சமீபத்தில் ‘சொல்வனத்தில்’ மாற்று சக்தி பற்றிய புதிய ஐடியாக்கள் மற்றும் ஆற்றல் சேமிப்பு சம்மந்தப்பட்ட விஷயங்களை ‘என்று தணியும் இந்த எண்ணை தாகம்’ என்ற தலைப்பில் எழுதினேன். அதில் முக்கியமாக ஆற்றல் சேமிப்பு (conservation) பற்றி மேல்வாரியாக விவாதித்தோம். ஆற்றல் சேமிப்பில் உள்ள சிக்கல்களை பற்றிய கட்டுரை இது. முன் சொன்ன கட்டுரையை படித்துத்தான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. படித்தால், இப்பிரச்சனையின் முழு பரிமாணமும் புரிந்து கொள்ள உதவும். (அதற்காக மார்க் எல்லாம் கிடையாது!). வைரமுத்துவின் பாடலை சற்று மாற்றியமைத்து,
பச்சை நிறமே, பச்சை நிறமே, சர்ச்சை மூட்டும் பச்சை நிறமே
என்று தலைப்பு வைக்க ஆசைதான்; பத்திரிகை ஆசிரியர் கட்டுரையா தலைப்பா என்று உதைக்க வந்து விடுவார்!
சரி, விஷயத்துக்கு வருவோம். முன்னாள் அமெரிக்க துணை ஜனாதிபதி, அல் கோர், (Al Gore) புவி சூடேற்றம் (global warming) மற்றும் அதனால் உண்டாகும் தீய விளைவுகளைப் பற்றி எல்லோருக்கும் புரியும்படி பவர்பாயிண்ட் காட்சியளிப்பு (Powerpoint presentation) செய்து நோபல் பரிசையும் தட்டிச் சென்று விட்டார். அவர் தலைவலியைப் பற்றி சொல்லப் போய், உலகிற்கு திருகு வலி வந்த கதைதான் போங்கள்! ஒரு புறம் தீய விளைவுகளை விஞ்ஞானிகள் விளக்கோ விளக்கென்று விளக்குகிறார்கள். யாராவது, ஏதாவது, செய்வார்கள் என்று யாரும், எதையும், செய்யாமல் ஒரு 6 வருடம் போயே போய்விட்டது! அட, பிரச்சனையை அழகாக சாட்சியங்களுடன் சொன்ன விஞ்ஞானிகள் ஏன் அதற்கான தீர்வுகளைச் சொல்லவில்லை? அப்படியே அவர்கள் சொன்னாலும் ஏன் யாரும் அதைப் பின்பற்றுவதில்லை? இப்படிப்பட்ட கேள்விகள் நம் மனதில் தோன்றுவது இயற்கைதான். அதிகம் ஒன்றும் மாறாததற்கு பல காரணங்கள் உண்டு. ஒரு புறம் இது புலிக்கு (கொஞ்சம் பழமொழியை ப்ரமோட் செய்துதான் பார்ப்போமே) மணி கட்டும் சமாச்சாரம். அதைவிட முக்கியமாக, எப்படி இந்தப் பிரச்சனையைச் சமாளிப்பது என்று யாருக்கும் இன்னும் சரியாகப் பிடிபடவில்லை.
இதனால்தான், பருவநிலை மாற்றக் கருத்தரங்குகள் (climate change conferences) எந்த முடிவும் எடுக்காமல் குழப்பி, ஒரு அரசியல் சாக்கடையாக ஆகிவிட்டது. பல அரசியல்வாதிகள், இந்தப் பிரச்சனையை சரியாகப் புரிந்து கொள்ளாமல் மேலும் குழப்புகிறார்கள். இந்த விஷயத்தில் வேடிக்கை என்னவென்றால், இந்தக் கருத்தரங்குகள், பல்லாயிரம் பக்கங்களைக் கொண்ட வெளியீட்டை அச்சடித்து, மேலும் புவி சூடேற்றத்திற்கு வழி வகுக்கிறார்கள். கனடா போன்ற நாடுகள் முதலில், ‘கிழித்து விடுவேன் 2020 க்குள்’ என்று ஒரு கருத்தரங்கில் அறிவித்து விட்டு, அடுத்த கருத்தரங்கில், ‘மற்ற நாடுகள் செய்தால் நாங்களும் செய்ய முயற்சிப்போம்’ என்று ஜகா வாங்குவது மேலும் குழப்பமளிக்கிறது. பல அரசாங்கங்களும், தனியார் நிறுவனங்களும் சக்தி பேணுதல் (energy sustainability) பற்றி மேலும் குழப்பி வருகின்றன.
வழக்கம் போல், புவி சூடேற்ற அரசியலைத் தவிர்ப்போம். இந்த குழப்ப நிலைக்கு என்ன காரணம்? இதற்கு எப்படிப்பட்ட தீர்வுகள் தேவை என்று யாருக்காவது பிடிபட்டுள்ளதா? எங்கே தொடங்கியுள்ளார்கள்? இன்னும் எத்தனை நாளாகும்? வளரும் நாடுகளுக்கு இதனால் என்ன பாதிப்பு? அரசாங்கங்கள் என்னதான் செய்கின்றன? இதுபோன்ற விஷயங்களை விவரிக்கவே இக்கட்டுரை. அதற்கு முன்பு, இந்த பிரச்னையை சரியாகப் புரிந்து கொள்ள ஒரு உதாரணம் உதவலாம்.
உதாரணத்திற்கு, ஒரு விஞ்ஞான குழு, இந்தியாவில் சைவ உணவு உண்போரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்று அறிவிப்பதாக வைத்துக் கொள்வோம். அதற்கான, அசைக்க முடியாத புள்ளி விவரங்களையும் முன் வைக்கிறது என்று வைத்துக் கொள்வோம். எப்படி அதிக இந்தியர்களை சைவ உணவு உண்ண வைப்பது? முதல் பிரச்னை, அசைவ உணவு உண்பவர்கள் சைவ உணவையும் உண்கிறார்கள். பல கோடி குடும்பங்களை, எப்படி அணுகி, இந்தப் பிரச்னையைத் தீர்ப்பது? உடனே ‘காய்கறி ஜோக் ஸ்பெஷல்’ என்ற இலவச இணைப்பு கொடுத்து கேலிக்கூத்தாக்குவது மிகவும் சுலபம். ஆனால், இப்பிரச்னையை சரிவரத் தீர்க்க, குடும்பங்கள் ஒவ்வொன்றும் எத்தனை காய்கறிகளை உபயோகிக்கின்றன என்ற அளவிடல் முயற்சி (per average family consumption) முதல் கட்டமாகும். அந்த அளவிடல் படி, அடுத்த கட்டத்தை அடைய என்ன திட்டங்கள் வகுத்தால் சாத்தியமாகும் என்று தெளிவாக அறிவிக்க வேண்டும். திட்டப்படி நடக்கின்றதா, வேறு என்ன மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று ஆராய்ந்து அடுத்தபடி செயல்பட வேண்டிய பெரிய பிரச்னை இது. ஆனால், அடித்தளத்தில் உள்ளவர்களுக்கு, என்ன செய்ய வேண்டும் என்ற குழப்பம் இருப்பது இயற்கை. இதற்கு நடுவில், அரசியல் கட்சி ஒன்று, ”2015 க்குள் தமிழ்நாட்டில் காய்கறி உப்யோகம் 30% உயர எங்களிடம் திட்டம் உள்ளது” , என்று குழப்பினால், எப்படி இருக்கும்? கிட்டத்தட்ட, சக்தி பேணுதல் முயற்சிகள் இவ்வாறே நடந்து வருகின்றன. ஆனால், குழப்பமான 6 வருடங்களுக்குப் பின், சற்று தெளிவு தோன்றுவது போல சில முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளன. அவற்றை விளக்குவதும் இக்கட்டுரையின் இன்னொரு நோக்கம். ஆரம்ப கால முயற்சிகளுக்கே உரிய கோளாறுகள் இவற்றுக்கும் இருப்பது உண்மை. ஆனால், இப்படி முயற்சி எடுக்கவில்லை என்றால், பிரச்சனைக்கு முடிவு காண வேறு வழியில்லை. அல் கோர் சொல்வது போல, நாம் மண்ணோடு மண்ணாகுவோம் என்று கூட நிச்சயமாக சொல்ல முடியாது; பனியோடு உறைந்து போகவும் வாய்ப்புண்டு!
பச்சையா சிகப்பா?
அடுத்த முறை உங்கள் அலுவலகத்தில் கணக்கு பிரிவில் (accounting/finance department) உங்களது நிறுவனம் எத்தனை மின்சாரம் உபயோகிக்கிறது என்று விசாரித்துப் பாருங்கள்.
“போன மாசம் 5 லட்ச ரூபாய் கட்டினோம், அதற்கு முந்தைய மாதம் 4.8 லட்சம். எதுக்கு இந்த மாதிரி கேள்வி கேட்டு மாசக் கடைசியில் குளறறீங்க. லாப நஷ்ட கணக்கு பாக்கவே சரியாக நேரமில்லை!” என்று அலுத்துக் கொள்வார்கள்.
உங்களது கேள்விக்கான பதில் அதுவல்ல. பதில், எத்தனை கட்டணம் கட்டினோம் என்பது. கேள்வி, எத்தனை உபயோகித்தோம் என்பது. சக்தி பேணுதல் விஷயத்தில் அடிப்படைப் பிரச்சனை இதுதான். எத்தனை உபயோகிக்கிறோம் என்று தெரியாத வரை, அதை குறைக்க வழி தேடுவது அபத்தம்.
உங்களது நிறுவனத் தலைவர், “எங்கள் குறிக்கோள் நிறுவன, மனித மற்றும் பூமியின் லாபத்திற்காக மூச்சு விடாமல் உழைப்பது (profits, people, planet)” என்று சிரித்துக் கொண்டே அறிக்கை விட்டிருப்பார்! அதை எப்படி சாதிப்பது என்று அவருக்கும் தெரியாது; அவர் கீழ் வேலை செய்யும், யாருக்கும் தெரியாது!
நிறுவனங்களுக்கு சக்தி பேணுதல் விஷயத்தில் ஏதாவது தாங்கள் செய்து கொண்டிருப்பதாக அறிவித்தல் அவசியம். முதலீட்டாளர்கள் அதை எதிர்பார்க்கிறார்கள். வருடாந்திர பட்டியலில் (annual reports) இதைப் பற்றி பட்டும் படாததுமாய் ஏதாவது சொல்லித் தொலைக்க வேண்டியுள்ளது! இதில் உள்ள சிக்கல் என்னவென்றால், சொன்னாலும் குற்றம், சொல்லாவிட்டாலும் குற்றம். பெரிதாக ஏதாவது செய்யப் போனால், வியாபார லாபம் பாதிக்கப் படும். முதலீட்டாளர்கள் (investors) டின் கட்டி விடுவார்கள். செய்யவில்லையானால், ‘உங்களது போட்டி கம்பெனி என்னவெல்லாமோ (?!) செய்கிறதே. நீங்கள் எதுவும் செய்ய உத்தேசமில்லையா?” என்று கேள்வி கணைகளை சந்திக்க வேண்டி வரும்.
முதலீட்டாளர்கள் ஒரு புறம். வாடிக்கையாளர்கள் மறு புறம். சில வாடிக்கையாளர்கள் ‘பச்சை’ கம்பெனிகளை ஆதரிக்கிறார்கள். பச்சைக் நிறுவனங்கள் (Green organizations) சக்தி பேணுதல் விஷயத்தில் கருத்தாக இருப்பவை. இவ்வகை நிறுவனங்கள், சக்தியை விரயமாக்காமல் இருப்பது, பொருட்களை மறு உபயோகம் செய்வது, அதிக சக்தி, நீர் விரயமாகாமல் உள்ளூர் பொருட்களை விற்பது, ரசாயனம் கலக்காத விவசாயத்தை ஊக்குவிப்பது, போன்ற பல முயற்சிகளில் ஈடுபடுகின்றன. பல பெரிய அங்காடிகள் இன்று ப்ளாஸ்டிக் பைகளைத் துறந்து, துணிப் பைகள் உபயோகிக்க, சின்ன சலுகைகள் தருகின்றன. பல வங்கிகள், செல்போன் நிறுவனங்கள், ஏன் அரசாங்கங்கள் கூட, காகித பட்டியல், மற்றும் பில்களைத் தவிர்த்து, மின்னணு வடிவத்திற்குத் தாவி, காகித விரயத்தைக் குறைக்க முயன்று வருகின்றன. இந்தியாவில் அழைப்பு டாக்ஸிகள் எஸ்.எம்.எஸ் (SMS) மூலம், காகிதத்தை முழுவதும் தவிர்க்கின்றன. இப்படி ஒரு புறமிருக்க, நிறுவனங்கள் ஏன் முழு மனதோடு இப்படிப்பட்ட செயல்களில் தீவிரம் காட்டுவதில்லை? காரணம், இம்முயற்சிகளுக்கான செலவும், அதற்காக எந்த அளவிற்கு வாடிக்கையாளர்கள் செலவழிக்க தயாராக இருக்கிறார்கள் என்பதும்தான். உதாரணத்திற்கு, ரசாயன உரமற்ற உள்ளூர் தக்காளி மற்ற தக்காளியை விட 4 மடங்கு விலையானால், எத்தனை வாடிக்கையாளர்கள் அதை வாங்குவார்கள்? வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பு, ரசாயன உரமுடைய தக்காளியும், ரசாயனமற்ற தக்காளியும் அதே விலைக்கு விற்க வேண்டும், மிஞ்சிப் போனால், ஒரு 10% அதிகமாக விலை தரத் தயார். அவ்வளவே. ஒரு உற்பத்தியாளர் அலுத்துக் கொண்டார், “எங்களது தயாரிப்புகள் 80% மறுபயன்பாட்டு பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது” என்று அறிவித்தால், மற்ற 20% சதவீதத்தில் எப்படிப்பட்ட பொருட்களை உபயோகிக்கிறீர்கள் என்று வாடிக்கையாளர்கள் துருவுகிறார்களாம்! உற்பத்தியாளர்கள் இதனால், கையை பிசைந்து கொண்டு, வெறும், வருடாந்திரப் பட்டியலில் தம்பட்டம் அடிக்க மட்டும் ஏதாவது செய்து வருகிறார்கள். அதாவது, சக்தி பேணுதலா (பச்சை) அல்லது நஷ்டமா (சிகப்பு) என்ற கருத்து உற்பத்தியாளர்கள் மத்தியில் உருவாகி இருப்பது மறுக்க முடியாத உண்மை.
மேற்குலகில், வாங்கு-பயன்-எறி (buy, use, dispose) என்பது கடந்த 60 ஆண்டுகளாக ஒரு பெரிய சாபக் கேடாகி விட்டது. வாரந்தோறும் வீட்டு வாசல்களில், பழைய டிவி, அடுப்பு, துணி துவைக்கும் எந்திரம் மற்றும் நாற்காலிகள், சோபா என்று பலவற்றையும் குப்பையாக வைப்பதைக் காணலாம். இவற்றில் பல பொருட்கள் நன்றாக வேலை செய்யும் பொருட்கள். புதிய மாடல் வேண்டுமென வீசி எறியப்பட்டவை. நுகர்வோர் இந்த மனப்பான்மையை மேற்குலகில் என்று துறப்பார்கள் என்று தெரியவில்லை. இப்பொருட்கள் நொறுக்கப்பட்டு, எரிக்கப்பட்டு சுற்றுப்புற சூழலுக்கு தீங்கு விளைவிப்பது மறுக்க முடியாதது. வட அமெரிக்காவைப் பற்றிய ஒரு ஜோக்: இங்கு விலை உயர்ந்த கார்கள் தெருவில் நிறுத்தப்படும்; குப்பைகளை பத்திரமாக வீட்டிற்குள் பூட்டி வைக்கப்படும்!
சமீப காலமாக, புதுப்பித்த தயாரிப்புகள் (refurbished products) மெதுவாக மேற்குலகில் தலைதூக்க ஆரம்பித்துள்ளன. ஒவ்வொரு பெரிய மின்னணு தயாரிப்பாளரும் புதுப்பித்த தயாரிப்புகளை சற்று குறைந்த விலையில் விற்கத் தொடங்கியுள்ளார்கள். டிவி, மடிக்கணிணி, செல்பேசி போன்ற பொருட்களை, சில நுகர்வோர் புதுப்பித்த தயாரிப்புகள் வாங்கத் தொடங்கியுள்ளார்கள். புதுப்பித்த தயாரிப்புகளை விற்கவே சில கடைகளும் உள்ளன.
மேற்குலகில் சில பேணுதல் தீவிரவாதிகளுக்காக பெரிய கடைகளும் உண்டு. சாதாரண சில்லரை வியாபாரங்களை விட பன்மடங்கு அதிகமாக விலையில் பொருட்களை விற்கிறார்கள். இந்த கடைகள் ஓரளவிற்கு நகைச்சுவையாகவும் இருக்கும். ப்ளாஸ்டிக்கை தவிர்ப்பதாக (ப்ளாஸ்டிக் மண்ணோடு கலக்க பல நூறு ஆண்டுகள் ஆகலாம்) சொல்லிக் கொள்ளும் இவர்கள், புல் மட்டுமே உணவாய் கொண்ட மாட்டின் பாலை ப்ளாஸ்டிக் குவளைகளில் விற்பது வேடிக்கை! மேலும், முழு சைவ கோழி மற்றும் இறைச்சி கேள்விப் பட்டிருக்கிறீர்களா? இந்தக் கடைகளில் உண்டு, விற்கப்படும் கோழி, வாழ்ந்த காலத்தில் சைவமாம்! நகைச்சுவையை தவிர்த்துப் பார்த்தால், இந்த மாதிரி கடைகளில் உள்ளூர் பொருட்களை விற்கிறார்கள். ரசாயன உரமற்ற காய்கறிகளை விற்கிறார்கள். இப்படிப்பட்ட கடைகளில் பொருட்களின் அட்டைகளை படித்தல் ஒரு சுவாரஸியமான அனுபவம். சாக்லேட் வாங்கி அட்டையைப் படித்தால், எப்படி பால் மற்றும் இயற்கையாக வளர்ந்த கொட்டைகளை பயன் படுத்துகிறார்கள் என்று சொல்கிறார்கள். அப்பொழுதுதான், மற்ற பல மலிவு சாக்லேட்கள் பாலையே உபயோகிப்பதில்லை என்று நமக்கு தெரிய வருகிறது!
(தொடரும்)