கவிதைகள்

ஈரநிலமாய் மாறுதலுக்கு
தயாராகின்றன
சன்னல்கள்,
கார் கண்ணாடி
சுவர்கள்

வேலை செய்யும் சுகத்தை
மறைத்துக் கொண்டு
அலுத்து கொள்ள
தொடங்குகிறது
ஸ்வீப்பர்கள்

மரங்கள்
அகோரிகள்
வெயில், மழை,
தூறல், பனி..

*
தாமதமாய் வந்த
கணவன் மீது
கோபம் கொள்ளும் மனைவி

படித்து முடித்து
வரும் பையனை
முதலில் சாப்பிடு
என சந்தோசமாய் விரட்டும் அப்பா

விடுமுறை முடிந்து
கிளம்பும் உறவுகாரப்
பையன்களின் கடைசி நாள்
மூடிய மனது

*

ஓவ்வொருவரும்
ஓவ்வொருமாறி
ஓவ்வொரு தடவையும்
மழையை
வரவேற்கிறோம்.
புன்னகைக்கிறோம்
கரிக்கிறோம்
அவமதிக்கிறோம்
சலிக்கிறோம்
பயப்படுகிறோம்
அநுமதிக்கிறோம்
மறுதலிக்கிறோம்.

பொதுவாய்
தயாராகிறோம்

எங்கே போயிருந்தது
இந்த கவிதை
மழை வரும் வரை.

கே.ஆர்.மணி

-o00o-

கருகிய மொட்டு

மலரும் தறுவாயரும்புகளாய்
நாமிருந்த துளிர்பருவத்தில்

உன் செவ்வந்திமுகம்
என் சொல்தேன் சுவையில்
செம்பருத்தியாகும் விந்தையில்

என் பார்வை ஊடுருவும்
உன் புதிய திரட்சிகளில்
உன் வடிவும் வனப்பும்
மெருகேறும் அழகில்

முதன்முதலாய்
நகரம் பார்க்கும் நாட்டுப்புறமாய்
மீளா வியப்பில் விழுந்தேன் நான்

எதையும் பற்றாமல்
நடந்துகாட்டும் மழலைபோல
ரசிக்கப்படும் சுகத்தில் பூரித்தாய் நீயும்.

புயலடித்தவொருமாலையில்
சிறகிழந்த வண்ணத்துப் பூச்சிகளானோம்
கண்களில் கடல் தேங்க

எங்கெனத் தெரியாமல்
இடம் பெயர்ந்தன இரு நட்சத்திரங்கள்.

மூதாட்டியாகியிருப்பாய்
முடிந்து போயுமிருக்கலாம்

கண்ணாமூச்சி விளையாடுகிறது
உன் துளிர் பருவ பிம்பம்

நினைவும் நிஜமும்
நீர்க்கோலமாகும் தருணங்களில்

நிலவரம்

பத்தாவது கிளாசோட படிப்பு வேம்பாச்சு
வருசம் பத்தாச்சு வணங்காத ஒடம்பாச்சு
சொந்த புத்தியில்லே சொல்பேச்சு கேக்குறதில்லே
செலவுக்கு காசுதந்து கட்டுப்படியாவறதில்லே

“கடைவெச்சுத் தாரேன், காசு சம்பாரி”யின்னேன்
“கட்சியிலே சேர்ந்ந்திருக்கேன். கவுன்சிலராவப்போறேன்
காசுமழை கொட்டுமு”ன்னான்
“காலம் மாறப் போவுது”ன்னான்

“பட்டறைவெச்சுத்தாரேன் ஒளச்சா துட்டுவரும்”
“ஒளச்சிந்த காலத்திலே பெரிசா பணமெங்கெ பண்ணறது?
படமெடுத்தா மட்டுந்தான் கோடிகளா பணம் காய்க்கும்
பயிர் வயலை வித்துக்கொடு படமெடுக்கப் போறேன்”னின்னான்

வேட்டியை மடிச்சுக்கட்டி வெவசாயம் பாக்கச்சொன்னேன்.
வெவசாயம் பாக்கப்போயி வயல்லெ வேலை செய்யும்பொண்ணுகளை
வெவரமா உளுதுப்புட்டான். வெவகாரம் பண்ணிப்புட்டான்
நடவாளு காரித்துப்ப நம்மபேரைக் கெடுத்தப்புட்டான்

“வில்லங்கம் மூணுக்கும் வெட்டிச்சோறுபோடாதே
வீட்டுக்குள்ளே சேக்காதே”ன்னு அக்கறையா நாம சொன்னா
பெத்தவயிறு கேக்காதாம். பொருமறா தாய்க்கெளவி
பொத்திகிட்டுவருது ஆத்திரமா ஒப்பாரி

ஆத்தாடி! கெளவிக்கென்ன கொஞ்சமா வாயி?
வாயா அது? ரணவாயி! சுண்ணாம்புக் களவாயி!

நெலவரம் என்னான்னா
கட்சி நூறாலெ நம்ம நாடு கெடுது
காட்சி மூணாலெ நம்ம வீடு கெடுது

லாவண்யா

-o00o-

நான் மட்டும் நிற்கிறேன்

கீழ் வானை கிழித்தபடி
தொலைவில்,
நகரம் அஸ்தமிக்கிறது.
இங்குவரை வானம்
இரத்தம் கசிந்து கொண்டிருக்கிறது.
சற்று முன் சென்ற மேகங்களில்
சிங்கமும் புலியும்,
மானும் மயிலும்
ஒன்றுடன் ஒன்று,
ஒன்றின் மேல் ஒன்றனெ,
விரைந்து சென்றன.
அவற்றுடன்,
பறந்து கொண்டிருந்த
பறவைக் கூட்டமும்
கூடடைந்துவிட்டது.
நான் மட்டும் நிற்கிறேன்.
மண்ணைத் தழுவியபடி
காற்றும் என்னைக்
கடந்து செல்கிறது.

ச.அனுக்ரஹா

-o00o-

என் வீடு காலி

ஒரு மாதம்
வீட்டிலில்லாத போதில்
துணி தொங்கும் கயிற்றில்
தூளி கட்டிய
குருவிக் கூட்டை
இடம் மாற்றி வைக்க
இடம் மாறிப் போன
குருவி தேடிக்
குடியேறிப் போவேன்
அதன் வீட்டில்
அதனை நினைந்து நினைந்து.

என் வீடு
‘நான்’ இல்லாமல்
காலியாகிப் போயிருக்கும்.

கு.அழகர்சாமி