இக்கட்டுரையின் முந்தைய பகுதியை இங்கே படிக்கலாம் : ரோமாக்கள் – அந்நியர்கள் ஆக்கப்பட்ட வரலாறு
சமூகப் பிறழ்நிலை
ஐரோப்பியர்களின் சுய அடையாளம் ரோமாக்களின் தனி அடையாளத்தை மறுப்பதாக இருந்தது. என்பதைச் சென்ற பகுதியில் பார்த்தோம். ஐரோப்பிய நாகரிக வளர்ச்சியில் வெவ்வேறு தேசங்களுக்கும் உருவான தன் அடையாளம் மாற்றாருக்கு எதிரான அடக்குமுறைச் சாதனமாகவே செயல்பட்டது. ஆனால் இந்த நிலையிலும் தங்களைத் தங்களுக்குரிய இடத்தில் இருத்திக் கொள்ளக்கூடிய தனி அடையாளத்தை ரோமாக்கள் உருவாக்கிக் கொள்ளவேயில்லை. எங்கும் அடையாள இழப்பு அதிகார இழப்பாகவே இருந்தது.
ஒரு குறிப்பிட்ட வரலாற்றுக்கும், அந்த வரலாற்றை ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் பிணைத்துக் கொள்ளவும் ரோமாக்கள் உடன்படவில்லை என்பது இந்த அடையாள இழப்புக்கு ஒரு முக்கியமான காரணம். ஐரோப்பாவெங்கும் அவர்கள் சுற்றித் திரிந்தார்கள். தேசம், அதையொட்டிய இன, சமூக அடையாளம் என்ற அமைப்புக்கு ரோமாக்களின் இந்த வாழ்வுமுறை ஒரு அச்சுறுத்தலாக இருந்தது. ஆகவே ரோமாக்களின் தனி அடையாளம் மறுக்கப்பட வேண்டியதாயிற்று..
ரோமாக்கள, முன்நவீன ஐரோப்பிய சமூக அமைப்பின் படிநிலைக்கு வெளியே, தாழ்நிலையில், நாடோடிகள் என்ற அளவில் இருத்தி வைக்கப்பட்டனர். கிடைக்கும் வேலையைச் செய்து பிழைப்பவர்கள், பிச்சைக்காரர்கள், திருடர்கள் என்ற முகமற்ற கூட்டத்தில் ரோமாக்களின் தனி அடையாளம் மறைக்கப்பட்டது. தேசிய இனங்களாகப் பிரிந்த ஐரோப்பிய அரசியல் அமைப்பில் ரோமாக்களின் இன அடையாளம் மொத்தமாகவே அழிக்கப்பட்டது. ஏனைய மக்களைப் போல் பொதுப் பாரம்பரியமும் இயல்பும் கொண்ட இனமாக ஐரோப்பியர்களால் இனியும் ரோமாக்கள் கருதப்படவில்லை. மாறாக ரோமாக்களின் செயல்பாடுகள் சமூகப் பிறழ்வும் குற்றத்தன்மையும் கொண்ட பின்னணியின் வெளிப்[பாடுகளாகப் புரிந்து கொள்ளப்பட்டன.
உதாரணத்துக்கு, ஜெர்மனியில் 1510ல் பதிப்பிக்கப்பட்ட “லிபர் வாகடோரம்” என்ற பிரசுரம், பிழைப்புக்காக இடம் மாறும் ஏழைகளை வெவ்வேறு திருட்டுச் சங்கங்களையும் பிச்சைக்காரர் சங்கங்களையும் சேர்ந்தவர்களாக வகைமைப்படுத்தி விவரிக்கிறது.[1] பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் குற்றவாளிகளின் புகைப்படங்கள் தொகுக்கப்பட்ட சுவரொட்டிகளை இதன் நீட்சியாகப் பார்க்கலாம். குற்றவாளிகளைக் குறித்து பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தொகுக்கப்பட்ட உளவியல் கோப்புகளும் இத்தகையவையே. உடல் மற்றும் அது சார்ந்த உளச் சீரழிவே குற்ற மனநிலைக்குக் காரணம் என்ற 1900ஐ ஒட்டி எழுந்த கிரிமினல் பயாலஜியின் கோட்பாடுகளுக்கும் இந்த மனச்சாய்வு உண்டு.
இத்தகைய அறிவுப்புலத்தில் ரோமாக்களின் வேறுபட்ட புறத் தோற்றமும் பழக்க வழக்கங்களும் வெற்றிகரமாகத் திருத்தி எழுதப்பட்டன : இயல்புத்தன்மை இருட்டடிக்கப்பட்டு, குற்றப்பின்னணி கொண்ட, ஒட்டுண்ணி வாழ்க்கை வாழும் கூட்டங்களுக்குரிய அடையாளங்களாக ரோமாக்களின் தனியடையாளங்கள் மாற்றம் கண்டன. தனி அடையாளமற்ற ரோமாக்கள் குற்றவாளிக் கூட்டத்தில் சேர்க்கப்பட்டுத் தொலைந்து போயினர். குற்றவாளிக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் பிறப்பிலேயே சட்டத்தை மீறுபவர்களாக அடையாளப்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு உரிமைகள் மறுக்கப்படுவதை இந்த பிம்பம் நியாயப்படுத்துவதாக இருந்தது..
ரோமாக்கள் ஒவ்வொருவரும் குற்றவாளிகளாகச் சித்தரிக்கப்பட்டனர். ஆண்கள் மட்டுமல்ல, கிழவிகளும், பெண்கள் மட்டுமல்ல குழந்தைகளும் ஒவ்வொரு இயல்பு கொண்ட குற்றவாளிகளாக அறியப்பட்டனர். திருடுதல், ஏமாற்றுதல் போன்ற குற்றங்களுடன் குழந்தைகளைக் கடத்துதல் போன்ற குற்றச்சாட்டுகள் அன்று முதல் இன்று வரை ரோமாக்களைத் தொடர்கின்றன – மொத்தத்தில், பெரும்பான்மை மக்கள்திரளின் பாரம்பரியத்தைக் குறுக்கிட்டுக் குலைத்துச் சீரழிப்பவர்களாக ரோமாக்கள் அஞ்சப்பட்டனர்.
அறிவியலின் விளக்கவுரை
ரோமாக்கள் எங்கிருந்து வந்தனர், அவர்களுடைய மொழியின் வேர்கள் எவை என்பன குறித்த ஐரோப்பாவின் முன்நவீன காலகட்ட ஊகங்களுக்கு பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் விளக்கம் கிடைத்தது. அறிவியல் அடிப்படையிலான மானுடவியல் ஆய்வுகளும் மொழித்துறையின் வரலாற்று ஆய்வுகளும் ரோமாக்களின் மொழி தனித்துவம் கொண்டதாக இருப்பதையும், அதன் வேர்கள் சமஸ்கிருதத்தில் இருப்பதையும் தெளிவாக நிரூபித்தன. ரோமாக்களின் இந்திய வேர்கள் குறித்த கண்டுபிடிப்பு ஐரோப்பியர்கள் மத்தியில் ஒரு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மொழியியல் ஆய்வுகள் ரோமாக்கள் ஐரோப்பாவுக்குப் புலம் பெயர்ந்த பாதையை சந்தேகத்துக்கிடமின்றி வரையறுக்க உதவின. ஜெர்மனியில் இது குறித்து வெளியிடப்பட்ட ஆய்வு ஆவணங்கள் ஏனைய ஐரோப்பிய நாடுகளில் ஆர்வத்துடன் வாசிக்கப்பட்டன, மொழிபெயர்க்கப்பட்டும் மாற்று வடிவில் எழுதப்பட்டும் இத்தகவல்கள் பரவலாக அறியப்பட்டன.
அறிவொளி காலகட்டத்தைச் சேர்ந்த மானுடவியல் ஆய்வாளர்கள், “இந்தோ-ஜெர்மானிய” இனத்தையும் மொழியையும் சேர்ந்த இந்திய வம்சாவளியினர் என்ற அளவில் ரோமாக்களுக்கு ஒரு அடையாளம் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து ஜிப்ஸிக்கள் ஒழுக்கமற்ற கூட்டமாகக் கருதப்படாமல் அதைவிட உயர்ந்த சமூகப் படிநிலையில் இருத்தப்பட வேண்டும் என்பது அவர்களது முடிவாக இருந்தது. நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்டிருந்த தனி மொழி ஒன்றுக்கு உரியவர்களாக இருந்ததே ரோமாக்களின் மிக முக்கியமான கலாசாரச் சொத்தாக இருந்தது- ரோமாக்களின் மொழி அவர்களுக்கு ஏற்றமளிக்கும் கலாசாரக் குவையாக மானுடவிலாளர்களால் கருதப்பட்டது. அடுத்த சில பத்தாண்டுகளில் ரோமாக்களைக் குறித்த அறிவுபூர்வமான புரிதலும் வகைமைப்படுத்தலும் கல்வி வட்டங்களில் சாத்தியப்படும் என்பதற்கான அறிகுறிகள் புலப்பட்டன; புனைவுகளிலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக இதற்கான முன்னோட்டங்கள் தென்பட்டன. இவற்றில் மிக முற்போக்கான சிந்தனைகள் ரோமாக்களுக்கு சம உரிமை அளிக்கப்பட வேண்டுமென்று மென்குரலில் சுட்டின.
ஆனால் நீண்ட கால வரலாற்றில் இத்தகைய போக்குகளால் தம்மை நிலைநிறுத்திக் கொள்ள முடியவில்லை. ஒரு நிலப்பரப்பைத் தம் உடைமையாய் காப்பாற்றி அதில் பயிர் செய்யும் திறன், அரசு மற்றும் நிர்வாக அமைப்புகளை உருவாக்கிக் கொள்ளும் திறன், எழுத்துப் பண்பாட்டு வளர்ச்சி – இவை முக்கியத்துவம் பெற்றன. அந்நாளைய மானுடவியலின் பார்வையில் குறிப்பட்ட ஒரு மக்களின் நாகரிகத்தைத் தீர்மானிக்கும் அலகுகளாக இவை உருப்பெற்றன. பொருட்படுத்தத் தக்க ஒரு உதாரணத்தைச் சொல்வதானால், பாஸ்க்குகள் தங்கள் மொழிக்கு எழுத்து வடிவம் கொடுத்து தங்கள் “அடையாள அரசியலை’ ஒரு புதிய தளத்துக்கு முன்நகர்த்திச் சென்றனர். ரோமாக்கள் இத்திசையில் எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை.
ரோமாக்களின் வாழ்வை மேம்படுத்தும் நோக்கம் கொண்ட முரட்டுத்தனமான குடியிருப்புத் திட்டங்கள் ஒரு சில உருவாகவும் அறிவொளி காலகட்டத்து சிந்தனையாளர்கள் காரணமாக இருந்தனர். ஆனால், ரோமாக்களைத் தங்களுடன் சமதளத்தில் ஒருங்கிணைத்துக் கொள்வதற்கு மாறாக ஐரோப்பாவின் தாழ்த்தப்பட்ட வர்க்கத்தினருக்கு இணையான வாழ்க்கைத் தரத்துக்கே அவர்களை ‘உயர்த்த’ முயற்சித்தனர்.
பல காரணங்களால் அவர்கள் இந்த முயற்சியில் தோல்வியடைந்தனர். ரோமாக்களின் வாய்மொழியை அழிப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு திட்டம் இத்தகைய இணைப்புத் திட்டங்களில் மிக முக்கியான ஒன்று. நாடோடிக் குழுக்களுடன் அவர்கள் தொடர்பு வைத்துக் கொள்வதைத் துண்டிப்பதற்கான ஒரு முயற்சி இது.. இவையனைத்தும் தொல்வியுற்றதும், தர்மசிந்தை படைத்த சீர்திருத்தவாதிகளின் பார்வையில், ரோமாக்கள் நாகரிக சாத்தியங்கள் இல்லாதவர்களாய் உறுதிப்படுத்தப்பட்டனர். அனைத்து வகைகளிலும் முன்னேற்ற முடியாதவர்கள், எத்தகைய பண்பாடும் இல்லாதவர்கள் ரோமாக்கள் என்ற கருத்து வலுப்பட்டது.
இதன்பின் மானுடவியலின் புரிதல்கள் முக்கியத்துவம் இழந்தன. அவற்றுக்கு மாற்று விளக்கங்கள் அளிக்கப்பட்டன. மொழி குறித்தும் இத்தகைய ஒரு விளக்கம் கொடுக்கப்பட்டது : ஜெர்மானிய மொழியியலாளரும் எழுத்தாளருமான குஸ்டாவ் ஃப்ரைடாக் எழுதியது போல், ”நம்’ மொழியுடன் ரோமாக்களின் மொழிக்குத் தொடர்பு இருந்தாலும், அது ‘புனிதமான சமஸ்கிருதத்தின் சீரழிந்த பெண்ணைப் போன்றது’ என்ற கருத்து வேரூன்றியது.. மேலும், தங்கள் தாய் நாடான இந்தியாவில் சுத்தமற்றவர்களாகவும் தீண்டத்தகாதவர்களாகவும் தாழ்ந்த சாதியினரான ரோமாக்கள் கருதப்பட்டனர் என்ற காரணமும் ரோமாக்களை விலக்கி வைக்கத் துணை செய்தது.. மானுடவியலாளர்களின் இனப் படிநிலையின் தாழ்ந்த மட்டத்தில் இருத்தப்பட்ட ஹோட்டன்டாட்டுகள், நீக்ரோக்கள், படகோனியர்கள் வரிசையில் திரும்பவும் ரோமாக்கள் ஒழுங்கற்ற, கேவலமான குடியினர் என்ற அடையாளத்துடன் இணைக்கப்பட்டனர்.
ஆக, பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதி முப்பது ஆண்டுகளில் ரோமாக்கள் குறித்து இருந்த விலகலும் அறியாமையும் குறைந்தன, ரோமாக்களின் துவக்கங்கள், பழக்க வழக்கங்கள், மொழியின் வேர்கள் குறித்து தொடர்ந்து அதிகரிக்கும் புரிதலுக்கு இடமிருந்தது. ஆனால் மேலும் துல்லியமானதாகவும் நம்பத்தகுந்ததாகவும் இருந்தாலும், இந்த அறிதல் ரோமாக்கள் குறித்த வேறுபாட்டைக் குறைக்காமல் அதிகரிக்கவே செய்தது. ரோமாக்களின் வேற்றுத் தன்மையை முன்நவீன காலத்து அறிவியல் வலியுறுத்துவதாக இருந்தது, அடிப்படையான நாகரிக வேற்றுமைகளைக் காரணம் காட்ட அறிவியல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்பின், ரோமாக்களுடனான தொலைவைக கொண்டே ஐரோப்பிய நாகரிக வளர்ச்சி கணக்கிடப்பட்டது. ஜிப்ஸிகளுடன் ஒப்பிட்டு கிழக்கு ஐரோப்பாவின் மிகவும் ‘பின்தங்கிய’ மக்களும் தங்களைத் தேற்றிக் கொண்டனர். தங்களைவிடத் தாழ்ந்த மக்கள் இருப்பதான கற்பனை அவர்களுடைய தன்னம்பிக்கையைக் காபாற்றியது.
கற்பனாவாதத்தின் ஈர்ப்பு
ஐரோப்பிய கற்பனாவாதமும் கற்பனாவாத காலகட்டத்துக்குப் பிந்தைய இசைப் படைப்புகளும் ஓவியங்களும் ‘சந்தோஷமான ஜிப்சி வாழ்க்கை முறை’ என்ற கருத்து பரவலான கவனம் பெற்றதில் பெரும்பங்காற்றின. 1838ம் ஆண்டில் நிக்கொலாஸ் லீனாவ் எழுதிய டி ட்ரை ஸிகொய்னர் (Die drei Zigeuner) என்ற கவிதை பல்வேறு இசை வடிவங்களாய் உருப்பெற்றது. நாளெல்லாம் புகை பிடித்துக் கொண்டும் வயலின் இசைத்துக் கொண்டும் உறங்கிக் கொண்டுமிருக்கிற அதன் நாயகர்கள் ஜிப்ஸி வாழ்க்கை முறையின் குறியீடுகளாக மாறினர். கற்பனாவாதக் கலைஞர்கள் அறிவொளி கால மானுடவியலையும் மொழிவரலாற்றையும் வாசித்து உள்வாங்கிக் கொண்டனர். ரோமானி மொழியைக் கற்க விரும்பினர். அவர்களது நோக்கம் தங்கள் ஆதர்சங்களை அவர்களுக்கு இயல்பான காட்டுவெளியில் சந்தித்து அவர்களின் ரகசியங்களைத் தெரிந்து கொள்வதாக இருந்தது.பரவலாக அறியப்பட்ட பெருங்கதைகளிலும், தொல்தன்மை கொண்டவற்றிலும் அமானுடத் தன்மை வாய்ந்தவற்றிலும் பூர்ஷ்வாக்களுக்கு எதிரான கிளர்ச்சியிலும் ஆர்வம் கொண்ட கற்பனாவாத காலகட்டத்தில் ஏராளமான ஆக்கங்களில் பல்வகைப்பட்ட ஜிப்ஸி பாத்திரங்கள் படைக்கப்பட்டன. பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்ககட்ட எழுத்தாளர்கள் ஜிப்ஸிக்களால் மறைத்து வைக்கப்பட்ட ஒரு ரகசிய வெளியைக் கற்பனை செய்தார்கள். கண்ணுக்கு மறைவான ஒரு காட்டுவெளி. ஜிப்ஸிகளின் கரிய ஆன்மாவில் ஓர் ரகசியம் – நவீன தொழில்மய சமுதாயத்தில் தொலைக்கப்பட்ட சொர்க்கம், சுயேச்சையான வாழ்வெனும் தீவு.
இருப்பதற்கும் இல்லாததற்கும், சாமானியத்துக்கும் அதிசயத்துக்கும், அவலட்சணத்துக்கும் அழகுக்கும் இடையிலுள்ள, உறவைக் கண்டுபிடிப்பது கடினமல்ல. கற்பனாவாதக் கவிஞர்கள் தங்களைக் கலைக் கண் கொண்டு புதிதாய்த் தரித்துக் கொண்டனர். ஜிப்ஸி வாழ்க்கை என்று தாங்கள் நினைத்த வாழ்க்கை முறையோடு பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்திய காலக் கட்டத்தில் கலைஞர்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டனர் . இவர்கள் தங்களை லா பொஹிமெ என்றும் பொஹிமியர்கள் என்றும் அழைத்துக் கொண்டனர். இவர்களுடைய லட்சியவாத, மிகையுணர்ச்சி விவரிப்புகள் ஜிப்ஸி கற்பனாவாதம் என்ற வடிவம் பெற்றது.
இந்தக் கற்பனாவாத எழுத்தாளர்கள் ஜிப்ஸிக்களை தொழில்மயமாக்கப்பட்ட நவீன நிகழ்காலத்தில் பேசவில்லை. மாறாக, தொழில்மய உலகுக்கு முந்தைய காலகட்டத்தின் பின்னணியில் இவர்கள் சித்தரிக்கப்பட்டார்கள். ஒரு பாழடைந்த ஸ்காட்டிஷ் கோட்டையின் இடிபாடுகளில் வாழ்ந்த வால்டர் ஸ்காட்டின் மெக் மெரிலீஸ் (Meg Merrilies) இதற்கு ஒரு உதாரணம். இந்தக் கற்பனை, மிகுந்த பயன்பாடுடைய கலைப் படைப்புகளைத் தந்திருக்கிறது; ஜிப்ஸிக்களை அழகியல் அடிப்படையில் அணுகுவதற்குத் தேவையான மிக அதிகமானதும் நிலையானதுமான உந்துதலைக் கற்பனாவாதமே தந்திருப்பதாகத் தெரிகிறது.
ஒழுக்கத்தின் தளைகளில் கட்டுண்டிருந்த நவீன சமூக அமைப்பின் விளிம்புகளிலும் அதன் இருள் பிரதேசங்களிலும் பழங்காலத்தைச் சேர்ந்த, சுதந்திரமான, அவ்வப்போது அச்சுறுத்தலாக இருக்கக்கூடிய ஒரு குழு இருப்பது குறித்து ஏராளமான கதைகளும் பிம்பங்களும் ஏறத்தாழ அனைத்து ஐரோப்பிய பண்பாடுகளிலும் புழங்கலாயிற்று. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் ஜிப்ஸிக்கள் பரவலான கேளிக்கை சாதனங்களாகினர். ஜிப்ஸி கதைகள் அடையாளம் தெரியாத அளவுக்குக் கடன்வாங்கி உருமாற்றி ஏற்றுக் கொள்ளப்பட்டன. அவை மிகவும் எளிய வடிவைப் பெரும்பாலும் அடைந்தன. இந்தப் படைப்புகள் ரோமாக்களைக் குறித்த அறிதலைப் பகிர்ந்து கொள்ளும் ஊடகங்களாக இருக்கவில்லை. மாறாக, பெண்ணின் காமத்தையும் பால் விழைவையும் பேசுவதற்கான ஊடகமாகவே ஜிப்ஸி கற்பனாவாதம் செயல்பட்டது. பூர்ஷ்வா ஒழுக்கம் காமத்தை முழுதாக மறைப்பதாகவும், அது முடியாத இடத்தில் தொட்டுச் செல்வதாகவும் மட்டுமே இருந்தது.
ஊடகப்படுத்தல் இந்தக் கலைப்படைப்புகளை வேற்றுமைகள் கொண்ட சமகாலத் தன்மைகளிலிருந்து விடுவித்தது. என்றாலும் ஒரு கலைப்படைப்பாய், ஜிப்ஸிக்களை நுட்பமாகவும் அடையாள வகைமைகளுக்குப் பொருத்தமானவர்களாகவும் சித்தரிப்பதற்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் யதார்த்தத்தை அலட்சியப்படுத்துவதாக இருந்தது; இதனால் உயர்ந்த அழகியல் தன்மைகள் கொண்ட. புதிய புரிதலை வெளிப்படுத்தும் எழுத்துகள் மிகச் சிலவே படைக்கப்பட்டன. விரைவில் இது சுவையற்ற, போலியானதொரு நாட்டார் ஜிப்சி கற்பனாவாதமாக உருவானது. அதன் அடையாளங்களாக ஹங்கேரிய வயலின் கலைஞனும் அன்டுலேசிய ப்ளாமென்கோ நடனக் கலைஞனும் இருந்தனர். சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்ததால் புதிதாக எதுவும் உருவாகவில்லை, மொழியின் குறியீட்டு வெளியில் ஒரு வெற்றிடம் உருவானது. ரோமாக்களின் வாழ்க்கை முறையைத் திரித்துச் சித்தரிப்பதான ஒரு மாய உலகை இந்த அற்பப்படுத்தப்பட்ட ஜிப்ஸி கற்பனாவாதப் படைப்புகள் சாதித்தன. அல்லது உண்மையை மறைக்குமளவுக்கு இந்த பிறழ் சித்திரங்கள் யதார்த்தத்தின்மேல் விரிக்கப்பட்டன. யதார்த்தத்தோடு ஒப்பிட்டால் ஜிப்ஸி கற்பனாவாதம் கலையைக் கொண்டு ரோமாக்களைக் கேவலப்படுத்துவதாக இருந்திருக்கிறது.
இனவியல்- ரோமாக்களின் ஐரோப்பிய அடையாளமழிப்பு
பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஐரோப்பிய இனவியல் செழுமையான வளர்ச்சி கண்டது. ரோமாக்கள் உபயோகமுள்ள முடிவுகளை அளிக்கக்கூடிய ஆய்வுப் பொருட்களாக இருந்தனர். இந்த வாய்மொழிச் சமூகம் நவீனமயமாக்கத்தை வெற்றிகரமாகத் தவிர்த்திருந்தது என்பது இனவியலாளர்களுக்குப் பயன்பட்டது. ஆய்வு முறைமைகளைத் தங்கள் நேரடிப் பார்வைக்குட்பட்ட அண்மைப் பகுதியிலேயே முயற்சித்துப் பார்க்க முடிந்தது.
தன்னார்வத்தால் ஆய்வு செய்தவர்கள் மற்றும் தொழில்முறை பண்டிதர்கள் அதிக அளவில் செயல்பட்டனர். ஐரோப்பிய ஜிப்ஸி நண்பர்கள்’ என்ற அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. அது பத்திரிக்கைகளிலும் தனிக் கடிதங்களிலும் ரோமாக்களை விவாதித்தது. இதன் உச்சமாக பிரிட்டிஷ் ஜிப்ஸி கதைச் சங்கம் துவக்கப்பட்டது. அது ஜிப்ஸிக்களின் வாழ்க்கை முறையை ஆய்வு செய்து பதிப்பித்தது. இந்த அமைப்பு இன்றும் தன் ஆண்டுமலரைப் பதிப்பித்துக் கொண்டிருக்கிறது. நகைச்சுவைத் துணுக்குகள், தேவதைக் கதைகள், பழங்கதைகள் என்று ஜிப்ஸிக்களின் வாய்மொழி மரபை இனவியலாளர்கள் முறைப்படி ஆவணப்படுத்தினர். அதிக அளவில் விவாதிக்கப்பட்ட பிரான்ஸ் லிஸ்ட்டின் ஜிப்ஸி இசை வாசிப்புகள் இத்தகைய முயற்சிகளில் ஒன்று.
ஒவ்வொரு மக்களின் மதிப்பையும் அதன் சமூக அமைப்பின் கட்டமைப்பைக் கொண்டு பத்தொன்பதாம் நூற்றாண்டு இனவியல் மதிப்பீடு செய்தது. அடித்தளத்தில் குடும்பத்தில் துவங்கி, குழு அல்லது குடி என்று உயர்ந்து அந்த மக்கள் அனைவரையும் பிணைக்கும் தேசம், அரசு என்று முடிவதாக அதன் மதிப்பீடுகள் இருந்தன. மானுடவியல் ஆய்வுகள் இனவியல் ஆய்வாக மாற்றம் காண்கையில் ரோமாக்கள் மக்கள் என்ற நிலையில் இருந்து பழங்குடிகள் என்ற நிலைக்குத் தாழ்த்தப்பட்டனர். பழங்குடிகள் என்ற வகையில் அவர்கள் முன்நவீனத்துவர்களாக இனியும் கருதப்படுவதற்கில்லை. நாகரிகத்துக்கு முந்தைய மக்கள் தங்கள் பண்படுத்தப்படாத இயற்கை நிலையில் வாழ்பவர்கள் – ஆப்பிரிக்கர்களைப் போலவும் வட அமெரிக்க இந்தியர்களைப் போலவும். ஜிப்ஸிக்களும் வளர்ச்சியற்ற, அடித்தள சமூகங்களே என்று மானுடவியல் மற்றும் இனவியல் விவரணைகள் வரையரை செய்தன. ரோமாக்களுக்கு வளர்ச்சி சாத்தியமில்லை என்று சொல்லப்பட்டது. ரோமாக்களின் ஒட்டுண்ணி வாழ்க்கை முறை அவர்களுக்கு இடம் கொடுக்கும் மக்களுக்கு ஒரு அச்சுறுத்தல் என்று நம்பப்பட்டது..
தகவல் குறைகளும் பிழைகளும் நிறைந்திருந்தாலும் ரோமாக்களின் அந்நியத்தன்மை குறித்த சில குழப்பங்களை இனவியல் ஆய்வுகள் தெளிவித்தன. ஆனால் அவர்களுடன் இருந்த தொலைவை அது குறைப்பதாக இல்லை. மிக முக்கியமான அளவை – ‘நம்’ அளவை, ‘நம்’ உயர்ந்த நாகரிக விழுமியங்கள் – மாறவில்லை.
சுகாதாரம், மருத்துவம், உணவுப் பழக்கம் போன்ற அடிப்படைச் செயல்பாடுகளை நெருங்கி ஆய்ந்த இனவியலாளர்கள் தங்கள் பண்பாட்டிலிருந்து ரோமாக்கள் தொலை தூரத்தில் உள்ளதாகவே உணர்ந்தனர். வேறுபாட்டை நிறுவ உதவும் இனவியல் பாகுபாடுகளை மெய்ப்பிக்கும் கேள்விகளாக இவை இருந்தன. ஐரோப்பாவின் உயர் பண்பாட்டின் விளிம்பில் இருந்த மக்களாக ஜிப்ஸிக்களை இனவியல் தோற்றுவித்தது. நாகரிகமடைந்த மக்கள் எதைக் கொடுக்கிறார்களோ அதற்கு நன்றியுடையவர்களாக இருக்க வேண்டியவர்கள் இவர்கள். குப்பைக் குவியல்கள், மாசுற்ற தொழிற்சாலைகளின் வீண்நிலங்கள், மேம்பாலங்களின் கீழிருக்கும் பயனற்ற இடங்கள் என்று இன்று நாம் ஐரோப்பாவெங்கும் ஜிப்ஸிக்களுக்கான கொடுப்பினைகளாகக் காண்பதல்ல – விவசாயம் செய்யப்படாத கிராமத்து விளிம்புகள் – இங்குதான் அவர்கள் மந்தைகளாக ஓட்டிச் செல்லப்பட்டனர்.
அறிவொளி காலத்து மானுடவியல் முதல் முறை ரோமாக்களை ஐரோப்பியர் அல்லாதவராகச் செய்திருந்தால், இரண்டாம் முறை இவர்கள் புரிந்து கொள்ளப்பட்டு வகைமைப்படுத்தப்பட்ட விதம் ரோமாக்களிடம் எஞ்சியிருந்த ஐரோப்பிய அடையாளங்களையும் குலைப்பதாக இருந்தது. ரோமாக்களின் உடல், மற்றும் நடத்தைக்கு அச்சுறுத்தும் வடிவைக் கொடுக்கும் விவரணைகள் மீண்டும் தொகுக்கப்பட்டன. இனி ஜிப்ஸிக்களுக்கு ஐரோப்பாவில் இடமில்லை. இனவொழிப்பு எப்போதும் காகிதத்தில்தான் துவங்குகிறது.
யதார்த்தமும் இனஅரசியலும்
அறுநூறு ஆண்டுகளாகக் கட்டமைக்கப்பட்டிருந்த ஜிப்ஸிக்கள் குறித்த பிம்பத்தை இனவாதச் சித்தாந்தங்கள் உறுதிப்படுத்தின. அவர்களைக் குறித்த ஏளனமும் சிறுமைப்படுத்துதலும் மறுவரை செய்யப்பட்டுத் தீவிரப்படுத்தப்பட்டன. அனைத்து ஐரோப்பிய நாடுகளிலும் இந்த மாற்றம் சம அளவில் நிகழ்த்தப்படவில்லை என்றாலும் ஜெர்மனியிலும் ஏறத்தாழ அனைத்து மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் பௌதிகம் சார்ந்த குற்றவியல் கோட்பாடுகள் புதிய வடிவம் பெற்றன. இவை ஜிப்ஸிக்களைக் காவல் துறையும் நிர்வாகத்துறையும் தொடர்ந்து கண்காணித்து மேலும் மேலும் தண்டிக்கக் காரணமாக இருந்தன.
இருபதாம் நூற்றாண்டின் முன்பாதியில் ஏமாற்றுக்காரர்கள், திருடர்கள், குழந்தைகளைக் கடத்துபவர்கள் இணைந்த கூட்டமே ஜிப்ஸிக்கள் என்ற பிம்பம் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டு பரவலான முக்கியத்துவம் பெற்றது. தடயவியல் துறைகள் ஜிப்ஸிக்களைப் பிறவி குற்றவாளிகளாகக் கருதியது, அவர்கள் தங்கள் குற்ற இயல்பை பரம்பரை பரம்பரையாகப் பெற்று வருவதாக நம்பினர். ஒற்றைக் குடும்ப அலகுகளாக இல்லாமல், ஒட்டுமொத்த இனக் குழுவாகவே அவர்கள் ‘சமூக ஒழுங்குக்கு எதிரானவர்கள்”, “சமூக ஒழுக்கம் பிறழ்ந்தவர்கள்,” “வேலை செய்ய விரும்பாதவர்கள்” என்று முத்திரை குத்தப்பட்டனர். ரோமாக்கள் ஒரு இடத்திலும் நிலைத்து நில்லாததும் நோய்குறியாகக் கருதப்பட்டது.
நாஜி ஆட்சியில் இந்தக் கருத்துகள் மேலும் மேலும் சமூக வெளியை ஆக்கிரமித்தன.. ரோமாக்களை ஒட்டுமொத்தமாகக் கொலை செய்வதை நியாயப்படுத்தும் நோக்கத்தில் இந்தக் கருத்துகள் திட்டமிட்டுப் பிரசாரம் செய்யப்பட்டன. ரோமாக்களைப் பற்றிய அறிதல் மட்டுமே அரசு வன்முறையை அவசிமாக்கப் போதுமானதாக இருக்கவில்லை. மாறாக, 1933க்குப் பின் சமூக மற்றும் அரசமைப்பு சார்ந்த வாழ்வெளியை ஒற்றைத்தன்மை கொண்ட ஒரு அறிதல் கைப்பற்றியது. அதைக் கட்டாயப்படுத்தக்கூடிய அதிகார மையம் ஒன்று உருவானதே அரசு வன்முறையைச் சாத்தியமாக்குவதாக இருந்தது. அமெரிக்காவிலும் மற்ற ஐரோப்பிய நாடுகளிலும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி முதலே இனம், பௌதிகம் சார்ந்த குற்றவியல் மற்றும் சமூகவியல் கோட்பாடுகள் பரவலான தாக்கம் கொண்டவையாக இருந்தன. இந்த தேசங்களிலும் அடிப்படை தனி உரிமைகளைக் கட்டுப்படுத்தும் வகையில் சமூக அரசியல் விதிகளைத் திட்டமிடவும், நடைமுறைப்படுத்தவும், நியாயப்படுத்தவும் இனவியல் கோட்பாடுகள் உதவின. இயன்ற இடங்களில் தனியுரிமைகள் முழுமையாக நீக்கப்பட்டன.
காலங்காலமாகக் கடுமையான கண்காணிப்பு இருந்தாலும், ரோமாக்கள் தொடர்ந்து விளிம்புக்குத் தள்ளப்பட்டு சட்டங்களால் தண்டிக்கப்பட்டாலும், இனவாதம் அறிவியல் பாவனைகளோடும் அதன் பிரசாரகர்களோடும் தலையெடுத்த பின்னரே கூண்டோடு அழிப்பதற்கான கனவுகள் உடல் சார்ந்த அரசியல் நடவடிக்கைகளாக மாற்றம் கண்டன. ஜிப்ஸிகள் ஐரோப்பியர் அல்லாதவர் என்ற பழங்கருத்து மீண்டும் முக்கியத்துவம் பெற்றது. ஐநூற்றுக்கும் மேற்பட்ட ஆண்டுகளாக அவர்கள் ஐரோப்பிய கண்டத்தில் தொடர்ந்து இருந்து வந்திருக்கினர் என்ற உண்மை இத்தகைய எண்ணத்தைப் பொய்யாக்குகிறது என்பதை யாரும் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.
மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் இருபதாம் நூற்றாண்டில் ரோமாக்கள் சொல்லமுடியாத துயரை எதிர்கொண்ட வரலாறு புரிந்து கொள்ள முடியாதது. ஹோலோகாஸ்டுக்கு முந்தைய பத்தாண்டுகளின் இலக்கியப் படைப்புகளில் பெரும்பாலானவை உரத்த குரலில் அவர்களை ஒரு அச்சுறுத்தலாகச் சித்தரித்தன. அவர்கள் கடத்திய குழந்தைகளின் குடும்பங்களுக்கு, அவர்கள் திருடிய சொத்துகளின் உரிமையாளர்களுக்கு, அவர்கள் சீரழித்த ஆண்களுக்கு, அனைத்துக்கும் மேலாக அவர்களால் அடைய முடியாத நாகரிகத்துக்கு ரோமாக்கள் அச்சுறுத்தலாக இருப்பதாகச் சித்தரிக்கப்பட்டனர்.
ஆனால் வரலாற்று உண்மை என்னவோ இந்தக் கற்பனையின் கற்பிதங்கள் அனைத்தும் ஒரு இனவொழிப்பில் முடிந்ததைத்தான் பதிவு செய்கிறது. ஐரோப்பிய ரோமாக்களுக்கு ஏற்பட்ட கதி, இன ஒழிப்புக் குற்றத்தைத் தடுத்தல் மற்றும் தண்டித்தல் குறித்த ஐநா மாநாட்டு முடிவுகளின் வரைமுறையின் கீழ் விசாரிக்கப்பட முடியும் என்பதில் சந்தேகமில்லை.
(முற்றும்)
[1] Liber Vagatorum என்கிற பிரசுரத்தின் ஒரு பக்கம் இங்கே காணக் கிடைக்கிறது. பார்க்க-
http://commons.wikimedia.org/wiki/File:Liber_Vagatorum_(Titelblatt).jpg