இரவுக்கு முன்பு வருவது மாலை – ஆதவன்
ஆதவன் இறந்த ஆண்டு பிறந்த ஒருவனுக்கு அவருடைய கதைகளில் என்ன இருக்கப் போகிறது? இந்த நினைப்போடுதான் நான் இந்தப் புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தேன்.
தொகுப்பில் இருக்கும் ஆதவனுடைய ஆறு குறுநாவல்களும் நேரானவை. சுற்றி வளைப்புகள் இல்லை. வார்த்தை அலங்காரங்கள் இல்லை. வாசகனிடம் தான் எவ்வளவு புத்தசாலி என்று காண்பித்துக் கொள்ளும் நோக்கமில்லை. புரிந்து கொள்ளக் கடுமையான சொற்களோ, நீளமான சொற்றொடர்களோ இல்லை. ‘நான் இந்தக் கதையை இப்படிப் புரிந்துகொண்டிருக்கிறேன். என்னுடைய புரிதல் சரிதானா?’ என்று பெங்களூரில் இருந்து சென்னை நண்பருக்கு மின்னஞ்சல் அனுப்பி கேட்டுக் கொள்ள வேண்டிய தேவையில்லை.
சாதாரணமாக மனிதர்கள் பேசும் மொழி, இடையிடையே பரவியிருக்கும் ஆங்கிலம், இதற்கு மேலாக, புழக்கத்தில் இல்லாத சொற்களை வலிய நுழைத்து தன்னுடைய எழுத்தை உசத்தியாக காண்பிக்கும் எண்ணமும் இல்லை. மொதத்தில் வாசகனுக்கு எழுத்தாளனால் எந்தவிதத் தொந்தரவும் இல்லை
இவை எல்லாமே நம்முடைய கதைகள். நம்முடைய எண்ணங்கள். நாமே குஞ்சுவாகவும், லல்லியாகவும், கணபதியாகவும், சங்கராகவும் நம்முடைய வாழ்க்கைப் பாதையில் இருந்தவர்கள். இருப்பவர்கள்/ இவர்கள் நமக்கு அன்னியமேயில்லை. இசக்கியா பிள்ளைகளும் நம்மிடையே அப்பாக்களாக, மாமாக்களாக, சித்தப்பாக்களாக இருக்கிறார்கள். ராஜசேகரும் மிஸஸ்.பாண்டேவும் கொஞ்சம் அன்னியமாகத் தெரியலாம். ஆனால் அவர்களும் நமக்கு அருகிலேயேதான் இருக்கிறார்கள்.
ஒரு நாளைக்கு நான்கு வேளைகள். காலை, மதியம், மாலை, இரவு. இதில் மாலையென்பதை இன்னமும் மருத்தவர்கள் தரும் சீட்டுகளில் பார்க்க. முடிகிறது. விளையாட்டுப் பருவம் கழிந்த பின் மாலை என்பதே இல்லாமல் போய்விடுகிறது. மாலையென்பது, அலுவலகத்திலும், அல்லது வீட்டுக்குத் திரும்பும் வழியில் போக்குவரத்து நெரிசலிலும் கழிகிறது. மிஸஸ்.பாண்டே கேட்கிறார், “அதாவது, உங்களைப் பொறுத்தவரையில் மாலை நேரமே இல்லை?” ஆமாம். நமக்கு மாலை ஒரு அனுபவமாக இல்லை, அது நம்மால் அறியப்படாத ஒரு இடைப்பட்ட பொழுதாக வந்து போய் விடுகிறது.
“வாழவேண்டிய கட்டாயத்திற்கு உட்பட்டபின், அதை நம் விருப்பப்படியாவது வாழலாம் அல்லவா? ஆகவே, நாம் நம்ப விரும்புவனவற்றை நம்புகிறோம். நம்ப வேண்டியதையல்ல. பார்க்க விரும்புவதைப் பார்க்கிறோம்” என்பதே ராஜசேகர் மற்றும் மிஸஸ். பாண்டேவின் கொள்கை. வாழ்க்கையில் தலையைக் கொடுத்துவிட்டு, நம்முடைய காதைப் பிடித்துக் கொண்டு அது பாட்டுக்கு போய்க்கொண்டிருக்க, அடித்தால் அழுவதும், பரிசு கொடுத்தால், ‘இது எப்போது பறிபோகப்போகிறதோ?” என்ற கவலையுடன் சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கும் நம்மைப் போன்ற மனிதர்களுக்கு, ராஜசேகரும் மிஸஸ் பாண்டேவும் அன்னியர்கள் தான். அவர்களைப் போல் வாழவேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது, ஆனால் அதற்கான தைரியமில்லை.
இவ்வகை மனிதர்களைப் பற்றிய கேள்விகள் ஒரு விதமாகவும், பதில்கள் வேறு விதமாகவும் இருக்கின்றன : ’இவர்களால் மட்டும் எப்படி வாழ்க்கையின் துன்பங்களிலிருந்தும், சலிப்பிலிருந்தும் விலகியிருந்து வாழ்க்கையை அனுபவிக்க முடிகிறது?’ என்று கேட்பவர்கள் இருக்கின்றனர், . இந்தக் கேள்வியைக் கேட்காதவர்கள், ‘இவர்களுக்கு எதைப் பற்றியும் கவலையில்லை, எந்தப் பொறுப்பையும் சுமப்பதில்லை, வாழ்க்கை துன்பமாக இருக்கும்போது அதைப் பற்றிக் கொஞ்சமும் அக்கறையில்லாமல் தாங்கள் விரும்பும் காரியங்களில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்கள்.’ என்ற பதிலை வைத்திருக்கிறார்கள்.
ஆதவன் இந்த இரண்டு பார்வைகளையும் வைப்பதில்லை. வாசிப்பவனிடம், அவர்களிடம் ஒரு கவர்ச்சியை ஏற்படுத்துவதும் இல்லை, அவர்களை ஊதாரிகளாகவும் பொறுப்பற்றவர்களாவும் சித்தரித்து கீழிறக்கிவிடவும் இல்லை. சாலையில் முதன் முறையாகச் சந்தித்துக் கொள்ளும் ஆணும் பெண்ணும், உரையாடுகிறார்கள். தங்களுடைய கருத்துகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள். தங்களுக்குள்ளேயே ஒருவர் மற்றொருவரை எடை போடுகிறார்கள். ஒன்றாக நீந்துகிறார்கள். நடன விடுதிக்குச் செல்கிறார்கள். காமத்தைப் பற்றி எழுதுவதும் காமத்தை தூண்டுவதுபோல் எழுதுவதும் ஒன்றல்ல. ஆதவன் பின்னதைச் செய்யவில்லை.
கணபதியும் சங்கரும் வேறு வேறு கதைகளில் வந்தாலும்கூட அவர்களுடைய எண்ணங்களிலும் கேள்விகளிலும் வித்தியாசமில்லை. கணபதி கிராமத்திலிருந்து ரகரத்திற்கு உத்தியோக ரீதியாக வந்தவன். சங்கர் நகரத்து ஆசாமி. இருவருக்கும் நகரம் சிறை போலிருக்கிறது. வேலைக்காக புனே, மும்பை, கொல்கத்தா வரை செல்லும் பலர் சில வருடங்களிலேயே சென்னைக்கு மாற்றல் வாங்கிக் கொண்டு வந்துவிடுகிறார்கள். ‘என்னயிருந்தாலும் நம்ம ஊர்ல இருக்கிற மாதிரி இருக்குமா?’ என்பதே அவர்களுடைய காரணம்.
வளர்ந்த இடத்தை விட்டு வாழ்வது என்பது பலருக்கு மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. தற்கொலைகள் அதிகரித்திருப்பதற்கு இதுவும் ஒரு காரணம் என்கிறார்கள். என்னுடைய நண்பர் ஒருவர் சொன்னார் “என்னுடைய படிப்புக்கு ஏற்ற வேலை என்னுடைய கிராமத்தில் கிடைக்கவில்லை என்று சொல்வதெல்லாம் பொய். நகரத்தில் கிடைக்கும் வசதிகளுக்கும், பணத்திற்கும், நகரத்தில் வாழ்வதால் சொந்த ஊரில் கிடைக்கும் மரியாதைக்கும் ஆசைப்பட்டுதான் நகரத்திற்கு வந்திருக்கிறோம்”. நண்பருடைய கருத்து விவாததிற்குரியது. ஆனாலும், நகரத்திற்கு வந்துவிட்ட ஒவ்வொருவரும் கிராமத்தில், தன் சொந்த ஊரில் எதையோ இழந்துவிட்டதாக உணர்கிறான்.
கணபதிக்கு டெல்லி பிடிக்கவில்லை. அம்மனிதர்களுடன் ஒத்த ரசனையை உருவாக்கிக் கொள்ள முடியவில்லையாதலால், அவர்களுடன் அவனால் கலக்க முடியவில்லை. குடும்பத்திலும், அலுவலகத்திலும் தன்னுடைய தனித்தன்மையை அவனால் நிலைநாட்ட முடியவில்லை. மேலும், ‘சாஸ்தாவுக்குக் கோவில் கட்டிய சங்கரசுப்பிரமணி ஐயரின் கொள்ளுப்பேரன், சமஸ்கிருதப் புலவர், இசைமேதை, சுந்தரேச ஐயரின் பேரன்’ என்ற எண்ணம். அகந்தை என்றும் கொள்ளலாம். அறிவுஜீவிகளான தாத்தாக்களுக்குப் பேரனான தான், அந்த நிலையை அடைய முடியாமல், அவர்களுடைய ஞானத்தின் வாரிசாக முடியாமல், எங்கோ டெல்லியில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்ற புழுக்கம்.
தில்லிக்காரனான சங்கருக்கு தன்னுடைய பாதை, டெல்லியில் தொடங்காமல் திருவையாறில் தொடங்கியிருக்க வேண்டும் என்ற ஆசை. நகரங்கள் போகும் அசுரவேகத்திலேயே கிராமங்களும் பின் போவதில் அவனுக்கு இஷ்டமில்லை. அவனுடைய சித்தப்பா சொல்கிறார், “உன்னுடைய அழகுணர்ச்சிக்குத் தொந்தரவு ஏற்படுகிறது என்பதற்காக, சில மனிதர்களும் சில இடங்களும் வளரவே கூடாது என்பாய் போல் இருக்கிறது.”
சங்கரோ, “நான் பயணம் தொடங்கிய கட்டமே தவறானதாக, என் பாதையே தவறானதாக, என் சிந்தனைக்குத் தோன்றுகிறது” என்கிறான்.
“உன் பாதையில் ஏற்பட்ட தோல்விக்குக் காரணம் கற்பிப்பதற்காக, நீ பாதையே தவறு என்கிற ரீதியில் சிந்திக்கத் தொடங்குகிறாய். இந்தச் சிந்தனை உனக்கு இதமாக இருக்கிறது. ஏனென்றால், உன் பொறுப்புகள் தட்டிக் கழிக்கப்படுகின்றன”
“எந்த பாதையாய் இருந்தாலென்ன? எங்கே தொடங்கி, எங்கே முடிந்தாலென்ன? உன் பயணத்தில் உனக்கு சிரத்தையும் லயிப்பும் இருப்பதுதான் முக்கியம்”
”எதிலுமே உன்னைப் பூரணமாக ஆழ்த்திக் கொள்ள வேண்டும். பூரண சமர்ப்பணத்தில் பந்தங்களே இருக்காது, பந்தங்களைப் பற்றி நினைப்பது ஒரு பக்குவமற்ற நிலை.”
இதெல்லாம் சித்தப்பா சங்கருக்கு உபதேசிப்பது. ஏதோ நீதி போதனை போலத் தெரிகிறதா? ‘கர்மயோகம் – ஆதவன் வெர்ஷன்’, என்றுகூட எடுத்துக் கொள்ளலாம்.
பதின் பருவத்து காதலை அடைய முடியாமல், காதலியின் நினைவிலேயே இத்தனை வருட இன்ப துன்பங்களைக் கண்டவர், இசக்கியா பிள்ளை. இழந்த காதல் மீண்டும் வசப்பட வாய்ப்பு வந்திருக்கிறது. அதில் ஆதரவு பெற, இசக்கியா பிள்ளையும் தயாராகிக் கிளம்புவதுதான் நதியும் மலையும்.
‘இரவுக்கு முன்பு வருவது மாலையில்’ சொல்கிறார்,
“உங்கள் வாழ்க்கையில் எந்தக் கட்டத்தில் காதல் குறுக்கிட்டாலும் நீங்கள் அதைப் பயன்படுத்திக் கொண்டு முழுமையான வாழ்க்கை வாழ வேண்டும். எதிர்ப்புக்கும் பரிகாசத்துக்கும் பயந்தோ, நியதிகளுக்கும் கோட்பாடுகளுக்கும் பின்னால் ஒளிந்துகொண்டோ, சுயகவுரவம், குலப்பெருமை முதலிய சக்திகளில் சிக்கிக் கொண்டோ, காதலை நழுவவிட்டுவிடாதீர்கள். வாழ்க ராஜா சந்தனு! வாழ்க சம்யுக்தை! வாழ்க ஷாஜஹான்! வாழ்க வின்ட்ஸர் பிரபு! வாழ்க இளவரசி மார்கரெட்! வாழ்க ஜாக்குலீன் ஒனாஸிஸ்!”
நாம் இசக்கியா பிள்ளையையும் சேர்த்துக் கொள்வோம்.
சிறகுகள், பெண் தோழி தலைவி, இரண்டும் இரண்டு வெவ்வேறு பெண்களின் வாழ்க்கை மாறுதல்களைச் சொல்லும் கதைகள். இத்தொகுதியில் இருக்கும் எல்லாக் கதைகளிலும், கதாபாத்திரங்களின் எண்ணங்களே கதையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கின்றன.
ஒவ்வொரு பெண்ணும் தன்னுடைய பிறந்த வீட்டிலிருந்து தனக்காகக் கொடுக்கப்படும் சிறகுகளோடு புக்ககம் போகிறாள். அவளுடைய கல்லூரி வாழ்க்கைக்கும் திருமண வாழ்க்கைக்கும் இடையே அவள் கடக்கும் சிந்தனைகளே சிறகுகள். குஞ்சுவின் எண்ணங்கள் முழுவதும், தன்னுடைய நிலையையும், அந்த குடும்பத்தில் தனக்கு முந்தைய பெண்களான அம்மா மற்றும் பாட்டிகளின் நிலையையும் சதா ஒப்பிட்டுக் கொண்டேயிருக்கின்றன. முதலில் வேலையைப் பற்றியெல்லாம் கவலைப்படாத குஞ்சு, நாட்போக்கில் தன்னை நிரூபிக்கவும், தனக்கென்று ஒருவனை தேடிக்கொள்ளவும் தான் வேலைக்குப் போவதே சரி என்று முடிவு செய்கிறாள். வேலை தனக்கான சிறகைத் தரும் என்பது அவளுடைய எதிர்பார்ப்பு. ஆனால், நிஜத்தில் வேலையை அவளால் எதிர்கொள்ள முடியவில்லை. இடையே அவளது தோழிகள் தத்தமது சிறகுகளைக் கண்டு கொள்கிறார்கள். கதையின் மையம் என்பது குஞ்சுவின் வாழ்க்கை இல்லை. அது குஞ்சுவிற்கும் அவளது பாட்டிகளுக்குமான, ஏன் நமக்கும் நம்முடைய தாத்தா பாட்டிகளுக்குமான பந்தத்தைச் சொல்கிறது.
ஒரு அயல் நாட்டவனைக் திருமணம் செய்து கொண்ட குஞ்சுவின் தோழி சொல்கிறாள், “நம் நாட்டில் பெரியவர்கள் சிறியவர்கள் வாழ்க்கையில் ரொம்பக் குறுக்கிடுகிறார்கள். இல்லை?” “குழந்தைகளை ஒரு குறிப்பிட்ட வயதுவரை வளர்த்துவிட்டு அவர்கள் போக்கில் விட்டுவிடவேண்டியதுதானே! அது கிடையாது. அவர்களுடைய உத்தியோகம், கல்யாணம், குடித்தனம், குழந்தை வளர்ப்பு எல்லாவற்றிலும் இடைவிடாமல் குறுக்கிட்டுக் கொண்டே இருகிறார்கள். அமெரிக்காவிலோ, ஜெர்மனியிலோ, ஜப்பானிலோ ஏற்பட்டிருப்பது போன்ற பிரமிக்கத்தக்க முன்னேற்றங்களோ மாறுதல்களோ, நம் நாட்டில் ஏற்படாததற்கு இதுதான் காரணம். ஒவ்வொரு தலைமுறையும் பிந்தைய தலைமுறைகளின் நிழலிலேயே வளருகின்றன. சுதந்திரமான மனோபாவங்களும் புதிய சிந்தனைகளும் வாய்ப்போ ஊட்டமோ இன்றிப் பழமையின் சுமைக்கடியில் நசுங்கிப் போகின்றன. ஒரு ஆயிரம் பேராவது துணிந்து இந்தச் சுமையைத் தலையைச் சுற்றி எறிந்துவிட்டுப் புத்தம் புதிதாகத் தொடங்கினால்தான் நமக்கு விடிவுகாலம்”.
முந்தைய தலைமுறைகள் வெறும் சுமைகள். நாம், நம் அப்பா அம்மா, தாத்தா பாட்டி வழி வந்தவர்கள் என்று சொல்லிக் கொண்டிருப்பதெல்லாம் நம்மைச் சிறைப்படுத்திக் கொள்வதற்குச் சமம். அவர்களுடைய வழி வேறு நம்முடையது வேறு. நாம் அவர்களின் தொடர்ச்சியாக மட்டுமே இருந்துவிடாமல், நம்முடைய வாழ்க்கையை உருவாக்கிக் கொள்ளவேண்டும். முந்தைய தலைமுறை என்பதே பெரும் சுமை. அதை இறக்கிவைத்துவிடுங்கள் என்ற கோணத்திலும் நாம் ஆதவனோடு சேர்ந்து சிந்திக்கலாம் போல.
“தாத்தா சுமை, பாட்டி சுமை, அப்பா சுமை, அம்மா சுமை – எல்லாமே சுமையா? அப்படியானால் நானே எனக்குச் சுமைதானே? சுமைக்குப் பிறந்தது சுமை. எனக்கு நான் சுமை. என் குழந்தைகளுக்கும் அவர்களுடைய குழந்தைகளுக்கும் நான் சுமை. இது ஒரு சுமையென்றால், தவிர்க்க முடியாத சுமை; சுமந்தாக வேண்டிய சுமை.”
ஒவ்வொரு பழைய தலைமுறையும், தனக்கு அடுத்து வரும் தலைமுறையின் மீது வைக்கும் அவநம்பிக்கையும், ஒவ்வொரு புதிய தலைமுறையும் தனக்கு முந்தைய தலைமுறைகள் பற்றிக் கொண்டிருக்கும் அலட்சியமும் இருந்து கொண்டேதான் இருக்கின்றன. குஞ்சுவைப் பொறுத்தவரை, தன் தாத்தா பாட்டியின் சுமை தன்னைக் காப்பாற்றியதாக எண்ணுகிறாள். “எத்தனையோ தடவைகள் எத்தனையோ திசைகளில் பறக்க வேண்டுமென்ற உந்துதலும் வெற்றியும் என்னை ஆட்கொண்டு ஆட்டி வைத்தபோதெல்லாம் என் அதிர்ஷ்டம் என்னை இடறிவிழாமல் காப்பாற்றியது. இப்போது சரியான திசை எனக்குக் கிடைத்துவிட்டது.”
சிறகுகள், இந்தத் தொகுப்பிலேயே பெரிய குறுநாவல். ஆதவனுடைய கதைகளில் அதிகம் காணப்படுவது உரையாடல்கள். இரண்டு பேருக்கு நடுவே நடைபெறுவதைவிட, கதாபாத்திரங்கள் தங்களுக்குள்ளாகவே நடத்திக் கொள்ளும் உரையாடல்கள்.
“சிந்தனைகள் நமக்கு நாமே கூறிக்கொள்ளும் ஒருவித சமாதானங்கள்” என்பது ஆதவனுடைய கருத்து.
ஆதவன் அதிகமாகப் பேசுகிறார் அல்லது பேசிக்கொண்டேயிருக்கிறார் என்பவர்கள் தங்கள் சிந்தனையை ஒரு முப்பது நொடி கட்டுப்படுத்திப் பார்த்துக் கொள்ளட்டும்.
பெண், தோழி, தலைவி – மற்றுமொரு பெண்ணின் வாழ்க்கைப் பாதை. வேலைக்குப் போகும் பெண், தனக்குள்ளே எழும் மாற்றங்களைப் பற்றிப் பேசுகிறாள். ஆணோ பெண்ணோ, தன்னுடைய சொந்தக் காலில் நிற்கத் துவங்கும்போது, அவர்களுடைய கருத்துக்களை, அவை எவ்வளவு மோசமானதாக முதிர்ச்சியில்லாமல் இருந்தாலும்கூட, வெளியுலகிற்கு எடுத்து வைக்கத் துவங்குகிறார்கள். அதுவரை தான் பிடித்துக் கொண்டிருந்த கைகளை உதறிவிட்டு ஓடத் துடிக்கிறார்கள்; அல்லது விலகியிருக்க முடிவு செய்கிறார்கள். ஒருத்தி பெண்ணாக இருந்து, தோழியாக மாறி, பின் தலைவியாக மாறும் போது அவளுடைய சுற்றம் அவளை எப்படிப் பார்க்கிறது? குறிப்பாக ஆண் எப்படிப் பார்க்கிறான். தன்னுடைய குழந்தையாக, சகோதரியாக, தோழியாக, மனைவியாக ஒரு ஆண் பெண்ணிடம் எதிர்பார்ப்பது ஒரு சாதுவான பூனைக்குட்டியைத்தான். அவளைத் தலைவியாக ஏற்றுக் கொள்வதென்பது அவனுக்கு உவப்பாக இல்லை. “இவர்களுக்கு வேண்டியது ஒரு பூனைக்குட்டிதான். அண்ணா, சீது, இந்த செல்வராஜ். எல்லாரும் ஒரே மாதிரிதான்.”
ஆண்களின் மனநிலையைத் தோலுரித்துக் காட்டுகிறார், சவுக்கால் அடிக்கிறார் என்றெல்லாம் சொல்லவரவில்லை. நிஜத்தை நிஜமென்று காட்டுகிறார். நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் நிஜத்தின் மீது, ஒரு கவர்ச்சியையோ ஒரு கலவரத்தையோ, பயத்தையோ அவர் உருவாக்குவதில்லை. “நானென்ன, என்னிடமிருந்தே தப்ப முயன்று கொண்டிருக்கிறேனா, அல்லது என்னைக் கண்டுபிடிக்கவா?” என்று அவர் தனக்குக் கேட்டுக் கொள்ளும் கேள்வியை, படிக்கும் அனைவருக்கும், பரப்பிவிடுகிறார். அந்தக் கேள்விக்கு விடை கண்டுபிடிப்பதுதான் நம்முடைய சுமை. நம்மை முன்னெடுத்துக் கொண்டுசெல்லப் போகிற சுமை. சலிப்பாக இருந்தாலும் இதை சுமக்காமலிருக்க முடியாது.
இந்த இதழில் வெளியாகியுள்ள ஆதவன் குறித்த பிற படைப்புகள்
புழுதியில் வீணை – http://solvanam.com/?p=21258
பெரிய வீட்டின் ஒரு சிறிய பிறைக்குள்… – ஆதவனை வாசிப்பதில் உள்ள அடிப்படைச் சிக்கல் – ஓர் உரையாடல் – http://solvanam.com/?p=21325
ஆதவனின் புனைவுலகம் – http://solvanam.com/?p=21223
ஆதவனுக்காக… – http://solvanam.com/?p=21303