இசையில்லாத இசை

ஈராக்குளிரோடும் வாடைக் காற்றோடும் இசை மழையும் பொழியும் பருவம் இப்போது சென்னையில். குளிற் காற்றிலும் சில சமயம் இதமும் மென்மையும் தவழ்ந்து நெஞ்சையும் உடலையும் இனிக்க அடிக்கின்றன. சங்கீதத்திலும் சில சமயம் இந்த அனுபவம் கிடைக்கிறது. குளிர் காற்றோடு வேண்டாத நைப்பும் நஞ்சும் கலந்து மனிதனைப் படுக்கவும் சாகவும் அடிக்க முடியும்.

உயர்ந்த சங்கீத மரபுக்குச் சேவை செய்து வரும் சபை ஒன்றில் அன்று ஒரு இளைஞர் புல்லாங்குழல் வாசித்தார். எக்காலும் மாற்றுக் குறையாத இசையைப் பேணி உபாசித்து வளர்ந்து வரும் பரம்பரையில் உதித்தவர் அந்த இளைஞர். அவருடைய சுருதி சுத்தம்; ராகங்களின் ஜீவநாடிகளை அறிந்து, உணர்ந்து, அனுபவித்து வாத்தியத்தில் அவற்றை நிறைவுடன் எழுப்பும் கலை ஆற்றல்; ஸ்வரம் வாசிக்கும்பொழுது தாளகதிகளை ரக்தியாகக் குழைத்துப் புதிய புதிய பின்னல்களைப் பின்னி கவரும் தன்னம்பிக்கை கொண்ட நிச்சய உணர்வு; இவ்வளவையும் சேர்த்துக் கேட்போரை தன்மறதியில் ஆழ்த்தி விட்டன.

அவருக்குப் பக்க வாத்தியமாக வயலின் வாசித்தார் ஒரு வித்வான். அவரும் இளைஞர். சங்கீதத்தைக் கற்றுத் தொழிலாகவும் கொண்டு வளர்ந்த பரம்பரையைச் சேர்ந்தவர்தான். ஆனால் குழலில் எழுந்த மோகனமான இசையைத் தம் வில்லால் அறுத்துக் கழுகுக்குப் போட்டுக் கொண்டிருந்தார். வில்லும் கம்பியும் சேரும்போதே ஒரு நரநரப்பு; ஸ்ருதியில் எதற்காகச் சேர வேண்டும் என்று கேட்பது போல ஒரு அசட்டை; ராகமோ குடிகாரத் தள்ளாட்டம் போன்ற ஒரு அநிச்சயம்; அனுபூதியில்லாத தேகப் பயிற்சி; உயிர் நாடிகளைத் தவிர மற்ற எலும்பு, தசைகளை எல்லாம் அறிந்து கொண்ட ஒரு திருப்தி; இவ்வளவும் அவரது தொழிலில் விரவிக் கிடந்தன. அவரது ‘இசையில்’ என்று சொல்ல மனம் வரவில்லை. அது இசையில்லை; கலையில்லை; இசைத் தொழில். இசையை வரவழைக்கத் தவறிவிட்ட உடற்பயிற்சி.

மற்ற சங்கீத முறைகளைப் பற்றியோ, மற்ற நாடுகளைப் பற்றியோ நமக்குத் தெரியாது. தமிழகத்திலும், கர்நாடக இசை வழங்கிவரும் பகுதிகளிலும் இத்தகைய பல நுணுக்கத் தொழிலாளர்களைப் பார்த்து வருகிறோம்.

அன்று ஒரே மேடையில் ஒருவர் குழல் ஊதினார். சல்யன் கர்ணனுக்குத் தேரோட்டிய மரபில் ஒருவர் அவருக்குப் பக்க வாத்தியம் வாசித்தார். இருவரும் ஒரே தினுசான இசைப் பயிற்சி உடையவர்கள். ஸ்வாராளி, ஜண்டை வரிசை, அலங்காரம் என்று தொடங்கி பால பாடம், முன்னேற்ற பாடம், விசேஷ பாடம் எல்லாம் இருவருக்கும் நடந்திருக்கின்றன. இருவரும் தத்தம் வாத்யங்களை உழைப்போடு பயின்றிருக்கிறார்கள். ஆனால் ஒருவரது வாத்யம் இசைக் கருவி போலவும், இன்னொருவரது வாத்யம் ஆயுதம் போலவும் ஒலிக்கிறது. ஒன்று இசையாகவும் இன்னொன்று இசை ஊடின ஓசையாகவும் கேட்கிறது, ஏன்?

இசை உள்ள இசை, இசை இல்லாத இசை என்று இரண்டு இசைகள் நிலவி வருகின்றன. பொருளாதார ரீதியில் இருவருக்கும் தொழில் நன்கு நடக்கிறது. பின்னவருக்கு அதிகமாகக்கூட நடக்கலாம். அது கிடக்கட்டும். மற்ற கலைகளும் மச்சம் போல பிறவியாக இருக்க வேண்டுமோ என்னவோ. ஆனால் அது தம்மிடம் இருப்பதாக நினைத்துக் கொண்டு பலர் பாடுபட்டுக் கற்றுத் தேர்கிறார்கள். அது சிரங்கு மாதிரித் தெரிகிறது. குரங்கைப் போல அவர்கள் அதைக் கிள்ளிக் கிள்ளி அந்த எரிச்சலையே கலை முயற்சி என்று வெறி கொள்கிறார்கள். ஆங்கிலத்தில் மெஸோச்சிஸம் என்று அழைக்கப்படுகிற ஆத்ம சித்திரவதை இது. இந்த எரிச்சலையும் வெறியையும், மற்றவர்களும் கலை முயற்சி என்று தவறாக எண்ணி அவர்களைக் கச்சேரியில் உட்கார்த்தி விடுகிறார்கள். நாட்டியம் ஆடவும் ஓவியம் வரையவும் சொல்கிறார்கள். எனவே இசையில்லாத இசை, இலக்கியமில்லாத இலக்கியம், ஓவியம் இல்லாத ஓவியம், நாட்டியம் இல்லாத நாட்டியம் என்று அந்தந்தத் துறைகளில் உயிரும் சவமும் சேர்ந்து பவனி வருகின்றன.

நன்றி : தினமணி கதிர்

குறிப்பு : இலக்கியத்திற்கு இணையாக இசைத்துறையில் ஞானம் கொண்டவர் தி.ஜானகிராமன். தனது படைப்புகளில் இசையிலிருந்து அவர் பெற்ற அனுபவங்களை பதிவுசெய்தவர். அவரது படைப்புகளை போலவே அவரது இசை ரசனையும் தரமானவை. தரம் குறைந்தவைகளை அவர் தள்ளிவைக்க தவறியதில்லை. இந்தக் கட்டுரை ‘இலக்கிய வட்டம்’ பத்திரிக்கைகாக எழுதப்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன் இதே கட்டுரையை தினமணி கதிர் மீள்-பிரசுரித்தது.