ஜெயராமன் எனும் கானுயிர் ஆர்வலர்

கதிரவன் மறைந்தும் மறையாத ஒரு மாலைப் பொழுது.

வானம் லேசாகத் தூறிக் கொண்டிருந்தது சில்லென்ற காற்றோடு.

தென்மேற்கு பருவக் காற்றின் ஆரம்பம்.

எங்கும் பரவலான ஈரம். அகத்தையும் ஈரப்படுத்துகிற அதன் சாரம்.

இயற்கையின் பேராச்சரியங்களையும் அது மனிதனுக்கு வழங்கும் கொடைகளையும், அவை எப்படியெல்லாம் மனித மனதை உவகை கொள்ளச் செய்கிறது என்பதையும், இப்படிப்பட்ட இயற்கையோடு இசைவான வாழ்க்கையை வாழ்தலை விட்டு மனிதன் ஏன் மாறுகிறான் எனவும் எண்ணிக கொண்டு நண்பர் ஜெயராமனை சந்திக்கலாம் என செல்கிறேன்.

நண்பர் ஜெயராமனின் வீடு – ஒ! அது ஒரு அருங்காட்சியகம்தான்.

மேல் மாடி முழுவதும் திரு.ஜெயராமன் மட்டுமே.

சுவற்றில் மாட்டப்பட்டுள்ள பல்வகை ஓவியங்களும், புகைப்படங்களும், கவின்மிகு கலைப் பொருட்களும், மேலாக Collector’s Item என்று சொல்வார்களே, (உலகிலே ஒன்றோ அல்லது இரண்டோதான் உருவாக்கப்பட்டிருக்கும்), அப்படியான கைவண்ணப் பொருட்களும், கண்ணாடி மற்றும் கண்ணாடி படிகங்களில் செய்யப்பட்டுள்ள கலைப் பொருட்களுமாக அந்த நீள் அறையே(ஹால்) கலாபூர்வமாக….  இன்னும் சொல்வதென்றால் இசை கேட்பதற்கென்றே ஒரு அறை. புகைப்படங்களை நேர்த்தியாக அடுக்கி வைத்துக் கொள்ள ஒரு அறை. பெரும்பாலான நாடுகளின் Flora & Fauna பற்றிய புத்தகங்கள், தத்துவம், பயணம் மற்றும் கானுயிர் சம்பந்தப்பட்ட புத்தகங்கள் மற்றும் கலைக் களஞ்சியங்களையும் கொண்ட சுவரோடு ஒட்டிய ஒரு பெரிய நீண்ட புத்தக அலமாரி.

தேர்ந்த ரஸனையும், தேடல் உணர்வும், கருத்துக்களில் தெளிவும், செயலில் நேர்த்தியும், மென்மையான பேச்சும், முக்கியமாக எல்லாவற்றையுமே ஆவலும், ஆச்சரியமும் ததும்பப் பார்க்கும் கண்களும் கொண்ட திரு.ஜெயராமனை நான் எப்போது பார்த்தாலும் சந்தித்தாலும் எனக்கு ஆச்சரியமும், மகிழ்வும் ஏற்படும்.

நண்பர் ஜெயராமன் –

சுமார் எட்டு வயதில் ஆரம்பித்து இன்று வரை தொடர்ந்து பயணிக்கும் ஒரு கானுயிர் புகைப்படக் கலைஞர் (WildLife Photographer).

இயற்கை மற்றும் சுற்றுச் சூழல் ஆர்வலர். மேலை நாடுகளின் கானுயிர் புகைப்படக் கலைஞர்கள் மத்தியில் மிகவும் அறியப்பட்டவர், அங்கீகரிக்கப்பட்டவர்.

தொடரும் அவரின் பயணத்தினூடே…

எவ்வளவு காலமாக நீங்கள் இந்த ‘கானுயிர் புகைப்படக்கலை’யில் ஈடுபட்டுள்ளீர்கள்? இந்த ஈடுபாடு ரசனையின் பாற்பட்டதா அல்லது இத்துறையில் ஒரு சிறப்பாளராக வர வேண்டும் என்ற கனவின் பாற்பட்டதா?

1962ல் நான் முதன் முதலாக புகைப்படம் எடுப்பதில் ஆர்வமுற்றேன். அப்பொழுது நான் 8-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எனினும் ஒரு சிறிய பெட்டி புகைப்படக்கருவி இருந்தது. சுமார் 1970-லிருந்து இயற்கைச் சூழல் மற்றும் கானுயிர் புகைப்படக்கலையில் ஈடுபட ஆரம்பித்தேன். அப்போது ஒரு நுண்மையான SLR புகைப்படக்கருவியை, பழையது, வாங்கியிருந்தேன். எனக்கு இத்துறையில் ஒரு சிறப்பாளராக ஆக வேண்டும் என எண்ணம் இருந்ததில்லை. அது ஒரு தனிப்பட்ட ரசனையின் பாற்பட்டதே. பொதுவாகவே எனக்கு சிறு வயது முதல் நுண்கலைகளில் ஆர்வம் இருந்து வந்துள்ளது.

உங்களின் இத்தகைய ஈடுபாட்டுக்கு அல்லது ஈடுபாடு ஏற்படுவதற்கு ஏதேனும் தனி மனித, குடும்ப, சமூக சூழல்கள் ஏதுவாக இருந்ததா?

மாணவப் பருவத்தில் எனக்கு வரைவதில் நாட்டம் அதிகம். புகைப்படக் கலை பற்றி எனக்கு ஏதும் தெரியாது. அப்போது 1962ல் அப்பா எனக்கு ஒரு புகைப்படக் கருவி (Agfa Synchro Box Camera) பரிசளித்திருந்தார். அது எனது விருப்பத்தின் மீதா அல்லது அதை ஒரு பரிசாகத் தந்தாரா என்பது நினைவில்லை. எல்லாரையும் போல முதன் முதலில் உருவங்களைத்தான் படமேடுத்தேன். பிறகு 1970 முதல் இந்த இயற்கை மற்றும் கானுயிர் புகைப்படக்கலையில் ஈடுபட ஆரம்பித்தேன். இதுகூட மலைகளும், ஆறுகளும், வனங்களும், பள்ளத்தாக்குகளும் நிறைந்த வடகிழக்கு மாகாணங்களில் அப்பா வேலை பார்த்ததாலும் அவருடன் கூடவே பயணித்து வாழ்ந்தாலும், எனக்கு அந்த இயற்கைச் சூழல் ரசனையைக் குழந்தைப் பருவம் முதலே ஏற்படுத்தியிருக்க வேண்டும்.

புகைப்படக் கருவிகளும் மற்றும் அது சம்பந்தமான உபகரணங்களும் பொதுவாகவே விலை அதிகம் என்கிறபோது இந்த புகைப்படக்கலையை ஒரு ரசனை சார்ந்த பொழுதுபோக்காக வைத்துக் கொள்வது என்பது மிகுந்த முதலீட்டுத் தேவை உள்ளது அல்லவா? மேலும், ‘கானுயிர் புகைப்படக்கலை’ என்பது நீங்கள் அடிக்கடி கானகங்களூடே மற்றவர் நடந்திராத பாதைகளிலும், ஆபத்தான இடங்களிலும் பயணங்கள் செய்ய வேண்டி தேவை உள்ளதே? இவற்றை எப்படி சமாளிக்கிறீர்கள்?

அதிர்ஷ்டவசமாக எனக்கு என் போல இக்கலையில் ஈடுபாடுள்ள நண்பர்கள் எனது மாணவப் பருவம் முதலே அதிகம் பேர் இருந்தார்கள். இருக்கிறார்கள். எனது ஆர்வம மற்றும் திறமையில் நம்பிக்கை வைத்த அவர்கள் இது மாதிரி பயணங்களை ஏற்பாடு செய்கிறார்கள். எனது திறமைக்குப் பரிசாக கேரளா மற்றும் கர்நாடக அரசுகள் எனது பயணங்களை ஏற்பாடு செய்கின்றன. நானும் எனது சில நண்பர்களும் நமது பருவ காலங்களுக்கு ஏற்றாற்போல நமது நாட்டின் கானகங்களில் அதீத ஈடுபாடு காரணமாக பயணம் செய்து வருகிறோம். சில கானுயிர் உயிரினங்களை தேடிச் செல்வது மிகவும் ஆபத்தானதும் செலவுகள் அதிகமாவது இயல்புதான். ஆனால் என்னால் இந்த பயணங்கள் இன்றி சும்மா இருக்க முடியாது. ரசனை என்பதில் இருந்து இக்கலை எனது இருத்தலுக்கே ஆதாரமாகவும், எனது இருத்தலை சிறப்பானதாகவும் ஆக்குகிறது. இளவயதில் நான் அதிகமாக மலையேற்றம் செய்வேன். கானகங்களில் நடப்பேன். தற்போது கார்களிலும் நண்பர்களின் வாகனங்களிலும் செல்கிறேன். கானகங்களுக்கு செல்வதற்கு ஜீப்பை உபயோகப்படுத்துகிறேன். அதிக செலவுதான். ஆனால் செலவுகளை விட தேடல் உணர்வும், ரசனையும் ஆர்வமும் கலந்த ஈர்ப்பும் உயர்ந்ததாகப்படுகிறது.

உங்களின் வங்கிப்பணி எப்படி உதவியாக இருந்தது?

எனது பணியையும், ரஸனையையும் நான் கலப்பது இல்லை. வங்கிப் பணியில் இருந்தபோது, வார விடுமுறை நாட்களையும் பொது விடுமுறை நாட்களையும் பயன்படுத்திக் கொள்வேன். எனது பிற்கால வங்கிப் பணி என்பது வேலைப்பளு குறைந்த ஒன்றாக இருந்தது. அப்போது வங்கியின் நிர்வாக அலுவலகங்களில் பணி செய்தேன். வங்கியிடமிருந்து எனக்கு எந்தவிதமான ஊக்குவிப்பும் இல்லை. அதே போன்று வங்கியிடமிருந்து, எனது இந்தக் கலை ஈடுபாட்டிற்கு எந்தவிதமான தடைகளோ, எதிர்ப்போ இல்லை.

உங்களது பார்வையில், இந்த கானுயிர் புகைப்படக்கலையின் முக்கியமான தேற்றங்கள் எவை? மேலும் இக்கலைக்குண்டான சவால்கள் என்னென்ன

இக்கலையின் முக்கியமான மற்றும் முதன்மையான தேற்றம் என்பது மிகச் சரியான நேரத்தில், மிகச் சரியான இடத்தில், தேவையான புகைப்படக் கருவிகள் மற்றும் உபகரணங்களோடு இருக்க வேண்டும் என்பதைவிட, காத்திருக்க வேண்டும் என்பதே சரி. சவால்கள் என்பதெல்லாம் கடின உழைப்பு, மனத்திட்பம், குறைவான உணவு, குறைவான தூக்கம் என்பதுதான். ஆனால், எந்நேரமும் ஒரு முன் எச்சரிக்கை உணர்வுடன் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் நாம் எதிர்பாராத நேரத்தில் நாம் எதிர்பாராத திசைகளிலிருந்து வரும் உடனடி ஆபத்துக்களையும் சில திடீர் நிகழ்வுகளையும் சமாளிக்க முடியும்.

இயற்கை மற்றும் கானுயிர்களின் வாழ்க்கை முறைகளோடு இணக்கமாக இருக்க வேண்டும் என்பதை ஒவ்வொரு மனிதனும் புரிந்து கொள்ள வேண்டியது என்பது எவ்வளவு முக்கியமானது? அப்படி புரிந்து கொள்ளப்படாத வகையில் மனிதனுக்கு ஏற்படும் பிரச்சினைகளும் சவால்களும் என்னென்ன?

கடந்த காலங்களில் மனிதர்கள் இயற்கையோடு இயைந்த வாழ்வு வாழ்ந்தார்கள். அதனால் மானுடம் மிகப் பயனடைந்தது. தற்போது முன்னேற்றம், வளம் என்ற பேரில், நாம் மிகவும் ஆபத்தான சூழலில்தான் வாழ்கிறோம். மனிதன் மற்றும் கானுயிர்களுகிடையேயான இருத்தலியல் மோதல்களும் முரண்களும் தற்போது அதிகமாகிவிட்டன. இவைகளுக்குக் காரணம், இயற்கையை ஆக்கிரமித்தலும், விலங்கினங்களுக்கு, அவற்றின் வாழ்வாதாரங்களை அழிக்கும் அனைத்து விதமான ஊறுகளும், மனிதனின் முறையற்ற அத்துமீறல்களும்தான். மேலும் நம் நாட்டில் கானகங்களைக் காப்பதிலும், வளர்ப்பதிலும் சரியான திட்ட அணுகுமுறை இல்லை. எல்லா கானகங்களிலும் மலைசார் பகுதிகளிலும் மனிதன் அணுகக்கூடாத இடங்களை சரியாகப் பிரித்தெடுத்து அவற்றை சரியான முறையில் காக்க வேண்டும். அப்பொழுதுதான் கானுயிர்களுக்கு ஒரு தடையற்ற சுதந்திரமான நடைபாதைகளும், அதற்குண்டான சூழல்களும் கிடைக்கும். முக்கியமாக, அவற்றின் இடம் விட்டு இடம் செல்லும் தன்மைகள் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும். மேலும் மனித வாழ்விடங்களுக்கும் கானகங்களுக்கும் இடையில் ஒன்றுக்கு மேற்பட்ட சம முரண்பகுதிகள் (Buffer Zones) ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போதுதான் விலங்கினங்களின் ஆக்கிரமிப்பைத் தவிர்க்க முடியும். இத்தகு சமமுரண்பகுதிகளுக்கு அருகில் பயிர்வளர்ப்பு என்பது விலங்கினங்களுக்கு ஏதுவற்றதாக இருக்க வேண்டும். ஆனால் நாம் அந்த இடங்களில்தான் அவைகளுக்குப் பிடித்தமான வருமானம் தரக்கூடிய கரும்பு, வாழை போன்று பணப்பயிர்களை வளர்க்கிறோம். அதனால் மிகுதியும் அவதிக்குள்ளாகிறோம்.

இக்கலையில் உள்ள உங்கள் ஈடுபாட்டிற்காக, இயற்கையை சரியாக புரிந்து கொள்வது என்பது உங்களுக்கு எவ்வளவு தூரம் உதவியாக உள்ளது?

அதிக நாட்கள் கானகங்களிலே இருப்பதாலும், ஒரு நாளின் அதிக நேரத்தை இயற்கைச் சூழல்களுக்கு மத்தியிலேயே செலவழிப்பதாலும் ஒரு மனிதனுக்கு அதிக முன்னெச்சரிக்கை உணர்வு, சூழலோடு ஒத்துப் போகிற தன்மை, உடன் எதிர்வினை புரியும் குணம் அனைத்தும் வந்து விடுகின்றன. உங்களுக்குத் தெரியுமா? சமீபத்திய விஞ்ஞான ஆய்வுகளின்படி, ஒரு தேர்ந்த இயற்கையியலாளன் மற்றும் கானுயிர் புகைப்படக் கலைஞன் மேன்மையான நடத்தைகளையும், உயர்ந்த மனிதத் தன்மைகளையும் கொண்டு நீண்ட நாட்கள் சீரான உடல்நலத்துடன் வாழ்கிறான். எனக்கு, எனது தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி எனது வங்கி மற்றும் எனது அனைத்து புற இயக்கங்களிலும் சரி இந்தக் கலை மிக்க பயனுள்ளதாக உள்ளது.

நீங்கள் உலகறிந்த ஒரு கானுயிர் புகைப்படக் கலைஞர். உங்களது இந்தக் கலைக்காக என்னென்ன அங்கீகாரங்கள் கிடைத்துள்ளன?

1974ல் மிகக் கௌரவமான ARPS (Associate of the Royal Photographic Society of Great Britain) விருது கிடைத்தது. இந்தியாவில் இதே விருது பெற்றவர்களில் நான் முதன்மையானவன். இந்த விருது எனது Macro Photographic work in India-விற்காக கிடைத்தது. இது என்னை, மிகச் சிறந்த மேற்கத்திய புகைப்படக் கலைஞர்களுடன் சமதளத்தில் வைத்துள்ளது.

1983ல் இன்னொரு மிகக் கௌரவமான AFIAP (Artist of the International Federation of Photographic Art – Europe (UNESCO)) விருது கிடைத்தது. இது எனது பன்னாட்டு புகைப்படப் பங்களிப்பில் கலந்து கொண்டதற்காகவும் எனது கலைத் திறமைக்காகவும் கிடைத்த விருது.

1986ல் யுனெஸ்கோ விருதான EFIAP (Excellency in the Federation of Photographic Art – Europe (UNESCO)) விருது மற்றுமொரு புகைப்படப் பங்களிப்பில் கிடைத்தது. நான் பல முறை பன்னாட்டு புகைப்பட காட்சிப்படுத்தல் வளாகங்களில் (Art Galleries) பங்கேற்றதற்காகவும், நான் பயன்படுத்திய சில தனிப்பட்ட செயல்முறைகளுக்காகவும், எனது எழுத்து, விரிவுரைகள் மற்றும் வேறு பல பங்கீடுகள் மூலமாக புகைப்பட கலைக்கு நான் செய்துவரும் சேவைக்காகவும் மேலும் புகைப்படக்கலையில் எனது ஏனைய செய்முறை தெரிவுகளுக்காகவும் கிடைத்தது.

மேலும் நமது நாட்டில் பல சேவை நிறுவனங்களும் தேசிய மற்றும் மாநில அமைப்புகளும் பல விருதுகள் எனக்காகவும், எனது குறிப்பிட்ட சில படங்களுக்காகவும் கிடைத்துள்ளன.

எனது எல்லா விருதுகளுமே சிறந்தவைதான். அதில் மிக உன்னதமானது எனச் சொல்வது என்றால் மிகப் பழமை வாய்ந்த Royal Society of Britain கொடுத்த விருதுதான்.

நமது நாட்டில் தேசிய மாநில அரசுகளிடமிருந்து உங்களுக்குத் தேவைப்படும்போது உங்கள் திட்டப்பணிகளுக்கு (Projects) உதவிகளும் ஒருங்கிணைப்புகளும் கிடைத்தனவா?

எப்போதுமே இல்லை. நான் தனிப்பட்ட முறையில் எந்தத் திட்டப் பணியும் செய்ததில்லை. நான் செய்ததெல்லாம் பன்னாட்டு அமைப்புகளின் திட்டப்பணிகளில் அவர்களுக்கு உதவியாகவும் அனுசரணையாகவும் இருந்து புகைப்படங்கள் எடுத்ததுதான்.

சில இந்திய கானுயிரினங்கள் உங்கள் பெயரில் வெளி உலகுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ள இந்த விருது மற்றும் அங்கீகாரத்தை நமது இந்திய, மத்திய மற்றும் மாநில அரசுகள் அங்கீகரித்துள்ளனவா? ஏதேனும் அரசு விருதுகள் (சிறந்த கலைஞர் மற்றும் சிறந்த சேவை போன்றவற்றிற்காக) உங்களுக்குக் கிடைத்துள்ளனவா? அப்படி இல்லையெனில், இந்த அரசுக்கு உங்களைப் போன்றவர்களை அங்கீகரிப்பதில் என்ன சிரமம் உள்ளது?

ஒரு புது வகையான சிலந்திக்கு – Myrmarachne jayaramani என தமிழக விவசாய கழகம் பெயரிட்டுள்ளது. ஒரு காட்டுத் தவளைக்கு – Roorchestes jayarami என டெல்லி பல்கலைக்கழகம் பெயரிட்டுள்ளது.

Amphebino faunaல் எனது ஆய்வுக்காகவும் பங்களிப்புக்காகவும் Amphebian Research Team தனது அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.

இந்த அங்கீகாரங்கள் மற்றும் விருதுகள் எனது சேவைக்காகவும் பங்களிப்புக்காகவும் அரசு சாரா அமைப்புகள் கொடுத்தது. இதில் அரசுக்கு சொல்ல என்ன உள்ளது? இது மேற்கத்திய நாடுகளின் அரசாங்கம் அல்ல, செயல்களை ஊக்குவித்தலிலும் அங்கீகாரம் வழங்குவதிலும்.

மேலும் நான் தனிமையை விரும்புபவன். எனது அனைத்து செயல்களுமே எனது ரசனைக்காகவும் எனது மகிழ்ச்சிக்காகவும்தான். மேலும் நான் ஒரு தனிப்பட்ட பார்வையாளன் தானே தவிர, பார்வையாளர்கள் மத்தியில் என்னை முன்னிறுத்த விரும்புபவன் அல்ல. இக்கலை பற்றி ஆர்வமோ ஈடுபாடோ இல்லாதவர்கள் மெச்சுவதைவிட இக்கலை பற்றி ஆர்வமுள்ளவர்கள், ஈடுபாட்டாளர்கள் என்னை அங்கீகாரம் செய்வதையே பெரிதும் விரும்புகிறேன்.

நீங்கள் பணிபுரியும் வங்கி, State Bank of India, எவ்வாறு இந்த அங்கீகாரங்களை, விருதுகளைப் பொருட்படுத்தியது?

பெரும்பாலான மேலதிகாரிகள், பணியாளர்கள், என்னைப் பற்றி அறிந்திருந்தாலும், எந்த இடத்திலிருந்தும் சிறிதளவு அங்கீகாரமோ, ஊக்குவிப்புகளோ அலுவலக ரீதியாக கிடைத்ததில்லை. ஆனால் தனிப்பட்ட முறையில் அவர்கள் அனைவரும் என் மீது அன்பாகவும், நட்பாகவும் அனுசரணையாகவும் இருந்தார்கள். மேலும் நான் எனது கலை சம்பந்தமான ஆர்வங்களை, விருதுகளை ஒரு வேறுபட்ட சூழலில் இயங்கிக் கொண்டிருக்கும் வங்கி அதிகாரிகளிடமோ பணியாளர்களிடமோ சொல்லிக் கொண்டதில்லை.

நீங்கள் கானுயிர் மற்றும் இயற்கை ச்மபந்தப்பட்டு பல நூல்கள் தனியாகவும் சேர்ந்தும் இயற்றியுள்ளீர்கள். சில கானுயிர் புகைப்பட ஆல்பங்களும் வெளியிட்டுள்ளீர்கள். அது பற்றி?

1. Whjspers of Reason – Silent Valley (English) – இது கேரள வனத்துறை வெளியிட்டது. இதில் எனது பங்கு இயற்கை பற்றிய சில சொல்லாடல்களை அளித்தது, வெளியீட்டு சம்பந்தமாகவும் மற்றும் அந்தப் பகுதியின் தாவர மற்றும் உயிர்கள் பற்றியதுமானது. இது அமைதிப் பள்ளத்தாக்கு பற்றி, இயற்கைச் சூழல், கானுயிர்கள் பற்றி, பல கானுயிர் புகைப்படக் கலைஞர்கள், சமூக மற்றும் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் மற்றும் நான், அனைவரும் சேர்ந்து எழுதித் தொகுத்தது.

2. Some South Indian Butterfiles – (English) – இது நீலகிரீஸ் கானுயிர் மற்றும் சுற்றுச் சூழல் அமைப்பு – உதகை வெளியிட்டது. இதில் பெரும்பாலான புகைப்படங்கள் நான் எடுத்தவை. இந்த நூலின் ஆசிரியர்களில் நானும் ஒருவன்.

3. Encounters in the Forest (English) and Wild Vistas (English) கர்நாடக அரசு வெளியீடு. இதில் எனது பங்கு – புத்தக வெளியீடு, புகைப்படங்களை தெரிவு செய்தது. டிசைன், சில நுண்ணுயிர்கள் மற்றும் ஊர்வன, விலங்குகள் பற்றி சில Taxanomical Corrections செய்தது.

4. 350-க்கும் மேற்பட்ட கானுயிர் புகைப்பட மற்றும் இயற்கையியல் புத்தகங்களில் எனது புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. சில புகைப்படங்கள் மேற்கத்திய நாடுகளில் அரசு வெளியீட்டகங்களிலும் தொலைகாட்சி ஒளிபரப்புகளிலும் காட்டப்பட்டுள்ளன.

பல உயிரினங்கள் மற்றும் வன விலங்குகளின் உயிர் வாழ்முறைகளை நீங்கள் பல வருடங்களாக கூர்நோக்கி மற்றும் நுண்ணாய்ந்து வருகிறீர்கள். மனித வாழ்தலில் இருப்பதுபோல இந்த உயிரினங்களுக்கும் அவைகளின் உயிர் வாழ்தலில் சில பிரச்சினைகளும் சவால்களும் இருக்கலாம் அல்லவா? அவற்றை அவ்வுயிரினங்கள் எவ்வாறு அணுகுகின்றன? சமாளிக்கின்றன? அப்பொழுதுதானே அவை தங்கள் உயிர் வாழ்வை சூழலுக்கு ஏற்றவாறு அமைத்துக் கொள்ள முடியும்?

பொதுவாகவே இயற்கையின் இயக்கத்தில், இந்த உயிரினங்கள் சூழலுக்கு ஏற்றவாறு தம்மை புறவயப்படுத்திக் கொள்கின்றன. அவைகளின் இந்த புறவய மாற்றம் மிக மெதுவாகவும் அதே சமயம் மிகச் சீராகவும் நடக்கிறது.

ஆனால், தற்போது இயற்கை அழிப்பு, மனிதனின் அத்துமீறல், மனித- விலங்கு நடைமுரண் (Man – Animal Conflict) சூழல் மாசுபாடு இவற்றால் இயற்கைச் சூழலும் கானகங்களும் கானுயிர்களும் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. இவை, முன்னேற்றம் என்ற பேரில் மனிதனால் நடத்தப்படுகின்றன. இவற்றால் கானுயிர்களும் வன விலங்குகளும் அகவயமாற்றம் பெறுகின்றன. அதனால் அவைகளின் புறவயச் செயல்பாடுகளில் ஒரு மாற்றம் முக்கியமாக அவைகளிடம் மூர்க்கத்தனமான நடவடிக்கைகளும் இடமாற்றங்களும் மனித வாழ்வாதாரங்களின் ஊடே தடம் மாறி வருவதும் நடக்கின்றன. இது பெரும்பாலும் விலங்கினங்களுக்குத்தான். பறவைகள் மிகச் சுலபமாக சுற்றுச் சூழலை உணர்ந்து இடம் மாறிச் செல்கின்றன. புழு பூச்சிகள் இந்த சூழல் மாற்றலை மிக வன்மையாக எதிர்த்து வாழ்கின்றன. ஏனெனில் அவைகளுக்கு மிகக் குறுகிய வாழ்வு என்பதால். இந்த மாறுபாடுகளால் சில உயிரினங்கள் ஒரேயடியாக இல்லாமல் போவதும், இயற்கை சமன்பாடு பாதிப்புக்கு உள்ளாவதும் அதனால் ஏற்படும் தட்ப வெப்ப மற்றும் புவியியல் வேறுபாடுகளும்தான். பெரிய விலங்குகள் மற்றும் உயிரினங்கள் அரிதாகி வருவதை நாம் இப்போதும் கண்டுகொள்ள முடியும். சிறுசிறு பூச்சிகள் மற்றும் உயிரினங்களை கண்டுகொள்வது மிக மிக சிரமம்.

முக்கியமாக ஐரோப்பியர்கள் நாம் நாட்டை விட்டுச் சென்ற பிறகு நாம் இன்னும் நாம் நாட்டின் அநேக உயிரினங்கள், வல்லுயிர்கள், புழு பூச்சிகள் போன்றவைகளை அட்டவணைப்படுத்தவில்லை. அதனால் சரியான உயிரினங்களின் இருப்பியலை கண்டுகொள்ள முடிவதில்லை. நமது வீட்டைச் சுற்றி வாழ்ந்து வரும் பல பூச்சியினங்களை, புழுக்களை தற்போது காண முடிவதில்லை.

சூழலுக்கேற்ற தகவோடு வாழ்வதில் மனிதர்களுக்கு வாழ்வியல் உணர்வுகள் (Living Instinct) இருப்பதுபோல், விலங்குகளுக்கு இருத்தல் உணர்வுகள் (Survival Instinct) உள்ளன. மனிதர்கள் விலங்குகளைவிட, பரிணாம வளர்ச்சியில் உயர்வானவர்கள் அல்லது மென்மையானவர்கள் என்றாலும், இந்த மனிதர்களுக்கு விலங்குகளிடமிருந்து கற்றுக் கொல்வதற்கென்று ஏதும் உள்ளதா?

விலங்குகளும் ஏனைய உயிரினங்களும் தங்களது இன விருத்திகளை தேவைக்கு அதிகமாக செய்து கொள்வதில்லை. இவ்வுலகில் எந்த விலங்குகளுக்கும் உயிரினங்களுக்கும் மக்கள் தொகை அதிகம் என்ற பிரச்சினை இல்லை. நமக்குத்தான். மேலும் அவைகள் வாழ்வாதாரங்களை தேவைக்கு மேல் அதிகளவு பயன்படுத்துவதில்லை. அவைகள் ஒன்றையொன்று சார்ந்தும் அழித்தும் வாழ்வதால் அவைகளின் மக்கள் தொகைக்கு ஒரு செக் உள்ளது.

நாம் என்ன செய்கிறோம்? முன்னேற்றம் என்ற பெயரில் இயற்கை அழிவு செய்கிறோம். உதாரணமாக உரங்கள் போட மண்புழு அழிகிறது. அது தாவர வளர்ச்சியை பாதிக்கிறது. பாம்புகள் அழிய எலிகள அதிகமாகின்றன. மொபைல் டவர்களால் குருவிகளும் பறவைகளும் நாம் வீடுகளுக்கு வருவதில்லை என்றும் சொல்கிறார்கள். காணாமல் போய் விட்டனவா தெரியவில்லை. இப்படி மனிதனின் முட்டாள்தனமான இயற்கையழிப்பு சூழல் மாசுபாடு, ஏற்றுமதிக்காக நமது இயற்கை வளங்களைச் சுரண்டல் எல்லாம்தான்.

குறைந்த மக்கள் தொகை, அதிக இயற்கை வளங்கள் – சொர்க்கம்தானே! பசிக்காக மட்டுமே சாப்பிடுவதும் தேவைக்கான பொருள்களை மட்டுமே நுகர்வதும்தானே நமது முதல் நோக்கமாக இருக்க வேண்டும்? ஆனால் நாம் அப்படி இல்லையே!

கால நிலை பருவ நிலை புவியியல் மாறுபாடுகளினால் கானுயிர்களின் வாழ்க்கை முறைகளில் மற்றும் அவற்றின் நடைமுறைகளில் மாறுபாடுகள் ஏற்படுகின்றனவா? அப்படியானால், அவைகளிடம் ஏற்படும் இத்தகைய மாறுபாடுகள் மனிதனின் வாழ்வாதாரங்களை எந்தவிதமாக பாதிக்கின்றன?

துருவப்பிரதேசத்தை எடுத்துக் கொள்வோமே. புவி வெப்பமயமாதலால் துருவப்பிரதேசங்களிலுள்ள ஐஸ் கட்டிகள் உருகி வந்ததால் அங்கு வாழ்ந்து வந்த துருவக் கரடிகள் தங்களது இரைக்காக மிக நீண்ட தூரம் உறையும் கடலில் நீந்தி வந்து உணவைத் தேட வேண்டிய சூழல். அதனால் அவைகள் களைப்புறுதலும், இடையில் பசியாலும் கடின உழைப்பாலும் மரணிப்பதும் நிகழ்கின்றன.

மத்திய நாடுகளில் உள்ள விலங்குகள் தங்களுக்கு கிடைக்கும் குறைவான இரைகளாலும் குறைந்தளவு நீராதாரங்களாலும் இனவிருத்தி செய்வதையே குறைத்துக் கொள்கின்றன. இது எப்படியான விளைவுகளை ஏற்படுத்துமென்றால், விலங்குகளின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டு அவைகளின் மாறுபட்ட வாழ்க்கை நடைமுறைகள் அந்தந்த இடத்திலுள்ள தட்பவெப்ப மற்றும் புவியியலின் சமநிலைகளில் மாறுபாடுகளை ஏற்படுத்தி, அதனால் குறைந்த மழை, நீராதாரங்கள் மற்றும் உணவு பற்றாக்குறை, மின் உற்பத்தி குறைதல், தட்ப வெப்ப நிலை மாறுபாடுகள் மற்றும் தெரியாத, எதிர்பாராத, நோய்கள் போன்றவைகள் ஏற்பட்டு, மனிதனின் வாழ்வாதாரங்களை பெரிதும் பாதிப்புக்குள்ளாக்குகின்றன. இது சுற்றுச் சூழல் நிலை மாற்றத்தில் ஆரம்பித்து புவியையும் அடுத்து மனித இனத்தையும் பாதிக்கின்றன. இது இயற்கை மற்றும் சூழல் சமன்பாடுகளை மாற்றுகின்றன.

இந்திய புராணங்களிலும் பழங்கதைகளிலும் சொல்வது போல பறவையினங்கள் மற்ற விலங்குகளைவிட உயர்வானதா? எப்படி?

விஞ்ஞானமும் புராணங்களும் ஒன்றுக்கொன்று மாறுபட்டவை. விஞ்ஞானம் என்பது உண்மை மற்றும் பகுத்தறிவின் அடிப்படையைக் கொண்டது. மேலும், அது காலத்திற்கேற்ப வளர்ச்சியும் பெறுகிறது. பரிணாம வளர்ச்சியில் பறவைகள் மிக தாமதமாக, விலங்குகளுக்குப் பின்னர் உருவாகின்றன. பறவைகளுக்கு, மற்ற இடங்களுக்கு மிக விரைவாக, பறந்து செல்லும் தன்மை உள்ளது. அவைகளின் வண்ணங்களாலும் மென்மையாலுமே அவைகளை உயர்ந்தவை எனக் கூற இயலாது. ஆனால் நமது புராணங்களும் பழங்கதைகளும் பறவைகளைத் தங்களது பறக்கும் தன்மையில், சொர்க்கத்தின் தூதுவர்களாகவும், சொர்க்கம் என்பது ஆகாயத்தில் இருப்பதாக நம்பப்படுவதால் பறவைகளால் எளிதாக அங்கு செல்ல முடியும் என்பதாலும்தான் இந்த புராண நம்பிக்கை வந்தது. ஆனால் இயல்பாகவே பறவைகள் மாறும் சூழல்களுக்கேற்றவாறு தங்களை மாற்றிக் கொள்வதும், சரியான இடங்களைத் தேர்வு செய்வதும், அங்கு இடம் மாறிக் கொள்வதும், மேலும் மிகக் குறுகிய கால பயணத்தில் நாடு விட்டு நாடு வெகு தூரம் இனவிருத்திக்காகவோ, இரைக்காகவோ கால மாறுதல்களால் வேறிடங்களுக்குப் பறந்து செல்வதுமாக தங்கள் வாழ்க்கையை நடத்துகின்றன. இத்தன்மையை ஒப்பிடும்போது விலங்குகள் பறவைகளுக்கு அப்புறம்தான்.

இந்தியா போன்ற நாடு எந்த அளவுக்கு தனது கானுயிர்கள் மற்றும் வனங்களை நிறை காத்திட முடியும்? மேலை நாடுகளை ஒப்பிடும்போது நாம் எவ்வளவு தூரம் இதில் பின்தங்கியுள்ளோம்?

இந்தியா தனது கானுயிர்களையும் வனங்களையும் காப்பாற்றுவதற்கு உரிய முயற்சிகள் எடுத்து வந்தாலும் நமது வாழ்வினங்கள் பல்வேறாக சிதறுண்டு இருப்பது ஒரு பெரிய சவால்தான். ஒரு ஏதுவான சூழலில் கானுயிர்கள் உயிர் வாழ்வதற்கு ஒரு தடைபடாத தொடர் நிலப்பகுதிகள் (Contiguous Landscape) தேவைப்படுகின்றன. அப்போதுதான் சீரான கானுயிர் மக்கள் தொகையும், அதனால் ஏற்படும் சீரான வனவாழ்க்கையும், அதிலிருந்து உருவாகும் சீர்தன்மையுடைய கானகங்களும் அவை தரும் சீரான தட்பவெப்ப மாறுதல்களும் ஏற்படும். இதிலிருந்துதான் ஒரு நாட்டின் தன்வயமான பொருளாதாரத்திற்குத் தேவையான சீரான தட்ப வெப்ப நிலைகளும் குறைவற்ற நீராதாரங்களும் உருவாகின்றன. இங்கு முதலில் வனம் மற்றும் மலைகளில் உள்ள மனித மற்றும் நிறுவனங்களின் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். நீராதாரங்களை உருவாக்குவதாலும் காப்பாற்றுவதாலும் மலைகளின் உச்சியில் சில பல சமமுரண்பகுதிகளை (Buffer Zone) உருவாக்க வேண்டும். பயன்படுத்தாத தரிசு நிலங்களை அதன் உரிமையாளர்களிடமிருந்து அரசாங்கம் வாங்கி அவற்றைக் கானகங்களாக உருவாக்க வேண்டும். சமீப காலங்களில் வனங்களுக்கு அருகில் உள்ள தரிசு நிலங்கள் ரிசார்ட்டுகளாகவும் ஹோட்டல்களாகவும் வேறு பலவித பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன. நாம் அரசியல்வாதிகள் இது விஷயத்தில் ஒற்றுமையாகவும் சமூக பொறுப்பாகவும் இருக்க வேண்டும். ஐரோப்பிய நாடுகளில் உள்ளது போல பசுமை அரசியல் இங்கும் இருந்தால் கானகங்கள் பிழைக்கும். இந்தியாவில் நமது கட்டுமான வளர்ச்சி என்பது மேல்நோக்கித்தான் இருக்க வேண்டுமேயொழிய கிடைக்கோடாக இருக்கக்கூடாது. நமக்குத் தேவை அதிகமான திறந்த வெளியிடங்கள்தான். நமது கட்டுமான தொழில் நுட்பத்தில் அவை மிகமிகக் குறுகிக் கொண்டே போகின்றன.

நீங்கள் பறவைகள் மற்றும் அவைகளின் வாழ்க்கை முறைகளை கூர்நோக்குபவர். இந்திய வண்ணத்துப் பூச்சிகளைப் பற்றிய சில நூல்களுக்கு ஆசிரியராகவும் இருந்துள்ளீர்கள். இந்த பறவைகள் வாழ்க்கை முறைகளில் (இடம் விட்டு இடம் மாறும் பறவைகளையும் சேர்த்துத்தான்) ஏதேனும் பெரிய மாற்றங்கள் உள்ளனவா? அத்தகைய மாறுதல்கள் என்னவிதமான படிப்பினைகளை அல்லது எச்சரிக்கைகளை நமக்குக் கொடுக்கின்றன?

ஓரிடத்தில் பறவைகளோ வண்ணத்துப் பூச்சிகளோ சுற்றிலும் இல்லை அல்லது அருகி வருகின்றன என்றால் அந்த இடத்தினிலே சூழலியல் நிலையற்ற தன்மை (Ecological imbalance) உள்ளது. அதாவது அந்தச் சூழலில் இயல்புக்கு மீறிய இயற்கை வாழ்வாதாரத்தில் பாதிப்புகள் அதிகம் உள்ளது என்று பொருள்.

சில பறவை இனங்கள் முக்கியமாக நமது வீடுகளைச் சுற்றி வரும் சிட்டுக்குருவிகள் சமீப காலங்களாக அதிகம் காணப்படுவதில்லை. என்ன காரணம்?

சிட்டுக்குருவிகள் புல் மற்றும் தாவரச் சருகுகளைக் கொண்டு மிகக் குறைந்த உயரம உள்ள ஓட்டு வீடுகளில் அல்லது கூரை வீடுகளில் சூரிய ஒளிபடும் இடங்களில் முக்கியமாக மரம், செடி, கொடிகள் உள்ள இயற்கைச் சூழலுக்கருகில் கூடு கட்டி வாழும். தற்போது அப்படிப்பட்ட சூழல் மாறி விட்டது. கிராமங்களில்கூட கான்கிரீட் வீடுகள் வந்து விட்டன. சருகுகள் அருகிலே கிடைப்பதில்லை. இவற்றால் சிட்டுக்கள் மறைந்து விட்டன. முன்பெல்லாம் தானியங்கள் வழியெங்கும் சிதறிக் கிடக்கும். ஏனெனில் வயலிலிருந்து கொண்டு வரும்போது சிதறுபவை. தற்போது எல்லாம் பிளாஸ்டிக் பைகளில் கெட்டியாக பாக் செய்யப்பட்டு விடுகின்றன. மேலும் வீடுகளில் தானியங்களைக் காய வைப்பதுகூட இல்லை .பிறகு எப்படி சிட்டுக்களுக்கு உணவு கிடைக்கும்? இவையெல்லாம்தான் காரணம்.

உங்களுக்குப் பிடித்த உலக புகழ் பெற்ற கானுயிர் புகைப்படக் கலைஞர் யார்?

FW Champion. இவர் விடுதலைக்கு முந்தைய இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்களின் வனக் காப்பாளராக இருந்தார். மிக அருமையான கானுயிர் புகைப்படங்களை மிக மென்மையாக பழங்கால கேமிராவில் எடுத்துள்ளார் Trip Wire Photograph என்ற ஒரு தொழில் நுட்பத்தை ஏற்படுத்திக் கொண்டார். அது எப்படியெனில், விலங்குகளின் வழித் தடங்களில் மறைவிடங்களில் wireகளை வைப்பது. அதைத் தொடும்போது அவற்றிலிருந்து ஒரு Flash. ஒரு படம் கிடைக்கும். அதற்கு அதிகமான அறிவு, விலங்குகள் பற்றி தேவை.

Ansal Adams – Black and White landscape photographer.

Youshuf Karsh – Black and White portrait photographer : அநேகமாக உலகத்தின் அனைத்து தலைவர்களையும் சிறந்த மனிதர்களையும் படமெடுத்தவர்.

உங்களைச் சந்திக்கும்போதும் உங்கள் வீட்டில் உங்களின் மிகப் பெரிய புத்தக அலமாரிகளைக் காணும்போதும் நீங்கள் ஒரு விரிவார்ந்த வாசிப்பு உள்ளவராகவும் மிகவும் தேர்ந்த படிப்பாளியாகவும் தெரிகிறீர்கள். கானுயிர்கள் தவிர வேறு எவை பற்றி அறிவதில், படிப்பதில் அதிக நாட்டம்?

எனது பெரும்பாலான தெரிவுகள் இயற்கை, கானகங்கள், கானுயிர்கள், புவியியல் மற்றும் அதன் இயற்கை சூழல்கள். இருந்தும் கவிதைகள், தத்துவம், இயற்கை வரலாறு, இயற்கையியல் போன்றவற்றில் எனக்கு ஈடுபாடு உண்டு. மேலும் நான் மிகவும் அதிகமாக என்னை இயற்கையோடு சம்பந்தப்படுத்திக் கொள்வதால், எனக்கு பறவைகள் வாழ்வியல், தாவரவியல், தோட்டக்கலை, Taxonomy போன்றவற்றில் இயல்பாகவே நாட்டம் அதிகம். இவை எனது விஞ்ஞானபூர்வ அணுகுமுறைக்கு மிகுதியும் உதவும். எனது அடுத்த ஈடுபாடு – கானுயிர் கலைகள் எனப்படும் கானுயிர் புகைப்படங்களில், எனக்கு ஆச்சரியமாக இருப்பதெல்லாம் எப்படி ஒவ்வொரு கலைஞனும் ஒரே பொருளை எவ்வாறு தங்களின் வேறுபட்ட பார்வையில் பார்க்கிறார்கள் அல்லது எடுத்துக் கொள்கிறார்கள் என்பதுதான். நான் நாவல்களோ கதைகளோ படிப்பதில்லை. ஆனாலும் கலை, விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட சில நல்ல நூல்கள் கிடைக்கும்போது அவற்றை வாங்கி படித்துவிடுவேன்.

இயற்கை, சுற்றுச்சூழல் மற்றும் கானுயிர் இவற்றில் ஈடுபாடு உள்ள அல்லது இவை பற்றி தெரிந்து கொள்ள விரும்புகிறவர்களுக்கு ஏதேனும் சில நூல்களை அறிமுகப்படுத்த முடியுமா?

தமிழில்,

மழைக் காலமும், குயிலோசையும் – எம். கிருஷ்ணன், காலச்சுவடு

ஆங்கிலத்தில்,

1. Nature’s Spokesman – M. Krishnan, Oxford

2. Jim Corbett – Jim Corbett- All series, Oxford

3. Fall of a Sparrow – Salim Ali, Oxford

4. Nature / Wildlife series books – Ruskin Bond, Rupa

5. An eye in the Jungle – M. Krishnan, University Press

6. Chasing the Monsoon – Alexander Frater

7. Walden Pond – Henry David Thoreau

8. A sand Country Almanac – Aldo Leopold

9. Birds of South India – Richard G

நீங்கள் ஏதேனும் நுண்கலைகளில் ஈடுபாடு உள்ளவரா? உங்களது ரசனைகளைக் கூறுங்களேன்

எனக்கு மேலை நாட்டு கிராமிய இசை, இந்துஸ்தானி சங்கீதம், தென்னிந்திய செவ்வியல் இசைகள், பழைய ஹிந்தி திரைப்பாடல்கள் கேட்கப் பிடிக்கும். ஒரு நல்ல தேர்ந்தெடுத்த Collection வைத்துள்ளேன். பிற நுண்கலைகள் என்றால் Glass மற்றும் Crystalகளில் செய்யப்பட்ட பொருள்கள், Collector’s Exotic Wildlife Artifacts, கானுயிர் கலை ஓவியம் மற்றும் நூல்கள் எனக் கொள்ளலாம்.

உங்களது அடுத்த திட்டப்பணி (Project) ஏதேனும் உள்ளதா?

எனது கானுயிர் புகைப்படங்களை காட்சிப்படுத்த வேண்டும். கானுயிர் பற்றி சில புத்தகங்கள் எழுதி வெளியிடுதல். தென்னிந்தியாவில் Amphibian Project என்பதில் சேர்ந்து பணியாற்றுதல் என்பன.

உங்களுக்கு இந்த கானுயிர் புகைப்படக்கலையில் சில பிரத்யேகமான காட்சிகளை எடுக்க வேண்டும் என்றோ, அது பொருளாதார மற்றும் நேரம் பற்றிய பிரச்சினைகளால் தற்போது இயலவில்லை எனில் அது குறித்தோ ஏதேனும் ‘திட்டமிட்ட நோக்கம்’ உள்ளதா? மேலும் அது தங்களால் முடியாத பட்சத்தில் வேறு யாராவது அல்லது அரசு நிர்வாகமோ அவற்றில் ஈடுபட்டால் அது நலம் பயக்கும் என்ற அளவில் ஏதும் உள்ளதா?

அது மாதிரி திட்டமோ, விருப்பமோ எனக்கு கிடையாது. ஆனால் ஒரு ஆசை உண்டு. ஒரு குறிப்பிட்ட கானுயிர் பற்றி அதன் 365 நாட்கள் வாழ்வு, அசைவு, வாழ்க்கை முறை பற்றி 365 நாட்களும் பதிவு செய்யக்கூடிய அளவில் ஒரு புகைப்பட புத்தகம் வெளியிட வேண்டுமென்பது எனது விருப்பம். அது நிறைவேற வேண்டும்.

அடுத்ததாக எனது கடைசி விருப்பமாக இருக்கக்கூடியது. இந்த இயற்கை கானுயிர் சம்பந்தப்பட்ட எனது 50 வருட வாழ்க்கை அனுபவங்கள் பற்றி ஒரு புத்தகம் எழுத வேண்டுமென்பதுதான்.

நன்றி திரு. ஜெயராம்.

பேட்டியாளர் குறித்து

எம்.எஸ்.சௌந்தரராஜன் (M.com., B.L.,M.B.A.,CAIIB) முன்னாள் வங்கி அதிகாரி. தற்போது வழக்கறிஞர் மற்றும் சட்ட ஆலோசகர் (தொழில் மற்றும் கம்பனி சட்டங்கள்.) நிதி, சட்டம், மேலாண்மை போன்ற துறைகளில் கல்லூரிகளில் சிறப்பு விரிவுரையாளாராகவும், கம்பனிகள், மற்றும் சில பொது அமைப்புகளுக்கு சிறப்பு அழைப்பாளராகவும் இருந்து வருகிறார். தமிழ் மற்றும் ஆங்கில இலக்கியங்களில் தேர்ந்த வாசிப்பாளராகவும், தத்துவம், பயணம் தொடர்பான புத்தகங்களை விரும்பிப் படிப்பவராகவும் உள்ளார்.