ஹு இஸ் கம்பர் ?

வீட்டுக்கு அருகில் இருந்த நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த பெண் குழந்தைகள் அதிகம் படிக்கும் ஒரு காண்வெண்டில் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த எனது மகள், சில வருடங்களுக்கு முன்னால், ஒரு மாலை வேளையில், என்னிடம் இந்தக் கேள்வியைக் கேட்டாள். கேள்வி ஆங்கிலத்தில் இருப்பதில் இருந்தே தெரிந்திருக்கும் அவள் எந்த மொழி வழிக் கல்வி முறையில் பயின்று வந்தாள் என்பது. மிகவும் முயற்சி செய்து, எனது துணைவியாரை சமாதானப்படுத்தி மகள், முதல் மொழியாக தமிழைப் படிக்குமாறு தெரிவு செய்து இருந்தேன். எனது மகள் தமிழில் முறையாக எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தேன்.

அலுவலக வேலையாக பல நாட்கள் ஊர் சுற்றிக் கொண்டிருக்கும் நான், வீட்டில் இருக்கும் நேரம் மிகவும் குறைவு. அப்படியே வீட்டில் இருந்தாலும், மகளுடன் உரையாடும் நேரமும் மிகவும் குறைவு. அப்படி மிகக் குறைந்த கணங்களில் நடைபெற்ற ஒரு உரையாடல்களில் கம்பரைப் பற்றிய பேச்சு வந்த பொழுது என் மகள் கேட்ட கேள்வி – ஹு இஸ் கம்பர்?. அரண்டு போய் விட்டேன். ஏறத்தாழ பத்து வருடங்கள் (இள நிலை வகுப்புகள் உட்பட) ஒரு பள்ளியில் தமிழைப் படித்து வந்துள்ள எனது மகள் கம்பர் யாருப்பா? என்று கேட்ட பொழுது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. ஒரு வேளை ஆர்வக் குறைவாக படிப்பதனால், கம்பரைப் பற்றி தெரியவில்லையா என்ற சிந்தனை வந்தது. நிஜம்மா கம்பர் யார் என்று உனக்குத் தெரியாதா? – இது நான். ‘உண்மையிலேயே தெரியாது, அவரைப் பற்றி கேள்விப் பட்டதே இல்லை’ – இது மகளின் பதில்.

அவளுடைய பழைய தமிழ்ப் புத்தகங்களை எடுத்துப் பார்த்தேன். கம்பர் எழுதியுள்ள ஒரு செய்யுள் கூட அதில் இடம் பெற வில்லை. அது போகட்டும், கம்பரைப் பற்றிய ஒரு அறிமுகம் கூட அந்தப் புத்தகங்களில் இடம் பெற்று இருக்க வில்லை. ‘யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல், வள்ளுவன் போல், இளங்கோவைப் போல், பூமி தனில் யாங்கணுமே பிறந்ததிலை’ என்று பாடிய பாரதியின் வரிகள் நினைவுக்கு வந்தது. பாரதியின் இந்த நற்சான்றிதழ் கூட இந்த பாடப் புத்தகங்களை உருவாக்கும் நமது கல்வியாளர்களுக்கு போதவில்லையா? என்று தோன்றியது.

பாரதியின் நகலைப் போற்றிப் புகழும் இந்த அரசாங்கங்கள், பாரதியையும் ஒரு நூற்றாண்டு காலம் கண்டு கொள்ள வில்லை என்பதும் நினைவுக்கு வந்தது. வள்ளுவரும், இளங்கோவடிகளும் மட்டும் தப்பித்தனர். அந்தப் பாட புத்தகங்களைப் புரட்டிய பொழுது, தேவாரம், திருவாசகம், கம்ப ராமாயணம், திருவிளையாடல் புராணம் போன்ற தமிழ் நூல்களில் இருந்து எந்தப் பகுதியும் இடம் பெறவில்லை என்பது வியப்புக்கு உரியதாக இருந்தது.

..2

நான் ஏறத்தாழ நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு, பள்ளியில் பயின்று வந்த நேரம், கம்ப ராமாயணம், பெரிய புராணம், சீறாப் புராணம், தேம்பாவணி போன்ற சமயம் சார்ந்த நூல்களில் இருந்து பத்து செய்யுள்கள், ஒவ்வொரு வகுப்பு பாட நூலிலும் இடம் பெற்று இருக்கும். அதில் ஒன்று மனப்பாடம் செய்ய வேண்டிய செய்யுளாகவும் இருக்கும். ஏன் இந்த இருட்டடிப்பு செய்ய வேண்டும் என்பது எனக்கு புரியவில்லை. சைவமும், வைணவமும் தமிழுக்கு மிகப் பெரிய தொண்டு செய்துள்ளது. இதை மறைப்பதினால் என்ன பயன் என்பதும் தெரியவில்லை.

எனது மகள் தமிழை முதல் மொழிப் பாடமாக தெரிவு செய்து படிக்க வேண்டும் என்று நினைத்த பொழுது, எனது மனைவியிடம் இருந்து பெரும் எதிர்ப்பு கிளம்பியது. இன்றும் அது பற்றிய பேச்சுக்கள் எழும் பொழுது, எனது தெரிவுகள் குறித்த ஆகக் குறைவான மதிப்பீடுகள் அவரிடம் இருந்து வரும்.

நானும் ஒன்பதாம் வகுப்பு வரை தமிழ்ப் பாடத்தை அதிக விருப்பத்துடன் படிக்க வில்லை. அதற்குக் காரணம் சரியான ஆசிரியர்கள் கிடைக்காததே என்பது எனது தாழ்மையான கருத்து. ஒன்பதாம் வகுப்பு வரை தமிழ் பாடத்தில் குறைந்த பட்ச மதிப்பெண்கள் பெறுவதற்கு கோனார் உரை நூல்களும், அதை என்னால் மனப்பாடம் செய்து பிழையின்றி எழுத முடிந்ததும் தான் உதவியது என்பதில் ஐயமில்லை.

ஒன்பதாம் வகுப்பில், எங்கள் தமிழ் ஆசானின் நிஜப் பெயர் என்ன என்பது பல மாணாக்கர்களுக்குத் தெரியாது. அவர் ‘பர்பி’ என்றே மாணவர்களால் அறியப்பட்டு இருந்தார். நாங்கள் கடைகளில் ஐந்து பைசா கொடுத்து வாங்கும் அந்த தின்பண்டத்தின் பெயர் அவருக்கு எப்படி சூட்டப்பட்டது என்பது எனக்கு இன்று வரை தெரியாது. அடுத்த வகுப்பு யாருடையது என்று கேட்ட ஒரு ஆசிரியரிடம், ‘பர்பி வாத்தியாருடையது’ என்று கூறி, பிரம்படி பட்டது இன்றும் நினைவில் இருக்கிறது. ஒரு கிழவிக்காக பிட்டுக்கு மண் சுமந்த இறைவனே, அரசனிடம் பிரம்படி பட்டார். நான் அடிபட்டதில் புதுமை ஏதும் இல்லை.

அவருடைய குரலும் மிகவும் மெலிதாக இருக்கும். வகுப்பில் மிக உயரமான மாணவனான நான் கடைசி வரிசையில் அமர்ந்து இருப்பதால் பாதி நேரம் அவர் என்ன பாடம் நடத்தினார் என்பதே எனக்குத் தெரியாது. ஆனால் மிகவும் நல்ல மனிதர். என் கடன் பணி செய்து கிடப்பதே என்ற வாக்கியத்திற்கு இணங்க, ஒரு மணி நேரம் அவர் பாடம் நடத்தி விட்டு சென்று விடுவார். கோனார் உரை நூல் எங்களை காப்பாற்றி விடும். எங்கள் வீட்டிற்கு பால் கொண்டு வரும் கோனாருக்கும், இந்த உரை நூல்களுக்கும் என்ன தொடர்பு என்பது பற்றி நான் இளமைக் காலங்களில் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்து இருக்கிறேன்

பத்தம் வகுப்பிற்கு வந்த பொழுது ஒரு புதிய தமிழ் ஆசான், எங்களுக்கு வகுப்பு எடுக்க வந்தார். நிஜமாகவே அவர் ஆசான் தான். தூக்கி வாரிய வெள்ளைக் கேசம். நெற்றி நிறைய திருநீறு. சந்தனம் அல்லது மஞ்சள் கலரில் ஜிப்பா. வெள்ளை வேட்டி, கனமான குரல். அவர் வகுப்பில் நுழைந்தாலே களை கட்டி விடும். உரை நடைப் பகுதியை அவர் அதிகம் பாடம் எடுக்க மாட்டார். ‘அதில என்னல பாடம் எடுக்க இருக்கு. நீயே படி. கோனார் இருக்காரு. அதுவும் புரியலன எங்கிட்ட கேளு’ – இது தான் அவர் கொடுத்த விளக்கம்.

..3

செய்யுள் பகுதி மட்டுமே அவர் பாடம் எடுப்பார். ஒரு நாளும் அவர் பாட நூல்களை வகுப்பிற்கு எடுத்து வந்து நாங்கள் பார்த்தது இல்லை. மடை திறந்த வெள்ளமென அவர் வாயில் இருந்து பாடல்களும், விளக்கங்களும், அதை ஒட்டிய குட்டிக் குட்டிக் கதைகளும் புறப்படும். ‘நாகமது நாகமுற நாகமென நின்றான்’ என்ற கம்பனின் வரிகளை அவர் ஒரு மணி நேரம் விளக்கினார். மகுடிக்கு கட்டுப் பட்ட நாகமென நாங்கள் இருந்தோம்.இன்றும் ஜெயமோகன் இணைய தளத்தில், நாஞ்சில் நாடன் ஊட்டி முகாமில் நிகழ்த்திய கம்ப ராமாயண உரை பற்றிய இடுகைகளப் படிக்கும் நேரம், எதையோ இழந்து விட்ட சோகம் மனதில் பரவுகிறது. அதற்கான அஸ்திவாரம் இட்டவர் அந்த வாத்தியார் தான்.

‘அன்ன மாமலையை அடுத்திருந்தே கண்டனர், அதனை அவன் எடுத்ததையும் கண்டிலர், உண்டதையும் கண்டிலர்’ என்ற திருவிளையாடல் புராண வரிகளை அவருக்கே உரித்தான அங்கதத்துடன், குட்டிக் கதைகளுடன் அவர் விவரித்த பொழுது முழு புராணத்தையும் படிக்க வேண்டும் என்ற ஆவல் எங்களுக்கு ஏற்பட்டது. எங்களைப் பொருத்த வரையில் தமிழ் இலக்கணம் ஏழரைச் சனியை விட ஒரு பெரிய கண்டம். தேமாவையும், புளிமாவையும் அவர் எங்களுக்கு கரைத்துப் புகட்டினார்.

அது போன்ற ஆசிரியர்களை நான் கண்டதில்லை. ‘கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்’ என்ற நிலையில் இருந்தேன். பள்ளி இறுதித் தேர்வில் மாநில அளவில் தமிழில் அதிக மதிப்பெண்கள் நான் வாங்கினேன் என்றால், அது அந்த வாத்தியார் எனக்கு அளித்த கொடை. பாட திட்டத்திற்கும் வெளியே, சிறு சிறு தனிப்பாடல்களையும், எங்களுக்கு அறிமுகப் படுத்தியதும் அவர் தான்.

திருவரங்கக் கலம்பகத்தில் ‘பேச வந்த தூத! செல்லரித்த ஓலை செல்லுமோ’ என்ற மறம் தலைப்பினால் ஆன பாடலை, கனமான குரலில், வேகமாக அவர் எடுத்துரைத்த அன்று நாங்கள் , ‘வீரபாண்டிய கட்ட பொம்மன்’ பட இடை வேளையில் அனைவரும் தமது காலை ஒரு அரை அடி தூக்கி நடப்பது போல நடந்தோம். இடையில் ஒரு வாள் இருப்பது போல ஒரு நினைப்பு.

அது தமிழின் சிறப்பு. தகுந்த பாடத்திட்டங்களை வகுத்துத் தந்த அந்த நாளைய கல்வியாளர்களின் தொலை நோக்கு. எமது ஆசானின் திறமை. அது எனது மகளுக்கு கிடைக்க வில்லையே என்பதில் மிக வருத்தம். இன்னும் அடுத்த தலைமுறைக்கு எதுவும் கிடைக்காதோ என்ற அச்சமும் வருகிறது.

எனது மகள் பதினொன்றாம் வகுப்பில் தமிழை விட்டு விட்டு ‘பிரெஞ்சு’ மொழிக்கு மாறி விட்டார் என்பது கொசுறு செய்தி. அவராவது ஆனந்த விகடன், தினமணி படிக்கும் அளவிற்கு இருக்கிறார் என்பது மகிழ்ச்சியான செய்தி. இன்னும் பத்து வருடங்கள் கழித்து பிறக்கப் போகிற எனது பேத்தி, ‘வாட் இஸ் தமிழ் கிராண்ட்பா?’ என்று கேட்டால் நான் வியப்பு அடைய மாட்டேன். அது எமது ஊழ் வினை. உறுத்து வந்து ஊட்டுகிறது என்ற சிலப்பதிகார வரிகளால் ஆறுதல் கொள்வேன்.