கவிதைகள்

இடப்பெயர்ச்சி

மழைக்கு
தேங்கிய நீர்க்குட்டையில்
நீந்திக் கொண்டிருந்தன
ஒரு சூரியனும்
சில மேகத் துண்டுகளும்.

சரித்திரத்தில்
இடம்பெறப் போகும் கிளர்ச்சியோடு
சூரியனில் கால் பதிக்க
எத்தனித்தேன்.

கலங்கிய குட்டையில்
நனைந்த கால்களில்
அப்பிக் கொண்டது சேறு.

உச்சந்தலையில் சுள்ளெனப்பட
அண்ணாந்து பார்த்தேன்.

வானுக்கு இடம்பெயர்ந்திருந்தன
சூரியனும் மேகங்களும்.

எம்.ராஜா

-o00o-

பூஜ்யம்

உண்டு ருசித்தது
கண்டு களித்தது
உடுத்தி மகிழ்ந்ததது
உறங்கிக் கிடந்தது
உல்லாசமாயிருந்தது
படித்து முடித்தது
படுத்துத் துய்த்தது
பதவியில் உழைத்தது
பாராட்டுகள் பெற்றது
பணம் சம்பாதித்தது

அனைத்து சுகங்களையும் கூட்டி

பங்காளிப்பகையில்
பச்சைவயல் பாழ்நிலமானது
படிப்புக்காக படாதபாடுபட்டது
பற்றாக்குறையில் பரிதவித்தது
அண்ணன் தம்பிகள் அந்நியரானது
மணவாழ்க்கை முறிந்த்து
மரணத்தை வரவேற்றது

அனைத்து துக்கங்களையும் கூட்டி

முன்னதிலிருந்து
பின்னதைக் கழித்துப் பார்த்தேன்
முன்னொருமுறை

நிகரம் பூஜ்யமாக வந்தது

இன்றும் பூஜ்யம்தான் வருகிறது

தோசை

தோளிலேறிக் காதைக்கடிப்பவனை
தொலைவில் நிறுத்தவேண்டும்
விருந்துண்டவீட்டில் விரகம் தீர்க்க
தக்கதருணம் பார்ப்பவனை
விஷம் வைத்துக் கொல்லவேண்டும்
பணமின்றுவரும் நாளைபோகும்
பழகியநட்புமுறவும் திரும்பவருமாவென்று
பணத்தையுறவைக் கலப்பவனிடம்
பற்றுவரவில் பத்திரமாயிருக்கவேண்டும்
கழுத்தில் மாலைபோட்டு
காலடியில் குண்டுவைப்பவனைக்
கண்டதும் காணாமல் போகவேண்டும்
தீதும் சூதும் நிரம்பியவுலகில்
கழுவியமீனில் நழுவியமீனாய்
நாமும் வாழ்ந்தாகவேண்டும்
என் நண்பனொருவனைப்போல
எனக்குமாசை உலகைத் திருப்பிப்போட
அது தோசையாயில்லையே என்ன செய்ய?

லாவண்யா

-o00o-

கூ

இசைத் தட்டை மரக் கிளையில் வைத்துவிட்டு
குயில் கூவுகிறது
அதன் கூவலுக்கு எதிர்க் கூவல் போடுகிறான்
மரத்தின் கீழ் நிற்கும் ஒருவன்

அம் மரத்திலிருக்கும் கனியொன்றைப் பறித்து
கீழே நிற்பவனின் வாய்க்குள் குறி பார்த்து எறிய நினைக்கிறது
குயில்

அவன் பழத்தை உண்பதற்கு எடுக்கும் நேரத்திற்குள்
பெண் குரலில் ஒரு பாடலைப் பாடி முடித்துவிடலாம்
என்று
கு…கு….கு…கூ…கூ…
குயில் பாடுகிறது

அவன் பழத்தை கையில் எடுப்பதும்
வாயில் வைத்துக் கடிப்பதுமாக அக் காட்சி
குயிலின் கனவில் தோன்றிற்று
மறு நாள் அதிகாலை
தான் கண்ட கனவை விபரமாக கூறுகிறது குயில்
குயில் கூவுகிறது என்று எல்லோரும் ஏன் சொல்கிறீர்கள்

கனவைப் பாடலாக்கிப் பாடும் ஒரு பறவையை
இத் தறுணத்தில்தான் காணுகிறேன்

பாடி
உங்களை அதன் கதைக்குள் இழுத்து அமர;த்திவிட்டு
கூடு கட்டி குஞ்சு பொரிக்கத் தெரியாத நிலையை
‘கூ’ என்ற தமிழ் எழுத்தில் தன் வாய்க்குள் எழுதி
உங்கள் முன்னால் நிற்கும் மரத்திலிருந்து இசைக்கிறது

ஃபைஸல் அஹமத்

-o00o-

காயங்களைப் பந்தாடும் விளையாட்டு

எல்லோரும் வட்டமாக
உட்கார்ந்து,
காயங்களைப் பந்தாடும்
விளையாட்டு
விளையாடிக்கொண்டிருந்தோம்.
முதலில்,
ஒரு காயம்,
வட்டத்திற்குள் விடப்படும்.
அது யாரையும் வந்தடையலாம்.
எடுப்பவர், உடனே மற்றவரிடம்
தள்ளிவிடவேண்டும்.
எதிரெதெரில் இருப்பவர், தமக்கிடையே
மீண்டும் மீண்டும்
எறிந்து கொள்வர்.
சுற்றிப் பார்த்துக்கொண்டிருப்பவரும்,
விழிப்பாக இருந்தேயாக வேண்டும்.
எந்த நொடியும், அது
அவரை நோக்கி
பாயலாம்.
திடீரென ஒரு நொடி,
ஆட்டம் நிற்கும்.
கையில் காயத்துடன் திகைத்திருப்பவர்
வட்டத்தினின்று நீக்கப்படுவார்.
மீண்டும், காயம்
சுழலத் தொடங்கும்.
எல்லோரும் நீக்கப்பட்டதும்,
கையில் காயத்துடன்
தனித்தவர், ஜெயித்தவர்.
அத்தனை கவனமாக
விளையாடியும்,
ஒரு முறை, நான் கையும்
காயமுமாக நீக்கப்பட்டேன்.
விளையாட்டு மீண்டும்
தொடர்ந்தது. ஆனால்,
என்னிடம், எறிய
காயமும் இல்லை.
மீண்டும் நீக்கப்பட
ஒரு வட்டமும் இல்லை.

ச.அனுக்ரஹா

-o00o-

நாய் கவ்வும் பந்து

நினைப்பில்
தூக்கி எறிவான்
பந்தை.

தூரமாய் ஓடிக் கவ்வி
வேகமாய்த்
திரும்பும் நாய்.

தூரதூரமாய் வீசுவான்
பந்தை
இப்போது.

துரத்தியோடிக் கவ்வி
வேக வேகமாய்த்
திரும்பும் நாய்.

தொடு வானுக்கே
வீசியெறிவான்
பந்தை
இப்போது.

தனிப் பனையாய்
தலை விரியாய்
இனி சும்மா
இருந்து விட்டுப்
போய் விடலாம்
என்று
மூச்சு விடுவான்.

மூச்சு விடுவதற்குள்
வந்து சேரும்
பந்தைக்
கவ்விக் கொண்டு
நாய்.

அன்புடைமை

பறவைகள் அடையும்
பொழுது சாயும் வேளை.

மரங்கள்
காத்திருக்கும்.

பள்ளிவளாகத்தில்
தாய் தந்தையர் கூட்டம்.

காலையில்
சுற்றுலா சென்ற
குழந்தைகள்
இன்னும் திரும்பி வரவில்லை.

அவரவர் குழந்தைகளுக்கு
அவரவர்
தாய் தந்தையர் காத்திருப்பர்.

மரங்கள் மட்டும்
எல்லாக் குழந்தைகளுக்கும்
காத்திருக்கும்
எல்லாப் பறவைகளுக்கும்
காத்திருப்பது போல.

கு.அழகர்சாமி