பெரிய வீட்டின் ஒரு சிறிய பிறைக்குள்… – ஆதவனை வாசிப்பதில் உள்ள அடிப்படைச் சிக்கல் – ஓர் உரையாடல்

தமிழ் இலக்கிய வாசிக்கும் எந்த ஒரு வாசகனும் கடந்து வரவேண்டிய முக்கியமான ஒரு எழுத்தாளர் ஆதவன். ஆதவனின் படைப்புகளுக்கு தமிழ் சூழலில் ஒரு குறிப்பிடத்தக்க இடமுண்டு. 70 மற்றும் 80-களின் இந்திய மத்திய தர குடும்ப பின்னணியில் வளர்ந்தவர்கள் ஆதவனின் நாயகர்கள். தான் வளர்ந்த சூழலின் சாரத்தை கைவிட முடியாமலும், மாறும் யுகத்தின் அவசரத்தை கண்டு பிரமித்து நிற்கும், அதற்கு ஈடு கொடுத்து தன்னை மாற்றிக் கொள்ளத் துடிக்கும் மனிதர்களை, அவர்களது தோல்விகளை அவரது படைப்புகள் திரும்பத் திரும்ப பேசுகின்றன. வேக கதியில் மாறும் எல்லா காலத்தில் உள்ள ஒவ்வொரு தலைமுறையும் இந்த பிரச்சனையை எதிர்கொள்கிறது. எக்காலத்து வாசகனும் ஏதோ ஒரு புள்ளியில் ஆதவனின் பாத்திரங்களுடன் தன்னை தொடர்பு கொள்வான். மாற்றம், பதற்றம், தோல்வி – இதெல்லாம் எல்லா காலத்திற்கும் பொருந்தும். ஆனால் ஆதவனை ‘ஒரு பெரிய வீட்டின் சிறிய ஒரு பிறைக்குள் தொடர்ந்து தான் பார்க்க விரும்புவனவற்றை மட்டுமே பார்த்து வந்தவர்’ என்று சொல்லிவிட முடியுமா?

இங்கு ஆதவனின் படைப்புகள் குறித்து நடைபெற்ற ஒரு உரையாடல் உங்களுக்காக. ஆதவனின் படைப்புகள் குறித்தும், ஒரு கட்டத்தில் அசோகமித்திரனின் படைப்புகளுடனான ஒப்பீட்டையும் முன்வைக்கிறது இந்த உரையாடல்.

மைத்ரேயன்

ஆதவன் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்தான். ஐயமில்லை. என் உயர்நிலைப்பள்ளிக் காலத்தில் என் மிகச் சாதாரண வாசிப்புத் தேர்வுகளில் இருந்து என்னை மீட்டு எடுத்து மேலே நகர்த்திய பல எழுத்தாளர்களில் இவர் ஒருவர். நா.பா, அகிலன் போன்றாருக்கும், கல்கி, கி.ராஜேந்திரன் போன்றாருக்கும் நான் செலவழித்த நேரத்தை வியர்த்தம் என்று உணர்த்திச் சில சிறுகதைகளிலேயே என் ரசனையை நவீன உலகுக்கும், எழுத்துக்கும் நகர்த்தியவர்களில் ஆதவன் ஒருவர். சுஜாதா, ஜெ.கா, சா.கந்தசாமி, ஐராவதம், சார்வாகன், இப்படிப் பலர் அந்தக் கட்டத்தில் ஏணிப்படிகள். இது தமிழில் நடந்து வந்த காலத்தில், ஆங்கில வாசிப்பில் அசுர வேகத்தில் உதவியவர்கள், ரஸ்ஸல், ஷா, மாம், க்ரீன், கெஸ்லர், ஹக்ஸ்லி, ஹெ.ஜேம்ஸ், ஆஸ்டன், க்ரானின், நெவில்ஷூட், வோட் ஹவுஸ், ஹார்டி, டொல்ஸ்டாய் போன்றார். அதற்கு முன் டூமாஸ், ஸ்காட், வேர்ன், வெல்ஸ், போ, ட்வெய்ன், என்று நிறைய பதின்ம இளைஞர்களுக்குப் படியாக இருந்த எழுத்தாளர்கள் உயர்நிலைப் பள்ளியில். கொஞ்சம் நம்ப முடியாத வகையில், எர்ல் ஸ்டான்லி கார்ட்னர் (பெரி மேஸன் கதைகள், தவிர வேறு கதைகளும்), இயன் ஃப்ளெமிங் (ஜேம்ஸ் பாண்ட்), மாரிஸ் வெஸ்ட், ராபர்ட் ஸி ரூவார்க், ஹரால்ட் ராபின்ஸ், என்று பல உதிரி எழுத்தாளர்களின் பங்களிப்பு மிகக் கணிசமானது.

சகல குப்பைகளையும் வாரி எடுத்து, பிரித்துப் படித்துத்தான், நபகோவ், அப்டைக், பெல்லோ, இயானெஸ்கோ, மான், காஃப்கா, ப்ரெஷ்ட், கெமூ என்று வந்து சேர்ந்தது. இவர்கள் எப்போதும் உயரிய படைப்புகளே கொடுத்தார்களா என்றால் அப்படி ஒன்றும் இல்லை. இருந்தாலும் சாதாரணக் கதைகளில் கூட ஒரு தரமான எழுத்து இவர்களிடம் இருந்தது.

ஆக ஆதவனின் சில கதைகள் என் 10ஆம் வகுப்பு நேரங்களை மேன்மையாக்கின. பள்ளி அறையில் கடைசி பெஞ்சில் ஜன்னலருகே அமர்ந்தபடி, பெஞ்சில் கீழ் அறையில் தீபம் பத்திரிகையை வைத்துப் படித்துக் கொண்டிருப்பேன். ஆதவனின் ஒரு கதை, ஒரு ஆணும், பெண்ணும் மாலையில் சந்திக்கிறார்கள். அப்பெண்ணின் மகளிர் விடுதிக்கருகே விடை பெற வேண்டிய நிலை. அவன் அப்பெண்ணிடம் மேலும் நெருங்க நினைக்கிறான். அவள் இன்னும் அத்தனை சுதந்திரம் அவனுக்குக் கொடுக்கத் தயாரில்லை, ஆனால் இதனால் அவன் விலகுவானோ என்ற அச்சமும் உண்டு. அந்த இழுபறி நிலையில் அவனுக்கு நெருக்கத்தின் கவர்ச்சியைக் காட்டி ஈர்த்தபடி, மேலும் உறுதியான உறவாகும் வரை அவனைச் சுவைக்க விடாமல் விலக்கி இருக்க வேண்டிய நிலையில் அவள். இப்படியே வா வா என்று ஆசை காட்டி, போ போ என்று விலக்கும் நிலையில் தன் மீது அவநம்பிக்கையே இருக்கிறதாக கோபப்படும் அவன் என்று சராசரி இளைஞர்கள் நகரத்தில் பாலுறவு என்னும் ஒரு பெரும் ஆகர்ஷண சக்தியோடு போராடும் நிலையை நன்கு எழுதி இருந்தார். மலினப்படாமல், அதிக நளினமாகவும் எழுதி அதைப் பூசி மெழுகாமல் இருக்கும் உரையாடல், ஆனால் கொஞ்சம் செயற்கையாக இருக்கும், அதை அன்று நான் இங்கிலீஷில் பேசுவாரின் மொழிநடை, அதைத் தமிழாக்குகிறார் என்றோ, அது தில்லி போன்ற அன்னிய நகரங்களின் பேச்சுப் பாணி என்றோ என் பள்ளிப் பருவ யோசனைய்ப்படி மாற்றிப் புரிந்து கொண்டிருந்தேன் என்று நினைவு.

ஆதவனை நான் தாழ்வாகக் கருதவில்லை. ஆனால் அவர் பெரும் ஆகிருதி உள்ள எழுத்தாளர் அல்ல. அ.மி சமகாலத்தில் எழுதிக் கொண்டிருந்தார். அத்தனை கவனம் இன்னும் அவர் பால் விழவில்லை. ஆனால் அமைதியான குரலில், கனமாக எழுதிக் கொண்டிருந்தார். அவரிடமும் மாநகர மனிதர்களின் வாழ்வுப் பிரச்சினகள் தொடர்ந்து வெளிப்பட்டன. அ.மி. எனக்குப் பரிச்சயமான தி.நகரின் சந்து பொந்துகளின் முனையில் நிற்கும், உலவும், சிக்கலில் துன்புறும் மனிதர்களை மிகச் சிறு அளவேயான சொற்களில் அப்படியே கொணர்ந்தார். வெறும் எதார்த்தமும் இல்லை அது. விமர்சன எதார்த்தம்தான். ஒரு காடா விளக்கின் புகை கக்கலில் முகம் ஒளியூட்டப்பட்டும், இருண்டும் தெரிய, உண்டிகளை விற்கும் ஒரு தெருமுனைத் தள்ளு வண்டி வியாபாரியை அ.மி தீட்டும் சித்திரத்தின் எளிய உறுதியை ஆதவனால் அடைய முடியாததற்குக் காரணம், அவர் கூடதிகமாக உளநிலைச் சிக்கல்களை இழை பிரிப்பதிலேயே கவனத்தைச் செலுத்தியது என்று நினைக்கிறேன்.

மனிதர் மனதிலேயே, கருத்துச் சிக்கல்களிலேயே வாழ்வதில்லை. The sheer physicality of life is important- மனிதர் பொருட்கள், வெப்ப தட்ப நிலை, கட்டிடங்கள், வாகனங்கள், மரஞ்செடிகொடிகள் என்று பற்பல சூழல்களின் நடுவே வாழ்கிறார். இவற்றில் பலவற்றைப் பின்னணியாகவும், முன்நிலையாகவும் பயன்படுத்தி மனித வாழ்க்கையை ஒரு குவி ஆடி மூலம் பெருக்கியும், குறுக்கியும் மாற்றிப் பார்ப்பது ஒரு பெரும் எழுத்தாளனுக்கு கைவரும் கலையாக இருக்கும். இப்படிச் சொல்வது கூட ஒரு மலினமான வகை வருணிப்புதான். Elemental description of an act that is almost alchemy.

மித்திலன்

நான் வாசித்தவரை ஆதவனின் எழுத்தில் ஒரு பெரிய பிரச்சினை அவர் தடைகளை முட்டி மோதிக் கொண்டிருப்பதையே எழுதிக் கொண்டிருந்தார் என்பதுதான். அசோகமித்திரனால் அதைத் தாண்டி உயர்ந்து நின்று பேச முடிந்தது. இதையே வேறு மாதிரி சொல்வதானால் ஆதவன் ஆன்மிகத்தையும் லௌகிக நிலையிலேயே பேசினார், அசோகமித்திரன் லௌகிக வாழ்க்கைக்கு ஒரு ஆன்மிக ஒளி பாய்ச்சினார். ஆதவனின் உலகம் ஏறத்தாழ ஆன்மாவை அறியாத, ஆனால் அறிந்து கொள்ளத் துடிக்கும் முகமூடிகளின் உலகம். இதனால் அவர் உறவுகளை, அதிலும் குறிப்பாக ஆண் பெண் உறவுகளைப் பேசும்போது சில சமயம் அலுப்பூட்டும் வெங்காயத் தோலுரித்தல் நடைபெறுகிறது.

ஆனால் அவரிடமிருக்கும் சுய விமரிசனம் ஒரு பெரிய பலம். பிரிட்டிஷ் கவுன்சில் லைப்ரரியில் புத்தகம் படித்துக் கொண்டு சப் டைட்டில் போட்ட வேற்று மொழிப் படம் பார்ப்பவர்கள் என்பது அவரது எதிர்மறை விமரிசனமாக இருக்கிறது. ஏதோ ஒரு வகையில் அவர்களது அறிவுத் தேடல் பழுதுபட்டதாக இருப்பதாக அவர் நினைப்பதாகத் தோன்றுகிறது. இவர்களை, இவர்கள் பேசும் ஆங்கிலத்தை, இவர்களது நாட்டங்களை அவர் கேலி செய்து கொண்டே இருக்கிறார். இவை இரவல்தான் என்ற காரணத்தால் அவரால் இவற்றை ஏற்றுக் கொள்ள முடிவதில்லை, ஆனால் தவிர்க்கவும் முடிவதில்லை.

மூன்றாமவன் என்ற கதை என்று நினைக்கிறேன். ஏறத்தாழ Ant and the Grasshopper கதைதான். ஒருத்தன் இப்படித்தான் பிரிட்டிஷ் கவுன்சில் லைப்ரரி புத்தகங்கள், சப் டைட்டில் போட்ட படங்கள் நல்ல படிப்பு நல்ல வேலை அவனைப் போலவே ஆங்கிலம் பேசும் மனைவி என்று படாத பாடுபட்டு மாடர்னாக இருப்பான். அவன் கதையைச் சொல்லும்போதே அவனது சகோதரன், உருப்படாதவன், படிக்க மாட்டான், நிறைய தப்பு செய்வான் அவன் கதையும் வரும். ஒன்றுக்கும் உதவாமல் போய் அம்மாவுக்கு ஒத்தாசையாக சமையல் கற்றுக் கொண்டு, கொஞ்சம் வைதீக விஷயங்கள் தெரிந்து கொண்டு ஏதோ என்று இருப்பான். ஆனால் கதையில் எதிர்பாராதவிதமாக யாரோ ஒரு வெள்ளைக்காரப் பெண் இந்தியாவுக்கு வந்தவள், அவனது ‘பாரம்பரியத்தால்’ ஈர்க்கப்பட்டு அவனைக் கல்யாணம் செய்து கொள்வாள்! இருவரும் இந்த மாடர்ன் சகோதரன் வீட்டுக்கு வருவார்கள். அப்போது இத்தனை நாட்கள் படித்த பிரிட்டிஷ் லைப்ரரி புத்தகங்கள், ஆங்கில சஞ்சிகைகள், இவனும் இவனது மனைவியும் பேசும் ஆங்கிலம் எல்லாம் மூன்றாமவனின் வெள்ளைக்கார மனைவியின் முன் அற்பமாகி ஆற்றாமையால் அவனுக்குப் பைத்தியமே பிடித்து விடும்.

மாடர்னிட்டி என்பதை வெஸ்டர்னாக இருப்பது என்று தவறாகப் புரிந்து கொள்ளும் நம் ஊர் படித்தவர்கள் மீதான அருமையான விமரிசனம். இது இந்த சிறுகதையில் ஒரு பகடி போல் எழுதப்பட்டிருக்கிறது, ஆனால் ஆதவனின் கதைகளில் வரும் படித்தவர்களில் ஏறத்தாழ எல்லாருடைய பிரச்சினையும் இந்த மாதிரிதான். ஏதோ ஒரு வகையில் அவர்கள் தங்கள் வாசிப்பாலும் அதையொட்டிய அறிவு நாட்டத்தாலும் போலியாகி விடுகிறார்கள். என்ன செய்வது என்றே தெரியவில்லை. அப்பா அம்மாக்களிடமும் விடையில்லை. அவர்கள் விரும்பியதும் இதைத்தானே? ராமாயணம் படிக்கும் தாத்தா, சுலோகம் சொல்லும் தோட்டக்காரர் என்று ஓரிருவர் இதற்கு விடை தரக் கூடியவர்களாக இருக்கிறார்கள். ஆனால் ஆதவன் அவர்களை மாற்றாக முன்வைப்பதில்லை, அவருக்கு அது வேலைக்காகாத பாதையாகத் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். “வந்தே கிருஷ்ணம் ஜகத் குரும்”” என்ற கதையில் அப்படியொன்றை முயற்சிக்கிறார், ஆனால் அதற்காக சிஏ படித்த மகனை அந்த லட்சிய கிராமத்திலிருந்து அப்புறப்படுத்தி அதை ஒரு pastoral கதையாகவே செய்து விடுகிறார், அவனுக்கு அங்கே இடமில்லை என்பதால். மரபுக்குத் திரும்பி கதாகாலட்சேபம் செய்து அற விழுமியங்களைப் புகட்டுதல் நவீன சமூகத்தின் பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வாக இருக்க முடியாது என்ற அவநம்பிக்கை ஆதவனுக்கே இருந்திருக்க வேண்டும்.

இந்த விஷயத்தை ஆதவன் நன்றாக செய்திருக்கிறார். வெஸ்டர்னாக மாறாமல் மாடர்னாக இருப்பது எப்படி, அதில் சிக்கிக்கொள்வதால் வரும் ஐடன்டிட்டி பிரச்சினைகளின் உறுத்தல் : அசோகமித்திரன் இதை எழுதியிருக்கிறாரா என்று தெரியவில்லை, ஆனால் எழுதியிருந்தால் அதை இந்தப் பிரச்சினைக்கு மேலெழுந்து ஒரு பறவைப் பார்வையில் எழுதியிருப்பார், ஆதவனால் ஒரு முட்டுச் சுவரின் முன் நின்றுதான் எழுத முடிந்தது.

மைத்ரேயன்

ஆதவனின் பல கதைகள், குறிப்பாக என் பெயர் ராமசேஷன் போன்றவை எனக்கு மிகச் சலிப்பைத் தந்திருந்தன. ஒரு கிழவர் பற்றிய குறுநாவல் என நினைக்கிறேன், அது தில்லி வாழ்வில் சிக்கித் திண்டாடும் ஒரு கிழவர் பற்றியது. Ennui என்ற உணர்வை எனக்குக் கொடுத்தது அதனால் பிடிக்கவில்லையா என்று தெரியவில்லை. ஆதவனின் சொந்த வாழ்வுச் சலிப்பே அப்படியே அவர் கதைகளையும் பீடித்திருக்கலாம். தில்லியே இந்திய ஊழலின் தலைநகரம் என்று நாம் அறிவோம். அதில் பெரும் சுறாக்கள் அலைய, அதில் ஈடுபடவும் முடியாமல், தாக்குப் பிடிக்கவும் முடியாமல் அலைப்புற்ற மனிதர் அவர். வெ.சா போல அரசு ஊழியத்தில் நங்கூரம் பாய்ச்சி, பெரும் அலைப்புகளால் மனதை உடைய விடாமல் அறவுணர்வை மட்டும் நம்பியும் அவரால் இருக்க முடியவில்லை. இ.பா. போல சுறாக்களோடு சுற்றவும் முடியவில்லை. கஸ்தூரி ரங்கன், ’பாரதி’ மணி போன்றாரைப் போலப் பெரும் பணத்தின் அருகில் ஒரு பார்வையாள/ஒத்துழைப்பாளனாகவும், சொந்த வாழ்வில் வேறு கலை முனைப்புகளோடும் இவரால் இருந்திருக்க முடியாது.

ஆக அரசியல் விமர்சனமும் கை கூடவில்லை, அற விமர்சனமும் கை கூடவில்லை, சமூக விமர்சனமும் குறையாக, தன்னிலையில் இருந்து மட்டுமே கை வந்தது, மாற்று ஏதும் அவருக்குத் தெரியவில்லை. எல்லாமே மலினப்பட்டதாகவோ, பழுதானதாகவோ, பயனற்ற அலைப்பாகவோ தெரிந்தது. இது ஒரு காலனியத்தின் பின்னிலை சமுதாயத்தில், வழி தவறி விட்ட மக்கள் கூட்டத்தின், வன்முறையால் உடைத்து நொறுக்கப்பட்ட மக்கள் கூட்டத்தின் அவதியைப் பிரதிபலித்த ஒரு தனிமனிதனின் பயணம்.

இதில் அவர் வழி இன்மையைத் தொடர்ந்து சொன்னார் என்பது மிகச் சரியான கவனிப்பு. அதை விமர்சனமாகச் சொல்வதில் குறை இல்லை. ஆனால் தொலை நோக்கில் மேற்படி இதர நபர்களின் பயணம் அர்த்தமுள்ளதா என்பது நமக்கு இன்னும் தெரியாது. காலம் அதைத் தீர்க்கும். இன்றளவில் ஆதவனின் பெருஞ்சலிப்பு என்பது எதார்த்தமானது ஆனால் அதை நம்மளவிலேயே அன்றாடம் அறியும், உணரும், வாழும் நமக்கு அதிலிருந்து கிட்டும் உதவி, பார்வை, புரிவு (?) போன்றன அத்தனை பயனுள்ளவையாகத் தெரியவில்லை. ஒரு படைப்பாளியிடம் நாம் பெறக்கூடியது, நம் வாழ்வு பற்றிய ஒரு அமைப்புருத் தெளிவு, அதாவது pattern recognition. சில நேரம் எங்கிருக்கிறோம் என்பது குழப்பமாக இருக்கையில் ஒரு வரைபடம், அது எத்தனை விவரம் குறைவாக இருந்தாலும், அடிப்படைத் தகவல்களால் எங்கிருக்கிறோம் என்பதை நேர்மையாகச் சுட்டினால் கூட உதவியாக இருக்கும். இதைச் சொல்வது கலையைப் பயன்பாடு என்ற கோணத்தில் விமர்சிப்பது என்று ஒதுக்க முடியாது. கலைக்கு இருக்கிற பல நேர்த்திகளில் இந்த அம்சமும் ஒரு அவசியக் கூறு என்று நினைக்கிறேன்.

நான் ஆதவனிடம் விடைகளும் கிட்ட வேண்டும் என்று வற்புறுத்தவில்லை.இதை எதார்த்த வாதம் என்றும் கருத வேண்டாம். போர்ஹெஸ்ஸின் பல கதைகளில் தூல எதார்த்தம் ஒரு கனவைப் போலத்தான் இயங்குகிறது. இருந்தும் அவற்றிலிருந்து நமக்குக் கிட்டும் விஷயங்கள் எதார்த்தமான விவரிப்பு எதிலும் கிட்டாத அளவு தீர்க்கமான ஊடுருவல் கொண்டவை.

ஒரு வேளை நமக்கு ஏற்கனவே விமர்சனப் பார்வை கை கூடி விட்டிருந்தால் நாம் ஆதவனின் எழுத்தைத் தாண்டிய ஒரு உணர்வை அடைந்திருப்போம். இது பிரமையா இல்லையா என்பது காலத்தில் தெரியும் என்றாலும் இன்றளவில் நமக்கு ஆதவனின் உரைத்தலில் இருந்து கிளர்வும் கிட்டுவதில்லை, புது அறிதலும் கிட்டுவதில்லை என்பதால்தான் அதை நாம் அத்தனை மதிக்க மறுக்கிறோம். நாம் மதி மயங்கிய நிலையில் இருக்கிறோம் என்று நமக்கு ஆதவன் தெரிவிக்கிறார் என்பது உண்மையாக இருக்கலாம், அது நமக்குத் தெரியாதா என்பதுதான் என் கேள்வி என நினைக்கிறேன்.

பதின்ம வயதில் இருந்து அடுத்த கட்டத்துக்கு நகரும் இன்றைய இளைஞருக்கு ஆதவனின் எழுத்து இன்னும் கூட பயன் தரும். ஏனெனில் அவர்கள் அதே சலிப்பை ஊகமாகப் பார்க்கத் துவங்கும் கட்டத்தில் இருக்கிறவர்கள்.

மற்றபடி சப்டைடில் படங்கள் பார்ப்பவர்களைப் பற்றி ஆதவனின் விமர்சனம் குறித்து எழுத மேலும் இருக்கிறது.

மித்திலன்

முன் எப்போதும் இருந்ததைவிட இப்போது மாடர்ன் என்பது வெஸ்டர்னா என்ற கேள்வி இளைஞர்களை உறுத்துகிறது. ஐடி, பிபிஒ துறைகள் தமிழ் நாட்டில் உள்ள படித்த இளைஞர்களின் லட்சியமாக இருக்கும் நிலையில் சரியான ஆங்கிலம், சரியான உடை, சரியான பாவனைகள் பாடாய்ப் படுத்துகின்றன.

ஆதவன் சொல்லும் பிரச்சினைகளை, அதன் ஸ்டேல்மேட்டை, நீங்களோ நானோ தாண்டி வந்திருக்கலாம். ஆனால் இன்றும் பலருக்கு அது பூதாகரமான பிரச்சினையாக இருக்கிறது என்று நினைக்கிறேன்.

ஒரு வெள்ளைக்காரப் பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்ளும் வைதிகமும் சமையலும் கொஞ்சமே தெரிந்த ஒருவன் தன்னைத் தோற்கடித்துவிட்டான் என்று நினைக்கும் மனம் எப்படிப்பட்டது? படிக்கும் புத்தகங்களும் பார்க்கும் படங்களும் தனக்குச் சொந்தமில்லை என்று நினைக்கும் மனம் அது. ஒரு வெள்ளைக்காரப் பெண்ணை சொந்தமாக்கிக் கொண்டால்கூட இதெல்லாம் முக்கியமில்லாமல் போய் விடுகிறது.

சில வகைப்பட்ட இலக்கிய சினிமா விமரிசனங்களை எடுத்துக் கொள்ளுங்கள். இத்தாலிய, பிரெஞ்சு விமரிசகர்களை, தென் கொரிய, ஜப்பானிய இயக்குனர்களைத் தமக்கு சொந்தமாக்கிக் கொள்ள ஆசைப்படுகிறார்கள் நம்மவர்கள். ஏதோ மந்திரத்தை உச்சரிப்பது போல அவர்கள் பெயரை, மேற்கோள்களை, கருத்துகளை உச்சாடனம் செய்வதால் அந்த ஆற்றல் தமக்குள் ஆவாஹனம் ஆகிவிடும் என்று நினைப்பது போல எழுதுகிறார்கள்.

எது எனக்கு இரவல்? எது எனக்கு உரியதாகிறது? இதுதான் இந்த விஷயத்தில் ஆதவனின் கேள்வி. எப்போது எனக்கு அது உரியதாகிறது? என்ற கேள்வியை அவர் கேட்டிருக்கலாம், கேட்கவில்லை. கேட்டிருக்கலாம்.

நாம் ஓசூவையும் தெல்யூசையும் பேசுவது பெரிய விஷயமல்ல. அதை எங்கே நின்று கொண்டு, எப்படி பேசுகிறோம்? இதற்கான விடை காண்பதில்தான் இந்தச் சிக்கல் தீரும். என்னைப் பொருத்தவரை இந்த அறிவுலகச் சிக்கலை ஆதவன் ஒரு கையாலாகாதவனாகப் பேசுவதும் சரிதான். நாம் இன்றிருக்கும் நிலையில். நம்மில் யாரிடம் இந்தக் கேள்விக்கான விடை இருக்கிறது?

தான் படிக்கும் புத்தகங்களையும் பார்க்கும் படங்களையும் தனக்குச் சொந்தமாக்கிக் கொள்ளாத மனம். இவற்றைக் கொண்டு சுயமாக எந்த வெளிச்சத்தையும் காணாத மனம். அதனால்தான் பிரிட்டிஷ் லைப்ரைரியில் இருந்து புத்தகங்களைக் கடன் வாங்கிக் கொண்டு வருவது கேவலமாக இருக்கிறது. காசு கொடுத்து வாங்கியிருந்தாலாவது பரவாயில்லை. அதற்குக்கூட வக்கில்லாமல் இது என்ன ஸால் பெல்லோவும், ஜே.டி. சாலிஞ்சரும்! என்று நினைக்கக்கூடிய மனம்.

நம்மூர் திரைப்படங்களை மெலோட்ராமா என்று கேலி செய்யும் ராமசேஷன் கதையின் முடிவில் அதைத் தேடிச் சென்று ஒரு பாட்டம் அழுகிறான். சப் டைட்டிலுடன் படிப்பது என்பது உண்மையாகவே substitute experienceஆகதான் கடைசி வரை இருக்கிறது, அது ரியலாக எப்போதுமே இருநதிருக்கவில்லை.

“என் பெயர் ராமசேஷன்”, “காகித மலர்கள்” இரு நாவல்களிலும் மரபை மீற முடியாததை உணர்த்தும், மெலோட்ராமாவாகவே அமைந்திருக்கும், ஏமாற்றம் தரும், அதிர்ச்சியான முடிவு மரபும் மாடர்னிட்டியும் சந்திக்கும்போது தொடர்ந்து எழும் சிக்கல்களை மிக அருமையாக- அருமையாக என்று சொல்லும்போது சலிப்பூட்டுமளவுக்கு விவரமாக-அதன் அனைத்து பரிமாணங்ககளையும் உணர்ந்து, அதன் அத்தனை பளுவுடனும் வலியுடனும் ஆதவன் வெளிப்படுத்தினாலும், அதற்கான தீர்வை அவரால் அடைய முடியவில்லை என்பதை உணர்த்துகிறது என்று நினைக்கிறேன்.

மைத்ரேயன்

ஒன்று- கடன் வாங்கிப் படிப்பதை நான் கௌரவமான, அனாவசியக் குப்பையை நம் சிறு வீட்டில் சேர்க்காமல் குறைந்த பட்ச சுமையோடு வாழும் புத்திசாலித்தனமான செயலாகவே நினைக்கிறேன். 🙂 என் ஊரில் உள்ள நூலகத்தை ஒரு பொக்கிஷமாகக் கருதுகிறேன். அதில் காணும் குறைபாடெல்லாம் என் சொந்த வீட்டில் கதவுக் கீல் சாய்ந்தால் எப்படி என்னைப் பாதிக்குமோ அதே அளவு பாதிக்கின்றது. நூலகங்களை மதிக்காது அரசும், மக்களும் இருக்கிறார்களே என்று மிக அவதிப்படுபவன் நான். நான் வாங்கும் புத்தகங்கள் உடனடியாக நூலகத்தில் கிட்டாதவை,அல்லது அடிக்கடி எடுத்துப் படிக்க நான் விரும்புபவை, அல்லது சில நேரம் இப்போது படிக்க வேண்டும் என்று தோன்றி, அது நூலகத்தில் கிட்டும் வரை பொறுக்க முடியாது இருப்பதால் வாங்குபவை. சில அசட்டுத்தனமான செயலாக வாங்குபவை என்று ஒத்துக் கொள்ள எனக்கு வெட்கமே இல்லை.

இது சிற்றூரில் சிறுவனாக இருந்த ஒரே பொது நூலகத்தில் இருந்த அனேகப் புத்தகங்களை வாசித்து விட்டதால், அந்த நூலகர் சில புத்தகங்களை 9ஆம் வகுப்பு மாணவனுக்குக் கொடுக்க மறுத்ததால், அந்த ஊரை விட்டு சென்னைக்குப் போயே தீர்வேன் என்று அடம் பிடித்து மாநகருக்கு நகர்ந்த அன்றைய ஒரு சிறுவனின் இன்றைய நிலை. நூலகங்களே என் வாழ்வின் நங்கூரம். ஆதவன் தீட்டிய பாத்திரம் அத்தனை மன முதிர்ச்சி அற்ற பாத்திரம்.

இரண்டு: எனக்கு சப் டைடிலோடு படங்கள் பார்ப்பது மிகவும் பிடிக்கும். அவை எனக்கு அன்னியமாகவே தெரிவதில்லை. அத்தனை பழகி விட்டது. ஜப்பானியப் படங்களை அமெரிக்க இங்கிலீஷ் பேச்சோடோ, தமிழ்ப் பேச்சோடோ பார்ப்பதுதான் பயங்கர அன்னியத்தனமாக எனக்குத் தெரிகிறது. ஃப்ரெஞ்சு, ரொமானிய, செக், போலிஷ், ஜெர்மன் படங்களையே நான் அதிகமும் விரும்பிப் பார்ப்பது எதனால்? அந்த மொழி உச்சரிப்பும், உடல் பாவங்களும் முக பாவங்களும் ஒத்து இருக்கும் பிம்பங்களோடு அப்படம் ஓடுவதன் இயற்கை நிலை எனக்கு ஒத்து வருகிறது. அந்த ஒத்து வருதல் இல்லாது அப்படங்கள் படு செயற்கையாக எனக்குத் தெரியும். டார்கோவ்ஸ்கியின் படங்களில் வரும் ரஷ்ய மொழி எனக்குப் புரியாதது குறித்து எனக்கு வருத்தமே. ரஷ்ய மொழியில் கேட்கும் ஒரு சங்கீதம் அருமையாக இருக்கும் படம் ஸ்டாக்கர். ஆனால் அதை எழுத்தாகக் குறித்த உரையாடல்களைப் படித்தபடி பார்ப்பது இரண்டாவது நிலை அருமை. இங்கிலீஷாக உரையாடலைக் கேட்டபடி பார்ப்பது மூன்றாம் நிலைதான். மௌனமாகவும் சில நேரம் பார்ப்பேன் அது இன்னொரு நிலை, அது ஒரு படத்தை எப்படித் தொகுத்திருக்கிறார்கள் என்பதைத் துல்லியமாக அறி/ரிய மிக்க உதவியான ஒரு அணுகல். ஒலி இல்லாமல் மௌனப்படுத்தி விட்டுப் படங்களைப் பார்ப்பது என்பது இன்னொரு விதமான அறுவை வழி அறியும் முறை.

இவற்றிலிருந்து பண்பாட்டு தீர்மானங்களை அடைவது உருப்படியான வழியா என்பதில் எனக்கு ஐயம் இருக்கிறது. சரி ஒரு பாத்திரத்தின் அறியாமை, முதிர்ச்சி இன்மை, அல்லது தத்தளிப்பு நிலை என்பனவற்றை ஆதவன் அப்படியே சித்திரித்திருக்கிறார் என்று நீங்கள் சொன்னால் அதை ஏற்க முடியும். ஆனால் இவை ஆதவனின் நிலை என்று ஆனால் அப்போது ஆதவனின் இலக்கிய சாட்சியம் பயனுள்ளதா என்று கேட்க வேண்டி வரும். எழுத்தாளனுக்குத் தன் பாத்திரங்களைத் தாண்டிய அறிவு தேவை. இல்லையா?

(முற்றும்)

இந்த இதழில் வெளியாகியுள்ள ஆதவன் குறித்த பிற படைப்புகள்

புழுதியில் வீணை – http://solvanam.com/?p=21258

பெரிய வீட்டின் ஒரு சிறிய பிறைக்குள்… – ஆதவனை வாசிப்பதில் உள்ள அடிப்படைச் சிக்கல் – ஓர் உரையாடல் – http://solvanam.com/?p=21325

ஆதவனின் புனைவுலகம் – http://solvanam.com/?p=21223

ஆதவனுக்காக… – http://solvanam.com/?p=21303