சாப்ளின் – பகுதி 2

சாப்ளினின் சரிவு

அந்தக் கிடுக்கிப் பிடி நிலையிலிருந்து தன் அசாதாரணத் திறமை மூலம் படிப்படியாக விடுபெற்று இறுதியில் தன் படைப்புத் திறனுக்கேற்ற அவகாசம், தயாரிப்பு வசதிகள், மேலும் கலை அமைப்பில் சுதந்திரம் ஆகியவற்றைப் பெற்றவர் அவர். அவரது ‘விடுதலை’ ஒரு தனிமனிதருக்குக் கிட்டிய பொருளாதார சுதந்திரமாக இருந்தாலும், நிலைக்கவில்லை. அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, கலைப் படைப்பாளிகளுக்குக் கூடுதலான சுதந்திரத்தை அளிக்கவும், படைப்பில் பண முதலீட்டாளர்களின் தலையீட்டைக் குறைக்கவுமென, ‘கலைஞர்களின் கூட்டணி’ (United Artists) என்ற ஒரு திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தைத் துவக்க முனைந்த பல திரைப்படக் கலைஞர்களில் சாப்ளினும் ஒருவர். இந்த நிறுவனம் இன்னும் செயல்படுகிறது. [துவக்கத்தில் அடிக்கல்லாக இருந்த கருத்து இந்த நிறுவனத்தில் இன்னும் செயல்படுகிறதா என்பது குறித்து எனக்குத் தகவல் இல்லை.]

20ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் எந்த நாட்டில் அவருக்கு அபரிமித பாராட்டும் வசதிகளும் கிட்டினவோ அதே நாட்டிலிருந்து அந்நூற்றாண்டின் நடுவில் கிட்டத் தட்ட ஒரு குற்றவாளி போல நடத்தப்பட்டு, துரத்தப்பட்ட நிலையில் அவர் இருந்தார். அவருடைய அரசியல் கருத்துகளை ஏற்க முடியாத வலது சாரிப் பீதி அமெரிக்காவிலிருந்து அவரைத் துரத்தியது. அவரை அது மட்டும்தான் துரத்தியது என்று சொல்லி விட முடியாது. ஒரு பெரும் சமூக, பொருளாதார, பண்பாட்டு மாறுதல் அவரை ஓரம் கட்டியது என்று அறிவதே சரியாக இருக்கும். அதில் ஒரு கூறு இந்த அதீத துரிதப்படுதல்.

அந்த நூறாண்டின் மத்தியிலிருந்தே, உலகெங்கும் வாழ்முறையிலும், பொருட்களை உருவாக்குதலிலும், பயணத்திலும், தொடர்பு கொள்ளுதலிலும், பண்பாட்டுப் பொருட்களை நுகர்வதிலும் என்று எங்கு நோக்கினும் நாம் துரிதத்தையே துரத்துகிறோம்.

செம்மையை அடைவதில் இன்று அதிகம் காணப்படும் வழி, தடைகளை எளிதே விலக்கி செயலில் துரிதம் பெறுவது. அதை முறித்து, அல்லது தவறாகப் புரிந்த கருத்தியல்கள் துரிதத்தையே இலக்கெனத் துரத்தி, மேன்மேலும் சிக்கலான, உருப்பெருத்த தடைகளைத் தம் முன் எழுப்பிக் கொள்கின்றன. துரிதம் என்பது ஒரு சேர்க்கை குணம், அதுவே இலக்கல்ல.[3] இலக்கை விடுத்து, துரிதத்தையே துரத்துவது ஏன் அத்தனை எளிதாக, கவர்ச்சியாக இருக்கிறது என்ற தேவையான கேள்விக்கு விடை மனிதரின் குறை ஆயுளில் உள்ளதா என்று யோசிக்கலாம். அதோடு சேர்ந்தியங்கும் கருத்தியல்களின் பாதிப்பையும் பார்க்க வேண்டி இருக்கும், என்றாலும் இந்தக் கருத்தியல்களே கூட மனிதரின் குறை ஆயுள்காலத்தின் விளைவா என்றும் யோசிப்பது உதவும். கெய்ன்ஸின் ஒரு சுருக்கக் குறிப்பை நம்மில் பலரும் கேட்டிருப்போம்- ‘நீண்ட காலமானால், நாம் எல்லாரும் செத்திருப்போம்.’ (‘In the long run, we are all dead.’- John Maynard Keynes) பெரும் பொருளாதார நலிவு மேற்கில் எங்கும் பீடித்த ஒரு கட்டத்தில் இந்தச் சுருக்கக் குறிப்புக்கு அவசியமும், பெரும் தாக்கமும் இருந்தது. அதொட்டி அரசுகள் எடுத்த நடவடிக்கையே உலகப் போருக்குப் பிந்தைய மேற்குலகின் எழுச்சிக்குக் காரணம் என்று ஒரு சாராரும், இல்லை, மேற்கின் (கிருஸ்தவப்) பண்பாடு வீழ்ந்ததற்குக் காரணம் என்று இன்னொரு சாராரும் வாதிட்டபடி, இரு கருத்தியல்கள் இன்றும் எதிரும் புதிருமாக மேற்கில் அரசியல் துவந்த யுத்தம் நிகழ்த்தி வருகின்றன. இவற்றிலும் வலது சாரியினர் வயதானோரின் எண்ணிக்கை அதிகமாவதைக் காரணம் காட்டி, அரசு மையப் பொருளாதாரக் கொள்கைகள் பயனளிக்காது என்று வாதிடுகின்றனர். அதே காரணத்தைச் சொல்லி இடது சாரியினர் இன்றைய இளம் வயதினருக்கு வேலை வாய்ப்புகளை உடனடியே கொடுக்க வேண்டியிருப்பதன் அவசர அவசியத்தை முன்வைக்கின்றனர்.

இந்தப் பிரச்சினைகள் எழுந்ததற்கு ஒரு காரணம் பெரும் வளம் கிட்டும் என்றெண்ணித் துவக்கப்பட்ட துரித உற்பத்தி முறைகளும், தொடர்ந்த செம்மைப்படுத்தலும் என்று ஒரு வாதம் இருக்கிறது. இதில் சிறிது உண்மையும் உண்டு. எனினும் செம்மைப்படுத்தலால் இந்தப் பிரச்சினைகள் என்பதை விட எதனால் துரிதத்தை வேண்டுகிறோம் என்பது குறித்த தெளிவின்மையே இந்தப் பிரச்சினைகளுக்குக் காரணம் என்று நான் கருதுகிறேன்.

நவீனத்துவம் துவங்கிய பொழுதிலிருந்து மனிதர் துரிதத்தையும் வேண்டி நிற்கிறார். நவீனத்துவத்தின் கடைக்கால்களான கருத்தியல்கள் உலகெங்கும் பரவி, தேர்ந்த விசாரணையற்று அனைத்து நிலங்களிலும் நடைமுறைப்படுத்தப் படுவதன் விளைவு, படைப்பூக்கம் என்பது வளர்வதன் கதியை விட, அழிப்பின் கதி கூடுதலாக உள்ளது. விளைவு, செம்மை என்றும்போல் தொலை வானாகவே இருக்கிறது மானுடருக்கு. இதில் மனிதருக்கு உரித்தான ஒரு குணமான, கனவுகளை நிஜம் என்று எண்ணித் துரத்தும் விருப்பம், பரபரப்பான அரசியலியக்கமாகவோ, பண்பாட்டு இயக்கமாகவோ வடிவமைக்கப்படுகிறது. இருப்பதை அழிப்பதில் கிட்டும் தற்காலிக விடுதலை உணர்வைக் கொண்டாடும் ஒரு சிறு பான்மையினரின் குறைப்பார்வை விடுதலைக் கருத்தியலாகவே பரப்பப்படுகிறது.

செம்மை என்பது தொலைவானாக இருப்பதற்கு ஒரு அடிப்படைக் காரணம், அதுதான் மானுடரின் இயல்பே என்றும் சொல்ல முடியும். தொடர்ந்து மாரீச மான்களின் பின்னே ஓடி சீதையை இழப்பது, ஏற்கனவே கையில் உள்ள பெரும் நன்மைகளை இழப்பது, மனித குலத்தின் நெடுநாள் பழக்கம். சீதா என்பதை பூமி என்று சொல்வார்கள் என நினைவு.

போட்டியிடும் மனோபாவம், அந்தந்தத் தலைமுறை தன் முத்திரையை உலகின் மீது பதிக்க விரும்புவது என்பன இந்த இயல்பில் சேர்த்தி. இவற்றின் பின்னேயும் மனிதரின் குறைவான வருடங்களே நீடிக்கும் வாழ்வு காரணியாக இருக்கிறது. அடுத்தடுத்த தலைமுறைகளிடையே போட்டியோடு, மறதியும் செயல்படுகிறது. ஒத்துழைப்பும், தொடர்ச்சியும் உள்ளன என்பதும் உண்டு. ஆனால் நவீனத்துவம் என்பதே மோதலையும், உடைப்பையும், உதிர்ப்பையும் பெருமைக்குரியதாக்குவது என்பதால் ஒத்துழைப்பு, தொடர்ச்சி என்பன பண்டை நாகரீகத்தின் எச்ச சொச்சங்களாகக் கருதப்பட்டு ஒதுக்கப்படுகின்றன. ஒத்துழைப்பும், தொடர்ச்சியும் சில குறைவான வாழ்வம்சங்களிலும், வணிகமாக்கப்பட்ட உறவுகளிலும் காணப்படுவது கூட செயல்திறனை அதிகரிக்க என்ற ‘பகுத்தறிவு’ சார் காரணத்தால்.

செம்மையை அடையக் கண்ட பண்டைய வழிகளில் பல கவனத்திலிருந்து நழுவிப் போக சில மறுபடி மறுபடி கண்டெடுக்கப்பட்டு புதுமை என்று கருதப்படும் நிலை எழும்.ஒரு காட்டு யோகாசனப் பயிற்சிகள். கண்டெடுக்கப்பட்ட ‘புதுமை’ முறையில் வாழ்நெறி என்ற அம்சம் போக்கடிக்கப்பட்டு, ஆடம்பரமான தற்காலிகப் பயன்பாடே முதன்மை பெறும். இதே போன்ற மேம்படுத்தல்கள் குறிப்பாக உடல் சார் கலைகளில் நிகழும் வாய்ப்பு அதிகம். நவீனத்துவம் என்பதே இந்த மறதியைக் கொண்டாடச் சொல்லி வற்புறுத்துகிறது. வரலாற்று அறிவு தேவை என்று சொல்லும் ஒரு கருத்தியல், அந்த வரலாற்றையே ஒழிக்கச் சொல்வது ஒரு வினோதம்தானே?

தவிர, ஒவ்வொரு முறையும் செம்மைக்கு அருகில் நாம் வரும்போது எது செம்மை என்பதை நாம் இன்னும் சில படிகள் தள்ளி உள்ளதாகவே பார்க்கிறோம். இது ஓரளவு மனித இயல்பு, பரிணாம உந்துதல் என்று வைத்துக் கொண்டாலும், இதில் நவீனத்துவம் என்ற பண்பாட்டு இயக்கத்தின் பாதிப்பும் அதிகம்.

ஓட்டப் பந்தயக்காரர்களை, நீச்சல் பந்தயப் போட்டியாளரை இது குறித்துக் கேட்டால் தெரியும் எப்படி ஒவ்வொரு பத்தாண்டும் இலக்கு தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது என்று. சமீபத்தில் ஒரு செய்தி அறிக்கையைப் பார்த்தேன். மனித உடலில் பெரும் மாறுதல்கள் நேர்ந்தாலன்றி, ஓட்டப் பந்தயங்களில் இனிமேல் பெரும் சாதனைகளைக் காண்பதரிது என்று அது தெரிவித்தது. இனி பந்தயங்களில் சில வினாடிகளளவுதான் முன்னேற்றம் (துரிதம்) நிகழ வாய்ப்புள்ளது, முதலணி ஓட்டக்காரர்களிடையே உள்ள வேறுபாடுகள் மிக மிகக் குறைந்து விட்டதால், வேறெப்படி சாதகமான நிலைகளை உருவாக்கலாம் என்று யோசிக்கிறார்கள். இந்தச் சாதக நிலைகள் காலணிகளின் அதிர்வு தாங்கும் தன்மை, பந்தயக்காரர்களின் ஆடைகளின் காற்றெதிர்ப்புத் தன்மை போன்றவற்றில் துவங்கி சிறு சிறு விஷயங்களில் கூடத் தொழில் நுட்பத்தைக் கூட்டி வினாடிகளைச் சேமிக்க முயற்சி நடக்கிறது என்று எழுதி இருந்தது.[4]

வரலாற்றுத் தருணம்

துரிதமே செம்மை என்று கருதும் இடங்களிலேயே கூட துரிதம் என்பதை மட்டும் துரத்தினால் சாதனை சாத்தியமல்ல என்று தெரிகிறது. பந்தயக்காரர்களின் உடல் வலுவை அதிகரிப்பதும், நொடிப்புகள்/ எலும்பு முறிவுகள், தசைப் பிடிப்புகள் ஆகியனவற்றைக் குறைப்பதும், அவற்றிலிருந்து மீண்டு, ஆரோக்கியத்தைப் பெறும் வேகத்தைக் கூட்டுவதும், பல சீதோஷ்ண நிலைகளில் தளராது போட்டியிட முடியும் வைரமான உடலை அடைவதும் என்று வெவ்வேறு திசைகளில் செம்மைக்கான முன் தயாரிப்புகள் உள்ளன. இவற்றின் கூட்டுத் தொகையும், ஒரு பந்தயக்காரரின் மனத் திணிவும்தான் இறுதிக் கட்டத் துரிதத்தைச் சாத்தியமாக்குகின்றன. சில நாடுகள் பந்தயத்தையும், அது சம்பந்தப்பட்ட பல அழுத்தங்களையும் எப்படிக் கையாள்வது என்பதைச் சொல்லித் தர உளவியலாளர், உடல் பிடித்து விடுபவர், போட்டியாக உள்ளவர்களின் சாதுரியங்கள், திறமைகள் குறித்துத் தகவலைத் தொகுத்துக் கொடுக்கும் ஆலோசகர்கள் என்று இன்னும் பல பரிமாணங்களையும் அரங்குக்குக் கொணர்கிறார்கள்.

ஒரு விசித்திரத் தேர்வில், சில ஓட்டக்காரர்கள் விசேஷக் காலணிகளை ஒதுக்கி விட்டு, வெறும் காலால் ஓடுவது மேலாக இருக்குமா என்று சோதிக்கத் துவங்கி இருக்கிறார்கள். வரலாற்றை ஒழிப்பது என்பதன் பாதிப்பா, இல்லை நான் முன் சொன்ன மறதியின் பாதிப்பா, இல்லை இயற்கையே உடலை நன்கு தயாரித்திருக்கிறது என்ற ‘புது’ அறிவா, எதென்று இதை வகைப்படுத்த? பல மனிதரிடையே உள்ள உடல் அமைப்பு சார்ந்த வேறுபாடுகளைச் சமன்படுத்தும் கருவிகள் காலணிகள் என்று நான் நினைத்திருந்தேன். இவர்கள் அந்த சமன்படுத்தலை விலக்குகிறார்கள் என்று தோன்றுகிறது. இன்னும் சில வருடங்களில் இந்தச் சோதனைகளுக்கு விடை தெரியும், பொறுத்திருக்க வேண்டும். உலகெங்கும் மனிதர் காலணிகளை அணிவதை விடுத்து, வெறும் காலுடன் நடப்பதே ஆரோக்கியம், அதுவே இயற்கை என்று மாறி விடுவார் என்று எதிர்பார்ப்பது உடோபியக் கனவு என்று எனக்குப் புரிகிறது. அது மட்டும் நடந்தால்… உலகச் சாலைகளும், நடைபாதைகளும் எப்படி எல்லாம் முன்னேறி விடும்![ 5]

ஒவ்வொரு பத்தாண்டும் ‘போட்டி’ என்பது மேன்மேலும் கூர்மைப்பட்டு, நுணுக்கம் நிறைந்த ‘தொழிலாகி’ விடுகிறது. ஒப்பீட்டில் பாவலோவாவின் காலத்து நடனம் என்பது அனேகமாகச் சில வருடப் பயிற்சிக்குப் பிறகு ஒரு நடனக்காரர் தன்னியல்பான வெளிப்பாடாக ஒரு கலையைப் பயின்று அரங்கேற்றுவதாக இருக்கும். இன்று பாலே நடனக்காரர்களின் பின்னே நிறைய தொழில் நுட்பமும், கலை உலகுடன் சம்பந்தப்படாத பல துறை அறிவாளர்களின் பங்களிப்பும் உள்ளன. இதே போன்ற தொழில் துறைச் சிக்கலற்ற எளிமை துவக்க காலச் சாப்ளினின் சினிமாவிலும் இருந்தது என்பதை நாம் காண வேண்டும். தன் துவக்க கட்ட சினிமாவில் அன்று கிட்டிய பல தொழில் நுட்பங்களை அவர் பயன்படுத்தவில்லை, அவை தன் நிகழ்த்து திறனைத் தடை செய்யும் என்று கூட அவர் கருதியதாக நமக்குத் தகவல் கிட்டுகிறது.

அவர் தன் புத்தகத்தை எழுதும் காலத்துக்குள் சினிமாவிலும், பாலே நடனத்திலும் அந்த எளிமை காணாமல் போயிருந்தது. பாவலோவாவின் நடனத்தையே 60’களின் நடனக்காரர்கள் செம்மை என்று ஏற்பார்களா என்பது சந்தேகம்தான். இன்றைய நடனக்காரர்களில் பலரும் கிட்டத்தட்ட ஒரு கழைக் கூத்தாடியின் அளவு உடல் திறன் கொண்டவர்களாக இருக்கிறார்கள். ஜிம்னாஸ்டிக்ஸ் என ஒலிம்பிக் பந்தயங்களில் காணப்படும் ஒரு போட்டித் துறையில் பங்கெடுப்பவர்கள் அளவு பாலே நடனக்காரர்களின் உடல் கட்டுப்பாடு கடுமையானதாக மாறி இருக்கிறது என்று தெரிகிறது.[6]

ஆனால் பாவலோவாவின் நடனம் ஒரு இடத்தில் ஒரு நேரத்தில் உள்ள பார்வையாளர்கள் மட்டுமே காணக்கூடிய பர்ஃபெக்ஷன். சாப்ளினின் ‘செம்மை’ ஒரு இடத்தில் பார்வையாளர் முன் நடப்பதல்ல. மாறாக தொழிற்சாலை உற்பத்தி போல மறுபடி மறுபடி செய்து ஒரு நேர்த்தி வந்த பின் அந்தப் பொருளைப் படத்தில் பதிவு செய்து உலகெங்கும் விநியோகிக்கும் முறை. இதில் பாவலோவாவின் ஒரு நிகழ்ச்சியின் அசாதாரணம், முழுக் கலைத்துவம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் இதன் நிரந்தரத்துவம், பல ஒத்திகைகளுக்குப் பின் நிகழ்த்தப்பட்ட இதன் செம்மையை என்றும் பல்லாயிரம் மக்களுக்குக் கிட்டுவதாக்கி உள்ளது. சாப்ளினுக்குத் தெரியும் தன் ‘செம்மை’ இன்னொரு ஒத்திகை போன்றது, பாவலோவாவின் ‘செம்மை’ ஒரு அசாதாரண நிகழ்வு, ஆனால் தண்ணீர் வட்டம் போல அன்றே அழிந்தது என்று. பார்வையாளரின் மனதில் மட்டும் அதற்கு ஒரு நிலைப்பு இருக்கலாம். ஆனால் எத்தனை பார்வையாளர்? சில நூறுபேர்தான்.

பாவலோவாவின் அடுத்தடுத்த வருடங்களில் செம்மையை அடையும் முயற்சியில் அவரது வெற்றி என்பது மேலே, கீழே போயிருக்கலாம். ஆனால் ஒரு வயதுக்கப்புறம் அவரால் அந்த செம்மைக்கு அருகில் கூடப் போக முடிந்திராது. அந்த வயதில் அவருக்குச் செம்மை என்பதென்ன என்று தெரிந்ததெல்லாம் மிக அருமையான தகவலாக, அறிவாக இருந்திருக்கலாம். ஆனால் அறிவால் உடலை விருப்பத்துக்கு வளைத்து விட முடிவதில்லையே.

அவர் முன்பு செம்மை நிலையை அடைந்த தருணங்களும் இன்று காணப்பட முடியாதவை, சொல் விவரிப்பில் மட்டும் அறியக் கூடியவை. மாறாக, அத்தனை முறையான நடனப் பயிற்சி அற்ற சாப்ளினின் கலை ஓரளவாவது காலப் பயணத்தில் நிற்கக் கூடியது, அந்த நிலைப்பு பொறியியல் துணை தரும் நிலைப்பு, ஒரு ஊடக ஜாலம், ஒரு அளவில் வரலாற்றுப் போக்கில் கிட்டிய வாய்ப்பு.

பரவலாகும் நகல், வரலாற்றுப் பதிவாய் அசல்

புவி ஈர்ப்பு விசை குறித்து அன்று நியூட்டன் சொன்ன போது அது அசாதாரண நிகழ்வு, ஏன் உலகச் சாதனை என்று கூடக் கருதப்பட்டது. இன்று எட்டாம் வகுப்பு ஆசிரியர் போதிக்கையில் அது இன்னொரு மனித முயற்சியின் உதாரண நிகழ்வு. சாதாரணம்தான், ஆனால் நிச்சயம் ஒரு அரிய முன்னெடுப்பு என்று சொல்லித் தரப்படுகிறது. அந்த மாணவர் தன் சுற்றத்தில் உள்ளவரிடம் அதை விவரித்தால் ஒரு அளவு அதன் அசல் மாயாஜாலத் தன்மை கிட்டக் கூடும், ஆனால் ஏதோ ஒரு விதத்தில் அது சாதாரணமாகவே ஆகி இருக்கும். அறிவியலில் இதையெல்லாம் எதிர்பார்ப்பது கூட ஒரு பண்பாடாக ஆகி விட்டது.

இன்று சாப்ளின் போல எத்தனையோ பேர் நடிக்கக் கூடும். சாப்ளினின் படங்கள் சகஜமாகப் பார்க்கப்பட்டு கடக்கப்படக் கூடும். எனினும் ஓரிடத்தில் அவர் ஒரு சாதனையாளர் என்பது சாதாரணப் பார்வையாளரிடம் கூட நிலைப்பட்ட கருத்தாக இருக்கும். முதல் கட்டப் பார்வையாளர்களுக்கிருந்த அதிசய உணர்வை இன்றைய பார்வையாளர் அடைவது கடினமாக இருக்கும் என்பதென்னவோ நிஜம்.

சாப்ளினின் சினிமாவுக்கு இறுதி மணி அடிக்கப்பட்டது 60’களின் நடுவில். அவர் தயாரித்த ஒரு திரைப்படத்தில், பெரும் நட்சத்திரங்களான மார்லன் ப்ராண்டோ, சோஃபியா லோரென், ஓரளவு பிரபலமான டிப்பி ஹெட்ரன் போன்றார் நடித்தும், அந்தப் படம், அன்றைய புது சினிமாவின் கோலாகலக் களேபரத்தின் நடுவே கவனிக்கப்படாமல் போனது, அல்லது ஓரளவு ஏமாற்றமாகக் கூடக் கருதப்பட்டதை நாம் கவனிக்க வேண்டும். இதற்குப் பல காரணங்கள் உண்டு. குறிப்பாகச் சொன்னால் சாப்ளினின் சினிமா உத்திகள் அன்று புராதன உத்திகளாகத் தெரிந்தன, போதுமான கேளிக்கையுணர்வைத் தூண்டவில்லை.

இதெல்லாம் சாப்ளின் அத்தனை தயாரிப்புத் தொழில் நுணுக்கத்தில் மூழ்காமல், பொறிகளின் நுட்பத்தில் ஆழாமல், தன் செயலை முன்னிறுத்தப் பயன்படுத்திய ஒரு கலை நுட்ப வடிவால்தான். அப்படித்தான் நவீனத்துவம் செம்மையைச் சாதாரணமாக்கியது, சாதாரணர்களுக்கு அருகில் கொணர்ந்தது. பொருளில் உயர்ந்த தரம், நின்று உழைக்கும் தன்மை, சல்லிசாகக் கிட்டும் தன்மை, எங்கும் கிட்டும் விநியோகம், பயன்பாட்டு எளிமை (high finish, durability, affordability, wide availability, variety, and ease of use) இவை எல்லாம் சேர்ந்த பொருட்களே நெடுநாள் மக்கள் நடுவே உலவுகின்றன. அவையும் அடுத்தடுத்த கால கட்டத்தில் மேன்மேலும் நேர்த்தி, தயாரிப்பின் அடக்க விலை கூடாது, செயல்திறனில் அதிகரிப்பு கிட்டுவது (functionality without too much increase in cost, etc) நடப்பதால் பின்னே விடப்படும். இது அவர் உருவாக்கிய கலை வடிவுக்கும் நேர்ந்தது. அவருமே எறியப்பட்ட கருவேப்பிலையானார்.

(தொடரும்)

குறிப்புகள்

4. கார்டியன் பத்திரிகையில் என்னென்ன விதங்களில் பந்தயப் போட்டியாளர்கள் பல தொழில் நுட்பங்களை நம்பிப் போட்டியிடுவது குறித்து வந்த கட்டுரை ஒன்று இங்கே:

http://www.guardian.co.uk/sport/2012/jul/04/london-2012-olympic-games-sport-technology

5. உடோபியக் கனவென்றாலும் இதன் ஒரு விளைவை ஊகிக்க முடிகிறது. பியர் பாட்டில்களைக் காட்டில் வீசுவதும், யானைகளின் கால்கள் புண்ணாகி மரிப்பதும் இல்லாமல் ஆகும் என்பதோடு அதைப் பேசும் கதைகள் விக்கிரமாதித்தன் – வேதாளம் கதை போல அதீதப் புனைவாகத் தெரியும். அந்தக் காலமும் வாராதோ?

6. இது பற்றிய ஒரு அபூர்வமான சமீபத்துத் திரைப்படம் ‘த ப்ளாக் ஸ்வான்’- நாடலி போர்ட்மான் என்ற நடிகை மையப் பாத்திரமான பாலே நடனக்காரியின் பாத்திரத்தில் நடித்து ஆஸ்கர் விருது வாங்கினார். ராபர்ட் ஆல்ட்மான் கூட பாலே நடனக் குழுவினரின் அன்றாட வாழ்வைத் தொடரும் ஒரு படத்தை சமீபத்தில் எடுத்திருந்தார். முன்னது அந்த நடனக்காரர்களின் போட்டிகள், உறவுப் பிரச்சினைகள் ஆகியவற்றை நாடகப்படுத்தியது. நடனம் அதில் ஒரு பின்னணி. ஆல்ட்மான் படத்தில் நடனம் முன்புலன், உணர்ச்சி வலைகள் பின்புலனாக இருந்தன. இரண்டும் தற்கால பாலே நடனப் பள்ளிகள், குழுக்களின் பயிற்சிக் கடுமையைக் காட்டின என்பதாகத் தெரிகிறது.

ராபர்ட் ஆல்ட்மேனின் படம், ‘த கம்பெனி’ 2003 ஆம் வருடத்தது. கொஞ்சம் தகவல் படம் போல அமைப்பிருந்தாலும் நாடகம், கதைத்தன்மை எல்லாம் கலந்து அருமையான நாட்டியக் காட்சிகளோடு இருந்ததாகத் தெரிகிறது. ஒரு விமர்சனத்தை இங்கு பார்க்கலாம்: http://www.nytimes.com/2003/12/21/movies/dance-robert-altman-gets-ballet-right.html?pagewanted=all&src=pm

இன்னொரு படமான ‘கறுப்பு அன்னம்’ (Black Swan) நடனத்தை விட நாடகத்தில் கவனம் செலுத்தியதாகத் தெரிகிறது. இதிலும் நடனக் காட்சிகள் அதீதமானதாக எடுக்கப்பட்டன என்று இந்த மதிப்புரை சொல்கிறது: http://www.guardian.co.uk/film/2011/jan/20/black-swan-review

சமீபத்திய பாலே நடன நிகழ்ச்சிக்கான தயாரிப்பு பற்றிய படங்கள்:

http://www.guardian.co.uk/stage/gallery/2012/jul/04/english-national-ballet-st-pauls