மகரந்தம்

ஐரோப்பா – ஆலிவ் மரங்களின் சதி!!

யூரோப்பிய இணையத்து நாடுகள் பற்றிய செய்தி. ஓடிப்போகாமல் படிப்பது உதவும். எங்கோ ஒரு வண்ணத்துப் பூச்சி சிறகடித்தால் உலகின் மறுபக்கம் சூனாமி வந்தறையும் என்று ஒரேயடியாக அதீதப்படுத்தி யோசிக்கும் கருத்துகளைக் கேட்டிருக்கிறோம். ’பெருங்குழப்பம்’ இயற்கையில் உள்ளதென்றும் அதைப் படிப்படியாக அணுகி யோசிப்பது உதவாத அணுகல் என்றும் சொல்லும் வாதங்கள் இவை. அதே நேரம் வேறு விதமான கணிதம், புள்ளியியல் இணைப்போடு இயற்கையை அணுகச் சொல்வனவே இந்த வாதங்கள், அறிவியலைக் கடாசச் சொல்லும் வாதம் இல்லை.

இங்கொரு பொருளாதாரக் குழப்பம் பற்றிய சிறு தகவல். சமீபத்தில் தூய்மை சற்றும் கெடாத ஆலிவ் எண்ணெய், அதாவது மிகக் குறைவாகவே வடிகட்டப்பட்ட ஆலிவ் எண்ணெய்க்கான சந்தை பெரும் விலைச்சரிவைச் சந்தித்ததைச் சொல்கிறது செய்தி. கடந்த சில வருடங்களாக இந்த எண்ணெயைப் பயன்படுத்துவதால் மிக்க உடல்நல முன்னேற்றம் கிட்டும் என்று ‘வதந்தி’ நிறையப் பரவியதால் மேற்குலகில் எங்கும் இந்த எண்ணெய்க்கான விலை எகிறி இருந்தது. அப்படி இருக்க திடீரென்று ஏன் இந்த எண்ணெயின் விலை உலகச் சந்தையில் பெரிதும் சரிந்தது? காரணம் அத்தனை மர்மமானதொன்றில்லை. கும்பி காய்ந்தால் கருவாடும் இனிக்கும் என்று ஒரு சொல்வழக்கு கேட்டிருப்பீர்கள். அதுதான் இங்கும் செயல்படுகிறது. மத்தியதரைக் கடல் பகுதியில், குறிப்பாக இத்தாலி, ஸ்பெயின், போர்ச்சுகல் ஆகிய நாடுகளில் பொருளாதாரம் பெரும் சரிவு. வேலையில்லாத் திண்டாட்டம் இளைஞர் நடுவே 50% எல்லாம் கூடப் போயிருக்கிறது. எனவே அந்நாடுகளில் இந்த எண்ணெயை வாங்குவோர் மிகக் குறைந்து விட்டனர். தவிர இந்த வருடம் அநியாயத்துக்கு இந்த ஆலிவ் மரங்கள் காய்த்துக் கொட்டி விட்டனவாம். இப்படியுமா இயற்கை ஆலிவ் விவசாயிகளுக்கெதிராகச் சதி செய்யும்? படித்துப் பாருங்கள்.

http://www.slate.com/blogs/moneybox/2012/05/28/the_bursting_of_the_evoo_bubble.html

-o00o-


அறிவியல் கட்டுரைகள் என்ற பெயரில் கட்டுக்கதைகள்!!

முதலியம் என்பதில் மலினப்படும் விஷயங்கள் இன்னது என்று எளிதில் சொல்ல முடியாது. குழந்தை வளர்ப்பில் துவங்கி இறந்தவரின் உடலை எரிப்பது/புதைப்பது வரை எல்லா இடங்களிலும் ஊடுருவும் லாப நோக்கு என்பது அதன் ரத்த ஓட்டம். எனவே இந்தச் செய்தி நமக்கு வியப்பைத் தரத் தேவை இல்லை. இருந்தாலும் தொடர்ந்து எச்சரிக்கையாக இருப்பது நமக்கு அவசியமாகிறது. திருடர்களே நாட்டை நடத்துகையில் எங்கும் எப்போதும் ஜாக்கிரதையாக இருப்பது அவசியம்தானே?

பிரிட்டனிலும், அமெரிக்காவிலும் அறிவியல் செய்திகளை எழுதிப் பிரசுரிக்கும் செய்தியாளர்கள், பத்திரிகைகள் ஆகியன தொடர்ந்து விலைபோகும் மலினங்கள் என்று இந்தக் கட்டுரையாளர் சொல்கிறார். நிறுவனங்கள் தம் பொருட்களை விற்பதற்காக, அறிவியல் ஆய்வு என்ற பெயரில் வெறும் விளம்பரங்களைப் போர்த்தி கட்டுரையாகப் பிரசுரிக்க பத்திரிகையாளர்களைக் கேட்க அவர்கள் அரை அடி தாண்டச் சொன்னால் மூன்றடி தாண்டித் தம்மை எளிதே விற்கத் தயாராகி விடுகிறார்கள். மேற்படி நாட்டுப் பத்திரிகைகளில் ஏராளமான ‘குப்பை’ச் செய்திகள், பொய்கள் அறிவியல் என்ற பெயரில் பிரசுரமாகின்றன என்று சில சான்றுகளுடன் எழுதுகிறார். ஆனால் இவர் கொடுப்பன எத்தனை சான்றாக அறிவியல்/புள்ளியியல் பார்வையில் ஏற்கப்படும் என்று வேறு யாராவதுதான் சோதித்து எழுத வேண்டும். இதுவுமே ஒரு பட்டம் விடும் வேலையாக இருந்தால் நாம் என்ன செய்வது?

http://www.slate.com/articles/health_and_science/science/2012/05/science_in_the_telegraph_and_the_daily_mail_what_s_wrong_with_british_journalism_.single.html

-o00o-


இதய நோயும் பர்மிய பாம்பும்

பாம்பின் ரத்தத்திலிருந்து எடுக்கப்படும் வேதிப்பொருட்களால் இதய நோய்களைக் குணப்படுத்த முடியலாம் என்று ஆய்வாளர் ஒருவர் கருதுகிறார். அதுவும் சாதாரணப் பாம்பெல்லாம் இல்லை. பர்மாவின் மலைப் பாம்புகள் (பர்மீஸ் பைத்தான் பாம்பு). அவற்றைக் குறித்த விவரணை நம்மை மலைக்க வைக்கிறது. ஒரு வருடம் கூட இவற்றால் பட்டினி கிடக்க முடியுமாம். 300 பவுண்டு மாமிசத்தை அதால் விழுங்கி விட முடியும், அதை சில நாட்களில் ஜீரணிக்கையில் அதன் இதயத்தின் தசைகள் (muscle) 40% அதிகரிக்கின்றனவாம். இன்னும் அதிசய விவரங்கள் இந்தக் கட்டுரையில் உண்டு.
இதன் ரத்தத்திலிருந்து பிரிக்கப்பட்ட மூன்று அமிலங்கள்தான் இந்தப் பாம்புகளின் அசாதாரண சக்திக்குக் காரணம். அவ்வளவு கொழுப்பை அத்தனை துரிதமாக ஜீரணிக்கவும், அதற்குத் தேவையான பிராணவாயுவைப் பெற்று எரித்து அதைத் தன் இதயத்தின் வழியே பயன்படுத்தவும் இந்தப் பாம்பால் முடிகிறது என்பதற்கு இந்த மூன்று அமிலங்களின் கலவைதான் காரணம் என்கிறார் ஆய்வாளர் – a mixture of myristic acid, palmitic acid, and palmitoleic acid ஆகியன இந்த அமிலங்கள்.

லெஸ்லி லைன்வண்ட்(Leslie Leinwand) என்னும் இந்தப் பெண் உலகில் ஏராளமானவர் இதயங்களில் எதிர்காலத்தில் வீற்றிருப்பார் என்று தோன்றுகிறது. இவர் சுட்டும் பாதை உண்மையிலேயே இதயத் தசைகளை மிக வலுப்படுத்த உதவும் ஒரு மாத்திரை அல்லது திரவத்தைத் தயாரித்து அது மனித இதயங்களுக்கு உதவ வேலை செய்து விட்டால், இதய நோய் என்பதை இல்லாமல் ஆக்கி விடலாம் என்பதோடு, உலகில் உள்ள பல பந்தயக்காரர்களுக்கு விளையாட்டரங்கில் பிரமாதமான வேகம், திறன், வலு எல்லாம் கிட்டவும் வாய்ப்புண்டு.

பாம்பிடம் இருந்து பெறும் அறிவைப் பெரும் நாசம் என்று அறிவிக்கிறது மேற்கத்திய மதம். பாம்பைக் கழுத்திலும், மெத்தையாகவுமே வைத்திருப்பது இந்தியப் புராண மதங்கள் என்று நினைத்தால் சற்று வேடிக்கையாகவே இருக்கிறது.

http://discovermagazine.com/2012/jun/03-snake-oil-cures-for-damaged-hearts/article_print

ஏற்கனவே இந்தியாவில் பாம்பின் விஷத்திலிருந்து பெறும் மருந்தொன்றை வைத்து ரத்த அழுத்தத்திற்கு மருந்து தயாரிக்கிறார்கள் என்பது நாம் கேள்விப்பட்டிருக்கும் ஒரு விஷயம்தான். இப்போது வேறு சில மிருகங்களிடம் இருந்தும் இத்தகைய மருந்துகளைப் பெற முடியும் என்று நம்புகிறார்கள்.

ஹீலா மான்ஸ்டர் எனப்படும் உடும்பு போன்ற ஒரு மிருகத்தின் எச்சிலிலிருந்து கடும் விஷங்கள் பிரித்தெடுக்கப்பட்டு அவற்றில் சில சுத்திகரிக்கப்பட்டு, மனிதர் நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுகின்றன. 2005-இல் ஒரு மருந்து நீரிழிவு நோய் வகை ஒன்றிர்க்குப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டதாம். மேலும் பல மருந்துகள் சோதனையில் இருக்கின்றன. டராண்டுலா எனப்படும் சிலந்தி வகைப் பூச்சிகளின் விஷத்தில் தசை அழிப்பு நோயான மஸ்குலர் டிஸ்ட்ரோஃபி எனப்படும் நோயைத் தடுக்கக் கூடிய வேதிப் பொருட்கள் உள்ளன என்று பஃபலோ பல்கலை ஆய்வாளர்கள் கண்டிருக்கிறார்கள். ரத்தம் உண்ணும் வௌவால்களும் இத்தகைய மருந்துகளுக்கு இருப்பிடமாக இருக்கும் என்றும் தெரிகிறது.

-o00o-


சீனாவின் கொள்ளைக்கார கும்பல்

சீனாவின் கொள்ளையர் நடத்தும் ஆட்சி உலகில் இது வரை இல்லாத அளவு பெரும் திருட்டு நடத்தும் ஒரு கும்பலின் கையில் சிக்கி இருக்கிறது என்கிறார் இவர். இந்தக் கொள்ளை எத்தனை காலம் தொடரும், இதை என்னென்ன உத்திகள் போஷிக்கின்றன, காப்பாற்றி குலையாமல் பாதுகாக்கின்றன என்பனவற்றை விவரிக்கிறார். இது தோற்று, இற்று விழுமா என்றால், அதற்கு முன் நிபந்தனைகளாக என்ன நடக்கவேண்டி இருக்கும் என்றும் விவரிக்கிறார்.

http://brontecapital.blogspot.de/2012/06/macroeconomics-of-chinese-kleptocracy.html

-o00o-


ஆட்டிஸம், கேன்ஸர் மற்றும் நாய்

ஓநாய்களின் மிருகத்தன்மையை மட்டுப்படுத்தி அவற்றை தம் தேவைகளுக்கு சாதகமாய் பயன்படுத்த மனிதர்கள் எப்போது துவங்கினார்கள் என்பது துல்லியமாய் தெரியவில்லை. ஆனால் கி மு 30000த்திலேயே இதற்கான தடயங்கள் இருப்பதாய் தொல்லியல் வல்லுனர்கள் சொல்கிறார்கள். 12000 வருடங்களுக்கு முன் பாலஸ்தீனத்தில் ஒரே கல்லறையில் ஒரு மனிதனும் நாயும் சேர்ந்து புதைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மனிதர்களின் சகவாசத்தில் கிடைக்கும் உணவுப் பாதுகாப்புக்கு பிரதியாய் வேட்டையில் உதவி செய்யவும், உணவு தேடவும் , மனிதர்களின் பாதுகாப்புக்கும் பலகாலமாய் நாய்கள் உதவி வந்திருக்கின்றன. இன்று நாய்களின் மோப்ப சக்தி போலிஸ், மிலிடரி, மருத்துவம் என்று பலவிதத் துறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. தம் உயிரைப் பற்றிய கவலை இல்லாமல் கடமையே கருத்தாய், (லஞ்சம் வாங்காமல்) திறமையாய் போதை மருந்துகள், குண்டுகள் மற்றும் நிலக்கண்ணி வெடிகளை கண்டுபிடிப்பதில் போலிஸ் துறைக்கு உதவி செய்கின்றன. கண் தெரியாதவர்களுக்கு வழிகாட்ட பலவருடங்களாகவே நாய்கள் உதவி வந்திருப்பினும், நாய்களின் மோப்ப சக்தியை கேன்ஸர் போன்ற வியாதிகளை கண்டுபிடிப்பதற்கும் உபயோகப்படுத்தலாம் என்று இன்றைய மருத்துவம் சொல்கிறது. ஆடிஸம், ஆஸ்பெர்ஜெர் போன்ற நோய்குறித்தொகுதிகள் உள்ளவர்களுக்கு நாய்களின் அண்மை அமைதியைக் கொடுக்கும் என்றும் கண்டுபிடிக்கப்பட்டு இன்று அத்தகையவர்களுக்கான சிறப்புப் பள்ளிகளில் லேப்ரடார் போன்ற நாய்கள் பயன்படுத்தப்படுகின்றன.

நாய்களுக்குப் பயிற்சி கொடுப்பது இன்று ஒரு பெரிய தொழிலாய் நடந்து வருகின்றது. வீட்டில் செல்லமாய் நாய் வளர்ப்பவர்கள் கூட தம் நாய்களின் திறமைகளை வருபவர்களுக்குக் காட்டிப் பெருமைப்படுவதற்காக அவற்றுக்குப் பலவித தந்திரங்களைச் சொல்லிக் கொடுப்பதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். நம் தொனியிலிருந்து நம் மனநிலையை உணர்ந்துகொள்வதற்கும் மேல் நாய்களுக்கு 160 வார்த்தைகள் வரை புரிந்துகொள்ளும் திறன் உண்டு. பந்தை தூக்கிப் போட்டு பிடிப்பது, ஒளித்து வைத்த விளையாட்டு சாமானைக் கண்டு பிடிப்பது போண்ற தந்திரங்களை மீறி இன்று சிலநாய்கள் நாட்டியம் கூட ஆடுகின்றன. சமீபத்தில் பிரிட்டனில் நடந்த ஒரு போட்டியில் நடனமாடி 50000 பவுண்டுகளைப் பரிசாய் வென்ற நாயின் அபாரத் திறமையையும் அதற்குப் பயிற்சி அளித்தவரின் சாதனையயும் காட்டும் வீடியோ இது.

போகிறபோக்கில், நாய்கள் சமைத்து, வீடு பெருக்கித் துடைக்கும் நாளும் வெகுதூரத்தில் இல்லை என நம்பலாம் போலிருக்கிறது. இதை எல்லாம் கற்றுக்கொண்டு நம்மைக் கட்டிப் போடாமல் இருந்தால் சரிதான்.