நீரில் கரையாத கறைகள்

கனகு அக்கா அந்தச் சுவரில் என்றோ படிந்து விட்ட பெரும் கறையைப் போல அசையாமல் நின்றுகொண்டிருந்தாள். நீண்ட நேரம் அப்படியே நின்றுகொண்டிருந்தவளிடம் சரியாகப் பேச முடியாதபடி அலுவலகத்துக்குக் கிளம்ப வேண்டிய அவசியத்தில் அங்குமிங்கும் அலைந்து உடைகளைத் தேடிக்கொண்டிருந்தேன். மணிகண்டன் இன்னும் குளித்துக் கொண்டிருந்தான். இந்த அறைக்கு வந்து மூன்று நாட்கள் தான் ஆகின்றன. வந்த நாளிலிருந்து வேலை வேலை என்று ஓடிக்கொண்டே இருந்ததால் புதிய அறையில் பொருட்களை அவற்றுக்குரிய இடங்களில் வைக்க நேரமே இருக்கவில்லை. ஏதாவது ஒரு காரணம். களைப்பு. குடி. சோம்பேறித்தனம் என்று நானும் மணிகண்டனும் கிடைத்த நேரத்தில் ஓய்வாக சந்தோஷமாக இருப்பதையே விரும்பியதால் உடைகளும் போர்வைகள் ரஜாய்களும் சுருண்டு குவிந்து ஒரு ஜவுளிக்கடையின் பழைய ஸ்டோர் ரூம் மாதிரி இருந்தது அறை. வீட்டுக்காரன் மாட்டி வைத்திருந்த பழைய விளக்கில் அந்தப் புதிய அறை புராதனத் தன்மையுடன் மங்கிப் போய் தெரிந்தது. நெருக்கமான சந்துகளுக்குள் இருக்கும் வீடுகளின் அறைகள் என்பதால் பகலிலும் விளக்கு எரிந்தாகவேண்டும். நீங்கள் ஒரு இரண்டு வாரம் ஒரு சந்துப் பக்கம் போகாமல் இருந்து விட்டு, மீண்டும் சென்று பார்த்தால் அங்கு ஒரு புதிய கட்டிடம் உங்களை வரவேற்கும். எங்களைப் போல் பிழைப்புக்காக இங்கு வருபவர்களைத் தங்கவைத்து காசு பார்க்கவென்றே புறாக்கூண்டு முதல் நவீன வசதிகொண்ட அறைகள் வரை கட்ட , முனிர்கா கிராம மக்கள் எந்நேரமும் சிமென்ட் மூட்டைகளை கழுதைகளின் மேலேற்றி வருடம் முழுதும் அலைந்துகொண்டே இருப்பார்கள்.

காலையில் சீக்கிரமே வேலைக்குச் சென்று இரவு நேரம்கழித்து அறை வந்து சேரும்போது உடலே அசதியாகிவிடும். கனகு அக்கா தான் எங்கள் துணிகளைத் துவைப்பதுடன் வீட்டைக் கூட்டிப் பெருக்கி வைப்பாள். வாரம் நான்கு நாள். எல்லாவற்றுக்கும் சேர்த்து மாதம் அவளுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்து விடுவோம். நான் டெல்லி வந்த புதிதில் இருந்தே அவள் தான் எனக்குத் துணி துவைக்கிறாள். டெல்லியில் தமிழர்கள் கணிசமாக வாழும் பகுதிகளில் ஒன்றான முனிர்காவில் கனகு அக்கா போல் பல தமிழ்ப் பெண்கள் வேலை செய்கிறார்கள். பழக்கத்தைப் பொறுத்து சம்பளம் தருவார்கள் இங்கு வேலை கிடைத்து தங்குவதற்கு முனிர்காவுக்கு வந்து விட்ட தமிழ் இளைஞர்கள். எனக்குத் தெரிந்து இவ்வளவு தான் தர வேண்டும் என்று கெடுபிடி செய்யும் பெண்களைப் பார்த்ததில்லை. தினமும் காலை கதிர்வேல் மெஸ்சுக்கு சாப்பிடப்போகும்போது இந்தப் பெண்கள் மெஸ்சுக்கு வெளியே சுவரில் சாய்ந்து டீ குடித்துக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம். இன்று எந்த வீட்டுக்கு வேலைக்குப் போவது என்று முடிவெடுப்பது முதல் வேலை செய்யும் வீடுகளில் நடக்கும் விவகாரங்கள் வரை தணிந்த குரலில் பகிர்ந்து கொண்டிருப்பார்கள். ஓரிருவர் தரையில் குந்தியபடி அமர்ந்திருப்பார்கள். பெரும்பாலும் சேலம் பக்கத்திலிருந்து பிழைப்புக்காக வந்தவர்கள்.

“இல்லீங்..ஆமாங் ..” என்று தான் பேசுவார்கள்.

கோடை காலத்தில் வியர்வையும் குளிர்காலத்தில் எலும்பில் வலியெடுக்க வைக்கும் குளிர் நீரும் எங்களைப் போன்ற சோம்பேறிகளை துணி துவைக்கும் பணியில் இருந்து தள்ளி வைக்கும். எங்கள் அழுக்குகளைத் துவைக்கத் தெரிந்த இந்தப் பெண்களுக்கு மட்டும் வியர்வையும் குளிரும் ஏன் ஒன்றுமே செய்வதில்லை என்று தோன்றும். பிழைப்புக்காகத் தான் அவர்களும் நாங்களும் இரண்டாயிரம் கிலோமீட்டர்களை உறவுகளின் விசும்பல்களுக்கு இடையில் கடந்து வந்திருக்கிறோம்.

எங்களால் முடிந்தவரைத் துணிகளை அழுக்காக்கி அவர்களிடம் கொடுத்தால் அவர்கள் திரும்பவும் சுத்தமாக்கி எங்களுக்குத் தருவார்கள். சில சமயம் ஊருக்குப் போக நேர்ந்தால் தங்களுக்கு பதில் வேறு பெண்கள் யாரையாவது அறிமுகப்படுத்தி விட்டுப் போவார்கள். தற்காலிக ஏற்பாடு. எனக்கு கனகு அக்காவை விட சரியாகத் துணி துவைக்கும் பெண்ணாக யாரும் ஏனோ அமையவில்லை. அவள் எத்தனை துணி என்றாலும் முகம் சுளிக்காமல் தன் சகோதரன் துணியைத் துவைப்பவள் போல் அக்கறையுடன் நேரம் எடுத்துக்கொண்டு துவைப்பாள். சட்டையின் காலரில் அழுக்கைத் தேட வேண்டி இருக்கும். எங்கள் உள்ளாடைகள் தவிர்த்த மற்ற எல்லாத் துணிகளும் அவள் கை பட்டு ஒளிரும். நானும் மணியும் ஆளுக்கொரு சாவியை எடுத்துக் கொண்டு அவளிடம் ஒரு சாவியைக் கொடுத்து வைத்திருந்தோம். அவள் நாங்கள் அலுவலகம் சென்ற பின் வந்து துணிகளைத் துவைத்து அறையை சுத்தமாக்கி வைப்பாள். இரண்டே நாளில் அறை மீண்டும் குப்பையாகி விடும். சிகரட் துண்டுகள், மிச்சமிருக்கும் நம்கீன் பாக்கெட்டுகள் அறையெங்கும் விரவிக் கிடக்கும். நான் எடுப்பேன் என்று மணியும் அவன் எடுப்பான் என்றும் நானும் நினைத்து கடைசிவரை அங்கேயே கிடக்கும் பொருட்களை கனகு அக்கா தான் எடுத்து வைப்பாள். கட்டாயமாக வார இறுதியிலும் அவ்வப்போது வார நாட்களிலும் குடி இருக்கும் என்பதால் எங்கள் அறையில் பாட்டில்களுக்குப் பஞ்சம் இருக்காது. ஒரு முறை, உபயோகிக்கப்படாமல் கிடக்கும் எங்கள் கிச்சனுக்குள் நுழைந்து பார்த்த சதீஷின் மனைவிக்கு மயக்கம் வராத குறை. ” என்னண்ணா ..இவ்வளவா குடிப்பீங்க ?” என்று திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டே இருந்தாள். சொல்லாமல் சதீஷும் அவளும் வருவார்கள் என்று நாங்கள் நினைக்கவே இல்லை.

கனகு அக்கா அந்த பாட்டிலகளை எடுத்துக் கொள்வாள். நிறைய இருக்கும் என்பதால் அவற்றை வெளியில் கொடுத்து காசு வாங்கிக்கொள்ளட்டும் என்று அவளுக்கு அவற்றைக் கொடுத்து விடுவோம். அதே போல் பழைய துணிகளையும் அவளுக்குக் கொடுத்து விடுவோம். மற்றப் பெண்களாவது ஹோலி தீபாவளி சமயத்தில் போனஸ் பணம், புதுத் துணி கேட்பார்கள். கனகு அக்கா அதையும் கேட்கமாட்டாள். நாங்களாகக் கொடுத்தால் மறு பேச்சிலாமல் வாங்கிக் கொள்வாள்.அது அவள் சுபாவம். அதிர்ந்து பேச மாட்டாள். அவளிடம் ஒரு செல்போன் உண்டு. ஆனால் அவளாக போன் பண்ணிப் பேசத் தெரியாது. படிக்கத் தெரியாதவளுக்கு ஆட்களின் பெயர்களுடன் நம்பரை சேமித்துவைத்துக்கொள்ள என்று இங்கு யார் மொபைல் தயாரிக்கிறார்கள்? ஏதோ அழைப்புகளை எடுத்துப் பேசும் அளவுக்கு தெரிந்து வைத்திருக்கிறாள்.

சம்பளம் கொடுக்கிறார்கள் என்றோ மரியாதைக்கோ அவள் தம்பி அல்லது மகன் வயதுள்ள எங்களை அண்ணே என்று தான் அழைப்பாள்.

யார் வீட்டிலாவது அதிகத் துணிகள் ஊற வைத்துத் துவைக்க சொன்னால் எதுவும் பேசாமல் துவைத்து விடுவாள். இங்கு வந்து அழுவாள். “அப்பிடி என்ன அவசியம்…துவைக்க முடியாதுன்னு சொல்லவேண்டியது தானே?” என்றால் பேசாமல் இருப்பாள். பல இடங்களில் துவைக்க வேண்டிய கட்டாயம். அவள் இருக்கும் ஜுக்கி குடிசைப் பகுதிக்கு அவளுக்கு இருக்கும் கடன் அதிகம் தான். மூன்று லட்சம் கடன் வைத்திருந்தாள். பையன் கல்யாணத்துக்கு செலவு செய்ய இன்ன பிற தேவைகளுக்கு என்று வெளியில் வாங்கி வாங்கி இந்த அளவுக்கு கடன் சேர்ந்திருந்தது. அந்தப் பையன் கல்யாணமான இரண்டாவது நாளில் தூக்குமாட்டிகொண்டு இறந்து போனான். ஏதோ மெக்கானிக் வேலை பார்த்துக் கொண்டிருந்த அவனை நம்பி கனகு அக்கா வாங்கிய கடன் அவளை ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் பத்து வீடுகளுக்காவது கை ஒடியத் துவைக்க வைத்துக்கொண்டிருக்கிறது. இனி எத்தனை முறை பிறந்தாலும் அவள் சம்பாத்தியம் கடனை அடைத்து விடுமா தெரியவில்லை. அவளது கணவனும் ஆதரவாக இருப்பது போல் தெரியவில்லை. சம்பாதிக்கும் மொத்த பணத்தையும் அவன் குடிக்கே செலவு செய்துவிடுவான் என்று அவ்வப்போது சொல்வாள். வாரத்துக்கு எட்டுநாள் குடிக்கும் எங்களால் என்ன நியாயம் சொல்லி விட முடியும்?

மணிகண்டன் குளித்து முடிக்க வழக்கத்தை விட அதிக நேரமானது. என் நீண்ட நேரத் தேடுதலுக்குப் பிறகு கிடைத்த சாக்சின் அடிப்பாகம் நூல் பிரிந்து தொங்கியது. அதை வீசியெறிந்து விட்டு வேறொன்றைத் தேட அந்த துணிக் குவியலுக்குள் கைவிட்டபோது தான் எதேச்சையாக அறையின் மூலையில் அந்தப் பையைப் பார்த்தேன். திடீரென்று அந்த இடத்தில அது முளைத்திருந்தது போலிருந்தது. அதற்குள் நேற்று கைலி பனியன் உள்ளிட்ட சில துணிகள் தெரிந்தன. கனகு அக்கா அதன் அருகில் தான் நின்று கொண்டிருந்தாள். அப்போது தான் ஏதோ விஷயம் புரிந்தவன் போல் நிமிர்ந்து அவள் முகத்தைப் பார்த்தேன். அவள் முகம் அழுது அழுது வீங்கியிருப்பது தெரிந்தது. சந்தேகம் கலந்த குற்றவுணர்ச்சி மனதின் சுவர்களில் அழுத்தமாய் படிய ” என்ன ஆச்சு அக்கா?” என்றேன். இதுவரை அவள் மணிகண்டன் குளித்து முடித்தவுடன் துணிகளை ஊறவைக்கக் காத்திருந்தாள் என்றே நினைத்திருந்தேன்.

“இத வச்சிக்கிங்க அண்ணே” என்றாள், வெடித்துவிடத் தயாராய் இருக்கும் அழுகையின் மேல் வார்த்தைகளை ஒட்டவைத்து. “நான் இதை திருடிட்டுப் போகலைண்ணே” அந்தப் பையை எடுத்து என்னிடம் நீட்டினாள். நடுக்கத்தை மறைக்க அவள் உடலை விறைப்பாக்கி நிற்க முயல்வது போலிருந்தது.

“அதான் இத வேணாம்னு சொல்லிட்டனே ..எதுக்கு இதக் கொண்டாந்தீங்க” என்றேன். குற்றவுணர்வை சமாளிக்க குரல் சற்று உயர்ந்தது.

“எம்புருஷன் என்ன வீட்டுக்குள்ள சேக்க மாட்டேன்னு சொல்லிட்டாரு..ஊரான் வீட்டுலே திருடுற தேவடியான்னு என்னை போட்டு அடிச்சிட்டாருண்ணே” என்றவள் கண்களில் அதுவரை தேக்கப்பட்டிருந்த கண்ணீர் அந்தக் கறுத்த முகத்தில் பாறையில் கசியும் நீரைப் போல் வழியத் தொடங்கியது.

எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. விஷயம் மெள்ள மெள்ள நினைவுக்கு வந்து சம்பவத்தின் தீவிரம் ஒரு கனத்த இருள் போல் என் மனதுக்குள் படிந்தது. முன்பிருந்த அறையை காலி செய்யும்போது பழைய உபயோகப்படாத துணிகள் பேப்பர்கள் உள்ளிட்ட பொருட்களை அங்கேயே விட்டு விட்டோம். எப்படியும் சுத்தம் செய்ய வரும் கனகு அக்கா அவளுக்கு உபயோகப்படும் என்று நினைக்கும் பொருட்களை எடுத்துக்கொள்வாள் என்பது எங்களுக்குத் தெரியும். ஒவ்வொருமுறை அறை மாறும்போதும் இது தான் வழக்கம். அன்றும் இப்படித் தான் நடந்தது. இத்தனைக்கும் அவள் பக்கத்துக்கு அறைக்காரனிடம் எனக்கு போன் பண்ண சொல்லிப் பேசி பழையப் பொருட்களை எடுத்துக் கொள்ளலாமா என்று கேட்கவும் செய்தாள்.

சரியென்று விட்டு அவசரமாக என் பாஸ் அழைத்ததின் பேரில் லீவ் போட்ட நாளில் அலுவலகம் சென்று விட்டேன். இரவு எட்டுமணிக்கு வந்து பார்க்கும்போது தான் அந்தப் பழைய அறைக்கு வெளியில் உள்ள கொடியில் காய்ந்து கொண்டிருந்த என் பனியன்கள் இரண்டு கைலி மற்றும் வீட்டுக்குள் அணியும் டீஷர்ட் போன்றவை இல்லாதது உறைத்தது. எல்லா துணிகளையும் கிடைத்தவாக்கில் அள்ளி வெவ்வேறு பைகளில் அடைத்து விட்டதால் ஷார்ட்ஸ்,கைலி போன்றவை எந்தப் பையில் இருக்கின்றன என்று குழம்பி நின்றுகொண்டிருந்தேன்.

அந்த நேரத்தில் என் கையாலாகதத் தனமும் அவசரமும் உருமாறி அக்கா மேல் எரிச்சல் தோன்றியது. அந்தக் கைலியும் பனியனும் நான் வழக்கமாக அணிவது தானே. அதை எதற்காக எடுத்துச் சென்றாள் என்று கணநேரம் கோபம் தோன்றியது. நேரம் பார்க்காமல் அவள் நம்பருக்கு போன் செய்தேன். அவள் கணவன் தான் பேசினான். இந்த நேரத்துக்கு என்ன போன் என்று கேட்கும் குரலில் “சொல்லுங்க ஸார்..என்ன விஷயம்..அவ சமச்சிக்கிட்டிருக்கா” என்றான்.

“இல்ல ..அவுங்க கிட்டே ஒண்ணு கேக்கணும்” என்றேன்.

“இந்தா..சாரோருத்தர் பேசுறாரு..பேசு” என்று அவளிடம் கொடுத்தான் அந்தாள்.

எடுத்தவுடன் “என்னைக் கேட்காமல் ஏன் என் கைலியை எடுத்துட்டுப் போனீங்க ?” என்றேன். என் குரலில் கலந்திருந்த கோபம் அவளை எப்படி உறுத்தி இருக்கும் என்று நான் நினைக்கவே இல்லை.

“இல்லேண்ணே ..ஒங்க கிட்டே கூட போன் பண்ணிக் கேட்டேனே..நீங்க தானே எடுத்துக்க சொன்னீங்க ” என்றாள் குழம்பிய குரலில். அந்தக் கைலி பனியன் பற்றி அவள் போன் பண்ணிக் கேட்கும்போது எனக்கு நினைவே இல்லை. சரி ஏதோ குழப்பம் என்று தோன்றியது.

“சரி ..பரவால்லே..நா வேற கைலி தேடிக்கிறேன்..அத நீங்களே வச்சிக்குங்க” என்றேன்.

“சரிண்ணே” என்றவளின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. பிறகு மணிகண்டன் வந்த பின் புது அறைக்கான சந்தோஷத்தில் குடிக்க ஆரம்பித்ததில் எல்லாமே மறந்து விட்டது. அது ஒரு விஷயமே இல்லை என்பதால் நான் வழக்கமான வேலைகளில் தொலைந்திருந்தேன்.

அக்கா இரண்டு நாளும் இங்கு வந்திருக்கிறாள். இரண்டு நாளும் எனக்கும் மணிக்கும் சீக்கிரமே அலுவலகம் செல்ல வேண்டி வந்ததால் அவள் வரும் நேரம் முன்பே கிளம்பிவிட்டிருந்தோம். புது அறைக்கு கதவிலேயே பொருத்தப்பட்ட பூட்டு என்பதால் பழைய சாவி அவளுக்கு பயன்படவில்லை. இன்று வீட்டில் நாங்கள் இருக்கும்போது வந்து விட்டாள்.

“என்னக்கா ..அவரு என்ன சொன்னாரு? நீங்க திருடினீங்கன்னு நான் சொல்லவே இல்லையே?” என்றேன் அடைக்கும் குரலில்.

அந்தாள் அக்கா போனில் பேசும்போதே மொபைலுக்கு அருகில் காதை வைத்துக் கேட்டுக் கொண்டிருந்திருக்கிறான்.

நான் பேசியதை அவன் வேறு மாதிரி எடுத்துக்கொண்டு அவளைத் திருடி என்று சொல்லி அடித்திருக்கிறான். தான் திருடவில்லை என்று திரும்பத் திரும்ப கண்ணீர் மல்க சொன்ன போதும் அவளைக் கெட்ட வார்த்தைகளில் திட்டி உதைத்திருக்கிறான்.

“இன்னிக்கு.. கைலியக் காணோம்னு சொல்லுவானுங்க..நாளைக்கி செயினைக் காணோம்னு போலீசோட வருவானுங்க..ஏண்டி இப்படிப் பண்ணின தேவடியா” என்று கேட்டுக் கேட்டு அடித்ததாக அவள் அழுதபடி சொன்னபோது நான் உறைந்திருந்தேன்.

அன்று இரவு முழுவதும் அவளை வீட்டிற்கு வெளியிலேயே நிறுத்தி வைத்தானாம் அவன்.

“அவர் அடிச்சது கூட பரவாயில்லண்ணே ..என்ன திருடின்னு சொல்லி சொல்லி திட்டுனதத் தான் என்னாலே தாங்கவே முடியல” என்றாள் விசும்பல்களுக்கு இடையே. தாயை ஒத்த வயதுடைய ஒருத்தி ஒன்றுமே செய்யாத குற்றத்துக்கு பழி சுமந்து என் முன் நின்று கொண்டிருக்கிறாள். பேச்சு மறந்தவன் போல் நின்றுகொண்டிருந்தேன்.

எத்தனை வருடங்களாக என் அழுக்குகளைத் துவைப்பவள். எத்தனை முறை நான் பாக்கெட்டுகளில் மறந்து வைத்து விட்ட பணத்தை எடுத்து டேபிளில் வைத்து விட்டுப் போயிருக்கிறாள். எத்தனை முறை சம்பளம் தர தாமதமானாலும் அதைப் பற்றி கேட்காமலேயே துணி துவைத்து சென்றிருக்கிறாள். அந்த அழுக்கு கைலியை வைத்து அவள் எந்த ராஜ்ஜியத்தை ஆளப் போகிறாள். அவசரப்பட்டு நான் செய்த முட்டாள் தனம் அவள் வாழ்க்கையில் எத்தனை வலி தரும் கொடூரத்துக்குக் காரணமாகி விட்டது என்று குமைந்து கொண்டிருந்தேன். அதற்குள் குளித்து விட்டு வந்திருந்த மணிகண்டன் நடந்ததை யூகித்தவனாக என்னையும் அவளையும் பார்த்துக்கொண்டே இருந்தான்.

“இத உங்க கிட்டே குடுத்துட்டு வந்தா தான் என்ன வீட்டுக்குள்ளாற விடுவேன்னு சொல்லிட்டாரு” என்று அந்தப் பையை என் கைபிடித்துக் கொடுத்தாள். நான் அசூசையாக அதை உதறி ” தயவு செஞ்சி நீங்களே வச்சிக்கிங்கக்கா..நா அந்தாளு கிட்டே பேசிக்கிறேன்” என்றேன்.

பலமுறை வற்புறுத்திய பின் அந்தப் பையை அவள் தன் கையில் எடுத்துக்கொண்டாள். வீட்டுக்குக் கொண்டு செல்வாளா தெரியவில்லை. செல்லும் வழியில் எங்காவது வீசி எறியும் அளவுக்குக் கூட எதிர்மறையாக யோசிக்கத் தெரியாதவள்.

“நா பேசிக்கிறேன்..எடுத்திக்கிட்டுப் போங்க ” என்றேன் உறுதியான குரலில். அந்தப் பைக்குள் ஒரு ஐநூறு ரூபாயை வைத்தேன். அவள் கணவனிடம் நான் என்ன பேசி அவளை நிரூபிக்க முடியும் என்றெல்லாம் யோசிக்கவேயில்லை. அந்த நேரத்துக்கு எப்படியாவது அவளை சமாதானம் செய்துவிட வேண்டும் என்று மட்டும் தோன்றியது. போகும் போது இனிமேல் வருவாளா என்று கேட்க எனக்குத் தோன்றவில்லை. என்னைப்போல எத்தனை அற்பர்களிடம் துணி துவைத்து சம்பாதிப்பவள். இதற்கெல்லாம் கோபித்துக்கொண்டு வராமல் இருந்தால் அவளால் என்ன செய்து கடனை அடைக்க முடியும். சாவியை வீட்டுக்காரனிடம் கொடுத்து வைக்கிறேன் என்று மட்டும் சொன்னேன். மன்னித்து விட்ட முகத்தோடு தலையை அசைத்து விட்டு சென்றாள்.

பிறகு மணியிடம் நடந்ததை முழுவதுமாக சொன்னேன். என்னை ஒரு முறை உற்றுப் பார்த்து விட்டு “பரவால்லே விடுங்க..அதான் செலவுக்கும் கொஞ்சம் பணம் குடுத்துட்டீங்கள்ளே ” என்றான். திட்டியிருக்கக் கூடாதா என்று தோன்றியது. அவ்வளவு தான். திரும்பவும் வேலை களைப்பு என்று நேரம் ஓடி இரவில் நண்பர்களுடன் சேர்ந்து குடி தொடங்கியது. சில விருந்தினர்கள் வேறு. பின்னணியில் இளையராஜாவின் வயலின் கம்பிகள் வழியாக பால்யமும் பருவமும் திரும்பவும் உருவாகி உருவாகி கண்முன் கரைந்துகொண்டிருந்தன. பள்ளி முடிந்து வீடு வரும் வழியில் எப்போதும் எதிர்ப்படும் சர்வேயர் வீட்டு ஆடு, சின்ன சின்ன மணிகள் கட்டப்பட்டு காற்றெங்கும் மணியின் ஓசையைப் பரப்பும் தேவசகாயம் வீட்டு வாசல்படி, எந்நேரமும் அடுக்களை ஜன்னலில் தெரியும் வெள்ளையக்காவின் முகம் என்று காட்சிகள் மங்கலாக மறைந்துகொண்டே போகையில் அத்திரைச்சீலைகளுக்குப் பின் மறைக்கப்பட்டு மறக்க நினைத்துப் புதைக்கப் பட்ட அல்லது புதைத்து விட்டதாய் நினைத்த அவ்வளவும் ….ஒரு முறை அப்பா மஞ்சள்காமாலை வந்து படுத்தது, சித்தப்பாக்கள் ஒதுங்கிக்கொள்ள வீட்டுப் பொருள் ஒவ்வொன்றும் அடமானமாய் ஆனது, ஒரு கட்டத்தில் அம்மா தெரிந்தவர்களின் வீடுகளுக்கு பாத்திரம் தேய்க்கப் போனது, ஒரே வாரம் தான், அதற்குள் அப்பாவுக்கு உடல்நிலை சரியாகி அவர் விண்ணப்பித்திருந்த வேலையும் கிடைத்தது, வீட்டு வேலைக்கு சென்று வந்த ஒரு நாளில் அம்மா யாரிடமும் பேசாமல் சாமி விளக்கைப் பார்த்துக்கொண்டே அழுதது என மறையாமல் நினைவில் உறைந்து விட்ட காட்சிகள் மெல்ல நகரும் சலனப்படம் போல் அழிக்கவொட்டாமல், மறக்கவொட்டாமல் மீண்டும் தோன்ற…அக்காட்சியின் தொடர்ச்சி போல் இரவில் ஒற்றை உருவமாய் கனகு அக்கா தனது குடிசைக்கு வெளியே அழுதபடி நின்றிருக்கும் தோற்றம் கண்முன் வந்தது. அடர்ந்திருந்த இருளில் மின்னும் கண்கள் அவளைச் சுற்றிலும் சிமிட்டியபடி இருந்தன .என்னென்னவோ சொல்லிப் புலம்பியபடி நடுங்கிக் கொண்டே அவள் சாத்தப்பட்டிருக்கும் கதவை பார்த்துக் கொண்டே நின்றுகொண்டிருந்தாள்.

என்னை அறியாமல் கண்களில் நீர் பெருகி வழிந்தது.

மணி சொன்னான். ” நம்மாளு ..சரக்கடிக்கும்போது ராஜா பாட்டு கேட்டா போதும் ..உருகி ஊத்திடுவாப்புலே”. நண்பர்கள் கேலியாக சிரித்துக்கொண்டே என்னை நோக்கி கோப்பைகளை உயர்த்தினார்கள். இசையை மீறி சிரிப்பு சத்தம் எழுந்து அறையை நிறைத்தது.