மஹாபலியின் வருகை

மஹாபலியின் வருகை
– சங்கர்

தமிழ் நாட்டில் தீபாவளி பொங்கல் மாதிரி, வங்காளத்தில் துர்கா பூஜா, கர்நாடகத்தில் தஸரா, கேரளாவில் ஓணம். பாலு என்கிற பலசுப்ரமணியம் எல்லா இடங்களிலும் இருந்து எல்லாப் பண்டிகைகளையும் பார்த்தவர். அவர் பணி அப்படி. 38 வருட வங்கி அனுபவம். ஓய்வு பெற்ற பின் முதல் முதல் பொங்கல் நாளை. இன்று போகி. இன்னமும் புது வாழ்க்கை பழகவில்லை. ஏகப்பட்ட ஓய்வு நேரத்தில் அதைச் செய்யலாம் இதைச் செய்யலாம் என்று எல்லா நாட்களுமே மனம் பரபரவென்று இருந்தது. இன்றும்தான். அதுவும் பண்டிகை சமயம் என்கையில் அதிகமாகவே. உடல் மனதோடு ஒத்துழைத்தாலும் ஓய்வை அவ்வப்போது நினைவூட்டியது.

போகி என்பதால் காலையில் எழுந்ததும் ஒரு ப்ரீஃப் கேஸிலிருந்து பேப்பர்களை எடுத்து வேண்டாததையெல்லாம் கிழித்துக் குப்பைக் கூடைக்குள் போட்டதுமே, “இதெல்லாம் இருக்கட்டும் தினம் போல் இங்கே முதலில் வா” என்றுசெய்தித் தாள்கள் அழைத்தன. ஆனால் அவர் மனைவி வித்யாவுக்கு எல்லாம் உடனடியாக நடக்கவேண்டும். அவள் இன்னும் ஓய்வு பெறவில்லையே ! பாக்கி மூன்று ப்ரீஃப் கேஸ்களையும் இறக்கி வைத்து அவரைப் பார்க்கச் சொன்னாள். பாலு “ வரேம்மா கொஞ்சம் பொறு” என்று வழக்கம் போல் சொல்லிவிட்டு பேப்பரில் மூழ்க முயற்சித்தார். அவருக்கும் பேப்பருக்கும் இடையே திடீரென்று ஒரு தடித்த அட்டை நுழைந்தது. “என்னதிது? இதையெல்லாம் ஏன் வீட்டில் வச்சிருக்கீங்க” என்று வித்யாவின் குரல் அவர் ஆத்திரத்தை அதிகப் படுத்தியது. “என்னது பேப்பர் படிக்க விடாம” என்றவாறே தலையை பின்னுக்கு நகர்த்தி அது என்ன என்று பார்த்தார். “செத்துப் போனவங்க ஃபோட்டோவை அதுவும் செரிமனிக்கு வந்த இன்விடேஷனை யாராவது வீட்டில் வைத்திருப்பாளா” என்கையில் பாலுவுக்கு மெல்ல மெல்ல புரிந்தது. அட கடவுளே தாமஸ் ஃபோட்டோவை இவள் பார்த்து விட்டாளா? போச்சு” என்று நினைத்தார்.

“ஏதாவது காரணம் இருக்கும். அத வை. நான் குளிச்சுட்டு வந்து மூணு பொட்டியையும் பார்த்து வேண்டாததையெல்லாம் கிழித்துப் போட்டு விடுகிறேன் நிச்சயமா” என்று அந்த ஃபோட்டோவை வாங்கி அதே பெட்டியில் வைத்து மூடினார். வித்யா சமையலுக்காக உள்ளே போனாள். வந்து விடுவாள். இன்று நாள் அவ்வளவுதான்.

அப்பொது பாலு கேரளாவில் ஒரு மாவட்ட தலைமையிட்த்தில் உள்ள வங்கியின் கிளையில் மூத்த மேளாளராக இருந்து வந்தார். சேர்ந்த முதல் ஆறு மாதங்கள் உண்மையிலேயே மகிழ்ச்சிகரமாகத்தான் இருந்தது. பிறகு ஏற்பட்ட அனுபவங்கள்!

இப்போதெல்லாம் அவருக்கு, ஒவ்வொரு நாள் துவக்கத்திலும், அதுவரை சாதாரணமாக இருந்த மனம் ஒரு வித அழுத்தத்திற்கு தள்ளப்பட்டதைப் போன்ற உண்ர்வு ஏற்படுவது வழக்கமாகி விட்டது. அது, இரவு தூங்கும்வரை தொடரும். சில நாட்களில், அது அவரது தூக்கத்தை கெடுத்துக்கொண்டு தொடர்வதும் உண்டு.. அதற்கு காரணம் தாமஸ், அக்கிளையின் டெபுடி மானேஜர். தாமஸ் உருவாக்கும் தேவையற்ற பிரச்சனைகள், தன் விசுவாசிகள் சிலர் மூலம் வங்கிவேலைகளை முடக்கமுயலும் செயல்கள், கிளையின் வளர்ச்சிக்கு போடும் தடைகள் என்று பலவும் அவரது மன ஓடட்த்தில் சுற்றி சுற்றி வரும்.. இவற்றை தனிப்பட்ட முறையில் தனக்கு ஏற்படும் சோதனைகள் என்று தான் பாலு நினைத்தாரே அன்றி, அலுவலக சூழலில் ஏற்படும் பிரச்சை என்று மனம் ஏற்க மறுத்தது.

அன்று ஒரு சனி கிழமை. காலை ஒன்பது மணிக்கு வழக்கம் போல் ட்ரைவர் வந்தவுடன் ஜீப்பில் ஏறி அமர்ந்தார். ட்ரைவர், பாலுவிற்கு 15 வருடங்களுக்கு முன்பே அறிமுகமானவர். பாலுவை விட வயதில் மிக மூத்தவர். சாதாரணமாக, மிக நெருங்கிய நண்பர் என்ற முறையில் தான் பாலுவிடம் பேசுவார். பாலுவின் முகத்தை பார்த்து விட்டு, என்ன நினைத்தாரோ, உடைந்துபோன தமிழில் கேட்டார்

-என்ன பாலு, நேத்து தாமஸ் சண்டை போட்டுச்சா?

தன் முகம் தனது அறிவின் வசமில்லாமல், மனத்தின் வசம் உள்ளதை அறிந்து, பாலு அமைதியாக இருந்தார். ட்ரைவர் ரோடை பார்த்து ஜீப்பை ஒட்டிக் கொண்டே ஏதேதோ சொன்னார். பாலுவிற்கு வெறும் இரைச்சலாகக் கேட்டது. கிளைக்கு வந்த பின் தனது அறைக்குச் சென்று, வேலையை ஆரம்பித்தார். இருந்தாலும், தாமஸை பற்றி எண்ணாமல் இருக்க முடியவில்லை.

தாமஸுக்கு 35 வயது இருக்கும். ஆறு அடிக்கு மேல் உயரம். 80 கிலோவுக்கு மேல் இருப்பார் அந்த ஊரில் அவருடைய மதத்தை சேர்ந்தவர்கள் பெரும்பாலும் நல்ல நிறமும், தோற்றமும் உடையவர்கள். தாமஸை அந்த பிரிவில் சேர்ப்பது மிகவும் கடினம். தாமஸின் உறவினர்களில் பலர் உயரிய அரசு பதவிகளிலும், அரசியலில் முக்கிய தலைவர்களாகவும் இருப்பதாக சொல்வார்கள். தாமஸின், பின்னணியின் தாக்கம், அவர், பாலுவிடம் தடித்த வார்த்தைகளால் பேசும்போதோ, சண்டையிடும் போதோ அதிகமாகவே வெளிப்படும்.

ஓரு சமயம், அக்கிளையின் உதவி மேலாளர், விஜயன் , பாலுவிடம் “ஸார், தாமஸ் பயிற்சி அதிகாரி ஆகச் சேர்ந்ததில் இருந்தே அவரது நடத்தை மோசமானது. பணி நிரந்தரம் கூட அதனால ஆறு மாதம் தாமதமானது. போன 10 வருடங்களில் 8 முறை இடமாற்றம் பார்த்தவன். பழைய மானேஜர் மாற்றலாகிப் போகும் போது ரீஜனல் மானேஜரிடம் சொல்லி, தாமஸை எப்படியோ டெபுடி மானேஜர் ஆக்கிவிட்டு போய்விட்டார்” என்று சொன்னார். இது போல் மற்ற சில ஊழியர்களும், தாமஸைப் பற்றி பல கதைகளை வெவ்வெறு சமயங்களில் கூறி இருக்கிறார்கள். பழைய ரீஜனல் மேனேஜர் வீட்டு நாயை காலால் உதைத்துக் கொன்றது, வீதியில் வாடிக்கையாளர் ஒருவருடன் கட்டிப் புரண்டு சண்டை போட்ட்து போன்ற சம்பவங்களும் அவற்றுள் அடக்கம். கேள்விப்பட்டவை பலதும் உண்மை என்றே பாலுவிற்கு பட்டது.

தாமஸே ஒருமுறை பாலுவிடம் தன்னைத் தவிர, தன்னுடன் சேர்ந்த அனைவரும் பதவி உயர்வு பெற்றார்கள் என்றும், தனக்கு மட்டும் கிடைக்கவில்லை என்று கூறி, பல உயரதிகாரிகளைத் தரக்குறைவாக ஏசினார். பதவி உயர்வு கிடைக்காததால், தாமஸ் இப்படி ஆனானா, அல்லது இப்படி இருப்பதால் பதவி உயர்வு கிடைக்கவில்லையா என்பது பாலு விற்கு, ஒரு பட்டிமனறத் தலைப்பாகப் பட்ட்து. எது எப்படி இருந்தாலும், தனக்கு எற்பட்டிருக்கும் கலக்கம், அழுத்தம், குழப்பம் எல்லாவற்றிற்கும் தாமஸின் செயல்பாடுகள் தான் காரணம் என்பதில் பாலு உறுதியாக இருந்தார்.

ஒருநாள் அறைக்குள், தாமஸும், சுந்தரம் என்பவரும் வந்தனர். சுந்தரம், சென்னையை தலமை இடமாக கொண்ட ஒரு பெரிய நிறுவனத்தின், அந்த ஊரில் உள்ள கிளையின் அலுவலர். சுந்தரம் நிறுவன வங்கி கணக்கில் உள்ள டெபிட்/ க்ரெடிட் விவரங்கள் கேட்டுள்ளார். தாமஸ் மறுத்ததால் வாக்குவாதம் முற்றி பாலுவிடம் வந்து புகார் செய்தார். சுந்தரத்தின் தேவையில் நியாயம் இருந்தது. கணக்கு விவரங்களை நிறுவனத் தலைமை அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டிய கட்டாயத்தில் சுந்தரம் இருந்ததை சுட்டிக் காட்டியும் தாமஸ் தேவையற்ற வகையில் பேசுவதாக பாலுவிற்கு தோன்றியது. தொடர்ந்த வாக்குவாதம, கூச்சலாக மாறியது. பாலு, தாமஸ், சுந்தரம் மூவரும் மாறி மாறி உரத்த குரலில் கூச்சலிட்டனர். அதன் உச்சகட்டத்தில், தாமஸ் பாலுவை தாக்கும் விதத்தில், ஆங்கிலத்தில்,

“மிஸ்டர் பாலசுப்ரமணியன். ஜாக்கிரதை. சுந்தரம் தமிழர். நீங்களும் தமிழர். அதனால் ஜோடி சேர்ந்தீர்களா? நான் யாரென்று உங்களுக்குத் தெரியாது. உங்களுக்கு சரியான பாடம் கற்பிக்கிறேன்,” என்றார்.

பாலுவிற்கு, கோபத்தில் கைகள் படபடத்தன.

“சரிதான், வெளியே போடா.”என்று தமிழில் ஏகவசனத்தில் கூச்சலிட்டார். தாமஸ் சேர்களை உதைத்து தள்ளிவிட்டு அறையின் கதவைப் பிய்த்து எறியாத குறையாகத் திறந்து கொண்டு வெளியேறினார். சுந்தரம் அதிர்ந்து போய், மன்னிப்பு கேட்டுக் கொண்டு, மேலும் எதுவும் பேசாமல் வெளியே சென்றுவிட்டார்.

அறையின் மரத்தடுப்புகளில் பொருத்தப்பட்டிருந்த கண்ணாடி பேனல்களின் வழியாக கிளையின் ஊழியர்கள் மற்றும் பல கஸ்டமர்களின் முகங்கள் தெரிந்தன. சில முகங்களில் வியப்பு, சில முகங்களில் வருத்தம், சில முகங்களில் கோபம் என்று மாறுபட்ட உணர்ச்சி வெளிப்பாடுகள். இவற்றில் எது தன்னை மையப்புள்ளியாக கொண்டது என்று பாலுவிற்குப் புரியவில்லை. ஆனால், இனம் புரியாத ஒரு வித அச்ச உணர்வு முதன் முறையாகத் தோன்றியது. இது நாள் வரை இருந்த கலக்கம், அழுத்தம், குழப்பம் எல்லாம் இந்த அச்ச உணர்வின் முன்னோடிகளோ!

சிறிது நேரம் கழித்து, விஜயன் பாலுவின் அறைக்கு வந்தார். “ஸார், வீட்டுக்குப் போங்க. நாங்க பாத்துக்குறோம்,” என்றார்.

பாலுவிற்கும் வெளியில் சென்று புகைபிடித்தால் பதட்டத்தை குறைத்துக் கொள்ளலாம் என்று தோன்றிற்று. 12 மணி ஆனது. சனிக்கிழமை ஆனதால் பிசினஸ் நேரம் முடிந்துவிட்ட்து. அறையை விட்டு வெளியே வந்தவர், தாமஸைச் சுற்றி ஆண் ஊழியர்கள் (ஆபீஸர்களும், க்ளார்க்குகளும்) கூட்டமாக நிற்பதைப் பார்த்தார். கடந்து சென்ற சில நொடிகளில் பாலுவிற்கு, தனக்கு எதிராகவும், ஆதரவாகவும் சில வார்த்தைகளை கேட்க முடிந்தது. அதில், மதவாடை அதிகமாக இருந்தது, அவரை மேலும் அச்சுறுத்தியது.

புகை பிடிக்கச் சென்றவர், எண்ணத்தை மாற்றிக் கொண்டு, வீட்டிற்குச் சென்றார். ட்ரைவர் ஜீப்பை நிறுத்தி விட்டு சென்றுவிட்டார். பாலு டிபன் செய்யச் சொல்லி சாப்பிட்டார். அம்மா “என்னாச்சு. என்னமொ மாதிரி இருக்காயே !” என்று கேட்டாள். பாலுவின் மனைவியும் கணவரின் முகத்தைப் பார்த்து விட்டு ஏதும் பேசாமல் இருந்தாள். பாலு பைக்கை எடுத்துக் கொண்டு கிளைக்கு அருகில் இருந்த பெட்டிக்கடையில் சிகரெட் வாங்கி புகைத்து விட்டு, தன் அறைக்கு சென்றபோது மணி ஒன்று ஆகி இருந்தது. ஒரு கஸ்டமர் அறையில் இருந்தார். தன்னை ஆன்ட்ரூஸ் என்றும், இரு தினங்களுக்கு முன் வந்திருந்ததாகவும், சில அன்னிய செலாவணி ட்ராவலர்ஸ் செக்குகளை (டீ சி) இந்திய ரூபாயாக மாற்றி தனது வங்கி கணக்கில் சேர்த்ததாகவும் கூறினார். பாலுவிற்க்கு அவர் முகம் சட்டென்று நினைவிற்கு வந்தது.

“ஸாரி ஸார். லஞ்சுக்கு போயிருந்தேன்.”

“பரவாயில்லை. நான் தான் ஸாரி சொல்ல வேண்டும். பிஸினஸ் நேரத்திற்கு
பிறகு உங்களுக்கு தொந்தரவு தருகிறேன்”.

“டெபுடி மேனெஜரைப் பார்த்தீர்களா?”

“பார்த்தேன். மேனர்ஸ் தெரியாதவராக இருக்கிறார். உங்களைப் பார்க்கச் சொல்லி
கூச்சலிட்டார்.”

“அதற்காக மறுபடியும் ஸாரி.”

“நீங்கள் ஏன் ஸாரி சொல்லவேண்டும்?”

பாலுவிற்கு, அவர் கேட்கப்  போகும் உதவியை செய்வது தவிர்க்கமுடியாதது என்று
பட்டது. பாலு தொடர்ந்தார்.

“சொல்லுங்க ஸார். என்ன செய்யவேண்டும்.”

ஆன்ட்ரூஸ் தனது கைப்பையை திறந்து ஆறு 1000 அமெரிக்க டாலர் டீ சி – க்களை
டேபிளில் வைத்தார்.

“நான் இன்று துபாய் திரும்பிச் செல்லவேண்டும். நண்பர் ஒருவருக்கு 150000.00 செக் கொடுத்திருக்கிறேன். நாளை மறு நாள், அதாவது, திங்களன்று அது மற்றொரு வங்கி மூலமாக வரும். இந்த டீ சி-க்களை என் கணக்கில் வரவு வைத்து, நான் நண்பருக்கு கொடுத்த செக்கிற்கான பேமெண்ட் செய்யவேண்டும்.”

பாலுவிற்கு, அவர் சொன்ன முழு விவரங்களும் மனதில் பதியவில்லை.

“ஸார். இன்று சனிக்கிழமை. டீ.சி-க்களை வாங்க முடியாது. திங்கள் கிழமை வாருங்கள்.”

ஆன்ட்ருஸ், சற்று, அழுத்தமாக “ஸார், நான் இன்று துபாய் செல்கிறென் என்று சொன்னேனே! எப்படி என்னால் திங்களன்று வர முடியும். இரண்டு நாள் முன் தான் 15,00,000த்திற்கு, என் மகளின் பெயரில் ஃபிக்ஸ்ட் டெபொசிட் செய்தேன். அதை நான் க்ளோஸ் செய்ய விரும்பவில்லை.”

டெலிபோன் மணி அடித்தது. பாலு விழித்துக் கொண்டார். ஒரு நிமிடம் என்று சைகை காட்டி விட்டு, போனில் கவனத்தை செலுத்தினார். மற்ற வங்கியை சேர்ந்த நண்பர், 3 மணிக்கு மாவட்ட கலெக்டெர் அழைத்திருந்த கூட்டத்தை பற்றி நினைவு படுத்தினார். உடனே விஜயனை அழைத்து கலெக்டெர் அழைத்த கூட்டத்திற்கு வேண்டிய தகவல்களை தருமாறு கூறினார். பின்னர், ஆன்ட்ருஸ் டேபிள் மேலே வைத்திருந்த டீ.சி-க்களை எடுக்கப் போனார். உடனே ஆன்ட்ரூஸ், சிரித்தபடியே

“கையெழுத்து போடவேண்டாமா?” என்று டீ.சி – க்களில் குறிப்பிட்ட இடத்தில் கையெழுத்து இட்டு, பாலுவிடம் கொடுத்தார். பாலு தன் செயல்களில் கட்டுப்பாடு இழந்ததை உணர்ந்து, மிகவும் வேதனைப் பட்டார். பிறகு, தேவையான சில பேப்பரில், வவுச்சரில் ஆன்ட்ரூஸின் கையெழுத்துகளை வாங்கினார். ஆன்ட்ரூஸ் அறையைவிட்டு சென்றபின், டேபிளில் மீது இருந்த ஒரு பெரிய க்ளிப்பில் கவனிக்கவேண்டிய மற்ற காகிதங்களுடன் டீ.சி – க்களையும் வைத்துக்கொண்டார். திங்கள் கிழமை காலை முதல் வேலையாக, அமெரிக்க டாலரின் மதிப்பை அறிந்துகொண்டு, 6000 அமெரிக்க டாலரை இந்திய ரூபாயாக மாற்றி, ஆன்ட்ரூஸின் கணக்கில் வரவு வைக்கவேண்டும் என்று மனதில் குறித்துக்கொண்டார். அப்பொழுது, விஜயன் அறைக்கு ஃபைலுடன் வந்தார். தாமஸும் மீண்டும் கோபமாக உள்ளெ வந்தார். வந்தவர், உரத்த குரலில்,

“மிஸ்டர் பாலசுப்ரமணியன், நீங்கள் என்னை வேண்டுமென்றே ஆன்ட்ருஸ் முன்பாக அவமானப் படுத்துகிறீர்கள். நான் மறுத்த வேலையை நீங்கள் எப்படி ஒத்துக் கொள்ளலாம்.”

உடனே விஜயன் ஏதோ கூற முயற்சித்தார்.

தாமஸ் கோபமாக விஜயனிடம் “நான் உன்னிடம் பேசவில்லை. உன் வேலையைப் பார்.”

பாலு விஜயனைப் பார்த்து, “நான் மீட்டிங்குக்குபோகிறேன். 4 மணிக்கு வருவேன். யாரையாவது இருக்கச் சொல்.”

பதிலை எதிர் பார்க்காமல், பாலு ஃபைலை எடுத்துக் கொண்டு, சென்று விட்டார். மீட்டிங்கில் அவர் மனம் ஈடுபடவில்லை. கலெக்டெர் நடப்பு விவரங்களை கேட்க, பாலு முன்னுக்குமுரணாக பதில் அளித்தார். கலெக்டர் சிறிது நகைச்சுவையுடன் அதை விமர்சிக்க, அனைவரும் லேசாகச் சிரித்தனர். பாலுவிற்கு கூட்டம் சட்டென்று முடிந்தால் நல்லது என்று பட்டது.

கூட்டம் முடிந்து கிளைக்கு 4 மணிக்கு வந்தார். அவர் வரவுக்காகக் காத்திருந்த பியூனைத்தவிர, மற்ற அனைவரும் சென்றுவிட்டனர். டேபிளில் மேலும் சில பேப்பர்களும், புத்தகங்களும் இருந்தன. பேப்பர்கள் அனைத்தையும் டேபிள் அறைகளில் வைத்துப் பூட்டினார். புத்தகங்களில் கையொப்பக் குறிகளை இட்டுவிட்டு, கிளையை மூடும் படி பியூனிடம் கூறினார். பிறகு சாவியை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு சென்றார். திங்கள் கிழமை வரை கிளையைப்பற்றி நினைக்ககூடாது என்று முடிவு செய்து கொண்டார். குளித்து உடைளை மாற்றிக் கொண்டு, குடும்பத்துடன் குருவாயூர் கோவிலுக்கு புறப்பட்டார்.

திங்கள் காலை. பாலு தன்னை தயார் செய்துகொண்டு, கிளைக்கு போக ஜீப்பில் அமர்ந்தார். ட்ரைவர் சனிக்கிழமை நடந்தவற்றை நினைவுகூர்ந்து, தாமஸுக்கு மெமோ கொடுத்து, சரியான நடவடிக்கை எடுத்திருக்கவேண்டும் என்றும், மற்றும் எதேதோ ஆலோசனைகளைக் கூறிக்கொண்டும் வந்தார். பாலுவிற்கு காதில் விழுந்தாலும், பதில் கூறாமல் இருந்தார். அறைக்கு வந்ததும், தனது பணிகளை துவங்கினார். வெங்கி என்ற ஒரு பியூன், மற்ற வங்கிகள் மூலமாக வந்த காசோலைகளை பாலுவின் பார்வைக்கு வைத்தான். வெங்கி நல்லவன். பாலுவிற்கு, வந்த புதிதில், பல உதவிகளை செய்தவன். சிறுபான்மை ஊழியர் சங்கத்தின் கிளை செயலாளர். அவனும், .தாமஸை விடக்கூடாது என்று கூறிவிட்டு சென்றான்.

வந்த காசோலைகளில், ஆன்ட்ருஸ் தன் நண்பருக்கு அளித்ததாக சொன்ன ரூ 150000 க்கு ஆன காசோலையும் இருந்தது. உடனே, அவர் கொடுத்துவிட்டு சென்ற டீ.சி- க்கள் நினைவுக்கு வந்தது. அதற்கு சமமான இந்திய ரூபாயை ஆன்ட்ரூஸ் கணக்கில் வரவு வைத்து விட்டு, ரூ 150000 க்கு ஆன காசோலையை கையாள வேண்டும். டீ.சி-யை வைத்திருந்த பெரிய க்ளிப்பை எடுத்தார்.

டீ.சி-க்களை காணவில்லை. டேபிளின் பேப்பர்கள் வைத்திருந்த அறையின் உள்ளே கையை விட்டுப் பார்த்தார். பிறகு இடது , வலது பக்கங்களில் இருந்த மற்ற அறைகளையும் பார்த்தார். அதன்பின், சுற்றி இருந்த ஃபைல்கள், புத்தகங்கள், தரை, மற்றும் அலமாரிகள் என்று, தேடும் பரப்பளவையும், கொள்ளளவையும் அதிகரித்துக்கொண்டே போனார். முகத்தில் கவலையின் ரேகைகள் படர ஆரம்பித்தன. விஜயனை கூப்பிட்டார். விவரங்களை கூறினார். பாலுவுடன் சேர்ந்துகொண்டு அவரும் மேலும் பல இடங்களில் தேடஆரம்பித்தார். மற்ற ஊழியர்களுக்கும் நடந்துவரும் குழப்பத்தின் பரிமாணம் விளங்க, சிலர் முழு மனதுடனும், சிலர் அரை மனதுடனும், மற்றும் சிலர் வேண்டாவெறுப்பாகவும், ஒருவேளை, தவறுதலாக டீ.சி-க்கள் தங்களிடம் வந்துவிட்டதோ என்று தங்கள் டேபிளிலும் சுற்றுபுற்ங்களிலும் தேடினர்.

காலையில், கிளையை பெருக்கும் பெண்ணும் கோணியில் கட்டி வைத்திருந்த குப்பையை கீழே கொட்டி, ஒவ்வொரு காகிதமாக வங்கியின் ஒரு அதிகாரியிடம் காண்பித்து, “இது தானா …… இதுதானா” என்று கேட்டுக்கொண்டிருந்தாள். தாமஸ் மாத்திரம் சிறிதும் சலனமில்லாமல் அமர்ந்திருந்தார். விஜயன் பாலுவிடம்,

“தாமஸ் தனது டேபிளை பார்க்கவிட மறுக்கிறான்”

“சரி நான் கேட்கிறேன்”

பாலு தாமஸின் டேபிளுக்குச் சென்றார். யாரும் கவனிக்கவில்லை என்று உணர்ந்த தாமஸ் பாலுவின் காது அருகே மெல்லிய குரலில், சரிதான் போடா என்றார். வேதனையுடன் தனது அறைக்கு வந்த பாலு யோசனையில் ஆழ்ந்தார். நடந்த சம்பவம், தனிப்பட்ட முறையில் பெரிய பாதிப்பை உண்டாக்குமே என்று பயந்தார். விளக்கம், குற்ற பத்திரிக்கை, மறு விளக்கம் என்று அடுக்கடுக்காக தொடருமே. பிறகு தண்டனை, அதன் தீவிரம் என்று பாலுவின் மனம் பல நிலைகளுக்கு தாவித்தாவி சென்றது. விஜயனின் குரல் எண்ண ஓட்டத்திற்கு தடையை ஏற்படுத்தியது.

“ஸார். 150000 காசோலையை என்ன செய்வது. பணம் இல்லை என்று திருப்பி அனுப்பமுடியாது. அது சட்டப் பிரச்சனையை உருவாக்கும்.”

“சரி, ரீஜனல் மேனேஜரிடம் விவரங்களைச் சொல்லி, வழியை கேட்கிறேன்”

பாலு அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, விவரங்களைச் சொன்னார். கோபத்துடன் அவர், தன்னால் ஒன்றும் செய்யமுடியாது என்று கூறி விட்டு, தொலைபேசி இணைப்பைத் துண்டித்தார். பாலு மிகுந்த கவலையுடன், தலைமை அலுவகத்தில் உள்ள சம்பந்தப்பட்ட பொது மேலாளரை தொடர்பு கொண்டார்.

அவர் “சரி, டீ.சி-க்களை கையாளும் முறைபடி செய்யவேண்டியவற்றை செய்து, ஆன்ட்ருஸ் கணக்கில் வரவு வை. பிறகு, டீ.சி-க்கள் உன் கையில் இல்லாததால், சம்மந்தப்பட்ட வெளி நாட்டு வங்கியைத் தொடர்பு கொண்டு டீ.சி-க்களின் மதிப்பை விரைவில் திரும்பப் பெறும் வழியைப் பார்.”

உடனே, பாலு டீ.சி கையாளும் முறைப்படி, விஜயன் மூலமாக ஆன்ட்ருஸ் கண்க்கில் வரவு வைக்கும் பணியை முடித்தார். பிறகு துபாயில் உள்ள ஆன்ட்ருஸுடன் தொடர்பு கொண்டு, டீ.சி-க்களின் எண்கள் போன்ற விவரங்களை பெற்றார்.

சுந்தரத்தின் உதவியால் அவரது அலுவலகத்தில் இருந்த தொலைதூர தட்டச்சு மூலம் விவரங்களை, வெளி நாட்டு வங்கிக்கு தெரிவித்தார். கிளையில் நிலவிய இறுக்கம் எல்லோரது முகத்திலும் தெரிந்தது. அவரவர் பணிகளை அமைதியாக செய்து கொண்டிருந்தனர்.

5 மணி அளவில், ரீஜனல் மேனேஜர் தொலை பேசியில் தொடர்புகொண்டு, காலையில் காட்டிய கடுமைக்கு வருத்தம் தெரிவித்தார். மேலும் அவர் “மிஸ்டர் பாலு, கிளையில் இன்றுவரை நடந்தவற்றை கேட்டு தெரிந்துக்கொண்டேன். ஸாரி, தாமஸை டெபுடி மேனேஜராக செய்தது தவறுதான். டீ.சி காணாமல் போனது கூட அவன் வேலையாக இருக்கும். கூடிய சீக்கிரத்தில் சரி செய்கிறேன். பயமில்லாமல் செயல்படுங்கள். கிளையின் வளர்ச்சியில் கவனம் செலுத்துங்கள்.”

பாலுவிற்கு அவரது வார்த்தைகள் ஆறுதலாக இருந்தன. மனம் லேசானதாக உண்ர்ந்தார். மாலையில் வீடு திரும்பியதும் மனைவியிடமும், அம்மாவிடமும், நடந்தவற்றைச் சொன்னார். சாதாரணமாக எதையும் சொல்லாதவன், இப்பொழுது ஏன் சொல்கிறான் என்ற சந்தேகப் பார்வையுடன், அம்மா கேட்டாள்

“ஏண்டா! நீ செய்த தப்புக்கு வேலை போய்விடுமா?”

மனைவி, உடனே, வழக்கமாக நல்லது, கெட்ட்து எல்லாவற்றக்கும் சொல்லும் ஒரே தீர்வை, இப்போதும் சொன்னாள்.

“தின்ந்தோறும் அனுமார் கோயிலை 9 தடவை சுற்றினால் எல்லாம் சரியாகிவிடும்”

பாலுவிற்கு , கோயில் சமாச்சாரங்களில் எப்போதும் நம்பிக்கை உண்டு. நாளை முதல் கண்டிப்பாகச் செய்யவேண்டும் என்று தீர்மானித்துக்கொண்டார். மறுதினம், ட்ரைவர் ஜீப்பில் போகும்போது கேட்டார்

“என்ன பாலு, முகத்தில் மாற்றம் தெரியுதே, நேத்து நடந்த கலாட்டாக்கு அப்புறம் கூட.”

அவர் சொன்னதில் பாதி உண்மை இருந்தது. டீ.சி காணாமல் போன விவகாரத்தில், ரீஜனல் மேனேஜரின் கணிப்பில் பாலுவிற்கு உடன்பாடில்லை. இருந்தாலும், தானாக எந்த வித புகாரும் செய்யாத நிலையில், தாமஸைப் பற்றி எல்லாவற்றையும் இச்சம்பவத்தின் அடிப்படையில் மற்றவர் மூலம் தெரிந்து கொண்டு, அதை மாற்றி அமைக்கிறேன் என்ற அவரது வாக்கு, பாலுவின் மனதில் ஒரு சிறு மாற்றத்தை ஏற்படுத்தியது. வங்கியில் இருந்த பெரும்பாலான ஊழியர்கள் பாலுவிற்காக கடவுளிடம் பிராத்திக்கிறோம் என்று சொன்னதும் சிறு மாற்றத்திற்கு காரணமாக இருக்கலாம். இருப்பினும், தாமஸைப் பற்றிய அச்ச உணர்வு மட்டும் குறைந்ததாக அவருக்கு தெரியவில்லை.

இரண்டு நாட்களில் சம்பவத்தின் தீவிரம் சிறிது குறைந்தது போல் தோன்றியபோது வெளி நாட்டு வங்கியில் இருந்து வந்த தொலைதூர தட்டச்சு சேதி, சங்கடத்தை ஏற்படுத்தியது. டீ.சி-க்கள் தொலைந்ததை பதிவு செய்துகொண்டாலும், அவை இல்லாமல் அத்தொகையை அளிக்க, அந்த வெளி நாட்டு வங்கி, போலீஸில் புகார் அளித்திருக்கவேண்டும் என்றும், முதல் தகவல் அறிக்கையின் நகல் வேண்டும் என்றும் கட்டாய விதியாக குறிப்பிட்டிருந்தது. இச்செய்தி கிளையின் ஊழியர்களுக்கு கலக்கத்தை உண்டாக்கியது. தாமஸ், எல்லோரிடமும், பாலுவிற்காக இல்லாமல் உங்களுக்காக முதலில் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள் என்று கூறியதாக விஜயன் சொன்னார். ஊழியர்களின் மன ஓட்ட்த்தை ஓரளவு வெளிப்படுத்திய தாமஸின் விமர்சனம், மேலதிகாரியிடம் ஆலோசனை செய்ய பாலுவைத் தூண்டியது. அவரது ஆலோசனைப்படி, மறு நாள் காலை 11 மணிக்கு, பாலு ஒரு சிறிய கூட்டத்தைக் கூட்டினார். அனைவரும் ஒட்டு மொத்தமாக தங்களது அச்சத்தை கூறினர். தாமஸ் கோபத்தின் உச்சியில் இருந்தான்.

“நீங்கள் செய்த மோசடிக்கு, எங்களை பலி ஆக்குவதா. ஊழியர்களில் பாதி பேர் பெண்கள். அவர்களை போலீஸ் நிலயத்தில் நிறுத்துவீர்களா?”

சந்தடிசாக்கில், பாலுவை மோசடி பேர்வழி என்ற தாமஸின் பேச்சுக்கு விஜயன், வெங்கி உட்பட சிலர் எதிர்ப்பு தெரிவித்தாலும், பெரும்பாலானோர் தங்கள் மவுனத்தின் மூலமும், வார்த்தைகள் மூலமும், “மோசடி” என்றதற்கு இல்லை என்றாலும், மற்ற கருத்துகளுக்கு ஆதரவு அளித்ததை பாலு புரிந்துகொண்டார்.

பாலு உறுதியான நிலைபாட்டை எடுக்கும் நேரம் இதுதான் என்றுமுடிவு செய்தார். “ஸாரி நண்பர்களே. எனக்கு வேறு வழி இல்லை. நான் போலீஸில் புகார் செய்யச் செல்கிறேன்” என்று கூறிவிட்டு தன் அறைக்கு திரும்பினார்.

வெங்கி பாலுவின் அறைக்கு வந்தான். சிறிது உடைந்த தமிழில், “ஸார். இந்த ஏரியாவின் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் எனக்குத் தெரியும். எந்த பிரச்சனை இல்லாமல் நான் பாத்துகிறேன் நீங்க லெட்டரை ரெடி செய்யுங்க.” விஜயனும் வெங்கியின் அரசியல் தொடர்பால் உண்டான போலீஸின் நட்பைப்பற்றி சொன்னார். பாலு போலீஸுக்குக் கொடுக்க ஒரு விரிவான புகார் கடிதம் எழுதினார்.

மூவரும் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் அலுவலத்திற்கு சென்றனர். சீ..ஐ வெளியில் செல்ல ஜீப்புக்காக வாசலில் நின்றுகொண்டிருந்தார். வெங்கியைப் பார்த்து,

“என்ன?”

“ஒன்னுமில்லை ஸார்…….”

என்று இழுத்தபடி, புகார் கடிதத்தைக் கொடுத்தான். கடிதத்தை படித்ததும்,
மிகவும் கோபமாக பாலுவைப் பார்த்து

“என்ன இது? நீங்கள் ஏதாவது தொலைப்பீர்கள். போலீஸ் தேடித் தர வேண்டுமா? இது போலீஸின் வேலை இல்லை. கிளையில் ஏதாவது களவு போச்சா? அப்படி களவு போயிருந்தாலும், அதை 5 நாள் கழித்து, எவிடென்ஸ் எல்லாம் அழித்துவிட்டு போலீசிடம் எஃப்.ஐ.ஆர் போட சொல்லுறேங்களே! யார் மீதாவது சந்தேகம் உண்டா? கிளையில் இருக்கும் எல்லாரையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டுவந்து எங்க ஸ்டைலில் விசாரிக்கட்டுமா?”

என்று அடுக்கிக்கொண்டே போனவர், லெட்டரை வெங்கி மீது வீசிவிட்டு, ஜீப்பில் எறி சென்றுவிட்டார். பாலு வெலவெலத்துப் போனார். தொலைந்து போவதற்கும் களவு போவதற்கும் உள்ள வேறுபாடு போலீஸ் கண்ணோட்டத்தில் பாலுவிற்கு புரிந்தது. களவு என்று எழுதாததும் ஒரு விதத்தில் நல்லதுதான். எழுதியிருந்தால். சர்க்கிள் இன்ஸ்பெக்டர், போலீஸ் படையுடன், உடனே கிளைக்கு வந்து………

வெங்கி, சிரித்துக்கொண்டே, லெட்டரைப் பொறுக்கி எடுத்துக்கொண்டான்.

“ஸார். கவலைப் படாதிங்க. நாம எஸ்.பி கிட்ட போலாம். அவரையும் எனக்குத்தெரியும்”

மூவரும் எஸ்.பி அலுவலகத்திற்கு போனார்கள். வெங்கி அனுமதி வாங்கிக்கொண்டு எஸ்.பி அறைக்குள் போனான். சற்று நேரம் கழித்து வெளியில் வந்த வெங்கி

“ஸார் சாயங்காலம் 6 மணிக்கு வீட்டுக்கு வரச்சொன்னார். இப்ப போலாம்” மூவரும் கிளைக்கு திரும்பினார்கள். எஸ்.பி சர்க்கிள் இன்ஸ்பெக்டர் போலப் பேசினால் என்ன செய்வது என்று பாலு யோசித்தார். எஸ்.பி –க்கும் தனக்கும் ஒரு கற்பனை கேள்வி-பதில் நிகழ்ச்சியை மனதுக்குள் நடத்திப் பார்த்தார்.

மற்ற வேலைகள் எதுவும் செய்யமுடியவில்லை. 5 மணிக்கு வெங்கியும், விஜயனும் அறைக்கு வந்தார்கள். மூவரும் எஸ்.பி வீட்டிற்குச் சென்றார்கள்.

காவலாளி, வரவேற்பு அறையில் அமரச் சொன்னார். எஸ்.பி வந்ததும் மூவரும் எழுந்து நின்றார்கள். எஸ்.பி உட்காரச் சொல்லிவிட்டு, வெங்கியிடம் குடும்ப நலங்களைக் கேட்டார். பாலுவிற்கு, வெங்கியை பற்றி சிறிதளவு தகர்ந்த நம்பிக்கை மாறியது போல தோன்றிற்று. எஸ்.பி  பாலு கூறிய முழு விவரங்களையும் கேட்டு கொண்டு, ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்டார்.

“யாரவது திருடியிருந்தால், அவர் இந்த டீ.சி – க்களை பணமாக மாற்றமுடியுமா?”

பாலு, பதில் தயார் செய்யாத கேள்வியாக இருந்தது. சில வினாடிகளில் சமாளித்துக்கொண்டு, பதில் சொன்னார்.

“10 சதவீதம் வாய்ப்பு உண்டு ஸார். திருடியவன் போலி பாஸ்போர்ட் தயார்
செய்து………….”

எஸ்.பி கையை உயர்த்தி, “ஓகே, ஓகே….. நாளை காலையில் ஸ்டேஷன் சப்-இன்ஸபெக்டரை பாருங்க.”

காவலாளி நால்வருக்கும் டீ கொண்டுவந்தார். எஸ்.பி-யும் வெங்கியும் டீ குடித்துக்கொண்டே பேச்சை தொடர்ந்தனர். சுமார் ஒரு மணி நேரம் தொடர்ந்த பேச்சை பாலு மிகவும் ரசித்து கேட்டுக்கொண்டிருந்தார். அவரிடம் விடை பெற்றுக்கொண்டு, வெளியில் போவதற்காக மூவரும் இரண்டு அடி வைத்திருப்பார்கள். எஸ்.பி, “வெங்கி” என்று கூப்பிட்டார். மூவரும் திரும்பினர்.. எஸ்.பி  “ சர்க்கிள் இன்ஸ்பெக்டர் கிட்ட போகாதிங்க” என்றார். மூவரும் சிரித்துக்கொண்டே “சரி சார்” என்றனர். தான் சர்க்கிள் இன்ஸ்பெக்டரைப் பற்றி எதுவும் சொல்லாத நிலையில், எஸ்.பி-யின் எச்சரிக்கை, பாலுவின் நம்பிக்கையை மேலும் அதிகரித்த்து.

வெளியே வந்த பிறகு மூவருக்கும், மறந்து போன மதிய சாப்பாடு, கடும் பசி மூலம் நினைவுக்கு வந்தது. ஓட்டலில் சாப்பிட்டுக்கொண்டே, வெங்கியின், இது போன்ற பல வெற்றிக் கதைகளை பேசிவிட்டு, வீட்டிற்குப் போனார்கன்.

10மணிக்கு மனைவி, அம்மா, மகள் எல்லோரும் தூங்கிவிட்டார்கள். பாலுவிற்கு தூக்கம் வரவில்லை. மேலும் வெங்கியும் விஜயனும் அருகே இல்லாத நிலையில், அச்ச உணர்வு அதிகமாகவே இருந்தது.

மறு நாள் காலை பாலுவும், வெங்கியும் 10 மணிக்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு போனார்கள். எஸ்.ஐ வரவில்லை. ஒரு காவலாளி என்ன என்று சைகை மூலம் கேட்டதற்கு வெங்கிதான் பதில் சொன்னான்.

“எஸ்.ஐ- யை பார்க்கவேண்டும்”

“அவர் 11 மணிக்கு வருவார்” என்று சொல்லிவிட்டு, எஸ்.ஐ டேபிளுக்கு முன்னால் இருந்த நாற்காலியை மற்றொரு காவலாளி டேபிளுக்கு முன்னால் போட்டுக்கொண்டு,அவருடன் பேச ஆரம்பித்தான். பாலு நின்றுகொண்டே சுற்று முற்றிலும் பார்த்தார். அந்த பழைய கட்டிடத்தில் இருந்த மேஜைகள்மீதும், அலமாரிகள்மீதும் அழுக்கடைந்த பேப்பர் கட்டுகள் காணப்பட்டன. நாலைந்து, துப்பாக்கிகளை சுமந்திருந்த மர ஸ்டாண்ட் ஒரு ஒரமாக இருந்தது. லாக்கப் அறையின் கம்பிகளைப் பிடித்துக்கொண்டு, வெளியில் நடப்பதைப் பார்க்கும் சில முகங்கள் தெரிந்தன. நிற்பவர்களின் கால்களின் இடையே, லாக்கப்பில் கீழே உட்கார்ந்து கொண்டு இருப்பவர்கள் வேடிக்கை பார்ப்பதற்காக தங்கள் முகங்களைத் திணித்து வைத்திருந்தார்கள்.. இப்படிப் பல காட்சிகள். போலீஸ் ஸ்டேஷனுக்கு வருபவர்கள் குறைவாக இருக்கவேண்டும் என்பதுதான் நோக்கம் போலத் தோன்றிற்று.

ஒருவரை மட்டும் , ஜட்டியுடன், ஜன்னல் கம்பியுடன் இரண்டு கைகளிலும் விலங்கிட்டு வைத்திருந்தார்கள். அவன் கால்களை பரப்பிக்கொண்டு, அரை நிர்வாணக்கோலத்தில் கீழே உட்கார்ந்திருந்தான். உடலில் பல இடங்களில் அடி வாங்கிய தழும்புகள் இருந்தன. இரண்டு பெண் காவலாளிகள் அவனைப் பார்த்து கேலியாக விமர்சித்து சிரித்தனர். அவனும் எதோ சொல்லி சிரித்தான்.

ஜன்னலுக்கு வெளியே இருந்து அவனுக்கு தெரிந்த ஒரு நபர், பற்ற வைத்த பீடியை அவன் புகைக்க வசதியாக பிடித்துக்கொண்டிருந்தான். ஒரு காவலாளி அவர்களை விரட்டினான். இருவரும் மேலும் சிரித்துக்கொண்டே, பாலுவைக் காட்டி, அவரைக் கவனியுங்கள் என்று சைகை காட்டினர். பாலுவிற்கு, வேதனையின் காரணமாக, கண்களில் நீர் கோர்த்தது. ஒருவேளை எஸ்.பி தன்னைப் பற்றி சொல்லாமல் இருந்து, எஸ்.ஐ –யும் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் போலப் பேசினால்! பாலுவிற்கு, கிளை ஊழியர் அனவரையும் போலீஸ் ஸ்டேஷனில் நிலவும் சூழ் நிலையின் இடையே பார்ப்பதைக்  கற்பனை செய்யவே பயமாக இருந்தது. தனது தவறால், அனைவருக்கும் கஷ்டம் வருமே என்று பாலு கலங்கினார்.

எஸ்.ஐ –யும், வெங்கியும் உள்ளே வந்தனர். வெங்கி பாலுவை காண்பித்து, ஏதோ சொன்னான். உடனே எஸ்.ஐ காவலாளியைப் பார்த்து, இரண்டு சேரைப் போட உத்தரவு விட்டார். வெங்கியும், பாலுவும் சேரில் உட்கார்ந்தனர். எஸ்.ஐ பாலுவைப்பார்த்து

“ஸாரி ஸார். பக்கத்தில் காலேஜ் ஸ்ட்ரைக். கொஞ்சம் பிஸி.”

காவலாளியிடம் டீ கொண்டு வரச் சொன்னார். பாலூவிடமிருந்து லெட்டரை வாங்கிக் கொண்டார்.

“எஸ்.பி  உங்க கேஸைப் பற்றி சொன்னார்……… டேவிட் இங்கே வா”

டேவிட் ஸ்டேஷனில் வழக்குகளை பதிவு செய்பவர். அவரிடம் பாலுவின் லெட்டரைக்
கொடுத்து. “நம்பர் போட்டு, ஸ்லிப்பைக் கொடு”

பிறகு பாலுவைப் பார்த்து. “ஸார், உங்க புகாரை வைத்துக்கொண்டு, எஃப்.ஐ.ஆர் போட முடியாது. ஆனால் உங்களுக்கு, ஒரு அக்னாலெட்ஜ்மெண்ட் கொடுக்கறேன்”.

வெளி நாட்டு வங்கிக்கு போலீஸில் பதிவு செய்யப்பட்டதற்கானஆதாரம் போதுமென்று பாலுவிற்கு பட்டது. அதனால் மறு பேச்சு பேசவில்லை. டேவிட் காக்கி நிறத்தில், மலையாளத்தில் அச்சிட்ட காகிதத்தை கொடுத்தார். எஸ்.ஐ அதில் ஒப்பம் இட்டார். அதை உறுதி செய்வது போல ஒரு ரப்பர் ஸ்டாம்பை பதித்தார். பாலு அதை வாங்கிக்கொண்டு, படிப்பதைப் போல் பார்த்தார். ஒரு நம்பரும், தேதியும் இருந்தது. திருப்தி அடைந்தவராய் எஸ்.ஐ-யைப் பார்த்து “ரொம்ப நன்றி” என்று சொல்லிவிட்டு, வெங்கியுடன் கிளைக்கு புறப்பட்டார்.

முதலில் பார்த்த காவலாளி, ஒரு ஸல்யூட் அடித்தான். எஸ்.ஐ வாசல் வரை வந்து வழி அனுப்பி வைத்தார்.

கிளைக்கு வந்ததும் வெளி நாட்டு வங்கி தொலைதூர தட்டச்சுவில் கொடுத்த வரைவு கடிதத்தைப் போல் ஜாமீன் கடிதம் தயாரித்தார். அதில், வங்கி அதிகாரிகள் இருவர் ஒப்பமிடவேண்டும். தாமஸ், கிளையில் இரண்டாவது நிலை ஆஃபீஸராக இருந்தாலும், அவரை தவிர்த்து விட்டு விஜயனை ஒரு ஒப்பம் இட பாலு கேட்டுக்கொண்டார். விஜயனும் முதலாவதாக ஒப்பம் இட, பாலு இரண்டாவதாக ஒப்பம் இட்டார். ஜாமீன் கடிதம், போலீஸ் கொடுத்த கடிதத்தின் நகல், இரண்டையும் ஒரு கடிதத்துடன், அன்றே, கூரியர் மூலம் வெளி நாட்டு வங்கிற்கு அனுப்பிவைத்தார். அவ்வங்கியிலிருந்து தொலைந்து போன டீ.சி -க்களின் முழுத்தொகையும் கிடைத்துவிடும் என்று பாலு உறுதியாக இருந்தார். அவரது மனம் அமைதி ஆனது போல் உணர்ந்தார்.

இரண்டு தினங்களுக்கு பிறகு, கடந்து சென்ற புயல் மீண்டும் வீசியது.

தாமஸ் பாலுவின் அறைக்கு வந்து, தான் எழுதிய ஒரு கடிதத்தை நீட்டினார்.

பாலு என்ன என்று கேட்டார். தாமஸ் அமைதியாக “ஸார், நான் இந்த கிளையில் இரண்டாவது அதிகாரி என்றாலும், நான் புறக்கணிக்கப்படுகிறேன். உங்கள் நடவடிக்கைகள் வங்கியின் சட்டதிட்டங்களுக்கு உடன்படாத வகையில் உள்ளன. இரண்டாவது அதிகாரி என்ற முறையில் இதை நான் ரீஜனல் மேனேஜருக்கு தெரிவிக்க வேண்டும். அதை தான் எழுதி இருக்கிறேன். அவருக்கு அனுப்பவேண்டியது உங்கள் கடமை.” பாலு கடிதத்தைத் தொட மறுத்து, “வெளியே போடா” என்று கூச்சலிட்டார். தாமஸ் ஏதாவது மன நோயால் அவதிப்படுகிறானோ என்று கூட பாலு எண்ணினார்.

அடுத்த தினம் காலையில் ட்ரைவர் என்னிடம் சிறிய மாற்றத்தை கண்டவராக “பாலு, இப்ப நீ பரவாயில்லை.”

பாலு, சிரித்துக்கொண்டே, தாமஸ் கொடுத்த கடிதம் பற்றிச் சொன்னார். கிளைக்கு வந்த ஒரு மணிக்குள்ளாகவே தாமஸின் கடிதம் அன்றைய சிறப்பு நிகழ்ச்சியாகப் பேசப்பட்டது. விஜயன் பாலுவிடம் அதைப்பற்றித்  தனியாக விவாதித்தார். பாலு அக்கடிதத்தை வாங்கி, அதன் மீது கடின நடவடிக்கை எடுத்திருக்கவேண்டும் என்றார். விஜயனின் எண்ணத்தை ஆமோதிப்பது போல, அக்கடிதம், பாலுவின் பெயரில் ஒரு பதிவுத் தபாலாக மாறி, அவர் டேபிளுக்கு வந்தது.

அந்த ஒற்றைக் காகிதத்தை, வக்கீல் நோட்டிஸ் போல் ஓரங்களை ஒட்டி, பாலுவின் பெயருக்கு, பதிவு தபாலில், வங்கி செலவில், தாமஸ் அனுப்பியிருந்தார். பாலு கோபத்தின் உச்சிக்கே சென்றார். முதன்முறையாக தாமஸின் ஒழுக்கமின்மையை கடிதமாக எழுதி, பதிவுக் கடிதமாக வந்த தாமஸின் கடிதத்தை பிரிக்காமல் இணைத்து, பொருத்தமான நடவடிக்கை எடுக்கப் பரிந்துரை செய்து, ரீஜனல் மேனேஜருக்கு, அனுப்பிவைத்தார். இது நாள் வரை, பாலு இத்தனை துரிதகதியில் இது போன்று நடவடிக்கை எடுத்ததில்லை.

இந்த நிலையில், சென்னைக்கு சென்ற பாலுவின் அம்மா சீரியஸ் என்று தகவல் வந்தது. பாலு அன்றே சென்னை புறப்பட்டுச் சென்றார். பாலுவைப் பார்த்த அம்மா ஏதோ கேட்கவேண்டும் என்று தோன்றுவது போல் பார்த்தார். வேலை போய்விடுமா என்ற கேள்விக்கு பதில் தெரிந்து கொள்ளாமலேயே அம்மா போய்விட்டாள். சில நாட்கள் சென்னையில் இருக்க வேண்டியிருந்த்தால், விஜயனிடம் தினந்தோறும் போன் செய்து விஷயங்களை தெரிந்துகொண்டார்.

15 நாள் கழித்து வந்த பாலுவிடம், ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள், அவரது அம்மா மறைந்த துக்கத்தை பகிர்ந்துகொண்டனர். பாலுவிற்கு தாமஸைப் பற்றி செய்த புகாரை குறித்து எந்த நடவடிக்கையும் இல்லையே என்ற கலக்கமும், வெளிநாட்டு வங்கியில் இருந்து எந்த தகவலுமில்லையே என்ற கவலையும் இருந்த்து. தாமஸும், பாலுவிற்கு தொடர்ந்து பிரச்சனைகளைக் கொடுத்துக்கொண்டு தான் இருந்தார். தாமஸின் பேச்சு, செயல், மிரட்டல், ஆக்ரோஷம், வெறித்தனம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறதே , அதன் விளைவு என்ன ஆகுமோ என்ற அச்சமும் பாலு விற்கு தொடர்ந்தது..

ஓரு சனிக்கிழமை காலை, 9 மணிக்கு கொரியர் மூலம், தாமஸ் கேரளாவை ஒட்டித் தமிழ் நாட்டில் உள்ள ஒரு ரீஜனல் ஆபீசுக்கு மாற்றப்பட்டதாக கடிதம் வந்தது. அன்றே தாமஸை விடுவிக்கவேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. பாலு தாமஸை, விடுவிப்பதற்கான கடிதத்தைத் தானே தயார் செய்து வைத்துக்கொண்டார். பாலு காட்டிய வேகம், அவருடைய அச்சத்தின் அளவினைப் பிரதிபலித்தது. தாமஸ் வருகையைப் பதிவு செய்துவிட்டு, தனது இருக்கையில் அமருவதை பாலு கவனித்தார். வெங்கியை கூப்பிட்டு, தான் தயாரித்த கடிதத்தை தாமஸிடம் கொடுக்குமாறு கூறினார். வெங்கி வாய் விட்டுச் சிரித்ததைப் பார்த்து ஏன் என்று பாலு கேட்டார். வெங்கி “உங்களுக்கு தெரியாதா” என்று சொல்லிவிட்டு, சிரித்துக்கொண்டே, தாமஸின் சீட்டுக்கு போனான்.

சிறிது நேரத்தில், தாமஸும், அவனது விசுவாசியான ஒருவரும் பாலுவின் அறைக்கு வந்தனர். வாய்க்கு வந்தபடி வசை பாடினார்கள். அடெண்டென்ஸில் இங்க் காயும் முன்பே மாற்றல் கடிதத்தை கொடுப்பது அக்கிரமம் என்று கூச்சலிட்டார்கள். பாலுவின் பாதுகாப்பிற்காக விஜயனும், வேறு சிலரும் வந்தனர். சிறிது நேர கூச்சலுக்குப் பிறகு அனைவரும் வெளியே
சென்றுவிட்டனர்.

15 நிமிடங்கள் கழிந்தன. ரீஜனல் மேனேஜர் அவராக பாலுவை தொடர்பு கொண்டார்.

“தாமஸ் என்னைத் தொடர்பு கொண்டு பேசினான். அவனை மாற்றலுக்கான கடிதத்தை பெற்றுக்கொண்டு போக சொல்லியிருக்கிறேன். முடியாதென்றால், ஒழுக்கமின்மை காரணமாக பணி இடை நீக்கம் செய்யப் படுவாய் என்று எச்சரிக்கை செய்துள்ளேன்,” என்றார். பாலுவும் பதிலுக்கு, நன்றி கூறினார்.

விஜயன் அப்பொழுது உள்ளே வந்தார்.

“கிளை வழக்கப்படி, தாமஸுக்கு, செண்ட் ஆஃப் கொடுக்கவேண்டும். நீங்கள் இருந்தால் தான் ஏற்றுக்கொள்ள முடியாது என்கிறான். தயவு செய்து நீங்கள் வீட்டிற்கு போய் விடுங்கள்,” என்றார்.

சரி என்று கூறிவிட்டு, பாலு பத்திரமாக எல்லா பேப்பர்களையும் டேபிள் அறைகளில் வைத்துப்  பூட்டி விட்டு, தனது அறையையும் பூட்டி விட்டு வீட்டிற்கு புறப்பட்டார். டீ.சி-க்கள் தொலைந்த பிறகு, பூட்டுவதை வழக்கமாக கொண்டிருந்தாலும், அன்று தனிப்பட்ட முறையில், கவனம் செலுத்தியதை விஜயனும், ட்ரைவரும் கவனித்தார்கள். வீட்டிற்கு போகும் வழியில், ட்ரைவர் “என்ன பாலு, இன்னும் பயம் விடலையா?”

பாலுவிற்கு, ட்ரைவர் பரிகாசம் செய்ததாகத் தோன்றவில்லை

திங்கள்கிழமை, தனது அறையில் பாலு, பணிகளை பார்க்காமல் தாமஸ் அமர்த்திருந்த இடத்தில் அமர்ந்தார். , விஜயன் , தாமஸ் செய்து வந்த பணிகளை கவனித்துக் கொண்டார். பாலு அந்த டேபிளின் ஒவ்வொரு அறைகளையும் சோதனை செய்தார். வெங்கி அங்கெ வந்து சிரித்தான். பாலுவிடம், “ஸார் ஏன் டைம் பாழ் செய்கிறீர்கள். தாமஸ் எப்போதொ கிழிச்சுப் போட்டிருப்பான்.” என்றான்.

தனது மடத்தனத்தை நொந்துகொண்டே, மற்றவர்கள் கவனிக்கும் முன்பு தனது அறைக்கு பாலு சென்று விட்டார். அப்பொழுது, ரீஜனல் ஆபீசிலிருந்து போன் வந்தது. பழைய ரீஜனல் மேனேஜர் மாற்றலாகி, புதியவர் பொறுப்பேற்கிறார் என்றும், மதியம் 3 மணிக்கு ஒரு சிறிய பார்ட்டி நடக்கிறது என்றும், கட்டாயமாக கலந்து கொள்ளவேண்டும் என்றும் போனில் கூறப்பட்டது. உடனே விஜயனைக்  கூப்பிட்டு கேட்டார். அவரும், பாலு லீவில் இருந்தபோது, இச்செய்தி வந்த்தாகவும், பாலுவிடம் கூற மறந்ததாகவும் கூறினார்.

பாலுவும்,, விஜயனும் ஒரே மன நிலயில் இருந்திருக்கவேண்டும். 1 மணிக்கு புறப்பட்டாலும், 80 கீ.மீ தொலைவில் இருந்த ரீஜனல் ஆபீஸை 3 மணிக்குள் அடைந்துவிடலாம என்று பாலு நினைத்தார். இதற்கிடையில், சனிக்கிழமை என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்று பாலுவிற்கு தோன்றியது. விஜயனிடம் விவரங்களைக் கேட்டார். விஜயன்

“தாமஸின் நெருக்கமான நண்பர்கள் பேசினார்கள், உங்களைப் பற்றித் தான். என்ன சொல்லியிருப்பார்கள் என்று உங்களுக்கே தெரியும். கடைசியில் தாமஸ் தன் பங்கிற்க்கு உங்களை திட்டினான். ஒன்று சொன்னான்…….அந்த நண்பர்களுக்காக அவர்கள் விசுவாசத்துக்காக பாதுகாப்புக்காக இன்னும் முப்பதே நாளில் திரும்பவும் இதே கிளைக்கு வருவான் என்றும், தான் யார் என்பதை உங்களுக்கு காட்டுவான் என்றும…….”

பாலுவிற்கும் சரி, விஜயனுக்கும் சரி, மற்றவர்கள் என்ன சொன்னார்கள் என்பதில், சுவாரசியம் இல்லாததால், பாலு ரீஜனல் ஆபீஸுக்குப் புறப்பட்டார்.

சில தின்ங்கள் சென்றன. பணிகளுக்கு இடையே, இரண்டு வாரங்களில் வரவிருந்த திருவோண கொண்டாட்டம் குறித்து, ஊழியர்கள் பேசிக்கொண்டார்கள். வாமன அவதாரத்தில் அசுரர்களின் அரசன் மஹாபலியை அழிக்க வந்த விஷ்ணு, அவனை அழிப்பதற்கு முன் ஒரு வரம் அளித்தாராம். அதன்படி, மக்களால் மிகவும் நேசிக்கப்பட்ட அந்த அரசன் தன் மக்களைக் காண ஆண்டுதோறும் அந்த நாட்டிற்கு வரும் போது அவரை வரவேற்கும் விதமாக ஓணப்பண்டிகையை மக்கள் வீடுகளில் கொண்டாடுவார்கள என்றும்,  அந்த வழக்கம் காலப்போக்கில் அலுவலகங்கள், கடைகள் என்று எங்கும் கொண்டாடப்படுவதைப் பற்றி பாலு வந்த முதல் ஆண்டே அறிந்துகொண்டார். கிளையிலேயே அத்தப்பூ என்ற பூக்களின் ரங்கோலி, பாயசம், இனிப்புகள், என்று எல்லோரும் பங்கேற்று செய்வார்கள். இதற்காக வங்கி பாதி செலவை ஏற்கும். போன வருடம் பாலு வங்கி பங்கை அனுமதித்திருந்தாலும் தாமஸ் மறுத்ததால் ஊழியர்களே செலவு செய்தனர். விஜயன் பாலுவிடம், கடந்த வருடம் நடந்ததை கூறிவிட்டு, வரும் ஓணத்தின் பாதி செலவை கிளை கட்டாயமாக ஏற்க வேண்டும் என்று ஊழியர்கள் சொல்கிறார்கள், என்றார். பாலுவும், விஜயன் கூறிய பின்னணிக்கு எந்த முக்கியத்துவமும் தராமல், யந்திரத்தனமாக சரி என்றார். விஜயனும் பாலுவின் மன நிலையை புரிந்துகொண்டு ஊழியர்களிடம் பாலு கொடுத்த அனுமதியை சொல்லச் சென்றுவிட்டார்.

அப்பொழுது, வெங்கி வேகமாக உள்ளே  வந்தான்.

“ஸார், உங்களுக்கு தெரியுமா. தாமஸ் , தான் சொன்ன மாதிரி, 30 நாட்களுக்கு உள்ளாகவே ட்ரான்ஸ்ஃபர் வாங்கிவிட்டான். இந்த கிளைக்கு வரவில்லை. ரீஜனல் ஆபீசுக்கு வருகிறான். புது ரீஜனல் மேனேஜர் செய்த வேலை.”

தாமஸின் நெருங்கிய நண்பர்களும் தாமஸின் சூளுரையின் வெற்றியை, அறைக்கு வந்து உறுதி செய்தனர். விஜயனும் உள்ளே வந்து ’என்ன ஸார் இது’ என்றார். பாலு விற்கு மீண்டும் அச்ச உணர்வு தலைதூக்கியது. ரீஜனல் ஆபீசில் உட்கார்ந்துகொண்டு என்ன குடைச்சல் கொடுப்பாரோ என்று நினைத்தார்.பணிகளைத் தொடர மனமில்லாமல், கிளையில் இருந்து 5 மணிக்கே வீட்டுக்கு கிளம்பி விட்டார். மனைவியும், மகளும் ஒரு வாரத்திற்காகச் சென்னை சென்றிருந்தார்கள். குளித்து விட்டு, தினந்தோறும் செல்வது போல் அனுமார் கோயிலுக்குச் சென்றார். வெகு நேரம் கோயிலில் இருந்துவிட்டு, பிறகு ஓட்டலில் ஏதோ சாப்பிட்டுவிட்டு, பாலு வீட்டிற்கு வந்தார். சோபாவில், சாய்ந்துகொண்டு அப்படியே தூங்கியவர், திடீரென்று டெலிபோன் அலறியது, கேட்டு விழித்துக்கொண்டார். லைட் எரிந்துகொண்டிருந்ததால் கடிகாரத்தைப் பார்த்த போது மணி 12.30 என்று காட்டிக்கொண்டிருந்தது. போனின், மறுமுனையில், தாமஸ் மாற்றலாகி போயிருந்த ரீஜனின், ரீஜனல் மேனேஜர், தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். பாலுவிற்கு தூக்கிவாரிப் போட்டது. அவர் தொடர்ந்தார்.

“மிஸ்டர் பலசுப்ரமணியன், உங்கள் ஊரிலிருந்து வந்த தாமஸுக்கு, மறுபடியும் உங்க ரீஜனல் ஆபீசுக்கு ட்ரான்ஸ்பர் ஆகி விட்டது உனக்கு தெரியும்தானே! இன்னிக்கு அவரை விடுவித்துவிட்டேன். ரொம்ப சந்தோஷமா லெட்டரை வாங்கிக்கொண்டான். ராத்திரி, ஏதோ, இங்க ஒரு ஆபீஸருடன், பார்-க்கு போயிட்டு, 10 மணிக்கு, மோட்டார் சைக்கிளில் வந்திருக்கிறான். ரோட் டிவைடரில் மோதி, அந்த இட்த்திலேயே உயிர் போய்விட்டது. கூட வந்தவருக்கு, சின்ன காயம். தாமஸ் ரூமுக்கு போய் பார்த்தோம். அவர் வீட்டு போன் நம்பர் எதுவும் கிடைக்கவில்லை. இப்ப பாடி, ஹாஸ்பிடல் மார்ச்சுரியில் இருக்கிறது. அவர் வீட்டிற்குத் தகவல் சொல்லிடுங்க.”

பாலு ஏதோ பதில் சொல்லிவிட்டு ஃபோனை வைத்தார். இடி விழுந்தது போல உணர்ந்தார். கைகால் வெடவெடுத்தது. கீழே விழுவது போல நிலை தடுமாறியது. அப்படியே உட்கார்ந்துவிட்டார். சில நிமிடங்களுக்கு பிறகு எழுந்து, தண்ணிர் குடித்தார். போனில் செய்தியை தாமஸ் வீட்டாருக்குச் சொல்லத் தயங்கினார். வெங்கியின் வீடு பாலுவிற்குத் தெரியும என்பதால், . தனது மோட்டார் சைக்கிளில் வெங்கியின் வீடுக்கு சென்று, கதவைத் தட்டினார். கதவைத்திறந்த வெங்கி, பாலுவைப்பார்த்ததும் அதிர்ச்சியுடன் “என்ன ஸார்?!” என்று சத்தமாக கேட்டான். விஷயத்தை சொன்னதும், எப்பொழுதும் சிரித்துக்கொண்டே இருக்கும் வெங்கியின் முகத்தில், ஒரு ஆழ்ந்த சோகத்தைப் பாலு முதல் முறையாகப் பார்த்தார். பாலுவின் வண்டியை வீட்டிற்குள் நிறுத்திவிட்டு, தனது வண்டியை , வெங்கி வெளியெ எடுத்தான்.

“உங்கவண்டியை நீங்க எடுக்கவேண்டாம். பின்னாடி உட்காருங்க. தாமஸின் மாமா வீடு தெரியும். முதலில் அவர் கிட்ட சொல்லுவதுதான் நல்லது. அப்புறமா நான் உங்க வண்டியை உங்க வீட்டிற்கு கொண்டுவரேன்”

பாலுவும், வெங்கியும் தாமஸின் மாமா வீட்டுக்குப் போனார்கள். காலிங்க் பெல்லை வெங்கி அழுத்தினான். 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் வெளியெ வந்தார். அவரிடம் தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு, நடந்த சம்பவங்களை சொன்னார்கள். அதற்குள் வீட்டிலிருந்த மற்ற சிலரும் வந்தனர். சிறிய விசும்பல் சத்தம் கேட்டது. கலவரமடைந்த முகத்துடன், தாமஸின் மாமா, இந்த சமயத்தில், பரிச்சயமில்லாத ஒருவர் வந்தால், இதுபோன்ற செய்திகள் தான் இருக்கும், என்றார். சில கார்கள் வீட்டு வாயிலில் நிற்கும் சப்தம் கேட்ட்து. உள்ளிருந்து மற்றவர்களுக்கு, போன் மூலம் செய்தி சென்றிருக்கவேண்டும். 15 நிமிடங்களில் , சுமார் 50 பேர் கூடிவிட்டனர். தாமஸின் குடும்பத்தினர் அங்கில்லை என்று, வந்தவர்களின் பேச்சு மூலம் தெரிந்தது. பாலு விடம், யாரை தொடர்பு கொள்ள வேண்டும் போன்றவற்றை தெரிந்துகொண்டு, அரை மணி நேரத்தில் ஆறு பேர் இரண்டு கார்களில், தமிழ் நாடு நோக்கி சென்றனர். பாலுவும், வெங்கியும் அங்கிருந்து புறப்பட்டனர்.

வீடு திரும்பிய பாலுவிற்கு, தாமஸின் மரணம் ஏற்படுத்திய அதிர்ச்சி, மெதுவாக குறைவது போல் உணர்ந்தார். ஆழ்ந்த உறக்கதிலிருந்து எழுந்த போது மணி 9. ட்ரைவர் வந்துதான் எழுப்பினார். பாலு தன்னை தயார் செய்துகொண்டு, 9.30 க்கு கிள்ம்பினார். தாமஸின் மரணச்செய்தி, ட்ரைவரையும் உலுக்கியது. பேசாமல், வண்டியை கிளைக்கு ஓட்டிச்சென்றார்.

கிளையில் ஒரு அசாதாரணமான பரபரப்பு காணப்பட்டது. வங்கி வேலைகள் ஸ்தம்பித்திருந்தன. சிலரது முகங்கள் கலங்கி இருந்தது. விஜயன் மாத்திரம் பாலுவிடம் வந்து நடந்தவைகளை கேட்டார். பிறகு, சுகுமாரன் வந்தார். அவர் அக்கிளையில் ஒரு ஆபீஸர். ஆணழகன் போன்ற தோற்றத்திற்காக ஒரு காலத்தில் ஜிம்-இல் பயிற்சி செயதவராம். பயிற்சியாளர் சொன்னதைவிட அதிக பளுவைத்தூக்கி, பக்கவாதம் வந்து, ஒரு கையின் செயல்பாட்டைப் பெரிதளவு இழந்தவர். அவரும் சொன்னார்.

“தாமஸுக்கு எல்லாமே தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம் என்ற நினைப்பு. ஓட்டி வந்த மெஷின், ரோடு, டிவைடர்கள், தெரு விளக்கு இவை எல்லாவற்றையும், சில வரைமுறைகளுக்குக் கட்டுப் பட்டு உபயோகிக்கலாமே தவிர, அவற்றை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டதாக நினைக்கக்கூடாது”என்று கூறி விட்டு, இயற்கையும், விமானமும் தன் கட்டுப்பாட்டில் உள்ளது, என்று நினைத்து உயிரிழந்த அரசியல் தலைவரின் பெயரை தாமஸுக்கு உதாரணமாகச் சொல்லிவிட்டு தனது சீட்டிற்கு சென்று விட்டார்.

அமைதியாக உட்கார்ந்திருந்த பாலுவிற்கு அச்ச உணர்வு கொஞ்சம் கொஞ்சமாக மறைவது போல தோன்றியது. மனதில் ஆழப் பதிந்து கிடக்கும் எண்ணங்களும், கற்பனையாக செய்துகொள்ளும் எதிர்கால நிகழ்வுகளும் தான், அச்ச உணர்வின் காரணம் என்ற உண்மை பாலுவிற்குப் புரிந்த்து. அச்ச உணர்வினை மாற்ற எந்த முயற்சியும் எடுக்க இயலாதவராக இதுவரை இருந்தோமோ என்றும் பாலுவிற்கு தோன்றியது. இந்த நிலையில் எண்ணங்களின், மூலக்கரு இப்பொழுது முற்றிலும் அழிந்துவிட்டதால், அச்ச உணர்வு முற்றிலும் அழிந்து, சுதந்திர உணர்வு கிடைத்ததை போலிருந்தது. சோகத்தின் நிழலில் சுதந்திரமான மன நிலை அருவருக்கத் தக்கது என்றும் பாலுவிற்கு பட்டது.

அப்பொழுது, தொலைந்துபோன டீ.சி-க்களின் மதிப்பை திரும்பப் பெற்றதாக தலைமை அலுவலகத்திலிருந்து வந்த செய்தி பாலுவுக்கு அளவு கடந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது. ஆனால் அதை வெளிக் காட்ட விரும்பவில்லை. விஜயனிடம் சொன்னதும், கைகுலுக்கி வாழ்த்து சொன்னார். சுகுமாறனும் கைகுலுக்கினார். பிறகு, மற்றவர்களுக்குச் சொல்ல வெளியெ இருவரும் சென்றுவிட்டனர். பாலுவை வாழ்த்த வந்தவர்களுக்கும் சோகத்தின் காரணமாக மெல்லிய குரலில் வலுவிழந்த வாழ்த்தைத் தான் தெரிவிக்க முடிந்தது. அடுத்ததினம், தாமஸின் இறுதி சடங்கிற்காக பாலு வண்டியில் சென்று கொண்டிருந்தார்.

ட்ரைவர் தாமஸின் வீடு கோர்ட்டிலிருந்து அரை கிலோமீட்டரில் உள்ளது என்று சொன்னார். பிறகு பாலுவிடம ஒருவித உற்சாகத்துடன்

“என்ன பாலு ஹாப்பிதானே?”

பாலு கடிந்துகொண்டார். உடனே, ட்ரைவர் பாலுவிடம் “இதோ பார். எத்தனை பேரை கஷ்டப் படுத்தி இருக்கிறான் தெரியுமா……….”

அப்பொழுது வண்டி, கோர்ட் கட்டிடத்தை தாண்டிச் சென்றது. என்ன நினைத்தாரோ, ட்ரைவர் பேச்சை தொடர்ந்தார்.

“உனக்குத் தெரியுமா….. சாமி கோர்ட்லெ தாமஸ் மாதிரி ஆளுக்கெல்லாம் மரணதண்டனைதான். இன்னும் நாலு நாள்ளெ ஓணம் விஷ்ணு வாமனனாக வந்து மஹாபலிக்கு மரண தண்டனை கொடுத்தார். வாமன அவதாரக்கதைலெ இதுதான் முக்கியம். வருஷாவருஷம் கேரளாவுக்கு வந்து போவது சும்மா ஒரு பர்மிஷன்…… தாமஸின் சாமியும் இதைத்தான் செய்யும்.”

தாமஸின் மரணம் பலரை, சரியோ, தவறோ, சிந்திக்க வைத்துவிட்ட்து என்று பாலு நினைத்தார்.

தாமஸின் பங்களாவின் வாசலில் திரளான கனவான்கள் நிறைந்த கூட்டம்கூடியிருந்தது. கார்களின் எண்ணிக்கை 100-க்கு மேல் இருக்கும்போலிருந்தது. பெரும்பாலான ஆண்கள் தூய வெண்மை நிற வேட்டியும், ஜிப்பாவும் அணிந்திருந்தார்கள். இளவயது ஆண்கள் குறைவாகவே காண்ப்பட்டனர். கண்ணீர் விட்டு கதறிய அறிகுறி துளியும் இல்லை. சிலர் கண்களை, கைகுட்டையால் ஒத்தி எடுத்தனர். பெண்கள் தூய வெண்மை, இளம் சிகப்பு, இளம் நீலம், போன்ற கலரில், ஸ்டார்ச் போட்டு, இஸ்திரி செய்த பருத்தி ஆடைகளில் காணப்பட்டனர். பளிச்சென்று நல்ல நிறமாக இருந்த அவர்களின் நுனி மூக்கு மாத்திரம் சிகப்பாக இருந்தது சிலர், சிறிய கைக்குட்டையால், கண்களின் கீழ்பகுதியை, நாசுக்காக தொட்டுத் தொட்டு எடுத்தனர். அந்த ஊரின் முதன்மை பாதிரியார், ஒரு காரில் வந்து, உள்ளே சென்றார். சிறுது நேரம் கழித்து,
சவப்பெட்டி திறந்தபடி வெளியே வந்தது சவப்பெட்டியில் படுத்துக்கொண்டிருந்த தாமஸ்,. விபத்தின் எந்த விதமான அறிகுறியும் இல்லாத முகத்துடன் அங்கு வந்திருந்தவர்களிடம் காணப்பட்ட மேன்மைத்தன்மையுடன் காணப்பட்டார்.. பாலுவிற்கு, தாமஸின் குடும்பத்தினர் யாரென்று கண்டுபிடிக்க முடியவில்லை. ஒருவிதத்தில் நல்லதுதான் என்று நினைத்தார். ஊர்வல வண்டியில் எற்றப்பட்ட சவப்பெட்டியை சுற்றிலும் மலர் வளையங்கள் காணப்பட்டன. தானும் மலர் வளையம் கொண்டு வரவில்லையே என்று பாலுவிற்கு எரிச்சல் வந்தது. இறுதி ஊர்வலம் நகரத் தொடங்கியதும் பாலு கிளைக்கு புறப்பட்டார். உன்னத குடும்பச் சூழலில் இருந்த தாமஸுக்கு என்ன ஆயிற்று என்று பாலுவிற்கு புரியவில்லை.

மறு நாள் கிளையில், முன் தினம் காணப்பட்ட சோகம் மாறி, எல்லோரும் பரபரப்பாகக் காணப்பட்டனர். வெங்கி, டீ.சீ பணம் கிடைத்ததற்கு ஊழியர்கள் ட்ரீட் கேட்பதாகக் கூறி, 1000 ரூபாய் வாங்கிச் சென்றான்.

நடுஹாலில் இருந்த சேர்களை எல்லாம் எடுத்துவிட்டு சுத்தம் செய்துகொண்டிருந்தார்கள். சிறிது நேரம் கழித்து, ஏராளமான பூக்களைக் கொட்டி, ஓண அத்தப்பூ அமைக்க ஏற்பாடுகள் செய்தார்கள். வெளியில் சென்ற வெங்கி, திரும்பி வந்து, இனிப்பு வழங்கிக்கொண்டிருந்தான். விஜயன் ஒரு பாக்கெட்டுடன் வந்தார். . ஒரு புதிய ஜரிகைக்கரை வேட்டி இருந்தது. அதன்விலை 200 ரூபாய் என்று கூறி பணத்தை பாலுவிடமிருந்து கேட்டு வாங்கிக்கொண்டார். மூன்று நாட்களுக்கு பிறகு கிளையில் நடக்கும் நிகழ்ச்சிக்கு, புதுவேட்டி கட்டி வர வேண்டும் என்றும் சொன்னார். வங்கியில் பணி மிக குறைவாகத்தான் இருந்தது. பண்டிகை சமயத்தில் வாடிக்கையாளர்கள் குறைவாக இருப்பது கடந்த வருடமே பாலு கவனித்த ஒன்று. மாலையில், ஹாலில் அழகான அத்தப்பூ பூத்திருந்தது. இனிப்புகளை மற்றொறு முறை வெங்கி கொடுத்துக் கொண்டிருந்தான். காரணம் கேட்டதற்கு ஒருவர் பெயரைச்சொல்லி, அவருக்கு பிறந்த நாள் என்றான்.

அடுத்த இரண்டு நாளும் அதே குதூகலம் தொடர்ந்தது. எதோ ஒரு காரணத்திற்காகப் பலரும் இனிப்புகளையும், வாழ்த்துகளையும் பரிமாறிக்கொண்டார்கள். . கடந்த ஆண்டை விட ஊழியர்கள் அதிக உற்சாகமாக இருந்ததைத் தங்களுக்கு தாங்களே உணர்ந்தார்கள்.

ஓண நிகழ்ச்சிக்கு பாலு வேட்டி கட்டிக்கொண்டு வந்தார். கிளையில் இருந்த மூத்த பெண் ஊழியர் “ஸார், வேட்டியின் நுனியை வலதுபக்கம் சொருகவேண்டும். அதுதான் கேரள
வழக்கம். தமிழ் நாட்டில் தான் இடதுபக்கம் கட்டுவார்கள்,” பாலுவும் சரி செய்துகொண்டார். பிறகு குழுவாக எல்லோரும் நின்று ஃபோட்டோ எடுத்துக்கொண்டார்கள். கிளையின் மேனேஜர் என்றாலும், தேவைக்கு அதிகமாக தன்னை மையப்படுத்துவதாக பாலுவிற்குப் பட்டது. தன் அறைக்குச் சென்று பாலு அமர்ந்து கொண்டார். வெங்கி, கிளையின் அத்தப்பூவிற்கு, ஒரு போட்டியில் இரண்டாவது பரிசு கிடைத்தது என்று சொல்லி, இனிப்பு கொடுத்தான்.   பின்னர், பாயஸம், சிப்ஸ் என்று பல தின்பண்டங்கள் தொடர்ந்தன. வெங்கிதான் எற்பாடு செய்திருந்தான். அந்த மகிழ்ச்சியை அந்த கிளையில் அப்போதுதான் முதன்முறையாகப் பார்ப்பதாகச் சொன்னான்.. பெரும்பாலான ஊழியர்கள் பாலுவிற்கு வாழ்த்துச் சொல்லி, வெங்கியின் கருத்தை ஆமோதித்தனர்.

கடைசியாக தாமஸின் மிக நெங்கிய நணபர் ஜார்ஜ் உள்ளே வந்து, இனிப்பு வழங்கி, “இது எங்களுடைய மஹாபலியின் வருகைக்காக” என்றார். தாமஸ் கிளையிலிருந்து விடுவிக்கப்படும்போது, 30 நாட்களில் திரும்பி வருவேன் என்று கூறியதை வேதனையும், வெறுப்பும் கலந்த கோபத்தில் ஜார்ஜ நினைவூட்டுவதாகப் பட்டது. கண்களில் அனல் கக்க, இதைச்செய்தான், அதைச்செய்தான், இவன் இப்படிச் சொன்னான், அவன் அப்படி சொன்னான் என்று மற்றவர்கள் சொல்வதை நம்பினீர்கள். அவற்றை எப்போதவது சரிபார்த்தீர்களா? கிளையில், தாமஸ் குழப்பத்தை உண்டாக்குவதாக் சொன்னீர்கள் டீ.சீ-க்கள் காணாமல் போனதற்கு தாமஸை காரணம் காட்டி, வங்கியில் ஒரு சிறிய பதவியில் இருந்து கொண்டு, அவரை இடமாற்றம் செய்வித்து, உச்ச கட்டமாக அவரது அகால மரணத்திற்கு ஒரு வகையில் காரணமானீர்கள். இதன் முழுபொறுப்பையும் நீங்கள்தான் ஏற்கவேண்டும்” என்றான்.

பாலு உடனே “ டீ.சீ-க்கள் தொலய தாமஸ் காரணம் என்று நான் யாரிடமும் புகார் செய்யவில்லையே,” என்றார்.

ஜார்ஜ், “ மற்றவர்கள் நம்பும் படி தானே உங்கள் செயல் பாடுகள் இருந்தன. அந்த எண்ணத்தை மாற்ற ஏதாவது முயற்சி செய்தீர்களா?, அவர் செய்ததாக,…….நீங்கள் நினைத்த.., தவறுகளுக்கு, சற்றும் பொருந்தாத தண்டனை பெறத்  தூண்டுகோலானீர்கள்! ” என்ற குற்றச்சாட்டை ஜார்ஜ் முன்வைத்தான்.

பாலு, “ஜார்ஜ் நீ சொல்வது தவறு. அவரால் நான் பட்ட வேதனைகள் பற்றி உனக்குத் தெரியாது. நான் அவரது மாற்றலைத்தான் பரிந்துரைத்தேன். வண்டியில் சென்று விபத்துக்குள்ளானது, தாமஸ் செய்து கொண்டது. அதற்கு நான் பொறுப்பா? “ என்று கேட்டார்.

ஜார்ஜ், சத்தத்துடன் “ ஆமாம். நீங்கள்தான் பொறுப்பு” என்று கூறிவிட்டு அறையைவிட்டு வெளியெறினார்.

ஆவி வடிவில் தாமஸ் புனிதப்பட்டு விட்டதாக ஜார்ஜ் நினைக்கிறார் போலும் என்று பாலுவிற்கு தோன்றியது. எதையும் நடு நிலையாக நின்று, முடிவுசெய்யும் தன்மை உடைய ஜார்ஜின் அந்தப் பேச்சு, பாலுவை கோபமடையச் செய்யவில்லை, மாறாக அவரது மனதில், சிறிய சலனத்தை உணடாக்கியது. 1 மணி அளவில் விஜயன் வந்து, எல்லோரும் சென்றுவிட்டதாகச் சொன்னார். பாலுவும் விஜயனும் கிளையை பூட்டிக்கொண்டு வீட்டிற்கு புறப்பட்டனர்.

15 நாள் கழிந்த பிறகு, பாலுவின் அறைக்கு வந்த ஜார்ஜ், ஒரு 65 வயது உள்ள கண்ணியமான தோற்றம் கொண்ட ஒருவரையும், சுமார் 30 வயது உடைய நளினமான தோற்றம் கொண்ட ஒரு பெண்ணையும், தாமஸின் தந்தை மற்றும் மனைவி என்று அறிமுகம் செய்தார். அவர்களை பாலு நேரடியாக பார்ப்பதைத் தவிர்த்து, ஜார்ஜ் கொடுத்த பேப்பர்களை வாங்கிப் பார்த்தார். அப்பெண் கருணை அடிப்படையில், வங்கிப் பணிக்கு விண்ணப்பித்திருந்தாள். அப்பெண் அமெரிக்காவில் படிப்பு முடித்திருந்தாக குறிப்பிட்டிருந்தாள். பாலு கேட்காமலேயே, ஜார்ஜ், பெண்ணின் தந்தை, அமெரிக்காவில் இந்திய தூதரக அதிகாரியாகப்  பணிபுரிந்தவர் என்று கூறினார். பாலு பொதுப்படையாக யாரையும் பார்க்காமல், விண்ணப்பத்தை ரீஜனல் ஆபீஸுக்கு அனுப்பி வைப்பதாகச் சொன்னார். ஜார்ஜ் வெளியில் சென்ற பிறகு , தாமஸின் தந்தை “நன்றி,” என்று கூறினார். அவரை நிமிர்ந்து பார்த்த பாலுவிடம், “தாமஸ் உங்களைப் பற்றி மிக உயர்வாகப் பேசுவான். பண்பாளர் என்று கூறுவான்,” என்றார். அப்பெண்ணின் கண்களில், கண்ணீருக்கிடையே, ஆமோதிப்பது போன்ற சங்கேதக்குறி காணப்பட்டது. பாலு அதிர்ந்து போனார்.

அவரது தலைப்பகுதியில் சம்மட்டி கொண்டு இருவர் தாக்குவது போல இருந்தது. அவர்கள் விடைபெற்று செல்வதைக்கூட முழுமையாக உணரமுடியவில்லை. ஒருவேளை, அவர் சொல்வது உண்மை என்றால், அடிப்படையில் ஒரு நல்லவரின் அகால மரணத்திற்கு காரணமாக இருந்துவிட்டோமா என்றும், அவர் சொல்வது உண்மையில்லாமல் இருந்தால், மகனை இழந்த போதும் கண்ணியத்தையும், பண்பையும் இழக்காமல் இருக்கும் ஒரு குடும்பத்திற்குச் சேதம் விளைவித்து விட்டோமே என்றும் தோன்றிற்று. தாமஸைக் குறித்த ஒரு குற்ற உணர்வு மெல்ல மெல்ல அச்ச உணர்வு காலி செய்த இடத்தை பிடித்துக் கொண்டது.

பாலு அதற்குப் பிறகு மூன்று வருடங்கள் கேரளாவில் பணி புரிந்தார். அதன் பிறகும், வேறு மாநிலங்களிலும், ஓணம் சமயத்தில் வாழ்த்துகள் அவரது கேரள நண்பர்களிடமிருந்து அவருக்கு வந்துகொண்டுதான் இருந்தன. அத்துடன் தாமஸின் உறவு பற்றிய நினைவும்தான். தாமஸ் நினைவை பாதுகாப்பதுதான் அவன் மரணத்துக்கு தான் ஏதோ ஒரு விதத்தில் காரனம் என்பதற்கு பிராயச் சித்தம் என்று அவர் இறுதிச் சடங்கு குறித்து ஃபோட்டோவுடன் வந்திருந்த கண்ணீர் அஞ்சலி கடிதத்தை முக்கியமான இரகசிய கடிதங்களின் நகல்களோடு வைத்திருந்து அதன் பின் பணி செய்த எல்லா இடங்களுக்கும் எடுத்துச் சென்றிருந்தார். அந்த ஃபோட்டோ பற்றிய நினைவு இல்லை. வித்யாவுக்கு இதையெல்லாம் எப்படிச் சொல்வது? அவளை அழைத்து “ சரி இதக் கிழித்துப் போடு” என்று சொல்லி விட்டு கண்களை மூடிக் கொண்டு சேரில் சாய்ந்தார். இனி பொங்கலின் போதும் தாமஸ் வந்து விடுவார்.