புழுதியில் வீணை

ஆதவன் எழுதிய நாடகம் ‘புழுதியில் வீணை’. அந்த நாடகத்திற்கு அவர் எழுதிய முன்னுரை இங்கு அளிக்கப்படுகிறது.

ஒரு பிரபல விவாதத்தை நினைவூட்டிக் கொண்டுத் தொடங்குவோம்.

“பாரதியார் தேச பக்தராக வாழ்க்கையைத் துவக்கி, கவியாக மலர்ந்து, இறுதியில் பக்குவமான வேதாந்தியாகப் பழுத்ததாக” ராஜாஜி தெரிவித்த கருத்து; இக்கருத்தை வ.ரா. எதிர்த்து, “பாரதியாரை வேதாந்தச் சிமிழில் போட்டு அடைக்க வேண்டாம்” என்று எழுதியது. இரண்டு கருத்துக்களுமே பாரதி பற்றின இரு பரிச்சயமான அணுகுமுறைகளைப் பிரதிநிதித்துவப் படுத்துபவை.

b

“தேச பக்தராக இருந்து வேதாந்தியாகப் பழுத்ததாக”ச் சொல்லும்போது ராஜாஜி தன்னைப் பற்றியே- எதிர்கால நோக்கில் கூறிக் கொண்டது போலிருக்கிறது. ராஜாஜி ‘நல்லெண்ணத்துடன்தான்’ சொல்வதாக வ.ரா. ஒப்புக் கொள்கிறார். எனினும் இந்த ‘நல்லெண்ணமே’ அவரை உசுப்பி விட்டு விடுகிறது. பாரதியின் புதுவை சகாப்தம் முழுவதையும் ஒரு வகை ‘வானப்பிரஸ்தமாக’ இவர் எளிமைப்படுத்துகிறாரோ என்று ராஜாஜி மேல் சந்தேகமும் கோபமும் வருகிறது. பாரதி மக்களை விட்டு, யதார்த்த தளத்தை விட்டு, எப்போதும் விலகிச் செல்ல முயலவில்லையென ஆவேசமாக விளக்க முற்படுகிறார்.

சற்றே ஆராய்ந்து பார்த்தால் இங்கு நிகழ்ந்திருப்பது ‘வார்த்தைகள்’ தொடர்பான குழப்பமே என்பது தெளிவாகும். ‘வேதாந்தா’ என்ற ஆங்கிலச் சொல், பொதுவாக இந்திய சிந்தனைப் பாரம்பரியத்தை, தத்துவ சாரத்தை, குறிக்க ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படும் சொல்(உதாரணமாக, Rambles in Vedanta என்ற ராஜம் ஐயரின் தலைப்பு). இந்த ஆங்கிலச் சொல்லின் தமிழாக்க முயற்சியாகவே, ‘வேதாந்தி’ என்ற கனிந்த தத்துவ நோக்கைப் பெற்றவரென்ற (பொருளில்) ராஜாஜி பாரதியைக் குறிப்பிட்டிருக்க வேண்டும். வ.ரா.வின் குற்றச்சாட்டுக்கு ராஜாஜியே பின்னாளில் எழுதிய பதில் இதை ருசுப்படுத்துகிறது:

“… இவரை நான் வேதாந்தச் சிமிழில் போட்டு அடைக்கப் பார்க்கிறேன் என்று ஒருவர் அசமாதானமாக, அறியாமையால் சொன்னார். வேதாந்தமா சிமிழ்? நம்முடைய குறுகிய அறிவே சிமிழ். தெய்வாதீனமாக நம்முடைய தமிழ்நாட்டில் நம்முடைய காலத்தில் ஓர் அமர கவி அவதரித்தார்…. அகங்காரம், துவேஷம் வேண்டாம். அனைவரும் அறிவைத் தேடுங்கள்; கண்ணன் காட்டிய வழியில் செல்லுங்கள்; பயம் வேண்டாம் என்று பாடிப்பாடி இறந்தார்…”

மீண்டும், ராஜாஜியின் இன்னொரு கட்டுரையில் இருந்து:

“வருங்கால சந்ததியினர் அவருடைய பாடல்களைப் பாடி நம்முடைய பண்பாடு, பாரம்பரியம், கலாச்சார உயர்வு, தத்துவச் செறிவு, ஆகியவற்றின் புகழ்மிக்கப் பெருமையை உணர்வார்கள்… பாரதியார் பாடல்கள் அரசியலையும் சாதி சமயங்களையும் கடந்து நிற்பவை; இந்தியாவின் மறுமலர்ச்சியை சங்க நாதம் செய்து அறிவிப்பவை”.

ராஜாஜி பாரதியை குறுகிய நோக்கில் அன்றி, விரிவான தளத்தில் புரிந்து கொண்டிருப்பதை இவ்வரிகள் உணர்த்துகின்றன. எனினும், ராஜாஜியின் முதலில் சொல்லப்பட்ட கூற்று தொடர்பாக நாம் எழுப்பக்கூடிய இன்னொரு எதிர்கேள்வி உண்டு: ஒருவன் ஒரே சமயத்தில் தேச பக்தனாகவும் கவியாகவும் வேதாந்தியாகவும் இருக்க முடியாதா என்ன? இந்தக் கேள்வியைத்தான் வ.ரா. உண்மையில் கேட்டிருக்க வேண்டும். மாறாக, ‘வேதாந்தி’ என்ற சொல்லை வைத்துக் கொண்டு அவர் சிலம்பமாடியதன் மூலம் பிரச்னை திசை திரும்பி விட்டதென்றே சொல்ல வேண்டும்.

வ.ரா.

இது பற்றி கரிச்சான்குஞ்சு தமது ‘பாரதியார் தேடியதும் கண்டது’ என்ற நூலில் விவரமாகக் குறிப்பிட்டு, “சுதந்திரத்துக்கு முன்பும் சரி, பின்பும் சரி, ராஜாஜியை மறுப்பது ஒரு பிரமையாக பலரை ஆட்டி வைத்ததுண்டு” என்று கூறுகிறார். அதாவது ராஜாஜியின் கருத்தை எதிர்க்க வேண்டுமென்பதற்காகவே வ.ரா. எதிர்த்திருப்பாரென்று கூறுகிறார். வ.ரா. இந்தச் சந்தர்ப்பத்தில் மட்டுமே இவ்வாறு கூறியிருந்தால் வேண்டுமானால் இந்த வாதத்தை நாம் ஏற்கலாம். ஆனால் வ.ரா. வேறு சில தருணங்களிலும் – பாரதியைப் பற்றிப் பேசாத தருணங்களில்கூட- இதே விதமான கருத்துகளைத்தான் கூறியிருக்கிறார். உதாரணமாய், ‘சமுதாய சீர்கேடுகள்’ என்ற கட்டுரையில், “ஆண்டவனிடம் பக்தி என்றால் மற்ற எல்லா பொருள்களிடத்திலும் வெறுப்பும், வாழ்க்கையில் விரக்தியும் இருக்க வேண்டும் என்று இவர்கள் முடிவுக்கு வந்தார்கள்” என்று ‘நம்மவர்களின்’ மனப்போக்கை விவரித்து, மேலும் கூறுகிறார்:

“உடலை வளர்ப்பது கூடாது; உலகப் பொருள்களில் ஆசை வைக்கக்கூடாது. இதுதான், அவர்கள் சுருக்கமான பாஷையில் உள்ளத்தில் வைத்துக் கொண்டிருந்த லட்சியமாகும். இந்த லட்சியத்தை ஜபித்துக் கொண்டிருக்கிறவர்களுக்கு, எதைப் பற்றியும் யோசிக்க வேண்டும் என்ற கவலையே இருக்காது… எப்பொழுது, ஆண்டவனின் திருப்பாதங்களே துணை என்று சொல்லியாகிவிட்டதோ, மனிதனுடைய வாழ்க்கையைப் பற்றிக் கவலைப்பட வேண்டியவர் ஆண்டவன் அல்லவா? மனிதன், தன்னைப் பற்றி ஏன் கவலைப்பட வேண்டும்? வியாதியா?… எல்லாம் கடவுளுக்குத் தெரியும்!… விபத்தா?… எல்லாம் கடவுள் பார்த்துக் கொள்வார்!… இந்த தத்துவம் எவ்வளவு அழகான தத்துவம்! பக்தி என்ற லஞ்சத்தைக் கடவுளுக்குக் கொடுத்து விட்டால், எந்த சங்கதியிலும் மனிதனுக்கு பொறுப்பும் கவலையும் வேண்டியதில்லை, அல்லவா?… (இவ்வாறு) வாழ்க்கையை நடத்தத் துணிந்த சாதுக்கள், வெறும் வீணர்களாகவும் கோழைகளாகவும் மாறுவது இயற்கைதானே? நாய்களின் வாழ்வும் பண்டாரப் பேச்சும் பித்தலாட்ட நடத்தையும் பயங்கொள்ளி மனப்பான்மையும்தான், நம்மவர்கள், தங்கள் மூதாதைகள் பிதற்றி வந்த தத்துவத்தின் மூலமாக அடைந்த பயன்கள்…”

‘வேதாந்தி’ (வேதாந்த மனப்போக்கு) என்ற சொல் வைதிகர்களிடையே பொதுவாகச் சுட்டிக்காட்டப் பயன்படுகிற மனப்போக்கையே வ.ரா. இங்கு சாடுகிறார். இது அவரை எப்போதும் அரித்து வந்த ஒரு விஷயம். எனவே ராஜாஜி ‘வேதாந்தி’ என பாரதியை வர்ணித்தது தவிர்க்க முடியாமல் அவருக்கு ஒரு வசைச் சொல்லாகத் தொனித்தது. வ.ரா. தன் இளமையில் சந்தித்த அந்தணர்கள் பெரும்பாலும் மூடச் சடங்குகளில் ஊறிய, உண்மையொளி பெறாத, அரை வேக்காடுகள் என்பதை டி.எஸ்.எஸ். ராஜன் எழுதிய ‘நினைவு அலைகள்’ என்ற நூலிலிருந்து ஊகிக்க முடிகிறது. லண்டனிலிருந்து திரும்பி வந்த தம்மை தமது ஜாதிக்காரர்கள் ஜாதிப் பிரஷ்டம் செய்து விட்டதையும் பிறகு வைதிகக் கும்பலுக்கு அவருக்குமிடையே நிகழ்ந்த ‘மோதல்’களையும் ராஜன் இந்நூலில் ரசமாக விவரித்துள்ளார். அப்போது ஸ்ரீரங்கத்தில் ராஜனுக்குப் பரிச்சயமானவர்களில் வ.ரா.வும் ஒருவரென்று இந்நூலிலிருந்து தெரிகிறது. கொடியாலம் ரங்கஸ்வாமி ஐயங்கார் போன்ற (வ.ரா.வின் போஷகர்) ஒரு தேசபக்தர் கூட வைதிகர்களின் விரோதத்துக்கு பயந்து தம் வீட்டுக்கு பகிரங்கமாக வந்து உணவருந்தத் தயங்கியதாக ராஜன் இந்நூலில் எழுதியிருக்கிறார். தன்னுடன் ஒரே வீட்டில் குடியிருந்த குற்றத்துக்காகத் தனது தகப்பனாருக்கு ‘பரந்யாஸம்’ செய்து வைக்க அகோபிலம் மட ஸ்வாமிகள் மறுத்து விட்டதை எழுதியிருக்கிறார். அகோபிலம் மட ஸ்வாமிகள் வட கலை சம்பிரதாயத்தைச் சேர்ந்தவரென்பதால் (தென்கலை சம்பிரதாயத்தைச் சேர்ந்த) ஸ்ரீரங்கம் கோவிலுக்குள் நுழைய அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதை எழுதியிருக்கிறார். இத்தகைய மற்றும் இதுபோன்ற பல நிகழ்ச்சிகள் ஸ்ரீரங்கத்துக்கு அடிக்கடி போய் வந்து கொண்டிருந்த வ.ரா.வுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். இவையெல்லாம் பொதுவாக பக்தி, கோவில், பரலோகம், வேதாந்தம் ஆகிய பலவற்றின் மீதும் ஆழ்ந்த வெறுப்பை அவர் மனதில் விதைத்திருக்க வேண்டும்.

ராஜாஜி பின்னாட்களில் ஹரிஜனங்களின் ஆலயப் பிரவேசத்துக்காகத் தமிழ் நாட்டில் தீவிர ஈடுபாட்டுடன் உழைத்தவரென்பதும் நினைவுகூரத் தக்கது. முப்பதுகளில், இதுபற்றிய மேல்சபை விவாதத்தின்போது, பாரதி காலத்தில் சமூக சீர்திருத்தவாதியாக அறியப்பட்டிருந்த ஸ்ரீநிவாச சாஸ்திரியார் போன்ற ஒருவர்கூட இம்மசோதாவை எதிர்த்துப் பேசிய தருணத்தில் (“நமக்குள்ள செல்வம் எல்லாம் மகரிஷிகளால் அளிக்கப்பட்ட கலைகள். அக்கலைகளின் அறிகுறிகளாக எஞ்சியிருப்பவர்கள் நம் நாட்டிலுள்ள ஏழை வைதிகர்கள். அவர்கள் மனம் புண்படும்படியான மசோதா இது”) மசோதாவை பிரேரேபித்தவரான ராஜாஜி ஸ்ரீநிவாச சாஸ்திரியாருக்கு மிக அழகாக பதிலளித்தார்:

“நம் மூதாதையர்களாகிய மகரிஷிகளுடைய பெயரையும் புகழையும் நிலைநிறுத்த வேண்டியது நமது கடமை. மனித சமூகத்தைப் பிளவுபடுத்தி, ஒரே மதத்தைச் சேர்ந்த, குற்றமற்ற பெரும்பகுதியினரைப் பிறவிக் குற்றமென்ற கற்பனையால் ஒதுக்கி வைத்து பகவானை தரிசிக்க அவர்களுக்கு உரிமையல்ல என்று ஒரு காலத்திலும் ரிஷிகள் சொல்லியிருக்க மாட்டார்கள். சொல்லவும் இல்லை. அப்பெரியார்களின் நற்பெயர் ஓங்க வேண்டியே இம்மசோதாவை நான் கொணர்ந்துள்ளேன்.”

பரிச்சயமான, பழமையான, படிமம் ஒன்றை (‘ரிஷிகள்’) சமூக சீர்திருத்தக் கருத்துகளைப் பரப்ப இங்கே ராஜாஜி கையாண்டுள்ள விதமும், நமது பண்பாட்டின் அம்சங்களை அவை தொடர்பான மூட நம்பிக்கைகளிலிருந்து பிரித்து அறிவார்த்த தளத்துக்கு உயர்த்தும் நாசூக்கும் பாரதியின் அணுகுமுறையையே ஒத்ததாக அமைந்துள்ளன. பரவலான மக்கள் சமூகத்தில் கவனிப்பு பெறுவதும் பாதிப்புகளை ஏற்படுத்துவதும் வெறும் (காகிதத்தில் பொறிக்கப்பட்ட) வார்த்தைகளல்ல. பௌதிக பரிமாணமுள்ள நிகழ்ச்சிதான் என நாம் புரிந்து கொண்டால், ஹரிஜன ஆலயப் பிரவேசத்துக்கும், இதற்கு சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பே பாரதி ஒரு ஹரிஜனுக்குப் பூணூல் போட்டதற்குமுள்ள தொடர்பு புலனாகும். இந்துக்களை ஆன்மிக தளத்தில் இணைக்கிற வேட்கையையும், இத்தகைய ஒருமைப்பாடு அரசியல் தளத்திலும் நல்விளைவுகளை உருவாக்குமென்ற தீர்க்கதரிசனத்தையும் பாரதி, ராஜாஜி இருவருமே பெற்றிருந்தனரென்பதை இந்நிகழ்ச்சிகள் உணர்த்துகின்றன. பகவத்கீதை முன்னுரையில் “பார்ப்பானும் கடவுளின் ரூபம்; பறையனும் கடவுளின் ரூபம்” என்று எழுதிய ‘ஜெய பேரிகை’ பாடலில் வியனுலகத்தையும் அமுதென நுகரும் வேத வாழ்வினை, சகல உயிர்களுக்கும் உரிமையாக்கிய, பாரதியின் கருத்துலகை ஒட்டியதாக ராஜாஜியின் (மேற்சொன்ன) சொற்கள் அமைந்துள்ளன.

பாரதியைப் பல தடவைகள் சந்தித்து அவருடன் அளவளாவும் வாய்ப்பைப் பெற்றிருந்த ராஜாஜி, நிச்சயம் அவருடைய கருத்துலகின் வீச்சைப் பரந்த அளவிலேனும் புரிந்து கொண்டிருப்பார். ‘கருத்துக்’களை ‘நிகழ்ச்சி’களாக உருமாற்றி பாமரர்களுக்கு எடுத்துச் செல்லும் பாரதியின் திறனைக் கூட ‘கனகலிங்கம்’ நிகழ்ச்சியின் மூலமும் பாரதி பாட்டுக்களின்(“உப்புச் சத்தியாகிரகம்’ போன்ற நிகழ்ச்சிகளின்போது நிரூபணமான) இயக்க ரீதியான சாத்தியக் கூறுகள் மூலமும் ராஜாஜி உணர்ந்திருப்பார். எனவே பாரதியின் கால்கள் யதார்த்த தளத்தில் பதிந்திருந்ததை ராஜாஜி சரியாகவே உணர்ந்திருப்பார்.

வ.ரா.வைக் கவர்ந்த பாரதி, “ஆன்மாவென்றே கருமத் தொடர்பையெண்ணி அறிவு மயக்கங்கொண்டு கேடுகின்றீரே!” (பாரதி அறுபத்தாறு) என்றும், “அறிவொன்றே தெய்வமென்றோதியறியீரோ?” என்றும் “உபசாந்தி நிலையே வேதாந்த நிலை” என்றும் பாடிய பாரதி, உபசாந்தி நிலை என்பது என்ன? “இன்று புதிதாய்ப் பிறந்தோமென்று… தின்று விளையாடி இன்புற்றிருந்து வாழ்வது” பரலோகம் பற்றிய மயக்கங்களில் ஆழ்ந்து இகலோகச் சவால்களைச் சந்திக்க மறுக்கிற இந்தியர்களின் போலி வேதாந்தத்தை விமர்சித்து வ.ரா. “சமுதாயச் சீர்கேடுகள்” கட்டுரையில் கூறுவதையே தான் பாரதியும் இவ்வரிகள் மூலம் சுருக்கமாக உணர்த்துகிறார். ராஜாஜியும், மூட மரபின், பொய்ச்சாத்திரங்களின் ஆதரவாளர் அல்லவென்பதை நாம் ஏற்கனவே கண்டோம்.எனவே ராஜாஜி கண்ட பாரதிக்கும் வ.ரா. கண்ட பாரதிக்குமிடையே அடிப்படையாக முரண்பாடு ஏதுமில்லை; இருவரும் எங்கோ ஓரிடத்தில் சந்திக்கிறார்கள்.

வெவ்வேறு வகைகளில் சிறந்து விளங்கிய இரண்டு முக்கியமான மனிதர்கள் மீது பாரதி என்கிற கலைஞன் ஆழ்ந்த பாதிப்பை ஏற்படுத்த முடிந்ததென்பதே இங்கு கவனிக்கப்பட வேண்டியது. அவருடைய பரந்த பரிமாணங்களை, முழுமையின் வீச்சை, இதிலிருந்து நாம் புரிந்து கொள்ளலாம். முழுமை என்பது எல்லாரையும் எங்கேயாவது ஏதாவதொரு விதத்தில் தொட்டு அணைக்கும். எந்த ஒரு பார்வை அல்லது துல்லியமான அளவைகளுக்குள்ளும் அடங்காமல் பிதுங்கியவாறிருக்கும். இதுதான் சத்தியத்தின், கலையின் முழுமை. இந்த முழுமையை நாடக வடிவில் வார்க்கும் பேராசையின் விளைவே இந்நூல்.

பெங்களூர்
கே.எஸ். சுந்தரம்
(ஆதவன்)

நன்றி: புழுதியில் வீணை, நாடகம், தாகம் வெளியீடு, செப்டம்பர் 1988

இந்த இதழில் வெளியாகியுள்ள ஆதவன் குறித்த பிற படைப்புகள்

புழுதியில் வீணை – http://solvanam.com/?p=21258

பெரிய வீட்டின் ஒரு சிறிய பிறைக்குள்… – ஆதவனை வாசிப்பதில் உள்ள அடிப்படைச் சிக்கல் – ஓர் உரையாடல் – http://solvanam.com/?p=21325

ஆதவனின் புனைவுலகம் – http://solvanam.com/?p=21223

ஆதவனுக்காக… – http://solvanam.com/?p=21303