மைகெல் கானலி

அமெரிக்கா. இன்று குற்றப் புனைவுகளில் மிக சிறந்த படைப்புகள் ஸ்காண்டிநேவிய நாடுகளில் இருந்து வருகின்றன என்று இந்தத் தொடரில் குறிப்பிட்டு உள்ளேன். அதே நேரம், குற்றப் புனைவுகளில் பல்வேறு வகைமைகளில் உள்ள படைப்புகள் அமெரிக்காவில் தான் வருகின்றன. காவல் துறை விசாரணை, தொடர் கொலைகள், அரசியல் த்ரில்லர், அதிரடி சாகசக் குற்றப் புனைவுகள், சதிப் புனைவுகள் (conspiracy thrillers), தடய ஆய்வுப் புனைவுகள் (forensic crime fiction) என பல்வேறு வகை நூல்கள். இது தவிர, சிறு பதிப்பகப் பிரசுரங்கள் (indie crime) எனும் குற்றப் புனைவுகள், நிஜ நடப்புக் குற்றங்கள் (true crime) பற்றிய புத்தகங்கள் கூட உண்டு. டான் ப்ரௌன், ஜேம்ஸ் பாட்டர்ஸன் ஆகியோர் (Dan Brown, James Patterson) ஒரு புறம் இருந்தால், இன்னொரு பக்கம் டென்னிஸ் லெஹேன், ஜேம்ஸ் எல்ராய் (Dennis Lehane, James Ellroy) போன்றோரும் உள்ளனர், இன்னொரு பக்கம் பட்ரீசியா கொர்ன்வெல் (Patriicia Cornwell), கேத்தி ரைக்ஸ் (Kathy Reichs) உள்ளனர். வாசகருக்குப் பல தெரிவுகள் கிட்டுகின்றன.

அமெரிக்காவிற்கு குற்றப் புனைவுகளில் ஒரு நீண்ட பாரம்பரியம் உள்ளது. இந்த வகைப் புனைவுகளில் ஆரம்ப கால எழுத்துக்களில் முக்கியமானது எட்கர் ஆலன் போ- வின் (Edgar Allan Poe) ஆக்கங்கள். அவற்றில் காதிக் திகில் (gothic horror ) அம்சங்களே அதிகமிருந்தாலும், குற்றப் புனைவுகளின் கூறுகளை அதில் நாம் பார்க்கலாம். த மர்டர்ஸ் இன் த மோர்க் (The Murders in the Rue Morgue) எனும் சிறுகதை குற்றப் புனைவுகளில் முன்னோடியாகக் கருதப்படுகிறது. இதில் வரும் ட்யூபான் (Dupin) எனும் பாத்திரம், தொழில் முறை சாராத துப்பறிவாளர் பாத்திரங்களுக்கு (amateur detective) ஒரு முன்னோடி. ஆனால் போவை நாம் குற்றப் புனைவு அல்லது காதிக் திகில் என்ற வகைமைகளுக்குள் மட்டும் அடைத்து விட முடியாது.

இவரை அடுத்து இந்த துறையில் பாய்ச்சலை ஏற்படுத்தியவர்கள் இருவர். டாஷியல் ஹாமெட் (Dashiel Hammett) என்பவர் முதல் கட்டத் தாவலைக் கொணர்ந்தார், கடினக் குற்றப் புனைவு (Hard boiled crime fiction) என்ற வகைப் புனைவு ஹாமெட்டின் எழுத்து. தனியார் துப்பறிவாளராகப் பணியாற்றிய அனுபவங்களைக் கொண்டவர் ஹாமெட். ஒரு கட்டத்தில் உடல்நிலை மோசமாகியதால் ஹாமெட் எழுதுவதை நிறுத்தி விட, அந்த இடைவெளியில் நுழைந்த ரேமன்ட் சாண்ட்லர் (Raymond Chandler) ஹாமெட்டின் பாதிப்பு உள்ளவராதலால், அந்த மரபைத் தொடர்ந்தார். இவரும் கடினக் குற்றப் புனைவுகளை எழுதினாரென்றாலும், பொதுவகைப் படைப்பிலக்கியத்தின் நடைஉத்திகளைக் கடைப்பிடித்து குற்றவிலக்கியத்தில் ஒரு நுட்பச் சாய்வைக் கொணர்ந்தார்.

இருவரும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பிறந்து, இருபதாம் நூற்றாண்டின் முதல் பகுதியில் தங்கள் ஆக்கங்களை படைத்தனர். சாண்ட்லரின் ஃபிலிப் மார்லோ (Philip Marlowe) மற்றும் ஹாமெட்டின் ‘சாம் ஸ்பேட்'(Sam Spade), தனியார் துப்பறிவாளர் (private detectives) பாத்திரங்கள் குற்றப் புனைவுகளையும் தாண்டி அமெரிக்காவில் மிகவும் போற்றப்படும் நட்சத்திரங்கள் (iconic characters). இவர்களின் படைப்புகள் திரைப்படங்களாகவும் வந்து பெரு வெற்றி பெற்றிருக்கின்றன. எட் மக்பெய்ன் (Ed McBain) என்ற பெயரில் எழுதிய எவென் ஹன்டர் (Evan Hunter), காவல்துறை விசாரணை (police procedural) வகைமையின் முன்னோடிகளில் ஒருவர், இவருடைய ஆக்கங்களின் வெற்றி இந்த வகைமையை இன்னும் முன்னெடுத்துச் சென்றது. இந்த வகை ஆக்கங்களில் மிக முக்கிய எழுத்தாளர்களான மய் ஸுயோவால் (Maj SJoِwall), பெர் வாலூ (Per Wahlooِ) தம்பதியர் இதே காலகட்டத்தில் ஸ்வீடனிலிருந்து தங்களுடைய நாவல்களை எழுதிக் கொண்டிருந்தனர்.

குற்றப் புனைவுகள், அதிலும் காவல்துறை விசாரணை என்ற ஒரு உப பிரிவையே நாம் இந்தத் தொடரில் பார்த்து வந்தாலும், வெவ்வேறு நாடுகளில் எழுதப்படும் இந்த ஆக்கங்கள் தம்முள் சில வித்தியாசங்களைக் கொண்டுள்ளன. உதாரணமாக இங்கிலாந்திலும், அமெரிக்காவிலும் தொடர் கொலை (serial killing) பற்றிய புத்தகங்கள் ஒப்பீட்டளவில் அதிகம் எழுதப்படுகின்றன. இதற்கு சமூகக் காரணியும் உண்டு, இங்கிலாந்தில் ஜாக் த ரிப்பர் (jack the ripper), யார்க்‌ஷைர் ரிப்பர் (Yorkshire Ripper) போன்ற நிஜ வாழ்க்கைத் தொடர் கொலைகாரர்கள் இருந்தனர். ஜாக் த ரிப்பர் ஒரு தொன்மப் (mythical) பாத்திரமாகவே மாறி விட்டார். அதே போல் அமெரிக்காவில் டெட் பண்டி (Ted Bundy), க்ரீன் ரிவர் கில்லர் (Green River killer) போன்ற தொடர் கொலைகாரர்கள் உண்டு. இதனால் தான் நிஜக் குற்றம் (true crime) பற்றிய படைப்புகளும் இங்கு அதிகம் உள்ளன. ட்ருமன் கப்போட் (Trueman Capote) எழுதிய இன் கோல்ட் ப்ளட் (In Cold Blood) இதில் முக்கிய முன்னோடிப் புத்தகம், இன்றளவும் பேசப்பட்டு வருவது. இப்படி அதிக விபரீத குற்றங்கள் நடக்கக் காரணிகளாக உள்ள சமூகத் தூண்டுதல்கள் தனியாக ஆராயப்பட வேண்டியவை.

நாம் இங்கு பார்ப்பது குற்றப் புனைவுகளில் இந்த மாதிரி சம்பவங்களின் பாதிப்பை.

ஓப்பீட்டில் ஸ்காண்டிநேவியப்  புனைவுகளில் தொடர் கொலைகள் பற்றிய புனைவுகள் குறைவுதான். சமீப காலமாக இங்கிருந்து வரும் புனைவுகளிலும் இந்த அம்சம் அதிகரித்து வருவதை நாம் பார்க்கலாம், உதாரணமாக ஜோ நெஸ்போ (Jo Nesbo)நாவல்களிலும் இந்த மாறுதல் தெரியும். இன்னொரு உதாரணத்தையும் பார்க்கலாம். பொதுவாக அமெரிக்க, இங்கிலாந்தியப் புனைவுகளில் முக்கிய பாத்திரங்கள் விசாரணையின் போது கடுமையாக இருப்பார்கள் (aggressive). ஸ்காண்டிநேவியப் புனைவுகளிலோ விசாரிக்கப்படுபவர்கள் ஒப்பீட்டில், மேலான உரிமைகள் பெற்றவர்களாக இருப்பார்கள். அர்னல்டூர் என்பாரின் நாவல் ஒன்றில் போலிஸார் விசாரிக்கச் செல்லும் போது வீட்டிற்குள்ளேயே வர அனுமதிக்கப் படுவதில்லை, இத்தனைக்கும் விசாரிக்கப்படுபவர் ஒன்றும் அரசியல் செல்வாக்கோ, பண பலமோ உடையவர் இல்லை. இதை அமெரிக்கப் புனைவுகளில் பார்க்க முடியாது.[1]

ஒரு நாட்டின் படைப்புகளை படிக்க ஆரம்பிக்கும் போது, அதன் படைப்பு வரலாறையும் பார்த்தால், ஆரம்பத்திலிருந்து படைப்புகளில் நடந்துள்ள மாற்றங்கள் தெரிவதோடு, அவற்றில் உள்ள உப வகைகளும் தெரியவரும். மேலும் சில குறிப்பிட்ட வகை மாதிரிகள் (motif) அதிகம் இந்த படைப்புகளில் வரும் போது, அதன் காரணத்தையும் நாம் உணர முடியும்.

-o00o-

இந்த முறை, நாம் பார்க்கப்போகும் எழுத்தாளர் மைகெல் கானலி (michael connelly). கல்லூரி படிப்பின் போது ரேமன்ட் சாண்ட்லர் புத்தகங்களைப் படித்து குற்றப் புனைவுகளின்பால் ஈர்க்கப்பட்டார். பின்னாளில் சாண்ட்லரின் ‘பிலிப் மார்லோ’ பாத்திரம் தங்கி இருந்த அபார்மெண்டை விலைக்கு வாங்குமளவுக்கு சாண்ட்லர் மீது ஈடுபாடு கொண்டவர். அதனால் இதழியல் மற்றும் படைப்பெழுத்து (creative writing) இவற்றில் மேற்படிப்பு படித்து, பத்திரிக்கையாளராக ஃப்ளோரிடாவில் பணியாற்றத் தொடங்கினர். குறிப்பாக குற்றங்களைப் பற்றி செய்தி சேகரிக்கும் பணியில் இருந்தார் (crime beat). பின்னர் லாஸ் ஏஞ்சலீஸ் மாநகரத்தில் பணியாற்றினார். இந்தக் காலகட்டத்தில் தான் தன்னுடைய முதல் நாவலான ‘கருப்பு எதிரொலி’ (The Black Echo; 1992) எழுதினார். இதில்தான் அவருடைய புகழ் பெற்ற பாத்திரமான ஹையரானிமஸ் பாஷ் (‘Hieronymus “Harry” Bosch’) அல்லது ஹாரி பாஷ் அறிமுகமானார்.

இந்த வித்தியாசமான பெயரைத் தேர்வு செய்த காரணத்தை அவர் கூறுகையில், தான் இந்தப் பாத்திர உருவாக்கத்தில் எதையும் வீணடிக்காது இருக்க விரும்பியதைச் சொல்கிறார். பாத்திரத்தின் அனைத்து அம்சங்களும் பயன்பாடுள்ளவையாக இருக்க வேண்டும், அதில் அவருடைய பெயரும் அடங்கும் என்கிறார். தான் 15ஆம் நூற்றாண்டு சைத்ரிகரான ஹியரானிமஸ் பாஷ் (டச்சு உச்சரிப்பு இது) பற்றிக் கல்லூரியில் இருக்கையில் படித்ததாகவும், அவருடைய படைப்புகளில் பாஷ், மனிதரின் வன்முறை, சீரழிவு, மேலும் ஒழுக்கப் பிறழ்வுகளைப் பற்றிய விரிவான ஓவியங்களை விட்டுச் சென்றிருப்பதை அறிந்ததாகவும் தெரிவிக்கிறார். பாஷின் ஓவியங்களில் ‘புத்தி பேதலித்த ஒரு உலகம்’ காணப்படுவதாகவும், ஒன்றில் நரகமே சித்திரிக்கப்பட்டிருப்பதாகவும் சொல்கிறார். தன் கணனிக்குப் பின்னே சுவரில் அந்த ஓவியத்தின் ஒரு அச்சுப் பிரதி தொங்குவதைச் சுட்டி விட்டு, இந்த ஓவியங்களுடன், தற்கால லாஸ் ஏஞ்சலீஸ் நகரத்தைப் பொருத்திப் பார்ப்பதில் சில அபார ஒப்புமைகள் கிட்டுவதாகத் தான் உணர்ந்ததால், நரகம் போன்ற ஒரு நிலப்பரப்பில், லாஸ் ஏஞ்சலீஸ் நகரத்தில், பாஷை உலவ விடத் தீர்மானித்ததாகச் சொல்கிறார். [2]

இந்த தொடரில் நாம் பார்த்துள்ள அனைத்து எழுத்தாளர்களும் தங்கள் முக்கிய பாத்திரத்திற்கு அந்த பெயரை வைக்க ஒரு காரணம் வைத்துள்ளனர். கதைக்கு மட்டுமின்றி பெயருக்கு அவர்கள் முக்கியத்துவம் கொடுப்பதில், ஒரு வகையில் அந்த எழுத்தாளரின் தனித்தன்மை வெளிப்படுகிறது எனலாம்.

கானலி, ஹாரி பாஷ் பாத்திரத்தை வைத்துப் பல நாவல்கள் எழுதியிருக்கிறார் என்றாலும், பிற முக்கிய பாத்திரங்கள் கொண்ட தொடர் நாவல்களையும் எழுதி உள்ளார். நாம் இதுவரை இந்த தொடரில் பார்த்த எழுத்தாளர்களில் மிக அதிகமாக எழுதியவர் இவர் தான். இவரின் படைப்புகளை நான்காக பிரிக்கலாம்

a. ஹாரி பாஷ் என்ற லாஸ் ஏஞ்சலீஸ் நகர காவல் துறை (LAPD) அதிகாரி முக்கிய பாத்திரமாக வரும் தொடர் நாவல்கள்.

b. மைக்கல் ஹாலர் (Micheal Haller) என்ற லாஸ் ஏஞ்சலீஸ் நகர வழக்கறிஞர் முக்கிய பாத்திரமாக வரும் தொடர் நாவல்கள்.

c. ஜாக் மாக்எவாய் (Jack McEvoy) என்ற பத்திரிக்கையாளர் வரும் தொடர் நாவல்கள்.

d. தனி நாவல்கள் (stand-alone novels)

இவர் நாவல்களில் உள்ள ஒரு சிறப்பம்சம், சட்டச் செயல்முறைகள் (legal process), விசாரணை நடைமுறைகள் பற்றிய விவரிப்புகள். பொதுவாக குற்றப் புனைவுகள் விசாரணை, அதன் இறுதியில் குற்றவாளி கைது என்று முடியும். ஆனால் இவர் நாவல்களில் நாம் அதிகம் அறியாத விசாரணை நடைமுறைகள் பற்றி குறிப்புகள் இருக்கும். உதாரணமாக சம்பவ புத்தகம் (incident book ). இந்த புத்தகம் விசாரணை அதிகாரி வைத்திருப்பது, இதில் குற்றம் முதலில் அவர் கவனத்துக்கு வந்தது முதல், விசாரணையின் ஒவ்வொரு அடியையும் குறித்து வைப்பார். அதே போல் குற்றவாளி கைது செய்யப்பட்ட பின் நடக்கும் விசாரணை பற்றியும் துல்லிய விவரிப்பு இருக்கும். இது ‘ஹாலர்’ வரும் நாவல்களில் மட்டும் அல்ல, பிற நாவல்களிலும் வரும். உதாரணமாக ஒரு நாவலில், ஹாரி விசாரணையின் போது சாட்சி சொல்ல வேண்டும். அதற்கு அவர் தன்னை தயார் செய்வது, நடுவர் குழு (Jury) முன் அவர் உடல் மொழி எனச் சின்ன சின்ன விஷயங்களும் நேர்த்தியாக அமைந்திருக்கும். ஹாரி தன் உடல்மொழி நம்பிக்கை அளிப்பதாகவும், அதே நேரம் திமிராகத் தெரியாதவாறும் நடந்து கொள்கிறார், வழக்கறிஞரின் கேள்விக்குப் பதிலளித்து விட்டு நடுவர் குழுவின் பார்வையை நேராக சந்திப்பது நன் மதிப்பை, நம்பிக்கையை விதைக்கும் என்று அவ்வாறு செய்கிறார். இதில் மனித உளப்பாங்கு நீதி விசாரணைகளில் செயல்படும் விதம் கவனிக்கப்படுகிறது.

அதோடு ஒரு போலிஸ் அதிகாரி நீதியை நிலை நிறுத்தத் தான் உழைப்பதன் பலனை அடைய வெறுமனே தன் வேலையை நன்கு செய்தால் போதாது, சமூக உறவுகளில் உளநிலைகளை நுட்ப உணர்வுடனும் அணுக வேண்டிய அவசியமுண்டு என்பதையும், வாழ்வின் எதார்த்தம் நீதியின் பாலுள்ள அதிகாரிகளையும் கடைசி வரை போராட வைக்கிறது என்பதையும் சுட்டுகிறது. இதையே நன்கறிந்த குற்றவாளிகளும் இதே போன்ற உத்திகளைப் பயன்படுத்தி மக்களாலான நடுவர் குழுவினரை (ஜூரி) எப்படி வளைக்க முடியும் என்பதையும் நாம் யோசிக்க வைக்கிறது.

ஒரே நாவலில் இவரின் இரண்டு முக்கிய பாத்திரங்கள் வருவது ஒரு சிறப்பம்சம். உதாரணமாக ஒரு நாவலில் ஹாரி மற்றும் ஹாலர் இருவரும் இணைகின்றனர், இன்னொன்றில் ஹாரி மற்றும் ஜாக் இணைகின்றனர். இதை இரண்டு மூன்று நடிகர்கள் சேரும் சூப்பர்-ஹீரோ படம் போலவோ, பெரும் வசூலுக்கான படங்களைப் போல எண்ணக்கூடாது. கதையின் போக்கில் இவர்கள் இணைவதற்கு ஒரு காரணம் இருக்கும். இந்த முக்கிய பாத்திரங்கள் அனைவரும் ஒரே நகரில் இருப்பதால், அவர்களுடைய துறைகளும் ஒன்றுடன் ஒன்று இணையக்கூடியதாக இருப்பதால் இவர்களின் இணைவு சாத்தியமே. காவல்துறை அதிகாரி-வழக்கறிஞர், காவல்துறை அதிகாரி-பத்திரிக்கையாளர் என்று துறைகள் சந்திப்பது இயல்பு தானே. மேலும் இந்த நாவல்களில் இருவரும் சமமாக வருவார்கள் என்று சொல்ல முடியாது, ஒரு சிறு பகுதியில் மட்டுமே ஒரு பாத்திரம் வரும், இன்னொரு பாத்திரம் தான் முக்கிய பங்கு வகிக்கும். உதாரணமாக ஒரு வழக்கின் போது ஹாரி-ஜாக் சந்திக்கலாம், ஜாக் விசாரணை பற்றி தெரிந்து கொள்ள விரும்பலாம், அது பற்றி சில நடவடிக்கைகள் எடுக்கலாம், ஆனால் ஹாரி தான் அந்த நாவலின் நாயகர், அவர் தான் குற்றவாளியை கண்டுபிடிப்பது.

குற்றங்கள் அதை விசாரிப்பவர்கள் மீது ஏற்படுத்தும் தாக்கம் முன்னிலைப்படுத்தப்படுவது இதன் இன்னொரு அம்சம். தான் நேரில் கண்ட ஒரு சம்பவம் இதை தூண்டியதாக கூறுகிறார். நாவல் எழுதுவதற்காக, காவல்துறையின், விசாரணையின் நெளிவு சுளிவுகளை அறிந்து கொள்ள அவர் அப்போது ஒருஅதிகாரியுடன் நிறைய நேரம் செலவழித்துக்கொண்டிருந்தார். இது குறித்து அவர் சொல்வதன் சுருக்கம் :

இளம் பத்திரிகை நிருபரான அவர் ஒரு துப்பறிவாளரை உடன் தொடர்ந்து கொண்டிருந்தார், சார்ஜெண்ட் ஹர்ட். அவர் பெயர். குற்றம் நடந்த ஒரு இடத்தில், சா. ஹர்ட், உடலுக்கருகில் குந்தி அமர்வார். அப்போது அவர் தன் மூக்குக் கண்ணாடியின் காதிலணியும் பாகங்களைத் தன் வாயில் பிடித்துக் கொள்வார். கானலிக்கு இதற்கு என்ன பொருள் என்று தெரியாவிட்டாலும், அந்தத் துப்பறிவாளர் அந்தக் குற்றங்களை தன் வாழ்வில் நடந்த ஒன்றாக உணர்ந்து பார்க்கிறார் என்று மட்டும் புரிந்ததாம்.

சில சமயம் சா.ஹர்ட் இரவு பூராவும் வேலை செய்ய வேண்டி வரும். ஒரு சமயம், முழுதும் ஓய்ந்து போன சா.ஹர்ட்டிடம், தன்னைக் கூடவே வந்து கொண்டிருக்க அனுமதித்ததற்காக, இளம் நிருபர் (கானலிதான் அது) அவரிடம் நன்றி சொல்கையில், சா. ஹர்ட் கண்ணாடியைக் கழற்றி பின் மேஜையில் வைத்து விட்டு, கண்களை மெல்லத் தடவிக் கொண்டாராம். அதைப் பற்றி கானலி சொல்கிறார், “காதுகளுக்கான அந்தப் ப்ளாஸ்டிக் பாகத்தில் ஆழ்ந்த பள்ளம் தெரிந்தது. அது புரிந்து பளீரிட்ட கணம், முன்னரே நான் பார்த்த போது எனக்குப் புரிந்திருக்க வேண்டும். எனக்கு திடீரென்று புரிந்தது, அந்த துப்பறிவாளர், ஏனோ அகாலச் சாவுக்குப் பலியானவர்களின் உடல்களை ஆராயும்போது, அந்தக் கண்ணாடிகளின் காதுப் பாகங்களை அத்தனை இறுகிக் கடித்துக் கொண்டிருந்திருக்கிறார். ”
“அவர்களின் உள் உலகில் நிறைய நடந்தது என்று எனக்குத் தெரிந்திருந்தது. நாவல் எழுத நான் முதல் தடவை முயன்ற போது, அதைத்தான் நான் கவனிக்காது விட்டிருந்தேன். அவர்களின் உள் உலகத்தை, உள்ளே அவர்கள் கொடுத்த விலையைக் கவனித்திருக்கவில்லை. உங்கள் வேலை நிமித்தம், மனித இனத்தின் இருண்ட மூலைகளுக்கு நீங்கள் போக வேண்டி இருந்தால், அந்த இருட்டு உங்களுள்ளும் கசிந்து விடாமல் எப்படித் தடுக்க முடியும் உங்களால்?”[3]

இந்த அம்சம் மிக அழுத்தமாக வெளிப்படுவதும் ‘கவிஞன்’ (The Poet) என்ற நாவலில். பரபரப்பு, சுவாரசியம் என்ற அளவில் இவருடைய மிக சிறந்த நாவல் இது. ‘ஜாக்’ இதில் முக்கிய பாத்திரம். சீட்டின் நுனிக்கு வந்தோம், இதயம் படபடத்தது போன்ற உளுத்த விவரணைகள் அனைத்தும் இந்த நாவலுக்குப் பொருந்தும். தர்க்க ரீதியாகச் சில குறைகள் இருந்தாலும் நாவலைப் படிக்கும் போது நமக்குப் புலப்படாமல் போகும், அதன் வேகத்தில் நாமும் சென்று கொண்டிருப்போம். வழக்கமான தொடர் கொலை என்றில்லாமல் இதை வேறுபடுத்துவது இதில் வரும் தீமை எனும் உருவகம் தான். இதில் குற்றவாளி தீமை என்பதின் ஒரு வகை உருவத்தை, அந்த வகையின் மனநிலையாக நமக்கு காட்டப்படுவார். இதில் உடல் ரீதியான வன்முறை என்பது அதிகம் இல்லை, இங்கு தீமை என்பது குற்றத்திற்கான காரணம, அது செயல்படுத்தப்படும் தந்திரமான முறை (diabolical) இவை தான் நம்மை பதற்றம் கொள்ள செய்கின்றன. இது தான் இந்த நாவலின் அடித்தளம். நாவலில் வரும் குற்றவாளி வேட்டை, திருப்பங்கள் இவை அனைத்தும் இந்த தீமையைச் சுற்றி வளைக்கும் காவல் துறையின் எத்தனங்களின் மேல் எழுப்பப்படும் கட்டிடமாகும். நல்ல குற்றப் புனைவுக்கு, அதிக ரத்தம், வன்முறை இவற்றை விட குற்றத்தின் கருத்தாக்கம், குற்றப் பின்னணியின் மனநிலை இவை தான் முக்கியம் என்பதை இந்த நாவல் மீண்டும் நிரூபிக்கின்றது.

இந்த நாவலின் தொடர்ச்சியாக தி நேரௌஸ் (The Narrows) என்ற நாவல் வந்தது. ‘கவிஞன்’ நாவல் அளவுக்கு இல்லையென்றாலும், இதுவும் சுவாரஸ்யமான நாவலே. இதைத் தொடர்ந்து மூன்று வருடம் முன்பு ‘ஜாக்’ மீண்டும் தோன்றிய த ஸ்கேர்க்ரௌ (‘The Scarecrow) நாவல் இவருடைய நாவல்களில் நான் படித்ததிலேயே மோசமானது.

லாஸ் ஏஞ்சலீஸ் நகரம் தான் இவரின் பெரும்பான்மையான கதைகளுக்கான களம்.  லாஸ் ஏஞ்சலீஸ் என்றவுடன் ஹாலிவுட், சினிமா நட்சத்திரங்கள், கொழிக்கும் பணம், பகட்டு இவை நம் நினைவுக்கு வருவன. இவரின் நாவல்கள் இதன் இன்னொரு பக்கத்தைப் பார்கின்றன. மிக பெரிய பணக்காரர்கள், நட்சத்திரங்கள் முதல் சந்து பொந்துவாசி ஏழைகள், போதைப் பொருள் விற்பவர்கள் என அனைவரையும் இந்த நாவல்கள் நமக்கு காட்டுகின்றன. வெளிப்பகட்டுக்கு பின்னால் இருக்கும் சோகமும், வன்முறையும் நமக்கு தெரிய வருகின்றன. கானலி இந்த நகரை மிகவும் நேசிக்கிறார்- லாஸ் ஏஞ்சலீஸ் நகரை நான் நரகம் போன்றது என்று கருதவில்லை. சில பகுதிகளில், சில நேரங்களில் அப்படி இருக்கலாம்- அங்குதான் ஹாரி பாஷை நான் பொருத்துகிறேன். ஒட்டு மொத்தமாகச் சொன்னால், நான் லாஸ் ஏஞ்சலீஸ் நகரை நேசிக்கிறேன், அதைப் பற்றி எழுதுவதையும் மிக விரும்புகிறேன்.'[4]

ப்ளூ நியான் நைட் (Blue Neon Night) என்ற ஆவணப்படம் டிவிடி இவரால் வெளியிடப்பட்டுள்ளது. இதில் லாஸ் ஏஞ்சலீஸ் பற்றியும், அதற்கும் தனக்கும் உள்ள உறவை பற்றியும் விளக்குகிறார். இந்த ஆவணப்படத்தின் காணோளியை இங்கு காணலாம்.

இந்த இடத்தில் இயன் ரான்கின் எடின்பரோ (Edinburgh) நகருக்காக உருவாக்கிய பயன்பாட்டுப் பட்டியலை ஞாபகம் கொள்ளலாம். நாவலின் பரப்பில், மாநகருக்கும், எழுத்தாளருக்கும் உள்ள உறவின் முக்கியத்துவமும், அதனால் நாவல் எப்படி மெருகேறுகிறது என்பதும் நமக்கு புரிய வருகின்றன. எடின்பரோ (Edinburgh) அல்லது  லாஸ் ஏஞ்சலீஸ் இல்லாமல் இவர்களின் நாவல்களை நம்மால் யோசிக்க முடியாது. பொதுவாகவே, பெருநகரங்களும் குற்ற நாவல்களும் ஒன்றை ஒன்று தாங்கிப் பிடிக்கும் உறவு கொண்டவையாக இருப்பதை குற்ற நாவல்களின் வரலாற்றுத் துவக்கத்திலிருந்தே நாம் காண முடியும்.[5]

இந்த கட்டுரைத் தொடரில் நாம் பார்த்த முக்கிய பாத்திரங்களுக்கு சில பொது அம்சங்கள் இருந்தாலும் (தனிமை விரும்பிகள், அதிக மதுப் பழக்கம் உடையவர்கள், அதிகாரத்திற்கு கட்டுப்படாதவர்கள் போன்றவை) ஒவ்வொரு எழுத்தாளரும் சில நகாசு வேலைகளால் அதில் தங்கள் தனித்துவத்தை கொண்டு வருகின்றனர். இந்தப் பாத்திரங்களை எடுத்துக்கொண்டால் நமக்கு முக்கியமாகத் தெரிவது அவர்களுக்கு உள்ள சுயநலம். இங்கு சுயநலம் என்பது மற்றவர்கள் பாதிக்கப்பட்டு அதனால் இவர்கள் நன்மை அடைவதல்ல, மாறாக ஒரு காரியத்தை செய்யும் போது அதற்குரிய பலன் தனக்கு கண்டிப்பாக கிடைக்க வேண்டும் என்று இவர்கள் நினைப்பதுதான். உதாரணமாக ஒன்றை பார்ப்போம். ‘ஜாக்’ ஒரு நாவலில் துணைப் பாத்திரம். அதில் நடக்கும் நீதிமன்ற விசாரணை பற்றி சில முக்கிய தகவல்கள் சேகரித்து தன் பத்திரிகையில் வெளியிடுகிறார். இது விசாரணையை பாதிக்காதா என்றால், பத்திரிக்கையாளனாகத் தான் அதை செய்துதான் ஆக வேண்டும் என்கிறார். பொதுவாக இந்த மாதிரி சூழ்நிலையில், தனக்கு பாதகமென்றாலும் செய்தியை வெளியிடாமல் இருக்க ஒப்புக்கொள்வதாகக் கதை செல்லும். ஆனால் இதில் அப்படி இல்லை. அதே போல் ‘ஜாக்’ முக்கிய பாத்திரமாக வரும் நாவல்களில் அவர் குற்றவாளியை பிடிப்பதோடு, அதைப் பற்றிய முதல் செய்தி (scoop) தானே வெளியிட வேண்டும் என்று முயல்வார், அதை ஒரு நிபந்தனையாகக் கொண்டே காவல் துறைக்கு உதவுவார்.

ஹாரி பாத்திரத்தில் ஃபிலிப் மார்லோ போன்ற கடுமையான குற்ற நாவல் வகைப் (hard-boiled genre) பாத்திரங்களின் அம்சம் உண்டு. சற்றே திமிர் தனம் கொண்ட செயல்/நடை (swagger), தன்னை, தன் தொழில்-வாழ்க்கையை தானே அழித்துக்கொள்ளும் மனப்பாங்கு (self-destructive streak) போன்றவை ஹாரியிடம் உண்டு. அதே நேரத்தில் அவரின் மனதின் மென்மையும் வெளிப்படும் தருணங்கள் உண்டு. அத் தொடரின் ஆரம்பத்தில் ஹாரி தனி ஆளாக இருந்தாலும், பின்னர் ஒரு பெண்ணிடம் உறவு ஏற்பட்டுத் தந்தையாகிறார். அந்த குழந்தைக்கும் ஹாரிக்கும் உள்ள உறவின் மீது நாவல்கள் கவனம் செலுத்துகின்றன.(இந்த அம்சங்களை ஜொ நெஸ்போவின் ஹாரி ஹோல் (Harry Hole)பாத்திரத்திலும் காணலாம். ஸ்காண்டிநேவிய நாடுகளின் சமீபத்திய குற்றப் புனைவு நட்சத்திரமான நெஸ்போவிடம் அமெரிக்கp புனைவுகளின் தாக்கம் அதிகம் உண்டு, இவரின் பாணி அதனால் மற்ற ஸ்காண்டிநேவிய எழுத்தாளர்களான மான்கெல், ஹகன் நாஸர் போன்றோரிடம் இருந்தும், பொதுவான ஸ்காண்டிநேவிய பாணியிலிருந்தும் வேறுபட்டது.)

ஹாரி பாஷ் வேலையிலிருந்து ஒரு முறை விலகுகிறார். பிறகு கிடப்பில் போடப்பட்ட குற்றங்கள் (cold cases) எனக் குறிப்பிடப்படும் குற்றங்களை விசாரிக்கும் பிரிவில் மீண்டும் சேர்கிறார். காவல்துறை ஒரு குற்றம் குறிப்பிட்ட ஆண்டுகள் வரை தீர்வு காணப்படாமல் இருந்தால் அதை முனைந்து விசாரிப்பதை நிறுத்தி விடும். அந்த வகைக் குற்றங்களுக்குத் தீர்வு கண்டுபிடிப்பதே ஹாரி மீண்டும் சேரும் துறையின் பணி. தடயவியல் தற்போது மிகவும் முன்னேறி உள்ளதால் நிஜத்திலும் இப்படி தனிப் பிரிவுகள் உள்ளன.
ஹாரி விருப்ப ஒய்வு பெற்று தனியார் துப்பறிவாளராக பணியாற்றினாலும் அதை அவர் அதிகம் விரும்பவில்லை, காவல்துறை வேலையைத்தான் அவர் மனம் நாடுகிறது, எனவே தான் இன்னொரு வாய்ப்பு வந்தது அவர் மீண்டும் பணியில் சேர்கிறார்.

தான் விசாரிக்கும் வழக்குகளால் தனிப்பட்ட முறையிலும் ஹாரி பாதிக்கப்படுகிறார். அதை அவர் வேண்டுமென்றே சுயநினைவோடு செய்கிறார். அவ்வாறு ஒரு வழக்கோடு தனிப்பட்ட உறவு ஏற்பட்டால் தான் விசாரணையை விடாப்பிடியாகத் தொடர்ந்து நடத்தி இறுதி வரை செல்ல முடியும் என்பது ஹாரியின் கருத்து. இதனால் அவர் தான் தனிப்பட்ட வாழ்வில் மட்டுமின்றி, தான் பணி சார்ந்து பாதிப்படைந்தாலும் அப்படி நடந்து கொள்வதை விடுவதில்லை.

கானலி இன்னும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருப்பதால், அவரின் முக்கிய பாத்திரங்களின் போக்கில்/வாழ்கையில் இன்னும் பல மாற்றங்கள் வரக்கூடும். அதை பற்றி தனக்கேச் சரியாகத் தெரியாது என்று ஹாரியின் வாழ்க்கை பற்றி கேட்கும்போது கூறுகிறார். ‘முன்கூட்டி அதிகம் திட்டமிடுவதில்லை. நான் ஒவ்வொரு புத்தகத்திலும் வழக்கமாகச் சில விஷயங்களைத் தீர்வின்றி தொங்கலில் விடுகிறேன், பிற்பாடு அவற்றை அடுத்த புத்தகத்திலோ அல்லது அதற்குப் பின்னே வரும் ஏதாவதொரு புத்தகத்திலோ எடுத்துக் கொள்வேன். ஆனால் நான் அதிகம் தொலைதூரம் யோசிப்பதில்லை. (ஹாரியின்) எதிர்காலம் பற்றி முன்கூட்டி யோசிக்காததால் என்னால் அவரைப் புத்துணர்வோடு அணுக முடிகிறது, தொடர்ந்து தற்காலத்துக்குப் பொருத்தமாக எழுத முடிகிறது,’ [6]

இவர் நாவல்களின் சம்பவங்கள் சில நேரம் தொடர்ந்து வருவதால் இவற்றை வெளி வந்த வரிசை முறையிலேயே படிப்பது சிறந்தது. ஆனால் இவர் அதிகமாக நாவல்கள் எழுதி உள்ளதால் அனைத்தையும் அப்படிப் படிப்பது கடினம். சில நாவல்களை மட்டுமாவது வரிசையாக படிக்கலாம். அதில் நான் பரிந்துரைப்பது கீழே உள்ளது.

ஜாக்/ஹாரி வரும் சில நாவல்களை அந்த வரிசையில் படிப்பது தான் சிறந்தது, அதாவது

– த போயட் (The Poet)
– த நேரௌஸ் (The Narrows)
– ஸ்கேர்க்ரௌ (Scarecrow)

இதைத் தவிர எ டார்க்னெஸ் மோர் தான் நைட் (A Darkness More Than Night), பளட் ஒர்க் (Blood Work) நாவல்களை வரிசையாக படிக்கலாம். இதில் ப்ளட் ஒர்க் மற்றும் த நேரௌஸ் நாவல்களுக்கிடையே சிறு தொடர்புள்ளது. ‘Blood Work’ காலத்தால் முந்தியது, ஆனால் அது ‘The Narrows’ நாவலின் முக்கிய இழையை பாதிப்பதில்லை.

ஸ்காண்டிநேவிய புனைவுகளிருந்து சற்று வேறுபட்டும், அமெரிக்க விறுவிறு குற்றபுனைவுகளுக்கும் ஒரு மாற்றாகவும் இவரின் எழுத்துக்களை படிக்கலாம்.

குறிப்புகள்

1. அமெரிக்காவிலும் போலிசார் தக்க உரிமையை ஒரு நீதிபதியிடமிருந்து பெற்றிருந்தாலொழிய யாருடைய வீட்டுக்குள்ளும் நுழைய முடியாது என்பது சட்டம். சட்டம் எப்போதும் பின்பற்றப்படுவதில்லை என்பது எதார்த்தம். அமெரிக்காவில் தனி மனிதர்களிடையே நிறைய ஆயுதங்கள் – குறிப்பாகத் துப்பாக்கிகள்- புழங்குவதால் போலிசார் ஒரு புறம் ஜாக்கிரதையாகவும், இன்னொரு புறம் கடுமையாகவும் இருக்க வேண்டி வருகிறது. இதையே நாவல்களும் சித்திரிக்கின்றன. யூரோப்பில் தனி மனிதர்களிடையே துப்பாக்கிகள் வைத்திருப்பது அத்தனை கிடையாது என்பதோடு, துப்பாக்கிகளுக்கெதிரான மனநிலையும் சமூகத்தில் பரவலாக உள்ளதால், போலிசாருக்கு வீடுகளில் நுழைந்து விசாரிக்க அத்தனை அவசர அவசியம் இருப்பதில்லை என்பது ஒரு சமூகக் காரணி. தனிமனித அந்தரங்கம், குடிமக்களுக்கிருக்கும் சுதந்திரம் ஆகியன யூரோப்பில் சட்ட வழியே கூடுதலாகப் பாதுகாக்கப்படுவதாக ஒரு கருத்து பரவலாக நிலவுகிறது, இது எத்தனை சரி என்பதைச் சட்ட வல்லுநர்களும் அரசியலியலாய்வாளரும்தான் கலந்தாலோசித்து முடிவு செய்ய வேண்டும். இன்றளவில் இரு நிலப்பகுதிகளில் மக்களின் குடியுரிமைகளின் தன்மை குறித்த தெளிவான ஒப்பீட்டு ஆய்வு முடிவுகள் இன்னும் கிட்டவில்லை என்றுதான் சொல்லலாம்.

2. இது அவருடைய வார்த்தைகளில்: “The main reason is that when I approached the creation of this character I didn’t want to waste anything. I wanted all aspects of his character to be meaningful, if possible. This, of course, would include his name. I briefly studied the work of the real Hieronymus Bosch while in college. He was a 15th century painter who created richly detailed landscapes of debauchery and violence and human defilement. There is a “world gone mad” feel to many of his works, including one called Hell — of which a print hangs on the wall over the computer where I write. I thought this would be the perfect name for my character because I saw the metaphoric possibilities of juxtaposing contemporary Los Angeles with some of the Bosch paintings. In other words, I was planning to cast my Bosch adrift in a hellish landscape of present-day Los Angeles.”

3. அந்த சம்பவம் குறித்த ஆங்கிலப் பகுதி இது: “At a crime scene, the detective he was shadowing, Sgt. Hurt, always took time to squat down next to the body. At such moments, he would put the earpiece of his glasses in his mouth. Connelly didn’t know what it meant, but it was apparent that the detective took the murders personally in some way.

Some of the cases required Hurt to work through the night and he was exhausted when the young reporter went to thank him for allowing him to tag along for the week. The detective took off his glasses behind his desk and rubbed his eyes.

“I could see that there was a deep groove in the plastic earpiece and that was a killer moment, a very telling moment, a moment I had to have seen,” Connelly said. “I suddenly realized that his teeth were clenched so tight studying these victims that he was cutting into his glasses.

“I knew there was a lot of internal world there, a lot of internal things going on,” he continued. “And in my first efforts at writing novels that’s what I was missing – the internal world, the internal cost. If your job takes you to the dark corners of humanity, murder scenes, how do you keep any of that darkness from getting inside of you.”

4. “I do not consider Los Angeles to be hellish. It can be in certain places and under certain circumstances — and this is where I place Harry Bosch. But overall I love Los Angeles and love writing about it. ”

5. காட்டாக, கொனன் டாயிலின் ஷெர்லாக், லண்டன் நகருக்கு புறத்தே அடிக்கடி பயணம் செய்பவராக இருந்தாலும், அவருடைய இயக்கக் களம் பெரும்பாலும் லண்டன் நகர்தான், அந்நாவல்களில் அதிகமும் லண்டன் நகரின் களமே விவரணையாகவும், கதைக்கருவுக்குக் காரணமாகவும் அமையும் என்பதையும் நாம் காணலாம்.

6. “Not a lot is planned ahead. I usually have a few loose threads dangling from one book that I can then take to the next or even one further down the line. But I don’t think a lot ahead. I think that by not planning his future out I have a better chance of keeping him fresh and current and more reflective of the moment. ”

(தொடரும்)