ஜெஃப் டையருடன் ஒரு நேர்காணல்

ஈதன் நோஸொவ்ஸ்கி

மக்ஸ்வீனீஸ் பத்திரிகையின் பதிப்பாசிரிய இயக்குநர் ஈதன் நோஸொவ்ஸ்கி, த பிலீவர் பத்திரிகையின் மார்ச் 2012 இதழுக்காக எழுத்தாளர் ஜெஃப் டையரை சந்தித்து உரையாடினார். அதன் மொழிபெயர்ப்பு இது. ஜெஃப் டையர் குறித்து மைத்ரேயன் சொல்வனத்தில் இதற்கு முன்பே எழுதியிருக்கிறார் – “பார்த்தும், போர்ஹெஸ்ஸும் பின்னே டையரும் – சில அறிமுகக் குறிப்புகள்”.

“நான் பற்பல பொருள்களைப் பற்றி நிறைய புத்தகங்கள் எழுதி இருக்கிறேன். எல்லாப் பொருள்களுக்கும் ஒரே மாதிரி கட்டமைப்பையே பயன்படுத்தியிருந்தால், அதெல்லாம் ஒரு தூசுக்குச் சமமாகி விடும்..”

ஜெஃப் டையர் தன் எழுத்து பற்றி இப்படி ஒரு வர்ணனை செய்கிறார்: அமைப்பியல் தலைக் குடைச்சல்.

ஜெஃப் டையர் ‘வகைப்படுத்த முடியாத’ எழுத்தாளர் என்று பரவலாக குறிக்கப்பட்டிருக்கிறார். (நானும் இப்படிக் குறிப்பிடும் பிழையைச் செய்திருக்கிறேன்). இது புனைகதைக்கும், அ-புனைவு எனப்படுவனவற்றுக்கும் இடையே பிரித்து வைத்து, முனைப்போடு காக்கப்படும் ஒரு எல்லைக் கோட்டை வெறுப்பவர் அவர் என்பதால்தான். அவருடைய பயணக்கட்டுரைகளில் சிறுகதைகளின் சாயல் இருக்கிறது, அவருடைய ‘நேரான’ நாவல்களில் காணப்படும் நெடிய அலைவுகளோ மறைமுகமான விமர்சனங்களே. (தன்னுடைய ‘செய்யும் விருப்பம் இல்லாதவர்களுக்கான யோகா’ என்ற புத்தகத்தின் முன்னுரையில் அவரே சொல்கிறார்,’இந்தப் புத்தகத்தில் உள்ளதனைத்தும் உண்மையிலேயே நடந்தவை, ஆனால் சிலவை என் தலைக்குள் மட்டுமே நடந்தவை.’)

நான் டையரை 1996 இல் முதல் முறை சந்தித்தேன். இது நான் ஒரு இளம் பதிப்பாசிரியனாக வேலை செய்த ஃபாரார், ஸ்ட்ரௌஸ் மேலும் ஜீரௌவ் என்ற நிறுவனம் பிரசுரிக்கவென ஜாஸ் இசை பற்றிய அவருடைய ‘ஆனாலும் அழகானது’ (But Beautiful) எனும் புத்தகத்தை வாங்கிய பிறகு நடந்தது. நாங்கள் சந்தித்த முதல் சில முறைகளில் அனேகமாக திரைப்படங்களைப் பற்றித்தான் விவாதித்தோம் என நினைவு. அவருடைய ரசனை படு மோசமாக இருந்தது. “ஸ்ட்ரேஞ்ச் டேஸ் ஒரு அபார சாதனை.” அல்லது “கம்மோ (Gummo) தான் கடந்த இருபது வருடங்களில் வெளிவந்த அமெரிக்கப் படங்களிலேயே சிறந்தது.” [என்றெல்லாம் சொல்வார்.] ஆனால் அவரைத் தெரிந்து கொள்வதிலும், அவரின் புத்தகங்களைப் படிப்பதிலும் கிட்டுகிற மகிழ்ச்சியில் ஒரு பகுதிக்குக் காரணமே பண்பாட்டை ஏகமாக நுகரும் ஒரு மனிதரோடு சண்டை போடுவதுதான். அவர் மிக்க ஈடுபாட்டோடும், நகைச்சுவை உணர்வோடும் புத்தகங்கள், ஒளிப்படக் கலை, பலவிதமான இசை பற்றி எல்லாம் எழுதியுள்ளவர். சமீபத்துப் புத்தகமான ஜோனா: ஒரு அறையை நோக்கிய ஒரு பயணம் பற்றிய ஒரு திரைப்படத்தைப் பற்றிய ஓர் புத்தகம் என்ற அவருடைய சமீபத்துப் புத்தகத்தில், ஆந்த்ரேய் டார்கோவ்ஸ்கியின் ஸ்டாக்கர் (Stalker) என்ற திரைப்படத்தை ஜெஃப் டையர் தலையில் விளக்கணிந்து சுரங்கத்தில் கனிமப் பொருளை அகழ்ந்தெடுப்பது போல அணுகி எழுதி இருக்கிறார்.

நான் க்ரே ஓல்ஃப் பிரசுரத்திற்காக பதிப்பாசிரியராக இருந்து பிரசுரித்த அவரது புத்தகமான, அதர்ஒய்ஸ் நோன் ஆஸ் ஹ்யூமன் கண்டிஷன் என்கிற புத்தகத்தைப் விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் பங்கெடுக்க ஸான் ஃப்ரான்ஸிஸ்கோவிற்கு டையர் வந்தபோது நடந்த இரு உரையாடல்களிலிருந்தும், பின்னர் பரிமாறிக் கொண்ட சில மின்னஞ்சல்களிலிருந்தும் இந்த பேட்டி தொகுக்கப்பட்டிருக்கிறது.

-ஈதன் நோஸோவ்ஸ்கி

த பிலீவர்:  ஆனாலும் அழகுதான் (But beautiful) புத்தகத்தின் அமெரிக்கப் பிரசுரத்தின் துவக்கத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டுமா- குறைந்தது நம் துவக்கத்திலிருந்து?

ஜெஃப் டையர்: டைனசார்கள் பூமியில் சுற்றிய காலத்துக்கே நாம் போக வேண்டி இருக்கிறது, அப்போது நான் என் முதல் புத்தகத்தைப் பிரசுரித்தேன், ஜான் பெர்ஜர் பற்றிய ஒரு அலசல் [ வேஸ் ஆஃப் டெல்லிங்] 1986 இல். என்னை இந்தப் புத்தகம் எழுதச் சொல்லிப் பணித்திருந்தனர், ஒரு ஆயிரம் பௌண்ட் (பிரிட்டிஷ் நாணயம்) முன்பணமாகவும் கிடைத்திருந்தது. புத்தகம் எழுதவோ, வேறென்ன, ஒரு முழு வருடம் பிடித்தது, அந்தப் பிசாத்துப் பணத்தில் என்னால் காலம் தள்ளியிருக்க முடியுமா என்ன, நான் அரசுடைய வேலை இல்லாதவருக்கான உதவித் தொகையைப் பெற்றுக் கொண்டு காலம் தள்ளினேன். அது நிஜமாகவே ஒரு தீர்க்கதரிசனமுள்ள புத்தகமாகவும் அமைந்தது- தீர்க்கப் பார்வைதான், அந்தப் பிசாத்துப் பணத்தில் என்னால் காலம் தள்ளியிருக்க முடியாது, அவலப் பார்வை இல்லை- ஏனெனில் புத்தகம் முடிந்து எனக்கு இறுதிப் பிரதிகள் வர இன்னும் ஒரு வாரம் இருக்கையில், அந்தப் பிரசுர நிறுவனம், ப்ளூடோ ப்ரஸ், திவாலாகி விட்டது. எனக்கு அது ஒரு பெரிய இடியடி. ஏனெனில் இன்று நான் நிறைய புத்தகங்களை எழுதிப் பிரசுரித்து விட்டிருக்கிறேன் என்றாலும், அன்று அதுதான் என் முதல் புத்தகம். எழுத்தாளன் ஆகப் போகிறவன் என்ற நிலையிலிருந்து மாறி ஒரு புத்தகத்தில் உங்கள் பெயர் பொறிக்கப்பட்ட நிலைக்கு மாற உதவப் போகிற புத்தகம்.

இந்தப் பேட்டி என் அவதிகளின் கதையாக மாறுவதில் எனக்கு விருப்பமில்லை. அதனால் நாம் அதிலிருந்து என் முதல் நாவலுக்குப் போகலாம், த கலர் ஆஃப் மெமரி என்பது அதன் பெயர். அப்போது நான் ப்ரிக்ஸ்டனில் வாழ்ந்து வந்தேன். நம் பரந்த சமூகத்தில் நடக்கும் பல விஷயங்களில் ப்ரிக்ஸ்டன் அன்று முதலணியில் இருந்த நகரம். அதனால் ஜானதன் கேப் என்ற பிரசுர நிறுவனத்தில் அன்று பதிப்பாசிரியராக இருந்த ஃப்ரான்சஸ் கோடி என்பவரிடம், நான் ஒரு புத்தகம் எழுத விரும்புவதாகவும், அது த ப்ரிக்ஸ்டன் டயரிஸ் என்பது போல இருக்கும் என்றும் தெரிவித்தேன். சற்றேறக்குறைய என் நண்பர்களும் நானும் அப்போது நடத்திய வாழ்வைப் பற்றியதாக இருக்கும் எனத் தெரிவித்தேன். ஆனால் அந்தக் கதைகளைச் சொல்லத் துவங்குகையில், சில சம்பவங்களைத் தொகுக்கவும், சிறிது மேம்படுத்தவும் முயல்கையில், தவிர்க்க முடியாதபடி அதெல்லாம் சிறிது சிறிதாக புனைகதையாகிக் கொண்டிருப்பதை உணர்ந்தேன். படிப்படியாக அது ஒரு நாவலாகிவிட்டிருந்தது, அந்தப் பாணி மறுபடி என்னால் திரும்பப் பயன்படுத்தப்பட்டது என்றாலும், அதொன்றும் கதையால் உந்தப்பட்ட நாவலில்லை.

அப்போது அந்தப் பிரசுரகர்த்தருக்கு ஒரு புது ‘பிரம்மாதமான’ யோசனை தோன்றியது. ‘நாம ஒரு பெரிய விளம்பர நிகழ்ச்சி நடத்துவோம். நாலு எழுத்தாளர்களை ஒரே நேரம் பிரசுரிப்போம்.’ என்பது அது. கேட்க என்னவோ அபூர்வமாக இருந்தது, ஆனால் எதிர்பார்த்த மாதிரி அது வேலை செய்யவில்லை. ஒவ்வொரு புத்தகத்துக்கும் கிட்டும் கவனம் நாலுமடங்கு அதிகரிப்பதற்குப் பதில், ஒவ்வொரு புத்தகத்துக்கும் கால்வாசி கவனம்தான் கிட்டியது. அது ஒரு பெரு நாசமாகிப் போச்சு. எல்லாரும் எங்களைப் பார்த்துக் கை கொட்டிச் சிரிக்கலாச்சு. முதல் புத்தகத்துக்குப் பிரசுரகர்த்தர் திவாலானார், அடுத்ததோ ஒரு பெருந்தோல்வி.

பிலீவர்: த கலர் ஆஃப் மெமரி புத்தகத்துக்குச் சில நல்ல மறுவினைகள் இருந்தனவே- சில மதிப்புரையாளர்கள் ஒரு தலைமுறைக்கு அது ஒரு உரைகல்லாக இருந்ததாக அடையாளம் கண்டனர். ப்ரிக்ஸ்டன் பகுதியைப் பற்றிய ஆகச் சிறந்த நாவல் என்று கருதினர். இந்த நன்மதிப்பு, அங்கீகாரம் எல்லாம் பிற்பாடுதான் கிட்டியதா?

ஜெ.டை: அதற்கு நிறைய நல்ல மதிப்புரைகள் வந்தன, ஆனால் அதற்குத் தன்னளவில் என்ன நற்குணங்கள் இருந்தன என்பதெல்லாம், நான்கு புத்தகக் கும்பலின் பிரசுரம் என்ற திட்டத்தின் மீது எழுந்த இகழ்வுப் பொழிவில் காணாமலடிக்கப்பட்டு விட்டது. அதற்குப் பிறகெ, 1989 இல் நான் ஃப்ரான்செஸிடம் சொன்னேன், ஜாஸ் பற்றி ஒரு புத்தகம் எழுதப் போகிறேன் என்று, ஏனெனில் அப்போது நான் ஜாஸ் மீது பைத்தியமாக இருந்தேன். அவர் நியுயார்க் போகவும், அங்கு இருந்து கொண்டு ஜாஸ் பற்றிய புத்தகம் ஒன்றை எழுதவும் தேவையான பணத்தை எனக்குக் கொடுத்தார். நான் ஏதும் புத்தக முன்வடிவெல்லாம் எழுதிக் கொடுத்திருக்கவில்லை. சும்மா சொன்னேன், ‘இது ஒரு மிக நல்ல புத்தகமாயிருக்கும் என்று நான் உறுதி தருகிறேன்.’ அது ஒரு அருமையான, இளகிய ஏற்பாடு. அதனால் நான் நியுயார்க்கிற்குப் போனேன், கிரமமாக ஒரு புத்தகம் எழுதினேன் – சொல்லப் போனால், அதை மிக சுலபமாகவே எழுதிவிட்டேன்.

நான் திரும்பி வந்த போது, ஃப்ரான்செஸ் கேப் நிறுவனத்தை விட்டு விலகி இருந்தார். நான் என் எழுத்துப் பிரதியைக் கொடுத்த போது, நான் டி.ஸி. காட்வின் என்றே இன்று வரை அழைக்கும்- அவரை டேவிட் காட்வின் என்று உலகம் அறியும், ஆனால் எனக்கு அவர் டி.ஸி. காட்வின் தான் – நபர் பொறுப்பேற்றிருந்தார். புத்தகத்தின் எழுத்துப் படிவத்தைக் கொடுத்த போது, டி.ஸி. காட்வினுடைய மறுவினை, ‘சரி, இந்த ஜனங்களெல்லாம் யார்?’ ‘இந்த ஜனங்கள்’ என்று குறிப்பிடப்பட்டவர்கள், தெலோனியஸ் மாங்க், சார்லஸ் மிங்கஸ், பட் பொவல் ஆகியோர். அந்த ஒரு காரணத்துக்காகவே அவரை கொதிக்கிற எண்ணெய் சட்டியில் எறியலாம். அந்தப் புத்தகத்தை ஏதோ போகிற போக்கில் பிரசுரித்தார்கள், அதாவது அதை அச்சிட்டார்கள், ஆனால் டி.ஸி. கார்டன் இதன் மீது சற்றும் உற்சாகம் காட்டவில்லை என்பதைச் சொல்லவும் தேவையில்லை. ஆனால், இந்தப் புத்தகத்துக்கு நிறைய உற்சாகமான வரவேற்பு தரும் மதிப்புரைகள் கிட்டின, அது சாமர்செட் மாம் பரிசையும் பெற்றது, படிப்படியாக நிறைய இசைக் கலைஞர்களின் கவனத்திற்கு இது வந்தது. ஆனாலும்- இதற்கு அப்புறம் நான் என் வருத்தங்களைப் பற்றிப் பேசுவதைத் தாண்டி வந்து விடுவேன் என்று உறுதி கூறுகிறேன் – கேப் நிறுவனம் இந்தப் புத்தகத்தின் உலக உரிமையை வைத்திருந்தது, இதை எங்கேயும் விற்க அவர்கள் எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. இந்த அநியாயத்தைக் குறித்து நான்கு வருடத்திற்கும் மேல் நான் எக்கச் சக்கமாகப் பொருமிக் கொண்டிருந்தேன் என்று நினைக்கிறேன், குறிப்பாக இந்தப் புத்தகத்தை அமெரிக்காவில் வெளியிடாதது குறித்து மிகவுமே எரிச்சலடைந்தேன். இப்போது ஏகப்பட்ட வயதாகி விட்ட நிலையில், அந்த நான்கு வருடங்கள் என்பது அப்படி ஒன்றும் பெரிய கால இடைவெளி என்று தெரியவில்லை, ஆனால் அன்று….

பிலீவர்: அது அமெரிக்காவில் பிரசுரிக்கப்பட்டிருக்கவில்லை, ஆனால் அந்தப் புத்தகமோ அமெரிக்காவுக்கு நீங்கள் எழுதிய காதல் கடிதம் போன்றதில்லையா?

ஜெ.டை: சரியாகப் பிடித்தீர்கள். அமெரிக்காவில் இருந்தது எனக்கு மிகவும் பிடித்திருந்தது- எனக்கு அமெரிக்க எழுத்தாளர்களை மிகவும் பிடிக்கும்- ஆனால் எனக்கு அமெரிக்காவில் பிரசுரிக்கப்பட முடியவில்லை. இதன் பிறகு நாம் முன்னே போவோம், 1966க்கு, எஃப் எஸ் ஜி நிறுவனம் இதைப் பிரசுரித்த போதுக்கு. அது நேர்ந்த போது நான் உண்மையிலேயெ பெரும் கிளர்ச்சி அடைந்திருந்தேன்; என் வாழ்வைப் புரட்டிப் போடும் மாறுதல்கள் நிகழ்ந்த தருணங்களில் அது ஒன்று.

பிலீவர்: எஃப் எஸ் ஜி எடுத்த துணிகர முடிவு நல்லபடியாக முடிந்தது, கிட்டிய மதிப்புரைகள் பிரமாதமாக இருந்தன, அமெரிக்க விமர்சகர்கள் உங்களைக் கீழ்க்கண்ட காரணங்களுக்காக வறுத்தெடுக்கவில்லை- அ) ஜாஸ் விமர்சகரல்ல நீங்கள் ஆ) அமெரிக்கரில்லாத போதும் ஜாஸ் பற்றி எழுதுகிறீர்கள். என்னை நேட் ஹெண்டாஃப் என்பவர் [ஒரு ஜாஸ் விமர்சகர்] தொலைபேசியில் திடீரென்று கூப்பிட்டார். நீங்கள் பட் பொவலைச் சந்தித்ததே இல்லை என்று நான் தெரிவித்தபோது, அவர் கொஞ்சம் செய்வதறியாது குழம்பினார். நான் நினைவிலிருந்து சொல்கிறேன், நீங்கள் யாரையெல்லாம் பற்றி எழுதினீர்களோ அவர்களில் எவரையும் சந்தித்திருக்கவில்லை, அவர்களில் பெரும்பாலானவர்கள் நிகழ்ச்சிகளில் இசைத்ததையும் நீங்கள் நேரடியாகப் பார்த்ததில்லை. ஷார்லாட் ஜெவெரினின் ஸ்ட்ரெய்ட், நோ சேஸர் என்கிற திரைப்படத்தைப் பார்த்ததிலும், அதை மிகக் கூர்மையாகக் கவனித்ததிலும் இருந்துதான் உங்கள் புத்தகத்துக்கு மிக்க சக்தியே கிட்டியது.

ஜெஃப்: அது நிச்சயம். ஸ்ட்ரெய்ட், நோ சேஸர் திரைப்படத்தில் இருந்த வீட்டுத் திரைப்படத் (தொழில்முறைத் தயாரிப்பல்லாதவை) துண்டுப் பகுதிகளில் மாங்க் (தெலோனியஸ் மாங்க்) பற்றி இருந்தவை மிக ஆச்சரியகரமானவை. அந்தப் படம் 1988 இல், மிகக் கச்சிதமாக, நான் அந்தப் புத்தகம் எழுதிக் கொண்டிருந்த அதே காலத்தில் வெளியிடப்பட்டது. அது அபாரமான உதவியாக இருந்தது. ஆனால் நான் வாரத்தில் நான்கைந்து ஜாஸ் இசை நிகழ்ச்சிகளுக்குப் போய் வந்து கொண்டிருந்தேன். வில்லேஜ் வான்கார்டிற்கு நிறையப் போனேன், அங்குதான் எல்லா பெரும் இசைக் கலைஞர்களின் இசைப் பதிவுகளும் செய்யப்பட்டன. கர்க் லைட்ஸீ வாசித்ததை எங்கோ ஓரிடத்தில் கேட்கப் போனது இன்னும் நினைவிருக்கிறது- அங்கிருந்த ஒளியமைப்பின் விசித்திரத்தால், அவருடைய வழுக்கைத் தலையோடு அவர் கொஞ்சம்போல கழுகை ஒத்த தோற்றம் தந்தார்- அவருடைய நிழலுக்கே ஒரு ஆவியுருத் தன்மை இருந்தது. அதனால் இந்தப் புத்தகத்தில், அடிப்படையில் நான் கர்க் லைட்ஸீக்கு நேர்ந்ததைப் பார்த்து விட்டு அதை பட் பொவெலுக்கு மாற்றிச் சித்திரித்திருந்தேன். நான் பார்த்திராத ஜாஸ் இசைஞர்களிடமிருந்து, நான் இடைவிடாது பார்த்த நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருந்த ஜாஸ் இசைஞர்கள் வரை ஒரு அறுகாத ஜாஸ் மரபுத் தொடர் இருந்ததான உணர்வு நிஜமாக எனக்கு இருந்தது. அதுவோ வாக்மான் (நடக்கையில், ஓடுகையில் கூட இசை கேட்க உதவிய ஒரு எலெக்ட்ரானிக் கருவி.) காலம், அதனால் நான் நியுயார்க்கைச் சுற்றி நடந்தபடி, நான் யாரை எல்லாம் பற்றி எழுதிக் கொண்டிருந்தேனோ அவர்களின் இசையைக் கேட்டுக் கொண்டிருந்தேன். இன்று இப்படி இசையைக் கேட்பது மிகச் சகஜமான ஒரு விஷயமாகி விட்டது. அன்று இப்படிக் கேட்கையில் எனக்கு ஒரு அபாரமான புலன் கலப்பு (ஸினஸ்தீஷியா) நேர்ந்தது, ஏனெனில் இந்த இசை என் தலையின் மத்தியில் ஒலித்தது. நகரைச் சுற்றி நடந்தபடி இருக்கையில், மிங்கஸுக்கும் மற்ற (அப்புத்தகத்தில் வந்த) இசைஞர்களுக்கும் நியுயார்க் எப்படித் தோற்றமளித்தது என்பதைக் கற்பனை செய்வது மிகச் சுலபமாக இருந்தது.

பிலீவர்: பட் பியூடிஃபுல் புத்தகத்தில் துவங்கி, உங்களுடைய கருப்பொருளாகத் தொடர்ந்து காணப்படுவது ஒன்றென்றால் அது, மரபும், தன்னிச்சையாக சஞ்சரிப்பதும் என்ற இரு வழிகளைப் பற்றியது- இதுதான் ஜாஸ் இசையின் அடிப்படைத் தர்க்கமும். இதை நான் குறிப்பாக தி ஆன்கோயிங் மொமெண்ட் என்ற புத்தகத்தில் கவனித்தேன், அதுவோ ஒளிப்படக் கலை பற்றிய ஒரு விமர்சனப் புத்தகம், ஆனால் மறைமுகமாக உங்களுடைய எழுத்து பற்றிய ஒரு கொள்கையறிவிப்பு போலத்தான் இருந்தது.

ஜெ.டை: அந்தக் கட்டத்தில்தான் (பட் பியூடிஃபுல் புத்தகத்தை எழுதும்போது) நான் ஜ்யார்ஜ் ஷ்டைனரின் ரியல் ப்ரஸென்ஸஸ் புத்தகத்தைக் கண்டேன். அந்தப் புத்தகத்தின் முதல் கட்டுரை நான் படித்த அனைத்திலுமே என்னை மிகவும் பாதித்த ஒன்று. உங்களுக்குத் தெரிந்திருக்கும், அவர் அதில் சொல்கிறார், “விமர்சனமே இல்லாத ஒரு குடியரசை நாம் கற்பனை செய்து பார்க்கலாம்,” மேலும் அவர் கருத்துத் திட்டம் பற்றிப் பேசுகையில்- எந்தக் கலையுடைய மரபும் இதுதான் – அது விமர்சனம் என்பதன் செயல்படுத்தப் பட்ட வடிவுதான் என்கிறார். (ஹென்ரி) ஜேம்ஸின் போர்ட்ரெய்ட் ஆஃப் அ லேடி நாவல், ஒரு விதத்தில் ஜ்யார்ஜ் எலியட்டின் மிடில்மார்ச் புத்தகம் பற்றிய ஒரு கட்டுரைதான் (என்கிறார்).

பிலீவர்: இது தி ஆங்ஸைடி ஆஃப் இன்ஃப்லூயன்ஸ் புத்தகத்தை விட மிகச் சுவாரசியமாக இருக்கிறதே!

ஜெ.டை: இல்லையா பின்னே? நான் அந்தக் கட்டுரையைப் படித்தேன், அது ஜாஸ் மரபில் அப்பட்டமாக அப்படியே வெளிப்படுவதாக எனக்குத் தெரிந்தது. இருபது வருடம் முன்னே தள்ளுங்கள், மறுபடி அதேதான் ஒளிப்படக் கலையில் நிகழ்கிறது- அல்லது அதுவே மறுபடி நிகழ்கிறதாக நான் கவனிக்கிறேன் . இந்தப் போக்கைத்தான் ‘தி ஆன்கோயிங் மோமெண்ட்’ டில் நான் விவரிக்க முயல்கிறேன்.

பிலீவர்: அதர்வைஸ் நோன் ஆஸ் த ஹ்யூமன் கண்டிஷன் புத்தகத்துக்கு ‘த நேஷன்’ பத்திரிகையில் ஒரு வேடிக்கையான மதிப்புரை வெளியாயிற்று. அந்தக் கட்டுரையாசிரியர் பட் பியூடிஃபுல் புத்தகத்தை மிக விரும்பியிருக்கிறார், நல்ல உழைப்பும், பொறுப்புமுள்ள விமர்சகராக இருப்பதால் அவர் நீங்கள் எழுதிய அனைத்தையும் தேடிப் படித்திருக்கிறார், ஒவ்வொரு கல்லையும் புரட்டிப் பார்த்து அங்கு ஜாஸ் பற்றிய இன்னொரு புத்தகம் உண்டா என்று தேடியிருக்கிறார், அப்படி ஏதும் கிட்டவில்லை என்றதும் நொறுங்கிப் போய் விட்டிருக்கிறார். உங்களுடைய இதர எழுத்தையெல்லாம் படித்ததில் அவருக்கு ஏனோ ஏமாற்றமே இருந்தது போலத் தெரிகிறது. நானோ, ‘அட கடவுளே! இப்படியுமா தவறாகப் படிப்பீர்கள், அவருடைய எல்லாமே ஜாஸ் புத்தகங்கள்தானே,’ என்று நினைத்தேன்.

ஜெ.டை: இங்கு முக்கியமான விஷயம் என்னவென்றால்,‘பட் பியூடிஃபுல் புத்தகத்தில் நான் ஒரு குறிப்பிட்ட வகை இசைக்கு உரித்தான சுதந்திரங்களைக் கடன் வாங்கிக் கொண்டிருந்தேன். அந்த ஜாஸ் புத்தகம் தன்னிச்சைப்படி சுதந்திரமாகத் திரியும் உலா போல அமைக்கப்பட்டிருந்தது. அந்த ஒளிப்படம் மீதான புத்தகமோ ஒளிப்படக் கலை எப்படி இயங்குகிறதோ அதே போன்ற உருவமைப்பை அடையவும், (நடை) பாணியில் உறவு கொண்டாடவும் முயன்றது. நான் பல கருதுபொருள்களைப் பற்றி ஏகப்பட்ட புத்தகங்களை எழுதி விட்டிருக்கிறேன், ஆனால் எல்லாப் பொருட்களுக்கும் ஒரே அணுகலைக் கொண்டு எழுதியிருந்தால் அவை எல்லாம் குப்பையாக இருந்திருக்கும். ஒவ்வொரு புத்தகமும் அதன் கருதுபொருளுக்கு ஏற்ற ஒரு உருவமைப்பையும், நடையையும் பெறுகிறது என்பதுதான் நாம் கவனிக்க வேண்டியது.

பிலீவர்:  தி ஆன்கோயிங் மோமெண்ட், பட் பியூடிஃபுல், ஜோனா ஆகிய மூன்றையுமே நான் மொழிபெயர்ப்புத் திட்டங்களாகப் பார்க்கிறேன். அவை எல்லாம் அந்தரங்கமான, இலக்கிய தியானங்கள் அல்லது சொல்லில்லாத ஒரு கலையின் அலையடிப்புகள். அந்த மூன்றுமே, ஒவ்வொரு ஊடகமும் என்ன செய்ய முடியும், என்ன செய்யவியலாது என்பதைப் பற்றியே பேசுவதாக எனக்குப் படுகிறது. இதைத் தெரிந்தேதான் செய்தீர்களா- ஒரு திரைப்படத்தைப் பற்றியோ, இசை பற்றியோ புத்தகம் எழுதுகையில் ஒரு பக்கத்தில் எது அவற்றை நல்ல நாடகத் தன்மையோடு கொடுக்கிறது என்று கவனித்து எழுதினீர்களா?

ஜெ.டை: நான் எழுதியவற்றிலேயே மிகச் சுலபமாக எழுத வந்த புத்தகங்கள், பட் பியூடிஃபுல என்பதும், ‘ஜோனா’வும். ஒரு வேளை இரண்டிலுமே எழுதப் பொருள் ஏற்கனவே இருந்தது என்பதனால் அப்படி (எளிதாக) இருந்திருக்கலாம். எனவே இரண்டுமே, முடிவில், வடிவில் வெறுமனே உருமாற்றிப் பெற்ற பதிவுகளைப் போலத்தான் இருந்தன. இரண்டுமே அமைப்பில் எந்தப் பிரச்சினையையும் கொடுக்கவில்லை. ஒளிப்படம் பற்றிய புத்தகத்தைப் போல மூளைக் குடைசலாக இல்லாமல், ஒப்பீட்டில், ஜோனா நேரடியானதுதான். நேரான உரைத்தலுக்கும், விரிசுற்றாக விவரிப்பதற்குமிடையில் ஒரு உடன்படிக்கையை அடையத் தரகு வேலை செய்ய இருக்க வேண்டி இருந்தது, அவ்வளவுதான்.

பிலீவர்: உங்களுடைய முந்தைய புத்தகங்களைப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தேன் நேற்று, எவ்வளவு தூரம் உரைநடையில் உங்கள் குரல் மாறி வந்துள்ளது என்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டேன். உங்கள் எழுத்தில் எப்போதுமே ஒரு சாதுரியமான செறிவு இருக்கிறது, மேலும் உங்கள் நிலைகளைத் திடீரெனத் திருப்பிப் போடும் உங்கள் அணுகல் உங்களுக்கு புதிர் முடிச்சுகளில் ஆழ்ந்த ஈடுபாடு இருப்பதைக் காட்டுகிறது. ஆனால் அவற்றில் பெரும்பாலானவற்றில் உங்கள் உரைநடையில் ஒரு அதி வனப்புள்ள செழிப்பு இருந்ததே, அதை சமீபத்தில் காண முடிவதில்லை. அந்தப் புத்தகங்களை நான் நிஜமாகவே மிக விரும்புகிறேன், ஒரு கோணத்தில் அவற்றில் உங்களுக்கு அதீத உணர்ச்சியில் காலூன்றிய நிலை இருந்தது என்றும், இன்னொரு பார்வையில் அவை கொஞ்சம் சொல் பெருக்கம் கொண்டவை என்றும் சொல்ல முடியும்.

ஜெ.டை: [சிரிக்கிறார்]

பிலீவர்: ஆனால், உங்கள் கட்டுரைகளும், புனைகதைகளும் உண்மையிலேயே மாறித்தான் போயிருக்கின்றன இன்று!

ஜெ.டை: ஆமாம், நீங்கள் சொல்வது முற்றிலும் சரிதான். கொஞ்சம் நல்லதனமாக இதைப் பார்ப்போமே. த கலர் ஆஃப் மெமரியில் ஒரு கவிதைக் குணம் இருக்கிறது, அதே போல அந்த ஜாஸ் புத்தகத்திலும்தான். சமீபத்துப் புத்தகமான ஜெஃப் இன் வெனீஸ், டெத் இன் வாராணசியிலும் சில கவிதா பூர்வக் கணங்கள் இருந்தன, ஆனால் இத்தகைய குணம் எப்போதுமே ஒருவர் இளைஞராக இருக்கையில் அதிகமாக வெளிப்படும். அதன் பாதகமான அம்சம் என்னவென்றால், துவக்க காலப் புத்தகங்களைப் பார்க்கையில் கொஞ்சம் மிகையாக எழுதப்பட்டமை அவற்றில் நிறையவே இருக்கிறது என்று எனக்கு இன்று தோன்றுகிறது. இன்றானால் அவற்றை நான் வெட்டி எடுத்து விடுவேன். இதில் எழும் கேள்வி என்னவென்றால், அப்படி வெட்டி எடுப்பதை அப்புத்தகங்களில் கிட்டும் கிளர்ந்த உணர்வைக் குறைக்காமல் செய்ய முடியுமா என்பதுதான்.

பிலீவர்: ஒரு வேளை அவற்றில் உள்ள உணர்வுக் கிளர்வானது, கருப்பொருளைச் சார்ந்ததோ என்னவோ, ஃபிட்ஸ்ஜெரால்டின் இலக்கியம் போல? அவற்றில் ஃபிட்ஸ்ஜெரால்ட் எல்லா இடங்களிலும் தெரிய வருகிறார். எப்போதுமே உங்கள் கவனம் சந்தோஷத்தின் நடுவில் புதைக்கப்பட்டிருக்கும் வெடிகுண்டான துக்கத்தின் பேரிலேயே செல்கிறது என்று தோன்றுகிறது.

ஜெ.டை: [உரக்கச் சிரிக்கிறார்] கிளர்ந்த உணர்வுடைய மறுபக்கம், கீழ்ப்பக்கம் அதுதானே, இல்லையா? வாலிபத்தின் வாக்குறுதிகள் எல்லாம் சாம்பலாவது என்பதுதான் அது. ஆனால் நீங்கள் சொல்வது முற்றிலும் சரிதான். பிரிட்டிஷ் எழுத்தில் ஃபிட்ஸ்ஜெரால்ட் காணப்படுவது என்பது மிகவும் சுவாரசியமான ஒன்றுதான். எழுத்தாளர்களிலேயே மிக அமெரிக்கராகத் தெரியும் ஃபிட்ஸ்ஜெரால்டின் பாதிப்பு பிரிட்டிஷ் எழுத்தாளர்கள் மீது எத்தனை தூரம் உள்ளது என்பதை யாரும் ஆய்ந்து பார்த்திருக்கிறார்களா என்பது எனக்குத் தெரியவில்லை. ஒரு விதத்தில் பார்த்தால், த கலர் ஆஃப் மெமர யில் நான் மறு உருவாக்கம் செய்ய முயன்றது ப்ரைட்ஸ்ஹெட் புத்தகத்தில் காணப்படுவதைத்தான், ப்ரிக்ஸ்டன் நகரில் உள்ள கௌன்சில் அடுக்ககங்களில் இருந்த ஓய்வாக வாழும் வசதி பெற்ற சமூகக் குழுக்களின் கிளர்ச்சி பெற்ற உணர்வுகளைப் பற்றிதான், ஆனால் அதே போன்ற இரட்டை மனோநிலையோடும் கூட. அதைத்தான் நீங்கள் ஃபிட்ஸ்ஜெரால்டிடம் பெறுகிறீர்கள் இல்லையா? அந்தப் பாழைத் தன்னுள் கொண்ட அமைதி, அந்த அமைதித் தன்மையாலேயே பீடிக்கப்பட்டு வீணாக்கப்பட்ட அமைதி. த கலர் ஆஃப் மெமரி இதைத்தான் அழுத்திச் சொல்கிறது- அதன் அத்தியாயங்கள் தலைகீழாகச் செல்கின்றன, சூன்யம்- ஆறு-சூன்யம் என்று துவங்கி, பின் கீழிறங்கி மூன்று ஜீரோக்கள் வரை போகின்றன. அதனால் காலக் கடிகையில் மண் துகள் கீழிறங்குவதைப் போன்ற உணர்வு கிட்டுகிறது, ஒரு முடிவை நோக்கி காலத் துளி எண்ணப்படுவது போன்று தெரிகிறது.

பிலீவர்: அதை நீங்கள் செய்யக் காரணம், கதையுரைத்தலில் ஒரு இறுக்கம் தேவைப்படுவது என்பது உங்களுக்குப் பிடித்தமில்லாத ஒன்றாகி விட்டது என்பதுதானே?

ஜெ.டை :[சிரிக்கிறார்] ஆமாம். அப்படி ஒரு வாழ்வு வாழ்வதற்கான வாய்ப்புகள் எப்படியுமே வற்றிக் கொண்டிருந்தன. இன்று இருபதுகளில் உள்ள இளைஞர்கள் அப்படி ஒரு வாழ்க்கை வாழ ஒரு வாய்ப்பும் இன்று இல்லை. அந்தக் கட்டத்தில் இருந்த இன்னொன்று, எய்ட்ஸ் அப்போது மறுபாலுறவு கொள்வோரின் விழிப்புணர்வில் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. அந்தத் தாக்கத்தை இன்று நினைவு கூர்வது மிகக் கடினமான செயல். அதுவோ 80’களின் நடுவில் நிச்சயமாக, உறுதியாக, மிகவுமே எதிரிடையாக இருந்தது. ஹாலிங்ஹர்ஸ்ட் அதை ஒரு வாறாக கைப்பற்றி இருந்தார், தன் த ஸ்விம்மிங் பூல் லைப்ரரி யில், ஆனால் இதெல்லாம் ஒரு முடிவு வரப்போகிறது என்ற உணர்வைத்தான் கொடுத்திருந்தன.

பீலீவர்: வழக்கமாக உங்களுக்கு அவ்வப்போது எதில் ஈடுபாடு இருக்கிறதோ அந்தப் பொருள்களைச் சுற்றியே நீங்கள் தாவித் தாவிப் போய்க் கொண்டிருந்தீர்கள், ஆனால் பட் பியூடிஃபுல், பாரிஸ் ட்ரான்ஸ் ஆகிய இரண்டு புத்தகங்களுக்கு மட்டும் நீங்கள் புத்தகம் எழுதுவதற்காகவென்றே பயணங்களை மேற்கொண்டீர்கள்.

ஜெ.டை: நான் 1991 இல் பாரிஸுக்குப் போனேன், டெண்டர் ஈஸ் த நைட் டை நான் என் விருப்பப்படி எழுதினால் எப்படி இருக்குமோ அதை எழுதுவதற்காகவென்றுதான் அந்தப் பயணம் என வெளிப்படையாகச் சொல்லி இருந்தேன். வியப்பென்ன இருக்கிறது இதில்- அந்த நாவலை எழுதுவதில் நான் தோல்வியுற்றேன்! இன்று எனக்குத் தெரிகிறது, அப்படி ஒரு நாவலை எழுதுவதற்கான அனுபவம் எனக்கிருக்கவில்லை. ஆனால், அங்கிருக்கையில், ஏதோ தோன்றி, ஸோம் பகுதியில் உள்ள முதல் உலகப் போரில் இறந்தவர்களின் கல்லறைகளைப் பார்க்கப் போனேன். என்னுடைய ஃபிட்ஸ்ஜெரால்ட் நாவலைக் கை விட்டு விட்டு, முதல் உலகப் போரைப் பற்றிய அந்த என் புத்தகத்தை, த மிஸ்ஸிங் ஆஃப் த ஸோம் என்ற மிகச் சிறிய புத்தகத்தை- ஒரு நீண்ட கட்டுரை அளவுதான் அது – எழுதினேன். போரை நாம் எப்படி நினைவு கூருகிறோம் என்பதைப் பற்றிய புத்தகம் அது. நிஜமாகவே, எனக்கு ஒரு முக்கியமான புத்தகம் அது- அத்தியாயங்கள் இல்லாத, சுதந்திரமாகத் திரியும் சிந்தனைகளைத் தொகுத்த புத்தகம், அதற்கென ஒரு தாளகதியெல்லாம் இருந்தது அதில், தாளகதி என்றால், வாக்கியங்களின் கதியாக இல்லாமல், மொத்த அமைப்பின் தாளகதியோடிருந்தது.

பிலீவர்: அது ஒரு முக்கியமான புத்தகம்: உங்களுடைய மொத்த எழுத்தில் நெடுக ஓடுகிற உயிர்த் துடிப்பும், நகைச்சுவையும் கலந்த ஒரு விமர்சனக் குரல் அந்தப் புத்தகத்தில்தான் அமைப்பானது. அதன் அலசல்கள் அல்லது படிப்பாளரின் வாதங்கள் ஒரு சுவாரசியமான தன்னிலை வெளிப்பாடான உரையொன்றில் புதைத்துக் கொடுக்கப்பட்டிருந்தன.

ஜெ.டை: மிகச் சரி. பல விஷயங்களின் சிறு துண்டு விவரங்களைத் தொகுத்து எழுதினாலும் – சிலைகள், பயணம், இலக்கிய விமர்சனம் இப்படி- எப்படி நம்மால் பல விதமான விஷயங்களூடே உலாவுகையில் ஒரு குரலை அடைய முடிகிறது, எப்படி அந்தக் குரல் வளைந்து கொடுத்து, மொத்த அமைப்போடு ஒன்றி வருவதாகவும் இருக்கிறது என்பதைக் கண்டு பிடித்து மிகவும் மகிழ்ச்சியடைந்திருந்தேன்.

பிலீவர்: அவுட் ஆஃப் ஷியர் ரேஜ் புத்தகம் இதிலிருந்து சிறிது காலத்திற்குப் பிறகு வளர்ந்து வெளிவருகிறது, எனக்கு ஒரு சந்தேகம், அந்தக் காலகட்டத்தில் நீங்கள் படித்தது ஏதாவது உங்களுக்கு திடீரென ஒரு திறப்பைக் கொண்டு வந்தனவா, இது உங்களுக்கு ஒரு முன் மாதிரியாக அமைந்ததா, அல்லது நீங்கள் தற்செயலாக இந்த வகை அணுகலைக் கண்டறிந்தீர்களா?

ஜெ.டை: அந்தக் கட்டத்தில் நான் நிறைய குண்டேராவைப் (Milan Kundera) படித்திருந்தேன் என்று சம்சயிக்கிறேன், அவரிடமிருந்து நாவல் போன்ற கட்டுரை என்னும் ஒரு கருத்தை உள்வாங்கிக் கொண்டிருந்தேன் போலிருக்கிறது. ஸோம் புத்தகம் ஸெபால்டின் (Sebald) எந்தப் புத்தகத்துக்கும் முன்னால் வெளிவந்தது என்பதை இங்கு சொல்லி விடுவது உசிதம், ஏனெனில் மக்கள் நான் என் புத்தகங்களில் ஒளிப்படங்களைச் செருகுவதை ஸெபால்டிடமிருந்து பெற்றேன் என்று நினைத்து விடக் கூடாதே! என் புத்தியில் அப்போது ஏராளமாக ரோலாண் பார்த்திடமிருந்தும் (Roland Barthes) பெற்றவை இருந்தன, நிறைய ப்ராட்ஸ்கியும் உண்டு, ஆனால் இப்போது யோசிக்கையில் அந்தக் கட்டத்தில் நான் வேறு எதையெல்லாம் படித்தேன் என்பதை நினைவு கூர்வது கடினமாக இருக்கிறது. எனக்கு என்ன நினைவிருக்கிறதென்றால், நான் அப்போது ஓரு பகுதியை இங்கிலாந்தில் எழுதினேன், ஏனெனில் அந்தப் புத்தகம் கடைசியில் ஒரு இலக்கிய-விமர்சனப் புத்தகம் போலாகி விட்டிருந்தது, எனவே அந்தப் புத்தகங்களெல்லாம் என் கைவசம் இருக்க வேண்டி இருந்தது, அவற்றில் பல எனக்கு இங்கிலாந்தின் நூலகங்களில் மட்டுமே கிட்டி இருக்கும்.

பிலீவர்: அதாவது வாசகர்களுக்கு நீங்கள் ஒரு முறையாகப் பயின்ற படிப்பாளி, ஏதோ சாதாரண ஆளில்லை என்று-

ஜெ.டை: [சிரிக்கிறார்] ஆமாம், ஏதோ ஒரு பொழுது போகாத சோம்பேறி இல்லை என்று. மேலும், முக்கியமாக, அது என்ன வகைப் புத்தகம் என்றால், ஒரு நாவலைப் போலவே, எனக்கு அதை எழுத ஏதும் ஒப்பந்தம் கிட்டவில்லை. நான் பாட்டில் அதை எழுதினேன், பிறகு அதை விற்கலாம் என்ற நம்பிக்கையோடு.

பிலீவர்: உங்களுடைய துவக்க வருடங்களை விடக் கடந்த பத்தாண்டுகளில், நீங்கள் நிறைய ‘நேரான’ விமர்சனங்களை எழுதி இருக்கிறீர்கள். தெளிவாகவே உங்களுக்கு இப்போது நிறைய அங்கீகாரம் கிட்டி இருக்கிறது- உங்கள் குரல் தைரியமாக ஒலிக்கிறது, உங்கள் அலசல் திறன் கூர்மையாக இருக்கிறது, அல்லது நீங்கள் எதைப் பற்றிப் பேசுகிறீர்களோ அது உங்களுக்கு நன்கு தெரிந்திருக்கிறது [சிரிக்கிறார்]- ஆனால் உங்களுக்கிருக்கும் ஒரு குறை என்னவென்றால், நிறைய விமர்சகர்கள் உங்களுடைய போதை மருந்துக்குட்பட்டு எழுதியது போன்ற பகுதிகளைப் பற்றியே விலாவரியாக எழுதித் தள்ளுகிறார்கள், அதற்கான பொறுப்பு என்னவோ, இதை நான் சொல்லியே தீர வேண்டும், முழுக்க உங்களுடையதுதான்.

ஜெ.டை: [சிரிக்கிறார்] ஆமாம்- யாரோ ஒருவர் சொன்னார், என் முதுகுக்கு ஒரு கம்பியை நானே கட்டிக் கொண்டிருக்கிறேன் என்று.

பிலீவர்: அன்று என்னவோ, இப்படி பலவிதமாக வெளிப்பட்ட உங்கள் படைப்புகளை எப்படி எடுத்துக் கொள்வதென்று யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. அதனாலேயே, இது உங்களுக்கும் நினைவிருக்கும், துவக்கத்தில் உங்களுடைய அவுட் ஆஃப் ஷியர் ரேஜ் புத்தகத்தை எஃப் எஸ் ஜி பிரசுர நிறுவனத்துக்கென வாங்க நான் அனுமதிக்கப்படவில்லை. பட் பியூடிஃபுல் ஒரு சிறு அளவில் திடீரென பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. உங்கள் ஏஜண்ட், அலெக்ஸாண்ட்ரா ப்ரிங்கில், எனக்கு லாரன்ஸ் புத்தகத்திற்கான பிரதியை அனுப்பினார், எனக்கு அது உடனேயே பிடித்துப் போய் விட்டது. அது அபாரமாக இருந்தது, அப்போது நான் நினைத்தேன் – எனக்கு’பட் பியூடிஃபுல் பிடித்திருந்தது என்ற போதும்- இந்தப் புத்தகம் கூடுதலான கிளர்வூட்டுவதாக இருந்தது, ஏனெனில் அது என் தலைமுறைக்கு உகந்ததாகவுமிருந்தது. தற்காலக் குரலாகவும், புதிதாகவும் இருந்தது. அதிலிருந்த உற்சாகமின்மையும், நிலைப்பில்லாமையும், நோய் பீடித்த தோற்றமும் எனக்குப் புரிந்தன. ஆனால் நானோ (அதிகாரமில்லாத) ஒரு துவக்க நிலை பதிப்பாசிரியர், அந்தப் புத்தகத்தை மேலிடத்தை ஏற்கச் செய்வது எளிதல்ல என்பது எனக்குத் தெரிந்திருந்தது. அதுவோ டி.எச்.லாரன்ஸைப் பற்றிய புத்தகமொன்றை எழுதுவது எப்படி முடியாது என்று சொல்லும், உளைச்சலான, பித்து பிடித்து எழுதியது போன்ற ஒரு புத்தகம். இப் புத்தகத்தை எப்படியோ மேலாக எடுத்துக் காட்டும் ஒரு குறிப்பை எழுதி ஜானதன் காலாஸ்ஸிக்கு அனுப்பினேன், ஏனெனில் அவருக்கு இந்தப் புத்தகம் பிடிக்காது என்ற பயம் எனக்கிருந்தது. அவருக்கு அந்தப் புத்தகம் அவ்வளவு பிடிக்கத்தான் இல்லை, அல்லது அது ரொம்பவே சுய திருப்திக்காக எழுதப்பட்டதாக அவர் நினைத்திருக்கலாம், அதுவோ அப்படித்தான் இருந்தது. [சிரிக்கிறார்] அதைப் பற்றி வேறென்ன சொல்வதென்று எனக்குத் தெரியவுமில்லை, நான் பதிலாகச் சொல்ல விரும்பியது, “ஆமாம், ஆனால் அதுதானே புத்தகத்தின் நோக்கமே.” நான் நிறையவே குழைந்து, தொல்லை கொடுத்தேன், அதனால் இரண்டாம் கருத்து கேட்க அதை ராஜர் ஸ்ட்ரௌஸிற்கு அனுப்பச் சொல்லி என்னிடம் சொன்னார். நான் மனமுடைந்து போயிருந்தேன் என்று அவருக்குத் தெரிந்திருந்தது போலும். அப்போது எனக்கு எல்லாம் தொலைந்தது என்று புரிந்தது, ஏனெனில் நான் நினைத்தது என்னவென்றால், ‘ஜானதனுக்கே புரியவில்லை என்றால், ராஜருக்கு இது நிச்சயம் பிடிபடாது.” அதேபோல, சில நாட்கள் கழித்து, ரொம்ப அடிபட்ட ஒரு பிரதி எனக்குத் திரும்பியது. ராஜரிடமிருந்து வந்திருந்தது- பக்கங்கள் எங்கே பார்த்தாலும் நீட்டிக் கொண்டு, ஒரே ஒரு வார்த்தை மட்டும் என் குறிப்பின் மீது சிவப்புப் பேனாவால் எழுதப்பட்டிருந்தது, “படு மோசம்.” நான் மிகவுமே நொறுங்கிப் போனேன், அதனால் நான் அந்தப் புத்தகத்தை மறுத்து விட நேர்ந்தது.

ஜெ.டை: ஆமாம், அது எனக்கு ரொம்பவே மனச் சோர்வளித்தது. எனக்கு ஒரு மறுப்புக் கடிதம் வந்தது, அதில் இப்படி ஏதோ சொல்லப்பட்டிருந்தது, ” இந்த கிறுக்குத் தனத்தை எல்லாம் இத்தோடு எழுதித் தீர்த்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஒரு வேளை வேறு ஒரு புத்தகம் எழுதுவீர்களோ?” அது ஏமாற்றமாக இருந்தது, ஆனால், நினைவு வையுங்கள், அதுவரை பிரசுரம் என்பதைப் பொறுத்தவரை, எனக்கு ஏமாற்றம்தான் கிட்டி இருந்தது, எனவே இந்தத் தோல்வியை ஏற்பது கடினமாக இருந்தாலும், இதற்கு முன்னர் விழுங்க முடியாத தோல்விகளையும் விழுங்கிப் பழகி இருந்தது இப்போது உதவியாக இருந்தது.

பிலீவர்:[சிரிக்கிறார்] எனக்கு நினைவிருக்கிறபடி, அப்போது நான் உங்களுக்கு ஒரு ஆலோசனை சொல்லி இருந்தேன், ஒளிப்படத்தைப் பற்றி ஒரு புத்தகம் எழுதலாம் என்று. அந்த ஆலோசனை ஆச்சரியமூட்டும் வகையில் நடக்கப் போவதை எதிர்பார்த்த மாதிரி இருந்தது. என் நினைப்பு சரி என்று நம்புகிறேன். [பதிப்பாசிரியர்: ஆமாம், நினைவு சரிதான்.] நீங்கள் டபிள் டேக் பத்திரிகைக்கு ஒளிப்படத்தைப் பற்றி எழுதத் துவங்கி இருந்தீர்கள் என்று நினைக்கிறேன், நீங்கள் ஒளிப்படங்களை வைத்துக் கதைகளாக எழுதியதை நான் மிகவும் விரும்பினேன். அந்தக் கட்டத்தில் நான் ஒளிப்படக்கலை பற்றி, ஸாண்டாகின்‘ஆன் ஃபோடோக்ராஃபி புத்தகத்தைத் தவிர வேறெதையும் படித்திருக்கவில்லை. நீங்கள் மிகச் சரியாகச் சுட்டினீர்கள், ஒளிப்படக்கலை குறித்த அந்த ஒரு புத்தகத்தைத் தவிர வேறு பல அருமையான நூல்கள் இருப்பதை- குறிப்பாக காமெரா லுஸிடா போன்ற பலவற்றை. கடைசியில், அவுட் ஆஃப் ஷியர் ரேஜ் புத்தகம் இங்கிலாந்தில் பல மாதங்கள் கழித்து வெளிவந்தது, நான் அலெக்ஸாண்ட்ராவை அந்தப் புத்தகத்தின் மதிப்புரைகளை எனக்கு ஃபாக்ஸ் செய்யுமாறு கேட்டிருந்தேன். அவற்றை ஒவ்வொன்றாக நான் ஜானதனின் தபால் பெட்டியில் போட்டுக் கொண்டே இருந்தேன். ஒரு முறை டாய்லட் அறையில் அவரைப் பார்த்தபோது, அவரை விடாது பிடித்துக் கொண்டு, ” ஜேம்ஸ் உட் எழுதிய மதிப்புரையைப் படித்தீர்களா?” என்று கூடக் கேட்டேன் என நினைவு. அவரை மிகவுமே படுத்தி எடுத்து விட்டேன். கடைசியில் என்னை முழுப் பதிப்பாசிரியராக உயர்த்தினார்கள், அப்போது ராஜர் என்னிடம் சொன்னார், இனி நீ எடுக்கிற முடிவுக்கு நீயே முழுப் பொறுப்பு, கீழே விழுந்து உன் முகத்தைச் சப்பையாகிக் கொள் என்று விட்டு விடப் போகிறோம்- இதோ 7500 டாலர்கள், நீ தொண தொணக்கும் அந்தப் புத்தகத்தை வாங்கிக் கொள் என்றார்.

ஜெ.டை: எனக்கு அந்த முடிவு ரொம்பப் பிடித்திருந்தது. எஃப் எஸ் ஜியின் வழக்கப்படி அவர்கள் எழுத்தாளர்களைத்தான் தேர்ந்தெடுக்கிறார்கள், குறிப்பிட்ட புத்தகங்கலை அல்ல என்பதால்- ஆனால் என் விஷயத்தில் அந்த ஒரு புத்தகத்தை மட்டும்தான் வாங்கினார்கள்.

பிலீவர்: அந்தப் புத்தகத்தில் எந்த கட்டத்தில் நீங்கள் ‘பெர்ன்ஹார்டிய’க் குரலைக் கண்டு பிடித்தீர்கள்? எழுதத் துவங்கும்போதே அப்படி நேர்ந்ததா, இல்லை எழுதியது உருப்படியாக வரவில்லை என்று ஆனபோது, அந்தக் குரலைக் கண்டு அதைப் பிடித்துக் கொண்டீர்களா?

ஜெ.டை: அந்தப் புத்தகத்தைத் துவங்கும்போது நான் முழுதும், தலையோடு காலாக, தாமஸ் பெர்ன்ஹார்டால் பாதிக்கப்பட்டிருந்தேன். அப்போது நான் எழுதிய பத்திரிகைக் கட்டுரைகளில் கூட ஒரு பெர்ன்ஹார்டிய நரம்போட்டம்தான் இருந்தது என்று நினைக்கிறேன். அந்த மாதிரி ஒரு தொனி, நிஜத்தில் நான் இருப்பதை விட மோசமான அளவில் என் தோற்றத்தை முசுடாகக் காட்டியது என நினைக்கிறேன்.

பிலீவர்: அப்போது உங்களைத் தெரிந்து கொள்ளத் துவங்கி இருந்தேன், அத்தனை நன்றாகத் தெரிந்திருக்கவில்லை. என்றாலும் பிறரிடம் சொன்னது நினைவிருக்கிறது, “அட கடவுளே! அந்தப் புத்தகத்தில் இருக்கும் எப்போதும் சுணங்கிக் கொண்டு, குறை சொல்லிக் கொண்டு இருக்கும் குரல் ஒரு கட்டுக் கதை, வெறும் தோற்றம்தான், ஜெஃப் உண்மையில் மிகவும் சுலபமானவர்.’ வருடங்கள் பல ஆனபின், இப்போது தோன்றுகிறது, அந்தக் குரல்தான் உங்களைப் பொறுத்தவரை இருப்பதிலேயே உண்மையான குரல்!

ஜெ.டை: [சிரிக்கிறார்] அந்தக் குரல் எனக்கு மிகவும் எளிதாகவே கிட்டுகிற ஒன்றுதான். நான் ஒரு இங்கிலீஷ்காரனானதால் இப்படி என்று நினைக்கிறேன். எதற்கெடுத்தாலும் குறை சொல்வது ஒரு அமெரிக்கருக்கு அத்தனை எளிதாகக் கைவருவதில்லை. ஒரு வேளை அந்த பெர்ன்ஹார்டியக் குரல்தான் என் குறை சொல்லலை ஒரு பிராந்தியக் குறைபாடாக இல்லாமல் ஆக்கியதோ என்னவோ.

பிலீவர்: அமெரிக்கக் குறை சொல்லலில் ஒரு கோபமும், எரிச்சலும் சாயமாக ஏறி இருக்கும் என்று நினைக்கிறேன். ஹென்ரி மில்லரின் தி ஏர்-கண்டிஷண்ட் நைட்மேர் அல்லது அது போன்ற வேறு புத்தகத்தை நினைத்துப் பாருங்கள், அது அமெரிக்காவைக் குரோதமாகக் கீழிறக்கி வைத்த புத்தகம், அப்படி ஒன்றும் நகைச்சுவையானதல்ல-

ஜெ.டை: நிஜமாகவே, அதுதான் எனக்கு முக்கியமாக இருந்தது. அந்தப் புத்தகத்தில், நான் ஒரு இடத்தில் அலசிப் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே, கியர் மாற்றாமல், இருந்த இடத்திலேயே, ஆறு பென்ஸ் நாணயமளவு வட்டத்திலேயே திரும்பி, கிட்டத்தட்ட முழு கோமாளித்தனமாக எழுதுவதைச் செய்தேன் – திரும்பக் கூட இல்லை, நின்ற இடத்திலேயே ஓடுவது போல இருந்தேன். அது பிரசுரமாகுமுன் எனக்கு மிகவுமே கவலையாக இருந்தது, பிரசுரமாகி வாசகர்களிடம் இருந்து பிரிட்டனில் அத்தனை ஆதரவு கிட்டியதும் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. பிறகுதான், நீங்கள் சொல்லிக் கொண்டிருந்ததுபோல, நீங்கள் இந்த ஆதரவைப் பார்த்து (அமெரிக்காவில் அந்தப் புத்தகத்தைப்) பிரசுரித்தீர்கள், நான் மறுபடி எழுந்து ஓரிடத்திலேயே ஓடிக் கொண்டிருந்தேன், இந்த முறை அமெரிக்காவில்.

பிலீவர்: அதற்குப் பிறகு வந்ததுதான் பாரிஸ் ட்ரான்ஸ். புனைகதை என்ற மாறுவேடத்தில் அது நிறைய விமர்சனத்தைக் கொண்டு துவங்குகிறது- பாரிஸ் ட்ரான்ஸ் நிறைய விதங்களில் சினிமா மோகத்தைப் பற்றிய நாவல்தான். பலவருடங்களுக்கு முன் நீங்கள் என்னிடம் சொன்னதை நான் நினைவு வைத்திருக்கிறேன், “ஓ ஆமாம், நீர்மூழ்கிக் கப்பல் படங்களைப் பற்றிய ஒரு கட்டுரையை நான் உரையாடலில் ஒளித்து விட முயன்றேன்.” அதில் என்ன செய்ய முயன்றீர்கள் என்று விளக்குவீர்களா?

ஜெ.டை: அதை (பாணியை) நான் டிலிலோவிடமிருந்து பெற்றேன். டிலிலோவின் புத்தகங்களில் எல்லாம், பாத்திர உரையாடல்களில் சிறு சிறு கட்டுரைகளெ நமக்குக் கிட்டும், குறிப்பாக த நேம்ஸ் புத்தகத்தில், திரைப்பட இயக்குநரான வோல்டேரா அல்லது ஏதோ அப்படி ஒரு பெயர் அவருக்கு. ஆனல் முக்கியமாக அந்தப் புத்தகத்திற்காக, நான் பாரிஸ் போயிருந்தேன். அந்த டெண்டர் ஈஸ் த நைட்i புத்தகத்தை எழுதுவதில் தோல்வி அடைந்திருந்தேன். பிறகு, பல வருடங்கள் கழித்து, நான் அதைச் சுலபமாக எழுதி விட்டேன், ஆனால் லாரன்ஸ் புத்தகத்தை எழுதியபிறகுதான். எனவே அதை முதல் தடவை கை விட்டது உண்மையில் ஒரு நல்ல முடிவுதான். அந்தப் புத்தகம், பாரிஸில் என் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டுமென்று நான் கனவு கண்டேனோ அவை எல்லாவற்றையும் பூர்த்தி செய்யும் ஒரு புத்தகம். இதில் உள்ளது நான் மற்றவர்கள் பாரிஸில் வாழ்ந்த வாழ்க்கையைப் பற்றியது, ஆனால் எனக்கு அந்த வாழ்க்கை கிட்டவில்லை. எனவே (அக்கதையில்) நான் நிறைய நண்பர்களை லண்டனிலிருந்து பாரிஸிற்கு ஏற்றுமதி செய்தென், நான் அவ்வப்போது கொள்ளும்/ விலகும் செர்பிய பெண் நண்பியின் ஒரு சுருக்கமான பாரிஸ் விஜயத்தை ஒரு வருட விஜயமாக நீட்டினேன்! திரும்பிப் பார்க்கையில் எனக்குத் தோன்றுகிறது, நமது இருபதுகளில், ஒரு வேளை நமது முப்பதுகளில் கூட எனலாம்- அந்தக் கட்டம்தான் நட்புகளுக்கான மிகச் சிறந்த வருடங்கள். பிறகு என் இன்றைய வயதுக்கு நீங்கள் வருகையில், உங்களுக்கு அத்தனை அருமையான நட்புகள் இருப்பதில்லை, பதிலாக நாம் நிறைய விருந்துகளுக்குப் போகிறோம். உங்களுக்கு நினைவிருக்கிறதா, நான் அந்தப் புத்தக அட்டையில் என் செர்பிய பெண் நண்பியின் ஒரு போலராய்ட் ஒளிப்படத்தைப் பதிக்க விரும்பினேன், நீங்கள் அதை மறுத்து விட்டீர்கள், என்ன ஒரு சிடுமூஞ்சித்தனம் அது!

பிலீவர்: எனக்கு நினைவிருக்கிறபடி, நீங்கள் ஆபாசமாக எழுதத் துவங்கிய புத்தகத்தில்தான் அப்படி நடந்தது, ஒரு வேளை அது ரொம்ப ‘நிஜமாக’ இருந்ததோ என்னவோ! [சிரிக்கிறார்]

ஜெ.டை: இல்லவே இல்லை, நான் இதை உடனே சொல்வேன், அது அந்த மாதிரிப் போலராய்ட் படமில்லை, ஒரு அருமையான குணசித்திரப் படம்தான். நான் ஹாலிங்ஹர்ஸ்டின் தற்பாலுறவு குறித்த இலேசான ஆபாசப் புத்தகங்களைப் படித்திருந்தேன், அதே போல மறுபாலுறவு குறித்து ஒரு புத்தகம் எழுத முடியுமா என்று சோதித்துப் பார்க்க விரும்பி இருந்தேன், அவ்வளவுதான்.

பிலீவர்: அலெக்ஸாண்ட்ரா அந்த ஸெக்ஸி பகுதிகளை எடுத்துவிடச் சொல்லி உங்களிடம் கேட்கவில்லை?

ஜெ.டை: அவர் சில பகுதிகள் இல்லாமல் இருப்பது நல்லது என்று நினைத்தார். ஆனால், அப்படி, அதெல்லாம் கடினம். முந்நாளில் இருந்த கருப்பு வெளுப்புப் படங்களின் பாணியில், ஒரு முத்தக் காட்சி வந்ததும் படம் தெளிவிழந்து மசமசவென்றாவது போல ஆக்கலாம்தான், ஆனால் நாம் எழுதும் நடையில் எல்லாம் மிக வெளிப்படையாக இருக்கிறதென்றால்- என் புத்தகங்களில் மனிதர்கள் ஒரு ஆப்பிளை எடுப்பது, அவர்கள் பற்கள் அதைக் கடிப்பது இத்தியாதி எல்லாம் மிகத் தெளிவாகப் பார்க்க முடியும்படி இருக்கும்- பாத்திரங்கள் படுக்கையறைக்குள் நுழைந்ததும் திடீரென்று காட்சியை மூட்டமாக, பனிப்புகைக்குள் ஒளித்து எழுதினால் விசித்திரமாக இருக்கும். அதனால் எனக்குத் தோன்றுகிறபடி, படுக்கையறைக்குள் அவர்கள் பின்னே போனோமென்றால், வெறும் உரைத்தலில் நேரிய தொடர்ச்சி இருக்கவேண்டும் என்பதற்காக மட்டுமாவது, அங்கே என்ன நடக்கிறது என்பதைச் சொல்ல நமக்கு உரிமை உண்டு.

பிலீவர்: நீங்கள் புனைகதைக்கும், அபுனைவுகளுக்குமிடையே வேறுபாடு எதையும் காண மறுக்கிறீர்கள் என்பது பிரசித்தி பெற்ற விஷயம் என்றாலும், அபுனைவில் நீங்கள் இப்படி ‘ஆபாச’மாக எதையும் எழுதுவதில்லையே.

ஜெ.டை: நிஜத்தைச் சொன்னால், ஒரு தடவை, தி ஆன்கோயிங் மொமெண்ட் புத்தகத்தின் மதிப்புரை த நேஷனில் (பத்திரிகை) வெளிவந்தபோது இந்தக் கருத்து வெளியாயிற்று. நாம் ஷ்டீய்க்லிட்ஸ் (ஜியார்ஜியா) ஓகீஃபை வைத்து எடுத்த ஒளிப்படங்களைப் பற்றி ஒரு கட்டுரை எழுதிக் கொண்டிருந்தேன். அதான், அந்த ‘ஆபாசப்’ படங்களைப் பற்றியது. அது நிஜமான பிரச்சினை, ஏனெனில் அந்தப் படங்கள் மிக வெளிப்படையானவை- உங்களுக்குத் தெரிந்திருக்கும், ஓகீஃப் தன் கால்களைத் திறந்து காட்டும் படங்கள்- அதுதான் ஷ்டீய்க்லிட்ஸின் முக்கிய கவனத்தில் இருக்கிறது, எனவே நம் கவனத்தையும் ஈர்க்கிறது என்கிற போது, நாம் எப்படி அதைப் பற்றிப் பேசுவது?

பிலீவர்: ஓ ஆம், அங்குதான் நீங்கள், உங்களுடைய பல்கலைப் படிப்பாளிக் குரலில் குறிக்கிறீர்களில்லையா, “ஜ்யார்ஜியா ஓகீஃபின் குறி (pussy)” என்று?

ஜெ.டை: அதை “ஜ்யார்ஜியா ஓகீஃபின் குறி (pussy) என்றுதான் சொல்ல முடியும் என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறதில்லையா? ஏனெனில் அதைத்தான் ஷ்டீய்க்லிட்ஸ் பார்த்துக் கொண்டிருந்தார்- அதனால்தான் அதை அவர் ஒளிப் படமெடுத்துக் கொண்டிருந்தார். த நேஷனில் வெளியான அந்த மதிப்புரை சொன்னது, “இது எவ்வளவு நாகரீகமற்றும், கீழ்த்தரமாகவும் இருக்கிறது’ அல்லது அதுபோல எதையோ. ஆனால் நான், ஷ்டீய்க்லிட்ஸ் என்ன செய்ய முயன்றார் என்பதைச் சொல்ல அதுதான் மிகப் பொருத்தமான சொல் என்று நினைத்தேன்.

பிலீவர்: எந்தக் கட்டத்தில் நீங்கள் எழுதத் துவங்கி இருப்பது புனைகதை அல்லது அபுனைவு என்று உங்களுக்குத் தெரிய வரும்? எனக்குத் தெரியும், நீங்கள் அப்படிப் பிரித்துப் பார்ப்பதில்லை. நீங்கள் அப்படிக் கறாராகப் பிரிக்காததற்கு ஒரு காரணம், உங்கள் கற்பனையில் கதைகளை யோசிப்பது போலவேதான் கட்டுரைகளிலும் பல விஷயங்களை இட்டுக் கட்டுகிறீர்கள் என்பதுதான் என்று எனக்குத் தெரியும். ஆனால் உங்கள் புனைவல்லாத படைப்புகளில் நீங்கள் உறுதியான, தூலமான ஏதோ ஒரு பொருளை- ஒரு நபர், நீங்கள் பயணம் செய்த ஒரு ஊர் இப்படி- வைத்துத்தான் துவங்குகிறீர்கள். ஆனால் ஒரு நாவலோ ஒரு சம்பவத்திலிருந்து, ஒரு சூழ்நிலையிலிருந்து துவங்க முடியும்.

ஜெ.டை: ஆ, யோகா ஃபார் பீபிள் ஹூ காண்ட் பீ பாதர்ட் டு டூ இட் புத்தகத்தில் பல பகுதிகள், அவை அனேகமாகச் சிறுகதைகள்தான்.

பிலீவர்: ஆனாலும், அவற்றில் பலவும், இன்று நின்று போய்விட்ட, மகத்தான ‘ஃபீட் பத்திரிகைக்காக தயாரிக்கப்பட்டன என்று கேள்விப்படுகிறோமே.

ஜெ.டை: ஃபீட் பத்திரிகைக்காகத் தயாரிக்கப்பட்டவை அனேகமும் புத்தகத்தில் மறுவார்ப்பு செய்யப்பட்ட விஷயங்களிலிருந்து நிறையவே மாறுபட்டிருந்தன். உதாரணமாக, டெட்ராய்ட் பற்றிய அந்த ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அவருக்கு நான் செய்து கொடுத்தது அனேகமாக ஒரு செய்தியாளரின் அறிக்கை போலத்தான் இருந்தது, அது ஒரு குறிப்பிட்ட குரலில் எழுதப்பட்டது என்பதை நான் ஒத்துக் கொள்வேன், ஆனாலும் புத்தகத்தில் எழுதப்பட்டிருந்ததோ அதைச் சொல்பவரின் மனோநிலையைப் பற்றித்தான் பெருமளவும் இருந்தது. விஷயம் இதுதான் என்று நான் நினைக்கிறேன்: துவக்கத்தில் புனைவுக்கும் அபுனைவுக்கும் இருந்த வேறுபாடுகள்- அது நடந்ததா, இல்லை நடக்கவே இல்லையா போன்றன- நம்மை வெகுதூரம் அழைத்துப் போவதில்லை. அங்கிருந்து எங்கே போய் நீங்கள் இந்த வேறுபாட்டை நிறுவ விரும்புகிறீர்கள்? என்னைப் பொறுத்தவரை வெளியில் நிறுவப்படக் கூடிய ஒரு எதார்த்தத்தின் அடிப்படையில் இருப்பதை விட, அந்த வேறுபாடு உருவமைப்பு பற்றித்தான் இருக்க முடியும். அப்படி ஆனால் அந்த உருவமைப்பின் குணாம்சங்கள் என்ன? நாம் எப்படி அவற்றை அறிந்து கொள்ள முடியும்? இது நம்மை மேற்பட்டதும் முக்கியமானதுமான ஒரு கேள்விக்கு இட்டுச் செல்கிறது- வாசகர்கள் ஒரு படைப்புருவுக்குக் கொணரக் கூடிய எதிர்பார்ப்புகள் பற்றியது அது: அவர்கள் ஒரு புத்தகம் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்று எதிர்பார்க்கிறார்கள் என்பது பற்றியது. அவர்கள் படிக்க வந்த ஒன்று இப்படி இருக்குமென்று நினைத்துப் படிக்கத் துவங்கினால், அது வேறு விதமாக நடக்கிறது என்று, அவர்கள் வேறொரு உருவமைப்போடு பொருத்திப் பார்க்கும் விதத்தில் நடக்கிறது என்று அறியத் தொடங்கினால் மக்கள் நிரம்பவே குழம்பிப் போகிறார்கள். அது தன்னளவில் நல்ல வடிவழகோடு இருந்தாலும் கூட இந்தக் குழப்பம் எழுகிறது. பலவிதமான எச்சரிக்கைக் குரல்கள் எழத் தொடங்குகின்றன [ அபாயச் சத்தங்களை எழுப்புகிறார்] ஏனெனில் புத்தகம் அதனிடம் இருக்க வேண்டிய ஒரு பொது வடிவு என்று கருதப்பட்ட விதத்தில் நடக்காததால் இப்படி. இயன் மக் ஈவானைப் படிப்பதில் மக்களுக்கு நிரம்ப மகிழ்ச்சி எழப் பல காரணங்களில், அவர் ஒரு பிரமாதமான எழுத்தாளர் என்பதைத் தாண்டி, அவருடைய புத்தகங்கள் எப்படி நடந்து கொள்ளும் என்பது அவர்களுக்கு உறுதியாகத் தெரிவது ஒரு காரணம்.

பிலீவர்: அவர் ஒரு எந்திரத்தைப் படைக்கிறார், அதில் நமக்கு ஒரு புனைகதைக்கான அனுபவம் கிட்டுகிறது.

ஜெ.டை: அந்த வகைப் புத்தகத்தைப் படிப்பதில் மக்கள் மிகத் தேர்ச்சி பெற்றவர்கள். ஸெபால்ட் போன்ற ஒருவரைப் பொருத்து, நாம் எங்கிருக்கிறோம் , அவருடைய புத்தகங்கள் என்ன செய்கின்றன என்பன நமக்குப் புலப்பட மாட்டேனென்கின்றன என நான் நினைக்கிறேன். என் புத்தகங்களைப் பொருத்த வரையிலும் கூட அப்படித்தான் ஆகிறது என்று நினைக்க நான் விரும்புகிறேன். ஜெஃப் இன் வெனீஸ் புத்தகத்திலும் இப்படி. நான் என்ன சொல்ல விரும்புகிறேன் என்றால், ஒவ்வொரு தளத்திலும், அது ஒரு நாவல்தானா என்ற கேள்வியை எழுப்பிக் கொண்டே இருக்கிறது.

பிலீவர்: இது என்னை, ஜான் பார்த்துடைய த லிட்ரேச்சர் ஆஃப் எக்ஸாஷன் (புத்தகத்தை) நினைக்கத் தூண்டுகிறது. அது, உளநிலை எதார்த்த நாவல் என்பது ஒரு தனி வகையாகவே ஆகிவிட்டது, அதன் வழிமுறைகள் புளித்துப் போய்விட்டன என்று வாதிட்டது. அதேபோல, எத்தனையோ சோதனை முறை எழுத்தாளர்கள் என்று அறியப்படும் மத்யமத் தர எழுத்தாளரெல்லாம், பார்தல்மெ, பிஞ்ச்சான், போர்ஹெஸ், கால்வினோ, பெக்கெட் மேலும் காஃப்காவுக்கு மிகவுமே கடன்பட்டிருக்கிறார்கள். அந்த வகை விஷயங்களும் இப்போது ஓய்ந்து போய்விட்ட தோற்றம் இருக்கிறது, பார்த் சொன்னதைப் பார்த்தால். நுட்பமான வாசகர் எவருக்கும் இந்த வகைப் புத்தகங்கள் எப்படி இயங்கும் என்பது இதற்குள் நன்றாகவே தெரிந்து விட்டிருக்கும்- ஒரு கதையின் செயற்கைத் தன்மையைக் குறித்த கதை, இது நிஜமா இல்லையா, அல்லது ஒரு கதை சொல்லி கதையைச் சொல்கிறாரா அல்லது அவரே சொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறாரா போன்றன- இந்த மாதிரிக் கேள்விகளெல்லாம் கூட சலிப்பானவையாகத் தெரிகின்றன என்று சொல்ல விரும்புகிறேன்.

ஜெ.டை: பழைய பாணி உளநிலை எதார்த்த நாவலா, அல்லது ஜான் பார்த்தா என்று தேர்ந்தெடுக்கும் நிலையில் நாம் தள்ளப்பட்டால், நாம் முந்தையதைத்தான் தேர்ந்தெடுப்போம் என்று நினைக்கிறேன்.

பிலீவர்: ஆனால், இந்த இரண்டையும் விட மேலான, மாற்றான தேர்வுகள் உண்டு, அவற்றைத்தான் நீங்கள் தேடித் துருவுகிறீர்கள் என்று நினைக்க நான் விரும்புகிறேன்.

ஜெ.டை: நிச்சயமாக, நான் அதைத்தான் செய்வதாக நினைக்கிறேன். ஆனால் ‘சோதனை’ முறையாக அல்ல.

பிலீவர்: ஒரு வீட்டை நாம் சில தடவைதான் வெடி வைத்துப் பிளக்க முடியும். இருந்தாலும், ஜெஃப் இன் வெனீஸ் புத்தகம் அதன் அசாதாரணமான அமைப்பால் என்னை வியக்கவே வைத்தது.

ஜெ.டை: நிறைய பேர் சொல்லி விட்டார்கள், ‘ ஓ அது ஒன்றும் ஒரு நாவலே இல்லை- அது இரண்டு அரை நாவல்களைச் சேர்த்துத் தைத்ததுதான்,’ என்று. இங்குதான் பதிப்பு வேலை சம்பந்தப்பட்ட நம் உறவு வெளித் தெரிய வருகிறது, ஏனெனில் நீங்கள் எதிர்மறையாகவே செயல்பட்டிருந்தாலும், அந்தப் புத்தகம் இன்றிருக்கும் வடிவுக்கு நீங்கள்தான் முழுப் பொறுப்பு ஏற்க வேண்டும். நீங்கள் என் புத்தகத்தின் அதிகார பூர்வமான பதிப்பாசிரியர் இல்லை என்றாலும் அதை உங்களுக்குத்தான் அனுப்பி வைத்திருந்தேன், நீங்கள் என்ன சொன்னீர்கள் என்று எனக்கு நினைவிருக்கிறதென்றால், இதில் ஒரு ஆஷன்பாஹியன் கணம் முதல் பாகத்தில் இருக்க வேண்டும், நம்மை அது தயார் செய்யும்-

பிலீவர்: பின்னால் வரும் ஏமாற்றத்துக்கு.

ஜெ.டை: ஆமாம், அந்த இரண்டு பகுதிகளை இன்னும் முழுமையாக அது இணைக்கும் என்று. அது ஒரு நல்ல கருத்து என்று என்னால் பார்க்க முடிந்தது. அதனால் அதைச் செய்யத் துவங்கினேன், ஆனால் என்னால் அதைச் செய்ய முடியவில்லை- கொஞ்சமும் முடியவில்லை. அது ஒரு மலையேற்றம் போலிருந்தது. அப்போது எனக்கு வேறு ஒரு அழகான முடிவு தோன்றியது, உங்களுடைய ஆலோசனைக்கு என் மறுவினையாக. ஆஹா, நான் இந்தப் பிரச்சினையைத் தீர்க்கப் போவதில்லை, மாறாக அதை மேலும் மோசமாக்கப் போகிறேன் என்பதை நான் உணர்ந்தேன். எனவே அந்த இரு பகுதிகளை ஒரு அருமையான வலுவான உரைப் பகுதி மூலம் இணைப்பதை விட்டு விட்டு, எந்தத் தொடர்பும் இல்லாததாக்கி விட்டேன். இந்த முறையில், இரண்டாவது பகுதியில் உள்ள கதை சொல்லி முதல் பகுதியில் இருந்தவர்தான் என்பது சிறிதும் தெளிவாக இல்லை. அந்தத் தெளிவான உரைப்பகுதி மூலம் தொடர்பு புலப்படுவதற்குப் பதிலாக, நமக்கு ஒரு ஐம்பது அல்லது நூறு சிறிய, திரும்பச் சொல்லும் கணங்கள், முக்கியமாகவே தெரியாத சிறு சொற்களிலும், விவரங்களிலும் புலப்பட்ட கணங்கள், அவற்றை மக்கள் புரிந்து எடுத்துக் கொள்ளாவிட்டாலும் கூட ஏதோ விதத்தில் அவர்களுள்ளே அவை ஏதோ விதத்தில் ரீங்கரிக்கும். அந்த இரு பகுதிகளும் இணைத்துக் கட்டப்படத் தேவை இருக்கவில்லை, ஆனால் அவை இரண்டும் ஒன்றோடு மற்றது நிச்சயமாகச் சார்ந்தே இருந்தன.

பிலீவர்: அவ்வளவு கச்சிதமாக நாவலைத் தப்பாகப் படித்ததால் உங்களுக்கு உதவினேன் என்பதில் நான் மகிழ்கிறேன். ஒருவேளை நீங்கள் அதிலிறங்கியதும் முன்னைவிடக் கூடுதலாக ஈடுபாட்டை அடைந்தீர்களோ என்னவோ.

ஜெ.டை: நிச்சயமாக அப்படித்தான். உங்களுக்குத் தெரியுமா, அதில் இருந்த எதிரொலிகள்- முன்னாலும் கொஞ்சம் இருந்தன, அப்புறம் நான் கொஞ்சம் சேர்த்தேன், அந்த வேலை மிகவும், மிகவுமே மகிழ்வூட்டுவதாக இருந்தது. கதை சொல்வதற்கான உயிர்மரபணு என்னிடம் இல்லாததை அந்தப் புத்தகத்தின் அமைப்பைக் கொண்டு சரிக்கட்டி விட இது இன்னொரு வழியாக இருந்தது.

பிலீவர்: நீங்கள் அடிக்கடி சொல்லி இருக்கிறீர்கள், சொந்தமாகக் கதைகள் அல்லது கதைத் திட்டங்களை யோசிக்கும் திறன் உங்களுக்கு இருந்ததே இல்லை என்று. இப்போது என்னவென்றால், ஜோனா வில் ஒரு திரைப்படத்தின் கதைத் திட்டத்தை உங்கள் திட்டமாக மாற்றிக் கொண்டிருக்கிறீர்கள், அந்தத் திரைப்படத்திற்கும் கதைத் திட்டம் என்று ஒன்றும் இல்லை என்பதோ வேறு விஷயம்.

ஜெ.டை: உண்மையாகப் பார்த்தால், அந்தப் படத்திற்கு ஒரு வலுவான, ஆனால் மிக எளிமையான, கதைத் திட்டம் இருக்கிறது. டார்கோவ்ஸ்கியின் முந்தைய படமான ‘மிர்ரர்’-ஐப் போல இல்லை இந்தப் படம். மூன்று ஆண்கள் ஒரு (மர்ம)ஸ்தலத்தை நோக்கிப் பயணம் போகிறார்கள். அந்த நேர்கோடான, மிக எளிமையான கதைத் திட்டமும், அந்தப் படம் பேசுகிற பல பெரிய விஷயங்களுமாகச் சேர்ந்து உரைத்தலில் தூலம் கடந்துயர்ந்த சிந்தனையைப் பெற உதவுகின்றன- பக்கவாட்டில் அலைவது அந்தப் பயணத்தில் ஒரு முக்கிய அம்சம்- அது எனக்கு மிகப் பிடித்திருந்தது.

பிலீவர்: நீங்கள் அந்தப் புத்தகத்தை, “ஸ்டாக்கரின் சுருக்கம்” என்று வருணித்திருந்தீர்கள். அது மிகவுமே அடக்கமான ஒரு வருணனை. என் கருத்தில், சுருக்கங்கள் இயல்பாகவே சிறிதும் நாடகத் தன்மையற்றவை, ஆனால் இந்தப் புத்தகம் மிகத் துரிதமாக ஓடிப் போய்விடுகிறது. அத்தனை இறுக்கம் இதற்கு எங்கிருந்து கிட்டுகிறது என்று சொல்வீர்கள்? வேறு விதமாகச் சொன்னால், அனேக வாசகர்கள் ஒரு போதும் பார்த்திருக்காத ஒரு படத்தின் கதைச் சுருக்கம் என்று சொல்லப்படுகிற ஒரு புத்தகத்திற்கு இத்தனை துரிதமாக வாசகர்கள் பக்கங்களைப் புரட்ட வைக்கும் குணம் எங்கிருந்து கிட்டுகிறது?

ஜெ.டை: முதலாவதாக நான் கருதுவது அதன் தொனி. பின்னர் அது தொனி பற்றியதான விஷயம். ஓ, அப்புறம் தொனியும் மிக முக்கியமானது! அத்தோடு கூட, துவக்கத்தில் அதில் என்ன நடக்கப் போகிறது என்று ஒரு விளக்கமும் இல்லை, என்ன வகைப் புத்தகம் அது என்று கோடி காட்டவில்லை (இது ரொபர்டோ கலாஸ்ஸோவின் பாதிப்பாலும், உந்துதலாலும் நேர்ந்தது); எனவே, எப்படி அந்தப் படம் மூன்று பேர்வழிகளை அவர்கள் இந்த மர்மஸ்தானத்தை நோக்கிப் பயணிக்கையில் தொடர்ந்து போகிறதோ, அவர்கள் தம் பயணம், அந்த ஸ்தலம் பற்றி மேன்மேலும் புரிந்து கொள்ள முயல்வதைப் பின் தொடர்ந்து கவனிக்கிறதோ, அதே போல வாசகரும் ஒரு பயணம் போகிறார், புத்தகத்தில் என்ன நடக்கிறது என்று புரிந்து கொள்ள முயன்றபடி- இது என்ன வகைப் புத்தகம் என்று யோசித்தபடி- அதுவும் விரிந்து கொண்டே போகிறது. அந்த ஸ்தலம் எப்படி இருக்கிறதோ, அதே போல இந்தப் புத்தகமும் நுட்பமாக முழு நேரமும் மாறிக் கொண்டே இருக்கிறது. எழுத்தாளர்கள் சில நேரம் ஒரு புத்தகத்தை இது நிபுணர்களுக்கானது, இது சாதாரண வாசகருக்கு என்று பிரித்துக் காட்டுவார்களே, அது எனக்கு எப்போதுமே சிறிதும் பிடிக்காத விஷயம். இந்தப் புத்தகம் அந்த வெறுப்பை உச்சத்துக்கு எடுத்துச் சென்று விடுகிறது. அதனால் உங்களுக்கு டார்கோவ்ஸ்கி மீது பெரும் அபிமானம் இருக்கிறதோ இல்லையோ, நீங்கள் அந்தப் படத்தைப் பார்த்தீர்களோ இல்லையோ, எப்படி இருந்தாலும், இதை நீங்கள் படித்து மகிழலாம்.

பிலீவர்: நீங்கள் ஆந்த்ரேய் டார்கோவ்ஸ்கியின் ஸ்டாக்கர் படத்தை கிட்டத் தட்ட முப்பது வருடங்களுக்கு முன்பு பார்த்தீர்கள். இதைப் பற்றி எழுத முன்னால் எப்போதாவது முயன்றீர்களா? கடைசியில் எது இதைச் சாத்தியமாக்கியது?

ஜெ.டை: இல்லை, முன்பு இந்தப் படத்தைப் பற்றி எழுதலாமென்று யோசிக்கக் கூட இல்லை. ‘ஜோனா’ வில் கூட நான், பர்னிங் மான் பற்றிய ஒரு கதை யோகா ஃபார் பீப்பிள் ஹூ காண்ட் பீ பாதர்ட் டு டூ இட் புத்தகத்தில் கடைசி அத்தியாயமாக வந்திருந்தது, என்று சொன்ன போது இதைப் பற்றிப் பேசி இருக்கிறேன். இன்னும் குறிப்பாக, இதை எழுதுவது எப்படி சாத்தியமாயிற்று என்றால், நான் எழுதுவதாக இருந்த ஒரு புத்தகத்தை என்னால் எழுத முடியவில்லை என்பதுதான் – அது டென்னிஸ் பற்றிய புத்தகம். உடனடி உந்துதல் என்றால், அப்போது லண்டனில், பிரிட்டிஷ் ஃபில்ம் இன்ஸ்டிட்யூட்டில் ஒரு தடவை அந்தப் படத்தைத் திரையிட்டார்கள், அதற்குப் பிறகு ஒரு தேர்ந்தெடுத்த குழு அதைப் பற்றி உரையாடல் நடத்தினார்கள் என்பதுதான். அதை ஒரு சாக்காக வைத்துக் கொண்டு த கார்டியன் பத்திரிகைக்கு இந்தப் படம் பற்றிய ஒரு சிறு பதிவை நான் எழுதினேன். அதை எழுதுகையில், எனக்கு அது பற்றி இன்னும் நிறைய சொல்ல வேண்டி இருக்கிறது, அதையும் மேலும் உற்சாகமான விதத்தில் சொல்ல என்னால் முடியும்- அந்த டென்னிஸ் புத்தகத்தை எழுத முடியாத சலிப்பிலிருந்து என் மனதைத் திருப்ப இது உதவும் என்று நான் உணர்ந்தேன்.

பிலீவர்: சினிமா பற்றி எழுதிய வேறு யாராவது உங்களுக்கு பயனுள்ளவராக இருந்தனரா? இந்தப் புத்தகத்துக்கு ஒரு முன்மாதிரியாக வேறு யாருடைய புத்தகங்களாவது இருந்தனவா?

ஜெ.டை: சில வருடங்கள் முன்பு ஸைட் & ஸௌண்ட் பத்திரிகை ஒரு சிலரை அவர்களுடைய நோக்கில் சினிமா பற்றிய மிகச் சிறந்த ஐந்து புத்தகங்களைத் தேர்ந்தெடுக்கச் சொன்னது. நான் டேவிட் தாம்ஸனின் பயொக்ராஃபிகல் டிக்‌ஷனரி ஆஃப் ஃபில்ம் என்ற புத்தகத்தின் ஐந்து பதிப்புகளைத் தேர்ந்தெடுத்தேன். என்னைப் பொறுத்தவரை சினிமா பற்றிய புத்தகங்கள் என்று எடுத்தால், அவர் மற்றெல்லாரையும் விட வெகு தூரம் முன்னெ உள்ளார்.

பிலீவர்: எனக்கு எப்போதுமே என்ன தோன்றியதென்றால், அடுத்தடுத்த ஒவ்வொரு பதிப்புக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் எல்லாமாகச் சேர்ந்து எப்படியோ அனேகமாக தாம்ஸனுடைய மறைமுக சுயசரிதையாகி விடும் என்று.

ஜெ.டை: மிகவும் சரி. நான் அதனால்தான் சுயசரிதை பற்றி நான் ஒருமுறை முன்பு நடத்திய ஒரு வகுப்புக்கு அந்தப் பதிப்புகளை பாடத் திட்டத்தில் சேர்த்திருந்தேன். அந்த நோக்கில் பார்த்தால், (அப்புத்தகத்தில்) கீயரென் ஹிக்கி பற்றிய ஒரு பதிவு, தரை விரிப்பின் மையத்தில் உள்ள ஒரு உருவம் போலப் பார்க்கப் படவேண்டும். அது இலக்கியத்தின் மிகச் சிறந்த தருணங்களில் ஒன்றாகக் கருதப்பட வேண்டும்- அதைத் தவிர, அந்த அகராதி, இலக்கியத்தில் ஒரு உன்னதமான சாதனை என்பதையும் நாம் மறக்கக் கூடாது. அதிர்ஷ்டவசமாக, ஸ்டாக்கர் படத்தைப் பற்றி அவர் அனேகமாக எதுவுமே அதில் எழுதவில்லை- பின்னால் தன் தேர்வில் சிறந்த ஆயிரம் படங்களைப் பற்றி எழுதிய ‘ஹாவ் யூ ஸீன்…?” புத்தகத்தில் கொஞ்சம் எழுதியதையும் நகைச் சுவையாகவே எழுதினார் என்றாலும். தெளிவாகவே சினிமா பற்றி பல சிறந்த புத்தகங்கள் இருக்கின்றன, சில சிறப்பான கட்டுரைகளும் உண்டு, ராபர்ட் வார்ஷோ, ஸாண்டாக் ஆகியோருடையன. சில அபூர்வமான கட்டுரைகளும் இருக்கின்றன- ஜே.எம். கெட்ஸீ ஒரு அற்புதமான கட்டுரையை ‘த மிஸ்ஃபிட்ஸ்’ என்ற படம் பற்றி எழுதி இருக்கிறார். ஆனால் தாம்ஸன் அளவு ஒரு எழுத்தாளரின் ஆளுமையோடும், தனிப் பார்வையோடும் தொடர்ந்து வலுவாக எழுதிய வேறு எவரையும் நான் அறியவில்லை. கில்பர்ட் அடேரை என் பேட்டையில் அவ்வப்போது பார்த்ததுண்டு, அவருடைய திடீர் ரத்தக் குழாயடைப்புக்குப் பிறகும், அவருடைய மரணத்துக்குச் சற்று முன்பும் பார்த்தேன். அவர் சினிமா பற்றி எழுதியவை எனக்குப் பிடித்திருந்தன. ஆனால் இவர்களெல்லாம் என் மீது தாக்கம் ஏற்படுத்தவில்லை. ஃபியோனா பானரின் திரைப்படங்களைப் பற்றிய ஓவியங்களும், அவருடைய விசித்திரமான ஓவியப் புத்தகமான த நாம், ஆறு வியத்நாமியப் படங்கள் பற்றிய ஒரு 280,000 சொற்களடங்கிய விவரணை – ஒரு விதத்தில், ஒரு தொலை தூரத் தாக்கமாக என்னைப் பாதித்திருக்கலாம்! அந்தப் புத்தகத்தை எழுதுகையில் என் மீது ஒரு பெரிய இலக்கிய தாக்கம் என்று சொன்னால்- இது எனக்கு மட்டுமே தெளிவாக இருக்கிறதோ என்னவோ, மேலும் நான் அவர் பெயரைச் சொன்ன மூச்சில் என் பெயரைச் சேர்த்துச் சொல்லக் கூடாதோ என்னவோ- அது ரொபர்டோ கலாஸ்ஸோதான்.

பிலீவர்: ஸ்டாக்கர் படத்தைப் பொறுத்தவரை, புத்தகத்தை எழுதும் முன்னர் நீங்கள் உணர்ந்ததை விட மாற்றி உணர்கிறீர்களா இப்போது?

ஜெ.டை: இல்லை. அந்தப் புத்தகத்தை எழுதியது அப்படத்தின் ஆழம், பெருமை, அதன் எழில்- மேலும் அதன் மர்மத் தன்மை குறித்த என் உணர்வை உறுதி செய்துள்ளது. உண்மையிலேயே அப்படம் அள்ளித் தீராதது. நான்காவது முறையாக அப்புத்தகத்தின் அச்சுப் பிரதிகளில் பிழை திருத்திக் கொண்டிருந்த போது, எனக்கு அப்படத்தில் எதையோ மறுபடி ஒரு முறை உறுதி செய்ய வேண்டும் என்று தோன்று அதைச் சோதித்தேன். அப்போது வேறு ஏதோ என் கண்ணில் பட்டது, அது அத்தனை முக்கியமாக இருந்ததால், நான் முற்றிலும் புதிய ஒரு சிறு பகுதியை எழுதிப் புத்தகத்தில் சேர்க்க வேண்டி இருந்தது. அது என்ன பகுதி என்று இப்போது சொல்ல மாட்டேன், ஏனெனில் படத்தின் இறுதிப் பகுதியைப் பற்றிய துண்டு அது, அதைச் சொல்வது படம் பார்க்க இருப்பவருக்கு ருசியைக் கெடுக்கும். இந்த இடத்தில் எனக்கு வேறொரு உந்துதல் நினைவுக்கு வருகிறது: டயரி ஆஃப் அ பாட் யியர் புத்தகத்தில் கெட்ஸீ எழுதிய ஒரு சிறு துண்டு அது. அதில் அவர், தாஸ்தாயெவ்ஸ்கியின் சில பத்திகளை ஏராளமான தடவைகள் முன்னரே தான் படித்திருப்பதாகவும், அவற்றின் வீச்சு சிறிதும் குறையாமல் இருப்பதாகவும், அவற்றைப் படிக்கையில் இன்னமும் தன் கண்களில் நீர் நிரம்பாமல் அவற்றைப் படிக்க முடிவதில்லை என்றும் சொல்கிறார். ஸ்டாக்கர் படத்திற்கு அப்படி ஒரு தாக்கம் என் மீதும் இருக்கிறது.

பிலீவர்: ஸ்டாக்கர் பல இடங்களிலும்- எப்படிச் சொல்வது இதை- மிகக் கவனமாக முன் நகர்த்தப்படுகிறது என்பதை நீங்களே ஒத்துக் கொள்கிறீர்கள். கலையில் சலிப்பு என்பதற்கு என்ன பங்குண்டு?

ஜெ.டை: சலிப்பு என்பது பல நேரம் வேறேதோ ஒன்றின் பக்கவிளைவுதான். ஸ்டாக்கர் நம்மிடம் தூண்டும் சலிப்பு என்பது அந்தப் படத்தின் இயக்க வேகத்திற்கும், நாம் ஒரு படத்திற்கு நம்மை விட்டுக் கொடுக்க வேண்டுமென்றால் அந்தப் படம் என்ன வேகத்தில் செல்ல வேண்டும் என்று நாம் எதிர்பார்ப்பதிற்கும் இடையே உள்ள வேறுபாட்டால் எழுகிறது. ஆனால் ‘கலைப் படம்’ என்று சொல்லப்படுவன எல்லாமே இயல்பாகவே மீட்பில்லாத வகையில் சலிப்பூட்டுவன என்றுதான் நான் கருதுகிறேன். இதைச் சொல்கையிலேயே, இருப்பதிலேயே அதிகம் சலிப்பூட்டும் படங்கள் என்று சொன்னால், அவை இந்த பெரிய வசூலுக்காக எடுக்கப்படும் பிரும்மாண்டமான அடிதடி (ஆக்‌ஷன்) படங்கள்தான் என்று எனக்குத் தெரிகிறது. அவை உண்மையிலேயே பெரும் சலிப்பூட்டி எனக்கு மலச்சிக்கல் இல்லாது ஆக்கி விடுகின்றன. சலிப்பூட்டும் கலைப்படங்களுக்கும், அறிவற்ற பெரும் வசூல்படங்களுக்கும் இடையே ஒரு முக்கியமான உறவு இருக்கிறது, ஏனெனில், எர்ன்ஸ்ட் ஃபிஷர் இதைச் சுட்டி இருக்கிறார், சிலரால் மட்டுமே புரிந்து கொள்ளப்படுவதை ஒரு பெருமையாகக் கருதும் கலைப் படம்- தன்னுடைய சலிப்பூட்டும் குணத்தை வணங்கி வழிபடும் ஒரு படம் என்று வைப்போம்- திரளுக்கு என எடுக்கப்படும் குப்பைப் படங்களுக்கு வழி வகுக்கிறது. ஆனால் முன்பொரு காலத்தில், சலிப்பு என்பது சிறிதும் நினைத்தும் பார்க்கப்படாமல் இருந்தது, அன்றைய நிலையில் அது ஒரு விஷயமாகவே இல்லை. மால்டீஸ் ஃபால்கன் படத்தை எடுத்துக் கொள்வோம்- அதில் கேளிக்கையை அளிப்பது கெடுதல் என்ற எண்ணமே இல்லை, அதனால் சலிப்பை இந்தப் படத்தில் உயர்வாக எடுத்துக் காட்டிச் சித்திரித்திருந்தார்கள்: இந்தப் படம் அதிசயம் நிறைந்ததாக இருக்கிறது, எத்தனை தடவை பார்த்தாலும் அதிசயமாகவே இருக்கிறது.

பிலீவர்: ஜோனாவில் நிறைய அடிக்குறிப்புகள், ஒவ்வொரு பக்கத்திலும், நீளமாக ஓடிக் கொண்டே இருக்கின்றன, ஸ்டாக்கர் படம் பற்றிய உங்கள் நினைவுகளைப் பதிவு செய்த வண்ணமும், குறிப்புக்கு மேல் குறிப்பாகப் பேசிக் கொண்டும் ஓடுகின்றன. சமீபத்தில் நீங்கள் ஒரு கட்டுரையில் டேவிட் ஃபாஸ்டர் வாலெஸ்ஸிடம் உங்களுக்கு ஒரு “ஒவ்வாமை” இருப்பதாக ஒத்துக் கொண்டீர்கள், இந்த வகையில் நீங்கள் எழுதுவது, அவருக்கு ஒரு பிரதிவினையோ என்று எனக்கு ஒரு ஐயம். “அப்படி இல்லை, இப்படி” எழுத வேண்டும் என்று நீங்கள் காட்ட நினைத்தீர்களா?

ஜெ.டை: கொஞ்சம் கூட இல்லை. அடிக்குறிப்புகள், உங்களுடைய முந்தைய கேள்விக்குப் போவோம், மூலமாகத்தான் அமைப்பில் என்னால் அந்தப் படத்துடன் புத்தகத்தின் மையப் பகுதியில் ஒன்றிப் போக முடிந்தது, அதே நேரம் அந்தந்தப் பகுதி குறித்து என் கருத்துகளை விஸ்தரித்துச் சொல்லவும் முடிந்தது. முதலில் ஒரு மையப் பத்தியாக (வெர்ஸோ பகுதியில்) படத்தின் சுருக்கத்தைப் போட்டு விட்டு , இணைப் பத்தியாக (ரெக்டோ) இதர விஷயங்களை- இணைப் பத்திகளாக- போடலாம் என்று நினைத்தேன். ஆனால் இப்படிப் பிரசுரிப்பதில் இரண்டு பக்கங்களிலும் நிறைய வெற்று இடைவெளி இருக்கும். அடிக்குறிப்புகளில் என்ன சாதகம் என்றால், புத்தகத்தைப் படித்துக் கொண்டு வருகையிலேயே, சுற்றி வளைத்த விரிவுரைக்கும், நேரடி உரைத்தலுக்கும் உள்ள வேறுபாடு அழிந்து விடுகிறது, அடிக்குறிப்புகள் பிரதியின் மையப் பகுதிக்குள் ஊடுருவுவதில் ஒரு பிரச்சினையும் இல்லாமலும் இருக்கும். மறுபடி சொல்கிறேன், இது அந்தப் படத்தின் தன்மையை ஒட்டியதே. அப்படத்தில் ஒரு நிஜமான பயணம் படிப்படியாக தூலம் தாண்டிய எழுச்சியாகவும், ஆன்மீக உணர்வுகளை அடிக்கோடிடுவதாகவும் மாறுகிறது. எனவே இது ஒரு அமைப்பு வழி விடை, ஒரு பாணி, நடை குறித்த உத்தி அல்ல. ஆனல் எனக்கு இப்போது தோன்றுகிறது, வாலெஸும் இதே போன்ற ஒரு பதிலைச் சொல்லி இருக்கக் கூடும்.

பிலீவர்: இப்போது நாம் அந்த ‘அறை’யைக் கடைசியில் நெருங்கி விட்டோம் என்று வைத்துக் கொள்வோம், டார்கோவ்ஸ்கியின் தீர்த்த யாத்ரீகர்கள் தாம் கனவு காணும் எதையும் பெறவிருக்கிறார்களே அந்த அறை. நீங்கள் உள்ளே போவீர்களா? நீங்கள் எதைத் தேடிப் பெற விரும்புகிறீர்கள்?

ஜெ.டை: அற்புதமான கடைசிக் கேள்வி! என் எல்லாப் புத்தகங்களுமே இதைப் பற்றியவைதானே.

 

ஆங்கில மூலம் : http://www.believermag.com/issues/201203/?read=interview_dyer