மகரந்தம்

யூரோப்பிய நாடுகளில் ஊழல் – 1

இந்தச் செய்தியில் ஒரு வரி குறிப்பிடத் தக்கது. ஊழல் என்பது ‘போப்பைப்’ பின்பற்றும் நாடுகளில்/ அரசுகளில் துவங்கியது என்றே எழுதுகிறார் கட்டுரையாசிரியர். நம் நாட்டை ஆளும் சிலர் இந்த போப்பிய நாடுகளில்தான் வளர்ந்து வந்தவர்கள். இந்தியாவில் ஊழல் என்பது அரசளவில் பெருத்துக் கொண்டே போக இந்த சிலரே காரணம் என்று வாதிடுவது அல்ல இங்கு நோக்கம். இந்தியர்களுக்கு ஊழலை வேறு யாரும் சொல்லிக் கொடுக்கத் தேவை இல்லை. இருந்தாலும் தலையே புற்று நோயால் பீடிக்கப்பட்டால், உடலென்ன வாழும்? இங்கு கட்டுரையாசிரியர் தெற்கு யூரோப்பில் அப்படி ஒரு ஊழல், அரசு ஸ்தம்பித்துப் போயிருக்கிறது என்று எழுதுகிறார். தெற்கு யூரோப் என்பது ஸ்பெயின், இத்தலி, க்ரீஸ், போர்ச்சுகல் போன்ற மத்திய தரைக் கடல் பகுதிகளில் உள்ள, சற்று உஷ்ணமான பகுதிகளைக் குறிக்கும். கட்டுரை குளிர்ப் பிரதேசமும், மஞ்சள்/ வெண் முடி, நீலக் கண் அதிகம் கொண்டவருமான மக்கள் வாழும் பகுதியிலிருந்து பார்ப்பவரின் கோணலான பார்வையில் எழுதப்பட்டது என்று நாம் கருத இடமிருக்கிறது. இருந்தாலும் வெற்றி பெற்றவருக்குத் தம் வெற்றியின் காரணங்களை வைத்து தோற்றவரை விமர்சிக்கத் தோன்றுவது இயல்புதானே?

http://www.spiegel.de/international/europe/southern-europe-plagued-by-corruption-and-political-mismanagement-a-847229.html

யூரோப்பிய நாடுகளில் ஊழல் – 2

முந்தைய குறிப்பில் தென் யூரொப்பிய நாடுகளில் எப்படி பெரும் ஊழல் அரசுகளை ஸ்தம்பிக்க வைக்கிறது என்று பார்த்தோம். அப்படி ஒரு செயலற்ற அரசு இருந்தால், நாட்டில் ஏற்கனவே என்ன வளம் இருந்தாலும் முன்னேற்றமும் இராது, மக்கள் வாழ்வில் மலர்ச்சியும் இராது. இதெல்லாம் இல்லாது போனால் முதலீடு செய்பவர்களுக்கு அங்கு தொடர்ந்து தம் முதலீட்டை வைத்திருக்க எந்த ஊக்கமும் இராது. தவிர யூரோப்பில் பொதுவாகவே மக்கள் தொகை அதிகரிப்பும் கிடையாது. பின் என்ன ஊக்கம் இருக்கும் மேன்மேலும் முதலீட்டை அங்கு செய்ய? இதனாலும், சமீபத்தில் சில நாடுகளில் முன்பிருந்த அரசுகள் கவிழ்ந்து புதிதாகப் பதவியேற்ற கட்சியினர் வருமான வரியை அதிகரிக்கவோ, அல்லது சரியாக வசூலிக்கவோ செய்வோம் என்றெல்லாம் அறிவித்தது அந்நாடுகளில் இருந்து பெருமுதலியத்தை ஓட்டம் பிடிக்கச் செய்திருக்கின்றன. முதலியத்துக்கு வரி என்றாலே அலர்ஜி. அதுவும் மக்கள் நலனுக்காக வரி உயர்வு என்றால் முதலியத்துக்கு இரட்டை அலர்ஜி. மக்கள் வாழ்வு முன்னேறுவதில் முதலியத்துக்கு ஒரு ஈடுபாடும் இல்லை, தன் பொக்கிஷத்தை மேன்மேலும் பெருக்குவதைத் தவிர வேறெதிலும் முதலியத்துக்கு நாட்டமும் இல்லை, தவிர வரி என்பதைச் சரிவரப் பயன்படுத்தும் அரசுகள் இனிமேல்தான் கட்டப்பட வேண்டும். உலகில் உள்ள அனேக அரசுகள் அரசியல் வாதிகள், அதிகாரிகள் ஆகியோரின் ஊழல் கூட்டணியால் சுரண்டப்படும் நிறுவனங்கள். எனவே முதலியத்துக்கு வரி கொடுப்பதில் அவநம்பிக்கை இருப்பதில் ஆச்சரியம் என்ன?

இந்த தென் யூரோப்பிய நாடுகளில் இருந்து முதலீடு பெருமளவில் வெளியே ஓடிப் போய்க் கொண்டிருக்கிறதாம். ஒப்பீட்டில் இந்தியாவில் இன்னும் முதலீடு ஏனய்யா உள் பாய்கிறது என்று கேட்டால் பதில் சொல்வது அத்தனை கடினமல்ல. இங்கும் அரசு பெரிய சுரண்டல் அரசு. இங்கும் அரசியல்வாதிகள் அனேகமாக (90%) காளான்கள். இங்கும் அதிகாரிகள் பாதிக்கும் மேல் மக்களைப் பீடித்த புற்று நோய். அப்படி இருக்க இங்கு மட்டும் ஏன் முதலீடு பாய்கிறது? மேலே சொன்ன காரணங்களில் ஒன்று இங்கு இன்னும் நல்ல நிலையில் இருக்கிறது. அதான் மக்கள் தொகைப் பெருக்கம். இங்கு நாம் எறும்புக் கூட்டமாய் பெருத்துக் கொண்டிருக்கிறோம். இதனால் என்ன முன்னேற்றம் நேர்ந்தாலும் மக்கள் வறுமையில் இருந்த வண்ணம் இருப்பர். அதனால் உழைப்பாளர்களுக்குக் கொடுக்கும் ஊதியம் தொடர்ந்து உலகிலேயே அடிமட்டத்தில் நம் நாட்டில் இருந்த வண்ணம் இருக்கும். வரி என்றால் முதலியத்துக்கு எத்தனை அலர்ஜியோ அத்தனைக்கு அத்தனை அடிமட்ட ஊதியத்துக்கு உழைப்பாளிகளை வேலைக்கமர்த்துவது என்பது முதலியத்துக்கு பால்பாயசம் சாப்பிடுவது போல. அதனாலும், இந்த பெரும் மக்கள் கூட்டம் ஒரு பெரிய சந்தை, இங்கு எந்த தரத்திலும் பொருட்களை விற்று விட முடியும் என்பதாலும் முதலியம் இந்தியாவில் இன்னும் தன் முதலீட்டைச் செய்கிறது.

http://www.spiegel.de/international/europe/spain-capital-outflows-reach-record-levels-in-euro-crisis-a-847466.html

சிறை தண்டனையை outsource செய்யும் சீனா!!

சீனாவில் சிறை தண்டனை விதிக்கப்பட்டாலும் பணக்காரர்களாக இருந்தால், சிறையைப் பார்க்கத் தேவை இல்லையாம். அட, இந்தியாவுக்கும் சீனாவுக்கும் நிறையவே ஒற்றுமை இருக்கும் போலிருக்கிறதே என்கிறீர்களா? இங்கு ஏதோ ஓரிரண்டு தினங்கள் கண் துடைப்பாகவாவது சிறைக்குப் போவார்கள். அதை மகத்தான தியாகம், பகுத்தறிவு இயக்கத்திற்காகப் பலியானோம் என்று புரளியும் செய்வார்கள். அங்கு அதெல்லாம் கூடத் தேவை இல்லையாம். ஆனால் யாரையோ சிறைக்கு அனுப்பியே தீர வேண்டும் என்பதால், தமக்குப் பதிலாக இன்னொரு நபரைச் சிறைக்கு அனுப்பி வைப்பார்களாம் பணம் குவித்தவர்கள். என்ன ஒரு அற்புத சோசலிச, சமத்துவ நாடு! நாட்டில் எங்கும் வெடிகுண்டு வைத்து ரயில்களை, டெலிகாம் கூண்டுகளைப் பிளக்கும் நம் ஊர் மாவோயிஸ்டுகளின் கனவுலகாயிற்றே, வேறெப்படி இருக்கும்?

இப்படி பதிலிகளால் சிறையை நிரப்புவது ஏதோ இன்று நேற்றில்லை, பல நூறாண்டுகளாகச் சீனாவில் நடப்பதுதானாம். மாஓ விசம் உண்மையில் பெரிய புரட்சியைத்தான் செய்திருக்கிறது. பல நூறாண்டுகளுக்கு முந்தைய கனவுலகச் சீனாவை மறுபடி நிர்மாணம் செய்திருக்கிறதே. என்னவொரு முற்போக்கு இது, மற்றவர் இதைத் தாண்டி விட முடியுமா?

http://www.slate.com/articles/news_and_politics/foreigners/2012/08/china_s_wealthy_and_influential_sometimes_hire_body_doubles_to_serve_their_prison_sentences.html

குற்ற கும்பல்களின் பிரிய வங்கி

உலகத்தில் உள்ள எல்லாத் தீமைகளுக்கும் ஊற்றுக் கண்ணாக ஒரு நாடு இருக்க முடியுமா? அதுவும் எப்படி உலகின் வளமை அதிகமான நாடாகவும் இருக்கும்? பொருளாதாரம் மட்டுமல்ல, வேறு என்னென்னவோ சமூக உறவுகள் எல்லாமும் பெரிய புதிர்தான். ஆமாம், அமெரிக்காவைத்தான் சொல்கிறார் இந்தக் கட்டுரையாசிரியர். உலகின் போதை மருந்துக் கடத்தல்காரர்கள், கொள்ளையர், அல் கைதாவின் கொலைகாரப் பாவிகள், ஆயுதக் கடத்தல்காரர்கள் என்று அனைத்துக் கொடுமைக்காரர்களும் ஒரு வங்கியைப் பயன்படுத்துகிறார்களாம். அதுவும் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக. இது அமெரிக்காவின் உச்ச வங்கிக் கட்டுப்பாட்டு மையத்துக்கும் தெரியுமாம். இருந்தும் ஏதும் நடவடிக்கை எடுக்காமல் விட்டு வைத்திருக்கிறார்கள். ஏன்? இந்தக் கொடுமையாளர்களுக்கும் அமெரிக்க அரசுக்கும் என்ன உறவு என்பதைக் கேட்காமல் வேறென்னதை எல்லாமோ பேசுகிறார். அந்த வங்கி எந்த வங்கி? இந்தியாவிலும் கொடி கட்டிப் பறக்கிற வங்கிதான். அந்த வங்கி இந்தியாவின் தேச ஒருமைக்கு என்னென்ன சதிகளுக்கெல்லாம் பணம் பட்டுவாடா செய்யும் மையமாக இருந்ததோ? இது குறித்து இந்திய அரசு ஏதும் கவலைப்பட்டதோ? ஏதாவது இந்திய செய்தித்தாள்கள், தொலைக்காட்சி நிறுவனங்கள் ஆய்வு மேற்கொண்டு ஏதும் எழுதி/ பேசிச் செய்தனரோ? உங்களுக்கு இந்த வங்கி உலகக் குற்றவாளிகளின் பண மையம் என்ற தகவல் கிட்டியதா?

http://www.bloomberg.com/news/2012-08-02/cocaine-cowboys-know-best-places-to-bank.html

அமெரிக்காவில் ஊழல் – 1

இந்திய அரசும், மாநில அரசுகளும் ஊழலால் ஸ்தம்பித்து நிற்கின்றன என்பது நமக்குப் பல பத்தாண்டுகளாகத் தெரியும். இந்தியாதான் ஊழல் சாம்ராஜ்யம் என்று நாம் நினைப்போம், ஆனால் உலகின் பெருவாரி அரசுகள் இதே நிலைதான். சீனா ஒரு பெரும் பித்தலாட்டக் கூட்டத்தின் பிடியில் சிக்கித் திணறுகிறது. உலகில் கம்யூனிஸம் என்ற மாயையைப் பரப்பிக் கொண்டிருக்கும் அரசியல் பித்தலாட்டக்காரர்கள் அங்கும் பிலியன் மக்களைச் சுரண்டிக் கொழுத்துக் கொண்டிருக்கிறார்கள். ரஷ்யாவில் முன்னாள் கம்யூனிஸ்டு அரசின் போலிஸ்காரர்களும், உளவாளிகளும் ரஷ்யாவின் பிரும்மாண்டமான இயற்கை வளங்களைச் சுரண்டி பல்லாயிரம் கோடிகளில் சொத்துச் சேர்த்துக் கொண்டு ஏழை பாழைகளைச் சிறையில் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். யூரோப்பில், கிழக்காசியாவில், லத்தீன் அமெரிக்காவில், ஆஃப்ரிக்காவில் – எங்கும் இப்படித்தான் கொலை, கொள்ளை, நாசம். சிலருக்குச் சிற்றூர்களில் நேர்மை, மரியாதை, ஒழுங்கெல்லாம் இருப்பதாகவும், பெருநகரங்களே பயங்கரமான ஊழல் என்பது போலவும் ஒரு மயக்கம் இருக்கிறது. இந்தியச் சிறுநகரங்களில் உள்ள ஊழல்களை நேரில் அனுபவித்தவர்களுக்கு இந்த மாயை இருக்காது. அதுவும் திராவிடிய இனவெறிக் கருத்தியல் வியாதியால் பீடிக்கப்பட்ட தமிழகச் சிறு நகரங்களில் என்னவொரு ஊழல், நாசம் நிலவுகிறது என்பது அன்றாடத் தமிழ் பத்திரிகைகளை ஒரு புரட்டு புரட்டினாலே தெரியும். இங்கு ஒரு அமெரிக்கச் சிறுநகரில் எத்தனை ஊழல் எவ்வளவு சர்வ அலட்சியமாக நிலவுகிறது என்று கட்டுரையாசிரியர் புலம்புகிறார் பாருங்கள்.

http://www.reelseo.com/youtube-carpentersville/8213/

அமெரிக்காவில் ஊழல் – 2

ஊழலோ ஊழல். ஊழல சங்கமத் தேவனே அருள் பாலிப்பீராக, எம்மைக் காப்பீராக. எம் உலகிலிருந்து காலை அகற்றி ப்ளூடோ கிரகத்தில் இறங்கி அங்கே வாசம் செய்யுமாறு வேண்டிக் கேட்கிறோம். இப்படி ஏதாவது லத்தீன் மொழியில் ஒரு பிரார்த்தனையைக் ‘கம்போஸ்’ செய்து உலகெங்கும் பரப்பினால் ஏதும் பலனிருக்குமா? சரி அரபியிலும் எழுதிப் பிரார்த்திக்கச் சொல்லலாம் என்றால் அது இணை வைப்பது என்று கல்லடி விழும். சீன மொழியிலும், ஸ்பானிஷ் மொழியிலும் எழுதலாம். எப்படியோ பிரார்த்தனை பலித்தால் சரி, அந்தமான் தீவின் பழங்குடி மொழியில் கூட எழுத முயலலாம், பலிக்குமா?
அமெரிக்கப் பெருநிதி நிறுவனங்கள் மக்களைக் கொள்ளை அடித்ததற்காக அமெரிக்க அரசு சும்மா கண்டிப்பது போல பாசாங்கு செய்கிறதாம். இதற்காக ஒரு எட்டு பிலியன் டாலர்களை அபராதமாக அந்த நிறுவனங்கள் அமெரிக்க அரசுக்குக் கட்டவிருக்கின்றனவாம். இன்னொரு பெருநிதி நிறுவனம் நடத்தும் சலோன் பத்திரிகை, தன் இடது சாரித் தனத்தைக் காட்டி மக்களை மாரீச மானாக மயக்க வேண்டுமே, அதற்காக இந்தச் செய்திக்குத் தலைப்பாக, ‘பிக்கஸ்ட் ஸ்டோரி யு மிஸ்ட்’ என்று எழுதுகிறது. ஒரே ஒரு பகுதி – வீட்டுக் கடன் கொடுப்பது- அதில் மட்டுமே ஊழல், ஏமாற்று வேலை செய்த அமெரிக்க வங்கிகள்/ நிதி நிறுவனங்கள் கிட்டத்தட்ட ஆயிரம் பிலியன் டாலர்களுக்கு மேல் கொள்ளையடித்து மக்களை ஓட்டாண்டியாக்கி, பல லட்சம் அமெரிக்கர்களை வீடில்லாதவர்களாக ஆக்கி விட்டன. இந்தக் கோரத்திற்கு அவை கொடுக்கும் விலை ஒரு பிசாத்துக் காசு 8 பிலியன். அதுவும் அமெரிக்க அரசிடம் போகும். ஏமாந்து தெருவில் நிற்கும் மக்களுக்கு அரசிடம் 8 பிலியன் போனால் என்ன லாபம். அரசு ஆஃப்கானிஸ்தானில் அதை வாண வேடிக்கை விடும்.

http://www.salon.com/2012/08/07/biggest_story_you_missed_4/