வெகுளாமை

உங்கள் வீட்டு குளியலறையில் கடிகாரம் இருக்கிறதா? பெரியசாமி வீட்டில் இருக்கிறது. அதற்காக அவர் நேரம் கடைப்பிடிப்பதில் கறாரானவர் என்று அர்த்தமில்லை. இந்த ஃப்ளாட் கிரகப்பிரவேசத்தில் மீந்தவை இட்டிலிகள் மட்டுமல்ல, சுவர் கடிகாரங்களும் கூட.

ஒரு செகண்ட் ஹாண்ட் ஃப்ளாட் கிரகப்பிரவேசத்திற்கு இவ்வளவு பரிசுகள், சுவர்கடிகாரப் பரிசுகள் அவர் எதிர்பார்த்திருக்கவில்லை

ஆனால் இன்று உபயோகப்பட்டது; ஏழு தடவைகள் அடித்து அவர் உள்ளே வந்து இருபது நிமிடங்களுக்கு மேல் ஆனதை நினைவுபடுத்தியது.

இன்று ஒரு முக்கிய தினம், மிக முக்கிய தினம். இன்று லைவ் தினம், டி-டே.

அவர் அணியினர் ‘செய்த’ அப்ளிக்கேஷன் இன்று இங்கிலாந்தில் உள்ள அந்த பிரபல கார் கம்பெனி வேர்ஹவுஸில் உபயோகப்படுத்தப்படும் முதல் தினம்.

கொஞ்சம் இன்னும் விரிவாகச் சொல்லவேண்டும் என்று படுகிறது.

பெரியசாமி ஒரு முன்னணி மென்பொருள் கம்பெனியில் அணித்தலைவராக, புராஜக்ட் மேனஜராக வேலைப் பார்க்கிறார். ரோல் தலைப்புகள் கசாமுசாவென்று இருக்கும். உண்மையான வேலை – ஆப்ஷோர் டீமை மேய்ப்பதுதான். தற்போதைய புராஜெக்ட் ஒரு பிரபலக் கார் கம்பெனி வேர்ஹவுஸில் உதிரிப் பாகங்களை பராமரிக்க செய்யத் தேவைப்படும ப்ரொஜக்ட்.

பெரிய சாமியின் அணியில் கொஞ்சம் பேர் ஆன் சைட்டில் இங்கிலாந்தில் டெகன் ஹாமில் இருக்கிறார்கள். மிச்ச அணியினர் இங்கே, ஆஃப் ஷோரில் சென்னையில் இருக்கிறார்கள்.

கணினி நிரல்களை இங்கேயிருந்து தயாரித்து, இங்கே பரிசோதித்து, ஆன் சைட்டுக்கு அனுப்பி அங்கே அங்கு உள்ள அணியினரும் பரிசோதித்து கஸ்டமர் பக்கமிருந்தும் பரிசோதித்து, பல்வேறு பிரச்சனைகள், எஸ்கலேஷன்களுக்குப் பின் இன்றுதான் லைவ் ஆக எண்ட் யூசர் எனப்படும் வேர் ஹவுஸ் உபயோகிப்பாளர்கள் மென்பொருளை உபயோகப்படுத்தும் நாள். எல்லாம் நல்லபடியாக முடிந்தபின் ஒரு நாள் மைலாப்பூர் கோவிலுக்குப் போக வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்.

பெரியசாமி குளித்து நிதானமாக சட்டையை அணிந்து பேண்ட்டை அணிந்தபின்தான் சட்டை சரியாக அயர்ன் செய்யப்படாமல் பாக்கெட் இருக்கும் பக்கம் நன்றாக கசங்கியிருப்பதைக் கண்ணாடியில் தலை வாரும்போது கவனித்தார். பாக்கெட்டில் ஆரஞ்சு வட்டம், உள்ளே துவைத்து, அயர்ன் செய்யப்பட்ட சாக்லெட் தாள். வேறு அயர்ன் சட்டை இருக்கிறதா என்று பீரோவில் தேடினார். இல்லை.

“என்னாச்சுமா? ஒரு சட்டை கூட அயர்ன் பண்ணலையா?” என்று பீரோவிற்குள்ளிலிருந்து கேட்டார்.

“என்னங்க…கிச்சன்ல இருக்கேன்…கொஞ்சம் இங்க வந்து சொல்லுங்க…?”

இது பொதுவாக ஒரு இயல்பான மனிதருக்கு, தின அலுவலகம் போவோருக்கு, அலுவலகத்தின் முக்கிய தினத்தில் கிளம்பத் தடையிருப்போபோவோருக்கு சட்டென கோபம் வரும் தருணம். ஆனால் பெரியசாமி கோபப்படமாட்டார். கத்தமாட்டார்…அப்படித்தான் அவர் மனைவி – திருமணமாகி ஒன்பது வருடங்கள் ஆகின்றன -– நினைத்துக் கொண்டிருக்கிறார். மேல் ஃப்ளாட்டிற்கு புதிதாய் குடிவந்திருக்கும் ஆந்திர பெண்ணிடம் வரைக்கும் எல்லாரிடமும் சொல்லிக்கொண்டிருக்கிறார். அவருக்கு கோபமே வராது என்று மனைவி மட்டுமல்ல அவரது பெற்றோர்கள், உறவினர்கள், சக அலுவலர்கள் அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

பெரியசாமி வெளியில் காட்ட மாட்டார், அவ்வளவுதான். பெரிய முகம். ஒழுங்கற்ற மீசையும், கிட்டத்தட்ட அதே நிறத்தில் முகத்தை பாதி மறைக்கும் கண்ணாடியும் முக மாற்றங்களை முக்கால் வாசி மறைத்துவிடும். மனைவி அந்தரங்க தருணங்களில் உங்களுக்கு யானை மூஞ்சி, ஒரு உணர்ச்சியும் தெரியவில்லை என்று பல முறைகள் சொல்லியிருக்கிறார்.

இந்த “யானை முகம்” தான் அவரை நிறைய தடவைகள் காப்பாற்றியிருக்கிறது. அவரது வெட்கத்தை, தயக்கத்தை மறைத்திருக்கிறது. சென்னிமலை தமிழ் மீடியத்தின் கூச்சமும் தயக்கமும் பெருந்துறை இஞ்சினியரிங் காலேஜிற்குள் நுழையும்போது அவருக்குள்ளேயே புதைந்திருந்தன. பின்னர் சென்னையில் வேலைக்கென வந்து சென்னைவாசியாக இந்த பதினோரு வருடங்களிலும் வெளியே தெரியாமல் இருக்க இந்த முகமும் உருவமும் – கிட்டதட்ட ஆறடியிருப்பார் – உதவியிருக்கின்றன.

இந்த புராஜெக்ட் ஷெட்யூலை நினைத்தால் பெரியசாமிக்கு வயிறெரிந்தது. ஸேல்ஸ் அணியிலிருந்து எவனோ ஒரு வர்மா முட்டாள் தனமாக இரு மாதங்களில் முடித்துக் கொடுப்பதாக கஸ்டமரிடம் போட்ட கணக்கு, பர்ச்சேஸ் ஆர்டர் வந்தவுடன் அவன் அடுத்த கஸ்டமரைப் கவனிக்கப் போயிருப்பான். இங்கே புராஜக்ட் டெலிவரி செய்பவனுக்குத்தானே தெரியும் எவ்வளவு சிரமமென்று. பெரியசாமிக்கு முதல் இரு நாட்களிலேயே தெரிந்துவிட்டது இது இரண்டு மாதங்களில் ஆகற காரியமில்லை என்று.

சொல்லப்போனால் இவருக்கு மட்டுமல்ல, அந்த கஸ்டமர் – புகழ்பெற்ற கார்க்கம்பெனி பொறுப்பாளர்களுக்கும் தெரியும். அவர்களுக்கென்ன, இது ஃபிக்ஸ்ட் பிட் வேலை. நீ எவ்வளவு ஆட்களை வேண்டுமானாலும் வைத்துக்கொள், வேலையை சொன்ன நேரத்தில் முடித்துக்கொடு, அவ்வளவுதான். (குறிப்பிட்ட நேரத்தில் முடிக்க முடியவில்லை என்றால் அபராதத்துடன்.)

பொதுவாக இது நிரல் துறையில் சகஜம். யாரும் பெரிதாய் பொருட்படுத்தமாட்டார்கள். கடைசியில் டெலிவரி செய்யும் அணிதான் மன்றாட வேண்டும். தாமதத்திற்கு மோட்டார் கம்பெனிக்காரர்கள் பல விதங்களில் காரணமாக இருப்பார்கள். சோதனைச் சர்வர்கள் தயாராக இருக்காது. செய்த நிரலை முறையாக சோதித்துப் பார்க்க அவர்களுக்கு நேரமிருக்காது, விடுமுறை இத்யாதி, இத்யாதி. கடைசியில் என்னவோ பழி இவர்கள் தலையில்தான் விழும்.

எவ்வளவு பிரச்சனைகள், இந்த புராஜக்ட்டில். எஸ்க்லேஷன் என்ற வார்த்தை தகவல் தொழில்நுட்பத் துறையில் உபயோகப்படுவது போல் வேறு எந்தத் துறையிலும் உபயோகப்பட்டிருக்காது. திரும்பத் திரும்ப பிரச்சனைகள், மைல்ஸ்டோன்களைத் திட்டமிட்ட நேரத்தில் அடையமுடியவில்லை, அந்த நேரங்களை, நாட்களை மாற்ற வேண்டும், x தேதியில் முடியாது, y தேதியில்தான் முடியும். பேஸ்லைன் ப்ளான்களை மாற்று. அதற்கு எஸ்கலேஷன். பின் அப்ரூவல். சொன்ன தேதியில் டெலிவரி செய்துவிட்டு நிமிர்ந்தால் டெலிவரி செய்த மாடுல்களில் பிரச்சனைகள், அதற்கு எஸ்கலேஷன். பக்குகளைச் சரி செய்துவிட்டு கொஞ்சம் மூச்சு விட்டால் பர்பார்மன்ஸ் பிரச்சனைகள், செக்யூரிட்டி வயலேஷன். எஸ்கலேஷன், எல்லாம் முடித்து நிமிர்ந்தால் கடைசியில் பிஸினஸிடமிருந்து `நான் கேட்டது இதில்லை, வேறு” தங்கவேல் ஈரோடு மாரியம்மன் திருவிழாவில் கார் பொம்மைக் கேட்டு அழுது கடைசியில் இதில்ல, வேற என்று காலையில் அழுதமாதிரி.

வீட்டைக் கட்டிப் பார், கல்யாணம் பண்ணிப் பார் வரிசையில் கண்டிப்பாய் சாப்ட்வேர் டெலிவரி செய்து பார் என்பதையும் சேர்த்துக் கொள்ள பெரியசாமி மிகக் கடுமையாக சிபாரிசு செய்வார்.

பெரியசாமிக்கு இந்தத் துறையில் கிட்டதட்ட பதினோரு ஆண்டுகளுக்கு மேல் அனுபவம். `பொய்` அனுபவ வருடங்கள் கலக்காமல் முறையாக கேம்பஸ் இண்டர்வியுவில் நுழைந்து முதல் ஐந்து வருடங்கள் புரோக்ராமராகவே இருந்தார், கடுமையாக, அதிகம் பேசாமல் உழைத்தார். மாடுல் லீட், டீம் லீட், ப்ராஜெக்ட் லீட் என்று படிப்படியாக ப்ராஜக்ட் மேனேஜராக மௌன உழைப்பு. இப்போதா, துறைக்கு வருபவர்கள் இரண்டு, மூன்று வருடங்கள் ஆகிவிட்டால் போதும் லீட் பொசிஷன் எதிர்பார்க்கிறார்கள். கோட் அடிக்க மாட்டார்களாம். வளர்ந்துவிட்டார்களாம். மேற்பார்வைதானாம். ராஸ்கல்கள்! ஒரு பக்கை முறையாக ட்ரேஸ் செய்யத் தெரியாது, எதற்கெடுத்தாலும் கூகுளிடவேண்டியது, பத்து நிமிடங்களுக்கு மேல் தேட பொறுமை இல்லை.

ஆனால் மற்ற விஷயங்களில் பங்கு சந்தை, சொந்த வீடு லோன் இந்த மாதிரி விஷயங்களிலெல்லாம் விவரம்…மனதிற்குள் பல்லைக் கடிப்பார்.

இருப்பதிலேயே சுமாராக கசங்கியிருந்த சட்டையை அணிந்துகொண்டு டைனிங் டேபிள் முன் உட்கார்ந்தார். சில நிமிடங்களுக்குப் பின் பிய்ந்து துண்டு துண்டான தோசை வந்து விழுந்தது.

“முதல் தோசைல்ல…”

அப்புறம் வருபவை பிய்ந்திருந்தாலும் அவர் ஒன்றும் சொல்ல மாட்டார் என்று அவர் மனைவிக்குத் தெரியும்.

“அப்பா…இங்க பாரு, பாரு” அவரது ஒரே செல்ல மகன் தங்கவேலு ஓடிவந்தான்.

“என்ன கண்ணு?”

“பல்லு ரொம்ப ஆடுதுபா. இன்னிக்கு விளுந்திடுமில்லை?”

“அப்படியா, ஆ காட்டு பாக்கலாம்”

பழுத்த பிளந்த சீதாப்பழம் போல் பஞ்சான வெண்மைப் பற்கள் ஈறுகளில் பொதிந்து தெரிந்தன. முன் வரிசையில் ஒன்றுதான் இப்போது ஆடிக்கொண்டிருக்கிறது. பையன் பிடித்து இதோ தலையணைக்கடியில் வைக்க காத்துக்கொண்டிருக்கிறான்.

“டூத்பெரி இன்னிக்கு ராத்திரி கண்டிப்பாய் வருமல்ல?” கொங்குத் தமிழும் தளிர் ஆங்கிலமும் கலந்து பேசுவதைக்கேட்க அவருக்கு ரொம்ப பிடிக்கும்.

திருமணமாகி கிட்டதட்ட ஏழு வருடங்களுக்குப் பின் சட்டென உருவாகி சுற்றங்களின் அத்தனை ஏச்சுப் பேச்சுகளுக்கும் முற்றுப் புள்ளி வைத்தான். தாத்தா பெயர்தான் வைக்கப்படவேண்டும் என்பதில் பெரியசாமியின் தாய் போராடி வெற்றிப் பெற்றுவிட்டார்,

கட்டி மோந்தார். பயல் ஒரு மாதிரி ராசியானவன் என்று அவர் கண்டிப்பாக நம்பினார்.

“ஏங்க, மறக்காம அந்த தண்ணி லாரிக்காரனுக்கு போன் பண்ணிடுங்க, இரண்டு நாளா வரேன் வரேன்னு வண்டியையே காணோம். இந்த மாசம் நீங்க தான் அசோசியேட் செகரெட்டரி, ஞாபகம் வச்சுக்குங்க”

வெளியே வந்து அவர் அந்தக் கால ஹீரோ ஹோண்டா ஸ்பெளண்டரை உதைத்தார். இவ்வளவு கடுமையான பிரஷரில் கிளம்பும்போது வண்டி கிளம்ப லொள்ளு பண்ணுமோ என்று நினைத்தார். ஒரே உதையில் ஸ்டார்ட் ஆகிவிட்டது. பக்கத்தில் நிற்கும் மாருதி ஆல்டோ வார இறுதியில் வெளியே போவதிற்குத்தான். ஆபிஸிற்கு தினமும் அதில் போகவர பெட்ரோல் கட்டுப்படியாகாது.

மெதுவாக வெளியே வந்து வண்டியை அணைக்காமலேயே சைட் ஸ்டாண்ட் போட்டு கேட்டைக் கிறீச்சிட மூடி விட்டு தங்கவேலுக்கு பறக்கும் முத்தத்தைத் கொடுத்து வாங்கி வண்டியை கிளப்பி தெரு முனையில் திடீரென்று நினைவு வந்து ஒரு அபார்ட்மெண்ட் வாசலில் ஓரங்கட்டினார்.

மொபைலில் சதீஷ் வரிக்குட்டியை கூப்பிட்டார்.

அபார்ட்மெண்ட் வாசலில் ஏதோ `சில்க்ஸ்`, `ஹிந்தி,வீணை கற்றுத்தரப்படும்’ போர்டுகள், உள்ளே சின்ன எழுத்தில் ஏதோ எண், அபார்ட்மெண்ட் எண்ணாக இருக்கவேண்டும்.
கேட்டைத் திறந்து ஒரு வயதானவர், காக்கிச் சட்டையை வேட்டிக்கு மேல் அணிந்திருந்தார்- .

“தள்ளிப் போங்க, கேட்டுக்கு முன்னாடி நிறுத்தக் கூடாது”

இதோ கிளம்பறன் போல சைகை செய்தார்.

“எல்லாரும் வந்தாச்சா?”

“யெஸ், ரெடியாக இருக்கோம்”

“வெரி குட்…இதோ வந்துக்கிட்டே இருக்கேன். அபே போன் பண்ணினானா?”

“இன்னும் இல்லை…”

“ஓகே…ராஜுக்கிட்ட அந்த ஆக்சஸ் ஷீட்டை…”

“வந்து…ராஜு இன்னும் வரலை”

பெரியசாமிக்கு திக்கென இருந்தது. ராஜு அவரது சீனியர் டீம் லீடர். காலை நிறைய வேலைகள் இருக்கின்றன. அவன் ரொம்ப சின்சியர் ஆச்சே…

பக்கத்தில் வெங்காயத்தோல் பறந்தது. அநிச்சையாக. போனைக் காதில் வைத்துக் கொண்டே திரும்பிப் பார்த்தார்.

காம்ப்வுண்ட் சுவர் குப்பைக்க்கூடையை உள்ளிழுத்துக் கொண்டது. குப்பை இவருக்குப் பின்னால் கொட்டப்பட்டிருக்க வேண்டும்.

“ஏங்க, சொன்னா கேக்க மாட்டிங்களா, கார்லாம் வெளிய வரப்போகுது” காக்கித் தாத்தா இப்போது மெதுவாக கேட்டைத் திறந்தார்.

போனைக் ஒரு கையால் போனைக் காதில் வைத்துக் கொண்டே இன்னொரு கையால் சற்றுத் தூரம் தள்ளிச் சென்று தெரிந்த முதல் நிழலில் நிறுத்தினார். இந்தக் காலை கட் செய்துவிட்டு ராஜுவிற்கு அடித்தார். ரிங் போய்க் கொண்டே இருந்தது. சுறுசுறுவென ஏறிக்கொண்டே இருந்தது. அந்த மர நிழலில் இளநீர் தள்ளு வண்டி பக்கத்தில் இளநீர்க்காரி அடுக்கி வைத்துக் கொண்டிருந்தாள். கண்கள் அனிச்சையாக பக்கத்தில் இருந்த குழந்தையைக் கவனித்தன. கையில் பெரிய தட்டு, ரசமோ, குழம்போ தெரியவில்லை அண்ணாந்து துளி கூட சிந்தாமல் குடித்துக்கொண்டிருந்தது. தங்கவேல் வயதுதான் இருக்கும். சாப்பாட்டுத் தட்டை வைத்துதூக்கிக் கொண்டு அவனைத் துரத்திக் கொண்டிருக்க வேண்டும்.

ம்ஹூம், எடுக்கவில்லை. காதோரம் வழிய ஆரம்பித்திருந்த வியர்வைக் கம்பியைக் கூடத் துடைக்காமல் ஹெல்மெட்டை மாட்டிக்கொண்டு வண்டியை கிளப்பினார்.

அலுவலக பேஸ்மெண்டில் பார்க் செய்துவிட்டு அங்கிருந்தே லிப்டில் ஏறி நான்காம் மாடியில் திறந்து வெளியேற எத்தனித்த போது அவரது யுனிட் டெலிவெரி தலைவர் ஜாய்தீப், கூடவே ஒரு ஸ்லீவ் லெஸ், பாப், வெளு வெளு நடுத்தர வயது பெண்.

“மீட் பெரியசாமி, எனது வலது கைகளில் ஒன்று” என்று அறிமுகம் செய்தார். கை குலுக்கும்போது அவர் “ஷோபா” என்றாரே தவிர வேறு ஒன்றும் சொல்லி அறிமுகப்படுத்திக் கொள்ளவில்லை.

பெரியசாமி கொஞ்ச நேரம் அசடு, வியர்வை எல்லாம் கலந்து வழிய நின்றார்.
அவர்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டார்கள். சிரித்துக்கொள்ளவில்லைதான். இருந்தும் புரியாததும் லாஞ்ச் டென்ஷனும் சேர காலை மாற்றி நின்றார்.

“பெரிய சாமி ரொம்ப சின்சியர். காலையில் உள்ளே வந்தாரானால் இரவு எத்தனை மணிக்குத் திரும்புவார் என்பது அவருக்கே தெரியாது. இவரை மாதிரி ஆட்களால்தான் கம்பெனி ஓடுகிறது” அந்தப் பெண்மணியைப் பார்த்தவாறே ஜாய்தீப்.

ஆமாம், பிரபா ஒயின்ஸ் ஓனர் மாதிரி. ராத்திரி கடைசி ஆளா நான்தான் ஷட்டரை சாத்துவேன் என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டார்.

நல்ல காலம், லிப்ட் மறுபடியும் திறந்து அவர்களைக் கவர்ந்தவுடன் பெரியசாமி லேப்டாப் பேக்கையும் சாப்பாட்டு பையையும் எடுத்துக் கொண்டு டீம் ரூமிற்கு விரைந்தார்.
கண்ணிற்கு தெரியாத பதற்றமும் ஏசியும் நிறைத்திருந்தன.

அனைத்து டீம் மெம்பர்களும் காத்திருந்தார்கள், ராஜு சீட் காலியாக இருந்தது.

“அபே வந்துட்டானா?”

“இன்னும் இல்லை”

லாஞ்சிற்கு இன்னும் நேரம் இருந்தது, இருந்தாலும் இந்த அபே வர்மா பயல் முன்னாடியே வந்துவிடுவான். இந்த பஞ்சாபிதான் இவர்கள் அணியின் ஆன்சைட் கோ-ஆர்டினேடர்.
பெரியசாமியை விட குறைந்தது ஐந்தாறு வருடங்களாகவாவது வயது குறைவானவன். அனுபவத்தில் இவர் பக்கத்தில் கூட வரமாட்டான். இவனது வேலை இங்கு சென்னை அணிக்கும் அங்கு லண்டன் அணி, முக்கியமாக கஸ்டமர் பக்கத்து டெக்னிக்கல் மற்றும் பிஸினெஸ் அணிகளுக்கும் பாலமாக இருப்பது. ஆனால் கஸ்டமரை விட பெரிய தலைவலி இவனைச் சமாளிப்பதுதான். அவர்கள் தேவையில்லை என்று சொன்னால் கூட இவன் ஒத்துவர மாட்டான். க்வாலிட்டி டெலிவரியாம்.

இவன் பேசி முடிக்கும்போதெல்லாம் பெரியசாமி மனதில் பெரிய பருப்பு என்ற வார்த்தைகள் தோன்றிக் கொண்டே இருக்கும். ஆனால் எதிர்த்துப் பேச மாட்டார். மிஞ்சிப் போனால் ஆடியோவை ம்யுட்டில் வைத்துவிட்டு “வீ நீட் திக் ஸ்கின் யா” (we need thick skin yaar) என்று தத்துவத்தைத் தன் அணியிடம் உதிர்ப்பார். அல்லது என்ன பெரிய லண்டன், பளைய சோறு திங்கறவங்கதானே என்று சமாதானப்படுத்திக் கொள்வார்.

சரியான நேரத்தில் லாஞ்ச் ஆடியோ பிரிட்ஜ் ஆரம்பித்து அங்கே லண்டனில் ஒவ்வொருவராக சேர்ந்து கொண்டிருந்தார்கள்.

முதல் ஒரு மணி நேரம் எதிர்பார்த்தபயப்பட்ட மாதிரி இல்லாமல் ஓட வேண்டிய இனிஷியேட் பாட்ச் எல்லாம் ஓடி பிரச்சனையில்லாமல் போய்விட்டது. யூசர்ஸ் ஒவ்வொருவராக உபயோகிக்க ஆரம்பித்திருந்தார்கள். பெரியசாமி இன்னும் சில விவரங்களை வெரிபிகேஷன்களைச் செய்து எங்கும் ‘வெடிக்கவில்லை’ என்று உறுதி செய்துகொள்ள முயன்றார். ஓரளவிற்கு மேல் சதீஷ் வரிக்குட்டியால் முடியவில்லை. இன்னும் சில கொரிகள் எல்லாம் ரன் செய்துப் பார்க்கவேண்டும், அதற்கு ராஜு வேண்டும்…எங்கே ராஜூ?

“வரிக்குட்டி, ட்ரை ராஜு அகய்ன்’

இதற்கிடையில் அபே வந்து சில விவரங்கள் கேட்டான், உடனே வேண்டுமென. அவனுக்கு டேட்டா பேஸ், சர்வர் என்று எல்லா ஆக்சஸும்  இருக்கிறது, அவனே தேடி எடுத்துக்கொள்ளலாம். ஆனால் தேட அறிவு வேண்டுமே, அது அவனுக்கு கிடையாது. பல்லைக் கடித்துக்கொண்டு வரிக்குட்டியிடமும் நாகலட்சுமியிடமும் இந்த விஷயங்களை தரச் சொல்லிப் பணித்தார்.

இப்போது ஆடியோ பிரிட்ஜில் கிரிஸ் என்னும் கிரிஸ்டோபர் வந்துவிட்டான். தடிக்குரலில் ஸ்டேடஸ் அப்டேட் செய்ய ஆரம்பித்தான். இந்த கருப்பரை பெரியசாமி லண்டன் போயிருந்தபோது சந்தித்திருக்கிறார். மிகவும் பொறுமைசாலி. என்ன பிரச்சனையென்றால் கிரிஸ்ஸின் உச்சரிப்பு. பல் டாக்டர் ஈறில் மரத்துப்போக ஊசி குத்தி கொஞ்ச நேரத்திற்கு உதடு பிரமாண்டமாக தடித்த மாதிரி உணரும்போது பேசினால் எப்படியிருக்குமோ அப்படியிருக்கும் கிரிஸ்ஸின் தடித்த மரத்துப்போன உச்சரிப்பு.

லண்டனிலிருந்த மூன்று வாரங்களில் சந்தித்த அனைத்து கருப்பர்களுமே இப்படி பேசியதாகத்தான் பெரியசாமிக்குப் பட்டது. அபேயிடம் கேட்க தயக்கமாக இருந்தது.

லண்டனில் அவனிடம் இயல்பாகவே இருக்க முடியவில்லை. அவனிடம் மட்டுமல்ல, லண்டனே அவருக்கு ஒரு சங்கடமான ட்ரிப்தான். இங்கே, சென்னிமலையிலும் சென்னையிலும் பந்தாவாக சொல்லி கிளம்பியாயிற்று. கம்பெனி எப்போதும் போல சிக்கனமான ஏர்லைன்ஸ்களுடன் பயண நிரல்.

சென்னையிலிருந்து ப்ராங்க்பர்ட் அங்கிருந்து லண்டன். ஏர்போர்ட்டே பொக்கென்று இருந்தது. குட்டி ஏர்போர்ட் லண்டன் சிட்டி ஏர்போர்ட்டாம். எல்லாரும் ஆங்கிலம்தான் சத்தமாகத்தான் பேசினார்கள். ஆனால் நிறைய புரியவில்லை. திரும்ப கேட்காமல் தலையை மையமாக ஆட்டி வைத்தார். திரும்பும்வரை ஆட்டிக்கொண்டே இருந்தார்.

கஸ்டமர் தலைமை அலுவலகம் சென்ட்ரல் லண்டனில் இருந்தது. அதற்கு ஒரு வாரம் போகவேண்டியிருந்தது. அபே இவர் கையில் ஒரு லண்டன் ட்யூப் மேப்பை கொடுத்து, போய் வா, என்றுவிட்டான். மேப்பா, அது ஏதோ எலக்ரானிக் சர்க்யூட் போல இருந்தது. சரியான வழி, மாற வேண்டிய ட்ரெயின்கள் தெரிய இரு நாட்கள் ஆயிற்று, மூன்றாம் நாள் சிரமமில்லாமல் இருந்தது. நான்காம் நாள் ட்யூப்களில் ஏதோ பிரச்சனை, ரூட் மாறவேண்டியிருந்தது. சாப்பாடும் பெரிய பிரச்சனைதான். இரு நாட்கள் பிரட் எல்லாம் வைத்து சமாளித்தாயிற்று. அப்புறம் அவஸ்தை. வாரக்கடைசியில் ஈஸ்ட் ஹாமில் சென்னை தோசா என்ற ஓட்டலைப் பார்த்தபோது அவருக்கு அழுகையே வந்துவிட்டது என்று சொன்னால் யாரும் நம்பப்போவதில்லை.

இங்கிலாந்தில் அவரைக் கவர்ந்தவை என்றால் அவை பார்பிப்பொம்மை குழந்தைகளும் பொதுவாக காணப்பட்ட மதர்த்த மார்பகங்களும் மட்டும்தான். பரம்பரை பரம்பரையா உருளைக்கிழங்குகளும் வெண்ணையும் திங்கறாங்கள்ல, அதான் என்று எண்ணிக்கொண்டார்.

“வரிக்குட்டி, ராஜு?’

“நோ பெரியசாமி”

இப்போது கிரிஸ் ஒரு சில யூசர்ஸ் ஏதோ குறை சொல்கிறார்கள், என்ன என்று பார்க்கிறேன் என்று ஆடியோவிலிருந்து போய்விட்டான். பெரியசாமிக்கு திக்கென இருந்தது.

என்ன பிரச்சனை, ஒன்றும் தெளிவாகத் தெரியவில்லையே….

அபேயிடம் கேட்டுப் பார்த்தார். அவன் பக்கத்தில் யாரிடமோ சிரித்தவாறே கிரிஸ் வரட்டும் என்றான். இவனும் கிரிஸ் கூடப் போய்ப் பார்த்தால் என்ன, ராஸ்கல், சோம்பேறி.

பெரியசாமி மெல்ல தன்னுடைய ஸீட்டில் சாய்ந்தார். மனம் கிரிஸ்ஸிடமே இருந்தது. கண்கள் மட்டும் கான்ப்ரன்ஸ் போனைச் சுற்றி உட்கார்ந்துக் கொண்டிருந்த அணியினரிடம் பட்டு அலைந்தன. முழங்கைகளை மேஜையில் முட்டுக் கொடுத்துக் கொண்டிருந்த பரூல் – முழங்கை முட்டுகளில் வெள்ளையாய் ஏதோ படரல். அங்கேயெல்லாம் எண்ணெய் தேய்க்காது போல இந்தப் பெண்…
ஆடியோ உயிர்ப் பெற்றது. கிரிஸ்தான். ஒன்றும் விஷயமில்லை, அந்த யூசர்களுக்கு அப்ளிக்கேஷனை உபயோகிக்கத் தெரியவில்லை, நான் சொல்லிக் கொடுத்துவிட்டேன், இப்போது எல்லாம் ஓகே.

அப்பாடா என்று இருந்தது பெரியசாமிக்கு.

அணியினரிடம் லன்ச் முடித்துவிட்டு வரச்சொல்லி பணித்தார். வரிக்குட்டி “நீங்க?” என்றான்.

“நீங்க போய்ட்டு வாங்க, அப்புறம் நான் போறேன், எல்லாரும் ஓரே சமயத்தில் போனா அப்புறம் இங்க யாரு இருப்பா?”

அவசரமென்றால் அபே மொபைலில் கூப்பிடுவான், இருந்தும் அவருக்கு மனமில்லை.
என்னாச்சு ராஜுவிற்கு? அவரைப் பொருத்தவரை அவன் ஒரு சரியான கண்டுபிடிப்பு. ரொம்ப நிதானமானவன். எந்த பிரச்சனையென்றாலும் சட்டென முடிவு கூற மாட்டான். மிகச்சின்ன விஷயமானாலும் தேவையான இம்பாக்ட் அனலைசிஸ் செய்து அப்புறம்தான் அவனிடமிருந்து பதில் வரும். சரியான, பொருத்தமான தீர்வு. ஆனால் உடனே வராது. கொஞ்சம் நேரம் எடுத்துக்கொள்வான். சில அர்ஜெண்ட் விஷயங்களுக்கும் கூட. அவனிடமிருந்து பதில் வரும்வரை பெரியசாமியே எல்லா டென்ஷனும் பட்டுக்கொள்வார்.

பெரியசாமிக்கும் ராஜுவிற்கும் சரியான அண்டர்ஸ்டாண்டிங்க் இருந்தது.

சில முக்கிய மீட்டிங்களில் சரியான நேரங்களில் கை கொடுப்பான். அவனை கட்டிக் கொண்டு முத்தம் கொடுக்கவேண்டும் என்று தோன்றும் தருணங்கள்…மெல்லிய புன்னகையுடன் பெரியசாமி அவன் தோளைத் தட்டிக் கொடுப்பார்.

சில சமயம் அவனது நோட்பேடில் ஒரு சில தமிழ் பாராக்களையும் கவனித்திருக்கிறார். கவிதைகளாம். கிழட்டுக் காக்கை, மரம், அகம், அகண்டவெளி, ஆழி, இன்னும் என்ன என்னவோ. அவருக்கு ஒன்றும் புரியாது. வேலை செய்யும் போது என்ன கவிதை, வெங்காயம், இருந்தும் ஒன்றும் சொல்லமாட்டார். அவருக்கு வேலை நடந்தால் சரி.

இன்று என்ன ஆச்சு? அவன் லேண்ட் லைன் எண் எங்கிருக்கிறது? டீமிடம் கேட்க வேண்டும்.

இப்போது ஆடியோ பிரிட்ஜ் மறுபடியும் உயிர் பெற்றது. கிரிஸ்.

தடித்த குரலில் மேலும் சில யூசர்ஸ் பிரச்சனை சொல்கிறார்கள், போய்ப் பார்த்துவிட்டுச் சொல்கிறேன் என்றான்.

பெரியசாமியை மெல்ல மெல்லிய திகீர் படலம் சூழ்ந்துக் கொண்டிருந்தது. என்ன பிரச்சனையென்று கொஞ்சம் சொன்னால்தான் என்ன? முந்தின தடவையே சொல்லியிருந்தால் இங்கேயும் என்ன என்று பார்த்துக் கொண்டிருந்திருக்கலாமே, சே…

பெரியசாமியை நிறைய நேரம் காக்க வைக்கவில்லை கிரிஸ்.

யூசர்களால் அப்ளிக்கேஷனின் எந்த புதிய செஷனையும் ஆரம்பிக்க முடியவில்லை…

அப்படியா? பெரியசாமி அவருக்கு இருந்த ஒரு லைவ் ப்ரோடக்சன் சோதனை (யூசர் க்ரடன்ஷியல்) வைத்துக்கொண்டு புது பிரவுசரில் லாகின் செய்ய முயன்றார்.

முடியவில்லை! எர்ரர் பேஜ் தீர்மானமாக வந்து நின்றது.

என்ன ஆச்சு?

குக்கீஸ் எல்லாம் கிளியர் செய்து கொண்டு நம்பிக்கையோடும் இல்லாமலும் புது பிரவுசரில் முயன்றார். தெளிவான Oracle application server default error page…

கிரிஸ் ஏற்கனவே உபயோகித்துக்கொண்டிருக்கிற யூசர்களுக்கும் பிரச்சனைகள் போல இருக்கிறது என்றான்.

எல்லா லோட் டெஸ்டிங், மட்டை டெஸ்டிங்கெல்லாம்தான் ஸ்டேஜ்லியே செய்தாயிற்றே?

க்ளஸ்டர் என்விரான்மெண்ட்னாலயா? இந்த பிரச்சனையால் அந்த க்ளஸ்டர்ல உள்ள மற்ற அப்ளிக்கேஷன்கள் எல்லாம் படுத்துக்க போகிறது? ல்சர்வர் கிராஷாகிட போகிறது?

இரு, இரு உடனே எங்கயோ போகாதே என்று பெரியசாமி தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டார்.

இவர் கடந்துவந்த அத்தனைக் கேள்விகளையும் அபே ஆடியோவில் கடகடவென்று கேட்டான்.

இருடா ராஸ்கல்! அங்கே கஸ்டமர் எல்லாரையும் இவனே கலவரப்படுத்திவிடுவான் போல இருக்கிறதே, பாவி.

தனது இத்தனை வருட அனுபவங்களையும் உபயோகப்படுத்தி நிதானமாக ஆரம்பிக்க முயற்சித்தார். எனக்கு இன்னும் இருபது நிமிடங்களில் ஸ்டேடஸ் அப்டேட் வேண்டுமென்றான் அபே.

அவனும் என்ன பிரச்சனை என்று அவன் பக்கத்திலிருந்து பார்க்கலாம், பார்க்கவேண்டும். ஆனால் மாட்டான், ஆப்ஷோரிடம் ஸ்டெடஸ் வாங்கி, கஸ்டமரிடம் அப்டேட் செய்வது மட்டுமே செய்வான். இப்போது இவனைக் கவனிக்க நேரமில்லை. பிரச்சனையைப் பார்ப்போம்…

முழுப் பிரச்சனை என்ன என்று புரிய பத்து நிமிடம் ஆனது. இந்த புது ஆரக்கிள் அப்ளிகேஷன் சர்வர் வெர்ஷன் ஒரு நூற்று ஐம்பது செஷன்களுக்கு மேல் அனுமதிக்க மறுக்கிறது.

இன்னும் அரை மணி நேரத்தில் அட்லீஸ்ட் ஐம்பதிலிருந்து நூறு யூசர்கள் அப்ளிக்கேஷனை உபயோகிக்க வேண்டிவரும் – பீக் பிசினெஸ் அவர். ஆளுக்கு குறைந்தது மூன்று செஷன்கள் என்று வைத்துக் கொண்டால் கூட இன்னும் முந்நூறு செஷன்கள்…

பெரியசாமிக்கு இப்போது நன்றாக வேர்த்தது. இடையில் மொபைல். டெலிவரி ஹெட். எஸ்கலேஷன்! அதற்குள் விஷயம் மேலே போய் கேட்கிறார். அவருக்கும் இன்னும் இருபது நிமிடங்களில் ஸ்டேடஸ் வேண்டுமாம். எல்லாருக்கும் ஸ்டேடஸ் வேண்டும். முதல்ல வேலை செய்யவிட்டால்தானே ஸ்டேடஸ் வரும்…பாவிப்பசங்க.

மொபைல் அழைத்தது. தளபதி பட ட்யூன் நாராசரமாய் ஒலித்தது. மனைவி. கிரைண்டர் பிண்னணியில் “ஏங்க இன்னும் தண்ணி லாரி வரலையே, அவனுக்கு போன் பண்ணிங்களா இல்லையா?”

பல்லைக் கடித்துக்கொண்டு “இல்லமா, கொஞ்சம் பிசியா இருக்கேன், நீயே பண்ணினா என்ன?”

“அதுகூட செய்யாமதான் உங்ககிட்ட சொல்றனா? ரிங் போயிகிட்டே இருக்கு. நீங்க ஆபிஸ்ல யாரோ இன்னொரு நம்பர் வச்சிருக்காங்கன்னு சொன்னிங்கள்ல. டேங்க்ல பொட்டுத் தண்ணி கிடையாது, நா இப்ப என்ன பண்றது”

“ரொம்ப முக்கியம்”- இப்போ…நாகலட்சுமிக்கு எல்லாம் கேட்டுக் கொண்டிருக்கும்…பல்லைக்கடித்துக் கொண்டார்…

கைகள் மெல்ல நடுங்க, ஆச்சரியப்பட்டுக் கொண்டே மானிட்டரில் கவனம் செலுத்த ஆரம்பிக்கையில் மறுபடியும் மொபைல்.

ராஜூ!

“எங்க இருக்கிறிங்க ராஜு?” மெதுவான குரலில்தான் கேட்டார்.

“கொஞ்சம் பிரச்சனை பெரியசாமி. இங்க கொஞ்சம் வரமுடியுமா?” வழக்கமான நிதான குரல்தான். இருந்தும் நடுங்குவதாக தோன்றியது.

“இங்கன்னா?”

“நந்தனம் சிக்னல் கிட்ட…ஒரு பெட்ரோல் பங்க் இருக்கில்ல, அதுகிட்ட…ப்ளீஸ் கொஞ்சம் வர முடியுமா?”

என்ன விளையாடுகிறானா?

பேசிக்கொண்டிருக்கும்போதே மெயில்கள் குவிந்துகொண்டிருந்தன-

கஸ்டமர் கிரிஸ் அதைத் தொடர்ந்து அபே – பிரச்சனையின் தீவிரத்தை உலகத்திற்கே அறிவித்து பெரிய பான்ட்களில், ராஸ்கல் இத்தனை நேரம் இந்த அலங்கார இமெயிலுக்கு செலவு செய்த நேரத்தை பிரச்சனைக்கு செய்திருக்கலாம்.

தொடர்ந்தவாறே டெலிவரி ஹெட்டின் மெயில்.

போன் பேசிக்கொண்டிருக்கும்போது மெயில்கள் படிக்கக்கூடாது. கவனம் மெயில்களுக்கு பதில் அளிப்பதில் சென்றது.

“என்னால முடியாது ராஜு. சீக்கிரம் ஆபிஸ் வாங்க, பிரச்சனை தலைக்கு மேல் போய்ட்டிருக்குது” என்று போனை வைத்துவிட்டார்.

ராஜு, தண்ணி லாரிக்கு போன், அடுத்த வாரம் தங்கவேலின் பிறந்த நாளிற்கு துணி எடுக்கணும், லன்ச் எல்லாவற்றையும் மறந்துவிட்டார்.

அடுத்த அரை மணி நேரத்தில் பிரச்சனையை சோதனை சர்வரில் ரிப்ளிக்கெட் செய்யமுடிந்தது. Oracle TAR உதவியை ரெய்ஸ் செய்தார். இதற்கிடையில் மற்ற யூசர்களிடமிருந்து மற்ற வேறு பிரச்சனைகள் தொடர்ந்த வாறே இருந்தன.

இஷ்யூ லாக்கைஐ பார்த்ததில் கிட்டத்தட்ட இருபதிற்கு மேல். அதில் பதினைந்து க்ரிடிகல். பிரச்சனைக் கடலில் ஐந்து மைல் ஆழத்தில் அவர், கம்பனி, பிராஜக்ட்…

இரவு கிட்டத்தட்ட ஒன்பது மணி நேர ஸ்டேடஸ் இப்படி இருந்தது:

மொத்த இஷ்யூ லாக்: 32
ஒப்பன்: 22
க்ளோஸ்ட்: 10
க்ரிட்டிகல்: 7

செஷன் பிரச்சனைக்கான காரணம் கிட்டத்தட்ட தெரிந்துவிட்டது. கஸ்டமர் க்ளஸ்டர் என்விரான்மெண்ட்டில் சில பாரமீட்டர்கள் மாற்றவேண்டிவரும். ஆனால் அதற்கு அவர்கள் ஆர்கிடெக்ட் போர்ட், செக்யூரிட்டி சாம்பியன் இன்ன பிறரிடம் அனுமதி வாங்கவேண்டும். அபே அதற்கு இன்னும் சில நாட்களாகுமென்றான்.

டெலிவரி ஹெட்டிடம் போனில் அப்டேட் செய்துவிட்டு – ஒரே நாளில் பத்து இஷ்யூகளை க்ளோஸ் செய்தது பற்றி பாராட்டவில்லை. அதெப்படி லைவ்வில் இவ்வளவு இஷ்யூகள் முளைத்தன, டெஸ்டிங்கில் ஏன் வரவில்லை, டெஸ்டிங் டீம் என்ன செய்துகொண்டிருந்தது இத்யாதி, இத்யாதி…

போனை ஆயாசமாக வைத்தபோது நாகலட்சுமி கேட்காமலேயே காப்பி கப்பை முன்னர் வைத்தாள்.

“தேங்க்ஸ் நாகா. நீங்க கிளம்புங்க, ஹாஸ்டல்ல பிரச்சனையாகிடப்போகுது”

“காலைல சீக்கிரம்..சொல்ல வேண்டியதில்லை”

அனைவரும் ஒன்றன்பின் ஒன்றாக போனார்கள்.

வரிக்குட்டி மட்டும் நின்றுகொண்டிருந்தான்.

கண்ணாடியை களைந்து துடைத்தவாறே “என்ன வரிக்குட்டி?”

“ராஜூக்கிட்ட பேசினேன்”

“ஆமாம், மறந்தே போச்சு, என்ன ஆச்சு?”

“பெரிய பிரச்சனைங்க…”

ராஜுவின் குரலில் இருந்த நடுக்கம் நினைவிற்கு வந்தது.

ராஜு காலையில் பைக்கில் அலுவலகம் வந்து கொண்டிருந்திருக்கிறான். நந்தனம் சிக்னலில் மஞ்சள் விழுந்தவுடன் அவசரமாக கிளம்பியதில் இன்னும் ரோட்டின் முனைக்கு வந்து சேராத பாட்டி மேல் மோதியிருக்கிறான். பாட்டி பிளாட்பார்ம் மேடையில் பின் மண்டை அடிக்க விழுந்திருக்கிறார். பாட்டிக்கு அங்கேயே நினைவு தப்பிவிட்டது. தடதடவென்று கூட்டம், போலிஸ் எல்லாம் சூழ ராஜுவின் நிலையை கற்பனை செய்து பார்க்க முடிந்தது. எப்படிப்பட்ட கணம். பெரியசாமி அந்த நேரத்தில் ராஜுவுடன் இருந்திருக்க வேண்டும். அதற்குத்தான் கூப்பிட்டிருக்கிறான். அந்த முக்கியமான நேரத்தில் அவர் கூட இல்லை …

பாட்டியின் அடையாளம் தெரியவில்லை. சென்ட்ரலுக்கு எதிரிலிருக்கும் பொது மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். ராஜு இன்னும் அங்குதான் இருக்கிறான்…

பின்னால் ஆளரவம் கேட்டது. செக்யூரிட்டி “ஸார், நைட் இங்கதானா?” என்று விசாரித்தார்.

“இல்லைங்க, இதோ கிளம்புறோம்” என்று கொச்சைத் சித்தூர் தமிழில் வரிக்குட்டி சொன்னான்.

பெரியசாமி தளர்வாய் எழுந்தார். மானிட்டர்களை, அறை விளக்கை அணைத்து, லிப்டில் கீழே வந்து பைக்கை ஸ்டார்ட் செய்யும்வரை காதில் போன் இருந்தது, மனைவி மட்டுமே பேசிக் கொண்டிருந்தார்.

பெரியசாமிக்கு எதுவுமே கண்ணில், காதில் படவில்லை. தண்ணி லாரி இன்றைக்கு வராதது, மொபைல் போனின் எதிர்பாராத பில் அமௌண்ட், மதியத்திலிருந்தே பெய்து கொண்டிருந்த மழை, புழுக்கத்திற்கு பதிலாய் அருமையான காற்று, மழைக் குட்டைகள், சகதிகள், எல்லா வாகனங்களும் நடு ரோட்டிலியே சென்றன, பசி, அடுத்த நாள் முக்கிய செஷன் இஷ்யூ மற்றும் அனைத்து க்ரிடிகல் இஷ்யூகளுக்கு தீர்வு கிடைக்குமா, கம்பெனிக்கு அடுத்த புராஜெக்ட்… எதுவுமே படவில்லை.

மெல்ல சேறு அப்பிய வண்டிச் சக்கரங்களும் பேண்டும் ஷூவுமாக காம்ப்வுண்ட் கதவைத் திறந்த போது பசி உச்சத்திற்கு போயிருந்தது. பார்க்கிங் லைட் எரியவில்லை. ரெண்டாவது அடியில் ஷூவில் ஏதோ நசநசத்தது. லேசாக நொண்டிக் கொண்டே தெருவிளக்கு வெளிச்சத்தில் பார்த்தார். நத்தையாக இருக்கவேண்டும்.

சட்டென துக்கம் கவிழ்ந்தது.

பக்கத்து பிளாட்டில் இந்த நேரத்திலும் ரைஸ் குக்கர் விஸில், கூடவே மொபைல் அழைப்பும் பிரமாண்டமாய் கேட்டது.

ஜிஹெச்சிலிருந்து வரிக்குட்டி. அந்தப் பாட்டி நினைவில்லாமலேயே இறந்துவிட்டார். கூட வைத்திருந்த மஞ்சள் பையிலிருந்து உறவுகளை கண்டுபிடித்து ரெட் ஹில்ஸ் பக்கத்திலிருந்து ஆட்கள் வந்துகொண்டிருக்கிறார்கள். ஒரு சில நிமிடங்கள் காம்ப்வுண்ட் சுவரில் சாய்ந்துகொண்டு ராஜுவின் முகம் எப்படியிருக்கும் என்று யோசிக்க முயற்சித்தார்.

நத்தை ஷூவுடன் ப்ளாட்டில் நுழைந்து சாக்ஸ்களைக் கழட்டினார். தங்கவேலு “அப்பா, எனக்கு பல் ஸ்கூலிலேயே விழுந்திருச்சு” என்றவாறே பின்னால் கழுத்தைக் கட்டிப்பிடித்தான். வாழைப்பழ வாசனை அடித்தது.

அவர் கண் முன் அவனது பிஞ்சு விரல்களில் நகங்களுக்கு நடுவில் உடைந்த பலப்பத் துணுக்காய் தளிர்பல்.

பெரியசாமி வேகமாக திரும்பி, தனது பெரிய பரம்பரை விவசாயக் கரங்களால் அபேயை, இந்த புராஜக்ட் கான்ட்ராக்ட் சைன் செய்தவரை, விப்ரோவில் எல்லா இண்டர்வியுக்களையும் க்ளியர் செய்தும் கடைசியில் ஒரு சப்பைக் காரணத்திற்காக ஆபர் லெட்டர் தர மறுத்த அந்த ஹெச்ஆர் பெண்ணை, நந்தனம் சிக்னல் டைம் செட் செய்தவரை, ஆரக்கிள் டெவலப்மெண்ட் டீமை செவிட்டில் அறைந்தார்.