ஒரு முடிவை மாற்ற எத்தனை பேர் தேவை?

“ஒரு குளத்தில் ஒரு அல்லிக் கொடி இருக்கிறது. அதன் பரப்பளவு தினமும் இரட்டிக்கிறது. 48 நாட்களில் அது முழுக் குளத்தையும் நிறைக்கிறது என்றால், அந்த குளத்தின் பரப்பளவின் பாதிக்கு வளர அதற்கு எத்தனை நாட்கள் தேவைப்பட்டிருக்கும்?”

மனச்சாய்வுகள் அறிவின் குறுக்கு வழிகள் – நம் மூளை சோம்பலாலோ பழக்கத்தாலோ அளவுக்கு அதிகமான தன்னம்பிக்கையாலோ இந்தக் குறுக்கு வழிகளைப் பயன்படுத்துகிறது. எல்லா குறுக்கு வழிகளைப் போலவும் இதிலும் பாதை தவற வாய்ப்பிருக்கிறது.

குறுக்கு வழியில் செல்பவர்களைப் பொறி வைத்துப் பிடிக்கும் மேற்கண்ட புதிரைப் போன்ற கேள்விகளை நோபல் பரிசு பெற்ற உளவியலாளர் டானியல் காஹ்ன்மேன்(Daniel Kahneman) ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகக் கேட்டுக் கொண்டிருந்தார். ஆனாலும் அவர் அத்தனை ஆண்டுகள் மனச்சாய்வுகளைப் பற்றியும் அவற்றால் ஏற்படும் பிழைகளைப் பற்றியும் ஆய்வு செய்தபின்னும் அதிலிருந்து தன் புத்தி பாடம் எதுவும் கற்றுக்கொள்ளவில்லை என்பதைதான் ஒப்புக்கொண்டார். முன்னிருந்தது போலவே இப்போதும் அதீத தன்னம்பிக்கை, மிகைப்பட்ட கணிப்புகள், விரைவில் முடித்துவிடலாம் என்று தவறான திட்டமிடல் போன்ற பிழைகளைத் தொடர்ந்து செய்வதைத் தன்னால் தவிர்க்க முடியவில்லை என்றுதான் சொன்னார் அவர். நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிக்கே இந்த கதி!- அதிலும் அவரது ஆய்வு மனச்சாய்வுகளைப் பற்றியதாக இருந்திருக்கிறது!

அறிவியல் புறவயப்பட்ட, தற்சார்பற்ற துறை என்பது பொது நம்பிக்கையாக இருக்கிறது. அப்படி ஒரு நம்பிக்கை இருப்பதால்தான் நம்மால் அறிவியலின் முடிவுகள் உண்மைக்கு விளக்கம் தருகின்றன என்று நம்ப முடிகிறது. ஆனால், இயந்திரங்களைப் போல் அறிவியல் உணர்வற்றதல்ல, அது மனிதர்களின் கூட்டு முயற்சியாக இருப்பதால் கூட்டு முயற்சிகளுக்குரிய அனைத்து சாதக பாதகங்களும் அதற்கும் உண்டு. அறிவியலின் நம்பகத்தன்மைக்கு தற்சார்ப்பே ஆகப் பெரிய ஆபத்தாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக தற்சார்பின் காரணமாக ‘அறியாமல்’ நிகழும் ‘உள்நோக்கமற்ற’ பிழைகளும் திரிபுகளும் எப்போதும் ஒரு அச்சுறுத்தலாகவே இருக்கின்றன. இப்படிப்பட்ட பிழைகளைத் தவிர்க்கவே, பீர் ரிவ்யூ என்றழைக்கப்படும் சக அறிவியலாளர்களின் பார்வைக்கு ஒவ்வொரு அறிவியல் ஆய்வின் முடிவும் வைக்கப்பட்டு அதன் பின்னரே ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

பொதுவாகவே நம் அனைவருக்கும் மனச்சாய்வுகள் உண்டு என்பதையும் ஒரே பண்பாட்டைச் சேர்ந்த அறிவியலர்கள் தம் பண்பாட்டையொட்டிய மனச்சாய்வுகளைத் தாண்டி வருவது அவ்வளவு எளிதல்ல என்பதையும் மனச்சாய்வுகளின் இயல்பை அறிந்தவர்களும்கூட அதற்கு பலியாகின்றனர் என்பதையும் இணையத்தில் அண்மையில் வாசிக்கக் கிடைத்த சில கட்டுரைகள் சுட்டுகின்றன. மொத்தத்தில், பல பண்பாடுகள் கொண்டதாக மானுட இனம் இருப்பதே அறிவியலையும் சிறப்பிக்கிறது.

மனசாய்வுகளுக்கு யாரும் விலக்கல்ல

ஜோனா லெஹ்ரர் ந்யூ யார்க்கரில் மனச்சாய்வுக்கு யாரும் விலக்கல்ல என்று எழுதுகிறார். அதிலும் குறிப்பாக அறிவாளிகளின் மனச்சாய்வு சராசரிகளைவிட அதிகமாக இருக்கிறது என்று ஒரு ஆய்வு சுட்டுகிறது என்பதையும் காட்டுகிறார்.

நம் சிந்தனையின் குறைகளை நாம் அறிந்திருந்தாலும் அதனால் பிழை செய்யாமல் இருக்க முடிவதில்லை. நமக்கு நம் சிந்தனையில் இருக்கும் நம்பிக்கை மற்றவர்களிடத்தில் இல்லை, நாம் புத்திசாலிகள் என்ற இந்த மிகை நம்பிக்கை மற்றவர்கள் எடுக்கும் தவறான முடிவுகளை எளிதில் அடையாளம் கண்டு கொள்ள உதவுகிறது – ஆனால் நம் தவறுகளையே பார்த்துக்கொள்ள முடியாத வகையில் அந்த நம்பிக்கை நம் சிந்தனையையும் குருடாக்கி விடுகிறது. சாமானியனின் நிலைமையே இப்படி என்றால் வெற்றி பெற்றவர்கள் என்றும், அறிவாளிகள் என்றும் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்களைப் பற்றி சொல்லவும் வேண்டுமா? மற்றவர்களைவிட இவர்கள் அதிக அளவில் மனச்சாய்வு கொண்டவர்களாக இருக்கின்றனர் என்று எழுதுகிறார் லெஹ்ரர்.

சமூகத்தில் பெரிய அளவில் தாக்கத்தை உண்டாக்கக்கூடிய துறைகளையும் பெரும்பதவிகளையும் ஆக்கிரமித்துள்ள அறிவாளிகளுக்கு நமக்கு இருக்கும் நடுநிலைமைகூட இல்லை என்பது அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. ஆனாலும் ஆய்வின் முடிவுகள் அப்படி சொல்லும்போது நம்மால் அதைக் கேள்வி கேட்க முடியாது – அந்த அவசியமும் நமக்கு இல்லை!

டாக்டர் இமானிஷியின் வினோத வழக்கு

அருண் நரசிம்மனின் வலைதளத்தில் இந்த விஷயத்துக்கான தொடர்பு கிடைத்தது. பண்பாட்டு மனச்சாய்வுகளைப பற்றிய இந்தக் கட்டுரையை எழுதிய ஃப்ரான்ஸ் டி வால் 1975லிருந்து குரங்குகளின் சமூக வாழ்க்கையை ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார். குரங்குகள் ஒன்றையொன்று ஏமாற்றுகின்றன, தங்கள் பிரச்சினைகளைப் பேசித் தீர்த்துக் கொள்கின்றன என்றெல்லாம் சொன்ன இவரது ஆரம்ப கால ஆய்வுகளை முதலில் யாரும் ஏற்றுக் கொள்வதாயில்லை – ஆனால் இப்போது அவரை மறுத்துப் பேச ஆளில்லை.

மற்ற விலங்குகளை நாம் எப்படி பார்க்கிறோம் என்பது நம்மை நாம் எப்படி பார்க்கிறோம் என்பதைப் பொறுத்தது. நம்மால் நம் பண்பாட்டுப் பின்னணியைத் தாண்டி விலங்குகளைப் பற்றி ஆய்வு செய்வதோ அவற்றைப் புரிந்து கொள்வதோ முடியாது என்று சொல்கிறார் அவர். இதற்குச் சான்றாக போட்டியும் கொலைவெறியுமே இயற்கை நியதி என்று நம்பும் டார்வினிய பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டையும் இமானிஷி என்ற ஜப்பானிய குரங்கியல் துறை ஆய்வாளர் முன்வைத்த, ‘இயற்கை கூட்டுறவையே வெளிப்படுத்துகிறது,’ என்ற கோட்பாட்டையும் ஒப்பு நோக்குகிறார் டி வால்.

இமானிஷி இயற்கையில் கூட்டுறவு இயல்பாக இருப்பதாகக் கூறுவதை மேலை நாட்டு ஆய்வாளர்கள் எவராலும் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. இவர்களில் ஹால்ஸ்டெட் என்ற பிரிட்டிஷ் விஞ்ஞானி ஜப்பானுக்கே சென்று இமானிஷியைச சந்தித்து அவரது முடிவுகளை இமானிஷியுடன் நேருக்கு நேர் விவாதித்து நிராகரித்திருக்கிறார். இந்தச் சந்திப்பைப் பற்றி நேச்சரில், “கிஞ்சி இமானிஷியின் எழுத்து ஜப்பானில் பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பது ஜப்பானியர்கள் குறித்த சுவையான புரிதலைத் தருகிறது” என்றும் எழுதினார் அவர்.

இயற்கையை கூட்டுணர்வு நிறைந்த ஒன்றாகக் கண்ட ஜப்பானியர்களின் கண்களுக்கு அவர்களது பண்பாடு அப்படிப்பட்ட சாயம் பூசுகிறது என்றால் இயற்கையைப் போட்டி நிறைந்த ஒன்றாகக் கண்ட ஐரோப்பிய-அமெரிக்கர்களுக்கும் அந்த நியாயம் பொருந்தாதா என்று கேட்கிறார் டி வால். வல்லவன் வாழ்வான் என்ற டார்வினியக் கோட்பாட்டை ஏற்றுக் கொண்ட மேலை நாடுகள்தானே சுதந்திரச் சந்தை முதலியப் பொருளாதார அமைப்பையும் உலகளவில் வலியுறுத்துகின்றன? இது ஒன்றும் உடன்நிகழ்வல்லவே? சமூக விழைவுகளுக்கு ஜப்பான் முக்கியத்துவம் தந்தால், தனி மனித உரிமைகளுக்கு மேலை நாடுகள் முக்கியத்துவம் தருகின்றன. இந்தப் பண்பாட்டு வேற்றுமையால்தான் இவர்கள் இயற்கையை இப்படி மாறுபட்ட கோணங்களில் பார்க்கின்றனர்.

இமானிஷி(இடப்பக்கம் நிற்பவர்)

குரங்குகளை ஆய்வு செய்த மேலை நாட்டு விஞ்ஞானிகள் அவற்றைக் கூட்டங்களாகவே கண்டனர், குரங்குகளுக்கு சுயம் சார்ந்த தனி அடையாளத்தைத் தர அவர்களுடைய மனம் ஒப்பவில்லை. ஆனால் ஜப்பானியரான இமானிஷி குரங்குகளையும் மனிதர்களைப் போலவே பார்த்தார். பிளாட்டோ மனிதனை உயிர்களின் உச்சியில் வைத்தார், அதையொட்டிய மேலைச் சிந்தனை மனிதனின் தனித்தன்மைகள் அனைத்தையும் ஏனைய விலங்குகளுக்கு மறுத்தது. இமானிஷிக்கு அந்தச் சிக்கல் எதுவும் இல்லை. அவர் குரங்குகளைத் தனித்தன்மை கொண்ட்வையாகப் பார்த்து, அவற்றுக்கிடையே இருந்த உறவுமுறைகளைத் தலைமுறை தலைமுறையாக கவனித்தார். ஆரம்ப காலத்தில் இந்த அணுகுமுறையை கேலி செய்த மேலை நாட்டினர் இன்று இதை முழுக்க முழுக்கப் பின்பற்றுகின்றனர் என்று சொல்கிறார் டி வால் – இது ஜப்பானிய அணுகுமுறை என்பதையும் மறந்து விட்டனராம் அவர்கள். அவ்வளவு மௌனமாக இந்த ஊடுருவல் நிகழ்ந்திருக்கிறது. விலங்குகளை மனிதர்களாகப் பார்க்கக்கூடாது என்று சொன்னவர்கள் இன்று டால்பின் முதற்கொண்டு அனைத்து விலங்குகளையும் தனித்தன்மை கொண்டவையாகவே கருதி அவற்றைத் தொடர்ந்து கவனிக்கின்றனர். இப்படிச் செய்யாமல் விலங்குகளின் சமூக வாழ்க்கையைப் புரிந்து கொள்ள முடியாது என்பதுதான் உண்மை.

1958ல் இந்த உண்மையைப் பேசிக்கொண்டு அமெரிக்கா வந்த இமானிஷியும் அவரது மாணவர்களும் ஏளனத்தையே எதிர்கொண்டனர். அத்தனை குரங்குகளையும் இவர்களால் தனித்தனியாகப் பிரித்து அடையாளம் கண்டு பிடிக்க முடிகிறதா என்ன, என்பதே கூட அறிவுத்துறைகளில் முன்னணியில் இருந்த அமெரிக்கர்களுக்கு வேடிக்கையான விஷயமாக இருந்திருக்கிறது. ஜப்பானிய ஆய்வுகளைப் படிக்கவோ பின்பற்றவோ கூடாது என்பது மேலை நாட்டுப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு வலியுறுத்தப்பட்டது – அவ்வளவும் தப்பாம்!

மேலை நாட்டு அறிவியல் விலங்குகளின் இயல்பு பிறப்பால், அவற்றின் மரபணுப் பரிமாற்றத்தால் வருகிறது என்பதை வலியுறுத்தியது. அவற்றின் பழக்க வழக்கங்கள் அறிவற்றவை, அதில் கற்றல் என்ற பேச்சுக்கே இடமில்லை, எல்லாமே அனிச்சைச் செயல்கள் என்பதாக இருந்தது. அவர்களின் விலங்கு ஆய்வுகள் எலிகளுக்கு ஷாக் கொடுத்தன. ஆனால் ஜப்பானியர்களுக்கு விலங்குகளுக்கு ஆன்மா இல்லை, அறிவில்லை என்ற நம்பிக்கைகள் தடைகளாக இருக்கவில்லை. கோஷிமா என்ற தீவில் உள்ள குரங்குகளுக்கு உருளைக்கிழங்கைக் கழுவி உண்ணும் பழக்கத்தைப் புகட்டி, அது எவ்வாறு குரங்குகளிடையே பரவுகிறது என்பதை ஆவணப்படுத்தினர். இது சந்தேகத்துக்கு இடமின்றி விலங்குகளுக்கு சமூக வாழ்க்கை இருக்கிறது என்பதையும் அவை ஒன்றைக் கண்டு ஒன்று கற்கின்றன என்பதையும் நிரூபித்தது.

இன்று இந்த முறைகளைக் கொண்டு பண்பாடு சார்ந்த கற்றல் பறவைகளின் பாடல்களிலும் திமிங்கலங்களின் வேட்டைப் பழக்கங்களிலும் சிம்பன்சிகளின் கருவிப் பயன்பாட்டிலும் இருக்கிறது என்பதை நாம் அறிந்திருக்கிறோம். இமானிஷியின் ஆய்வு முறைகளைப் பயன்படுத்தாமல் இது சாத்தியமாகி இருக்காது.

எப்போதோ ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்க வேண்டிய இமானிஷியின் ஆய்வு முறை ஏன் இவ்வளவு காலதாமதமாக, இத்தனை எதிர்ப்பையும் ஏளனத்தையும் எதிர்கொண்டு, இன்று அதன் ஜப்பானிய அடையாளமும் அழிக்கப்பட்ட நிலையில் அறிவியலாக அங்கீகாரம் பெற்றது? முன் சொன்ன பண்பாடு ஒரு காரணம். குரங்குகள் விஷயத்தில் ஜப்பானிய பண்பாடு சரியான முடிவுகளை அடைய உதவியாக இருந்திருக்கிறது. எப்படி மேலை நாட்டு ஆய்வாளர்களால் தங்கள் பண்பாட்டுக்கு வெளியே சிந்தித்திருக்க முடியாதோ அதே போல் ஜப்பானிய விஞ்ஞானிகளாலும் தங்கள் பண்பாட்டைத் தாண்டிச் சிந்தித்திருக்க முடியாது.

இதைக் காரணம் காட்டி டி வால் பண்பாட்டு மனச்சாய்வைத் தவிர்க்க முடியாது என்ற நிலையில் என்ன செய்யலாம் என்று சொல்கிறார்:

“மேலை நாட்டு அறிவியல் மேலாதிக்கத்தைக கண்டு நாம் ஏமாந்துவிடக் கூடாது. உலகின் அனைத்து நாடுகளையும் ஏவலாட்களாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று எந்த ஒரு நாடும் நினைப்பதைப் போன்ற பேதைமை அது. இயற்கையைப் புரிந்து கொள்ளும் ஆய்வுகளை ஒரே மாதிரி சிந்திக்கும் பூசாரிகளின் தனிப்பொருப்பில் விட்டுவிடக் கூடாது. ஒவ்வொரு பண்பாடும் தன்னைச் சூழும் இயற்கையின் மையத்தில்தான் இருக்கிறது. அது இயற்கையைத் தன் வழியில் காண்கிறது, இயற்கையிலிருந்து தன்னைப் பிரித்துக் கொண்டுப் பின்வாங்கி அதை உள்ளபடியே அறியும் ஆற்றல் எந்தப் பண்பாட்டுக்கும் கிடையாது. உண்மையை முழுமையாக அறிய பல்வகைப்பட்ட விஞ்ஞானிகளும் தேவைப்படுகின்றனர். கண்ணாடியில் திரித்துத் தெரியும் பல்வேறு பிம்பங்களை ஒப்பிட்டு அதன் உண்மை உருவை அறிவது போன்ற விஷயம் இது. மிகப் பெரிய அளவில் திரிக்கப்பட்ட நம் செய்திகளில் எங்கேயோ உண்மை இருக்கிறது”

முதலில் சொன்ன மாதிரி, பல பண்பாடுகள் கொண்டதாக மானுட இனம் இருப்பதே அறிவியலையும் சிறப்பிக்கிறது.

யார் குற்றவாளி?

உங்களுக்கு அறிவியலில் ஆர்வமிருந்தால் ஸ்டீபன் ஜே கௌல்ட் நன்றாக அறிமுகமான ஒருவராக இருப்பார். மனிதனின் பிறப்பே அவனது இயல்பையும் அவனது சமூகத்தின் இருப்பையும் தீர்மானிக்கிறது என்ற கோட்பாட்டுக்கு எதிராகக் கொடி பிடித்தவர் அவர். சமுதாயத்தில் உள்ள வெவ்வேறு சமூக குழுக்களுக்கு இடையே நிலவும் ஏற்றத்தாழ்வுகளை இந்தக் கோட்பாடு நியாயப்படுத்துகிறது என்று அவர் நம்பினார் இதைப் பற்றி ஒரு புத்தகமே எழுதியிருக்கிறார் கௌல்ட்.

அதில் அவர் பதினெட்டாம் மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தங்கள் பண்பாடுகளே உயர்ந்தது என்ற மனச்சாய்வின் காரணமாக ஆய்வுகளில் எப்படிப்பட்ட தவறுகளைச செய்தார்கள், அதனால் எத்தகைய பிழை முடிவுகள் ஏற்பட்டன, அவற்றைக் கொண்டு தங்கள் நம்பிக்கைகளையும் தங்கள் பண்பாட்டில் நிலவும் நம்பிக்கைகளையும் எப்படி நியாயப்படுத்தி வலுவாக்கிக் கொண்டார்கள் என்று எழுதியிருக்கிறார். அறிவியலில் மனச்சாய்வுகளுக்கு எதிரான ஒரு நிலைப்பாட்டை அவர் எடுப்பதற்கு அவரது ஆய்வு, மற்றும் அது தொடர்பான புரிதல்கள் காரணமாக இருந்திருக்கலாம். அப்படிதான் இதுவரை நம்பினார்கள். ஆனால் அண்மையில் வந்த ஒரு ஆய்வு அவரே பண்பாட்டு மனச்சாய்வுகளுக்கு அப்பாற்பட்டவரா என்ன என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது.

சாமுவேல் ஜார்ஜ் மார்டன் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த மருத்துவர். அவர் உலகெங்கிலும் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மண்டையோடுகளைத் தருவித்து அவற்றின் கனபரிமாணங்களை மதிப்பிட்டார். தன் ஆய்வுகளின் முடிவுகள் வெள்ளைகாரர்களின் மண்டையோடுகள் மற்ற மண்டையோடுகளைக் காட்டிலும் பெரியதாகவும் கொள்ளளவு கூடுதலாகவும் உள்ளதால் வெள்ளையர்களுக்கே மூளை அதிகம் என்று நிரூபிப்பதாக அவர் சொன்னார். அமெரிக்காவில் அடிமை முறையை ஆதரித்தவர்களுக்கு இந்த ஆய்வு வரப்பிரசாதமாக இருந்தது. நீக்ரோவை எந்த இடத்தில் வைக்க வேண்டும் என்பதை ஆதாரபூர்வமாக அறிவியலின் அடிப்படையில் வரையரை செய்ததாக அவர்கள் மார்டனைப் பாராட்டினர்.

கௌல்ட் இருபதாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். இப்படிப்பட்ட நிற, இன, பெருமை பேசும் கோட்பாடுகள் எப்படிப்பட்ட அழிவுகளுக்குக் காரணமாகி இருக்கின்றன என்பதை உணர்ந்தவர். ஜார்ஜ் மார்டனின் மண்டையோடுகளை எடுத்து தானும் அவற்றை ஆய்வுக்கு உட்படுத்தி, மார்டன் அவை அனைத்தையும் அளந்து பார்க்கவில்லை, வயது, பாலினம், உயரம் போன்ற எதையும் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் தனக்குத் தேவைப்பட்ட வகையில் மண்டையோடுகளைத் தேர்ந்தெடுத்து தவறான முறையில் ஆய்வு செய்து அதன் அடிபப்டையில்தான் இந்த முடிவுக்கு வந்தார், எனவே அறிவியலில் மனச்சாய்வு ஆபத்தானது என்பதற்கு ஆதாரமாக இந்த முடிவையும் இதுபோன்ற பிற பிழைப்பட்ட ஆய்வுகளின் முடிவுகளையும் சுட்டிக்காட்டினார் கௌல்ட். 1970களில் அவர் சொன்னதை இன்று வரை எவரும் கேள்வி கேட்டிருக்கவில்லை. அதற்கான அவசியமும் இல்லை – வெள்ளையராக இருந்தால் என்ன கருப்பராக இருந்தால் என்ன, நிற அடிப்படையில் மனிதனின் மண்டையோட்டின் கொள்ளளவு வேறுபட முடியாது என்பது ஏற்கப்பட்ட அறிவியலாக இருக்கும் நிலையில் எதற்காக, எந்த சந்தேகத்தில் கௌல்டைக் கேள்வி கேட்க வேண்டும்?

ஆனால் அண்மையில் கௌல்டையும் ஆய்வுக்குட்படுத்திய மேற்கண்ட விஞ்ஞானிகள், மார்டன் என்னென்ன தவறுகள் செய்தார் என்று கௌல்ட் குற்றம் சாட்டினாரோ, அந்தத் தவறுகள் அத்தனையையும் கௌல்டும் செய்திருக்கிறார் என்று சொல்கிறார்கள்! அவர்களது ஆய்வுகள் அங்கிருந்த மண்டையோடுகளில் வெள்ளையர்களின் மண்டையோடுகள் மற்றவற்றைவிடப் பெரியதாக இருகின்றன என்ற முடிவைத்தான் தருகின்றனவாம், மனச்சாய்வால் தவறான ஆய்வைச் செய்தது மார்டன் அல்ல, கௌல்ட்தான் என்கின்றனர் இவர்கள்.

அறிவியலில் நனவிலித்தன்மை கொண்ட மனச்சாய்வுகள் பரவலாக இருக்கின்றன என்று சொல்லி, அறிவியலின் மீதான நம்பிக்கையையே குலைத்த கௌல்ட் மார்டனின் மண்டையோடுகள் விஷயத்தில் செய்தது அறியாப் பிழை என்று சொல்லிவிட முடியாது என்று கொந்தளித்து ஒரு பதிவு எழுதியிருக்கிறார் ஜான் ஹாக்ஸ்.. அதில் குறிப்பாக ஒரு விஷயத்தைச் சொல்கிறார். கௌல்ட் எந்த அடிப்படையும் இல்லாமல் மார்டன் செய்ததான ஒரு கற்பனைக் கதையை நடந்தது போல் பொருள்பட வலியுறுத்தினார் என்கிறார் ஹாக்ஸ். மற்ற மண்டையோடுகளில் விதைகளைப போட்டு நாலு குலுக்கு குலுக்கி அவற்றின் கொள்ளளவை முடிவு செய்த மார்டன், வெள்ளையர்களின் மண்டையோடுகளில் விதைகளை நிரப்பி விரல்களால் அழுத்தி உள்ளே திணித்து அவற்றின் கொள்ளளவு அதிகம் என்று நிரூபித்திருக்க வேண்டும் என்று எழுதினாராம் கௌல்ட்! இந்த மாதிரி எழுதியதையெல்லாமும் ஒரு ஆய்வுக் கட்டுரை என்று சயன்ஸ் எப்படி அதை ஏற்றுக் கொண்டு பதிப்பித்தது என்று கோபப்படுகிறார் ஹாக்ஸ்.

நிறவெறிக்கு எதிரான கௌல்டின் நிலைப்பாடு இந்த மாதிரியான திருட்டுத்தனத்தைச் செய்யக் காரணமான மனச்சாய்வாக அமைந்தது என்று சொன்னால், இப்போது ஆய்வு செய்தவர்கள்தான் மனச்சாய்வு கொண்டவர்கள் என்றும் ஒருவர் எழுதுகிறார்! உங்களுக்கு எப்படி முப்பது முப்பத்து ஐந்து ஆண்டுகளுக்கு முந்தைய, எல்லாராலும் சந்தேகத்துக்கே இடமில்லை என்று ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு ஆய்வை சரிபார்க்கத் தோன்றியது என்று கேட்ட டைம்ஸ் நிருபரிடம், இந்தப் புதிய ஆய்வைச் செய்து கௌல்டின் முகத்திரையைக் கிழித்த ஹாலோவே சொன்னது இது: “எனக்கு கௌல்டின் மீது சந்தேகம் இருந்துகொண்டே இருந்தது. அவருக்குத் தீவிரமான கோட்பாட்டுப் பிடிப்பு இருந்தது என்பது எனக்கு ஒரு உறுத்தலாக இருந்தது”.

இது அத்தனையையும் சுட்டிக்காட்டும் கௌல்டின் ஆதரவாளர் கௌல்டுக்கு எதிரான இந்த மனச்சாய்வால்தான் ஹாலோவே இப்படி ஒரு ஆய்வை எடுத்துக் கொண்டு இப்படி ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார், அவரே தன் ஆய்வை ஒழுங்காகச் செய்யவில்லை என்று சொல்கிறார். எது உண்மையோ பொய்யோ தெரியாது, ஆனால் அறிவியலில் மனச்சாய்வின் கோளாறுகள் இருக்கின்றன என்பதை மறுக்க முடியாது.

ஒரு சாதாரண மண்டையோட்டின் கொள்ளளவைத் தீர்மானிப்பதில்கூட இத்தனைச் சிக்கல்கள் இருக்கின்றன என்றால் சமூக அறிவியல் போன்ற துறைகளில் பண்பாட்டுப் புரிதல்கள், அற விழுமியங்கள் போன்றவை மனச்சாய்வாக மாறி தொடர்புடைய தகவல்களை எப்படியெல்லாம் திரிக்கும் என்பதை நினைத்தும் பார்க்க முடியாது.

பின்குறிப்பு

கட்டுரையின் துவக்கத்தில் உள்ள புதிரின் விடை 47 நாட்கள்!