நம்பிக்கை

வெங்கடராமா ரொம்ப சந்தோஷமா இருக்கு. இந்த மாதிரி காசி பாப்பேன் என்று 20 வருஷம் முன்னாடி யாராவது சொல்லியிருந்தால் சிரிப்பு வந்திருக்கும். எதோ சாகறத்துக்கு முன்னாடி இந்த கட்டை இதயும் பார்க்கணும்னு இருக்கு. நன்னா இருடா என்றாள் பாட்டி. இங்கேயே கட்டை போக குடுத்து வைக்கணும் என்றாள்.

எனக்கு ஆச்சரியம் காசி பார்த்தல் இவ்வளவு கஷ்டமா, காசியில் இறந்து போனால்,அங்கேயே எரிப்பது நல்லதா. அப்படி ஒரு நம்பிக்கையா. டிரெயினில் ஏறினால் இங்கு வந்து விடலாம். வசதி உள்ளவர்கள் விமானத்தில் வரலாம். இதோடு மூன்றாவது முறை என்னை வாழ்த்துவது. ஒவ்வொரு முறையும் எனக்கு கண்கள் பனித்து விடும்.

ஆனால் பாட்டியின் நம்பிக்கை. ஆச்சரியமாக இருக்கும். என்ன பாட்டி, பிள்ளையார், சிவன், அம்பாள் என்று எத்தனை பேர். இவ்வளவு பேரையும் சேர்த்து கும்பிட்டால்., ஒரு வேளை எல்லாரும் சேர்ந்து அருளிவிட்டால் என்ன செய்வது என்று பரிகசிப்பேன். பாட்டி சளைக்க மாட்டாள். ஏண்டா ரொட்டீனா வேல பாத்தா போரடிக்காது… நம்ம மதம் அப்படீங்கறது, ஸ்கூல் யூனிஃபார்ம் மாதிரி இல்லடா. எல்லாம் ஒரேமாதிரி இருக்கறதுக்கு – சட்டத்துக்குள்ள அடைக்கிற மாதிரி. சிவன்னு சொன்னா சிவனைக் கும்பிட கோவிலுக்கு போ.. அதே சிவன காட்டுலப் போய் கும்பிடணம் அப்டீன்னா பைரவன்னு சொல்லு. ஒனக்கு யார எந்த லெவெல்ல பிடிக்கறதோ அப்படி கும்புடு. எல்லாமே வெள்ளக்காரன் பண்ணின வேலை. வெறும் கொமஸ்தாக்களா உண்டாக்கி ஆபீஸ் வீடு, ஆபிஸ் வீடுன்னு பண்ணிட்டான். ராமன் ஒரு மாதிரின்னா, கிருஷ்ணன் இன்னொரு மாதிரி. இதெல்லாம் மனுஷாள் கத்துக்கறதுக்குத் தான். கவித்துவமாயும், கடவுளாவும் பெரியவா என்னவெல்லாமோ எழுதியிருக்கா. ராமன் வாலிய மறவாக் கொன்னா ராமன் மோசங்கெறது. க்ருஷ்ணன் கர்ணண விட்டுக் கொடுத்துட்டான்னு பேசறது. விகாரத்த மட்டுமே பாக்கப்படாது அதையும் சேத்துத் தான் மனுஷாளப் பாக்கணும். எல்லாருக்குமே சாமி அருளுண்டா, அதுவும் அவா அவா நம்பிக்கைய பொறுத்தது. எவ்வளவு சாமிய வெச்சு, எல்லா சாமிக்கும் ஒரு மிருகத்தை வேற கொடுத்திருக்கோம் இல்லையா. அவைகள் கூடவும் சேர்ந்து வாழணனும்தான். அதெ வெச்சாவது அந்த மிருகத்த மதிக்கணுந்தான். இப்பத் தான் நாம ஒண்ணுத்தேயேயுமே மதிக்கறது கெடயாதே. அதிலேயும் வெள்ளக்காரனும், துப்பாக்கியும் வந்தப்பறம்தான் நாம மிருகங்களையெல்லாம் நெறயவேஅழிக்கறோம். பத்து பேர் பண்ற வெலைய அந்த ஒரு துப்பாக்கியே பண்றது. ஒருத்தனுக்கு ஒரு யானையப் பார்த்த பிள்ளையார் ஞாபகம்தாண்டா வரணும். அதைப் போய் தந்ததுக்காக கொல்லுவாளோ. அனா இப்ப அதுதான் நடக்கறது. பாட்டி வேதாந்தத்தில் இருந்து, வேற்று கிரகஙகள் வ்ரை பேசுவாள். எல்லாமே ஒத்து போக மனசு இடம் கொடுக்காவிட்டாலும் பாட்டியின் திறமை அபாரமாக இருக்கும்.

காசி வரமுடியுமா என்று கேட்டதிற்கு பழங்கால சம்பா அரிசி சரீரண்டா என்று பதிலளித்து விட்டாள்.எண்பது வயது நெருங்கியும் பாட்டியால் பத்து பேருக்கு சமைக்க முடியும். சமையல் பிரமாதமாக இருக்கும். அதுவும் தேங்காய் அரைத்து குழம்பு வைத்தால் மிக அருமை. எங்கள் ஊர்ப் பக்கம் தேங்காயை அரைத்து குழம்பு வைப்பார்கள். அது பாட்டியின் ஒரு மாஸ்டர் பீஸ் என்று கூறலாம். பாட்டி நிதானமாக உளுத்தம் பருப்பை வறுத்து, பிறகு மிளகுவற்றல் போடுவாள். கடைசியில் சிறு வெந்தயம். பிறகுதான் தேங்காயுடன் போட்டு மிக்ஸியில் வைத்து அரைப்பது. பாட்டி வைத்தால் மணக்கும். மிக்ஸி அரைக்கும் வேலை என்னுடையது. நல்லா மையா அரைக்காதே. கொஞ்சம் கர கரப்பா இருக்கணம் என்பாள். அடுப்பில் புளித்தண்ணீரில் வெண்டைக்காயும், கத்திரிக்காயும் வெந்துக் கொண்டிருக்கும். முன்னாடி மிக்ஸி எங்க. எல்லாம் அம்மிதான். மூச்சு முட்டும். தனியா இப்ப மாதிரி எக்ஸர்ஸைஸ் எல்லாம் பண்ண வேண்டாம். ஆனா அதுக்கேன்னு ஒரு தனி மணம் வேற. தாத்தாவுக்கு ரொம்ப பிடிக்கும் என்றவாறே உப்பைப் போட்டு, அரைத்ததை விட்டு கருவேப்பிலை போட்டால்… அம்மா வரும் போதே என்ன இன்னைக்கு தேங்காக் குழம்பா என்றுதான் வருவாள்.

பாட்டி… நீ மட்டும் பண்ணினா இவ்ளோ டேஸ்டா இருக்கு என்றேன் ஒரு நாள். அதில்லைடா.. ஒன்னோட அம்மாக்கு பொறுமை போறாது. சமையல்னா ஆத்மார்த்தமா பண்ணனும். அம்மா ஆபிஸ் வேலை பார்ப்பாளா அல்லது இதை பார்ப்பாளா என்றாள். அம்மா, அப்பாவிற்கு லீவ் இல்லாத காரணத்தால் நான் பாட்டி, தாத்தாவுடன் காசி வந்தேன். முன்னாடியெல்லாம் காசி போறதுன்னா திரும்பி வருவாளா தெரியாது.இப்பத்தான் காரெல்லாம் வந்துடுத்தே என்றாள். அப்புறம் என்ன பாட்டி இவ்வளவு சந்தோஷம் என்றேன் நான். எண்டா காசின்னா சும்மாவா. அதோட தத்துவமே வேற. அங்க வந்து பாரு, கேளு சொல்றேன் என்றுவிட்டாள்.

தாத்தாவிற்கு விமானப் பயணம் ஒத்துக் கொள்ளாது எனவே டிரெயினில்தான் சென்றோம். முதலில் ஜாம்ஷெட்பூர் என்றழைக்கப்படும் டாடா நகரில் என் மாமாவின் வீட்டிற்கு. அவனும் எஙகளுடைனே வருவதாக ஏற்பாடு. ஊரிலிருந்து புலம் பெயர்ந்த குடும்பங்களில் அவனும் ஒருவன். மனிதன் கற்காலத்தில் இருந்து புலம் பெயர்ந்து கொண்டுதான் இருக்கிறான். உணவிற்காக, அறிதலுக்காக, படைவீரனாக, மன்னர்கள் கொடுமையிலிருந்து தப்புவதற்காக இன்னும் எத்தனையோ….நாமும் சுதந்திரம் வந்த முதல் பத்தாண்டுகளில் நாட்டில் தேனும் பாலும் ஒடுமென்று நினைத்தோம். மெதுவாக மக்களின் சந்தோஷம் வறுமையால் மற்ந்து போக புலம் பெயர்தல் வேறு வழியில்லாது ஆனது.அரசன் இருந்தால் அவனிடம் கேட்கலாம் ஆனால் இன்று எல்லாருமே மன்னர்கள் அல்லவா… யாரிடமும் சென்று கேட்க முடியாது. பொறுப்புணர்வும், பெரும்பாலான மக்களின் மனதில் ஒழுங்கும் சீர் கெட ஆரம்பித்த காலம். அரசனாவது கொடுங்கோலன் என்றால் அவன் சென்ற பிறகு மற்றொரு நல்லவன் வந்து விமோசனம் கிடைக்கும். ஆனால் இன்று அப்படி ஒரு நிலை வருமா என்றே தெரியவில்லை. ஒரு முறை பாட்டி ஏன் மாமா அவ்வளவு தூரத்தில் இருக்கும் டாடாநகர் சென்றான் என்று கேட்டதற்கு பாட்டியின் பதில்.

இப்பொழுது அதுதான் என் நினைவுவிற்கு வந்தது. நாமும் மேலை நாட்டின் தொழிற் புரட்சிதான் மட்டும்தான் நம்மை பொருளாதாரத்தில் உயர் படுத்தும் என்று கிராமங்களை விட்டு தொழிற்சாலை உள்ள நகரங்களை நோக்கி மெதுவாக செல்ல ஆரம்பித்தோம். பொருளாதாரம் உயர்ந்ததா தெரியவில்லை. ஆனால் சில அதிபுத்திசாலித்தன்மான வேலைகளை செய்தோம். முக்கியமாக மக்கும் உர வகைகளை அழித்து, வேதியியல் உரங்களைக் கொணர்ந்து வயல்களின் வளைத்தை அழித்தோம். பிறகு மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட நீர் நிலைகளை அழித்தோம். காடுகளை அழித்து மக்களை குடி பெயரச் செய்தோம். இன்று எல்லாமே புதிதாக கண்டெடுத்தது போல் மறுபடி மக்கிய இயற்கை வளமுள்ள உரங்களை இட்டு வந்த காய்கறிகள் என்று பெயர் சூட்டி அதிகப் படி விலையில் விற்கிறோம். நீர் நிலைகள் முக்கியம் என்கிறோம். கிராம சுயாட்சி என்கிறோம்.

ஆனால் அன்று அப்படி பொருளாதாரம் உயரும் என்று நினைத்து சென்ற ஒருவன் தான் என் மாமாவும். மாமாவிற்கு இன்று டாடா நகர்தான் அவன் சொந்த ஊர். பாட்டியும் தாத்தாவும் ஒரீரு முறை சென்று பார்த்தார்கள். அந்த ஊர் சரியில்லை என்று விட்டார் தாத்தா. ஆனால் என்னைப் பொறுத்த அளவில் டாடா நகர் அருமையான யோசனையோடு கட்டப் பட்ட ஒரு நகரம். அதனைப் படைத்தவர் மக்களின் வாழ்நிலைக்கு மதிப்பு கொடுத்து உலகளவில் ஒரு நகரமாக வைத்திருக்கிறார் என்றால் மிகையாகது. நீர் மிக நன்றாக இருக்கும். விளையாட இடங்கள் உண்டு. அகன்ற சாலைகள். ஆனால் கரடி யானை போன்ற மிருகங்களை விரட்டி, அழித்து மெதுவாக மனிதர்களாய் நிரம்பிய ஒரு நகரம். மரங்கள், பூங்கா, மருத்துவ மனைகள் எல்லா வசதியும் உண்டு.

அங்கிருந்து அலாகபாத் எனப்படும் நேரு பிறந்த ஊருக்குத்தான் முதலில் செல்ல வேண்டுமாம். அலகாபாத் வந்ததும் மாமா எஙகளை அங்கே ஒரு சத்திரத்தில் கூட்டிக் கொண்டு சென்றான். இரவானதால் நாளைதான் நம் ப்ரோகிராம் என்று கூறிவிட்டான். காலையில் விழித்ததும் தாத்தாவும் பாட்டியும் ஒரு பண்டிட் முன் உட்கார்ந்து அவர் எதோ மந்திரங்கள் கூற இவர்களும் கூற. பாட்டி முகத்தில் ஒரு மகிழ்ச்சி கலந்த அமைதி. அதை முடித்துவிட்டு மாமாவுடன் நாங்கள் நதிக்கரைக்கு செல்ல. ஒர் படகுப் பிரயாணம். திரிவேணி சங்கமம் என்று படகுக் காரன் எங்களை அழைத்துச் சென்றான். படகை ஒரிடத்தில் நிறுத்தி விட்டு இங்குதான் சரஸ்வதி நதி கலக்கிறது என்றான்.நான் எங்கே என்றேன். இங்குதான் பூமிக்கு அடியில் ஒடி அது கங்கை, யமுனையை சந்திக்கிறது சார். நான் இன்னும் என்னவோ கேட்க எத்தனிக்க நீங்க ஒடனே ஆதாரம் கேட்பீங்களே… உலகத்தில் எல்லாவற்றுக்கும் ஆதாரம் கிடையாது சார். நம்ம பூமி ஒரு பெரிய்ய வலை சார். இதைப் போய் நம்ம அறிவ வெச்சு ஆராயப் பாக்கீறீங்களே. அவ்வளவு சுலபமா கெடச்சுடுமா என்றான். ஒரு நம்பிக்கை சார் என்றான். நம்பிக்கையால்தான் பாட்டிக்கும், தாத்தாவிற்கும் மட்டற்ற மகிழ்ச்சி.

மனிதனின் வாழ்வில் உந்துதல் இரண்டு. ஒன்று பயம்.மரணத்தைப் பற்றிய பயம். இன்னொன்று நம்பிக்கை. நம்பிக்கை தகர்ந்தால் வாழ்க்கை கடினமாகிறது. அந்த இடத்தில் படகுக்காரன் அவர்களின் தெய்வம். அவன் மேல் அவர்கள் கொண்டிருக்கும் ஒரு நம்பிக்கை. ஒரு எதிர்பார்ப்பு.

மனதில் சமஸ்கிருத புலவன் காளிதாஸன் எழுதிய கவிதை ஒன்று நினைவு வந்தது.

இந்நாளைப் பார்,
அதன் வாழ்க்கை ஒரு வாழ்க்கை.
அதன் சிறு பகுதியாக நீ இருக்கும் நிதர்சனம்.
அந்த நாளின் மகிழ்வான வளர்ச்சி
அதன் நடவடிக்கைகளின் வெற்றி,
அந்த சாதனையின் ஒளி
எல்லாமே
நேரத்தின் அனுபவங்கள்தாம்

நேற்று ஒரு கனவு,
நாளை ஒரு தோற்றம்.
இன்று நன்கு வாழ்ந்தால் அது உன் கனவை மகிழ்ச்சியாக்கும்,
உன் தோற்றம் என்பதற்கு நம்பிக்கைத் தரும்.
எனவே இன்றைய நாளை நன்றாக கவனி.
அதை வாழ்த்து.

தாத்தா படகுக்காரனுக்கு கேட்டதிற்கு அதிகமாகவே பணம் கொடுத்துவிட்டு வந்தார்.

அடுத்தது காசி. வழியில் ஒரு வயதான தம்பதிகள் கிடைத்தார்கள். பாட்டி அவர்களுடன் பேசியவாறே வந்தாள். அவர்கள் நிலமை கொஞ்சம் மோசம். அலகாபாத்தில் அவர்களை வேறெங்கோ கூட்டிச் சென்றுவிட்டானாம் அவர்களுடைய ஆட்டோகாரன். எப்படியோ தப்பித்தால் போதும் என்று தெரிந்த ஹிந்தியில் அந்த தாத்தா நாங்கள் இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்திருக்கிறார். அவர்களுடைய திட்டத்தில் ஒரு நாள் வீணாகிவிட்டது. ஆனால் பாட்டியின் பேச்சினால் அவர்களுக்கு சற்றே நிறைவு. மாமா இருந்ததால் பாட்டிக்கு கவலையில்லை. எல்லா ஏற்பாட்டையும் அவனே பார்த்துக்கொண்டு விட்டான்.

ஏன் பாட்டி வயசானப் புறம் எல்லாரும் காசிக்கு வரா என்று கேட்டேன் நான். இல்லடா நமக்கு ஒரு குடும்பப் பொறுப்பு இருக்கு. கல்யாணத்துக்குப் பொண்ணயும், பையனும் வெச்சிண்டு காசியா வரமுடியும். நம்ம கடமையெல்லாம் முடிச்சோம்ன்னா ஒரு நெறவு, எல்லாத்துந்தேந்தும் வெலகணம்னு ஒரு மனசு வந்துடும், வரணும். பழைய காலத்துல ராஜாமார்கள் பையனுக்கு பட்டம் கொடுத்துட்டு காட்டுக்குப் போயிடுவாள்னு படிச்சிருப்பயே, அது போலத்தான் இதுவும் என்றாள்.

காசியில் கங்கை புரண்டதைப் பார்க்கவும் பாட்டியின் கண்களில் நீர். எதோ இத்தனைக் காலம் பிரிந்த ஒருவரைப் போல்.. பேசவேயில்லை. அங்கும் ஒரு படகுக்காரன். அவன் தான் விளக்கியவாறே வந்தான். சார் இங்கே காக்க கத்தாது, பூ மணக்காது, பொணம் வாடையடிக்காது. கொஞ்சம் காட் லே குளிக்கலாம் மத்த இடம் எல்லாம் பொணம் எரிக்கத்தான் என்று தொடர்ந்தான். படகில் சென்றவாறே பார்த்த போது அவன் கூறுவதின் நிதர்சனம் தெரிந்தது. எரிந்தும் எரியாதும் பிணங்கள். தம்மை எரியூட்டுவதற்காக வரிசையில் இருக்கும் பிணங்கள். இங்கே இறப்பும், எரிப்புமே ஒரு விழா போலிருந்தது. காசியிலிருப்பவர்க்கு பிணங்களைப் பற்றி பயமிருக்காது போலிருக்கிறது.

கங்கையில் குளித்தால் பாவம் போகிவிடும் என்பதில் பாட்டிக்கு எள்ளவும் சந்தேகமில்லை. அப்படியே காலையில் குளித்துவிட்டு வந்துவிட்டாள். பாட்டி உடம்பிற்கு ஏதாவது வந்துவிடும் என்றேன் நான். மனசு தாண்டா ஒடம்பு. ஒடம்புக்கு ஒரு சில கண்டிஷன் மட்டும் சாட்டிஸ்ஃபை ஆனாப் போதும் அவ்வளவுதான். சரியாத்தூங்கணும். மலம், ஜலம் ஒழுங்காப் போணும். கண்ட கண்ட ஆகாரம் சாப்டாம இருக்குணும். வணங்கி வேலை செய்யணும். ஆனால் மனசு அப்படியில்லே ரொம்ப ஜாக்கிரதையா பாத்துக்க வேண்டிய வஸ்து. மனசு கெட்டதச் சொன்னா ஒடம்பும் கெட்டததான் கேக்கும்.

பாவம் போறதுன்னா ஒடம்பு அழுக்கு இல்லடா. மனசோட அழுக்கு. கொஞ்சம், கொஞ்சாமா பாசி படந்து, சகதியா இருக்கற கொளத்தப் போல இத்தனை வருஷமுமாய் விகாரமும், ஆங்காரமும், பொறாமையும் இருக்கற மனசே நீ சுத்தமாகுன்னு குளிக்கணும். காசிக்கு வந்து மனச தூர் வாரணும்டா என்றாள். ஏன் பாட்டி அத வேறு எந்த ஊர் கொளத்துல, நதியில குளிச்சுக் கூட தூர் வாறலாமே என்றேன் சிரித்தவாறே. பாட்டியும் சிரித்தாள். கங்கை எங்கெல்லாமோ ஓடறா. ஆன இங்க குளிச்சாத் தான் பாவம் போகும்கறா..ஏன்னா நேத்து வந்ததுலேந்து எத்தன பொணத்தை பாத்திருப்ப. பொணம் பாக்கறது பழகிப் போயிடும் இந்த ஊர்ல். அது என்ன சொல்றது மனுஷனுக்கு மரணம்தான் நிதர்சனம். நெலயானது எது?. அதுனால மனச அழுக்காகம வெச்சுக்கோ. இங்கு நடக்கறத பாத்து புரிஞ்சுக்கோ அப்டீன்னு. அது தான் இங்க குளிக்கணம். குளிக்கறது ஒரு ஐதீகம்தான்.

நான் பேசவில்லை. சில விஷயங்களை எப்படி வேண்டுமானாலும் விவாதிக்கலாம். ஆனால் பாட்டி கூறியது எனக்கென்னவோ சரியென்று பட்டது.

காசியில் முடித்துவிட்டு கயா செல்வதற்கு ரயில் நிலையம் வந்தோம். அரையிருட்டு. பாட்டியும் தாத்தாவும் மாமாவும் சற்றே முன்னே போய்விட்டார்கள். பாட்டியின் குரல் கேட்டது. காலில் எதோ தட்டுப் பட்டது. சற்றே நிமிர்ந்து பார்த்தேன். ஒரு பிணம். பிணத்தில் அருகே ஒருவன் அமர்ந்து கொண்டிருந்தான். என்னவாயிற்று என்று கண்களாலேயே அந்த அரையிருட்டில் கேட்டேன். என்ன சொல்லறது சார். ஊருக்கு எடுத்துட்டுப் போறேன். போயும், போயும் ஊரெ விட்டுட்டு இங்க வந்து செத்துப் போயிட்டான். வேற இடமே கெடக்கல என்றான்.