தது. கேவல்களையும் விக்கல்களையும் அப்படியே கூட்டி விழுங்கிக் கொண்ட போது அதன் தொண்டையில் களகளவென்ற ஓசை எழுந்தது.

லூலூ மீண்டும் சாப்பிட முயன்றது. அவ்வப்போது சிணுங்கினாலும் முன்பை விட பெரிய முன்னேற்றத்தைக் காண்பித்தது. சிறுமியும் அம்மாவும் கட்டை அவிழ்த்து விட்டனர். முற்றத்துக் கதவைத் திறந்து போடாதே என்று தம்பியிடம் பலமுறை நினைவூட்டினர். புதர்கள் மண்டிய பழைய மடாலயத்தைச் சேர்ந்தது முற்றம். ஆலயத்தில் பல அறைகள் இருந்தன. போர்க்குண்டு மழையிலிருந்து தப்பிக்க ஊர் மக்களில் பலர் அங்கே தஞ்சம் புகுந்திருந்தனர். முன்பு யாருமின்றி பாழடைந்து கிடந்த ஆலயத்தில் இப்போது சதா மனித நடமாட்டம்.

சிறுமி லூலூவை அழைத்துச் சென்றபோது தரையில் அமரும் படி கண்டிப்புடன் அப்பா சொன்னார். லூலூவும் உடனே உட்கார்ந்து முன்னங்காலைத் தூக்கியாட்டி முகமன் கூறியது. “ம், போ லூலூ”, என்றான் தம்பி. கைகுலுக்கி மகிழும் மனநிலைக்கு இன்னும் அது வந்திருக்கவில்லை. இருந்தாலும் முன்னங்காலைத் தூக்கியது. “அவனுக்கு சீனம் புரிகிறதே!”, என்று உற்சாகத்துடன் குதித்தனர் இரண்டு சிறுவர்களும். கால்களை தரையில் வைத்து மறுபடியும் தூக்கி திரு.ஃபான்னின் கையைக் குலுக்கியது. அவர் தன்னுடைய தயக்கங்களை உதறியவராக லூலூவைக் கூர்ந்து கவனித்தார். “லூலூ என்கிற பெயருக்கு என்ன பொருள்? ஹீப்ரூ மொழியா? நரி மாதிரியே இருக்கே இது. வெள்ளிமூக்கு நரி என்று கூப்பிடத் தோன்றுகிறது.” அவர் கற்பித்த பள்ளியில் அவருக்கு மிகுந்த மரியாதை இருந்தது. ஆனால், வீட்டிலோ அவர் சொல்வது எதையுமே யாரும் கண்டுகொள்வதில்லை. ஆகவே, லூலூ லூலூவாகவே இருந்தது.

ஃபேய்ஃபேய் என்ற அவ்வீட்டுப் பூனையுடன் சீக்கிரமே நட்பு கொண்டது லூலூ. முதலில், ஃபேய்ஃபேய்க்கு லூலூவைக் கண்டாலே பயமாக இருந்தது. என்னைச் சீண்டாதே என்று சொல்வது போல முதுகை வளைத்து உர்ரென்று முறைத்துக் கொண்டே பின்னால் சென்றது. அக்குடும்பத்தின் அனைத்தையுமே தான் தான் பாதுகாக்க வேண்டும் என்று அதற்கு எண்ணம். அது பூனையிடம் கைகுலுக்க முன்நீட்டியதும் குழந்தைகள் இருவரும் விழுந்து விழுந்து சிரித்தனர். நண்பன் தான் என்று சீக்கிரமே ஃபேய்ஃபேய் புரிந்து கொண்டது. இனி சேர்ந்து இணக்கமாக இருப்போம் என்று சொல்வதைப் போல ஒன்றையொன்று முகர்ந்து கொண்டன.

பத்து நாட்கள் சென்றதும், லூலூவை வெளியே விடுவது பாதுகாப்பானது என்று எல்லோரும் நம்பினார்கள். அது அதிக நேரம் வெளியே திரிவதில்லை என்பதால், அனைவரும் நிம்மதியோடிருந்தனர். இருந்தும் ஒருநாள், லூலூ வாயிலில் சற்றே தயங்கி நின்று விட்டு முதியவர் வீட்டுக்குச் சென்றது. வீடு பூட்டியிருந்ததால் கதவருகே நின்று ஊளையிட்டது. ஒவ்வொரு முறையும் போல அதே அளவு ஆழ்ந்த சோகம். தன் துரதிருஷ்டத்தை எண்ணியதும் அதன் இதயம் நொறுங்கியது. எத்திசையில் சென்றிருப்பார் கிழவர் என்று அதனால் அனுமானிக்க முடியவில்லை. திடீரென்று அதைச் சுற்றி மனிதர்கள் கூடிவிட்டனர். “ஏய் நாயே எதற்காக ஊளையிடுகிறாய்?” கற்களை எடுத்து அதன் மீது எறிந்ததும் அது ஓடியது. வீட்டுக்குப் போவதற்கு பதிலாக ஊரை நோக்கி மலையடிவாரத்தில் ஓடியது. நாக்கைத் தொங்கப் போட்டவாறே ஓடியது. அதன் குட்டைக் கால்கள் வேகமாக ஓடத் தடையாக இருந்தன. மர்மத்தை எப்படியாவது அவிழ்த்துவிடும் நோக்கில் முடிந்தவரை வேகமாக ஓடியது.

கிராமப்புறச் சாலைகளில் வாகனங்கள் மிகக் குறைவு. பாதசாரிகளும் அப்படியே. சாலையின் இருமருங்கிலும் வேலி போலப் புதர்கள் வளர்ந்திருந்தன. வேலியையொட்டிப் பறக்கும் வெண்ணிறகு போலத் தென்பட்டது லூலூ. பிற நாய்கள் அதன் பின்னால் அவ்வப்போது ஓடி வந்தன. இங்கே தான் கொஞ்ச காலத்திற்கு முன்பு கிழவரும் தானும் ஒன்றாய் வாழ்ந்திருந்தனர். ஒருவேளை இப்போது அவர் அங்கே தான் இருக்கிறாரோ. தன் ஊளைச் சத்தம் கேட்கவில்லையா அவருக்கு? வீடுகளின் சன்னல்களைத் திறந்து அனைவரும் என்னவென்று பார்க்கிறார்கள். ஒருவருக்குக் கூட பஞ்சு போன்ற வெண்ணிறக் கேசம் இல்லை. யாரோ, “அந்த யூதக் கிழவரோட நாய் இது”, என்றார்கள். “ஏன் திரும்ப இங்கே வந்திருக்கிறது?” யாருக்கும் கிழவருக்கு என்னவாயிற்று என்று விசாரிக்கத் தோன்றவில்லை.

அடுத்த இரண்டு நாட்களுக்கு வீட்டு வாயிற் கதவருகிலேயே சுருண்டு கிடந்தது. அக்கம்பக்கத்தினருக்கு சலிப்பேற்பட்டு ஏதேனும் செய்ய வேண்டும் என்று தோன்றி விட்டது. மூன்றாவது நாள் காலையில் சிலர் கம்புகளும் கயிறுகளும் ஏந்தியவாறே லூலூவை நெருங்கினர். அதன் பெயரைக் கூப்பிட்ட ஒருவர் அதை நோக்கி ஓர் எலும்புத் துண்டை எறிந்தார். மிகுந்த பசி, தாகத்தில் வாடிய போதிலும் அது நகரவில்லை. வெண்ணிற உடையும் சோறிட்ட பரிவான சிறு கரங்களும் அதன் நினைவிலாடின. முதியவர் அப்போதேனும் கதவைத் திறந்து தன்னை நோக்கி வரமாட்டாரா என்ற ஏக்கத்துடன் கடைசியாக வீட்டுக் கதவை நிமிர்ந்து பார்த்தது. ஆனால், அவர் வரவில்லை.

பின் எப்போதுமே லூலூ கிழவரைக் காணவில்லை என்பதே புதிருக்கான ஒரே விடையானது. தானும் மற்ற எல்லோருமே என்றாவது ஒருநாளைக்குப் போகுமிடம் தான் கிழவர் போய்ச் சேர்ந்த இடமும் என்று லூலூவுக்குத் தெரியவில்லை.

லூலூவை வெளியே விட்டதற்காக அம்மாவும் சிறுமியும் சேர்ந்து தம்பியையே குற்றஞ்சாட்டினர். ஏச்சுகள் தன்னைத் தாக்கவில்லை என்று காட்டிக் கொள்ளும் முனைப்பில் சிறுவன் மரத்தடிக்குப் போய் தனியே விளையாடினான். ஒன்றுமே சொல்லாவிட்டாலும் உள்ளுக்குள் அவன் மிக வருந்தினான். இந்த லூலூ ரொம்ப மோசம்! அன்பு காட்டும் ஆட்களை விட்டுவிட்டு இப்படி ஓட அதற்கு எப்படித் தான் மனம் வந்தது? இனி வராது என்று நினைத்து லூலூவின் சாப்பாட்டுத் தட்டு, தண்ணீர்க் கிண்ணம் ஆகியவற்றை எடுத்துக் குப்பைத் தொட்டியில் போடவென்று அம்மா வந்த போது மூன்றாம் நாள் அந்தி நேரம். ஆனால், சிறுமியோ தட்டை அதன் இடத்திலேயே வைத்தாள். மூன்று நாட்கள் தானே ஆகின்றன, லூலூ கண்டிப்பாக வரும் என்று அவள் நினைத்தாள்.

திடீரென்று முற்றத்துக் கதவில் யாரோ பிறாண்டும் ஒலி கேட்டது. கதவில் காதை வைத்து மிகக் கூர்ந்து கேட்டாள் சிறுமி. சட்டென்று கதவைத் திறந்தாள். “லூலூ!” கண்டிப்பாக லூலூ தான். மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியவாறே முன்னங்கால்களை ஊன்றி மூவரையும் பார்த்துக் கொண்டு தரையில் அமர்ந்திருந்தது. சிறுமி முன்னால் குனிந்து அதைக் கட்டிக் கொண்டாள். அவளுடைய முன்னங்கையை நாக்கைத் துழாவி நக்கியது. “லூலூ!”, எனக் கூவியபடியே தம்பி முன்னால் வந்து நின்றான். அவனுடைய கையையும் நக்கியது. அடுத்து அம்மா நீட்டிய கைக்குள் தன் முன்னங்கையைக் கொடுத்துக் குலுக்கியது. நக்கினால் அம்மாவுக்குப் பிடிக்காது என்பதால் அவர் கையை அது நக்கவில்லை. அதன்பிறகு, திரு. ஃபான்னைத் தேடி வீட்டிற்குள் போனது. அவரது மேசைக்கடியில் போய் அவரது கால்களை உரசியது. அந்த மாலைநேரத்தில் எல்லோரும் மகிழ்ச்சியாக இருந்தனர். மூக்கோடு மூக்குரசி ஃபேய்ஃபேய்யும் லூலூவை வரவேற்றது.

அப்போதிலிருந்து லூலூ அக்குடும்பத்தின் அங்கமானது. மிகுந்த விசுவாசத்துடன் வீட்டைக் காத்தது. கீழ்ப்படிந்து நடந்தது. இரவுகளில் அவ்வப்போது வெளியே போனது என்பதைத் தவிர வேறு எந்தக் குற்றமும் சொல்வதற்கில்லை. அதெல்லாம் தவிர, ஃபேய்ஃபேய் எலியைப் பிடிக்கவும் உதவியது. எலி ஒன்று சாக்கடையிலிருந்து பாய்ந்து குதித்த போது ஃபேய்ஃபேய் முன்னும் பின்னும் ஓடியோடி அதைத் தப்ப விடாமல் பிடிக்கப் போராடும் போது லூலூ சாக்கடையின் மறுகோடியில் ஃபேய்ஃபேய்க்காகக் காத்திருந்தது. சாக்கடையின் மீது போடப் பட்டிருந்த கற்களூடாகத் தன் மூக்கைப் பொருத்தி உறுமியது. உடனே எலி மறுகோடிக்கு ஓடி அங்கே காத்திருக்கும் பூனையின் கால்களில் சிக்கும். இதையெல்லாம் பார்த்த அப்பா அது ஒரு வேட்டை நாயாகவோ வேட்டை நாயின் வாரிசாகவோ இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்தார்.

சோயாப்பால் கட்டி வாங்கவென்று சிறுமியும் தம்பியும் ஊருக்குள் செல்லும் போது லூலூவும் உடன் செல்லும். அவர்களுடைய கூடையைத் தூக்கிக் கொண்டு போக அது மிக விரும்பியது. ஆனால், அதன் கால்கள் மிகவும் கட்டையாக இருந்ததால் வெறுமே உடன் ஓடியது. சிறுவர்களுக்கு முன்னால் ஓடிச் சென்று மறைந்து பின்னர் திடீரென்று புதர் மறைவுக்குள்ளிருந்து வெளிப்பட்டு விளையாடியது. எப்போதுமே சிறுவர்கள் தடுமாறி விழுந்து விடாமல் பாய்ந்து வந்தது. சில சமயங்களில் சோயாப்பால் விற்பவர் லூலூவுக்கு ஓர் எலும்புத் துண்டைக் கொடுப்பதுண்டு. உடனே தன் முன்னங்கால்களைச் சேர்த்துக் குவித்து நன்றி சொல்லும் லூலூ. கடைக்காரக் கிழவர் உரக்கக் கூவிச் சிரிப்பார். சில வேளைகளில் சிறுவனும் சிறுமியையும் கிராமச் சிறார்களுடன் விளையாடுவர். அப்போது விளையாட்டை ஆர்வமுடன் கண்டுகளித்தவாறே லூலூ பொறுமையுடன் ஒரு புறம் உட்கார்ந்து கொள்ளும்.

கிராமத்தில் தெளிந்த சிற்றோடை ஓடியது. இரு மருங்கிலும் நிழல் தரும் கொடிகளூடாகக் காட்டுப் பூக்கள் மலர்ந்து குலுங்கின. நிழலில் உட்கார்ந்து கொண்டு கதைகள் பேச மூவரும் இங்கே அடிக்கடி வந்தனர். அடுத்த மாநிலத்தில் வசித்த அப்பாவின் நண்பர், திரு.டாங் ஒருமுறை வந்திருந்தார். ஆற்றங்கரையில் எளிய ஆடைகளுடன் ஒரு நாய்க்கு அருகில் சிறுவர்கள் உட்கார்ந்திருந்த காட்சியைத் திரையில் சித்திரமாய்த் தீட்ட விழையும் ஓவியராக பெருமூச்செறிந்தார். அது போன்றதோர் ஓவியம் தனது போரின் காயங்களை மறக்க உதவுமென்றார். அவரைப் பொருத்தவரை அது நல்ல ஜாதி நாய். அதெல்லாம் அக்குடும்பத்திற்கோ லூலூவுக்கு ஒரு பொருட்டில்லை.

சொல்லப் போனால், அனைவரது வாயிலிருந்தும் புறப்பட்ட எந்தக் கதையையுமே லூலூ கவனித்ததில்லை. அடிக்கடி ஓடைக்குள் குதித்து நீந்தும். இயல்பாகவே சிறப்பாக நீந்தும் அது பசுமை படர்ந்த நீர்ப்பரப்பின் மேல் மூக்கை இருத்திக் கொள்ளும். பிள்ளைகள் ஆற்றுக்குப் போவதை அம்மா விரும்பவில்லை. ஒவ்வொரு முறையும் அது சொட்டச் சொட்ட ஈரத்துடன் வரும் போது, “எங்க கூட்டிட்டுப் போன பிள்ளைகள? அவங்க தண்ணிக்குள்ள விழுந்தா என்னாகும்?”, என்று சொல்லிக் கண்டித்தார். காதுகளை உயர்த்தி அவர் சொல்வதைக் கேட்கும். குழந்தைகளைப் பொறுப்பாகப் பார்த்துக் கொள்ள வேண்டிய பெரியண்ணன் போல இருந்தது லூலூ.

நீருக்கருக்கே போக மாட்டோம் என்று சிறுவர்கள் உறுதியளிப்பதால், ஏசினாலும் அவர்கள் ஆற்றங்கரைக்குப் போக அம்மா அனுமதித்தார். அதில் ஒரு பிரச்சனையுமில்லை. ஆனால், ஒரு முறை லூலூ ஒரு பெரிய தவறைச் செய்தது. ஊருக்குள் சென்று பாடம் சொல்லிக் கொடுப்பார் திரு.ஃபான். அதற்காக வாரத்தில் மூன்று நாட்கள் ஊருக்குள் தங்கி விடுவார். உடல்நலமில்லாத அண்டை வீட்டுக் குழந்தையைப் பார்த்துக் கொள்ள அம்மா சென்று விடுவார். இரண்டாண்டுகள் தாதிமைப் படிப்பை முடித்திருந்தவர் கிராமத்தின் சிறந்த தாதியாக விளங்கினார். ஒவ்வொரு முறை கிளம்பும் போதும், “நீ இல்லாவிட்டால், பிள்ளைகளைத் தனியே விடமாட்டேன். உன்னை நம்பித் தான் விட்டுவிட்டுப் போகிறேன். சரியா?”, என்பார். கூர்ந்து கவனிக்கும் லூலூ உற்சாகத்தில் வாலை ஆட்டும். “ராத்திரி வெளியே போகக் கூடாது. வீட்டுக்குள் தூங்குங்கள். சரியா?”, என்றபடி லூலூவைத் தடவிக் கொடுப்பார். அவரது உறுதியான தொடுகையை மிக ரசிக்கும். அவரைப் போகவிடாது.

இரவுகளில் லூலூ வேட்டைக்குக் கிளம்பும். அடர்ந்த மலைக் காடுகளில் அதற்கு முயல்களும் அணிகளும் அகப்படும். இரவெல்லாம் வேட்டையாடி விட்டு உற்சாகத்துடன் திரும்பும் அதன் மீது காட்டின் பளபளப்பும் துடிதுடிப்பும் பளீரிடும். சிறுவர்கள் தனியே இருக்கும் இரவுகளில், ஒரு கணமும் அவர்களைப் பிரியாது. ஒருநாள், அவர்கள் சந்தைக்குப் போயிருக்காவிட்டால் மாட்டிறைச்சிக்கான அதன் ஏக்கம் புலப்பட்டிருக்காது.

மலைக் கிராமத்தினடியில் இருந்த சாலையில் வாரமிருமுறை அக்கம்பக்கத்து கிராமங்களிலிருந்து சந்தை கூடும். கோழி, மீன், இறைச்சி, முட்டை, பாத்திர பண்டங்கள், பறவைகள், பூனைகள் என்று ஏதேதோ விற்பனைக்கு வைக்கப் பட்டிருக்கும். ஒரேயொரு பொதியை மட்டும் வாங்கிய சிறுமி தம்பியைத் தரதரவென்று இழுத்துக் கொண்டு நடந்தாள். கடைகளில் இருக்கும் அரிய பொருட்கள் எதையும் அவர்களால் வாங்க முடியாது என்று அவள் அறிவாள். அக்கா சொல்வதைப் புரிந்துகொண்ட தம்பியும் ஈடுகொடுத்து வேகமாக நடந்தான். கொஞ்ச தூரம் சென்றதும் தான் லூலூவைக் காணோம் என்று உணர்ந்தனர். “லூலூ”, என்று மென்மையாக அழைத்தாள் சிறுமி. இறைச்சிக் கடையிலிருந்து கூச்சலும் சிரிப்பும் கேட்டது. “வெண்ணிற நாயே, ஏதேனும் வித்தை செய்து காட்டு. குட்டிக் கரணமாவது அடி.” இரண்டு சிறுவர்களும் பாய்ந்து விரைந்தோடினர். லூலூ அங்கே உட்கார்ந்து கொண்டு இறைச்சித் துண்டுக்காக மண்டியிட்டிருந்தது.

“லூலூ”, என்று கோபத்தில் இரைந்தாள் சிறுமி. சடாரென்று குதித்தெழுந்து சென்று அவளருகில் நின்றது. தலை மட்டும் திரும்பி தொங்கிக் கொண்டிருந்த இறைச்சித் துண்டையே வெறித்துப் பார்த்தது. பன்றிக்கறி, ஆட்டிறைச்சி, கழுதை மற்றும் குதிரை இறைச்சிகள் கடைகளில் இருந்தன. ஆனால், அதற்கு மாட்டிறைச்சி மட்டுமே கவர்ச்சியாக இருந்தது. முன்பெல்லாம் தின்ற புத்தம் புதிய இறைச்சியைப் போலிருந்ததைத் தின்பதற்குத் தான் அது மிகுந்த ஆவல் கொண்டது. பச்சை இறைச்சியின் மணம் அதற்குள் வேட்டை, வெற்றி, சுதந்திரம், பரந்து விரிந்த காடு, எல்லையற்ற மலைப் பிரதேசம் போன்ற பல நினைவுகளைக் கொணர்ந்தது. அதற்கு ஒருவித மயக்கமும் குழப்பமும் கலந்த நிலையேற்பட்டது.

இறைச்சி வியாபாரி சிறுமியையும் சிறுவனையும் அடையாளம் கண்டு சிரித்தார். “இது ஃபேன் வீட்டு நாயாச்சே”, என்றவர் ஒரு துண்டு இறைச்சியை வெட்டியெடுத்து சிறுமியின் கூடைக்குள் வைத்தார். ஆதரவற்ற ஆசிரியர்களைக் கண்டால் எப்போதுமே கிராமத்தினர் அனைவருக்கும் அனுதாபம் இருந்தது. ஆசியர்களுக்குக் கல்வி இருந்ததென்னவோ உண்மை. ஆனால், நாய் வளர்ப்பதெப்படி என்று அவர்களுக்குத் தெரிவதில்லை.

சிறுமி இறைச்சித் துண்டை ஏற்கவில்லை. தம்பியை இழுத்துக் கொண்டு அங்கிருந்த அகன்று நடந்தாள். பாய்ந்து வந்து இறைச்சித் துண்டைப் பறித்துக் கொண்டு வேகமாக ஓடியது லூலூ.

கையில் ஏந்திய கூடையுடன் மூச்சிறைத்தவாறே பின்னால் ஓடினாள் சிறுமி. பின்னாலேயே விரைந்தான் தம்பி. ஆட்கள் அனைவரும் சிரித்தனர். விகல்பமில்லாத மகிழ்ச்சிச் சிரிப்பு. ஆனாலும், சிறுமியின் காதுகளில் அச்சிரிப்பொலி நாராசமாக விழுந்தது.

வீட்டை அடைந்ததும் தன் முன்னால் இறைச்சியை வைத்தது. அதையே முறைத்தபடி உட்கார்ந்து கொண்டது. சில நிமிடங்களில் சிறுமியை வரவேற்ற லூலூ, வாலைக் குழைத்து அவளது நன்மதிப்பைப் பெற முயன்றது. இறைச்சியைத் தின்ன அவளிடம் அனுமதி வேண்டியது. சிறுமியோ கூடையைத் தூர எறிந்தாள். தலை மீது கைவைத்து அழ ஆரம்பித்தாள்.

தம்பி கைக்குட்டையை அவளிடம் நீட்டினான். கோபத்துடன் தரையில் காலை உதைத்தவனாக லூலூவிடம் சென்று அதைத் திட்டினான். “உனக்கு எறச்சி அவ்ளோ பிடிக்கும்னா எங்க வீட்ட விட்டுப் போயிடேன். மலைக் காட்டுக்குள்ள போய் வேற யாரோடையாவது இருந்துக்கோ.”

லூலூ சிறுமியைச் சுற்றிச் சுற்றி வந்தது. முன்னங்கால்களையும் தலையையும் அவள் மீது உராய்ந்தது. அக்கணத்திலிருந்து அது இறைச்சித் துண்டை ஏறெடுத்தும் பார்க்கவில்லை.

சிறுமி முற்றத்தில் நின்ற மரத்தினடியில் அந்த இறைச்சித் துண்டைப் புதைத்தாள். பிற்பாடு, அம்மா இறைச்சிக்குப் பணமும் செலுத்தினார். லூலூவை அவர் திட்டவில்லை. சம்பவம் நடந்து முடிந்த பின்னர் குற்றஞ்சாட்டுவதில் என்ன தான் பயன்? குறைந்த இறைச்சி உண்பதற்கு லூலூவும் பழகிக் கொண்டது. வெளியில் சென்று வேட்டையாடுவதும் குறைந்து எப்போதாவது தான் போனது. காட்டில் கிடைத்த கேளிக்கைகளைக் காட்டிலும் லூலூவுக்கு குடும்பத்தினரிடமிருந்து கிடைத்த அன்பும் பரிவுமே பிடித்திருந்தது. நாய்களும் சாதுவான உணவுக்குப் பழக முடியுமென்று அப்பா சொன்னார்.

லூலூ இன்னொரு பெரிய தவறைச் செய்தது. அதுவும் திருத்தவே முடியாத தவறு. லூலூவும் ஃபேய்ஃபேய்யும் எப்போதுமே சேர்ந்து விளையாடும். தன் நுனி மூக்கினால் பூனையைத் தள்ளும். பூனையோ குதித்து அதன்மீது பாயும். இரண்டும் கட்டிப்புரண்டு விளையாட்டுச் சண்டையிடும். குளிர்காலங்களில் பூனை தன் கூடையை விட்டு வெளியேறி லூலூவுடன் படுத்துறங்கும். அந்த ஆண்டு ஃபேய்ஃபேய் குட்டிகளை ஈன்றது. அதன் பிறகு அது லூலூவைக் கண்டால் முறைத்துச் சீறியது. லூலூ பாவம் கூடைக்குள் மூக்கைப் பொருத்தி பூனைக் குட்டிகளை முகர முயன்றது. அப்போது தாய்ப்பூனை லூலூவின் மூக்கைப் பிறாண்டிவிட்டது. லூலூவின் மூக்கில் ரத்தம் ஒழுகியது. அதற்கு சினம் பொங்கியது. இருந்தாலும் ஃபேய்ஃபேய்யுடன் விளையாட அது மிக விரும்பியது. மெதுவாக ஃபேய்ஃபேய்யைத் தன் வாயால் கவ்வி எடுத்து வெளியே விட்டது. ஃபேய்ஃபேய் வீறிட்டலறியது. சில நொடிகள் நடுங்கியவாறே தரையில் கிடந்தது. பிறகு, மூச்சை நிறுத்தி விட்டது. லூலூ திடுக்கிட்டு நின்றது. பிறகு, நெருங்கிச் சென்றது. மூக்கால் பூனையைத் தடவியது. அதன் மீது புரண்டு பார்த்தது. ஆனால், முன்பு போல் ஃபேய்ஃபேய் திரும்பித் தாக்கவில்லை. அசையக் கூட இல்லை.

தற்செயலாக அம்மா வெளியில் வந்த போது ஃபேய்ஃபேய்க்கு அருகில் அமர்ந்து லூலூ சிணுங்கிக் கொண்டிருந்ததைக் கண்டார். அவரைப் பார்த்ததும் அது முட்டாள் மாதிரி விழித்தது. தரையில் வயிறை அழுத்தியவாறே அவரை நோக்கி அவசரமாகத் தவழ்ந்தது. அம்மா முகம் வெளிறினார். “முட்டாள் நாயே! என்ன காரியம் செஞ்சி வச்சிருக்க? இனி அந்தக் குட்டிகள் கதி என்ன? யார் அவற்றுக்குப் பாலூட்டுவா?” கோபத்தில் கூடையிலிருந்த குட்டிகளை லூலூவின் முன்னால் நகர்த்தினார். அதிர்ச்சியில் பின்வாங்கியது. எழுந்து நிற்கவே பயந்தது. சிறுமியும் சிறுவனும் லூலூவுக்காகப் பரிந்து பேச முயன்றனர். ஆனால், லூலூவுக்கு அடி கொடுப்பதில் அம்மா உறுதியாக இருந்தார். லூலூ உள்ளறைக்குள் பதுங்கியது.

ஓடிப் போகப் போகிறது என்று பயந்த மூவரும் அதன் பின்னால் போனார்கள். அங்கே அப்பாவின் காலருகில் உட்கார்ந்து கொண்டது. முன்னிரு கால்களையும் சேர்த்திணைத்து நின்றது. தனக்காகப் பேசுமாறு அது அப்பாவைக் கெஞ்சியது. அப்பா அதன் தலையைத் தடவினார். அம்மா முகத்திலிருந்த ஆக்ரோஷத்தைக் கண்டவாறே, “சின்னதா ரெண்டடி மட்டும் கொடு, சரியா?”, என்றார். அம்மா சற்றே அமைதியடைந்தார். நாய் என்பதாலேயே அதற்கு தண்டனை கொடுக்காமல் இருக்கிறோம், லூலூ திருந்த வேண்டும் என்ற அம்மா கடுமையாக அடிக்க மாட்டேன்று உறுதியளித்தார். அழுத்தமாக மூன்று அடிகள் கொடுத்தார். வலியில் ஊளையிட்டது. பின் முற்றம் மற்றும் முன்வாசல் இரண்டுமே திறந்திருந்தாலும் திமிரி ஓடிவிடாமல் அங்கேயே உட்கார்ந்து கொண்டது. அம்மா மேசையருகிலிருந்து லூலூவுக்கு அருகில் வந்தார். “பெரும்பாலான ஆட்கள் சிறிய தண்டனைக்கே தப்பி ஓடிவிடுவர். நீ வேகமான அடியைத் தாங்கிக் கொண்டு நின்றாய், சபாஷ்!”

அடி வாங்கிய பிறகு தன்னிடத்தை அடைந்தது. சிறுமியும் சிறுவனும் அருகில் போகக் கூடாதென்று அம்மா ஆணையிட்டிருந்தார். ஏனெனில், அது கொஞ்ச நேரம் தன் தவறை நினைத்து வருந்தினால் எதிர்காலத்தில் மீண்டும் அவ்வாறு செய்யாதிருக்கும் என்று நம்பினார். ஃபேய்ஃபேய் மற்றும் குட்டிகளை நினைத்து பிள்ளைகள் இருவரும் வருந்தினர். அதே நேரம் லூலூவை நினைத்தும் வருத்தங் கொண்டனர். அது வேண்டுமென்றே ஃபேய்ஃபேய்யைக் கொல்லவில்லை என்று அவர்கள் அறிந்தனர். தண்டனையாக அன்றைக்கு லூலூவுக்கு மாலை உணவில்லை. சிறுமி தண்ணீரும் மிச்ச மீதி உணவையும் ரகசியமாகக் கொண்டு போய்க் கொடுத்தாள். அது அவளது கையை நக்கிச் சிணுங்கியது.

லூலூவின் தவறுகளையும் நல்லியல்புகளையும் சீர்தூக்கிப் பார்த்தால் கண்டிப்பாக அதனிடம் நல்லியல்புகள் தான் அதிகமிருந்தன. ஒரு நாள் மதியத்தில், பேறுகாலப் பெண் வீட்டிலிருந்து அம்மாவிற்கு அழைப்பு வந்தது. தூரத்து கிராமத்திற்கு அன்றைக்கு மருந்துகள் கொண்டு போய் கொடுக்கும் திட்டமிருந்தது அவருக்கு. அந்தப் பணி சிறுமியிடம் கொடுக்கப்பட்டது. சிறுமி மகிழ்ச்சியுடன் மருந்துகளைப் பொதியாகக் கட்டிக் கொண்டாள். தம்பியும் லூலூவும் உடன் வர விரும்பினர். ஆனால் தூரமதிகம் என்பதால் அம்மா வேண்டாமென்று சொல்லி விட்டார். அத்துடன், தம்பிக்கு உடல்நலமில்லாதிருந்தது. ஆகவே, அவனைப் பார்த்துக் கொண்டு லூலூவும் வீட்டில் இருப்பதென்று முடிவானது. தாயும் மகளும் சேர்ந்தே கிளம்பினர். ஆனால், இரு வேறு திசைகளில். மடாலய வாயில் வரை லூலூவும் தம்பியும் உடன் வந்தனர். சிறுமியின் வெளிர்மஞ்சள் ஆடை பார்வையிலிருந்து காட்டின் அடர் பசியத்திற்குள் மறையும் வரை அங்கே நின்றனர்.

அம்மா நோயாளியின் வீட்டை அடைந்ததுமே, கர்பிணி பிரசவ வலியில் இருப்பதைக் கண்டார். சிசு வெளியாகும் வரை அவருக்கு உதவினார். அனைத்தும் சாதாரணமாக இருக்கிறதென்ற முழு நம்பிக்கை வரும் வரை அங்கிருந்து புறப்படவில்லை. அவர் தன் வீட்டை அடைந்த போது மணி இரவு பத்தாகிவிட்டது. சிறிய எண்ணை விளக்கொளி மட்டுமே அவரை வரவேற்றது. அமைதியின்றி பதட்டத்துடன் சிணிங்கியவாறு அங்குமிங்கும் அலைந்தபடியிருந்தது. தம்பி அம்மாவைக் கண்ட கணத்தில் ஓடிச் சென்றான். சட்டென்று அழுது கொண்டே, “அக்கா இன்னும் வீடு திரும்பவில்லை”, என்றான்.

அப்பாவும் வெளியே போயிருந்தார். ஆகவே, அம்மா தன்னை நிதானப் படுத்திக் கொண்டவாறே அண்டை வீட்டுக்குச் சென்றார். பேராசிரியரை எழுப்பினார். வீட்டினரும் எழுந்தனர். கிடுகிடுவென்று தீப்பந்தங்களும் விளக்குகளும் தயார் செய்யப்பட்டன. சிணுங்கியபடி லூலூ அம்மாவுக்கு அருகில் நின்றது. அவர் பாதங்கள் மீதேறி அவர் கவனத்தை ஈர்க்க முனைந்தது. தம்பிக்கு உடனே புரிந்தது. “அம்மா, லூலூ அக்காவைக் கண்டு பிடிக்கட்டுமே”, என்றான். அம்மா சற்றே தயங்கி விட்டு, “ஓடு லூலூ. அவளைக் கண்டுபிடி”, என்றார். துப்பாக்கித் தோட்டாவிலிருந்து கிளம்பிய குண்டைப் போல விரைந்தோடி இருளுக்குள் மறைந்தது லூலூ.

ஆற்றலையெல்லாம் திரட்டி ஓடியது லூலூ. சிறுமியின் மணத்துடன் அவள் எடுத்துச் சென்ற மூலிகை மருந்துகளின் மணமும் சேர்ந்து அதைச் செலுத்தியது. இரவு, மரங்கள், சாலையின் இருமருகிலும் பாய்ந்தோடிய மழைநீரின் ஓசை போன்ற மற்ற எதன் இருப்போ ஒலியோ மணமோ அதற்குப் பொருட்டாக இல்லை. அவற்றைப் பொருத்தவரை லூலூ மரணமுற்றிருந்தது. மிக லேசாக அடித்த சிறுமியின் மணம் மட்டுமே அதற்கு முக்கியமாக இருந்தது. ஒரேயொரு கணம் மணத்தைக் காணோம். பாலத்தைத் தவிர்த்து விட்டு ஓடைக்குள் இறங்கியது. நீந்திக் கரையேறியது. சிறிய பாதைக்குள் நடக்கும் போது மீண்டும் சிறுமியின் மணம் லேசாக அடிக்க ஆரம்பித்தது. தன் திறனைக் கண்டு அதற்கு எந்த கர்வமும் ஏற்படவில்லை. தொடர்ந்து வேகமாக ஓடியது. அடுத்திருந்த சமவெளி கிராமத்தை அடைந்தது.

அடரிருளுக்குள் கிடந்தது கிராமம். ஒரு வீட்டை நோக்கி ஓடியது. கதவில் பிறாண்டியது. அங்கே அந்த மணம் மறைந்தது. ஆகவே, சிறுமி அங்கே போயிருக்க வேண்டும். மீண்டும் கதவில் பிறாண்டியது. அதற்குப் பிறகு, சுற்றுச் சுவரையொட்டி ஓடி பின் முற்றத்தை அடைந்தது. மீண்டும் மணத்தை உணர்ந்தது. இம்முறை மூலிகை மருந்து மணத்தைக் காணோம். சிறுமி பின்வாசல் வழியாக வெளியேறியிருக்க வேண்டும். கிராமத்திலிருந்து வெளியேறி, மலையேறும் ஒற்றயடிப் பாதைக்குள் போயிருக்க வேண்டும். பதினைந்து நிமிடத்திற்கு ஓய்வெடுக்காமல் தொடர்ந்து ஓடியதில் அதன் நாக்கு வெளித் தள்ளியது. மரங்களின் எண்ணிக்கை கூடி புற்களின் அடர்த்தியும் கூடியது. இரவுக் காட்டின் பசிய மணம் அதன் நுகர் திறனுக்குச் சவாலானது. புற்களிடையே பின் தொடர்ந்து வந்த மணத்தை தேட வேண்டியிருந்தது. காட்டின் சிறு விலங்குகள் அச்சத்தில் சிதறி ஓடின. தன் தேடல் முனைப்பில் அது அவற்றையெல்லாம் கவனிக்கவில்லை. அக்கணத்தில், அதற்கு மிகவும் பிடித்த விலங்கு ஏதேனும் அதன் முன் தோன்றியிருந்தாலும் அது ஏறெடுத்தும் பார்த்திருக்காது. வேட்டைக்கும் கிளம்பியிருக்காது.

இறுதியில், பெரிய பாறைக்கருகிலிருந்து ஒரு மரத்தடியில் வீட்டில் நெய்யப்பட்ட மஞ்சள் துணியைக் கண்டது. சிறுமி பாறைமீது சாய்ந்து ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள். லூலூ மகிழ்ச்சியில் துள்ளிப் பாய்ந்தது. சில முறை லேசாக ஓசையெழுப்பியது. பிறகு, தரையில் அமர்ந்து, சிறுமியையே வெறித்துப் பார்த்தது. பிறகு, மீண்டும் எழுந்து அவளை இரு முறை சுற்றி வந்தது. பிறகு, மெதுவாக தன் முன்னங்காலை நீட்டி அவளைத் தொட்டு மெதுவாக அசைத்தது.

சிறுமி விழித்து அதிர்ச்சியில் தன்னைச் சுற்றிலும் பார்த்தாள். கருமரங்களிடையே பிறைநிலா ஒளிர்ந்து பாறை மற்றும் புற்கள் மீது பொழிந்தது. சடாரென்று, “லூலூ, வீட்டுக்குப் போவோம். அம்மா மிகக் கவலையோட இருப்பார்”, என்றாள். அதன் கழுத்துப் பட்டியைப் பற்றிக் கொள்ள நினைத்தாள். ஆனால், அவள் அதிக உயரம். ஆகவே, தன் மேலாடையை எடுத்து அதன் கழுத்துவாரில் கட்டிக் கொண்டாள். மறுகோடியைப் பிடித்துக் கொண்டு நடந்தவள் முன்னால் சின்னச் சின்ன மகிழ்ச்சி ஓசைகள் செய்தவாறே நடந்தது லூலூ.

“லூலூ, ரிப் வான் விங்கிள் மாதிரி நீண்ட கனவு காண ஆசைப்பட்டேன். நல்லவேளை, நான் இருபதாண்டுகள் கனாக்காணவில்லை”, என்றாள்.

அடிவாரத்துக்கு வந்த போது தூரத்தே மினுங்கிய விளக்குகளைக் கண்டனர். சீக்கிரமே, உயர்ந்தடங்கிய மனிதர்களின் பேச்சரவம் கேட்டது. அது சிறுமியைத் தேடிவந்த கூட்டம். அவர்கள் முதலில் கண்டது பனிவெண்மையிலிருந்த லூலூவை. அதன் பெயரைச் சொல்லி, அதனால் பதிலளிக்க முடியுமென்று நம்புவது போல கேள்விகள் பல கேட்டனர். லூலூ அவர்களுக்களிக்கக் கூடிய ஒரே பதில் சிறுமியை அவர்கள் முன்னால் நிறுத்துவது ஒன்று தான். சிறுமி தாயைக் கண்டதுமே பாய்ந்தோடி அணைத்துக் கொண்டாள். லூலூ நிலத்தில் அழுந்தி அமர்ந்து கூர்ந்து பார்த்தது. யார் அம்மாவைக் கவலைக்குள்ளாக்கினாலோ கோபப்படுத்தினாலோ தண்டிக்கப்படுவது போல சிறுமியும் தண்டிக்கப் படுவாளோ என்றெண்ணி அஞ்சியது. ஆனால், அம்மா அவளைக் கட்டியணைத்து, “கண் விழித்ததும் என்னைக் காணாமல் உனக்கு பயமாக இல்லையா?”, எனக் கேட்டார். “தூங்கும் முன்னர் இருபதாண்டுகள் தூங்குவேனோ என்று பயந்தேன். ஆனாலும், தூக்கம் தூக்கமாக வந்ததால் தூங்கிப் போனேன்”, என்றாள். அனைவரும் சிரித்தனர். பிறகு, ஓநாய்கள் திரிந்த மலைக்காட்டுக்குள் அவளுக்கு ஏற்பட்டிருக்கக் கூடிய பேராபத்தைப் பற்றி பேசினர். யாரும் லூலூவைக் கண்டுகொள்ளவில்லை.

நகரிலிருந்து அப்பா வீட்டுக்கு வந்ததும், லூலூவைத் தேடிச் சென்று கைகுலுக்கினார். அதன் சாகசத்தை அது மறந்தே போயிருந்தது. இருப்பினும், கடந்த சில நாட்களாக உணவில் மாட்டிறைச்சி கிடைத்து வந்ததே அதன் மகிழ்ச்சியைக் கூட்டியிருந்தது.

காலம் ஓடியது. சிறுவர்கள் நகரிலிருந்து கிராமத்திற்கு வந்திருந்த பள்ளிக் கூடத்தில் பயில ஆரம்பித்தனர். சிறுமி உயர்நிலைப் பள்ளியிலும் சிறுவன் தொடக்கப்பள்ளியிலும் படித்தனர். தினமும் லூலூ அவர்கள் பள்ளிக்குக் கிளம்பிச் செல்லும் போது மடாலய வாயில் வரை உடன் செல்லும். அவர்கள் போவதை நின்று பார்க்கும். மீண்டும், மாலையில் மலையடிவாரத்தில் அவர்கள் திரும்பக் காத்திருக்கும். சோயா பால் கட்டி வாங்கவென்று அவர்களிருவரும் சந்தைக்குச் செல்லும் போது உடன் சென்று வழியிலிருந்த புல்வெளியில் அவர்களுடன் விளையாடியது. சிறுமி அடிக்கடி உடல் நலமில்லாது படுத்துக் கொண்டாள். அவள் படுக்கையில் ஓய்வெடுக்கும் போதெல்லாம் ஏதோ ஆபத்தை உணர்ந்தது போல் மிகுந்த பதட்டமடைந்தது. மலை தெய்வங்களைக் கோபப்படுத்தியிருப்பாள் என்றனர். லூலூ அவளைக் கண்டுபிடித்த இடத்தில் மலைக் காட்டு தெய்வங்களுக்குப் படையலிட வேண்டும் என்று சந்தையில் சோயாப்பால் கட்டி விற்பவர் சொன்னார். அம்மாவும் அப்பாவும் அவருக்கு நன்றி தெரிவித்தனர். ஆனால், ‘காச நோய்’, ‘சத்துப் பற்றாக் குறை’ என்று ஏதேதோ பேசிக் கொண்டனர். லூலூவுக்குப் புரியவில்லை. புரிந்திருந்தால் சிறுமிக்கு பதிலாக அதுவே வழிபட மலைக்குச் சென்றிருக்கும்.

அதிருஷ்டவசமாக, சிறுமி மற்ற நேரங்களில் எல்லோரையும் போல சாதாரணமாகத் தான் இருந்தாள். ஆகவே, லூலூவின் கவலை நீடிக்கவில்லை. கிராமத்து ஓடை நீர் போல நாட்கள் இயல்பாக மகிழ்ச்சியுடன் ஓடியது. இந்த சமயத்தில் லூலூ இறந்திருந்தால், அது தான் உலகிலேயே ஆக மகிழ்ச்சியான நாயாக இருந்திருக்கும். பளபளத்த வெண்ணிற ரோமத்துடன் மிக ஆரோக்கியமாக இருந்தது. அதன் வயதை யாரும் அறிந்திருக்கவில்லை. ஆனால், அது இன்னும் நீண்ட காலம் வாழும் என்றே அனைவரும் நினைத்தனர்.

பெருநதிகளின் கொந்தளிப்புகள் பற்றிய எந்தக் கவலையின்றி கிராமத்து ஓடை நளினமாக ஓடியது. கடைசியில் ஒருநாள், ஜப்பானியர்களின் சரணடைவுச் செய்தி கிராமத்தை எட்டியது. எந்தச் சந்தை நாளையும் விட அதிக கோலாகலமும் கொண்டாட்டமுமானது கிராமம். அனைத்துத் துன்பங்களுக்கும் முடிவானது.

உற்சாக மிகுதியில், “மிகவும் கஷ்டப்பட்டு விட்டாய் நீ”, என்றவாறே அப்பா அம்மாவை இறுக்கியணைத்தார். அம்மாவும் அழுதார். அப்பா மகளையும் மகனையும் அணைத்துக் கொண்டார். நால்வரும் சேர்ந்து கட்டிக் கொண்டனர். அவர்களுக்கிடையில் தலையைக் கொடுக்க முயன்ற இப்படியும் அப்படியும் குதித்தோடியது. துயரங்கள் அனுபவித்த இந்தச் சிறிய குடும்பத்தில் லூலூவும் ஓர் அங்கம் தானே!

முகமெல்லாம் மகிழ்ச்சி பூசியவாறே, “பேய்பிங்கிற்குப் போய்விடுவோம்”, என்றான் தம்பி. சிறுமி நளினமாகக் குனிந்து மண்டியிட்டு லூலூவைக் கட்டிக் கொண்டாள். லூலூ தம்முடன் ஊருக்குப் போக முடியாதென்று யாருமே நினைத்துப் பார்க்கவில்லை.

குடும்பம் அங்கே ஆதரவற்றிருந்தது. இரண்டு அரிய குழந்தைகளையும் வருடக்கணக்கில் மெழுகுதிரி ஒளியில் அப்பா எழுதிக் குவித்த தாள்களையும் தவிர வேறு எதுவும் விலை மதிப்பாக இல்லை அவ்வீட்டில். ஆகவே அங்கிருந்து குடிபெயர்வதென்பது பெரிய சிரமமான பணியொன்றுமில்லை. லூலூவை என்ன செய்து என்பது தான் ஒரே பிரச்சனை. அதை அங்கேயே விட்டுவிட்டுப் போனால், அதற்குப் பைத்தியம் தான் பிடிக்கும். இறுதியில், நகருக்குச் செல்வது வரை அதையும் அழைத்துப் போவதென்று முடிவானது. அங்கே வசிக்கும் திரு.டாங்கிற்கு நாய்களென்றால் மிகவும் பிரியம். அவரிடம் விடலாம் என்று எண்ணிக் கொண்டனர்.

பல நாட்கள் நீண்ட பரபரப்பான ஆயத்தங்களுக்குப் பிறகு, குடும்பம் பேருந்தில் ஏறியது. அந்நாட்களில் லூலூ நிலை கொள்ளாமல் தவித்தது. இரவுகளில் அதற்கு பயங்கரக் கனவுகள் வந்தன. அப்பா, அம்மா, சிறுமி மற்றும் சிறுவன் ஆகிய நால்வரும் தன்னை மட்டும் விட்டுவிட்டு ஊரை விட்டுப் போவது போலவும் தான் காடுமேடுகளில் பைத்தியம் போல் அலைவது போலவும் கனவில் கண்டது. நுகர்வதற்கு பரிச்சயமான மணங்கள் ஏதுமில்லை. ஆகவே, அக்கனவு அதற்கு அதிர்ச்சியளித்த்து. தூக்கத்திலேயே உரக்கச் சிணுங்கியது. அம்மா அருகில் வந்து அதை உலுக்கி எழுப்புவார். அப்பாவிடம் சென்று, “நாய்களுக்குக் கனவு வருமா?”, என்று விசாரித்தார். “ஆமென்று தான் நினைக்கிறேன். கண்டிப்பாக, நம் லூலூவுக்கு வரும்.”

பேருந்தில் ஏற்றப்படும் போது லூலூவுக்கு ஒரே ஆச்சரியம். மகிழ்ச்சியில் அதற்குத் தலைகால் புரியவில்லை. அம்மாவை மகிழ்விக்க எண்ணி அவர் மீது உரசியது. அவரோ, “நகர்ந்து போ. ஏற்கனவே நெருக்கமா இருக்கு”, என்று இரைந்தார். சடாரென்று சிறுவனுக்கும் சிறுமிக்கும் இடையில் ஒண்டிக்கொண்ட்து. ஒவ்வொரு வளைவிலும் ஊர் மறைந்து தெரிந்து பின் மறைந்தது. தூரத்தில் ஊர் மறைவதும் தெரிந்தது. குலுக்கல்களுடன் பயணித்த போது பசுமை போர்த்திய மலைகளையும் காடுகளையும் வேடிக்கை பார்த்தனர்.

கிளம்பிய நாளைக்கு மறுநாள் சிறுமிக்கு நோய் கண்டது. அவளால் இயற்கை அழகுகளை ரசிக்க முடியாமல் போனதே என்று அப்பா வருந்தினார். பேருந்திலும், விடுதியை அடைந்த பிறகு அங்கேயும் படுத்தே இருந்தாள். முன்பு அவள் முடியாமல் கிடந்த போதெல்லாம் பட்டதை விட அதிகமாக லூலூ கவலைப்பட்டது. ஒரு கணத்திற்குக் கூட அவள் அருகிலிருந்து நகர மறுத்தது. அதன் கண்களில் கவிந்திருந்த பீதியும் வருத்தமும் அம்மாவை எரிச்சலூட்டின. “ஒண்ணுமில்ல லூலூ. சரியாயிடும் அவளுக்கு. கவலப் படாத”, என்று கூறி அறையை விட்டுத் துரத்தினார். அதுவோ அறை வாயிலில் அமர்ந்து கொண்டது. நடப்பதென்னவென்று தம்பி விவரித்தான். அக்காவை பேய்பிங்கில் குணப்படுத்துவார்கள் என்றான். விமானத்தில் போக வேண்டியிருப்பதால் லூலூவையும் கூட்டிக் கொண்டு போவதற்கில்லை என்றான். டாங் மாமா மிகவும் நல்லவர், நன்றாகப் பார்த்துக் கொள்வார் என்றான். லூலூவுக்குப் புரியவில்லை. ஆனால், அவ்வப்போது தம்பியை நக்கியவாறு அமைதியாகக் கூர்ந்து கேட்டது.

நகருக்கு அருகில் ஒரு பேரருவி இருந்தது. நெடுந்தொலைவு வரை கூட அதனோசை கேட்கும். பேருந்து அங்கே சென்றது. எல்லோரும் பேருந்தை விட்டு இறங்கி அருவியின் அழகை ரசிக்கவென்று குன்றின் மேல் ஏறினர். சிறுமிக்கு காய்ச்சலடித்தது. ஆனாலும், பேருந்திலிருந்து இறங்குவேன் என்று அடம் பிடித்தாள். இடப்புறத்தில் அப்பாவும், வலப்புறத்தில் அம்மாவும் உடன் நடக்க, முன்னால் தம்பி நடந்தான். லூலூ சிறுமியின் பின்னால் நடந்தது. உயரத்தை நோக்கி நடந்தனர். நூறடி தூரம் வீழ்ந்த அருவி கீழே ஓர் அழகிய மரகதக் குளத்தை உருவாக்கியிருந்தது. பனிமூட்டம் மேலெழுந்தது. நீர்த்திரையும், இடியோசையும் எங்கோ தொலைவில் போலுணர்ந்தாள் சிறுமி. அருகில் சென்று காண ஆசைப்பட்டாள். ஆனால், அவளால் முடியவில்லை. மயங்கி அப்பா தோளில் சாய்ந்தாள்.

அது தான் லூலூ சிறுமியைக் கடைசியாகக் கண்டது. அடுத்த சில நாட்களிலேயே எதையோ பறிகொடுத்ததைப் போலிருந்தது. அதன் உரோமம் பொலிவிழந்தது. டாங் வீட்டில் அனுதினமும் உணவில் மாட்டிறைச்சி இருந்தது. ஆனாலும், அருகில் சென்று முகர்ந்து பார்த்து விட்டு அகன்று விடும். தம்பி எத்தனை சொல்லியும் அது கேட்கவில்லை. இப்போது அவன் அக்காவைவிட உயரமாக இருந்தான். அதனால் அவனை வீழ்த்த முடியாது. பெரிய வீட்டுவாசலில் சிணுங்கியபடி நின்றது. அங்கிருந்த மணங்கள் அதற்கு பிடிக்கவில்லை. எங்காவது ஓடிவிடலாமா என்று தோன்றியது அதற்கு. முதல் மாடி சன்னலிலிருந்து சிறுமி தன்னைப் பார்த்தது தான் இறுதி என்று தெரிந்திருந்தால், அங்கிருந்து அகலாமல் வாழ்நாளெல்லாம் அங்கேயே நின்றிருக்குமே அது.

அந்தக் குடும்பம் கிளம்பிய அன்று திரு.டாங் லூலூவை தோட்டத்தில் பூட்டினார். எல்லோரும் மருத்துவமனைக்குப் போய் சிறுமியைக் கூட்டிக் கொண்டு நேரே விமான நிலையத்துக்குச் சென்று விட்டனர். இனி எப்போதுமே லூலூவைக் காண்பதற்கில்லை என்றறிந்த சிறுவர்கள் அழுதனர். மனத்தை உருக்கும் அதன் ஊளைச் சத்தத்தை அவர்கள் கேட்கவில்லை. கழுத்திலிருந்த உரோமங்கள் எல்லாமே உதிர்ந்து மறையும் வரை இழுத்து இழுத்து கயிற்றை அவிழ்த்துக் கொள்ளத் துடித்ததையும் அவர்கள் பார்க்கவில்லை. பிள்ளைப் பருவத்து நண்பனை விட்டுவிட்டு தூரப் பறந்து போனார்கள்.

குடும்பத்தினரை பைத்தியம் போலத் தேடியது. அதற்குப் பைத்தியம் தான் பிடித்து விட்டதென்று டாங் நினைத்தார். “எங்க கூட இருப்பல்ல லூலூ? ஒண்ணும் பிரச்சனையில்ல்ல்ல?”, என்றபடி அதன் முன்னங்காலைப் பிடித்துக் குலுக்க முயன்றபடியே இருந்தார்.

நாளடைவில் லூலூ அமைதியானது. ஒருநாள் காணாமல் போனது. ஆறு மாதங்களுக்குப் பிறகு, இறந்து போயிருக்கும் என்று எல்லோரும் நினைத்த சமயத்தில் டாங் வீட்டிற்கு வந்தது. அதனுடல் உரோமம் சாம்பல் வண்ணமாகியிருந்தது. சில இடங்களில் திட்டுத்திட்டாக அதன் உட்தோல் வெளித்தெரிந்தது. கழுத்துப் பட்டையைக் காணோம். அதன் இடத்தில் இன்னொரு மாநிலத்தைக் குறித்த வட்டு ஒன்று கட்டப்பட்டிருந்தது. புதிரை அவிழ்க்கும் முயற்சியில் எங்கெங்கோ திரிந்திருக்கிறது.

லூலூவால் எழுத மட்டும் முடிந்திருந்தால், வெயில், பனி, மழை என்று பாராது ஆறுகள், காடுகள், மலைகளில் பல சவால்களைச் சந்தித்துத் திரிந்த தன் பயணத்தைக் குறித்து எழுதியிருக்கும். எப்படி அடிக்கப்பட்டும் கட்டப்பட்டும் துன்புறுத்தப்பட்டது என்று எழுதியிருக்கும். எப்படியோ தப்பி மலை மேல் இருந்த மடாலயத்தை அடைந்தது, அங்கேயும் தன் அன்பிற்குரியவர்கள் இல்லாததால் மீண்டும் வந்த வழியே திரும்பி டாங் வீட்டிற்கு வந்தது என்று எல்லாவற்றையும் எழுதியிருக்கும். ஒருவேளை, தன் இதயத்திற்குள்ளிருந்த புதிருக்கான விடையைக் கண்டுபிடிக்கும் வெறியில் வெளியுலத் துயரங்களைப் பற்றி எழுதாமலே இருக்க முடிவெடுத்திருக்குமோ என்னவோ. போகும் போதும் திரும்பி வரும் போதும் லூலூ சந்தித்த துயரங்கள் பலப்பல. திரும்பி வந்ததே அதன் அன்பிற்கினியவர்கள் செய்து விட்டுப் போயிருந்த ஏற்பாட்டில் குளறுபடியேற்படக் கூடாது என்ற எண்ணத்தில் தான். அதன் இதயத்தில் என்ன தான் ஓடியதென்று ஒரு மனிதனும், ஏன் ஒரு நாயும் கூட உணர முடியாது.

டாங் குடும்பத்தினர் லூலூவின் நடவடிக்கைகளைக் கவனித்தனர். அதற்கு அருவியைக் காண்பதில் ஏன் இத்தனை வெறி என்று தான் அவர்களுக்குப் புரியவில்லை. அடிக்கடி அங்கே போய் அருவியின் முன்னால் உட்கார்ந்து கொள்ளும். விழும் நீரைப் பார்த்தபடி சோகமாக ஊளையிடும்.

(முற்றும்)

குறிப்பு : ஜோங் பூ எழுதிய ‘லூ லூ'(Lu Lu) என்ற இந்த சீன மொழிக் கதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் கிறிஸ்டோபர் ஸ்மித். இந்த ஆங்கில மொழிபெயர்ப்பின் அடிப்படையில் தமிழில் இக்கதை மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் குறிப்பு

சிங்ஹுவா பல்கலைக் கழகத்தின் வெளிநாட்டு இலக்கியப் பிரிவில் பட்டப்படிப்பை முடித்ததிலிருந்து ஜோங் பூ(Zong Pu) அயலக இலக்கியங்களை ஆய்வு செய்து தொகுக்கும் பணியாற்றினார். பெண் படைப்பாளியின் படைப்புகளிலிருக்கும் நேர்த்தியான, கவித்துவ மற்றும் ஆழம் மிகுந்த படைப்பு மொழி உள்ளிட்ட அனைத்துக் கூறுகளும் இவர் படைப்புகளில் காணக் கிடைக்கின்றன. 1957ல் அவரது, ‘செம்பயறு’ என்ற கதை அவருக்குப் புகழைக் கொணர்ந்தது. அதே நேரம், அரசியல் பிரசார சமயங்களில் விமரிசனங்களும் வந்தன. ‘கனவில் இனிய கீதம்’ என்ற சிறுகதைத் தொகுதி 1978ல் தேசிய விருதைப் பெற்றது. சமீப காலங்களில் ‘மூன்று தலைமுறைகளின் கல்’ என்ற குறுநாவல் உள்ளிட்ட பல சிறுகதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார்.