ஜன்னல்கள்

வியாபார நிமித்தம் உள் நாட்டில் பயணம் மேற்கொண்டால் அதிக பட்சம் இரண்டு நாள் ; அவ்வளவுதான். பல சமயங்களில் காலையில் சென்றடைந்து இரவே தில்லி திரும்புவது வழக்கம். இம்முறை கொஞ்சம் அதிக நாட்கள் வெளியூரில் தங்க வேண்டியதாகி விட்டது. மேலதிகாரிகள் வேலை முடியும் வரை பெங்களுரிலேயே இருக்குமாறு கட்டளையிட்டிருந்தார்கள்.

வெளி நாட்டு நிறுவனங்களுக்கு பொருட்கள் வாங்கித் தந்து ஏற்றுமதி நிறுவனங்களில் இருந்து கமிஷன் ஈட்டுவது எங்கள் நிறுவனத்தின் தொழில். சில சமயம் விற்பவர், வாங்குபவர் – இருவரிடமிருந்தும் கூட கமிஷன் பெறுவதுண்டு. ஆந்திர மாநிலம் சித்தூரை சுற்றி இருக்கும் சில மாம்பழம் பதனிடும் தொழிற்சாலைகளில் இருந்து மாம்பழச்சாறு வாங்க வந்திருந்தேன். சித்தூரின் பெரும்பாலான மாம்பழம் பதப்படுத்தும் நிறுவனங்கள் நெறிமுறையற்ற நடைமுறைகளை செயல் படுத்தி பழச்சாறு உற்பத்தி செய்வன. எனவே வெளி நாட்டு நிறுவனங்களின் பிரதிநிதியாகிய எங்கள் நிறுவனம், நாங்கள் வாங்கும் மாம்பழச்சாறு எங்கள் கண்களின் முன்னால் உற்பத்தி செய்யப்பட வேண்டும் என்று நிபந்தனை இடுவது வழக்கம். இந்த தரக்கட்டுப்பாட்டு சேவைக்கு எங்கள் மூலமாக பொருள் வாங்குபவர்கள் எங்கள் நிறுவனத்துக்கு உபரியாக கமிஷன் வழங்குவார்கள்.

சித்தூரில் உள்ள ஹோட்டலில் கொசுக்கள் பிடுங்கி எடுத்தன. திருப்பதியில் உள்ள ஒரே ஒரு பிசினஸ் கிளாஸ் ஹோட்டல் பேருந்து நிலையத்துக்கு வலப்புறமும் இரயில் நிலையத்துக்கு எதிரும் இருந்தது. நடு இரவுகளிலும் பேரூந்துகளின் ஹார்ன்களின் சத்தமும் இரயிலின் சைரன் ஒலியும் குறைவதில்லை. என் மேலதிகாரிகள் பெங்களுரில் தங்கிக் கொள்ள அனுமதியளித்தனர். சரியாக தூங்க முடியவில்லை என்று குறைப்பட்டுக் கொண்ட நான் தினமும் அதிகாலை எழும்பி மூன்று மணி நேரம் பயணம் செய்து சித்தூரை அடைய வேண்டியிருப்பதைப் பற்றி குறைப்பட்டுக் கொள்ளவில்லை. பெங்களுரில் ஒர் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்கக் கிடைத்தது காரணமாக இருக்குமோ?

சிவராஜ் என்கிற கார் ஒட்டுனர் ஹெப்பல் என்கிற புறநகரில் இருந்த ஹோட்டலில் இருந்து தினமும் பிக்-அப் செய்வார். சித்தூர் வரை ஓட்டிக் கொண்டு போவார். கன்னடம் கலந்த தமிழில் கொஞ்சம் கர்நாடக மாநில அரசியலைப் பற்றி பேசுவார். சில நிமிடங்களில் அவரது பேச்சு எனக்கு அலுத்துவிடும். கண்ணை மூடிக் கொண்டு தூங்குகிற மாதிரி நடிப்பேன்.

முலேபாகலுக்கும் பாலம்னேருக்கும் நடுவில் கர்நாடகா – ஆந்திரா மாநில எல்லை பரிசோதனை சாவடிக்கு சற்று முன்னதாக காரை சிவராஜ் நிறுத்தினார். கண்ணை மூடிக் கொண்டிருந்த நான் விழிப்பது போல கண்ணை கசக்கிக் கொண்டேன்.

“ரோடு வரி கட்டிட்டு வந்துடறேன்…கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க”

காரின் ஏ-சியை அணைத்து விட்டு ஜன்னல்களை திறந்து வைத்துவிட்டுப் போனார்.
ரோட்டில் அதிக போக்குவரத்து இல்லை. பரிசோதனைச் சாவடியருகே அதிகம் வாகனங்கள் இல்லை. கார் ஜன்னல் வழி வெளியே பார்த்துக் கொண்டிருந்தேன். முந்தைய நாளிரவு இலேசாக மழை பெய்ந்திருக்கக்கூடும். சாலையில் ஈரமில்லை. ஆனால், ரோட்டின் இடப்புறத்தில் காலியாக இருந்த நிலத்தின் மண் ஈரமாயிருந்தது. இளம்பச்சை நிறப் புற்கள் மண்ணிலிருந்து எட்டிப்பார்த்தன. நிலத்தின் பாதிப் பரப்பில் காலை சூரியனின் இளம் வெயில் படர்ந்திருந்தது. இளம்பச்சை புற்களின் நிறம் சூரிய வெயிலில் ஒளிர்வது போன்ற ஒரு காட்சியை தந்து கொண்டிருந்தது. காருக்கு சற்று முன்னே இருந்த சாலையோர மரத்தின் நிழல் நிலம் முழுக்க சூரிய ஒளி விழா வண்ணம் தடுத்துக்கொண்டிருந்தது. மரம் செறிந்து வளர்ந்திருந்தது. மரத்தின் அடிப்பாகம் தடிமனாகவும் பெரிய வளைவுகளுடனும் பூமியில் புதைந்து கிடந்தது. வயதான மரம், ஆனால் ஆரோக்கியமான மரம்.

இலையைப் பார்த்து அது என்ன மரம் என்பதை என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை. கிராமங்களில் வசிப்பவர்கள் மரத்தின் பெயர்களை நன்கு அறிந்திருப்பார்கள். நான் தில்லியில் வசிக்கும் காலனியில் மருந்துக்கு கூட மரம் இல்லை. காங்க்ரீட் மரங்கள் மட்டும் தான். ஒரு முறை எனது மகளின் பள்ளியில் கொடுத்த ப்ராஜெக்ட் வொர்க்கில் வீட்டை ஒட்டிய பகுதிகளில் காணப்படும் மரவகைகளை வரிசைப்படுத்துமாறு சொல்லியிருந்தார்கள். நானும் என் மகளும் அக்கம்பக்கத்தில் இருக்கும் எல்லா ஏரியாக்களுக்கும் சென்று தேடினோம். ஒரு மரமும் காணப் படவில்லை. மகள் இணையத்திலிருந்து தேடி எடுத்து மர வகைகளை பற்றி தெரிந்து கொண்டு, ப்ராஜெக்ட் வொர்க்கை பூர்த்தி செய்தாள்.

காற்றடித்து மரத்தின் இலைகள் அசைந்தன. இலைகள் அசையும் போது கேட்கும் சத்தம் சுகமாக இருந்தது. ஆச்சரியகரமாக நெடுஞ்சாலையில் அதிக வாகனப் போக்குவரத்து இல்லை. வாகனங்களின் ஹார்ன் ஒலி இல்லாமல் நிசப்தத்துக்கு நடுவே கேட்ட இலைகளின் ஒலி என் மனதில் அழுத்தமான நிம்மதியை ஏற்படுத்தியது. நிம்மதியுணர்ச்சி நீடிக்கும் போது அது ஆனந்தமாக உருமாறுகிறது போலும்!

ஜன்னலருகே ஒரு கிழவி வந்து பிச்சை கேட்டாள். எலும்பும் தோலுமாக இருந்தாள். முடி முழுக்க நரைத்துப் போயிருந்தது, அவள் நீட்டிய கை என் தோளை வந்து தொட்டது. பர்ஸில் பத்து ரூபாய் நோட்டு மட்டுமே இருந்தது. வெளியில் போகும் போது அதிகம் ரொக்கம் எடுத்துக் கொண்டு போகும் பழக்கம் இல்லை. பத்து ரூபாய் நோட்டை எடுத்து கிழவியிடம் நீட்டினேன். அவள் அதை எடுத்துக் கொண்டு நகர்ந்தாள்.

ஒரிரு நிமிடங்களில் ஒரு கிழவன் அணுகினான். “அய்யா” அல்லது “அவ்வா” – என்ன சொன்னான் என்று தெரியவில்லை. என்ன மொழி பேசினான் என்பதும் தெரியவில்லை. தெலுங்கோ? கன்னடமோ?

“என் கிட்ட வேற நோட்டு இல்ல…அந்த அம்மா கிட்ட பத்து ரூபா கொடுத்தேன்,,,அதுல பாதி நீங்க வாங்கிக்கோங்க” என்றேன்.

நான் சொன்னது அவனுக்கு புரிந்ததா? கிழவனின் ஒரு கண்ணில் துணியை வைத்து மறைத்திருந்தான். திறந்திருந்த கண்ணை காட்ராக்ட் மறைத்திருந்தது. காலை சாய்த்து சாய்த்து நடக்க ஆரம்பித்தான். கிழவியிடம் சென்று ஏதோ பேசினான். கிழவியும் ஏதோ பதில் சொன்னாள். அவள் பங்கு தர நிராகரிப்பவள் போன்று தோன்றியது. ஜன்னலுக்கு வெளியே தலையை நீட்டி “நான் கொடுத்ததுல ஐந்து ரூபாய் கிழவருக்கும் கொடுங்க” என்றேன். தமிழ் புரியுமா? புரிந்தது போலும். சொன்ன பேச்சை கேட்கும் நல்ல பிள்ளைகள் போல இருவரும் மரத்திலிருந்து பத்தடி தள்ளி தரையில் துணி விரித்து இளநீர் விற்றுக் கொண்டிருந்தவரிடம் போனார்கள் ; கிழவி பத்து ரூபாயை இளநீர்க்காரரிடம் தந்து சில்லறை பெற்றுக் கொண்டாள். கிழவருக்கு கொடுத்தாள்.

சற்று முன்னர் வீசிக் கொண்டிருந்த காற்று நின்று விட்டிருந்தது. புழுக்கம் அதிமானது. மண்டையில் கோடுகளாக வியர்வை வழிந்தன. காரின் ஏ சியை எப்படி ஆன் செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. சிவராஜ் இன்னும் திரும்பி வரவில்லை. பொறுமையிழக்கலானேன். திடீரென்று மாறும் கால நிலை போல மனதின் கால நிலையும் சடக்கென மாறி விடுகிறது. ஏன் மாறுகிறது? காரணம் தெரிவதில்லை. ஒரு கணம் கனிவு ; மறு கணம் கடுமை. ஒரு கணம் விருப்பு ; மறு கணம் வெறுப்பு. இம்மாறுதல்களை தோற்றுவிப்பது ஏது? புற நிகழ்வுகளா? அல்லது உள்ளில் ஓடும் நினைவுகளா?

கொஞ்ச நேரம் என்னிடம் வாங்கிய காசில் கிழவனும் கிழவியும் தேநீர் வாங்கிக் குடித்தனர். பாதையின் ஒரத்தில் குந்த வைத்து உட்கார்ந்திருந்தான் கிழவன். கிழவி பதவிசாக நின்ற படியே தேநீரை ஊதி ஊதிக் குடித்தும் கொண்டிருந்தாள். ஹ்ம்ம்..கையில் சில்லறை கூட இல்லை. ஏதும் வாங்கி சாப்பிடலாம் என்றால். என்ன அசிரத்தை! கையில் தேவையான அளவு காசைக்கூட எடுத்துக் கொள்ளாமல். காட்டுக்கு நடுவில் ஏ டி எம் இருக்குமா என்ன? காலையில் ஹோட்டலில் திருப்தியாக காலை உணவு உண்டாயிற்று. பசி எடுக்கவில்லை. பின் ஏன் எதையாவது சாப்பிட வேண்டும் என்று யோசிக்கிறேன்? மனசுக்கு விவஸ்தை இல்லை. சிவராஜ் எங்கே போனார்?

“ரொம்ப கூட்டமா இருந்தது கவுண்டரில்” என்றார் சிவராஜ். சாவடிக்கு அருகில் வாகனங்கள் அதிகமாக நிற்கவில்லை. கூட்டம் எங்கிருந்து வந்தது?

கார் கிளம்புவதற்கு முன் இளம் புற்கள் எட்டிப் பார்க்கும் நிலத்தை மீண்டும் ஒரு முறை நோட்டம் விட்டேன். நிழல் பரப்பு குறைந்திருந்தது. வெயிலின் வீரியம் அதிகமாகியிருந்தது. ஈரம் பூத்த மண் இன்னும் சில மணி நேரங்களில் தன் ஈரத்தை இழந்து விடும்!

அடுத்த நாள் சிவராஜின் அரசியல் உரையை கேட்காமல் இருப்பதற்கு தூங்குவது போல் நடிக்க அவசியமிருக்கவில்லை. ஹாஸ்பேட் தாண்டியவுடன் கழுத்தை தொங்கப் போட்டு நிஜமாகவே உறங்க ஆரம்பித்தேன். சோதனைச் சாவடிக்கருகே முந்தைய தினம் நிறுத்திய அதே இடத்தில் வந்து கார் நின்ற போது விழித்தேன்.

காரின் ஏ சி யை அணைக்க வேண்டாம் என்று சொன்னேன். சீட்டில் சாய்ந்து கண்ணை மூடி கிடந்தேன். யாரோ என்னப் பார்த்துக் கொண்டிருப்பது போன்ற பிரக்ஞை! கண்ணைத் திறந்தால், நேற்று சந்தித்த கிழவனும் கிழவியும் கார் ஜன்னலுக்கு வெகு அருகில் நின்று கண் மூடிக் கிடந்த என்னை பார்த்துக் கொண்டிருந்தார்கள். கிழவனின் ஒரு கண் திறந்து மறு கண் கறுப்புத் துணியால் மூடி, பழைய கறுப்பு-வெள்ளை கால மாயா ஜால படத்தில் வரும் சூனியக்காரன் போல் இருந்தான். கிழவி ஆள் காட்டி விரல் நகத்தால் கார் கண்ணாடியை தட்டினாள். மீண்டும் நான் கண்ணை இறுக மூடிக் கொண்டேன். முந்தைய நாள் சித்தூரில் ஒர் ஏ டி எம்-மில் வித்-டிரா செய்த பணம் என் பர்ஸில் இருந்தது.

சிவராஜ் ரோடு வரி கட்டி விட்டு திரும்பி, சீட்டில் உட்காரும் போது, கிழவியும் கிழவனும் அவனைப் பார்த்து கை நீட்டினார்கள். ஜன்னலை திறந்து இருவருக்கும் தலா ஒரு ஐந்து ரூபாய் நாணயத்தை தந்தார். வண்டியைக் கிளப்பினார். சிவராஜ் புன்னகைத்த மாதிரி இருந்தது. என்னைப் பார்த்து சிரித்தாரா? இல்லை…என்னைப் பார்த்து அவர் ஏன் சிரிக்க வேண்டும். பத்து ரூபாய் பிச்சையிட்ட ஆத்மதிருப்தியா? சுயபிரக்ஞையோடு அத்துனை துல்லியமாய் இவ்விஷயங்களைப் பற்றி சிவராஜ் யோசிப்பார் என்று எனக்கு தோன்றவில்லை. சித்தூர் சென்றடைய இன்னும் முக்கால் மணி நேரம் பிடிக்கும். நான் என் தூக்கத்தை தொடர்ந்தேன்.

+++++

அடுத்த நாள் என்னுடன் காரில் மேலும் இருவர் வந்தனர். ஒருவர் என் சக ஊழியன் – ஸ்ரீகாந்த் ; இன்னொருவர் – மாம்பழச் சாறு இறக்குமதி செய்யப் போகும் தென்னாப்பிரிக்க நிறுவனத்தின் தரக்கட்டுப்பாட்டு அதிகாரி – யாஷினி படையாச்சி.

குடும்பப் பெயர் தமிழ்ப் பெயர் போல இருக்கிறதே என்று யாஷினியிடம் சொன்னேன். அவருடைய முன்னோர்கள் ஐந்தாறு தலைமுறை முன்னம் தமிழகத்தை விட்டு தென்னாப்பிரிக்கா குடி பெயர்ந்தவர்களாம். தமிழ் நாட்டில் அவருடைய குடும்பத்தின் பூர்வீக கிராமத்தின் பெயர் அவருக்கு தெரிந்திருக்கவில்லை. யாஷினியின் தாயார் வட இந்தியாவிலிருந்து குடி பெயர்ந்தவர்களாம். அவரின் தாய் வழிப் பாட்டி மட்டும் ’இந்தியன்’ மொழி பேசுவார்களாம். ‘இந்தியன் மொழி’ என்ற சொற்றொடர் கேட்டு கொஞ்சம் விழித்தேன். “இந்தி” என்று அதற்கு விளக்கம் கொடுத்தார் யாஷினி. ”அப்போ தமிழ்?” என்று வினவினேன். “அதுவும் இந்திய மொழி தான்” என்றார். “தேங்க் காட்!” என்று சொல்லி நிம்மதியடைபவன் போல் செயற்கையான முக பாவனை காட்டினேன்.

”தென்னாப்பிரிக்காவை வானவில் நாடு என்றழைப்பார்கள். எங்கள் நாட்டில் பல மொழிகள் பேசப் படுகின்றன. இந்தியானாலும் தமிழானாலும் இந்தியர்கள் பேசும் மொழி என்று குறிக்கும் வகையில் “இந்திய மொழி” பேசுகிறான் என்று சொல்வார்கள்”

”இந்தியர்கள் பல தலைமுறைகளுக்கு முன்னால் வந்து குடியேறி விட்டனர். “இந்தியன் மொழி” பேசும் இந்திய வம்சாவளியினர் மிகக் குறைவு. அநேகமாக எல்லாரும் ஆங்கிலத்தில் உரையாடுவார்கள்”

“டர்பன் நகரில் ஏராளமான இந்திய வம்சாவளியினர் வாழ்கிறார்கள். அதனாலேயே இந்தியாவுக்கு வெளியே இருக்கும் பெரிய இந்திய நகரம் என்று டர்பனை குறிப்பிடுகிறார்கள்.”
டர்பன் நகரைப் பற்றி யாஷினி தந்த தகவல் எனக்கு புதிது.

யாஷினி பெங்களூர் நகர சாலைகளில் ஒழுங்கின்றி ஓடும் வாகனங்களைப் பார்க்கும் போதும், போக்குவரத்து விதிகளை கடைப்பிடிக்காமல் ஒட்டும் வாகன ஒட்டிகளைப் பார்க்கும் போதும் ஏதோ அதிசயத்தை கண்டது மாதிரி அதிர்ச்சியுற்றார். “கார் ஓட்டும் எல்லாரும் ஹார்ன் உபயோகித்து தான் ஆக வேண்டும் என்பது கட்டாயமா?” என்று கேட்டார். “பின் ஏன் கார் கம்பெனிகள் காரில் ஹார்ன் வைத்து தயாரிக்கின்றன?” என்று எதிர் கேள்வி கேட்டு ஜோக்கடித்தான் ஸ்ரீகாந்த்.

பெங்களூர் வரும் முன்னர், யாஷினி தில்லியில் ஒரு நாள் தங்கியிருக்கிறார். ஸ்ரீகாந்த் யாஷினியை தாஜ்மகால் கூட்டிக் கொண்டு போய் காண்பித்திருக்கிறான். எனவே இருவருக்குமிடையே பரிச்சயம் உருவாகியிருந்தது. நக்கலும் கிண்டலுமாய் அவர்களிருவரும் உரையாடிக் கொண்டே வந்தனர்.

ஸ்ரீகாந்த் எங்கள் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து ஐந்தாறு மாதங்கள் ஆகியிருந்தன. தில்லி வரும் முன்னர், ஆந்திராவில் குண்டூரில் இருக்கும் தனியார் கல்லூரியில் எம் பி ஏ முடித்திருந்தான். குண்டூருக்கு அருகில் இருக்கும் திக்கிரெட்டிப்பாலம் அவனது சொந்த ஊர். எப்போதும் கலகலவென்று பேச்சு. ஆங்கிலத்தில் பேசும் போது எல்லா வாக்கியத்திலும் “ஆக்சுவலி” என்ற சொல் சேர்த்தே பேசுவான். நாங்களெல்லாரும் “நீ ஆக்சுவலா எப்போதிலிருந்து சரியான ஆங்கிலத்தில் பேசத் துவங்குவாய்?” என்று கேலி செய்வோம்.
சிவராஜ் முந்தைய இரண்டு நாட்களில் நிறுத்திய இடத்திலேயே துல்லியமாக காரை நிறுத்தினான்.

ஸ்ரீ காந்த் “வாங்க யாஷினி இளநீர் சாப்பிடலாம்” என்றான். கிழவனையும் கிழவியையும் காணவில்லை. இன்று வரவில்லையோ? நாங்கள் மூவரும் இளநீர் பருகிக் கொண்டிருந்த போது மூக்கில் வியர்த்தது போல் திடீரென்று பிரசன்னமானார்கள். நாங்கள் இளநீர் குடிப்பதை பொருட்படுத்தாமல் கிழவன் ஏதோ சொல்லி கையை நீட்டினான். நான் என் பார்வையை விலக்கி எங்கோ பார்ப்பது போல் இருந்தேன். ஸ்ட்ரா மூலம் இளநீரை உறிஞ்சிக் கொண்டிருந்தேன்.

ஸ்ரீகாந்த் கிழவனிடம் தெலுங்கில் ஏதோ சொன்னான் ; இளநீர்க் காரனிடமும் சொன்னான். இளநீர்க்காரன் இரு தேங்காய்களை சீவி கிழவனுக்கும் கிழவிக்கும் கொடுத்தான். மிட்டாய் கிடைத்தவுடன் குதூகலமடையும் குழந்தை போல் கிழவன் வாயில் புன்னகை. ஏழையின் சிரிப்பு !
காருக்குள் திரும்ப வந்து உட்காரும் போது யாஷினி ஸ்ரீகாந்திடம் கேட்டார் : “ ஆக்சுவலா சொல்லு! சற்று முன்னர் காட்டிய கருணையை ஊரில் இருக்கும் எல்லா பிச்சைக்காரர்களிடமும் காட்டுவதுண்டா? அல்லது….” என்று இழுத்தார்

“ஒர் அழகான பெண்ணிடம் நான் பேசிக் கொண்டிருக்கும் போது என் கண்ணில் யாரேனும் பிச்சைக்காரர்கள் தென்பட்டால் அவர்களுக்கு என் தனிப்பட்ட கருணையை காட்டுவது என் வழக்கம்” என்றான் ஸ்ரீகாந்த்.

“யூ ஃப்ளர்ட்” என்று சொல்லி, எடுத்து அவனை அடிப்பது போல் பொய்யாக தன் கைப்பையை ஓங்கினார் யாஷினி.

கிழவன் மரத்தடியில் குந்த வைத்து உட்கார்ந்திருந்தான். வயதான மரத்தின் அடியிலிருந்து வெளி வந்த தடித்த வேர்ப்பாகத்தில் கிழவி அமர்ந்து இளநீர் அருந்திக் கொண்டிருந்தாள்.
சிவராஜ் வரி கட்டி திரும்பி வந்து வண்டியெடுத்தான். கார் மெதுவாக முன்னே நகர ஆரம்பித்தவுடன் பக்க கண்ணாடியில் கிழ ஜோடிகள் சில வினாடிகளுக்கு என் கண்களுக்கு தெரிந்தார்கள். அவர்கள் பிம்பம் கண்ணாடியில் மறைவது வரை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தேன்.

+++++

அடுத்த நாள் நான் தில்லி திரும்பி வந்து விட்டேன். யாஷினியும் ஸ்ரீகாந்த்தும் பெங்களூரில் தங்கி சில நாட்கள் தினமும் சித்தூர் சென்று வந்து கொண்டிருந்தார்கள்.

யாஷினி தென்னாப்பிரிக்கா திரும்ப சென்று விட்ட துக்கத்தில் நகத்தைக் கடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்த ஸ்ரீகாந்திடம் அந்த பிச்சைக்கார முதியவர்களை அடுத்த நாள் சந்தித்தானா என்று கேட்டேன். அசட்டுத் தனமாக கேள்வி அது என்று எனக்கு நன்கு தெரிந்திருந்தது. அவனுக்கு எதுவும் சுத்தமாக நினைவில்லை.

“பிச்சைக்காரர்களுக்கு அடையாள எண் எதுவும் தரத் தொடங்கிவிட்டார்களா?” என்று கேட்டான். “ஆக்சுவலா அடுத்த இரண்டு நாள் டாக்ஸி பாலம்நேர் பக்கத்தில் நின்றபோது காரிலிருந்தே நானும் யாஷினியும் இறங்கவில்லை. பிசியாக இருந்தோம்”