கவிதைகள்

1. மனிதத் துன்பவியல்

தம்மை முழுதாய்க் கொடுத்து,
-காற்றைத்
தழுவும் மரங்கள்.
எதன் மேலும் ஏறி
விளையாடும் அணில்கள்
இசைக்கும் புட்கள்
வானம் பெற்றுப் பிழைத்த கோள்கள், விண்மீன்கள்
வந்து போகும் விருந்தாளி மேகங்கள்
ஒளி, வெளி, வளி,
சிந்தாத கடல், புல் மலரும் பூமி.
எங்கும் என்றும் குறைவுறா அமுதம்

பருகாத மனம்.

2. எல்லா இதயங்களிலும் இவ்வடைப்பு

உலகை – அதாவது பிரபஞ்சத்தை –
அதாவது உம்மையும், என்னையும்
எனப் பொய்யாய்ப் பிரிந்திருக்கும் நம்மை –
உருவாக்கி இயக்கும் சக்தியென்று
ஒன்று தனியாய்
உள்ளதென்ற எண்ணம்.

அதில் பிறந்த அவ்விருமை
அடைத்து விடுகிறது இதயத்தை.

மொத்த உலகத்தின் – அதாவது பிரபஞ்சத்தின் –
அதாவது நீரும், நானும் எனத் தோன்றும் நம்மின் –
உள்ளிரைச்சல் ஓய்கையில்
அஹம் பிரம்மாஸ்மி
தத் த்வம் அஸி,
தௌ ஆர்ட் தட்
அன் அல் ஹக்
நானே உண்மை
என்றெல்லாம்
வார்த்தைகளற்று
மூச்சொவ்வொன்றிலும்
முறுவல்

கேட்கலியோ?
– கேட்டு
மூடி திறக்கலியோ?

3. ஆதாரக் கேள்வி அல்லது பதில்

அர்த்த நாரியாவது?
அதுதானே முழுமை.
அரனும், அம்மையும்தானே
இருமை ?

வ.ஸ்ரீநிவாசன்

-o00o-

இந்த வாழ்க்கை

வீட்டிலிருப்பவர்களுக்கு தெரியாமல்
கல்லூரி டி.சியை
பழைய புத்தகங்களுக்கடியே
ஒளித்து வைத்துவிட்டு
மின்விசிறியில் புடவையை சுற்றுகிறான்

அலைபேசி திரையில்
பாதரசமென மிண்ணும்
கண்ணீர்த் துளியை
பொருட்படுத்தாது
குறுஞ்செய்தியை வார்த்தை வார்த்தையாக
வாசித்து கொண்டிருக்கிறாள்

‘உன்னை நம்பித்தானே
எல்லாமே இருக்கு
அப்புறம் அந்த நம்பிக்கையையே
கெடுத்தா எப்படிப்பா?”
மகனின் முகத்தை பார்க்காமல்
ஒட்டடை படிந்த சுவரை
பார்த்து பேசுகிறார்

இன்று என்னக் கிழமையென்று
யோசித்துக்கொண்டிருந்தவள்
அடுக்களைக்குள் புகுந்துவிட்ட
பூனையை பார்த்ததும்
கையிலிருந்து கரண்டியை
வேகமாய் தூக்கியடிக்கிறாள்

தெருவிளக்கை மொய்க்கும்
ஈசல்களை போல்
நூறு நூறாய்
சேர்ந்தும்
பிரிந்தும்
இந்த வாழ்க்கை

திரும்புதல்

பறவையின் அந்திகளைப் போன்றவையல்ல
என்னுடைய அந்திகள்
நான் திரும்பும் காலம் என்பது
கூடடைதலின் நினைவுகளற்றது
வந்தடையவேக் கூடாத
தற்கொலை விளிம்பிலிருந்து
கருப்பு சர்ப்பங்கள் பின்தொடர
நான் வீடு திரும்பிக் கொண்டிருக்கிறேன்
கழுவியகற்ற முடியாத ரத்தம் போல்
என் நீளப்பாதைகளில்
இருள் மண்டிக் கிடக்கிறது

திரும்புதல்-2

எதையோ நினைத்து
நடந்து வந்ததில்
கவனமேயில்லாமல்
இங்கு வந்து சேர்ந்து விட்டேன்

கிழிந்து கிடக்கும் புகைப்படமென
பகுதி பகுதியாய்
பிரிந்து கிடக்கிறது
இம்மணல் வெளி

விரிசல்களுக்கிடையே
சாம்பல் நிற மரங்கள்
கிளையசைத்து
காற்றெழுப்புகின்றன

பெருங்காற்று ஊளையிட
நான் செல்ல விரும்பும்
என் கனவின் நகரம்
கருப்பாய் பூமிக்குள் அமிழ்ந்து தொலைகிறது

எதற்காக
இங்கு வரவே கூடாது
என்று நினைத்தேனோ
இப்பொழுது அதற்காகவே
வந்தது போலாகிவிட்டது

ஒரு குழந்தை பலூன் வெடிப்பதை
முதல்முறையாக பார்ப்பதுபோல்
நான் என் வாழ்க்கை
உடைந்து தொங்குவதை
பார்த்துக் கொண்டிருக்கிறேன்

இனி
வேறுவழியில்லை
வந்த பாதை தெளிவாக ஞாபகமிருக்கிறது
திரும்பி போவதொன்றும்
சிரமமான காரியம் கிடையாது

துரோணா

-o00o-

மாறி வந்த சாமி

வார் பிடித்தார்கள்.
சூடேற்றினார்கள்.
போதையில் முறுக்கேரி
முதல் கொட்டிலேயே
உறுமியும் பறையும் அதட்ட
கரகங்களின் உச்சியில்
குந்தியிருந்த பொய்க்கிளிகள்
ஆட்டக்காரர்கள் போலவே
சிலிர்த்துக்கொண்டது.
ஜெனரேட்டரின் ஸ்ருதியில்
நாயனக்காரர் வாசித்த
குத்துப்பாடல்களுக்கு
ஜிகினாக்காரிகளின் அசைவுகள்
பின்னிருந்தவர்களை
முன்னங்கால்களில் நிறுத்திவைத்தது.
முன்னே பூசாரியும்
அர்ச்சனை செய்துகொண்டிருந்த
ஐந்து பேரும்
கற்பூரப் புகையில் நெளிந்துகொண்டிருந்த
அம்மனிடம் கோரிக்கை சேர்த்து
மன்னாடிக்கொண்டிருந்தார்கள்.
எப்போதும் பால்குடமெடுப்பதில்
தலைமை தாங்கும்
மாரியம்மாவிற்கு சாமிவரும்போது
கூடி நிற்கும் பக்தர்கள் கூட்டத்திற்கு
அம்மன்கூட இரண்டாம் பட்சமாகிவிடும்.
இந்தத்திருவிழாவில்
மாரியம்மாவிற்கு முன்னாலேயே
நான் எப்போதும் பேசியே பார்த்திராத
குணசேகரின் தங்கச்சிக்குள்
அம்மன் வந்துவிட
பக்கத்திலிருந்த மாரியின் நாத்திகம்
கரகத்தின் உச்சியில்
உட்கார்ந்திருந்த
பொய்க்கிளிபோலவே
எந்த மத்தளத்தின் கொட்டிற்கோ
அசைந்ததாய்த் தெரிந்தது!

ரமணி

-o00o-

ஓர் பழங்கதை

என் அம்மா இறந்து சில நாட்களில்
எரிஉலை அணைந்து போயிற்று, என் அப்பாவும்,
அடக்கத்துக்குப் பிறகு அம்மாவின் நாற்காலிக்கு எதிரில்
சவரம் செய்யாத தாடை மார்பில் தொங்கி,

அவரது நாற்காலியில் அமர்ந்திருந்தவர்
தன்னை உசுப்பிக் கொண்டு எழுந்தார் குளிர்ந்த
சாம்பல் நிறப் படிகளில் இறங்கிக் கீழே போனார்
தானே உலையை மீண்டும் மூட்ட முடியுமா என்று
பார்க்க

அல்லது யாரையாவது உதவிக்குக் கூப்பிட வேணும்.
அதெப்படி இருந்திருக்குமென்று எனக்குத் தெரியும்
மற்ற நாட்களில் அவரிருந்தது எனக்கு நினைவுண்டு
முதுகின் மேல் படுத்தபடி, சபித்துக் கொண்டு

குச்சி குச்சியாய்ப் பற்ற வைத்து, சின்ன
உலோக வாயில் வழியே ஒவ்வொன்றாய் நீட்டி,
அது விரலைச் சுடும் வரை எரியவும், நாசமாய்ப்
போகச் சொல்லி ஒவ்வொன்றையும், எத்தனை
தடவையானாலும் விடாமல். இந்த முறை

அது உடனே பற்றி, பிடித்துக் கொண்டு, உறுமி உயிர் பெற்றது.
என் அப்பா எழுந்து அமர்ந்தபோது பார்த்தார் எதிரில்
துணி துவைக்கும் எந்திரம், காய வைக்கும் எந்திரம், காலியான
துணிக் கூடை, இஸ்திரி மேஜை,

அதோடு தொட்டிக்கு மேலே அம்மாவின் ரேடியோ,
அவளில்லாமை அத்தனை அடர்த்தியாயிருக்க படிகளில்
ஏறும்போது அவருக்குத் தோன்றியது அவள் குரல்
பின்னே கேட்டது போல், அவர் திரும்பிப் பார்த்தார்.

[DDET இக்கவிதையை ஆங்கிலத்தில் வாசிக்க…]
An Old Story

A few days after my mother died
the furnace went out, and my father,
who had been sitting in his chair
across from hers since the funeral,

his unshaven chin on his chest,
heaved himself up and went down
the cold gray cellar stairs to see if
he could relight the pilot himself

or would have to call for help.
I know what it must have been like
because I remember him other times
on his back down there, cursing

match after match, god damning
each for burning his fingers, as he
reached through the tiny metal door
as many times as it took. This time

it lit, caught, and roared back to life.
When my father sat up he faced
the washer, the dryer, the empty
laundry basket, the ironing board,

and my mother’s radio above the sink,
her absence so vivid that climbing
the stairs he thought he heard her
behind him, and he turned around.

Richard Hoffman

Source: Emblem (Barrow Street Press, 2011)
[/DDET]

டிஸம்பர் 31

திரி பிரிந்த என் செயல்களெல்லாம் திரிகின்றன
ஆடையின்றி நாள்காட்டியின் குறுக்கே,

ஒட்டி உலர்ந்த வேட்டையாடி-சேகரிப்பவராய்,
காற்றில் பறக்கும் பனித்துகள் இங்குமங்கும் சிதறிக் கிடக்க,

ஒரு எதிர்காலத்தை நோக்கித் தடுக்கி விழுந்து கொண்டு
நான் ஒரு குத்தூசியால் பொருத்தும்

புதுவருடத்தில் மடிக்கப்பட்டு: ஜனவரியின் படமொரு
17ஆம் நூற்றாண்டு ஓவியம்,

ஒரு அசைவற்ற வாழ்நிலை: மண்டை ஓடும் ஓர் ஆடியும்,
பை திறந்து சிதறிய காசுகளும் ஒரு பூவும்.

ரிச்சர்ட் ஹாஃப்மான்
தமிழில் : மைத்ரேயன்

[DDET இக்கவிதையை ஆங்கிலத்தில் வாசிக்க…]
December 31st

All my undone actions wander
naked across the calendar,

a band of skinny hunter-gatherers,
blown snow scattered here and there,

stumbling toward a future
folded in the New Year I secure

with a pushpin: January’s picture
a painting from the 17th century,

a still life: Skull and mirror,
spilled coin purse and a flower.
Richard Hoffman, “December 31st” from Emblem. Copyright © 2011 by Richard Hoffman. Reprinted by permission of Barrow Street Press.

Richard Hoffman

Source: Emblem (Barrow Street Press, 2011)
[/DDET]