பிரிட்டன் – 2012

பொதுவாக வசந்த மற்றும் வேனிற்காலங்கள் பிரிட்டனின் சுவாரசிய பருவங்கள். இருண்ட குளிர்காலத்திலிருந்து மெல்ல மெல்ல வெளிச்சக் கதவுகள் திறக்கும் பருவங்கள் (கொஞ்சம் கொஞ்சமாகத்தான், அவ்வப்போதுதான்). Daffodil எனப்படும் மஞ்சள் பூக்களும் Blue Bell எனப்படும் நீலப்பூக்களும் இன்னும் பல பெயர் தெரியாத பூக்களும் தோகை விரித்து படரும் பருவங்கள். இந்த பருவங்களையெல்லாம் இங்கு இருந்து அனுபவிப்பதை விட்டுவிட்டு இந்த பிரிட்டிஷ்காரர்கள் என்னத்தைத் தேடி உலகம் முழுவதும் அலைந்து கொண்டிருந்தார்கள் என்று வியப்பளிக்க வைக்கக்கூடிய பருவங்கள். (பதில் பின்னால் வரும் இலையுதிர்காலத்திலேயே தெரிந்துவிடும்!)

வழக்கமான கிரிக்கெட்

சீசனின் முதல் பாதியில் ஒரு சுமாரான அணியைக் கூப்பிட்டு முதல் டெஸ்ட் மாட்சை லார்ட்ஸில் வைத்து எதிர் அணியினர் தங்கள் ஸ்வெட்டரிலிருந்து வெளிவருவதற்குள் ஸ்ராஸ் ஒரு செஞ்சுரி அடித்து தனது தலைமைப் பதவியைத் தக்கவைத்துக் கொள்வது வழக்கம்- அடுத்த கொஞ்ச நாட்களுக்கு யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள்.

இந்த வருடம் கெயில் இல்லாத மேற்கிந்திய அணி. போன வருடம் ஸ்ரீலங்கா…போன வருட சீஸனின் இரண்டாவது பாதியில் இந்திய அணியின் வருகையை இங்கிலாந்து மீடியா எவ்வளவு பீதி கலந்த ஆர்வமாய் எதிர்பார்த்தார்கள்!…, நாமும் எதிர்பார்த்தோம்…தொடர் ஆரம்பிக்கும் முன் பத்திரிக்கையாளர் கூட்டத்தில் ஸ்ராஸ் இரு டெஸ்ட்களை வெற்றி பெற்றால் டெஸ்ட் ரேங்கில் முதலிடத்தை பிடிக்க முடியும் என்று சொன்னபோது என்னத்தான் பிரிட்டிஷ்காரர் என்றாலும் இவருக்கு இவ்வளவு நகைச்சுவை உணர்வா என்ற வியப்பு ஏற்பட்டது. மண்டபத்தில் யாரோ எழுதிக்கொடுத்ததை படிக்கிறார் பாவம் என்று எல்லாரும் சிரித்துக்கொண்டே விட்டுவிட்டார்கள்.

முதல் டெஸ்ட் கடைசி நாளன்று கடைசி வரை ட்ரா செய்ய இருந்த நமது எல்லா சாத்தியங்களையும் பிடிவாதமாய் விட்டுவிட்டு…அலுவலக மீட்டிங்கின் பாதியில் இங்கிலாந்து வெற்றியை பூரித்து அறிவித்தார்கள்.

காயங்கள், அது இது என்று ஏகப்பட்ட சமாதானங்களுடன் அடுத்த டெஸ்ட், அடுத்த நாள், அடுத்த டெஸ்ட், அடுத்த ஒரு நாள் போட்டி, இருந்த ஒரே ஒரு டுவன்டி-டுவன்டி உலகச் சாம்பியன்கள் என்ற ஈகோவில் இவ்வளவு சீக்கிரம் இவ்வளவு பலமான அடி விழும் என்று எதிர்பார்க்கவில்லை…மரண அடி…இரக்கமே இல்லாமல் கடைசிச் சொட்டு வெற்றியையும் உறிஞ்சிக்கொண்டார்கள்…இப்போது மறுபடியும் இந்த வருட கிரிக்கெட் சீசன் ஆரம்பிக்கும்போது போன வருட விழுப்புண்களின் மேல் படர்ந்து சற்றே காய்ந்திருந்த வெங்காயத்தோல் சட்டென உரிந்துவிட்டது…சே!

இந்த வருட இரண்டாம் பாதியில் தென்னாப்ரிக்கா அணியின் வருகை…வாருங்கள் ஸ்டெயின், வந்து ஆங்கிலேய ஸ்டெம்புகளை பதம் பாருங்கள்…எங்களால்தான் போனவருடம் முடியவில்லை!

வழக்கமான விம்பிள்டன்

வருடாவருடம் ஜூலை மாதம் இருவாரங்கள் இந்த The championship திருவிழா. இடையிடையே மழை வந்து விசாரித்துவிட்டுப் போகும்.

இங்கிலாந்துக்காரர்கள் ஒரு மாதிரி சேட் சுகவாசிகள். உலகம் முழுவதும் இருக்கும் திறமையான விளையாட்டு வீரர்களை அவர்கள் ஊரில் கூட்டி வைத்து ஸ்ராபெர்ரியும் கிரிமையையும் கலந்து சாப்பிட்டுக்கொண்டே விளையாட்டை ரசிப்பார்கள்- இங்கிலீஷ் பிரிமியர் லீக் ஒரு உதாரணம். . ஆனால் உள்ளூர்க்காரர்கள் உள்ளே இறங்கி ஆடி விம்பள்டன் கப்பை வென்று வருடங்களாகின்றன. பெர்ரி என்பவர்தான் விம்பிள்டன் கப்பை வெற்றிகொண்ட கடைசி பிரிட்டிஷ்காரர் – வருடம் 1936…(இவர் லான் டென்னிஸில் மட்டுமல்ல, டேபிள் டென்னிஸிலும் உலகச் சேம்பியன்).

சமீபத்தில் கொஞ்ச நாள் டிம் ஹென்மென்னை நம்பிக் கொண்டிருந்தார்கள். அவர் கொஞ்சம் பிரபலமாக இருந்தார் (Ariel பவுடர் விளம்பரங்களில் வருவார்). அப்புறம் அவ்வளவுதான், ரிட்டயர்மெண்ட் அறிவித்து தன் தோல்வியை ஒத்துக் கொண்டு விட்டார். இப்போது இருக்கிற ஒரே நம்பிக்கை முரேதான். ஸ்காட்டிஷ்காரராக இருந்தாலும் வேறுவழியில்லை. திறமையானவர். மனதிற்குள் ஸ்காட்லாந்தில் பால் கறந்து கொண்டிருந்த பையனெல்லாம் என்று கிண்டல் செய்து கொண்டே வெளியில் நம்பிக்கையோடு இருக்கிறார்கள்.அவரும் காலரியிலிருக்கும் அம்மாவைப்பார்த்து பம்மிக்கொண்டே நம்பிக்கைப்பால் வார்த்துக் கொண்டிருக்கிறார்.

இப்போது ஃபெரன்ச் ஓபனில் இடுப்பைப் பிடித்துக்கொண்டே தட்டுத்தடுமாறி குவார்ட்டர் பைனல் வரை வந்து பின் ரிசர்வ் பெட்ரோலும் தீர்ந்து போன பைக்காய் நின்றுவிட்டார். பார்க்கலாம், இந்த வருட விம்பிள்டனில் எத்தனை ரவுண்ட்கள் தாங்குவார் என்று.

கால்பந்திலும் இதே கதைதான். ஒரே ஒருதரம் உலகக் கோப்பை வென்றிருக்கிறார்கள், அதுவும் 1966. அதுவும் ஒரு சர்ச்சைக்குரிய கோலுடன். அதற்கப்புறம் ஒவ்வொரு உலகக் கோப்பைக்கும் நம்பிக்கையோடு போவார்கள். பரிதாபமாக தோற்று, பற்பல காரணங்களைக் காட்டி ஊர் திரும்புவார்கள். மேனஜருக்கு கெட்டித் தோல் வேண்டும்.

எனக்கு ஆச்சரியமாக இருக்கும், என்ன நம்பிக்கையில் இவ்வளவு வீரவசனம் பேசுகிறார்கள் என்று! தோற்ற இரவு போஸ்ட் மார்ட்டம் ந்டக்கும். அடுத்த நாள்…நார்மலான நாள். ஜோக்கடித்துக் கொண்டே (அடுத்த தடவை கண்டிப்பாய் நமக்குதான்) வேறு வேலை பார்க்கப் போய்விடுவார்கள்.

இந்த வருட நம்பிக்கை Euro 2012. புது மேனேஜர். இதற்கு முன்னர் இருந்த இத்தாலித் தாத்தா இதோ ஏதோ செய்யப்போகிறார் என்று எல்லாரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவரும் பிளஸ்டூ கணக்கு வாத்தியார்களுக்கே உரிய கடுமையான கண்ணாடிப் ப்ரேமை மாட்டிக்கொண்டு சைட் லைனில் நின்று கொண்டு வருடக்கணக்காய் டிமிக்கி கொடுக்கும் கடனாளியைப் பார்த்து உணர்ச்சி வசப்படுவது போல் உணர்ச்சி வசப்பட்டுக் கொண்டிருந்தார். இவரது ஆங்கிலமே கேள்விக்குறி. இந்த லட்சணத்தில் என்ன கத்தியிருப்பார், யாருக்கு புரிந்திருக்கும்…ம்ஹூம், ஒன்றும் வேலைக்காகவில்லை. திடீரென ஒரு மதிய செய்தியில் தலைக்காட்டி சொந்த ஊருக்கே போய்விட்டார்.

அணியில் சேம்பர்லின், வால்காட், வெல்பெக் போன்ற நம்பிக்கைச் சிறார்கள்…

எட்டு வருடங்களுக்கு முன் Euro 2004ல் விளையாடும்போது ரூனிக்கு பதினெட்டு வயது வயதுதான் (எத்தனாவது வயதிலிருந்து சம்மர் சால்ட் அடிக்கத்தொடங்கினார்?) அன்றும் முதல் மாட்சில் இன்று மாதிரியே ப்ரான்ஸுடன் மோதல். லாம்பார்ட் முதல் பாதியில் கோல் அடித்து இங்கிலாந்து கடைசி விசிலுக்கு கொஞ்சம் முன்னால் வரை முன்னால் இருந்தது. நாட்டிலுள்ள எல்லா மதுபானக்கடைகளிலும் ரஜினி பட முதல் நாள் சத்தம்.

தொண்ணூறாவது நிமிடத்தில் சிடானே அற்புத ப்ரீ கிக் அடித்தார். சத்தங்கள், கொண்டாட்டங்களில் ஒரு பேஸ் போய்விட்டது. தொண்ணூற்று மூன்றாவது நிமிடத்தில் பெனால்டி, இன்னொரு கோல்…இப்போது எல்லாபேஸ்களும் போய் மயான அமைதி…இங்கிலாந்திற்கென ஒரு ராசி இருக்கிறது!

இந்த வருடம் இரண்டாவது மேட்சில் ஸ்வீடனுடன் கிட்டத்தட்ட இதே கதைதான். ஆறடி மூன்று இன்ச் கரோலின் சரியான ஹெட்டர் மூலம் இங்கிலாந்து முன்னிலையில் இருந்தது. பாதி நேர இடைவெளியில் எல்லாரும் பல்லெல்லாம் வாயாக உள்ளே சென்றார்கள். சுவாரசிய தகவல்களை மேய்ந்துவிட்டு வருவதற்குள் (யார் ஜனாதிபதி?)இரண்டாவது பாதி ஆரம்பித்து ஸ்வீடன் இரண்டு கோல்களும் போட்டுவிட்டார்கள்! இங்கிலாந்து அணியில் வழக்கமான பீதி…ஜெய் ஸ்வீடன்!
புது மேனேஜர் ஒரு உருப்படியான காரியம், அதுவும் தாமதமில்லாமல் செய்தார். தியோ வால்காட்டை களமிறக்கினார். இந்த இளைஞர் ஒரு அற்புத ஆர்சனல் அணிக்காரர். பாரஸ்ட் கம்ப் (Forest Gump) ரேஞ்சிற்கு படுவேகமாய் ஓடுவார் (என்ன, பந்துடன்). சிறிது நேரத்தில் பதட்டமே இல்லாமல் ஒரு தெளிவான ஹிட். பந்து ஸ்வீடிஷ் கோல் கீப்பரை ஊடுருவிச் சென்றது. அடுத்த பதினாலாவது நிமிடத்தில் ‘ரன் பாரஸ்ட் ரன்’ கணக்கில் ஓடி மேன் யு வெல்பெக்கிற்கு ஒரு பிரமாதமான பாஸ் செய்ய, அவர் கவிதையாக ஒரு பேக் ப்ளிப் மூலம் மூன்றாவது கோல்…! கவிதை, கவிதை!

இந்த 23 வயதான வால்காட் இதுவரை நான்கு புத்தகங்களை (சிறுவர்களுக்கான) எழுதியிருக்கிறார் என்பது உபரித் தகவல்! இது தவிர ஒரு ஆட்டோ பையோகிராப்பியும் வெளியாகியிருக்கிறது.

மொத்த பிரிட்டிஷ் மீடியாவும் இந்த இரு கருப்பு இளைஞர்களையும் மேனேஜரையும் தூக்கிக் கொண்டாடிக்கொண்டு இருக்கிறது. அடுத்த மேட்ச் உக்ரைனுடன் – ட்ரா கூட போதும், கால் இறுதியில் நுழைவதற்கு…

நுழைவார்களா அல்லது உக்ரைனில் வெயில் அதிகம் என்று சாக்கு சொல்லிக்கொண்டு வழக்கமான ராசியைத் தக்கவைத்துக்கொள்வார்களா…இன்னும் கொஞ்ச நாட்களில் தெரிந்துவிடும்.

பிரிட்டிஷ்காரர்கள் பழம் பெருமைகளை மட்டுமே ஏன் பேசுகிறார்கள் என்று இப்போது புரிகிறதா? இருக்கும் பெருமைகள் எல்லாமே பழசு!

இந்த மாதிரி வழக்கமான வசந்த, வேனிற் கால ஸீசன் விஷயங்களைத் தாண்டி இந்த வருடம் நிறைய ஸ்பெஷல்.

முதல் ஸ்பெஷல் – ராணி இரண்டாம் எலிசபெத் முடிசூடி இந்த 2012னுடன் அறுபது வருடங்கள் பூர்த்தி ஆகின்றன. இந்த டைமண்ட் ஜூபிளி விழாவிற்காக நான்கு நாட்கள் பிரிட்டன் முழுக்கக் கொண்டாட்டம். நாடெங்கும் கார்கள், வீடுகள், தெருக்கள், டவுன் செண்டர்கள், ஷாப்பிங் மால்கள் டிவி சேனல்கள், வெப் சைட்டுகள் – எங்கெங்கும் சிவப்பும் நீலமுமாய் யுனியன் ஜாக் கொடிகள்…சின்ன வயதில் பார்த்த சினிமா கட்டபொம்மன் பாஞ்சாலங்குறிச்சியை விட்டு தொலைத்து விடுவதாக கர்ஜித்துக் கரித்துக்கொட்டிய கொடிகள் இங்கு எங்கும் நீக்கமற நிறைந்திருகின்றன. அற்புத நிறச்சேர்க்கை.

டைமன் ஜூபிளி என்றால் பொதுவாக 75 வருடங்கள் முடிந்ததைத்தான் குறிக்கும். இது 60 வருடங்களுக்கு என்று மாற்றப்பட்டது ராணி விக்டோரியா காலத்தில். ராணி அவர் கணவர் இறந்தவுடன் பொது வாழ்க்கையிலிருந்து ஒதுங்கி இருந்தார். இது நாடு முழுவதும் ஒருமாதிரியான குழப்ப நிலையை உண்டாக்கியது. எனவே இந்தக் கொண்டாட்டத்த்துக்கு 75 என்பதை அடித்துவிட்டு 60 ஆக மாற்றி எழுதிவிட்டார்கள். அவர்களுக்கென்ன ராஜவம்சம், என்னவேண்டுமானாலும் செய்துகொள்ளலாம். இரண்டும் மூன்றும் ஆறு என்று பக்கிம்ஹாம் பால்கனியிலிருந்து கத்திச் சொன்னால் மொத்த தீவும் ஒத்துக் கொள்ளும்.

மொத்தம் நான்கு நாட்கள் கொண்டாட்டம். லண்டனில் தேம்ஸில் நடந்த படகுகளின் (கிட்டத்தட்ட ஆயிரம் படகுகள்) அணிவகுப்பை ராணி பார்வையிடுவதைப் பார்ப்பதற்காக முதல் நாளிரவன்றே மக்கள் தேம்ஸ் கரையோரம் டெண்ட் அடித்து, கொட்டும் மழையில் தங்கி விட்டிருந்தனர். வியப்பளிக்கும் ராஜ(ராணி) விசுவாசம். அடுத்த நாள் சற்று கடுமையான மழைதான் என்று மணப்பெண்ணின் தந்தைக்குரிய கவலையுடன் வானிலை அறிவிப்பாளர் தெரிவித்திருந்தார்.

எதிர்பார்த்தது போலவே வானம் கொஞ்ச நேரம் மழை தூவியது; அப்புறம் திருமண மண்டபத்தின் நுழைவாயிலில் உற்சாக சிறு பெண்ணின் கையில் சிக்கிய பன்னீர் சொம்பாய் பளீரென அடித்தது. மாலையில் அப்பீஷியல் வெர்ஷன் மழை..மாமழை… மழை இல்லாமல் பிரிட்டனா? இந்த நாளைக் கொண்டாடுவதற்கு மழை அவசியம், பொருத்தமாக இருந்தது.

சிவப்பு, நீல நிறங்களுடன் மழைப்பச்சை.

அடுத்த நாள் பக்கிம்ஹாம் அரண்மனையின்முன் மிகப் பெரிய பிபிசியின் இசைஅரங்கம் (concert). இந்த அரண்மனையை முதன்முதலில் பார்த்துவிட்டுத் துணுக்குற்று நின்றது நினைவு வருகிறது (மைசூர் அரண்மனைக்கு பக்கத்தில்கூட வராது). ராணி பாதி நிகழ்ச்சியில் வந்தார். பிரதம மந்திரி சில வரிசைகள் பின்னால், கும்பலோடு கும்பலாய் இருந்தார்.

அத்தனை ஆரவாரமான, இசைக்கும் விளக்குகளுக்கும் நடுவினிலே சன்னமாய் அவரிடம் போய் “ஸார், ரிசஷன், ரிசஷன்னு சொல்றாங்களே அது பத்தி என்ன நினைக்கிறீர்கள்?” என்று கேட்க ஆசை. எதற்கு வம்பு. பிரிட்டிஷ் துப்பறியும் புத்தங்களின்படி அங்கும் பக்கத்திலிருக்கும் கிரின், ஜேம்ஸ், ஹைட் பார்க்குகள் முழுக்கவும் MI5/6 துறை அதிகாரிகள் இருப்பார்கள். அந்த பார்க்குகளிலும் லண்டன் ட்யூப்புகளிலும் ரகசிய, சங்கேத வார்த்தைகளை, பெட்டிகளை மாற்றிக் கொண்டிருப்பார்கள். நாம் ஏன் அவர்களுக்கு வேலை வைக்க வேண்டும்…

அதற்கு அடுத்த நாள், புகழ்பெற்ற செயிண்ட் பால் கதீட்ரலில் ஒரு service, சாரட்டில் பவனி மற்றும் பால்கனியில் தரிசனம்.

ராணியின் இளமை புகைப்படங்கள், வீடியோப் படங்கள் அவருக்கு நன்றாகச் சிரிக்கதெரியும் என்பதை உணர்த்தினாலும் பின்னர் அவ்வளவாக தெரியவில்லை.

இவ்வளவு திரளான மக்கள் கூட்டத்திலும் எங்கும் தள்ளுமுள்ளு நடந்ததாகப் பதிவாகவே இல்லை. இசை நிகழ்ச்சிக்கு மட்டும் 500,000 பேர் குழந்தைகளுடன் மிக ஒழுங்காக வரிசையில் வந்தனர். இத்தனை பெரிய ஜனக்கூட்டத்தில் கொஞ்ச தள்ளு முள்ளு போதும், குழப்ப அலை பரவுவதற்கு. பிரமிக்க வைத்த ஒழுங்கு.

காவல்துறையினர் உட்பட தொலைக்காட்சியில் சிரித்த, சந்தோஷ முகங்களே தெரிந்தன.. பிரிட்டிஷ்காரர்கள் வட கொரியர்கள் மாதிரி அவ்வளவு பெரிய நடிகர்கள் கிடையாது, அதிலும் இத்தனை ஆயிரம் பேருமா நடிப்பார்கள்!

இரண்டாவது ஸ்பெஷல்

ஒலிம்பிக்ஸ்

ஏழு வருடங்களுக்குமுன் லண்டன் ஒலிம்பிக்ஸிற்கு தேர்வு செய்யப்பட்டதை அறிவித்தபோது ட்ரபால்கர் சதுக்கத்தில் நடந்த சந்தோஷக் கொண்டாட்டங்கள் நினைவிற்கு வருகின்றன. கூடவே அடுத்த நாள் லண்டனில் நான்கு திசைகளில் நடந்த குண்டுவெடிப்புகளும், அதைத் தொடர்ந்து லண்டனும் அப்புறம் கொஞ்ச நேரம் கழித்து உலகமும் ஸ்தம்பித்தது நினைவிற்கு வந்து தொலைக்கிறது.

ஒலிம்பிக்ஸ் டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்டன. வாலண்டியர்ஸ் இடங்களும் கூட நிரம்பிவிட்டன (எல்லாருக்கும் விளையாட்டு அரங்குகளுக்கு உள்ளேதான் வாலண்டியர் செய்ய ஆசை, வெளியே கார் பார்க்கிங் வேலைகளில் ஆர்வமில்லை- ஆச்சரியமில்லை!).

ஒலிம்பிக்ஸிற்கு இன்னும் நாட்கள் இருக்கின்றன இப்போதைக்கு ஒலிம்பிக்ஸ் கிராமங்களைப் பார்ப்பதற்கு டூர் ஏற்பாடுகள் செய்து பணம் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் இதைப் பார்ப்போம்.

இந்த களேபரங்களில் இந்த 2012ன்முக்கிய விஷயம் பெட்டியின் அடியில் சிக்கிய உடை போல் மறைந்துவிட்டது. சரியாக நூறு வருடங்களுக்குமுன் 1912ல்- டர்பிடோ லெப்டினினெட்டாக இருந்து பின் காப்டனான ராபர்ட் ஃபால்கன் ஸ்காட் தென் துருவத்தின் 90 பாகையை அடையும் பயணத்தில் அவரது அணியினருடன் – எட்கர் இவான்ஸ், லாரன்ஸ் ஓட்ஸ், ஹென்றி பௌவர்ஸ் மற்றும் எட்வர்ட் வில்சன் – திரும்ப வரும் வழியில் உயிரிழந்தார். பற்பல வருடங்களுக்கு அவர் ஒரு தேசிய நாயகராக இருந்தார்.. பின்னர் 70களில் நடந்த கேரக்டர் அசாசினேஷன் வரை…
இவரைப்பற்றியும் பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் பார்க்க வேண்டும்.

பி ஏ கிருஷ்ணன்

இந்த ஆண்டின் முக்கிய விஷயம், என்னைப் பொருத்தவரை – எழுத்தாளர் பி.ஏ.கிருஷ்ணன் அவர்களை நேரில் சந்தித்து ஒரு நாளை அவருடன் செலவிட்டது.

காலையில் ட்ரபால்கர் சதுக்கத்தில் சந்திப்பதாகவும் பின்னர் அங்கு இருக்கும் நேஷனல் ஆர்ட் காலரி போவதாகவும் ஏற்பாடு.
மிக இயல்பாக, உற்சாகமாக பேசினார். அவர் லண்டன் கேலரியில் இயல்பாக ஓடிச் ‘சாடி`யதைப் பார்கும்போது அந்த கேலரியில் அவர் பல வருடங்கள் வேலை பார்த்திருப்பாரோ என்று சந்தேகம் வந்தது! ஓவியங்களுடனும், அவை இருக்கும் இடங்களுடனும் வரைந்தவர்களுடனும் அவ்வளவு பரிச்சயம்.“வாழ்க்கையில் நான் முதல்முறையாக சந்திக்கும் எழுத்தாளர் நீங்கள்தான்.” என்றேன்.

ரொம்ப நாட்களுக்குப் பின் அடித்த லண்டன் வெயிலில் நாங்கள் எல்லாரும் கொஞ்சம் துவண்டிருந்தோம். மனுஷர் கொஞ்சம்கூட களைப்படைந்த மாதிரி தெரியவில்லை. கடைசியில் விழா முடிந்து இரவு கேஷவ் காரில் ஏறும்வரை அதே உற்சாகம்…

மாலையில் இலக்கிய விழா, அவருடன் ஒரு கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது… 4 மணிக்கு விழா. நாங்கள் பிஏகேவுடன் 3:30 மணியளவில் அங்கு இருந்தோம். அனைவரும் வந்து, ஏற்பாடுகளை முடித்து விழா ஆரம்பிக்கும்போது 5 மணி இருக்கும்.

விழா மலர் அருமையாக இருந்தது. (எழுத்தாளர் ஜெயமோகன், ரா.கிரிதரன், சொல்வனம் ‘சேதுபதி’ மற்றும் எழுத்தாளர் இரா.முருகன் கட்டுரைகளோடு)

விழா நடத்திய பத்மநாப ஐயரைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறோம். அன்றுதான் நேரில் சந்தித்தோம். மிக எளிமையாக இருந்தார். தணிவான குரலில் பேசினார்.

நாங்கள் எழுத்தாளரிடம் கேட்க நினைத்தவற்றை ஓரளவிற்கு காலையிலேயே கேட்டுவிட்டோம் (புலிநகக் கொன்றையைத் தமிழிலும் எழுதியதிற்கு நன்றி சொன்னேன்)

உணவில் முதலில் இருந்த பதார்த்தம் – தயிர் சாதம்…புலிநகக் கொன்றை தயிர்சாதத்தை நினைவுபடுத்தியது!

விழா முடிந்து அனைவரும் அவரவர் இருப்பிடத்திற்குக் கிளம்ப ஆயத்தமானோம். கையில் இரு பெரிய புத்தகப் பைகளைச் சுமந்து வந்திருந்த ஐயருக்கு இரு வாரங்களுக்கு முன்தான் ஆஞ்சியோ செய்யப்பட்டிருக்கிறது. அந்த நிலையிலும் கனமான புத்தகப் பைகளை ரயிலில் சுமந்து வந்திருந்த ஐயரைக் காண நெகிழ்ச்சியாக இருந்தது. முக்கால்வாசி தூரம் நான் அவருடனும் திரு.நா.கண்ணன் அவர்களுடனும் ட்யூப்பில் வந்தேன். ஐயர் 80களில் நாகர்கோவிலில் சு.ரா வீட்டில் சில நாட்களில் விருந்தினராக தங்கியிருந்ததை நினைவு கூர்ந்தார். திரு.நா.கண்ணன் அவர்களும் அவரது எழுத்தாளர் சந்திப்பு அனுபவங்களை பேசிக்கொண்டே வந்தார்.

இரவு வீடு திரும்புகையிலும்..வேறென்ன, பொன்வானம் பன்னீர் தூவியது இந்நேரம்,

அது எந்நேரமும் தூவும்!

>(தொடரும்)