அயோல்கஸ் நகருக்கு ஆட்சி உரிமை கொண்ட ஜேசன் கால்க்கீஸ் கடற்கரையில் ஏரஸ் தெய்வத்துக்கு அர்ப்பணிக்கப்பட்டிருந்த ஒரு புனித ஓக் மரத்தில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் தங்கக் கம்பளியை மீட்டு வந்து தன் உரிமையை மீட்டுக் கொள்ளும்படி பணிக்கப்படுகிறான் என்பதையும் அவனும் ஆர்கோனாட்ஸ் என்றழைக்கப்படும் அவனைச் சேர்ந்த போர் வீரர்களும் ஒரு கப்பலில் பயணிக்கிறார்கள் என்பதையும் த்ரேஸ் நகர மன்னன் பைனீயஸ் எதிர்காலத்தில் அவர்கள் எதிர்கொள்ளவிருக்கும் அபாயங்கள் குறித்து சில சமிக்ஞைகள் அளிக்கிறான் என்பதையும் சென்ற இதழில் வாசித்திருப்போம்.
இனி….
குறிப்பாக சிம்ப்ளகேட் எனப்படும் ஒரு வகை பவழத் திமிங்கலம் பைனீயஸ் எச்சரித்தான்.கடற்பயணத்தில் போஸ்போரஸ் நுழைவாயிலைத் தாண்டிச் செல்லும் மிகக் குறுகிய கடற்பாதையில் பவழப் பாறைகள் உண்டு என்றும் யாரும் எதிர்பாராத தருணத்தில் சிம்ப்ளகேட் தோன்றி கப்பலையே கவிழ்த்துவிடும் என்று மன்னன் பைனீயஸ் எச்சரிக்கையளித்தான். அந்தப் பகுதியில் வாத்துகளைப் பயன்படுத்தும்படி அறிவுறுத்தினான். அவ்வாறே அந்தப் பகுதியை அடைந்ததும் ஆர்கோஸ் வீரர்கள் வாத்துகளைப் பயன்படுத்தினர். அக்குறுகிய பாதையை அடைந்ததும் வாத்துகளை முன்செல்லவிட்டு அவற்றின்பின் கப்பலை செலுத்திச் சென்றனர். சில வாத்துகளின் இறகுகள் கிழிந்தன என்பதற்கப்பால் வேறெந்த பேராபத்தும் இல்லாமல் ஆர்கோஸ் வீரர்கள் அப்பகுதியைக் கடந்து சென்று தப்பித்தனர். கப்பலின் ஒரு புறப் பலகைகள் உடைந்தாலும் சிம்ப்ளகேட்டின் தொல்லைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. பவழப்பாறைகள் கடல் அடியில் சென்று மீன்கள் இனப்பெருக்கம் செய்வதற்குரிய குகைகளை ஏற்படுத்தித் தந்தன.
ஆர்கோஸ் வீரர்கள் கால்க்கீஸில் அடியெடுத்து வைக்குமுன் மரியான்டைன் என்ற இடத்திற்கு வருகின்றனர்.. குறி சொல்லும் ஈத்மான் அவன் உணர்ந்தபடியே அங்கு ஒரு கரடியால் கொல்லப்படுகிறான். கால்க்கீஸின் நுழைவு வாயிலை அடையும்போது டெர்மோடானில் ஆர்கோஸ் வீரர்களில் முக்கியமானவனாக இருக்கும் மாலுமி டைஃபஸ் இறந்து விடுகிறான்.அதையடுத்து ஆங்கேயஸ் பிரதான மாலுமியாகிறான்.
டெர்மோடானைக் கடந்து கால்க்கீஸ் கோட்டைக்குள் நுழைகிறான் ஜேசன். தங்கள் முன்னோர்களின் சொத்தாகிய தங்கக் கம்பளியைத் திரும்பத் தரும்படி அதன் மன்னன் ஏயிட்டஸைக் கேட்கிறான். அதையொட்டி ஜெசனுக்கு சில நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன. அக்னியை சுவாசிக்கும் அடங்காத காளைகளை ஏரில் பூட்டி, பித்தளைப் பாதணிகளை அணிந்தபடி நிலத்தை உழுது, அதன் மண்ணில் திபேஸின் பாம்புப் பற்களை விதைக்க வேண்டும். ஏயீட்டஸின் மகள் மந்திரவாதி மெடியாவின் தயவு இல்லாமல் இக்கட்டளையை நிறைவேற்ற முடியாது என்பதால் மெடியாவை மணக்க ஜேசன் முன்வருகிறான்.
தெஸீயஸ் கதையில் மன்னன ஏஜியஸின் ஆண்மைக்குறையை குணப்படுத்திய அதே மெடியாதான் மன்னன் ஏயீட்டஸின் மகளாகிய இவளும். மெடியா தன் அத்தை சரக்கேயிடமிருந்து மந்திரதந்திரங்களைக் கற்றிருந்தாள். அவள் ஜேசனுக்கு ஒரு களிம்பை வழங்கி அதைத் தன்னுடலில் பூசிக் கொண்டு நிலத்தை உழச் சொன்னாள். அதனால் தீயை சுவாசிக்கும் காளைகளால் அவன் உடலுக்கு எந்தத் தீங்கும் ஏற்படவில்லை. ஆனால் பாம்புப் பற்களை விதைக்கும்போதுதான் பிரச்சினை வந்தது.
பாம்புப் பற்களை உழுத வயலில் விதைத்ததும் நாகாசூரர்கள் மண்ணிலிருந்து
வெளிப்பட்டு ஜேசனைத் தாக்கத் தொடங்கினர். அவர்களிடமிருந்து தப்பி ஓடிய ஜேசன் ஒரு புதரின் மறைவில் ஒளிந்து நின்று கற்களைக் கொண்டு திருப்பித் தாக்கினான். தாக்குதல் எங்கிருந்து நடைபெறுகிறது என்று குழப்பமடைந்த நாகாசூரர்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டு மரணமடைந்தனர்.
இப்படியாக ஏயிட்டஸின் நிபந்தனையை ஜேசன் நிறைவேற்றியும்கூட அவன் தங்கக் கம்பளியைத் திருப்பித் தர மறுத்தான்.எனவே ஜேசனும் மெடியாவும் அதைத் தந்திரமாகக் கொள்ளையடிக்கத் திட்டமிட்டனர். தங்கக் கம்பளத்தைக் காவல் காத்திருந்த பலதலை நாகத்தைத் தன் மந்திரத்தால் தந்திரமாகத் தூங்க வைத்தாள் மெடியா. அதன்பின் ஓக்மரத்தில் மாட்டி வைக்கப்பட்டிருந்த தங்கக் கம்பளத்தை ஜேசன் கைப்பற்றியதும் இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இதையறிந்த மன்னன் ஏயிட்டஸும் அவன் மகன் ஆப்ஸைட்டஸும் அவர்களிருவரையும் தாக்கத் தொடர்ந்து வந்தனர். ஜேசனைக் \கொள்ளும் எண்ணத்தில் அவன் மீது ஈட்டியை வீசக் கையெடுத்த்தான் ஆப்ஸைட்டஸ். அதைக் கண்ட அக்கணமே மெடியா அவனது இருகரங்களையும் வெட்டிக் கடலில் எறிந்தாள். ஏயிட்டஸ் தன் மகனின் கைகளைத் தேடி கடலில் வீழ்ந்து ஆழ்ந்து சென்றான். அவன் திரும்பி வருவதற்குள் ஆர்கோஸ் கப்பல் ஜேசனையும் மெடியாவையும் அங்கிருந்து மீட்டுச் சென்றது. ஆர்கோஸ் கப்பல் புறப்பட்டபோது அதன் வீரர்கள் எவ்வளவு பிரச்சினைகளை எதிர்கொண்டனரோ அவ்வளவு பிரச்சினைகளையும் திரும்பும்போதும் எதிர்கொண்டனர்.
டான்யூப் நதி சங்கமத்தை ஆர்கோஸ் கப்பல் நெருங்கியபோது அங்கே கடும் புயல் வீசியது. ஸீயஸ்தான் அவ்வாறு புயலை ஏவியிருப்பதாகக் கப்பலின் சுக்கான் குறி சொன்னதுடன் இதற்குப் பரிகாரமும் சொல்லப்பட்டது. ஆஃசெட்டஸ் கொலைக்குப் பொறுப்பேற்று சார்க்கேயிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இதையொட்டி சார்க்கே வாழ்ந்து வந்த ஏயியா தீவை ஆர்கோஸ் கப்பல் அடைந்தது.
அங்கு ஜேசனைத் தவிர இதர ஆர்கோஸ் வீரர்களை சார்க்கே மன்னிக்கவில்லை. மெடியாவை மட்டும் அழைத்து வரவேற்று உபசரித்து அவளுக்கும் பாப மன்னிப்பு வழங்கினாள். இதனால் ஹீராவுக்கு மிகுந்த மன உளைச்சலும் கலவரமும் ஏற்பட்டது. ஆர்கோஸ் படை வீரர்களை இழப்பதில் ஹீராவுக்கு சிறிதும் விருப்பமில்லை. எனவே அங்கு எதுவும் பிரச்சினை ஏற்படாமல் காக்கும் நோக்கத்தில் அக்கிலஸின் அன்னை தெத்தீஸை ஹீரா அங்கு அனுப்பி வைக்கிறாள். அவள் ஆர்கோஸ் வீரர்களை மிகுந்த எச்சரிக்கையுடன் சைரன் கடலுக்கு கப்பலை செலுத்திச் செல்கிறாள்.
சைரன் பறவைகள் பாடியே கொன்று விடும் இயல்பு கொண்டவை. ஆனால் இங்கு சைரன் பறவைகளின் கானத்துக்கு ஓர்ஃபியாஸ் எதிர்பாட்டு இசைக்கிறான். சைரன் பறவைகளின் பாடல் எவருக்கும் கேட்டுவிடாதபடிச் செய்ய அவன் செய்த தந்திரம் இது. ஆனால், பூட்டஸ் மட்டும் சைரன் பறவைகளின் பாடலைக் கேட்டு கடலுள் குதித்து விடுகிறான்.நல்ல வேளையாக பூட்டஸின் தெய்வம் ஆஃப்ரோடைட் அக்கணம் அங்கே தோன்றி அவனது உயிரைக் காப்பாற்றி அவனை சிசிலி கடற்கரைக்குக் கொண்டு சேர்க்கிறாள்.
அடுத்ததாக ஆர்கோஸ் கப்பல் ஸ்கைலாஸ் சாரப்டீஸ் குறுகிய வழியைக் கடந்து பாயல்ஸியா தீவையடைகிறது. அங்கே ஆர்கோஸ் வீரர்கள் கால்க்கீஸ் மன்னன் ஏயிட்டஸ் அனுப்பியிருந்த படைவீரர்களை எதிர்கொள்கின்றனர். கால்க்கீஸ் படை வீரர்களுடன் போரிட்டு வெற்றி பெற்ற ஆர்கோஸ் வீரர்கள் கடல்வழிச் செல்கையில் அவர்களை மீண்டும் புயல் தாக்குகிறது. புயல் காற்றுக்கு வசப்பட்ட கப்பல் அதன் திசையில் அலைக்கழிக்கப்பட்டு செர்ட்டீஸ் கடற்கரையில் ஒதுங்குகிறது. அந்தத் தீவு மணல் நிரம்பிய பாலை. ஆர்கோஸ் வீரர்கள் தங்கள் கப்பலைத் தோளில் சுமந்து செர்ட்டீஸ் பாலைவனத்தைக் கடந்து செல்கின்றனர். இந்தப் பயணத்தில் வீரர்கள் ட்ரைட்டோனிஸ் ஏரியை அடைகின்றனர்.
அந்த ஏரியின் தெய்வம் ட்ரைட்டான் கடலுக்குச் செல்லும் வழியை ஆர்கோஸ் வீரர்களுக்கு உணர்த்துகிறது. அதன்படியே கடலுக்குச் செல்லும் வீரர்களை க்ரீட் என்ற தீவின் காவல்தெய்வம் தாலோஸ் வழி மறிக்கிறது. இந்த ராட்சத தெய்வம் சொஃபெஸ்டஸால் உருவாக்கப்பட்ட ஒன்று. பெரும் பாறைகளைப் புரட்டி கப்பலின் மேல் வீழ்த்தி அதை உருத்தெரியாமல் சிதைத்துவிடும் ஆற்றல் கொண்ட தெய்வம் அது. அதன் உயிர்நிலை குதிகாலுக்கு மேல் உள்ள மூட்டில் இருந்தது. மெடியா இங்கு தன் மந்திர சக்தியைப் பிரயோகிக்கிறாள். அதன் விளைவாக தாலோஸுக்குத் தன் பாதமே பாறையாகக் காட்சி தருகிறது. பாறையைப் பெயர்ப்பதாக நினைத்துக் கொண்டு தன் பாதத்தை மூட்டிலிருந்து பிரித்தெடுக்கும் தாலோஸின் உயிர் பிரிகிறது.
ஆர்கோஸ் கப்பலின் தொடரும் பயணத்தில் ஓரிடத்தில் வானம் இருள்கிறது. எங்கு நோக்கினும் இருட்டு. திசைகள் மறைந்து கப்பலை மேற்கொண்டு செலுத்த வழியறியா நிலையில் ஜேசன் தன் தெய்வம் அப்போல்லோவை எண்ணி தியானிக்கிறான். அப்போல்லோ அவன் முன் தோன்றி அவனுக்கு ஒரு ஒளி விளக்கை வழங்குகிறார்.ஜேசன் ஒளி பெற்ற இடமே அனஃபே தீவாக உருவம் பெறுகிறது.
அங்கிருந்து யூபோயோ வந்து அதன்பின் ஒரு வழியாக அயோக்கஸ் கரையை ஆர்கோஸ் கப்பல் தொடுகிறது. தன் பயணம் வெற்றி பெற்றதற்கு நன்றிக் கடன் செலுத்தும் வகையில் ஜேசன் தன் ஆர்கோஸ் கப்பலை பாசிடானுக்குக் காணிக்கையாக வழங்குகிறான்.
அயோக்கஸ் திரும்பிய ஜேசன் பீலியஸ் முன் இட்டிருந்த நிபந்தனையின்படி தன் முன்னோர்களின் தங்கக் கம்பளியை எடுத்து வந்து காட்டியபின்னும்கூட ஜெசனுக்கு அரசுரிமை மறுக்கப்படுகிறது. எனவே ஜேசன் மெடியாவின் உதவியை நாடுகிறான்.ஜெசனுக்கு உதவும் நோக்கத்தில் மெடியா பீலியஸின் பெண்களுடன் நெருங்கிப் பழகுகிறாள். தனக்கு ஆண்களுக்கு இளமையைத் திரும்பப் பெற்றுத் தரும் ரகசியம் ஒன்று தெரியும் என்று சொல்கிறாள் மெடியா. பீலியஸின் பெண்களுக்கும் இந்த ரகசியத்தை வெளிப்படுத்துவதாக ஆசை காட்டுகிறாள் மெடியா. அவர்கள் பீலியஸை இளமையைத் திரும்பப் பெறும் சிகிச்சைக்கு உட்படுத்துகிறார்கள். ஆனால் மெடியா தவறான சிகிச்சை அளித்து அவனைக் கொன்று விடுகிறாள். இந்தக் கொலையின் விளைவாக ஜெசனும் மெடியாவும அயோக்கஸை விட்டுத் தப்பியோட வேண்டியதாகிறது.
பத்தாண்டு காலம் கோரிந்த் தீவில் இருவரும் வசிக்க வேண்டியதாகிறது. இந்தப் பத்தாண்டு கால உறவில் ஜெசனுக்கு மெடியாவின்மீது கசப்பும் வெறுப்பும் வளர்கிறது. அவள் மீது நாட்டம் குறைந்து ஜேசன் கிரியான் மன்னனின் மகள் கிரயூஸாவை மணம் புரிய விரும்புகிறான். இதில் மெடியாவுக்கு ச்மமதமில்லை. எனவே அவள் முதலிரவன்று அணிந்து கொள்ளும்படி கிரயூஸாவுக்கு ஒரு மந்திரிக்கப்பட்ட உடையைக் கொடுக்கிறாள். மெடியாவின் சூழ்ச்சியை அறியாத கிரயூஸா அந்த ஆடையை அணிந்து கொண்ட மறு கணமே அது தீப்பிடித்து எரிய, அவள் தீக்கிரையாகிறாள். அந்தத் தீ அரண்மனை எங்கும் பரவ, அந்நாட்டு மன்னனும் இறக்கிறான்.
இருப்பினும் மெடியாவின் ஆத்திரம் அடங்குவதில்லை. ஜேசன் மூலம் தனக்குப் பிறந்த இரு குழந்தைகளையும் கொன்று விட்டு அவள் வான்ரதம் ஏறிப் பிரிந்து ஏதென்ஸ் செல்கிறாள். அங்கிருந்து கால்க்கீஸ் திரும்பும் மெடியா ஏயீட்டஸ் ஆள வேண்டிய அரசை அவன் தம்பி பெர்சஸ் ஆள்வதைக் காண்கிறாள். அதையடுத்து அவள் பெர்சஸை சூழ்ச்சியால் வென்று அரசை ஏயீட்டஸ் வசம் ஒப்படைக்கிறாள். தன் மண்ணுலக ஆயுட்காலம் முடிந்ததும் பாதாள லோகம் செல்லும் மெடியா அங்கு இலியத்தின் நாயகன் அக்கிலஸின் மனைவியாகிறாள்.
இவள் கதி இப்படி இருக்க, தன் இரு மனைவியர் மற்றும் குழந்தைகளை இழந்த ஜேசன் ஒருவாறு அமைதி கண்டு அயோக்கஸ் திரும்புகிறான். அப்போது அதன் மன்னனாக இருக்கும் அக்கோஸ்டஸ் (பீலியஸின் மகன்) ஜேசனை அன்புடன் வரவேற்று அவனுக்குரிய அரசுரிமையைத் திரும்பத் தருகிறான். தங்கக் கம்பளி வேட்டையில் துவங்கிய ஜேசனின் அரசுரிமைப் போராட்டம் இவ்வகையில் முடிவு காண்கிறது.
(தொடரும்)