சர்ச்சை மூட்டும் பச்சை நிறமே – இறுதி பாகம்

புதிய சிந்தனைகள்

இன்று பெரிய மாறுதல்கள் எங்கு தொடங்கியுள்ளன? பெரிய நிறுவனங்கள் மற்றும் சிறிய/பெரிய தயாரிப்பாளர்கள் இடையே உள்ள வியாபார முறைகள் மற்றும் உறவுகளில் பல நல்ல மாற்றங்கள் சக்தி பேணுதல் முயற்சிகளுக்கு உதவியாக சில தொடக்கங்கள் தென்படுகின்றன. வால் மார்ட் (Walmart) போன்ற பெரிய சில்லரை வியாபாரங்கள், தயாரிப்பாளர்களிடம் பல வித புதிய முயற்சிகளை எதிர்பார்க்கிறார்கள். எப்படி பொருட்களைத் தாயாரிக்கிறீர்கள், எத்தனை சக்தி உபயோகிக்கிறீர்கள். எவ்வளவு மறு பயன்பாடு பொருட்களை உபயோகிக்கிறீர்கள். எத்தனை தண்ணிர் பயன்படுத்துகிறீர்கள் என்று பலவாறு புதிய கேள்விகளை எழுப்புகிறார்கள். ஆரம்பத்தில், தயாரிப்பாளர்கள் முழிக்கத்தான் செய்தார்கள். மேலும் பெரிய நிறுவனங்களை, அடாவடித்தனம் செய்யும் நிறுவனங்களாகவும் பார்த்தார்கள். நாளடைவில் இப்படிப்பட்ட கேள்விகளின் நோக்கத்தைப் புரிய முயற்சி செய்த பொழுது, இப்பிரச்னை எவ்வளவு பெரியது என்று புரியத் தொடங்கியது.

வால்மார்ட் போன்ற நிறுவனங்கள், தங்களுடைய பொருள் வழங்கு நிறுவனங்களில் (suppliers) மிகப் பெரியவற்றை சீராக்க முயற்சித்து வருகின்றன. GE போன்ற நிறுவனங்கள் சற்று வேறு விதமாக இப்பிரச்னையை அணுகுகின்றன. தாங்கள் விற்கும் பொருட்களின் தயாரிப்பு முறையில், எங்கு சக்தி பேணுதல் அதிக பயன் தரும் என்று ஆராய்ந்து, அதன்படி பொருள் வழ்ங்கும் தயாரிப்பாளரிடம் சில மாற்றங்களை முன் வைத்து, உதவி செய்து, முயற்சிக்கின்றன. மாற்றங்களை ஏற்கும் தயாரிப்பாளர்களுக்கு வியாபாரத்தில் சலுகை அளிக்கப் படும். ஏற்காத தயாரிப்பாளர்கள், மறுபரிசீலனை செய்து, அவர்கள் மாறாவிட்டால், வியாபார சரிவையும் சந்திக்க வேண்டி வரும். இப்படி, தங்களின் வியாபார சக்தியை, சக்தி மற்றும் வளப் பேணுதல் முயற்சிகளை சில பெரிய நிறுவனங்கள் ஊக்குவிக்கின்றன. இதில் உள்ள பெரிய சவால் என்னவென்றால், மாற்றங்களை அதிக செலவின்றி செய்தல் முக்கியம். இல்லையேல், தயாரிப்பாளர்கள் நஷ்டத்தை யாரும் ஈடு செய்யப் போவதில்லை.

பெரிய மேற்கத்திய நிறுவனங்கள், பல புதிய பேணுதல் முயற்சிகளில் தீவிரம் காட்டுகின்றன. நைக்கி, ஆப்பிள், (Nike, Apple) மற்றும் வால்மார்ட் போன்ற நிறுவனங்கள், தங்களுடைய தயாரிப்பாளர்கள், குழந்தை தொழிலாளர்களை உபயோகிக்காமல் பார்த்துக் கொள்கிறார்கள். அத்துடன் தயாரிப்பாளர்கள் வேலையில் அமர்த்தும் தொழிலாளர்கள் வாரத்திற்கு இத்தனை மணி நேரம்தான் வேலை செய்யலாம், மற்றும் அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட குறைந்த பட்ச கூலியும் கொடுக்க பல வித சோதனைகள் (checks and audits) செய்து முயன்று வருகிறார்கள். இதில், பேணுதல் பற்றிய கவலையைவிட தங்களுடைய பெயர் கெட்டுவிடக் கூடாது என்ற அக்கறை இவர்களுக்கு அதிகம். இப்படிப்பட்ட செய்திகள் மேகத்திய ஊடகங்களுக்கு அல்வா மாதிரி செய்திகள். கிழித்து விடுவார்கள். இப்படி, பெயர் அடிபட்டு தவித்தவர்கள் மீள பல மாதங்கள், ஏன் வருடங்கள் கூட ஆகிறது. வியாபார உலகமயமாக்குதலில், (globalization) சட்டை தெய்க்கும் ஒரு சிறுவன் பல மில்லியனை அள்ளிக் கொள்ளும் வியாபாரத் தலைவரை ஆட்டம் காணச் செய்வது நவீன உலகின் நிஜம்!

அரசாங்க விதிமுறைகள்

இப்படி ஒரு புறமிருக்க, அரசாங்கங்கள் பருவநிலை மாற்ற கருத்தரங்குகளில் கலந்து கொண்டுவிட்டு, பல புதிய சட்டங்களை உருவாக்கி விடுகின்றன. நில மற்றும் நீர் வளங்களை அதிகமாக உபயோகிக்கும் தயாரிப்பாளர்களுக்கு பல வித புதிய விதிமுறைகளை (regulations) உருவாக்கியுள்ளன. மேர்குலகில் அதை கண்கானிக்கவும் செய்கின்றன. சுற்றுப்புற தூய்மை கேட்டின் அளவை (environmental pollution) கணக்கிட்டு அபராதமும் விதிக்கத் தவறுவதில்லை. இதனால், பல தரப்பட்ட சுற்றுப்புற தூய்மை கேடு விளைவிக்கும் ரசாயன தொழில்கள், அதிகம் கெடுவான விதிமுறைகளை அமல்படுத்தப்படாத இந்தியா, சைனா போன்ற தேசங்களுக்கு மாற்றப்படுகின்றன. உதாரணத்திற்கு, கப்பல்களை உடைக்கும் தொழில், இந்தியா மற்றும் பங்களாதேஷில் அதிகம் நடைபெறுகிறது. அது போல, பழைய கணினிகளின் உதிரி பாகங்களைப் பிரிக்கும் தொழில் சைனாவில் நடைபெறுகிறது. இது ஓரளவிற்கு வளரும் நாடுகளில் வேலை வாய்ப்பை உருவாக்கினாலும், மேற்குலகின் பிரச்னையை கிழக்கிற்கு மாற்றும் வேதனையான செயல்.

மேற்குலகை நம்பித் தயாரிக்கும் தயாரிப்பாளரின் நிலமை மிகவும் சிக்கலாகிக் கொண்டே வருகிறது. ஒரு புறம், தயாரிப்பாளரின் பல தரப்பட்ட புதிய முயற்சிகளுடன் ஒத்துழைக்க வேண்டும். மற்றொரு புறம், உள்ளூர் அரசாங்கத்தின் விதிமுறைகளுக்கு தக்கவாறு பொருட்களை தயாரிக்க வேண்டும். ஒரு 10 வருடங்களுக்கு முன் இரண்டு தரப்பினரும் அதிகம் அழுத்தம் கொடுக்காமல் வியாபாரம் நடத்த ஒத்துழைத்தார்கள். இன்று தொழில் சூழ்நிலை முற்றிலும் மாறிவிட்ட்து.

வியாபாரச் சிக்கல்கள்

என்னதான் பெரிய சில்லரை வியாபாரி கேட்கிறார் என்றாலும் பல விஷயங்களை பரிமாற்றிக் கொள்வதில் ஏராளமான சிக்கல்கள் இருக்கத்தான் செய்கிறது. வியாபார ரகசியங்கள் (trade secrets/confidentiality) உற்பத்தி முறைகளில் கொட்டிக் கிடக்கிறது. உதாரணத்திற்கு, இன்றுவரை கோக்கின் செய்முறை ரகசியம் பாதுகாக்கப் பட்டு வருவதாலே, அந்த நிறுவனம் இவ்வாறு தழைத்துள்ளது. எத்தனை தண்ணீர், எத்தனை சக்கரை, எத்தனை caramel என்று கேட்டுக் கொண்டே போனால், கோக்கிற்கு தர்மசங்கடமாகிவிடும். ஓரளவிற்கு, இது போன்ற சக்தி பேணுதல் முயற்சிகளில் முழு மனத்துடன் பல தயாரிப்பாளர்களும் ஒத்துழைக்காத காரணம், தம்முடைய வியாபார ரகசியங்கள் போட்டி நிறுவனத்திற்கு போய்ச் சேர்ந்து விடுமோ என்ற பயம். இப்படிப்பட்ட பயத்தை நீக்கினால்தான் முயற்சிகள் வெற்றி பெரும்.

சரியான காரணமற்ற பயங்களும் இதில் அடங்கும். உதாரணத்திற்கு, காரின் கண்ணாடிகளை தயாரிக்கும் நிறுவனம், டோயோடாவுடன் (Toyota) பல வருடங்களாக வியாபாரம் நடத்தி வருகிறது என்று வைத்துக் கொள்வோம். டோயோடா திடீரென்று, கண்ணாடி தயாரிக்கும் முறைகளைப் பற்றி ஏராளமான கேள்விகள் கேட்கிறது என்று வைத்துக் கொள்வோம்.
”ஏன் இத்தனை நேரம் வெப்பத்தில் பதப்படுத்துகிறீர்கள்? அந்த நேரத்தைக் குறைக்க முடியாதா?”

“உங்களது போட்டியாளர், உங்களது பாதி நேரமே பதப்படுத்துவதாக அறிகிறோம்.”

“ஏன் நீங்களும் உங்களது போட்டியாளரின் முறைகளை பின்பற்றக் கூடாது?”

என்று கேள்விக் கணைகள் வந்தால், அது மிகவும் செலவாகக் கூடிய கேள்விகளாக அமைய வாய்ப்புண்டு. பதிலும் உடனே அளிக்க முடியாது. கண்ணாடி தயாரிப்பாளர், தங்களுடைய உலை கலனை (furnace) மாற்ற வேண்டும் (பல கோடி செலவு செய்து). அதற்கான நேரம், இடம் மற்றும் உற்பத்தி முறைகளில் மாற்றம் என்பது பல மாதங்கள், ஏன் வருடங்கள் கூட ஆகலாம். அப்படி மாற்றி அமைத்தாலும், சரியான பொருள் தரம் அமைய வேண்டும். தரம் குறைந்தால், டோயோடா பொருட்களைத் திருப்பி அனுப்பி விடும்.

சக்தி பேணுதலில் இப்படிப்பட்ட சிக்கல்கள் ஏராளம். டோயோடா போன்ற நிறுவனங்கள் இதுபோன்ற மாற்றங்களை தங்களுடைய உதிரி பாகத் தயாரிப்பாளர்கள் சமாளிக்க பல உதவிகளையும் செய்து வருகின்றன. சில சமயம் பொருள் உதவி, முதலீட்டு உத்தரவாதம். பயிற்சி, இரு நிறுவன்ங்களும் சேர்ந்து தரக் கட்டுப்பாடு என்று பல விதத்திலும் முயற்சி செய்தால்தான் இப்படிப்பட்ட சக்தி பேணுதல் முயற்சிகள் வெற்றி பெற வாய்ப்புண்டு. சும்மா, கேள்வி மட்டும் கேட்பது முதல் படியே.

கணினி மென்பொருள் உதவி

கணினி மென்பொருள் துறை மாறிக் கொண்டே வரும் ஒரு நவீன உலகம் – இப்படித்தான் எல்லோரும் நினைக்கிறோம். ஏராளமான புத்திசாலிகள் அடங்கிய இத்துறை எதிர்கால தேவைகளைப் பற்றிய சிந்தனையுடன் செயல்படும் ஒரு துறை – இப்படிப்பட்ட ஒரு பொது எண்ணத்திற்கு சவால், சக்தி பேணுதலில், கணினி மென்துறையின் பங்கு. (நான் இத்துறையில் பல்லாண்டு காலம் பணி புரிவதால், இப்படிப்பட்ட நல்ல எண்ணங்கள் எதுவும் கிடையாது!).

இன்றைய கணக்கிடல் துறைகளில் உள்ள மென்பொருள் (software packages for accounting) தொகுப்புகள் சக்தி பேணுதல் என்ற வார்த்தை நம் அகராதிக்குள் வருவதற்கு முன் உருவானவை. கணக்கிடல் என்றோம். இங்கு, கணக்கிடப்படுவது லாப நஷ்ட மற்றும் பொருளளவு (inventory), விற்பனை (sales) போன்றவை. மிஞ்சி போனால், ரூபாயைத் தவிர மற்ற அளவுகள் ‘எத்தனை’ என்ற கணக்கு மட்டுமே (அதாவது, எத்தனை மோட்டார், எத்தனை ஆணிகள், எத்தனை விற்பனை போன்ற கணக்கு). இவ்வகை மென்பொருள் தொகுப்புகள், சக்தி மிகவும் மலிவாக இருந்த காலத்தில் உருவாக்கப் பட்டவை. இன்று சக்தியின் விலை கூடி விட்டது. சக்தி இன்று ஒரு மறை வளம் அல்ல. அதை சரியாக அளவிடாமல் போனால், சக்தி பேணுதல் என்பது கனவாகி விடும்.

சக்தி பேணுதலுக்குத் தேவையானது, ரூபாயைத் தவிர மற்ற அளவுகள். முன் பார்த்த உதாரணத்தில், எத்தனை மின்சார கட்டணம் என்பதோடு நிறுத்திக் கொள்ளாமல், எத்தனை கிலோவாட்கள் (kilowatts) மின்சாரம் உபயோகித்தோம் என்றும் தெரிய வேண்டும். எத்தனை நீர் கட்டணம் என்று மட்டும் நிற்காமல், எத்தனை கேலன்கள் (gallons/cubic metres) தண்ணிர் என்றும் பதிவு செய்ய வேண்டும். எத்த்னை இயற்கை வாயு கட்டணம் என்று பதிவு செய்த்து போக, எத்தனை கிலோஜூல்கள் (kilojoules) உபயோகித்தோம் என்றும் உடனே தெரிய வேண்டும். கணக்கிடல் சற்று மாறுபட வேண்டும். பல கணக்கு வல்லுனர்களுக்கு இது ஒரு பெரிய பிரச்னையாகக் கூட்த் தோன்றும். ஆனால், அடிப்படை மாற்றங்கள் மென்பொருள் தொகுப்பில் தேவை. இந்த மாற்றத்தால், பல தரப்பட்ட அலசல்கள் (analysis) செய்து, சக்தி பேணுதலில் மாற்றங்கள் கொண்டு வர பெரும் வாய்ப்பு உள்ளது.

2000 ஆம் வருடம் உலகம் சீரழியப் போகிறது என்று மென்பொருள் வல்லுனர்கள் ஏகத்துக்கும் அலட்டி பல மாற்றங்களை செய்தது போல, அடுத்த சில வருடங்களில் மென்பொருள் தொகுப்புகள் சக்தி பேணுதல் விஷயத்தில் ஆர்வம் காட்ட வாய்ப்புள்ளது. அதுவரை, இடைக்கால முயற்சிகள் எக்ஸல் (MS Excel) தயவில் குளறுபடி தான்!

மிக எளிதான பிரச்னை அல்ல இது. பொருட்கள், பல்வேறு மாற்றங்களை ஒரு தயாரிப்பின் போது சந்திக்கின்றன. இந்த மாற்றங்களின் போது, அவை எவ்வளவு சக்தி, மற்றும் வளங்களை (நீர், ரசாயனம், கச்சா பொருட்கள்) உபயோகிக்கின்றன என்று அளவிடுவது மிகவும் சிக்கலான பிரச்னை.

அடுத்த கட்டம்

கணினி மென்பொருள் சக்தி பேணுதல் முயற்சிகளுக்கு உதவலாம். ஆனால், இதில் மனிதர்களின் பங்கு, கணினிகளை விடப் பெரியது. சரியான அளவுகளை பதிவு செய்து அதனை அலச (analysis) கணினிகள் உதவும். ஆனால், ஏதாவது ஒரு அளவுகோலுடன் ஒப்பிட்டு பார்த்தால்தான், சரியான பாதையில் போகிறோமா இல்லையா என்று தெரிய வரும். எப்படி ஒரு அளவுகோலை நிறுவுவது? புலிக்கு மணி கட்டும் சமாச்சாரம் இது.

பல்வேறு துறைகள் சக்தியை பலவாறும் உபயோகிக்கப்படுகின்றன. அதே போல, இயற்கை வளங்களும் பல வகைகளில் உபயோகிக்கப் படுகின்றன. உதாரணத்திற்கு, ஒரு காகிதத் தொழிற்சாலை என்று வைத்துக் கொண்டால், அதன் நீர், மின்சாரம், மரம் மற்றும் வெப்ப உபயோகம் ஒரு வகையில் இருக்கும். ஆனால், ஒரு அலுமினியத் தொழிலில், மரம் தயாரிப்பில் உபயோகிக்க மாட்டார்கள். ஏராளமான கனி வளம் மற்றும் மின்சாரம் உபயோகிக்கப் படும். எப்படி, அலுமினியத் தொழிலையும், காகிதத் தொழிலையும் ஒரே முறையில் அளவிடுவது? அத்துடன், இந்திய காகிதத் துறைக்கும், ஸ்வீடன் நாட்டு காகிதத் தொழிலையும் எப்படி அளவிடுவது?

இதைப் போன்ற பிரச்னைகளை சரியாக அணுகுவதற்கு, நடுநிலையான சில அலோசனைக் குழுக்கள் புதிய சிந்தனையுடன் இணையத்தை உபயோகிக்க சிபாரிசு செய்து வருகின்றன. எப்படி புலிக்கு மணி கட்டுகிறார்கள்? முதலில், பல நிறுவனங்கள் (குறிப்பாக, தயாரிப்பாளர்கள்), இம்முயற்சிக்கு மெதுவாக பங்கு பெற ஒப்புக் கொண்டு வருகிறார்கள். தயாரிப்பாளர்கள், அவர்கள் தயாரிப்பிற்கு ஏற்ப, வளங்களின் அளவுகளை இந்த நடுநிலை இணையதளத்தில் பதிவு செய்கிறார்கள். தயாரிப்பாளர் தங்களது பெயர்களை வெளியிட அவசியமில்லை. மிகவும் ரகசியமாக பாதுகாக்கப் படும் இந்த தகவல்களை, தயாரிப்பு முறை, மற்றும் தயாரிப்பு வாரியாக பிரித்து அந்தந்தத் தொழிலுக்கு அளவுகோல் (வெப்பம், மின்சாரம், நிலம், இயற்கை வளங்கள், நீர், ரசாயனம்) என்று இந்த நடுநிலை இணையதளம் வெளியிடும். இவ்வாறு ஒரு அளவுகோல் தயாரிப்பாளர்களுக்கு கிடைத்தால், தாங்கள் எவ்வளவு சக்தி பேணுதல் முயற்சிகள் எடுக்க வேண்டும் என்று தெளிவாகிவிடும். இவ்வகை அளவுகள் இல்லாத வரை, கிணற்றில் கல் போட்ட கதைதான்.

வளரும் நாடுகளில் தாக்கம்

வளரும் நாடுகள் சக்தி பேணுதல் முயற்சிகளால் நிச்சயமாக பாதிக்கப் படும். இன்று, பெருவாரியான பொருள்கள் வளரும் நாடுகளில் தயாரிக்கப்படுகின்றன. 2005 -க்கு முன், தரக் கட்டுப்பாடு மட்டுமே இவர்களின் பெரிய குறிக்கோளாக இருந்தது. எப்படி சக்தி உபயோகத்தை குறைப்பது என்று கவலை இல்லாமல் உற்வத்தி செய்த தயாரிப்பாளர்கள், முன்னே சொன்னது போல பல கேள்விகளும் கேட்கப்படுவார்கள். சில புதிய தயாரிப்பு முறைகளை, சக்தி பேணுதலுக்காக அரவணைக்க வேண்டி வரும். உள்ளூர் சட்டங்களைக் காட்டி இனிமேல் சாக்கு போக்கு சொல்ல முடியாது. பெரிய மேற்கத்திய வியாபாரங்கள் உள்ளூர் அரசாங்கத்தைவிட தீவிரமாக சக்தி பேணுதல் விஷயத்தில் தீவிரம் காட்டுவது உறுதி. இந்தியா போன்ற மின்சார பற்றாக்குறை நாடுகளில், ஜெனரேட்டர் வைத்துக் கொண்டு காலம் தள்ளும் பல நிறுவனங்கள் எதிர்காலத்தில் தங்களது மேற்கத்திய வாங்கும் நிறுவனங்களுக்கு (Western buyers) பதில் சொல்ல வேண்டி வரும். ஏன், பெரிய இந்திய மென்பொருள் நிறுவனங்களும் இதற்கு விதி விலக்கல்ல.

ஒரு விதத்தில் இது இந்தியா போன்ற நாடுகளில் நல்ல மாற்றங்கள் கொண்டுவர உதவலாம். கிடைத்ததுதான் மின்சாரம் என்ற காலம் விரைவில் மாற இவ்வகை முயற்சிகள் நாளடைவில் உதவ வேண்டும்.

முடிவுரை

சக்தி பேணுதலின் தொலை நோக்கு என்னவென்றால், மிக அறிவுபூர்வமான சிந்தனையால், தயாரிப்பாளரும், நுகர்வோரும் பயனுற வேண்டும். ஆனால், அதற்கான பாதை மிகவும் கடினமானது. பல நூறு ஆண்டுகளாக நாம் சிந்தித்த முறைகளை முற்றிலும் மாற்ற வேண்டும். அதற்காக, நுகர்வோர் ஏராளமான விலை கொடுக்கவும் தயாரக இல்லை. அறிவுபூர்வமாக இப்பாதையில் பயணிப்போர் சில ஆண்டுகளுக்குப் பின் பயனுறுவது உறுதி. இந்தப் பயணத்திற்கு, தகுந்த சக பிரயாணிகள் உதவியாக இருந்தால் வெற்றி அடைய முடியும். சில நிறுவனங்கள் இன்று அவ்வாறு பயணித்து வெற்றியும் கண்டு வருகின்றன.