சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் – சதகம் – பகுதி 15

அறப்பளீசுர சதகம்

அம்பலவாணக் கவிராயரால் இயற்றப்பெற்ற அறப்பளீசுர சதகம், காப்புச் செய்யுள் நீங்கலாக நூறு பாடல்கள் கொண்டது. அறப்பள்ளி எனும் தளத்தில் எழுந்தருளிய சிவபெருமான் மீது பாடப்பெற்றது.

நல் மனைவி, நன் மகன், உடன் பிறந்தார், நல்லாசிரியர், நன்மாணாக்கன் என்பவர் எப்படி இருத்தல் வேண்டும் என விவரிக்கும் பாடல்கள். கஞ்சன், தீயவை, மக்கட்கு அழகு, சமூகத்தின் இயல்பு என போதித்துச் செல்லும் பாடல்கள்.

யாரெல்லாம் பயனற்றவர் என்று சொல்லும் ஒரு பாடலைப் பதம் பிரித்து எழுதுகிறேன்.

மாறாத கலை கற்றும் நிலை பெற்ற சபையிலே
வாய் இலாதவன் ஒரு பதர்;
வாள் பிடித்து எதிரி வரின் ஓடிப் பதுங்கிடும்
மனக் கோழை தான் ஒரு பதர்;
ஏறா வழக்கு உரைத்து அனைவரும் சீச்சி என்று
இகழ நிற்பான் ஒரு பதர்;
இல்லாள் புறம் செலச் சம்மதித்து அவளோடு
இணங்கி வாழ்பவன் ஒரு பதர்;
வேறொருவர் மெச்சாது தன்னையே தான் மெச்சி
வீண் பேசுவான் ஒரு பதர்;
வேசையர்கள் ஆசை கொண்டு உள்ளளவும் மனையாளை
விட்டு விடுவான் ஒரு பதர்;
ஆறாத் துயரையும் மிடியையும் தீர்த்து அருள்செய்
அமல! எமது அருமை மதவேள்
அனுதினமும் மனதில் நினைதரு சதுரகிரி வளர்
அறப்பளீசுர தேவனே!

ஏறா வழக்கு – எடுபடாத வழக்கு, மிடி – துன்பம்.

இளைஞர்களுக்கு, கற்க வேண்டிய முறைப்படி கல்வி கற்க அறிவுறுத்தும் பாடல் ஒன்று.

வாலிபம் தனில் வித்தை கற்க வேண்டும்; கற்ற
வழியிலே நிற்க வேண்டும்;
வளைகடல் திரிந்து பொருள் தேட வேண்டும்; தேடி
வளர் அறம் செய்ய வேண்டும்.
சீலம் உடையோர்களைச் சேரவேண்டும்; பிரிதல்
செய்யாது இருக்க வேண்டும்;
செந்தமிழ்ப் பாடல் பல கொள்ள வேண்டும்; கொண்டு
தியாகம் கொடுக்க வேண்டும்;
ஞாலமிசை பல தருமம் நாட்ட வேண்டும்; நாட்டி
நன்றாய் நடத்த வேண்டும்;
நம்பன் இணையடி பூசை பண்ண வேண்டும்; பண்ணி
னாலும் மிகு பத்தி வேண்டும்
ஆலமர் கண்டனே! பூதியணி முண்டனே
அனக எமது அருமை மதவேள்
அனுதினமும் மனதில் நினைதரு சதுரகிரி வளர்
அறப்பளீசுர தேவனே!

அறிவற்றவர்களைத் திருத்த இயலாது என்பதற்கும் ஒரு பாடல்.

நீர்மேல் நடக்கலாம் எட்டியும் தின்னலாம்
நெருப்பை நீர் போல் செய்யலாம்
நெடியபெரு வேங்கையைக் கட்டியே தழுவலாம்
நீள் அரவினைப் பூணலாம்
பார்மீது மணலைச் சமைக்கலாம் சோறெனப்
பட்சமுடனே உண்ணலாம்
பாணமொடு குண்டு விலகச் செய்யலாம் மரப்
பாவை பேசப் பண்ணலாம்
ஏர்மேவு காடியும் கடையுற்று வெண்ணெயும்
எடுக்கலாம்! புத்தி சற்றும்
இல்லாத மூடர்தம் மனத்தைத் திருப்பவே
எவருக்கும் முடியாது காண்!
ஆர்மேவு கொன்றை புனை வேணியா! சுரர் பரவும்
அமலனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில் நினைதறு சதுரகிரி வளர்
அறப்பளீசுர தேவனே!

சான்றோர் சிறப்பும் பாடுகிறது ஒரு செய்யுள்-

துறிபட்ட சந்தனக் கட்டை பழுதாயினும்
சார்மணம் பழுதாகுமோ?
தக்கபால் சுவறிக் காய்ச்சினும் அதுகொண்டு
சார மதுரம் குறையுமோ?
நிறைபட்ட கதிர்மணி அழுக்கடைந்தாலும் அதில்
நீள் குணம் மழுங்கி விடுமோ!
நெருப்பிடை உருக்கினும் அடிக்கினும் தங்கத்தின்
நிறையும் மாற்றுக் குறையுமோ?
கறைபட்ட பைம்புயல் மறைந்தாலும் அது கொண்டு
கதிர்மதி கனம் போகுமோ?
கற்ற பெரியோர் மகிமை அற்பர் அறிகிலரேனும்
காசினி தனிற் போகுமோ?
அறிவுற்ற பேரை விட்டு அகலாத மூர்த்தியே
ஐயனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில் நினைதரு சதுரகிரிவளர்
அறப்பளீசுர தேவனே!

அற்புதமான தர்க்கங்கள் வைக்கிறார் நூலாசிரியர்.

வெறிகொண்ட மற்கடம் பேய்கொண்டு, கள் உண்டு
வெங்காஞ் சொறிப் புதரிலே
வீழ்ந்து, தேள் கொட்டிடச் சன்மார்க்கம் எள்ளளவும்
மேவுமோ?

வெறிகொண்ட குரங்கு, பேய் பிடித்து, கள் குடித்து, வெங்காஞ்சொறிப் புதரில் வீழ்ந்து, தேளும் கொட்டினால் அது எள்ளளவும் சன்மார்க்கம் மேவுமோ?

புத்தாடை அணியும் நளன், பயணம் செய்ய ஏற்ற நாட்கள், சகுனம், பயண காலப் பலன், ஒழுக்கம் உடையவர் விலக்க வேண்டியவை, புது மனை புக ஏற்ற காலம், விருந்துக்கு ஏற்ற நாட்கள், பூப்பு எய்தும் நாட்பலன், பூப்படையும் ராசியின் பலன், என நீள்கிறது நூல்.

எந்த இலையில் உணவு உண்ணலாம், எதில் உண்ணத் தகாது என அடுக்குகிறது ஒரு பாடல்.

வாழை இலை, புன்னை, புரசு, உடன் நற் குருக்கத்தி
மா, பலா, தெங்கு, பன்னீர்
மாசில் அமுது உண்ணலாம்; உண்ணாதவோ அரசு,
வனசம், செழும் பாடலம்
தாழை இலை, அத்தி, ஆல், ஏரண்ட பத்திரம்
சாக்கு இவை அன்றி வெண்பால் எருக்கு, எச்சில் இலை

வாழை இலை, புன்னை இலை, புரசு இலை, குருக்கத்தி இலை, மாவிலை, பலா இலை, தென்னை இலை, பன்னீர் இலை ஆகியவற்றில் உணவு உண்ணலாம் என்கிறார் புலவர். புன்னை மரம் சூழ்ந்த ஊரில் பிறந்து வளர்ந்தவன் நான். அதில் எங்கள் பக்கம் எவரும் உண்டதில்லை இன்றுவரை. மாவிலை, பலா இலை தொன்னை பிடித்துக் கஞ்சி குடித்ததுண்டு. குருக்கத்தி மரம் என்னால் இனங்காண முடியவில்லை. கேட்டதோடு சரி. பன்னீர் மரம் என நான் தெரிந்து வைத்திருக்கும் இலையில் உண்ணத் தோது கிடையாது. புலவர் கூறும் பன்னீர் வேறாக இருக்கலாம். தென்னை ஓலை முடிந்த கொட்டான்களில் வடியாத உணவுப் பொருட்கள் வைப்பதுண்டு.

உண்ணத் தகாத இலைகளில் பாடலம், ஏரண்ட பத்திரம் இரண்டும் எனக்கு எதுவெனத் தெரியாது. எருக்கு விடம். தாழை மடல் முட்கள் கொண்டது. அத்தி, ஆல் பால்மரங்கள். வனசம் எனில் தாமரை. தாமரை இலையைத் திருப்பிப் போட்டு உண்பதுண்டு. எச்சில் இலையில் உண்ணக் கூடாது என்பதை சுகாதார நோக்கில் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் காலம் காலமாக, கணவன் உண்ட இலையில் உண்ட தமிழ் நாட்டுத் தாய்மார்கள் ஏற்றுக் கொண்டதே இல்லை. நான் கவனித்தவரை, இந்தத் தலைமுறையோடு அந்த வழக்கம் காணாமற் போய் விடும்.

அம்பல வாணக் கவிராயர் மிகவும் பிற்காலத்தவர் என்று அவர் பாடல்களே சான்று பகரும். எனினும் அவரது ஊர், காலம் பற்றி எந்தத் தகவலையும் உரையாசிரியர் டாக்டர் கதிர்முருகு நமக்குத் தரவில்லை. அது உரையாசிரியர் ஆய்வு வளம்.

கொங்கு மண்டல சதகம்

கொங்கு மண்டலத்தின் வரலாற்றை, சிறப்பை உரைப்பது இந்நூல். இயற்றியவர் கார்மேகக் கவிஞர். கார்மேகம் என்பது இன்றும் கொங்கு மண்டல ஆண்பாற் பெயர். அந்தப் பெயர் கொண்ட கொங்குப் பகுதி இளைஞர், புலவர் இரணியன் மருமகன், கோவையில் முதன்மைக் கல்வி அதிகாரியாக இருந்தார், சில ஆண்டுகள் முன்பு. முப்பது மாவட்டங்களிலும் அவரைப் போன்ற சேவை உள்ளம் கொண்டவர் கல்வி அதிகாரியாக இருந்தால் பள்ளிகளின் தரம் பெரிய அளவில் உயர்ந்து விடும். ஆனால் நஞ்சுதானே நாநாழி கிடைக்கிறது.

நிற்க. கார்மேகக் கவிஞர் காலம் பற்றியும் எனக்கு அறியக் கிடைக்கவில்லை. இந்நூலுக்கு தி.அ.முத்துசாமிக் கோனார் எழுதிய பழைய உரை ஒன்று இருக்கிறதாம். இதற்குப் புதிய உரை, முனைவர் ந.ஆனந்தி எழுதியுள்ளார்.

1923-ல் கொங்கு மண்டல சதகம் வெளிவந்துள்ளது. காப்பு, அவையடக்கம், ஆக்கியோன் நீங்கலாக நூறு பாடல்கள் கொண்ட சதகம் இது. கொங்கு மண்டலச் சிறப்பு, நலம், நதி, குடிவளம் எனப் பெருமைகள் பேசப்படுகின்றன.

திருமணி, தொப்பை, பூங்காவேரி, வானியும், செய்ய நதி,
தருமணி காஞ்சி, பொருனை நள்ளாறொடு நள்ளாறொடு சண்முகமும்
குருமணி பாலை நதி, வாழை, காரி, குடவன் நதி,
வருமணி சண்பகம் சிற்றாறு சூழ் கொங்கு மண்டலமே

என்பதொரு பாடல் நதி வளம் பேசுகிறது. இதில் பேசப்படும் நதிகள் – திருமணி முத்தாறு, தொப்பை ஆறு, காவேரி ஆறு, பவானி, செய்யாறு, நொய்யல், ஆன் பொருனை, நள்ளாறு, சண்முக நதி, பாலையாறு, வாழையாறு, பாரத்துவாச நதி, குடவன் ஆறு, சண்பக ஆறு, சிற்றாறு எனப் பதினைந்து நதிகள் பேசப்படுகின்றன.

கொங்கு மண்டலத்தின் திருத்தலங்கள் ஒவ்வொன்று பற்றியும் அழகான பாடல்கள் புனையப்பட்டுள்ளன. வேஞ்சமாக் கூடல், திரு ஆனிலை (கருவூர்), திருப்பாண்டிக் கொடுமுடி, திருச்செங்கோடு, திரு நண்ணாவூர், திருமுருகன் பூண்டி, அவிநாசி, பேரூர், துடியலூர், பழநி, குடக் கோட்டூர் எனும் பதினோரு திருத்தலங்கள் – இவற்றுள் ஒன்பதில் என் காலடி பட்டிருக்கிறது.

கொல்லிப் பாவையும் கொல்லி மாமலையும் அமைந்தது கொங்கு மண்டலம் என்று சிறப்பிக்கப் படுகிறது. கொங்கு மண்டலக் சித்தர்களான கருவூர்ச் சித்தர், கஞ்சமலைச் சித்தர், போகர், புலிப்பாணி, கொங்கணச் சித்தர், எனப்படுபவர்களின் புகழ் பேசப்படுகிறது. முத்தரசர், கோசர், குமணன், அதிகமான், ஓரி, வையவிக் கொப்பெரும் பேகன், எனும் மன்னர்கள் ஆண்ட நாடு கொங்கு மண்டலம் எனும் தகவல்கள் கிடைக்கின்றன.

நாட்டினைத் தம்பி கொளக் காடு சென்று நலிவு உறுநாள்
பாட்டிசைத்து ஓர் புலவன் வேண்ட, என் தலை பற்றி அறுத்து
ஈட்டி என் தம்பி இடத்தில் ஈயில், கோடிப் பொன் எய்துமென்று
வாட்டம் கைத் தருமக் குமணன் கொங்கு மண்டலமே

என குமணன் புகழ் பரவும் ஒரு பாடல். ஆணால் படைப்பிலக்கியவாதிக்கு என்றுமே ஒரு குதர்க்க புத்தி உண்டு. குமணன் தம்பியும் கொங்கு மண்டலம் தானே!

வள்ளல் குமணன் பற்றித் தனிப்பாடல் திரட்டில் இரண்டு நல்ல பாடல்கள் உண்டு. ஒப்பிலாமணிப் புலவர் பாடியது. அகவற்பா.

ஆடெரி படர்ந்த கோடுயர் அடுப்பில்
ஆம்பி பூப்பத் தீம்பசி உழல
இல்லி தூர்ந்த பொல்லா வறுமுலை
சுவைதொறும் சுவை தொறும் பால் காணாமல்
குழவி தாய் முகம் நோக்க யாமும்
நின் முகம் நோக்கி வந்தனம் குமணா

பாடலின் விசேடம், வறுமைப்பட்ட புலவன் மன்னனைப் பெயர் சொல்லி அழைக்க முடிந்திருப்பது. ஆனால் இன்று நம்முடைய மன்னர்களைப் பெயர் சொன்னால் அது இந்தியன் பீனல் கோடு 301க்கு சமம். சரி, இனி, பாடலின் பொருள்.

குமண வள்ளலே, எனது வீட்டின் கோட்டை அடுப்பில் முன்பு தீச்சுவாலைகள் அசைந்து படர்ந்து எரியும். இன்று அந்த அடுப்பில் காளான் பூத்திருக்கிறது. கொடிய பசியினால் வாடிய என் மனைவியின் வறு முலையில் பால் சுரக்கும் துவாரங்கள் தூர்ந்து போய் விட்டன. அதையறியாமல் என் குழந்தை, மனைவியின் முலைகளை சுவைத்துப் பார்த்து, சுவைத்துப் பார்த்து, பால் சுரக்கக் காணாமல் தாயின் முகம் ஏறிட்டுப் பார்க்கும். தாய் என் முகம் பார்ப்பாள். நானும் உன் முகம் நோக்கி வந்தேன்.
குமணன் கூற்றாக, ஒப்பிலாமணிப் புலவர் பாடிய அடுத்த பாடல் :

அந்த நாள் வந்திலை அருந்தமிழ்ப் புலவோய்
இந்த நாள் வந்து நீ நொந்து எனை அடைந்தாய்
தலைதனைக் கொடு போய்த் தம்பி கைக் கொடுத்து அதன்
விலைதனைப் பெற்று உன் வெறுமை நோய் களையே

பொருளாவது, அந்த நாள் – நான் சீரும் சிறப்புமாக அரசு வீற்றிருந்தபோது வந்தாய் இல்லை அருந்தமிழ்ப் புலவன். இந்த நாள்- தம்பியால் வஞ்சிக்கப்பட்டு, நாடிழந்து, தலைக்கு விலை வைக்கப்பட்டு, காட்டில் ஒளிந்து வாழும்போது நீ நொந்து வந்து எனை அடைந்தாய். ஒன்றும் கெட்டுப் போகவில்லை இப்பொழுதும். என் தலைதனை வெட்டி எடுத்துக் கொண்டு போய் என் தம்பி கையில் கொடுத்து, அதற்கான விலையைப் பெற்று, உன் வறுமை நோயைத் தீர்த்துக் கொள்வாயாக. அத்தகைய குமணன் பிறந்தது கொங்கு மண்டலமே என்கிறது சதகம்.

ஔவையார் ‘அசதிக் கோவை’ பாடிப் பெருமைப்படுத்திய அசதி எனும் வள்ளலும், நன்னூல் எனும் இலக்கண நூலை எழுதுமாறு பவணந்தி முனிவரைப் பணிந்த அரசன் சீயகங்கனும் வாழ்ந்தது கொங்கு மண்டலமே எனப் பாடல்கள் சிறப்பிக்கின்றன.

குருவை உணர்ந்த இளங்கோவடிகள் உட்கொண்டு சொன்ன
தருவாய் நிகரும் சிலப்பதிகாரத் தனித் தமிழுக்கு
அருமை உரை செய் அடியார்க்கு நல்லார் அவதரித்து
அருமைப் பொழி நிரம்பைப் பதியும் கொங்கு மண்டலமே

என்னும் ஒரு பாடல்.

சிலப்பதிகாரத்துக்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார் தோன்றி வளர்ந்த நிரம்பை என்னும் ஊர் அமைந்துளதும் கொங்கு மண்டலமே என்பது பொருள்.

சோழ மண்டல சதகம்

(வேளூர்) வேலூர் ஆத்மநாத தேசிகர் என்ற புலவரால் எழுதப்பட்ட சோழ மண்டல சதகம் கி.பி. 1723-ம் ஆண்டு பாடப்பட்டுள்ளது. 108 செய்யுள்கள் அடங்கியது.

மாமன்னன் இராசராசன் காலம் முதல் (கி.பி. 986 – 1014) ஒரு நாட்டை மண்டலம் என்று கூறும் முறை பெரிதும் வழக்கத்தில் வந்தது என்கிறார் புலவர் செ. இராசு, சோழமண்டல சதகம் பதிப்புரையில். காவிரி, சுவாமிமலை முருகன், சிதம்பரம் நடராசன், திருவாரூர் தியாகராசன், திருவரங்கம் அரங்கநாதன் எனும் இவரை ஆதியில் பரவுகிறது இந்நூல்.

தேவாரத் தலங்கள் பற்றிய தகவலை ஒரு பாடல் விளம்பும். தொண்டை மண்டல சிவத்தலங்கள் – 30, பாண்டி மண்டலத்தில் – 14, ஈழ நாட்டில் = 2, கொங்கு மண்டலத்தில் – 7, துளு நாட்டில் ஒன்று. ஆனால் தேவாரப் பாடல் பெற்ற சோழ நாட்டுத் தலங்கள் 190. அதுபோல் ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த 108 திவ்ய தேசங்களில், 40 சோழ நாட்டில் உள்ளன.

குணக்கின் மலை போல் பதினாறு
கோடிச் செம்பொன் கொடுத்த விலை
இணக்கும் ஒரு பட்டினப் பாலை
எவரும் புகழ்தற்கு எளிதாமோ

என்கிறது ஒரு பாடல்.

பட்டினப் பாலை யாத்த கடியனூர் உருத்திரங்கண்ணனார் புகழ்ந்த காவிரிப்பூம் பட்டினம் வளம் சோழ மண்டலமே என்பது.

சோழியர்கள் எந்தக் களங்கமும் இலாதவர் என்று கூறும் ஒரு பாடல்.

செறிவான் மதிக்கும் மறு உண்டு
செய்யாள் இடத்தும் மறு உண்டு
பெறுமால் இடத்தும் மறு உண்டு
பெம்மான் இடத்தும் மறு உண்டு
குறியால் உயர்ந்த சொழியர் தம்
குலத்தில் கூற ஒருக்காலும்
மறுவே இல்லை எனும் நாடு
வளம் சேர் சோழ மண்டலமே

பொருள் – வான்மதி சந்திரனுக்கும் களங்கம் உண்டு. செய்யாள் ஆகிய திருமகளுக்கும் மறு உண்டு. பெறுமால் திருமாலுக்கும் மறு உண்டு. பெம்மான் சிவபெருமானுக்கும் கண்டத்தில் கறை உண்டு. ஆனால் சோழியருக்கு ஒருக்காலும் மறுவே இல்லை எனும் நாடு, வளம் சேர சோழ மண்டலமே!

இவ்வாறு பலப்பல பேசிச் சோழ நாட்டின் சிறப்பைப் போற்றுகிறது இந்நூல்.

எனக்குத் தெரியும், கொங்குமண்டலம், சோழ மண்டலம் தாண்டியும் இத்தொடருக்கு வாசகர் உண்டு என. என் செய? சேரமண்டல சதகம், பாண்டிய மண்டல சதகம், தொண்டை மண்டல சதகம், கார் மண்டல சதகம் எனக்குக் கிடைக்கவில்லை.

நாஞ்சில் மண்டல சதகம், ஒருவேளை நானே எழுதினால்தான் உண்டு போலும்!

(தொடரும்)

2 Replies to “சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் – சதகம் – பகுதி 15”

Comments are closed.