ஆயிரம் தெய்வங்கள் – இலியத் – ஒடிஸ்ஸே

இலியத் – ஒடிஸ்ஸே

ஹோமரின் காவியப் படைப்பான இலியத் – ஒடிஸ்ஸே இந்திய காவியங்களான மகாபாரதம், ராமாயணம் ஆகிய இரண்டின் அவியல் போலத் தோன்றுகின்றன. இலியத்தின் கதை ராமாயணத்தை நினைவுபடுத்தினாலும்கூட, ஒன்றுபட்ட கதை நிகழ்ச்சி அப்படியே ஒரு பாரதப் போராகும்.

இலியத் காவியத்தின் வரலாற்றுக்கு டோரியன் படையெடுப்புக்கு முன்னர் அக்கேயன் காலத்தில் ஹீராக்ளீஸின் வாரிசுகள் ஆர்கோஸ் அல்லது மைசீன் நாட்டு அரசுரிமையை நிலைநாட்டியபோது அந்நாட்டு இளவரசியை ஃப்ரைஜீயாவில் வாழ்ந்த ட்ரோஜன் பழங்குடிக் கூட்டம் கடத்திச் செல்ல, அந்த இளவரசியை மைசீன் (கிரேக்க) வீரர்கள் மீட்ட கதையே ஹோமரின் தெய்வீகக் காவியமானது. ஹோமர் இதை எழுதும்போது நேராகக் கதைக்குள் வராமல் காளிதாசரின் ரகுவம்சம் போல் கிரேக்க நகரங்களின் முன்னாள் மன்னர்களின் சகோதரக் கொலைகள், சதிகள், பழிச் சொற்களையெல்லாம் விவரித்துள்ளார்.

இடமின்மை காரணமாக அவற்றையெல்லாம் ஓரம் தள்ளிவிட்டு கதைக்குள் நுழைவோம். ஹோமர் படைத்த எல்லா கதாநாயகர்களும் தெய்வீக அருள் பெற்றவர்களாகவோ, தெய்வ வாரிசுகளாகவோ படைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இலியத்தின் கதாநாயகி ஹெலன் உண்மையில் தெய்வத்தின் தெய்வமான ஸீயஸ்ஸின் வாரிசு. இதை முன்பே கவனித்திருக்கிறோம். அதிகாரப்பூர்வமான கிரேக்க இளவரசி, டைன்டேரியஸின் மகள். இவள் மாபெரும் அழகி. இவளை எப்படி மணம் செய்விப்பது என்பதில் சிக்கல் ஏற்பட்டது.

கிரேக்க தேசத்தில் உள்ள பல்வேறு நகர மன்னர்களும் நான் நீ என்று ஹெலனை மணம் செய்து கொள்வதில் போட்டி போட்டனர். ஹோமரின் காவியத்தில் ஒடிஸ்ஸே மிகவும் முக்கியமான கதாநாயகன். அதிபுத்திசாலியும்கூட. ஒடிஸ்ஸே இதாகா நகர இளவரசன். இவன் ஒரு யோசனை கூறினான். எல்லா நாட்டு இளவரசர்களையும் அழைத்து சுயம்வரம் வைக்கும்படியும் ஹெலன் யாரைத் தேர்வு செய்கிறாளோ, அவனே அவளை அடையட்டும் என்று கூறினான் அவன்.

ஒடிஸ்ஸேயின் சுயம்வர யோசனையைப் போட்டியாளர்கள் அனைவரும் ஏற்றனர். அவனது யோசனைப்படியே போட்டி மைசீனில் நிகழ்ந்தது. இந்த சுயம்வரத்தில் ஸ்பார்ட்டா இளவரசன்
மெனலாஸ் வெற்றி பெற்றான். மெனலாஸும் ஹெலனும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தபோது, கிரீட்டில் மெனலாஸின் தாத்தா கெட்ரீயஸ் இறந்த செய்தி வரவே, அவன் ஹெலனைவிட்டுப் பிரிய நேர்ந்தது.

மெனலாஸ் இல்லாத சமயம் பார்த்து அஃப்ரோடைட் தெய்வ அழகி பாரிஸுக்குத் தகவல் வழங்கவே, அந்த வாய்ப்பைப் பாரிஸ் பயன்படுத்திக் கொண்டான். உலக அழகி போட்டியில் பாரிஸ் நீதிபதியாக அமர்ந்து அஃப்ரோடைட்டைத் தேர்ந்தெடுக்கும்போது அவள் பாரிஸுக்கு ஹெலனை வழங்குவதாக வாக்குறுதி அளித்திருந்தாள். அந்த வாக்குறுதியை அவள் அளிக்கும்போது ஹெலன் கன்னியாக இருந்தாள்.

இப்போது ஹெலன் மணம் புரிந்துகொண்ட நிலையிலும் தான் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயம் அஃப்ரோடைட்டுக்கு இருந்தது. இலியத் போர் நிகழ வேண்டும் என்ற விதி அவளைச் செலுத்தியது. பாரிஸைப் பார்த்த மாத்திரத்தில் ஹெலன் தன்வசமிழந்தாள். ஹெலனுக்கு மெனலாஸ் மூலம் பிறந்த ஹெர்மியான் என்ற மகள் இருந்தாள். கட்டிய கணவனையும் பெற்ற மகளையும் கைவிட்டு ஹெலன் பாரிஸுடன் ஓடிப் போவதாக முடிவெடுத்தாள்.

அவள் சம்மதத்துடன் பாரிஸ் அவளை ட்ராய் நகருக்கு அழைத்துச் செல்கிறான். கிரீஸில் இருக்கும் மெனலாஸுக்கு ஐரிஸ் தேவதை இந்தச் செய்தியைத் தெரிவிக்கிறாள். மெனலாஸ் ஸ்பார்ட்டா விரைகிறான். ஹெலனின் சுயம்வரத்துக்கு வந்திருந்த அனைத்து இளவரசர்களுக்கும் அவன் அழைப்பு விடுக்கிறான். இலியத் போர் நிகழ்ந்தது. ட்ராய் நகரின் இன்னொரு பெயர் இலியம் என்பதாகும். இலியத் என்பது ட்ராய் முற்றுகை என்று பொருள்படுகிறது.

ஹெலனின் சுயம்வர நிகழ்ச்சியில் ஏற்பட்ட உடன்பாடு காரணமாக அன்று அங்கு திரண்டிருந்த அனைத்து இளவரசர்களும் மெனலாஸுக்கு உதவ வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது. எல்லா இளவரசர்களும் இலியத் முற்றுகைக்கு ஒன்று திரண்டபோதும் இருவர் வந்தபாடில்லை. முதலாவதாக ஒடிஸ்ஸே, இரண்டாவதாக அக்கிலஸ். மிடாஸ் தூது சென்று அழைத்து வந்தான். அக்கிலஸின் தாய் தெத்தீஸ் முன்கூட்டியே நடப்பதை அறியக்கூடியவள். அக்கில்லஸின் மரணம் இலியத்தில் என்று உணர்ந்து, அவனை ஒளித்து வைத்தாள். ஒடிஸ்ஸே கண்டுபிடித்துக் கூட்டி வந்தான்.

ட்ராய் கோட்டையை முற்றுகையிட எல்லா கிரேக்க இளவரசர்களும் அயூலிஸ் என்ற இடத்தில் ஒன்றுகூடி விவாதித்தனர். படைத்தலைவராக அகமனான் நியமனமானான். தலைமை ஜோதிடரான கல்காஸ் முதலில் ஸீயஸ் மனம் குளிரும்படி ஸீயஸ்ஸுக்கு யாகம் நடத்தினார். நிறைய பலிகளை வழங்கினார். ஸீயஸ் மனம் மகிழ்ந்து நல்ல சகுனங்களைத் தோற்றுவித்தார். யாகம் நிகழ்ந்தபோது, ஹோம குண்டத்திலிருந்து ஒரு சர்ப்பம் வெளிவந்து அருகில் உள்ள மரத்தில் மேல் சென்று தாய்ப் பறவையையும் அதன் ஏழு குஞ்சுப் பறவைகளையும் உண்டுவிட்டு கீழிறங்கி கல்லாய் மாறியது. இதற்கு விளக்கம் அளித்த கல்காஸ், இலியத் முற்றுகை பத்தாண்டுகள் நிகழும் என்றும், ட்ரோஜன்கல் மடிவர் என்றும் இறுதி வெற்றி கிரேக்கர்களுக்கே என்றார்.

அனடோலியாவின் மேற்குத் துறைமுகமே அன்றைய ட்ராய். ட்ராயை நோக்கிய பயணம் தொடங்கியது. ஆரம்பத்திலேயே குழப்பம். கப்பல் திசைமாறி மைசியா கடற்கரைக்கு வந்தது. ஹீராக்ளீஸின் புதல்வன் டெலிபஸ் அதன் அரசனாக இருந்தான். டெலிபஸ் வீரர்களை ட்ரோஜன்கல் என்று எண்ணிய அக்கில்லஸ் அவரகை நோக்கித் தன் ஈட்டியை எறிந்தான். டெலிபஸ் மெது அந்த ஈட்டி தாக்கி அவனுக்குக் கடும் காயம் ஏற்பட்டு அவன் தன் உயிருக்குப் போராடுகிறான். கிரேக்கர்கள் தவறை உணர்ந்து பயணத்தை நிறுத்தி அயூலிஸ் திரும்பினர்.

டெலிபஸ் உயிர் பிழைப்பதே கிரேக்கர்களின் லட்சியமாக மாறி, ஹெலனை மீட்கும் பணி ஒத்தி வைக்கப்பட்டது. முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பதுபோல் எட்டு ஆண்டுகள் வரை கிரேக்கர்கள் ட்ராய் கோட்டையை நெருங்கவே முடியவில்லை. பயணத்திற்கு உகந்த காற்று வீசவே இல்லை. ஜோதிடர் கல்காஸ் இது தெய்வ குற்றம் என்றும் ஆர்ட்டமீஸ் கோபமாக உள்ளார் என்றும் அகமனான் மகள் ஐபிஜினியாவை அவர் பலி கேட்பதாகவும் கூறினான். கிரேக்கர்கள் வேறு வழி தெரியாமல் அவளை பலி தர முன்வந்தபோது, கடைசி கட்டத்தில் ஒரு மானை பதிலியாக நிறுத்தி கால்காஸ் அவள் உயிரைக் காப்பாற்றி அவளைத் தன் ஆலயத்தில் பூசாரியாகவும் வைத்துக் கொண்டார்.

இலியத் முற்றுகை தொடங்கப்படவே இல்லை. ஒன்பது ஆண்டுகள் வரை அகமனானும் அக்கிலஸும் ஆங்காங்கே கடற்கரைகளைச் சூறையாடியதோடு சரி. இப்படி சூறையாடியவற்றில் இரண்டு பெண்களும் அடங்குவர். ஒருவழ கிரைஸீயிஸ். இவள் அப்பல்லோ தெய்வத்தின் பூசாரியின் மகள். இன்னொருவள் பிரைஸீயிஸ். அகமனானுக்கு கிரைஸீயிஸும், அக்கிலஸுக்கு பிரைஸீயிஸும் கிடைத்தனர்.

அப்பல்லோவிடம் கிரைஸீயஸின் தந்தை முறையிடவே, அவர் கிரேக்க வீரர்களிடையே குணமாக்கப்பட முடியாத தொற்று நோய்களைப் பரப்பத் துவங்கினார். கல்காஸ் இந்தத் தொற்று நோய்களின் மூலகர்த்தாவைக் கண்டறிந்து இது அப்பல்லோவின் கோபத்தின் அறிகுறி என்பதால் கிரைஸீயஸ் அவள் தந்தையாகிய அப்பல்லோ கோவில் பூசாரியிடம் திரும்ப ஒப்படைக்கப்பட வேண்டுமென்று கூறுகிறார். அப்படியே அவள் ஒப்படைக்கப்பட்டதும் அக்கில்லஸ் வசமிருந்த பிரைஸீயஸ் அகமனான் வசப்படுகிறாள். இதனால் வெகுண்டெழும் அக்கிலஸ் போரிலிருந்து விலகிக் கொள்கிறான்.

இலியத், அதாவது ட்ராய் முற்றுகை, இங்குதான் துவங்குகிறது. இலியத் கதையில் உண்மையான நாயகன் அக்கிலஸ் என்று நினைக்கப்படும் அளவில், பின்னர் சமாதானமடையும் அக்கிலஸ்தான் ட்ரோஜன் வீரர்களை சின்னாப்பின்னமாக்கிய கதை வருகிறது. அக்கிலஸின் மரணத்துடன் இந்த காவியம் நிறைவுற்று, பின்னர், கோட்டையைக் கைப்பற்றி கிரேக்கர்களின் இறுதி வெற்றியை ஒடிஸ்ஸே காவியமே எடுத்துரைக்கிறது. ஒடிஸ்ஸேயின் கதாநாயகன் ஒடிஸஸ்.

அக்கிஸ் ஒதுங்கிக் கொண்டதும் தான் மட்டும் தனித்துத் தலைமையெற்றுப் போரிட்ட அகமனான் தோல்வியடைந்தான். அவனால் ட்ரோஜன் வீரனான ஹெக்டாரை சமாளிக்க முடியவில்லை. அக்கிலஸ் உதவி செய்யாமல் ட்ராய் முற்றுகையில் வெற்றி கிட்ட வழியில்லை என்று புரிந்து கொண்ட அகமனான் பிரைஸீயஸ் அக்கிலஸிடம் திரும்பிச் செல்ல அனுமதிக்கிறான். அதுவும் தவிர, போர் முடிந்ததும் தான் பெண்களில் ஒருத்தியை அவனுக்கு மணமுடித்துத் தருவதாகவும் வாக்களிக்கிறான். இதனால் மனமாற்றம் பெற்ற அக்கிலஸ் போர் முனைக்குத் திரும்புகிறான்.

இருப்பினும் ட்ரோஜன்களின் பலத்தை சோதிக்க, உடனடியாகத் தலைமை ஏற்காமல் தனது பதிலியாக, தனது சகோதரன் பெட்ரோக்ளஸ் போருக்குச் செல்லப் அக்கிலஸால் பணிக்கப்படுகிறான். அவனும் ஹெக்டாரிடம் தோற்றுப் போகிறான். மீண்டும் தோல்வியுற்றாலும் அகமனானைப் போல் தோற்று ஓடாமல் பெட்ரோக்க்ளாஸ் ஹெக்டாருடன் சரிக்கு சமானமாக எதிர்த்து நின்று போரிட்டான். இந்தப் போரில் அவனுக்கு வீர மரணம் கிட்டுகிறது. இதனால் உற்சாகம் பெற்ற ட்ரோஜன் வீரர்கள், இறந்த பெட்ரோக்ளஸிடமிருந்த அற்புத ஆயுதங்களைக் கைப்பற்றுகின்றனர். உண்மையில் அவை அனைத்தும் அக்கிலஸின் ஆயுதங்கள்.

தன் சகோதரன் கொல்லப்பட்டதுமல்லாமல், தான் ஆயுதங்களும் பறிபோன செய்தியை அறியவரும் அக்கிலஸ் ட்ரோஜன்களைப் பூண்டோடு அழிப்பதாக சூளுரைக்கிறான். தன் தாய் தெத்தீஸ் மூலம் ஹெபாஸ்டஸிடமிருந்து ஆயுதங்களைப் பெற்றுக் கொண்டு போர் முனைக்குச் செல்கிறான் அக்கிலஸ். ட்ரோஜன் வீரர்களால் அவனை சமாளிக்க முடிவதில்லை. போர்க்களம் பிணக்காடாய் காட்சியளிக்கிறது. ட்ரோஜன் வீரர்கள் அச்சத்தால் போர்க்களத்தை விட்டுத் தப்பியோடிவிடுகின்றனர்.

ஹெக்டார் மட்டும் போர்க்களத்தில் தனித்து நிற்கிறான். அக்கிலஸுடன் போர் புரிய முடியாத ஹெக்டாரும் தப்பியோடுகிறான். அப்போது அவன் தப்பிச் செல்லாமல் தடுக்க எத்தினா ஒரு தந்திரம் செய்கிறாள். ஹெக்டாரின் தம்பி தெய்போபஸ் போல வேடமணிந்து வருகிறாள், அவளைக் கண்ட ஹெக்டார் தன் ஓட்டத்தை நிறுத்துகிறான். அக்கிலஸ் ஹெக்டாரை அக்கணமே கொன்று பழி தீர்த்துக் கொள்கிறான். தான் இறக்கும் தருவாயில் ஹெக்டார் அக்கிலஸுக்கு சாபமிடுகிறான், “உன் மரணமும் என்னைப் போன்றதாகவே இருக்கட்டும்,” என்பதாக.

ஹெக்டர் இறந்தபின் பெந்தஸீலியா – அமேசான் ராணி, ட்ரோஜன் படைத்தளபதியாகிறாள். கிரேக்கர்களைக் கொன்று குவிக்கிறாள். அவளை சமாளிக்க முடியாத கிரேக்கப் படைவீரர்கள் பின்வாங்குகின்றனர். அப்போது எதிர்ப்படும் அக்கிலஸுடன் ஆவேசமாகப் போரிடுகிறாள் அவள். அக்கிலஸ் கவனம் தவறுகிறான். இதனால் சிறிது பின்னடைவு ஏற்பட்டதும் சுதாரித்துக் கொண்டு உக்கிரமாகப் போரிடுகிறான் அவன். பெண் எனறு எண்ணி அவளை அவனால் போர் முனையில் அலட்சியப்படுத்த முடியவில்லை. ஆனாலும் அவளைக் கொன்றதும் அக்கிலஸ் மனமுடைந்து போனதாக விவரிக்கும் ஹோமர், “பெந்தஸீலியாவின் பொன்முகத்தில் சாவின் நிழல் விழவில்லை. இறந்தும் அவள் முகம் பிரகாசித்தது,” என்று எழுதுகிறார்.

பெந்தஸீலியா இறந்ததும் டானின் மகன் மெம்மான் ட்ராஜன் படைகளின் தளபதியாகிறான். அவனையும் கொன்று அக்கிலஸ் ட்ரோஜன்களை விரட்டியடித்து அவர்களைத் தங்கள் கோட்டைக்குள் தஞ்சம் புக வைத்தான்.

ஹெக்டாரின் மரணத்தால் ட்ரோஜன் மன்ன ப்ரையம் மனமுடைந்து போயிருந்தான். அவனது மகனின் உடலையே அக்கிலஸ் கொண்டு போயிருந்தான், அதைக்கூட அவனிடம் கேட்டுப் பெற வேண்டியிருந்தது. ஹெக்டாரின் உடலைத் திருப்பிக் கொடுக்க வேண்டுமானால், ப்ரையமின் மகள் பாலிசேனா தனக்குத் தரப்பட வேண்டும் என்று அக்கிலஸ் நிபந்தனை விதித்தான். அதை ஏற்றுக் கொண்ட ப்ரையம், அக்கிலஸ் தனியாக அப்பல்லோ கோவிலுக்கு வந்து அவளை அழைத்துச் செல்லும்படிச் சொன்னான். எந்த ஆயுதமும் எடுத்துக் கொள்ளாமல் அங்கு வந்திருந்த அக்கிலஸ் அப்பொல்லோ கோவிலில் மறைந்திருந்த பாரிஸால் குதிகாலில் அம்பு எய்து கொல்லப்பட்டான்.

துரியோதனனுக்கு சாவே வராமலிருக்க, காந்தாரி தன் கண் கட்டை அவிழ்த்து அவனது முழு உடலையும் பார்க்கக் கோரியபோது கிருஷ்ணனின் பேச்சைக் கேட்டு அறையை மறைத்து உடை உடுத்தியதால் பீமனின் கதை மர்ம உறுப்பில் பட்டு அவன் உயிர் இழந்ததுபோல், அக்கிலஸின் தாய் அவனை ஸ்டைக்ஸ் தடாகத்தில் ஸ்நானம் செய்தபோது ஒரு பிழை நேர்ந்தது. அக்கிலஸின் உடல் முழுமையாகத் தண்ணீரில் மூழ்கவில்லை. அவனது குதிகாலில் ஒட்டியிருந்த இலை அவனது மரணத்தைத் தீர்மானித்தது. பாரிஸ் எய்தியது அப்போல்லோ வழங்கியிருந்த பாணம். அது அக்கிலஸின் குதிகாலைத் துளைத்ததால் அவன் உயிரிழந்தான். அக்கிலஸின் மரணத்துக்கு வானமும் பூமியும் அழுதன. வனதேவதைகள் கண்ணீர உகுத்துப் புலம்பின.

அக்கிலஸின் தாய் தெத்தீஸ் அவனது உடலை டான்யூப் நதியில் நீராட்டி பாதாள உலகுக்குக் கொண்டு சென்றாள். அதுவே பிற்காலத்தில் வெண்தீவு (White Island) ஆயிற்று. இன்றும் அக்கிலஸின் ஆவி அங்கு உலவுவதாக ஒரு நம்பிக்கை உள்ளது.

அக்கிலஸ் மறைந்தபின்னர், ஹெலனின் கணவன் பாரிஸைக் கொன்று இருவகைகளில் பழி தீர்த்துக் கொண்டான் அகமெனான். தன் மனைவியைக் கவர்ந்ததற்கும், தன் நண்பனைக் கொன்றதற்கும் இரண்டுக்குமாய் பழி தீர்த்தான் அவன். இருந்தும்கூட ட்ரோஜன்கள் தோற்கடிக்கப்படவில்லை. ட்ராய் கோட்டைக்குள் கிரேக்கர்களால் நுழைய முடியவில்லை.

அவர்கள் ட்ராய் கோட்டையை வென்ற கதையை ஓடிஸ்ஸே புராணத்தில் அறிய முடிகிறது.

பாரிஸ் இறந்தபின் ஹெலனை பாரிஸின் தம்பி ஹெலனஸ் அடைய விரும்புகிறான். ஆனால் ப்ரையம், ஹெக்டாரின் அன்புக்குப் பாத்திரமான டெய்ஃபோபஸுக்கு வழங்கி, அவனையே தன் கோட்டைத் தலைவனாக்குகிறான். இதனால் பித்து பிடித்தவன் போலான ஹெலனஸ் ட்ராய் கடற்கரையைச் சுற்றியலைகிறான். ஹெலனஸ் அப்போல்லோ தெய்வத்தின் அருள் பெற்றவன். நடக்கவிருப்பதை முன்னுரைக்கும் ஆற்றல் பெற்றவன். அதனால் அவனைக் கைப்பற்றி கிரேக்கர்கள் ட்ராய் நகருக்குள் நுழையும் வழியை அவனிடம் விசாரிக்கின்றனர்.

ஹெலனஸ் மூன்று நிபந்தனைகளை விதிக்கிறான். முதல் நிபந்தனை, அக்கிலஸ் மகன் நியோட்டலமஸ் கிரேக்க படைகளுக்குத் தளபதியாக நியமிக்கப்பட வேண்டும். கிரேக்க மன்னர்களின் முன்னோரான பிளாப்ஸின் எலும்புகளை ட்ராய் நகர எல்லைக்குள் கொண்டு வர வேண்டும். மூன்றாம் நிபந்தனை, ஒலிம்பஸிலிருந்து விழுந்த எத்தினா சிலையை ட்ராய் கோட்டையிலிருந்து கவர்ந்து வர வேண்டும்.

இம்மூன்று நிபந்தனைகளையும் நிறைவேற்றுவதில் ஒடிஸ்ஸேவின் பங்கு முக்கியமானது. பைசாவில் உள்ள எலிசில் பிளஸ்ஸின் எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டு ட்ராய் கடற்கரைக்கு வந்தன.அக்கிலஸ் மகன் நியோட்டலமஸ் சைக்ரோஸில் கண்டுபிடிக்கப்பட்டு அவனது தாத்தாவின் ஆசியுடன் ஒடிஸ்ஸேவுடன் கிரேக்கத் தளபதியாக ட்ராய் நகருக்குள் பிரவேசித்தான்.

ட்ராய் நகருக்குள் நுழைந்து எத்தினா சிலையைத் திருடி வருவது எளிதான செயலாக இருக்கவில்லை. ஒடிஸ்ஸேவும் டையோபிபஸும் மாறுவேடமணிந்து தந்திரமாக அகழியைக் கடந்து கோட்டைக்குள் நுழைந்து பலத்த காவலில் இருக்கும் எத்தினா சிலையைத் திருட முயற்சி செய்கின்றனர். அப்போது ஹெலன் அவர்களைப் பார்த்துவிடுகிறாள். ஆனால், கிரேக்கப் பெண்ணான அவளுக்கு தன்னாட்டு வீரர்களைக் காட்டிக் கொடுக்க மனம் வருவதில்லை. எத்டினா சிலையின் திருட்டுக்குத் தானும் உடந்தையாக இருந்து உதவுகிறாள். இவ்வாறு ஹெலனஸ் விதித்த மூன்று நிபந்தனைகளும் நிறைவேற்றப்படுகின்றன.

அப்போது மூன்றுக்குப்பின் நான்காவதாக இன்னொரு நிபந்தனையை ஹெலன்ஸ் விதிக்கிறான். கிரேக்கப் படைக்கு பிலாக்டீட்டஸ் என்ற போர் வீரனின் தலைமையும் தேவை என்கிறான் அவன். லூயிட்டா மலையில் தன் சாவுக்குத் தானே சிதை முட்டிக்கொண்டு இறக்க நினைத்த ஹீராக்ளீஸை நெருப்புக்குள் தள்ளிவிட முன்வந்தவன் பிலாக்டீட்டஸ். இவனிடம் ஹீராக்ளீட்டஸின் ஆயுதங்கள் இருந்தன. ஆனால் அவனது உடலில் ஆறாத புண்கள் இருந்தன. ஹீராக்ளீஸின் விருப்பத்தை இவன் பூர்த்தி செய்திருந்தாலும், ஹீராக்ளீஸுக்கு விசுவாசமாக இருந்த போர் வீரர்கள் இவனைக் குத்திக் காயப்படுத்தியிருந்தார்கள்.

ஒடிஸ்ஸே லெம்னாஸ் சென்று பிலாக்டீட்டஸுக்கு ஆறுதல் சொல்லி அவனைப் போருக்கு அழைத்து வருகிறான். ஹீராக்ளீஸின் கவசங்களை அணிந்த மாத்திரத்தில் பிலாக்டீட்டஸின் உடலிலிருந்த புண்கள் ஆறிவிட்டன. இவ்வாறாக ஹெலனாஸ் விதித்திருந்த நான்கு நிபந்தனைகளும் நிறைவேறின. அப்போது ட்ராய் நகரை வீரத்தால் மட்டும் வெல்ல முடியாது, விவேகம் தேவை என்றான் ஹெலனாஸ். ஹெலனாஸ் தீட்டிய திட்டம்தான் ட்ரோஜன் ஹார்ஸ் எனப்படும் எத்தினா மரக்குதிரை.

(தொடரும்)